Tuesday, September 11, 2012

முன்னுரை




உலகின் எந்த மொழியிலும் இன்னும் எவராலும் எழுதிமுடிக்கப்படாத
பேருணர்வே காதல். எல்லாக் காலத்திலும்,எல்லா மொழிக்கும் எழுதுவதற்குக் குறைவின்றி அள்ளி, அள்ளித்தரும் அருட்கொடையும் காதல்தான். 
காதலை "எழுதிமுடித்த" மொழிகள்தான் காணாமல்போன மொழிகளின் பட்டியலில்,இடம்பெற்ற மொழிகள் என்பதை, எந்த ஆய்வாளனின் உதவியுமின்றி அறிந்துகொள்ளுதல் இயலும்.

நீதி நூல்களின் வரிசையில் எப்போதும் தனித்த முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கும்,திருக்குறளில்,வள்ளுவன் காமத்துப் பாலைச் சேர்த்துப் பாடியதன் பின்னே இருக்கும் நீதி அதுதான். தன் படைப்புக்கும் சாகாவரம் வேண்டித்தான் காமத்துப்பாலையும் வள்ளுவன் எழுதினான்.

இன்றைக்கும் "விலங்கின்" பிரிவுகளில் ஒன்றாகத்தான் நம்மை விஞ்ஞானம் வகைப்படுத்துகிறது.விஞ்ஞானத்தின் இந்த விபரீதமான பகுப்பாய்வைத் தகர்த்து நாம் மனிதர்களாக மனுஷிகளாகத் தரம் 'உயர்ந்தது' காதல் நமக்குத் தந்த உயர்வினாலே தான்.விலங்கிற்குப் பிறந்து விலங்காகப் பிறந்து, விலங்கெனவே வாழ்ந்து, விலங்காகவே மடிந்து போய் விடுகிற நமது வாழ்வில் நமக்கு மனிதத்தன்மை தரும் பேருணர்வு காதல் மட்டுமே.
இந்தப் "பேருணர்விலே" இருந்துதான் மனிதன் இதர அனைத்து வகையான அறங்களையும்,பண்புகளையும் குணநலங்களையும் ஒழுக்கங்களையும்
உருவாக்கி இருக்கிறான்.காதலில் இருந்து தான் தனக்கான அனைத்து மேன்மைகளையும் ஆற்றல்களையும் மனிதன் உருவாக்க முடியும். 'உயிர்ப்பிக்கும்' உறவாக காதல் மட்டுமே களத்தில் இருக்கிறது. மற்றதெல்லாம் காதல் பிறப்பித்த,புலப்படுத்திய உப-பொருட்களேயன்றி வேறல்ல.
இராமன் மனிதனாகப் பிறந்த கடவுளா?அல்லது கடவுள் மனித உருவில் வந்தாரா என்பதையெல்லாம் பட்டிமண்டபங்களின் முன்னாள் பெருச்சாளிகளுக்கும், இந்நாள் சுண்டெலிகளுக்கும் பேசுபொருளாக விட்டுவிடலாம். ராமன் அமரத் தன்மை பெற்றது மிதிலையில் சீதையைக் கண்டு, காதல் கொண்டபிறகு தான்.பத்தாயிரம் பேர் சுமந்து வந்த, யாராலும் எடுத்து நிறுத்த இயலாத சிவதனுசை, இராமன் மட்டும் எப்படி முறித்தான்?. "எடுத்தது கண்டார்;இற்றது கேட்டார்" என்று கூடியிருந்த எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிடுகிற விரைவோடு, வலிமையோடு இராமனால் மட்டும் எப்படி முறித்தெறிய முடிந்தது..?
அவன் கடவுள் மனிதன் என்பதெல்லாம் இதற்குப் பொருத்தமான விடைகளே அல்ல;சுயம்வரத்திற்கு வந்தவர்களிலேயே சீதையைக் கண்டதும் காதல் கொண்டதும் ராமன் ஒருவனே. அவளும் கண்டு, காதல் கொண்டதால் தான்  அத்தகைய ஆற்றல் அவனுக்கு வாய்த்தது. மண்ணில் குமரர்க்கு மாமலையும் கடுகாகும் அற்புதத்தை எது தருகிறதோ, அது காதல், அதுவே காதல்.
விசுவாமித்திரன் வேறு பாதையில் அழைத்துப் போயிருந்தால் கதையும் வேறு பாதைக்குத் தான் போய் இருக்கும்.உலகின் வேறு எந்த மொழி ராமாயணப் பிரதியிலும் சொல்லாது விட்டதை தமிழில் தான் மட்டுமே பாடி "கவிச்சக்கரவர்த்தி" ஆனான் கம்பன்.

