Thursday, September 29, 2011

மனிதனும் புத்தகமும் - 2

ஒரு பிரதி (புத்தகம் ) முதல் வாசிப்பில் அறிமுகமாகிறது . 
சில ஆண்டுகளுக்குப் பின், மறு வாசிப்பில், பிரதி தான் மாறாமல் 
அப்படியே இருந்து கொண்டு நமக்குள் நிகழ்ந்த மாற்றங்களைப் 
புலப்படுத்துகிறது .
நம் இறந்த காலத்தைப் புத்தகங்கள் எளிதில் 
புரிந்து கொண்டு விடுகின்றன .

Sunday, September 25, 2011

மனிதனும் புத்தகமும் - 1

 இந்த உலகிலுள்ள 
 எல்லா மனிதர்களாலும்
 வாசிக்கப்பட்ட ஒரு புத்தகம்
 இன்னும்
 எழுதப்படவேயில்லை .

Tuesday, September 13, 2011

மௌனத்தின் பாதாளத்திலிருந்து ...


மேடைகளில் பேசத் துவங்கி , தனித்த புகழும் , அங்கீகாரமும் ,அடையாளமும் , நட்பு வட்டமும் உருவாகி இருந்தது .

எங்கும் பேசப் போகக் கூடாதென்று இரண்டு கரங்கள் என் குரல் வளையை இறுக்கத் துவங்கியது .

இணைந்து வாழவும் , இணங்கி இருக்கவும் இந்த மௌனம் பயன் தருமென்ற கணிப்பில் மௌனத்தின் பாதாளத்திற்குள் விரும்பி வீழ்ந்தேன் .

இரண்டு ஆண்டுகள் . யார் அழைத்த போதும், எங்கும் போகாது , யாரோடும் பேசாது இருந்தேன் .

 என் மௌனம் சிலருக்கு மிகுந்த சந்தோசத்தையும் , பலருக்கு அளவற்ற துயரத்தையும் தந்தது .

விரும்பிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற போதும் , மௌனம் என்னை அடியற்ற ஆழத்துக்கு அழைத்துக்கொண்டு .... போய்க்கொண்டே இருந்தது .

ஒளியற்ற , ஓசைகளற்ற பாதாளம் அது . மறக்கவே முடியாத ஆண்டுகள் .
என்னால் மேடையில் பேச முடியும் என்பதே மறந்த நாளில் மதுரை பாலனின் கடிதம் வந்தது .

துரை தாசன் என்னும் இயற் பெயர் கொண்ட மதுரை பாலன் என்னோடு சமதையாக தமிழ் மேடைகளில் வலம் வந்த ஒரு ஆளுமை .

என்னை ஒரு போட்டியாகக் கருதி , என் மௌனத்தை அவர் கொண்டாடி இருக்கலாம் . மாறாக அவர் பதறினார் . என்னிடம் நேரில் அது பற்றிப் பேசாமல் கடிதம் எழுதினார் .

என்னைப் பேச வைத்த கடிதம் .( இந்தக் கடிதம் வந்த சில நாட்களில் கந்தர்வன் கடிதம் வந்தது . அதைத் தனியே எழுதுகிறேன் ) மௌனத்தின் பாதாளத்தில் இருந்து என்னை மீட்ட கடிதம் .

இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் . பாலனுக்கு, மனசுக்குள் எப்போதும் நன்றி பாராட்டிக்கொண்டே இருக்கிறேன் .

என்னைப் பேசப் பணித்த பாலன் சில ஆண்டுகளுக்குப்பின் தான் மேடையில் பேசுவதை நிறுத்திக் கொண்டார் .

பாலனின் கடிதம் ...

அத்தனை பயல்களையும்
ஊமையாக்கி விட்டு நீ அடங்கு
எனக்கு ஆட்சேபம் இல்லை

ஆந்தைகளின் அலறலால்
லஜ்ஜையாகிப் போன
என் தேசத்தில்
குயிலே....
நீ
கூவ மறுத்தால்
உன் நாக்கு
நறுக்கப்படும்!

