தமிழில், கவிஞர் ஞானக்கூத்தன் நான் பெரிதும் மதிக்கிற ஆளுமை. பாரதி குறித்த எனது நூலை அவருக்கு அனுப்பி
இருந்தேன். திரு. ஞானக்கூத்தன் எனக்கு
எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி... ஞானக்கூத்தனுக்கு நன்றி. இந்தக் கடிதத்தை
நான் போற்றிப் பாதுகாப்பேன்.
ஞானக்கூத்தன்
நண்பர் கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,
வணக்கம் .
தாங்கள் அனுப்பிய இரண்டு புத்தகங்களும்
கிடைத்தன.
“அருந்தவப்பன்றி” நூலைப் படித்து விட்டேன். உடனே எழுத முடியவில்லை – இதர
படிப்பு மற்றும் எழுத்து வேலை காரணமாக.
நூல் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. பாரதி 1898 க்கும் 1904ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில்
கவிதைகள் எழுதியிருக்கவில்லை என்று தாங்கள் நிறுவியிருக்கிறீர்கள். ஒரு படைப்பாளி
ஆறு ஆண்டு காலம் எழுதாமல் இருந்து பின்பு எழுதத் தொடங்குவது சாத்தியமில்லை. ஆனால்
இது பாரதியாருக்கு விதிவிலக்கான விஷயமாகக் கொள்ள வேண்டும். சில கவிஞர்கள் 15ம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள். இவர்கள் எழுத்துக்கு
வறட்சி ஏற்பட்டால் பின்பு எழுதுவதைத் தொடர்வது கடினமாக இருக்கும். நல்ல வேளையாகப்
பாரதியார் இந்த நிலைமைக்கு ஆளாகவில்லை.
என்னுடைய அனுமானம் அவரது எழுத்துக்கள்
பிந்திய வளர்ச்சியின் பார்வையில் மதிப்பிழந்ததாகி விட்டிருக்கலாம். கவிதை என்பது
அரிய விஷயம். பலர் எழுதினாலும் சிலசமயம் அவற்றைக் கவிதையே இல்லையென்று
சொல்லுகிறோமல்லவா... பாரதியார் எழுதியிருப்பார். ஆனால் ஷெல்லி,கீட்ஸ்,மற்றும்
விட்மன் என்று எண்ணத் தொடங்கிய பாரதியாருக்குத் தனது படைப்புகளிலேயே ஒரு பகுதி
காலாவதியாகி விட்டதாகத் தோன்றியிருக்கக்கூடும். இவை அவர் 16-20 வயதில் எழுதியிருக்கக்கூடியவை என்பதை எண்ணும்
போது ஒரு பெரிய நஷ்டமாகக் கருத வேண்டியதில்லை. ஆனால் வடநாட்டு அனுபவங்கள் அவர்
கவிதையில் இடம் பெறாமல் போனது அவருக்கும், கவிதைக்கும் நஷ்டம் தான்...........
No comments:
Post a Comment