ஏகப்பட்ட 'காதல்' தொகுப்புகள் தமிழில் வந்துவிட்டன. மிகப் பெரும்பான்மையான முதல் தொகுப்புகள் 'காதலை' மையம் கொண்டே
உருவாகி இருக்கின்றன என்ற போதும் என் வாசிப்பின் எல்லைக்குள் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் என்னும் தொகுப்பும் பரிணாமனின் காதல் முதல் காதல் வரை என்னும் தொகுப்புமே மனம் கவர்ந்தவைகளாக இருந்திருக்கின்றன. இந்தச் சிறிய பட்டியலில் இப்போது மூன்றாவதாக ஆத்மார்த்தியின் "108" காதல் கவிதைகள்" என்னும் இந்தத் தொகுப்பையும் நான் சேர்த்துக் கொண்டேன்.
108 என்கிற எண் தன்னை வசீகரிப்பதாகத் துவங்குகிறார் ஆத்மார்த்தி. இந்துச்சமய மரபில், பெரிதும் புனிதமாக்கப்பட்டுவிட்ட எண் 108. அர்ச்சனை
ஆராதனை தியானம் திருத்தலங்கள் என்று விதம்விதமாய் அந்த எண்ணை உருவேற்றி வைத்திருக்கிறது சமயம்.இத்தனை காலம் சமயம் உருவேற்றிய எண்ணுக்கு, இந்தத் தொகுப்பால் மேலும் வசீகரம் கூடுகிறது.
சாதாரண மனிதர்களின் மனதில் கேட்டவுடன்,வழிபாட்டு உணர்ச்சியை உண்டாக்குகிற எண் 108.அந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,
காதலின் மீதான தனது வழிபாட்டுணர்வை கவிஞன் சொல்லாமல் சொல்லுகிறான். உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களை அழைப்பதற்கு அந்த எண் பயன்படுகிறதென்றால், காதலைப் பாட மிகப் பொருத்தமான தேர்வாக அந்த எண் துலங்குகிறது.

இந்த எண்ணைத் தேர்வு செய்ததன் மூலம்,சமயம் உருவாக்கிய புனிதத்தை,நூற்றாண்டுகளாக உருவாக்கிப் பாதுகாத்த புனிதத்தை,சட்டென்று
காதலுக்குக் கைமாற்றித் தந்ததற்காக "கடவுள்" ,ஆத்மார்த்திக்கு நன்றி சொல்லக்கூடும். வழக்கம் போலவே, ஆஷாடபூதிகள் எதிர்க்கவும் கூடும். எது நடந்தாலென்ன?எல்லாவற்றையும் காதலும்,கவிதையும் பார்த்துக் கொள்ளும்.

"காதல் மிக அற்பமானது; அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதுமானது ஆனால் அது மேன்மையுறுவதற்கு சம்மந்தப்பட்டவர்களின் வேறு சில குண நலன்களே காரணமாய் இருக்கின்றன" என்று தனது நாவல் ஒன்றின் முன்னுரையைத் துவக்கி இருப்பார் திரு.ஜெயகாந்தன். அத்தகைய சிறப்புடைய குணநலன்கள் குறித்து
அதிகம் பேசுவது இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.
எப்போதுமே கவிதைகளின் மீது தீராத காதல் கொண்ட, படைப்பு மனம் மிக்கவர்களுக்கு,மேலும் கிளர்ச்சியூட்டுகின்றன காதல் கவிதைகள். இந்தத் தொகுப்பில் புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிப் பிரயோகிப்பதிலும்,புதிய கற்பனை மொட்டுக்களைப் பிரயாசையின்றி மலர்த்தி விடுவதிலும்,வெற்றி கண்டு மகிழ்ச்சி கொள்ள வைக்கிறார் ஆத்மார்த்தி. மொழியின் சாகசம் நிறைந்த பாதைகளின் வழியே,காதலைக் கைப் பிடித்து அழைத்துப் போவதிலும் அலுப்பற்ற பயணம் சாத்தியமாயிருக்கிறது ஆத்மார்த்திக்கு.
இந்தத் தொகுப்பு உருவாக்கும் வசீகரங்களில் மிக முக்கியமானது இதன் எளிமையும்,சிக்கனமும்.இந்தக் "கட்டுமானம்" தனித்த அழகோடிருக்கிறது.நெருக்கிக் கட்டப்பட்ட இந்த இறுக்கம் கூட இளமையின் முறுக்கேயன்றி, முதுமையின் இறுக்கமன்று; இந்த சொற்சிக்கனம்,வாசிப்பின் போதே கவிதையின் முழுப்பொருளையும் அப்போதே உணர்ந்து விடுகிற அனுபவத்தைத் தருகிறது.அது வாசிப்பில் ஒரு பரவசமான விரைவுத்தன்மையை ஏற்றுகிறது. அந்த விரைவு, இரண்டு இழைகளுக்கு இடையில், நெசவில், பாய்ந்தோடும் எறிகுழலைப் போல விரைந்தோடி, இழைகளை, தனித்த இழைகளை, இணைத்து ஆடையாக்கி விடுகிறது.