தீபாவளி...
தீபாவளியன்று
வெடிப்பதற்கு
நீ என்ன
சிவகாசி ராக்கெட்டா?

பாட்டாளி வர்க்கத்தின்
போர்ப்பரண் மீது
பொருத்தப்பட்டிருக்கும்
ஏவுகணையடா நீ!

கையில் நாக்கும்
வாயில் பேனாவும்
வைத்திருப்பவன் நீ
எழுது... பேசு...
இரண்டு கைகளிலும்
இரண்டு ஆயுதங்கள் ஏந்து!

இரவுக்குச் சூரியனாகவும்
பகலுக்குச் சந்திரனாகவும்
இருக்க ...
உன் ஒருவனால் தான் முடியும்
இரு!

நீ
வளரும் பிள்ளைகளுக்கு
வார்த்தைகளின் தொட்டில்!
சிவப்புச் சிந்தனைகளின்
சிம்மாசனம்!

உன் எவரெஸ்ட்
உயரத்தைக் கண்டு
எவனும் அஞ்சவில்லை...
உன்
சிறிய வாய்க்குள் இருக்கும்
சின்ன நாக்கைத்தான்
கண்டம் விட்டு
கண்டம் தாவும் ஏவுகணையாய்ப்
பண்டிதக் கூட்டம் கண்டு
பதறிப் போனது!

அரிவாள்மனை
துருப்பிடிப்பதை கூட
அனுமதிக்காக
நமது வர்க்கம்....
அணு ஆயுதமே
உன்னை அனுமதிக்குமா?

நீ
நடப்பது
உன் கால்களால் அல்ல‌
நாக்கால் என்று நம்பு!

சிக்கிய மேடைகளில்
சினத்தைக் கொட்டி
சபிப்பதற்காக‌ப்
பிறந்தவனல்ல நீ...!

நீ
கக்கிய நெருப்பு
கனன்று கொண்டிருக்கும் போது
ஓய்வு கொள்ள‌
உனக்கு உரிமையேது?

ஒரு
சாம்பல் மேட்டில்தானே
நமது சரித்திரமே
ஆரம்பமாகிறது...
சமுத்திரத்தின் அலையே
நீ சம்மணம் போட‌
ஆசைப்படலாமா?

வேண்டாம் நண்பனே
இந்த விசித்திரத் துறவு


Friday, September 9, 2011

வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக ...


மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது மொழி. அதுவே மனிதனை விலங்குகளிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்தியது. வாழ்வின் அனைத்துத் துறை சார்ந்த மெய்மைகளையும், பொய்மைகளையும் வரி வடிவமாக்கி, தலைமுறைகளைக் கடந்து நிற்கவும் செய்தது.

அனைத்துத் துறைகளின் வரலாற்றையும் பதிவு செய்த மொழி, தனது வரலாற்றை தானே எழுதிக் கொண்ட துறையே இலக்கியம். நாவல், சிறுகதை, நாடகம், உரைநடை எனப் பலவாக புலப்படுத்தும் இலக்கியத்தின் பேரழகு வெளிப்படும் இடம் கவிதையேயாகும்.

எல்லாத் துறைகளிலும் நிகழ்வது போலவே, இலக்கியத்திலும் உண்மையும், பொய்மையும் கலந்து கிடப்பதைக் காலம் நமக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மானுட குலம் முழுவதையும் விடுதலை பெற்ற ஓர் இனமாக மாற்ற விரும்புகிற படைப்பாளிகள், தங்கள் படைப்புகளை உண்மையின் முழு வடிவமாக உருவாக்கித் தந்தார்கள். ஆளவும், அடிமைப்படுத்தவும் விரும்புகிற ஆதிக்க சக்திகளின் அடியாட்களோ தங்கள் படைப்புகளைப் பொய்மைகளால் இட்டு நிரப்பி, அதனை மனித குலத்தின் மீது கொடிய சாபத்தைப் போலப் பரவ விட்டார்கள்.

