Wednesday, January 19, 2011

வர மறுத்த கண்ணீர் ...



அம்மாவின் உயிர் பிரிந்த போது அதிகாலை நான்கு மணி . நான் அருகில் இருந்தேன் . அந்த இரவைப் பற்றி ,என்றேனும் எழுதுவேன் என்று நம்புகிறேன் .
அந்த இரவு , மூச்சுத் திணற என் முகத்தில் அடித்தது.வீட்டில் மிச்சமிருந்தது அப்பாவும் ,நானும் தான். மிக நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் சொல்ல நானே போக வேண்டியதாகி விட்டது . அப்பா ஒரு நாற்காலியில் சரிந்து கிடந்தார் . எதிர் வீட்டில் இருந்த சாம் நெதானியேல் மாமா தனது ஸ்கூட்டரைக் கொண்டு வந்தார் . அக்கா வீடு , சித்தப்பா , மாமா வீடு என மிக நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்குப் போய்ச் சொன்னோம் .அவர்கள் அழ , அடுத்த வீடுகளுக்கு விரைந்தோம் .
வீடு திரும்பிய போது நன்கு விடிந்திருந்தது .மனமெல்லாம் இருட்டு அடைத்திருந்தது .கட்டிலில் கிடந்த அம்மாவை இரட்டை பெஞ்ச் போட்டு நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள் .மாலை போட்டு , தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி இருந்தது . அம்மா விரும்பி வாங்கி வைத்திருந்த ஊதுபத்திகள் புகைந்து கொண்டு இருந்தன . அதன் மணம் முற்றிலும் வேறாக இருந்தது . யாரோ என்னைக் கட்டிப் பிடித்து அழுதார்கள் . எனக்கேதும் அழுகை வரவில்லை . அன்றே , மாலையே எல்லாம் முடிந்தது .
மூன்று நாட்கள் கடந்து விட்டன , எல்லோரும் அழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே  இருந்தார்கள் .நானும் முயன்று கொண்டே இருந்தேன் . கண்ணீர் கண்களில் இருந்து எங்கோ தொலைதூரம் போய்விட்டிருந்தது .
"அவன் நெஞ்சழுத்தக்காரன் ".... " ஆத்தாவ முழிங்கிட்டு அழுகாம திரியுது "...."அழுகை வர முடியாதபடி என்ன மனசோ ' ....." அவன் சோத்துல காய மறச்சுவச்சு திங்கிறவன் " ..."ரொம்பத் துக்கமானா அழுகை வராதா "....என்று வித விதமான குரல்கள் என்னைச் சுற்றித் திரிந்து கொண்டே இருப்பது தெரிந்தும், அழுகை வரவில்லை .
கண்கள் ரத்தச் சிவப்பில் குழம்பிக் கிடந்தன .அக்கா வீட்டுக்காரர் மூன்றாம் நாள் இரவு வெளியே போகலாம் என்றார் . பதினாறு நாள் எங்கும் போகக்கூடாதென்று சொல்லி இருப்பதை நினைவூட்டினேன் . "அது , துக்கம் கேக்க யாராவது வந்தால் வீட்டுல ஆளு இருக்கணுங்குற சம்பிரதாயம். ராத்திரில எவன் வர்றான் ? வா குமாரு .. வெளிய போகலாம் " என்றார் . எங்காவது வெளியில் போக மனம் தவித்துக்கொண்டே இருந்தது . கீழச்சந்தைப்பேட்டை பக்கம் திரும்பி வைகை ஆத்தங்கரைப் பக்கம் நடந்தோம் .
மூன்று நாட்களாக மூடிக் கிடந்த கண்ணீர்ச்சுரப்பிகள் அறுந்து , உடைந்து , கிழிந்து ....கதறிக் கதறி அழப்போவது தெரியாமல் போய்க்கொண்டு இருந்தேன் குருவிக்காரன் சாலையில் .....
 ·  · Share · Dele

3 comments:

ஹ ர ணி said...

நம்மை ஈன்றெடுத்த தாயை...தந்தையை..அல்லது பிரியமான உறவுகளைப் பறிகொடுத்த இரவை..அவர்கள் நம்மோடு இருக்கும் அந்த கடைசி இரவை நினைத்தால் நெஞ்சம் வெடித்துவிடும்..நிறைய அனுபவித்தவன் நான். கசிகிறேன்.

rvelkannan said...

கனக்கிறது.

பா.ராஜாராம் said...

ஒன்னும் சொல்லத் தோணாது போகிறபோதெல்லாம் ஒரு வதை வரும். இப்படியே போய்ட்டு அப்புறும் வரலாம் என தோணுது, இப்போதைக்கு.

Post a Comment