இணையத்தில் இந்தக் கவிதைகள் அன்றாடம் எழுதப்பட்டப்போது, தொடர்ந்து படிக்க இயலாது அவ்வப்போது படித்த தருணங்களிலேயே
இவைகள் என் மனம் கவர்ந்து இன்று தொகுப்பாகிக் கைகளில் கிடக்கிறது.
               "வாங்கிச் செல்கிறவருக்கு
                வாசிக்கத் தெரியுமோவென
                ஏங்கிச்செல்லுமாம் வீணை;
                மடியினில் ஏந்தி
                மீட்டத் துவங்குகையில்
                வழியத் தொடங்குமாம்
                நாண இசை"
"காமம்" என்று தலைப்பிடப்பட்ட இந்தக் கவிதை,காமம் என்கிற சொல்லை நம் முன்னோர்கள் கையாண்ட "காதல் என்கிற முன்னைப் பழம்பொருளிலேயே எடுத்தாள்கிறது. இந்தக் கவிதை காதலுக்கும் கவிதைக்கும் பொதுவான பாடுபொருளாகப் படுகிறது எனக்கு... தன்னை எடுத்து  எழுதப் புகுந்தவனிடமும் இதே ஏக்கத்துடன் காத்திருக்கிறது 'மொழி' என்றே நான் கருதுகிறேன்.மொழியும் அவளும் அறிவார்கள்... இசை எப்போதும் வாத்தியத்தில் இல்லை; அது வாசிக்கிறவன் இடத்திலே தான் இருக்கிறதென்பதை." இந்தப் பேருண்மையை எளிய சொற்களில் தருகிறது இந்தக் கவிதை.
'கலவி' என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் உட்பொருள் மிக,மிக நுட்பமான உடலியல் உண்மையை உணர்த்துகிறது.எல்லாமும் இசைந்து இருக்கிற எல்லாமும் கலந்து இருக்கிற எல்லாமும்... எல்லாமும் இணைந்து இருக்கிற ஆகச்சிறந்த கலவி தரும் பேரின்பத்தைப் பேசுகிறது இந்தக் கவிதை.
'அறியாதவர்'களே இதனைச்சிற்றின்பம் என்று சொல்லித் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொண்டார்கள். அறியாதவர்களுக்கு அது சிற்றின்பம் தான். அறிந்தவர்கள் அறிவார்கள் அது பேரின்பம் என்பதையும். மழையை நிலம் புணர்ந்தது என்பதையும்.அதுதானே "செம்புலப் பெயல் நீர்".... நிலம் புணர்ந்து மழைக்குத் தன் நிறம் தருவதே கூடல்,
இந்தப் பேரின்பத்தின் அந்தரங்கத்தை, எல்லோரும் பயன்பெற மொழிகிறது இந்தக் கவிதை.மோட்சத்திற்குப் போகிற பாதையை,கோபுரத்தின் மீதேறி நின்று,ஊரைக் கூட்டிச் சொல்வதற்கு எவ்வளவு பரந்தமனம் வேண்டுமென்பதை, இப்போது உணர முடிகிறது. அந்தரங்கத்தின் நுட்பங்களையும், ரசனைக் கூர்மையையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் காதலை எல்லோருக்குமானதாக மாற்றி விடக் கூடும்.

எல்லோரும் காதலிக்க வேண்டுமென்பது என் கட்சி. அதனை எல்லா அழகுடனும், அற்புதத்துடனும், மனிதர்கள் நிகழ்த்த வேண்டுமென்பது என் பெருவிருப்பங்களில் ஒன்று. என் பெருவிருப்பத்தை, இத் தொகுப்பு நிறைவேற்றுவதால், இது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இந்த முன்னுரை கூட ஆத்மார்த்திக்காக எழுதப்பட்டதல்ல. காதலுக்கு என எழுதப்பட்டதே. அந்த உவப்பில்,களிப்பில் என் ஆசான் மகாகவி பாரதி சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். "ஆதலினால் காதல் செய்வீர்.."

"குளத்து மீன்கள்
 கடிக்கும் என்றபடி
 கரையில் நின்றேன்
 "பேசும்" என்று
 கால் நனைத்தாய்.
இந்தக் கவிதையைப் படித்ததும் முகமறியாத அந்த மனுஷியின் மீது மதிப்புண்டாகிறது.இப்படிப் பேசுவதால் காதலிக்கப் பட்டாளா..அன்றி காதல்
வயப்பட்டதால் இப்படிப் பேசுகிறாளா என்று ஊகித்து உணரமுடியாமல் பிரமிப்புத் தட்டுகிறது. கவிதையில் உருவாக்கப்பட்ட மென்மையுணர்ச்சியும், அழகுணர்ச்சியும் மிகுந்த களிப்பூட்டுகிறது. அந்தக் கணம்,அந்தக் குளத்து மீனாகி விட வேண்டுமென்று கூடத் தோன்றுகிறது.
மேலும் மேலும் இத்தொகுப்பில் உள்ள மனம் கவர்ந்த கவிதைகளைப் பற்றி எழுதி இதை ஒரு வழமையான முன்னுரையாக மாற்றிவிட எனக்கு
விருப்பமில்லை.; காதலின் பேரின்பத்தை இந்தக் கவிதைகளை வாசித்து இன்புறுங்கள். பிரிவின் துயரத்தையும் இந்தக் கவிதைகள் உணர்த்திவிடக் கூடும்.இன்பம் துன்பம் இரண்டுமே ஒன்றாகி, ஒரு சேரத் தருவது தான் காதலின், நூதனமான தனிப் பண்பாகி இருக்கிறது. அதனாலேயே தான் நெருங்கினால் குளிர்கிற நீங்கினால் சுடுகிற நெருப்பென்று அதைச் சொன்னான் வள்ளுவப் பேராசான்.

பாரதி எழுதினான் "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாகப் பிற.மனிதனானால் காதல் செய்..." ஏனெனில் காதல் தான் சாதிகளை ஒழிக்க வல்லது. காதல் தான் மதங்களைக் கடக்க வல்லது.காதல் தான் எல்லாப் பேதங்களையும் எடுத்தெறியக் கூடியது.
காதல் தான் விலங்காயிருந்த நம்மை மனிதனாக்கியது.
காதல் தான் மனிதர்களாய் இருந்த நம்மை அமரனாக்கியது.
காதல் 'தன்' வயப்பட்டவனையும்,தன்னைப் பாடுகிறவனையும், தன்னை வாசிக்கிறவனையும் கூட அமரனாக்கும் ஆற்றல் கொண்டது.
அத்தகைய அமரத்தன்மை, நம் எல்லோருக்கும் வாய்க்கட்டும்.

என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01.08.2012

ஆத்மார்த்தியின் 108 காதல் கவிதைகள் தொகுப்புக்குத் தந்த முன்னுரை...