மொழி ஆளுமை, லாவகம், அழகுணர்ச்சி, செய்நேர்த்தி இவைகளை விடவும், ஒரு படைப்பாளி உண்மையின் பக்கம் நின்று எழுதுகிறானா, அல்லது பொய்யின் மீது படுத்துக்கொண்டு பேசுகிறானா என்பதே எப்போதும் முதன்மையான அளவுகோலாக இருத்தல் வேண்டும்.

வடிவ நேர்த்தியிலும்,சொல்லாடலிலும் முழுமையான தேர்ச்சி இல்லாவிட்டாலும் கூட, உண்மையின் பக்கம் நின்று பேசுகிற ஒருவனின் படைப்பு கொண்டாடத் தகுந்த ஒரு குழந்தையின் மழலையாகவே நமக்குக் கேட்கிறது. மாறாகப் பொய்யுரைக்கும் ஒருவனின் படைப்பு, செய் நேர்த்தியில் பெரும் சாகசமாய் ஜொலித்த போதும், அது ஒரு வஞ்சகக் கிழவனின் வசவுச் சொற்களே என்பது எளிதில் துலங்கி விடுகிறது.

உண்மையின் பக்கம் எப்போதும் நிற்கும் எளிய மனிதர்களின் படைப்புகளை வாழ்த்துகிற, ஆக்கப்பூர்வமாய் விமர்சிக்கிற, அங்கீகரிக்கிற, உற்சாகப்படுத்துகிற மனது எனக்கு எப்போதும் இருக்கவேண்டுமேன்பதே எனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இருக்கிறது.


Tuesday, August 30, 2011

மரணம் ஒரு தண்டனையல்ல

" கொல்லாமலேயே சாவது மனிதனின் விதி .

மரணத்துக்குப் பயந்தல்ல ; மரணம் ஒரு தண்டனையுமல்ல ;

மானுடகுல மேன்மைக்கேனும் மரண தண்டனை , இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்."


_ த . ஜெயகாந்தன் 

Thursday, August 11, 2011

நன்றி - ஆத்மார்த்தி ரவிசங்கர்.

பாரதி க்ருஷ்ணகுமாரின் எனக்கு இல்லையா கல்வி என்னும் ஆவணப்படத்தை பார்த்தேன்.எனது ஆச்சர்யமெல்லாம் எப்படி ஒரு ஆவணப்படத்தை இவ்வளவு தூரம் உண்மையாகவும் அதே நேரம் செயற்கைத் தன்மை கொஞ்சமும் தோன்றிவிடாமலும் உருவாக்க முடியும் என்பது தான்.

ஆவணப்படம் தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் கல்வி இருக்கும் நிலையை மிக அழகாக எடுத்துரைக்கிறது மலைவாழ் மக்கள்,பழங்குடியினர்,ஆதிதிராவிடர்,கிராமப்புற பள்ளிகள் அரசாங்கத்தின் தொடர் அலட்சியம்,குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிட்டக்கூடிய அசௌகரியங்கள்,தொடர்ந்து வஞ்சிக்கப்படும் கடைநிலை மக்கள்,இன்னமும் அரசாங்கத்தை எதிர்நோக்கி அமைதியான எதிர்பார்ப்பை மட்டும் சுமந்தபடி விழிகளில் கனவுகளைக் கொஞ்சமும் விட்டுக்கொடுத்துவிடாமல் இருக்கும் குழந்தைகள்.

வகுப்பறைகளின் குறைபாடுகள்,ஆசிரியர்களின் அலட்சியங்கள்,ஆசிரியர் பற்றாக்குறை,அரசின் தொடர் அலட்சியம்,குறைந்து கொண்டே வரும் மாணவர் எண்ணிக்கை,மழை உள்ளிட்ட இயற்கை சீரழிவுகள் கல்வியை பாதித்தல்,சிறார் தொழிலாளர்களாக மாற்றப்படும் மாணவர்களின் படிக்கும் ஆசை.

பெரும்பாலான பள்ளிகளில் சில பாடங்கள் நடத்தப்படாமலேயே ஆய்வுக்கூடம் என்றால் என்ன என தெரியாமலேயே உயர்கல்வியை முடிக்கும் அவலம்,எதிர்கால இந்தியா கிராமங்களை தொடர்ந்து வஞ்சித்து நகர்ப்புற பணக்கார பள்ளியமைப்பை ஊக்குவிக்கும் துரோகம்

சாதிக்கொடுமை,சிலபல ஆசிரியர்களின் மனங்களிலும் இருக்கும் சாதிவெறி,சமச்சீர் கல்வி என்னும் பெயரில் நிறைவேற்றப்படுமா எனத் தெரியாமல் விழிக்கும் பொதுப்பாடத்திட்டம்.சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கிற பகுதிகளில் இருக்கும் உருதுமொழிவழிக்கல்வியை வழங்கக் கூடிய பள்ளிகள் மெல்ல மெல்ல ஆசிரியக்குறைப்பு செய்யப்படுவதும் அத்தகைய பள்ளிகள் காலவெளியில் குறைக்கப்படுவதும் ஒரு சிறுபான்மை மொழிக்கற்றலை மெல்ல அழிக்கும் செயல் என்பது உள்ளத்தில் உறைக்கிறது.

பாடத்திட்டங்களில் காட்டப்படும் தொடர் அலட்சியம் முதல் ஐந்து வகுப்புக்களுக்குள் பாடங்களை தமிழ் உள்பட அனைத்திலும் உளவியலுக்குச் சம்மந்தமில்லாத அளவுக்கு மாணாக்கர்களின் மண்டைகளில் திணித்துவிடும் மனோபாவம் அழகுற எடுத்துக்காட்டப்படுகிறது

இந்திய தமிழ்நில அளவில் மிக முக்கியமான கல்வியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் போராட்டவாதிகள் என முக்கியமானவர்களின் கருத்துக்கள் அனைத்தும் ஆவணமாக்கப்பட்டுள்ள தோழர் பாரதி கிருஷ்ணகுமாஅரின் எனக்கு இல்லையா கல்வி....ஒரு கேமிராவை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட மகோன்னதமான முயற்சி.யாருமே தவற விடக்கூடாத ஆவணப்பாடம்.(படமல்ல.)


            வாழ்த்துவோம்....

Thanks to Deccan Chronicle


நன்றி - புதிய ஆசிரியன்.



Wednesday, July 27, 2011

தீக்கதிர் - வண்ணக்கதிர் - பத்திரிகையாளர் அ . குமரேசனின் மதிப்புரை


எனக்கு இல்லையா கல்வி?


ஆவணத் திரைப்படம்




வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக நீதிமன்ற வாசலில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள். மலங்க மலங்க விழித்து நிற்கிற இவர்களது முகங்களில் வெளிப்படுவது ஒரு அறியாமையும் அடிமைத்தனமும்தான். அந்த அறியாமையும் அடிமைத்தனமும் சுதந்திர இந்திய நாட்டில் கோடிக்கணக்கானவர்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கின்றன. இரண்டையும் அப்படி அவர்கள் முகங்களிலிருந்து அகற்ற முடியாதபடிக்கு அழுத்தமாக அப்பிவைத்தது எது?

இறைவன் எழுதிய தலைவிதி, முற்பிறவியின் பாவ புண்ணிய பலன் என்று எளிதான பதில்களைச் சொல்லிவிடலாம். கையாலாகாத அந்த பதில்கள் இவர்களது வாழ்க்கையை நிரந்தரமான கேள்விக்குறியாகவே வைத்திருக்கிற உள்நோக்கம் கொண்டவவை. உண்மைக் காரணம்: கல்வி மறுப்பு.

எளிய பாட்டாளிகளான இப்படிப்பட்டவர்களின் மூதாதையரில் ஒருவன் சம்புகன். தனது கல்வி உரிமையை நிலைநாட்ட அந்தக் கறுப்புத் தோலன் முயன்றான். பிராமண வசிஷ்டனின் கட்டளைப்படி, வைஷ்யர்கள் கண்டுகொள்ளாதிருக்க, சத்திரிய ராமன் தன் வாளால் சம்புகனின் கழுத்தை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். ரத்த தாகம் அடங்காத அந்த வாள், காலந்தோறும் சுழன்றுகொண்டே இருக்கிறது. பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாய் அடக்கப்பட்டவர்கள் தங்களது விடுதலைக்கான ஆயுதமான கல்வியைக் கையகப்படுத்த முயன்றபோதெல்லாம் அந்த வாள் புதுப்புது அவதாரங்கள் எடுத்து அவர்களது கட்டை விரல்களையும் கண்களையும் தலைகளையும் கொய்து வந்திருக்கிறது.