Friday, April 20, 2012

உண்மை

அம்மணமாக நடந்தாலும் உண்மை அழகு தான் .... எவ்வளவு சிங்காரித்தாலும், பொய்மையின் அருவருப்பு எளிதில் புலப்படுகிறது

Tuesday, March 13, 2012

அப்பத்தா- ஒரு சீரிய சிறுகதைத் தொகுப்பு.



இந்த சிறுகதைத் தொகுப்பினை வாசிக்க ஆரம்பித்தபோது, முன்னுரையில் நீர் கட்ட ஆரம்பித்த விழித்திரை, தொகுப்பின் கடைசிக் கதையான கல்பனாவின் கடைசி ஐந்து புள்ளிக்கு வரும்வரை விலகவே இல்லை.
ஆனாலும் மனது, கண்களை மீறி படித்தது.

ஒரு கதையை உணர்தல் எவ்வளவு பெரிய பேரனுபவம்! இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது வாய்க்கிறது.

வலியை முறியடிக்க, வலிக்குள்ளாகவே பயணித்து, வலி மறக்க செய்யும் ஒரு வித மனோதத்துவ போதனை தொகுப்பில் நெடுக வருகிறது.

தீக்குள் விரலை வைத்து நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கண்டவனின் வாரிசுகளுக்கு மட்டுமே இது சாத்தியம்.

உபதேசிகள் நம் மீது நிகழ்த்தும் வன்முறையினை நூலாசிரியர் சொல்லும் விதம் சுந்தரமாக இருக்கிறது.
" நாம் உணர்ந்த உண்மைகளையே, உபதேசங்களாக நமக்குச் சொல்லப்படும் தருணங்கள் சாபம் மிக்கவை. மூளையெங்கும் கசப்பின் வீர்யம் பரவி தலை தெறிக்க ஆரம்பிக்கும். கசப்பின் துகளோ கீழிறங்கி உள் தொண்டைக்குள் சொட்டும். அது தெறித்த இடங்களில் தோல் தடிமனாகிப் பருத்து, தொண்டை கசந்து,குரல் சிதறும். வாயெங்கும், வயிறெங்கும், பூச்சி மருந்தின் வாசம் குமட்டும்."

மின் விளக்கைப் போடுவதும் அணைப்பதும் போலத்தான் மனிதர்கள் போகித்துக் கொண்டிருகிறார்கள் . அதன் உள் மின்சாரத்தை ஒருவரும் உணர்வதில்லை என்றார் ஓசோ.
" ஒன்றை ஒன்று அவிக்காது , ஒன்றை ஒன்று வீழ்த்தாது , இரட்டை நாதஸ்வர இசை அருவியாய் பயணித்து சம கால சம்போகத்தின் போது அறையை நிறைக்கும் நறுமணம்"  தம்பதிகள் இருவரும் ஒத்திசைவாய் ஒரு புள்ளியில் குவியும் போது மட்டுமே சாத்தியம் என்றும் அப்படி இல்லாத ஒரு கூடலில், "பலாத்காரத்தின் துர் நாற்றம் மட்டுமே உயிர்ப் பாதையில் வேட்டை நாயென விரைந்து செல்லும்" என்று வெகு அற்புதமாக ஒரு கதையில் குறிப்பிடுகிறார்.
உறவுகளையும் , சொந்தங்களையும் குழந்தைகளாக நாம் பார்த்தபோது வந்த உணர்வுகளை வெகு அழகாக சில வரிகள் ஞாபகப் படுத்துகிறது.

" துள்ள துடிக்க மீன்களை அறுத்து சுடுசாம்பலில் புரட்டியவாறே பிள்ளகளுக்கு பாடம் சொல்லித்தரும் அம்மா"

" உள்ளங்கையளவு நார்த்தைகளும், நெல்லியளவு பூத்த அருநெல்லிகளும், பெரியம்மாவின் கன்னம் போல் செழித்த எலுமிச்சைகளும் "

" பர்மாவிலிருந்து வந்த பீங்கான் ஜாடிகளில் மணத்துக் கிடக்கும் புதுப் புளி"

" பச்சைப் பனைமட்டைக் கூம்புக்குள் , குவிந்து வரும் இளம் நுங்குகளை நிறுத்தி வைத்த இடத்தில் சுற்றி வரும் பனஞ் சாற்றின் மணம் ஞாபகப்படுத்தும் தாத்தாவின் பழைய புத்தக வாசனை"

" ஒருவரை ஒருவர் தவறிக் கூட தொட்டு விடாமலும் , மோகத் தீ அணைந்து விடாமலும் கவனமாக இருந்த அப்பாவும் பெரியம்மாவும்"

" ஒரு விலங்கின் தவிப்போடும் , பறவையின் பதற்றத்தோடும் , மூர்க்கங்களின் பின் நிறைந்த குழந்தைத் தனத்தோடும், நிதானத்தின் பின் இருக்கும் பசித்த ஒரு விலங்குத் தனத்தோடும் இருக்கும் அப்பா"

வெளியில் இருந்து கொண்டு , வெளி விஷயங்களை மட்டுமே போதிக்காமல் , உள் இறங்கி, உள் வாங்கி, ஒவ்வொருவரின் உள்ளேயும் போய் உட்கார்ந்து கொள்கிறார் இந்த நூலாசிரியர்.,

அம்மாவும்,அத்தையும், அப்பாவும், தாத்தாவும், அப்பத்தாவும், சிநேகிதியும் என்று சீதாராமையர் காம்பவுண்டில் இருந்து ஆரம்பிக்கும் இவரின் முதல் தொகுப்பே மிரளச் செய்கிறது. அன்னைத்தமிழ் தன்னிடம் உள்ள வசீகர வார்த்தைகளை எல்லாம் இவருக்கு தாராளமாக அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறாள் 

நூலாசிரியர் பன் முகம் கொண்ட ஒரு கநோசியர் (connoisseur) என்பதை நான் அறிவேன் . மேடைஅனுபவங்கள், அறிவொளி அனுபவங்கள், அரசியல் முகாம்கள், வங்கி தொழிற்சங்க அனுபவங்கள், கல்லூரிக்  கலாட்டாக்கள், கலை இரவுகள், இலக்கிய வட்டம், இனியர் வட்டம், திரை அனுபவங்கள், குறும்பட அனுபவங்கள் என்று பரந்து கிடக்கும் அனுபவங்களுடன் ...இவர் தொடர்ந்து தமிழுக்கு அணி செய்வார் என்பது எனது விருப்பமும் . நம்பிக்கையுமாகும் .


- சுதா. இளங்கோவன் 

எனது அருமை நண்பன் இளங்கோவின் இந்த விமர்சனம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ,ஆற்றலையும் எனக்கு அளிக்கிறது. 

இரண்டொரு நாட்களுக்கு முன் , என்னோடு பேசிக்கொண்டிருந்த என் தோழி சொன்னாள் . 'நம் நலம் நாடுகிறவர்கள், எப்போதும் நம்மை சுற்றி இருப்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும் . ஏனெனில், நம்மை வீழ்த்த விரும்புகிறவர்கள் எப்போதும் சுற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள்"
அன்றாடம் இப்படி ஏதேனும் ஒன்றை, எங்கிருந்தேனும் திரட்டி , எனக்குப் புகட்டி எனக்கு அறிவூட்டிக் கொண்டே இருக்கிறாள் அவள் .இந்தக் கணத்தில், அவளுக்கு நன்றி சொல்கிறேன் .

அந்த வகையில் இளங்கோவின் எழுத்து என்னைச் சுற்றி நிற்கும் நலன் ... மாசற்ற நன்மை .அதனை நான் உணர்ந்ததன் அடையாளமாக , எனது தொகுப்பின் பின் அட்டையில் என் தொகுப்பு குறித்த சிறு குறிப்பினை (blurb) அவன் தான் எழுத வேண்டுமென விரும்பினேன் . அவ்வாறே அது நிகழ்ந்தது .. நன்றி இளங்கோ... நன்றி.

Blurb எனப்படும் அந்த சிறு குறிப்பு:
பாரதி கிருஷ்ணகுமாரின் படைப்புலகம் அக உணர்வுகளின் மாண்பை உன்னதமாகச் சித்தரிக்கிறது. கபடமில்லாத மனிதர்கள் கதைகளில் நெடுக வலம் வருகிறார்கள்.ஒவ்வொரு கதையும், நமக்குள்ளே பல்லாண்டுகளாக உறைந்து கிடக்கும் பேரன்பை உருக்கிக் கண் வழி நீராக்கும் வல்லமை கொண்டவை. பாசாங்கற்ற கதைக் களங்களும், இயல்பான செய்நேர்த்தியும் வசீகரமானவை.

Saturday, March 10, 2012

ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ...

வணக்கம்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு நாளில் , நானும் தொலைக்காட்சியில் நடக்கும் TALK SHOW ஒன்றில் பேசினேன்.
எதற்கு என்று கேட்கிறீர்களா ?

எல்லோராலும் பார்க்கப்படுவதற்கு அதை விடச்  சிறந்த வழி எதுவுமில்லை. 
அதில் பார்த்ததும், கூப்பிட்டு ... நீங்க பேசுறீங்க !!! என்று வியக்கும் குரல்களைக் கேட்கலாம்.
விவாதப்பொருள் நமக்கு இசைவானதாக இருக்கலாம்.
தொலைக்காட்சியில் தோன்றினால் தான் இயங்குகிறோம் என்று நம்புகிறவர்களை சந்தோஷப் படுத்தலாம்.
இது எல்லாமும் சேர்ந்த ஒரு மன நிலை கூடக் காரணமாக இருக்கலாம் .....

ஆனால், எனக்கு அந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரி நண்பர் ANTONY இன் அழைப்பை நீண்ட நாட்களுக்கு நிராகரிக்க இயலாமல் போனது தான் காரணம் .....



நாளை ,11.03.2012 ஞாயிறு இரவு ஒன்பதரை மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நானும் பேசுகிறேன் ..... முடிந்தால் கேளுங்கள் .. அல்லது பாருங்கள் ....
நன்றி .