இன்றைக்கு, உலகளாவிய முதலீட்டாளர்கள், உள்நாட்டுப் பெரு முதலாளிகள், அவர்களது கூட்டாளிகளான பண்ணை எசமானர்கள் ஆகியோரது விருப்பம், அவர்களது நுட்பமான சுரண்டல்கள் பற்றிக் கேள்வி கேட்காத, அரசியல் உணர்வு பெறாத, ரத்தம் ஓடுகிற எந்திரங்கள் மட்டுமே வேண்டும் என்பதுதான். ரத்த தாகமெடுத்த வாள் இப்போதும் சுழன்றுகொண்டிருக்க, அரசு எந்திரங்கள் அந்த மனித எந்திரங்களை வார்த்துக்கொடுக்கின்றன. வாளின் சுழற்சியில் வெட்டப்பட்டதுதான் கல்விக்காக மத்திய அரசு 3 விழுக்காடு நிதி கூட ஒதுக்காத அராஜகம். வாளின் சுழற்சியில் செதுக்கப்பட்டதுதான், முழுமையற்ற கல்வி உரிமைச் சட்டம். வாளின் சுழற்சிதான் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மொக்கையான சமச்சீர் கல்வி. அதே வாளின் சுழற்சிதான், அதைக் கூட அடைய விடாமல், புதிய பொதுப்பாடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

கல்விதான் விடுதலையின் வாசல். அந்த வாசல் கதவுகள் இவர்களுக்கு மட்டும் அடைக்கப்படுகிறது. இவர்களது உணர்வாக வெளிப்பட்டு, குரலாக ஒலிக்கிறது பாரதி கிருஷ்ணகுமார் படைத்தளித்துள்ள ஆவணத்திரைப்படம்: எனக்கு இல்லையா கல்வி...?

மேடைகளில் கிருஷ்ணகுமார் நிகழ்த்துகிற உரை அனைவரையும் சமுதாய நிலைமைகள் பற்றிய சிந்தனையில் செலுத்திவிடும். அவர் விடுத்திடும் கேள்விகள் சக மனிதர்களின் அவலத்திற்கு நாமும் பொறுப்புதானே என்ற குற்றவுணர்ச்சிக்குள் ஆட்படுத்திவிடும். அவர் எழுப்பிடும் முழக்கங்கள் மாற்றத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று உறுதியேற்க வைத்துவிடும். அதே ஆற்றலுடன் உருவாகியிருக்கிறது, மனித உரிமைக் கல்வி நிறுவனத்திற்காக உருவாகியுள்ள இந்த ஆவணப்படம்.


விடுதலையின் வைரவிழாவைத் தாண்டிய நாட்டில் எளிய மக்களுக்கான கல்விச் சூழல் எப்படியெல்லாம் திட்டமிட்ட முறையில் தரம் தாழ்த்தப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறார் நிறுவனத்தின் தலைவர் முனைவர் வே. வசந்தி தேவி. கல்வி மீட்சி என்பது ஜனநாயக மீட்சி என்று அவர் சொல்வதில் எவ்வளவு ஆழ்ந்த அரசியல் உள்ளடக்கம் இருக்கிறது!

சாதாரண மக்கள் என்றாலே நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுவதே கல்வியிலும் நடக்கிறது என்று கூறும் பேராசிரியர் ச. மாடசாமியின் குரலில் தோய்ந்திருப்பது, உண்மையான சமூக அக்கறையிலிருந்து வருகிற வேதனை. தமிழ்ப்பாடத்தில், மனுநீதிச் சோழன் கதையில், மகனைத் தேர்ச்சக்கரமேற்றிக் கொல்லும் மன்னன் முன்னால் சிவபெருமான் தோன்றுவதாக ஒரு பாடம் சேர்க்கப்பட்டது. எந்தக் குழந்தையாவது சிவன் உண்மையாகவே தோன்றுவாரா என்று கேள்வி எழுப்ப முடியுமா, என்று அவர் கேட்கிறார்.