Thursday, February 2, 2012

பாரதி கிருஷ்ணகுமாரும் அப்பத்தாவும்

பெப்ரவரி 1, 2012
பாரதி கிருஷ்ணகுமாரும் அப்பத்தாவும் -  விழியன்

பாரதி கிருஷணகுமார் என்றால் எனக்கு எவ்வளவு ப்ரியம் என்று உடைந்துபோன அந்த டேப்ரிக்கார்டரை கேட்டால் அது சரியாக சொல்லலாம். அல்லது தேய்ந்து போய் அறுந்த அந்த கேசட்டுகள் சொல்லலாம். என் பள்ளிக்கால நாளொன்றில் ஏதோ ஒரு கூட்டத்தில் முதல்முறையாக பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சினை நேரடியாக கேட்டேன். கேட்டேன் கேட்டேன் மயங்கினேன். உருகினேன். அது நடுசாமத்திற்கும் பிந்தைய நேரம். விடியலுக்கு இன்னும் சில மணி நேரமே இருந்த பொழுது. உறக்கம் கண்களை தழுவ இருந்த சமயம் அவர் மேடையேறினார். உலுக்கி எடுத்தார். அந்த வயதில் புரியாத விஷயங்கள் என்றாலும் தன் வசீகர குரலாலும் தன் பேச்சாலும் தனக்குள் இழுத்துக்கொண்டார் BK.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கு அவர் பேச வந்தாலும் அப்பாவுடன் நானும் ஆஜர். கலை இரவுகளில் அவர் பேசிய பேச்சு கேசட்டாக வாங்கி அவை தேயும் வரை கேட்டபடியே இருந்த நாட்கள் அவை. அந்த ஏற்ற இறக்கம். காய்ந்த குரல். அழுகை வரவழைக்கும் அழுத்தம். சமூகம் மேல் இருக்கும் கோபம் என நீண்ட நாட்கள் வாட்டி எடுத்தது. மேடைப்பேச்சாளனாக சில போட்டிகளில் இவரையே முன்மாதிரியாக கொண்டு எதுவும் எழுதி வைத்துக்கொள்ளாமல் கைதட்டுக்கள் வாங்கிய சத்தங்கள் இன்னும் கேட்கின்றன. மேடைப்பேச்சாளர்களில் இன்று வரை அவரே எனக்கு சிறந்த பேச்சாளராக தோன்றுகிறார்.
2005ல் திருவண்ணாமலையில் கலை இலக்கிய இரவு. எங்கெங்கோ அலைந்துவிட்டு மேடையின் பின்புறம் வழியாக கடந்தபோது சிகரெட் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார் பாரதி கிருஷ்ணகுமார். இந்த தயக்கம் எத்தனை உறவுகளை இழக்க செய்துவிடுகிறது, எத்தனை அரிய சந்தர்பங்களை நழுவ விட்டுவிடுகிறது, எத்தனை அரிய மனிதர்களை நெருக்கமாக காணக்கிடைக்காமல செய்துவிடுகிறது. பெருத்த முயற்சி செய்து அவரிடம் சென்று “நீங்கள் பாரதி கிருஷ்ணகுமார் தானே?” என்றேன். என்ன ஒரு மொக்கை தனமான கேள்வி. அவர்தான் என தெரியும். எப்படி பேச்சினை ஆரம்பிப்பது என்று இன்று கூட தெரியாது. ஆமாம் என்றபடி இன்னொரு இழு இழுத்தார். கல்லூரி காலங்களில் அவரை எங்கும் காணவில்லை கேட்கவில்லை. குரல் மாறி இருந்தது. அப்பாவின் பெயரை சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன். நல்லா இருக்காரா , கேட்டதாக சொல்லு என கடைசியாக ஊதிவிட்டு மேடைக்கு சென்றுவிட்டார் . அன்று என்னுடன் வந்திருந்த கந்தபழனியிடம் ‘நான் அவரிடம் பேசிவிட்டேன் பேசிவிட்டேன்’ என பெருமைப்பட்டுக் கொண்டேன்.
காலம் உருண்டோடியது. பாரதி கிருஷ்ணகுமாரின் சீடி ஒன்றினை அப்பா கொடுத்தார். “என்று தணியும்” என்று தலைப்பிட்டு கும்பகோண பள்ளிசம்பவத்தை முன்னிருந்தி கல்வி/பள்ளிகள் குறித்தான ஆவணப்படம் அது. அந்த முதல் பாடலை இப்போது நினைக்கும் போதும் தொண்டை வரண்டு தழுதழுக்கின்றது. அந்த பாடலை தட்டச்சி எப்படியேனும் இணையத்தில் ஏற்றிவிடவேண்டும் என முயற்சித்து ரீவைண்ட் செய்து செய்து அழுதுகொண்டே அறையில் இருந்த காட்சி இன்னும் பசுமையாக நிற்கின்றது. அந்த குரல் இன்னும் என்னை எதோ செய்துகொண்டு தான் இருக்கின்றது. சென்னை வந்த பிறகு வம்சியின் நிகழ்ச்சியில் மீண்டும் அறிமுகம் செய்துகொண்டேன். ‘விழியன்’ என்ற பெயரில் எழுதிவருகின்றேன் என்றேன். பலே என்றார். மீண்டும் அவர் மேடைபேச்சினை கேட்டமாட்டேனா என்றபோது அவரின் ‘அப்பத்தா’ புத்தககண்காட்சியில் கிடைத்தது.

‘அப்பத்தா’ – பாரதி கிருஷ்ணகுமாரின் முதல் சிறுகதை தொகுப்பு. நான் நிச்சயமாக சொல்வேன், கதைகளை அவர் வாசித்து காட்டியது போலவே இருந்தது. அப்பத்தா கதை அதில் உச்சம். கதைகள் முழுக்க சொல்ல சொல்ல தீராத மனிதர்களின் அன்பு, நேசம், பேரன்பு, பாசம் இவையே தொடர்கிறது. கல்பனாவின் கைகளை நாயகன் பிடித்தவுடன் அதன் வழியே பால்யத்திற்கு சென்று தொலைத்த அத்தனை தோழிகள்/தோழகள் வந்து சென்றார்கள். எப்போதும் உண்மையினை பேசும் ஒருவன் தன் மகளின் மேல் இருக்கும் ப்ரியத்தின் பால் முதல் முறை பொய்சொல்வதில் முடியும் கதை அழகு. ‘கோடி’ கதையில் அண்ணே என்ற அலறல் அந்த இடத்திற்கே கொண்டு செல்கிறது. ஒவ்வொரு கதையும் வேறுவேறு தளத்தில் நகர்ந்தாலும் அன்பினையே சுற்றி சுற்றி வருகின்றது. அது நிச்சய்ம் மக்களின் பாலும், இந்த இயற்கையின் பாலும் கொண்ட நேசத்தின் வெளிப்பாடே. ‘துறவு’ கதை மட்டும் ஏனோ பிடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக வாசிக்க நல்ல ஒரு சிறுகதை தொகுப்பு.
நூலின் விலை நூறு ரூபாய் என்பது தான் புத்தகத்தில் நெருடலாக இருந்த விஷயம். லேஅவுட்டில் இன்னும் சிக்கனமாக செயல்பட்டு இருக்கலாம். தலைப்பிற்கு ஒரு பக்கம் ஒதுக்கியது பக்கங்களை நிரப்புவதற்கா என தெரியவில்லை.
நிச்சயமாக பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் சொல்ல இன்னும் ஏராஆஆஆளமான கதைகள் இருக்கின்றன. மேலும் மேலும் தொடப்படாத உணர்ச்சிகள், சொல்லப்படாத அன்பு ஆகியவற்றை உள்ளடக்கி பற்பல கதைகள் வரவேண்டும் என்பது கேட்க காத்துக்கிடக்கும் என்னைப்போன்றோரின் ஆவலாக இருக்கும். எல்லா ஊடகத்துறையும் வெற்றி பெற ஒரு தீவிர ரசிகனின் வாழ்த்துகள்.
தலைப்பு : அப்பத்தா
வகை   : சிறுகதைகள்
வெளியீடு: The Roots
பக்கங்கள் : 96
விலை    : ரூ 100 /-

- விழியன்
(இது விழியன் பக்கத்தின் 500வது பதிவு. இதே பிப்ரவரி மாதம் 2006ல் சித்தார்த் பரிந்துரையில் இந்த வலைப்பூவை ஆரம்பித்தேன். தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்தும் நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் நன்றியும் ப்ரியங்களும்)