குழந்தைகளை நேசித்து வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடினால் அவர்களை எப்படி ஆதரிக்க முடியும், என்று கல்வியாளர் பிரபா கல்விமணி கேட்கிறார்.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சீருடைகளின் தரம் பற்றி எழுத்தாளர் அழகிய பெரியவன் வைக்கிற குற்றச்சாட்டு, அந்தச் சீருடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சீர்குலைவுகள் பற்றிய விசாரணையாகிறது.

வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைவருக்குமான கல்வி என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டே வந்ததை சுட்டிக்காட்டுகிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் விஜயகுமார். நீண்ட நெடும் போராட்டத்தின் பலனாக கல்வி உரிமைச் சட்டம் வந்ததை எடுத்துக்கூறுகிறார் நிறுவனத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் ஹென்றி திபேன்.

அந்தச் சட்டத்திலும் கட்டணமில்லாக் கல்வி, கட்டாயக் கல்வி, அருகமைப் பள்ளிக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வி ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டால்தான் முழுமையான சமச்சீர் கல்வி நிலைநாட்டப்படும் என்று உணர்த்துகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வி உரிமை என்று வந்தபிறகு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்? அரசாங்கமேதான் கட்டணத்தைச் செலுத்திக் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும், என்று வழக்கறிஞர் பா.பா. மோகன் வாதிடுகிறார்.

கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் எளிய மக்கள் கூறியுள்ள கருத்துகளும் சம முக்கியத்துடன் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. கருத்துரைகளின் தொகுப்பாகிவிடாமல், குழந்தைகளின் வாக்குமூலம், பெற்றோரின் கண்ணீர், அரசுப்பள்ளிக் கட்டடங்களின் சாட்சியம், தனியார் பள்ளி நிர்வாகங்களின் அலட்சியம் என்று பன்முகப் பரிமானங்களோடு படம் பரிணமித்திருக்கிறது.

“...எங்க டீச்சர் மட்டும் இல்லன்னா எங்க வாழ்க்கையே நாசமாயிடும் சார்...” என்று சொல்கிற, கிராமத்து அரசுப்பள்ளியில் பயின்றிடும் ஒரு பெண் குழந்தை அதற்கு மேல் சொல்ல முடியாமல் தழுதழுத்து அழுகிறாள். வெறும் ஆவணப்படம்தானே என்று பார்த்துக்கொண்டிராமல் நமக்கும் கண்ணீர் உடைப்பெடுப்பதைத் தடுக்க முடியவில்லை.

தாய்மொழி வழிக் கல்விக்காக படம் வாதாடுகிறது. ஒரு கிராமத்தின் இஸ்லாமியர்கள், எங்க தாய்மொழி உருது. அதிலே கல்வி கிடைச்சா எங்க குழந்தைக நல்லா புரிஞ்சுக்கிட்டு படிப்பாங்க, என்கிறார்கள். அது, சமச்சீர் கல்வியில் தாய்மொழி வழிக்கல்வி என்பதன் பொருள் மாநிலத்தின் பெருவாரியினர் மொழி மட்டுமல்ல என்ற பாடத்தைப் பதிய வைக்கிறது.

செல்வா ஒளிப்பதிவும், ப்ரபாகர் இசையும், அருள் முருகன் தொகுப்பும் ஆவணப்படத்தின் சமுதாய நோக்கத்தை உள்வாங்கிக்கொண்ட உழைப்புகளாக ஒருங்கிணைந்திருக்கின்றன. “ஒண்ணு காரில ஒண்ணு ரோட்டில...” என்று வெவ்வேறு வீட்டுக் குழந்தைகள் வெவ்வேறு பாட முறைகளுக்குள் தள்ளப்படுவதைச் சொல்கிறது புதுகை தனிக்கொடி பாடல். குழந்தைகள் யாழினி, சூர்யபத்மா, மகிழன் பாரதி ஆகியோரின் தேன் குரலில் ஒலிக்கும் பாடலின் ஒவ்வொரு பொருளார்ந்த வரியையும் காட்சிப்படுத்தியிருப்பது, அடிப்படையான இன்னொரு போராட்டம் பற்றிய அக்கறையை விதைக்கிறது.