Tuesday, December 20, 2011

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

சென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும். 
சமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவரது குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு, அவை பற்றி எழுதவும் செய்தேன். டைரக்டர், தயாரிப்பாளர், பேச்சாளர், இப்போது எழுத்தாளர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். எனினும் அவரது அப்பத்தா என்ற சிறுகதைத் தொகுப்பை விமர்சன நோக்கோடுதான் படித்தேன். அது பற்றிய என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.
எதிர்மறையானதொரு தொனியோடு தொடங்கி நேர்மறையாக முடியும் அழகானதொரு கவிதையோடு துவங்குகிறது தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள். சிறுகதைகள் என்ற பெயருக்கு ஏற்றாற்போல சின்ன கதைகள். ஐந்து பக்கங்களுக்கு மேல் எந்தக் கதையும் போகவில்லை. ஆனால் ஐம்பது பக்கங்கள் அல்லது ஐநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவல்கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன.
தொகுப்பு அம்மாவுக்கும் கந்தர்வனுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னுரையில் பிகே (பாரதி கிருஷ்ணகுமார்), “எனது எல்லாப் படைப்புகளிலும் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனுமோர் வடிவத்தில் அம்மா ஒளிர்ந்துகொண்டே இருக்கிறாள். அந்த ஒளியில்லாத உலகில்,என்னால் எதையும் எழுதிவிட முடியாது. இதனை எழுதுகிறபோதுகூட அம்மா எதிரே இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள்” என்று கூறுகிறார். பிகே எப்படிப்பட்ட மனிதர், அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதன் குறிப்பு இங்கே கிடைக்கிறது. தர்க்கங்களை மீறிய தெளிவும் உறுதியும் மின்னும் எழுத்து.
பத்து கதைகளில் நான்கு கதைகளின் கருவாக இருப்பது இறப்பு. “வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக் காற்று, உள்ளிருந்து தொண்டைக்குழிக்குள் மோதித் திரும்பிக்கொண்டே இருந்தது.” “தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது பாவம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள்” (அப்பத்தா) என்ற சொற்கள் நம்மை என்னவோ செய்கின்றன. இது தகவல் அல்ல. மரணத்தின் மீதான ஒரு கலைஞனின் மனக்குவிப்பு. இறப்பு இங்கே எழுத்தில் மறு உயிர்ப்பு செய்யப்படுகிறது. இக்கதைகளில் வரும் மனிதர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்தான். ஆனால் நாம் கண்டும் காணாமல் விட்ட விஷயங்களை பிகே பார்க்கிறார். 
எழுத்தில் ஒருவிதமான கவிதா தன்மை கைகூடி வந்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் கற்பனையில் எதுவும் அழகிய இலக்கியமாக அழகுடன் பரிணமிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. உன் சகோதரன் கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பதை டெம்பெஸ்ட் நாடகத்தில் ஏரியல் என்ற பூதம் அல்லது ஜின் இப்படிச் சொல்கிறது: “Those are pearls that were his eyes”! ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்? பிகேயின் ஒரு கதையில் கணவன் மனைவி உறவும், அதனூடாக ஒரு பெண்ணின் மனதும் வெகு அழகாக, வெகு நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது: 
“ஊடலுக்கு பிந்திய காமத்தில், ஊடலின் கரையாத வண்டல் என்று எதுவுமே மிஞ்சியதில்லை…மெல்லிய இழைகள் முறுக்கேறி, முடிச்சாகி, இறுகிய பாறையாக எழுந்து நின்றது. போகத்தின், சமகால போகத்தின் நறுமணம் எழவேயில்லை. பலாத்காரத்தின் துர்நாற்றம் என் உதடுகளுக்குள்ளும், குழந்தைகள் உயிர்த்திருந்த உயிர்ப்பாதைக்குள்ளும் வேட்டை நாயாய் விரைந்தது” (அறம் வளர்த்த நாதன்).
பிகேயின் கதை மாந்தர்கள் மிகமிக மென்மையானவர்கள். வீட்டுக்குள் வந்து கண்ணாடியில் உட்கார்ந்த வண்ணத்துப் பூச்சிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று மின்விசிறியை நிறுத்தும் மனம் கொண்டவர்கள்(தெய்வநாயகம் சார்). ஒருவகையில் பிகேகூட இப்படிப்பட்டவர்தான். அவர் மேடைகளில் பேசும்போது கேட்டிருக்கிறேன். பம்பாயில் குண்டு வெடித்தபோது அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் செத்த புறாக்களை ஆறு சாக்குகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு கார்ப்பரேஷன் போனது என்று சொல்லும்போது கண் கலங்குபவர். 
மேடைகளில், பொதுமக்கள் முன்னிலையில், பிரார்த்தனைக் கூட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்று பிரார்த்திக்கும் சிலர் திடீரென்று உரத்த குரலெடுத்து அழுவதை நான் கேட்டிருக்கிறேன். “எங்கள் பாவங்களை மன்னித்துவிடு இறைவா! எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக இறைவா!” என்று சொல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே சொல்வார்கள்.
ஆனால் அது மேடைக்கண்ணீர். முதலைக் கண்ணீர். உண்மையில் அது கண்ணீரே அல்ல. பொய்யான பக்தியை திறமையாக மறைத்து, கேட்பவர்களை முட்டாளாக்கிவிட்ட வெற்றிச் சிரிப்பு அது. திரவப் புன்னகை. நரகம் என்று ஒன்று இருக்குமானால் நிச்சயமாக அந்த அழுகுணிகளுக்கு அதில் இடமிருக்கும். ஆனால் போலியான மேடை நாகரீகம் எதையும் பொருட்படுத்தாத பிகேயின் தழுதழுப்பில் நேர்மை இருந்தது. பிகேயின் பேச்சிலும் எழுத்திலும் இரண்டு விஷயங்களை நான் பார்க்கிறேன்: ஒன்று உண்மை. இன்னொன்று உணர்ச்சி. தலையால் வாழ்பவர்கள் அறிவாளிகள். இதயத்தால் வாழ்பவர்கள் மனிதர்கள். நானும் பிகேயைப் போல ஒரு மனிதனாகவே வாழ விரும்புகிறேன். முத்துக்கனிமா என்றொரு பெரியம்மா எனக்கிருந்தார்கள். ஏதோ படம் பார்த்து அழுதுகொண்டிருந்த அவர்களிடம் நான் கேட்டேன், “சினிமா பார்த்து அழுவது முட்டாள்தனமில்லையா?”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சினிமா பார்த்து சிரிக்கலாம் என்றால், ஏன் அழக்கூடாது?”
உண்மைதான். ஏன் அழக்கூடாது? மனிதர்கள் மீதும், மரம், செடி கொடி, பூச்சிகள், பறவைகள், கிணறு, ஆறு போன்ற இப்பிரபஞ்சத்தின் மீதுமான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை இக்கதைகளில் நாம் தரிசிக்கலாம். 
’அம்மாவும் அந்தோன் சேக்கவும்’  என்ற முதல் கதையின் முடிவில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இறந்து போன அம்மாவை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட மகன் போகிறான். அக்கா வருவதற்குத் தாமதாமாவதால் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மயானத்திலேயே அவன் அந்தோன் சேக்கவின் ”ஆறாவது வார்டு” என்ற கதையை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறான். 
இது நடைமுறைக்கு மாற்றமாக, கொஞ்சம் செயற்கையாக உள்ளது. அம்மாமீது பாசமில்லாத மகனாகவும் அவன் காட்டப்படவில்லை. ரொம்ப ‘ப்ராக்டிக்கலானவன்’ என்பதற்காக இது நுழைக்கப்பட்டிருந்தாலும் சரியென்று தோன்றவில்லை.
சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வீட்டில் கிடத்தி வைத்திருக்கும்போது சுற்றியிருக்கும் பெண்கள் செக்ஸ் பற்றி சிலாகிப்பது போன்ற காட்சி விவரிக்கப்படுவது நினைவுக்கு வருகிறது. சல்மாவைப் பொறுத்தவரை அக்காட்சி போலித்தனத்தின் உச்சம். ஆனால் பிகேயின் கதையில் வரும் இறுதிக்காட்சி லேசான சறுக்கலாகவே தோன்றுகிறது. தவிர்த்திருக்கலாம். 
சில தலைப்புகளை மாற்றியிருக்கலாம், சில இடங்களில் வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று எனக்கு ஆங்காங்கு தோன்றினாலும், அவற்றையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. ஏனெனில் இது இவரின் முதல் தொகுதி என்ற ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.
அப்பத்தா. The Roots வெளியீடு. பக்கங்கள் 96. விலை ரூ 100/- அவரது மின்னஞ்சல்: bkkumar.theroots@gmail.com
நன்றி தமிழோவியம்
 http://nagoorumi.wordpress.com