“மக்கள் நெடுநாட்கள் அமைதியாக இருந்துவிடமாட்டார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்,” கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் கூறுகிறார். இந்த ஆவணப்படம் விதைக்கிற நம்பிக்கைச் சொல் இது.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களும் அவர்களுக்குத் தோள்கொடுக்கும் மக்களும் தங்களின் வெஞ்சினக் கொதிப்பில் எரிமலையாய் வெடிப்பார்கள், அப்போது கல்விக் களத்தின் வரலாற்றுப் பாகுபாடுகள் பொசுங்கி, சமத்துவத் தளம் சமைக்கப்படும். தற்போது அடங்கியிருப்பது போன்றிருக்கும் எரிமலையின் தீக்கங்குகளை விசிறிவிடுகிற புதிய வரலாற்றுப் பேரியக்கத்தில் இந்த ஆவணப்படமும் நிச்சயமாகப் பங்களிக்கும்.


தீக்கதிர் 17.7.2011 இதழ் வண்ணக்கதிர் 

Monday, July 4, 2011

ஆறு வித்தியாசங்கள் அல்ல .... அதற்கு மேலும்

தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் ஆறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பில்லை . வித்தியாசங்கள் , வேறு பாடுகளாகி , வேறுபாடுகள் பாகுபாடுகளாகி, இறுகிக் கிடக்கிறது இந்திய சமுகம் .

இங்கே ஸ்ரீ ராமனின் பாதம் பட்ட உயிர்களெல்லாம் கல்லாக்கிக் கிடக்கிறது .

ஜூலை ஒன்பதாம் தேதி காலை பத்து மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலகத்தில் உள்ள அரங்கில் "எனக்கு இல்லையா கல்வி ?"ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா .

இதையே அழைப்பாக ஏற்க வேண்டுகிறோம் .




Friday, July 1, 2011

சமர் தொடங்கலாம்

எழுபது லட்சம் குழந்தைகளை ஏதுமற்ற அரசுப் பள்ளிகளில் பரிதவிக்க விடும்,   ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிகளை விட்டு வீதிக்கு விரட்டி விடும், ஏற்றத்தாழ்வுகள் நிரம்பி வழியும், ஒரு முடை நாற்றமெடுத்தக் கல்வி முறையை வைத்து கொண்டு, சமச்சீர் கல்வியைப் பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் விவாதிக்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் நிறைந்த ஒரு நாட்டில் இந்த ஆவணப் படத்தின் அவசியம் தவிர்க்கவே முடியாதது.




ஜூலை ஒன்பதாம் தேதி மாலை சென்னையில் வெளியிடுகிறோம்.


வஞ்சிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வீதிகளுக்கு விரட்டப் பட்ட, கல்வி மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் தவிர, எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.


யார் வேண்டுமானாலும் அதிகாரத்தில் இருக்கட்டும். ஊழல் செய்யட்டும். நீதிமன்றங்களில் மனுக்களோடு மண்டியிடட்டும். எல்லாக் குழந்தைகளையும் சமமாக, தரமாக பள்ளிக் கூடங்களில் உட்கார வைத்து விட்டு எதையும் சுரண்டிப் பிழைக்கட்டும். எதையும் தின்று தீர்க்கட்டும். தான் உண்ணும் உணவு இழிவானதென்று பன்றிகளுக்கு எப்போது தெரிந்திருக்கிறது?


அழைப்பிதழ் அடுத்த வாரம் தருகிறேன். குழந்தைகளின் கல்விக்காக கூப்பிடுகிறேன். வாய்ப்பிருந்தால் வந்து விடுங்களேன்.


சந்திக்கலாம். சம்பாஷிக்கலாம். சமர் தொடங்கலாம்.