Friday, December 28, 2012

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 03.1
விழாவில் , பங்கேற்று வெண்மணித் தியாகிகளின் அஸ்தியை , வெண்மணி நினைவிடத்திற்கு அர்ப்பணித்து விட்டு வாழ்த்துரை வழங்கிய பத்மஸ்ரீ கமலஹாசன் .

Thursday, December 27, 2012

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா03
 விழாவில் , பங்கேற்று வெண்மணித் தியாகிகளின் அஸ்தியை , வெண்மணி நினைவிடத்திற்கு அர்ப்பணித்து விட்டு வாழ்த்துரை வழங்கிய பத்மஸ்ரீ கமலஹாசன் .

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா02 வெளியீட்டு  விழாவில் வாழ்த்துரை வழங்கினார் முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் , விடுதலைப் போராட்ட வீரருமான திரு . என் . சங்கரய்யா  

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 01

வெளியீட்டு விழாவிற்குத் தலைமை ஏற்ற , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய தமிழ் மாநிலச் செயலாளரும், அப்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான திரு . ஜி . ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமை உரையின் ஒரு பகுதி .

Wednesday, December 26, 2012

அன்பின் தனித்த அடையாளம்


 {எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை }கடந்த ஆண்டு டிசம்பரில் , எனது முதல் இரண்டு நூல்கள் வெளியாகின .

ஒன்று ஆய்வு .
மற்றொன்று புனைவு .

ஆய்வு நூல் மகா  கவி பாரதி பற்றியது .

புனைவு , எனது பத்து சிறு கதைகள் .

எல்லோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பினேன் .

பலர் வந்து இருந்து விழாவைச் சிறப்பித்தார்கள் .

பலர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அழைப்பிதழ் அனுப்பப் பெற்றவர்களில் ஒருவர் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . சிறந்த வாசகர் .

ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை ஒன்றினைப் படித்து விட்டு ,அதனைப் பாராட்டும் பொருட்டு என்னோடு தொடர்பு கொண்டவர். அப்படித்தான் எங்கள் அறிமுகம் நிகழ்ந்தது .

 விழா அழைப்பிதழ் கிடைத்ததும் என்னோடு தொலைபேசியில் பேசினார் . தான் வர இயலாதென்றும் , ஆனால் உரிய இடத்தில் அழைப்பிதழைச் சேர்த்து  விடுவதாகவும் சொன்னார் . நான் கேட்டுக் கொண்டேன் . எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை .

விழா முடிந்து , இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த கடிதத்தில் மேலே இருக்கிற புகைப்படம் இருந்தது . பேராசிரியர் தான் அனுப்பி இருந்தார் .
அதனுடன் வேறு இணைப்பு எதுவும் இல்லை .

கடிதம் வந்த மறு நாள் பேசினார் . புத்தகம் வெளியான அதே நாளில் , அதாவது பாரதி பிறந்த நாளில் ,எட்டயபுரம்சென்று ,பாரதி பிறந்த இல்லத்தில் , அமைந்துள்ள பாரதி சிலையின் கீழ் அழைப்பிதழை வைத்து அதனைப் பாரதிக்குச்  சொன்னதாகச் சொன்னார் .

பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் இதை எனக்கு சொன்னதும் , பதில் உரையாட எனக்கு எதுவும் தோன்றவில்லை . இது பாரதி மீதான அவரது  அன்பின் தனித்த அடையாளம் தவிர வேறு எதுவுமில்லை . அந்த அன்பின் தூய்மை என்னையும் அரவணைத்துக் கொண்டது .

பாரதி வரலாற்று ஆசிரியர்களில் தனிச் சிறப்பு வாய்ந்த அமரர் தொ .மு . சி . ரகுநாதனின் மருமகன் தான் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன்.

பாரதி குறித்து ஒரு நூல் வருவதை பாரதியின் கவனத்துக்கும் , கனிந்த ஆசிக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் .

நாங்கள் இருவரும்  இன்னும் நேரில் பார்த்துக் கொண்டதில்லை . ஆனால் பாரதி எங்களை இணைத்திருக்கிறான்.

சோழனும் , பிசிராந்தையாரும் நேரில் பார்க்காமலே அன்பு பூண்டவர்கள் என்று படித்திருக்கிறேன் .அதெல்லாம் வெறும் கதையல்ல .

சார் ..... நீங்கள் பாண்டியன் .
நான் பிசிராந்தை போலும் .  


Tuesday, December 25, 2012

வெண்மணித் தியாகிகளின் அஸ்தி

வெண்மணி வரலாற்றை உருவாக்கும் தேடலின் போது , அறுபத்தெட்டில் சம்பவம் நடந்த சில நாட்களில் சேகரித்துப்  பாதுகாக்கப்பட்ட அந்தத் தியாகிகளின் அஸ்தி கிடைத்தது .

இப்போது அது அஸ்திக் கலசமாக வெண்மணியில் பாதுகாக்கப்படுகிறது

இன்று வெண்மணி நினைவு  நாள் .


"வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருகிறோம்" - என்பது வெற்றுக் கோஷமல்ல .

கண்டனமும் , தண்டனையும்

தலைநகர் தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் கடும் கண்டனக் குரல்கள் .... குஜராத்தில் , வாச்சாத்தியில் இன்னும் வேறு பல இடங்களில் இதனினும் இழிவான வன் கொடுமைகள் நடந்த போதும்... அது குறித்து இப்போதும் ...  இவர்கள் எல்லோரும் இவ்வளவு பெருங் குரலில் எதுவுமே பேசியதில்லை .
எந்தக் கொடுமையும் நகரத்தில் , படித்தவர்களுக்கு நடந்தால் அதற்கான எதிர் விளைவுகள் தனிச் சிறப்புடன் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது .

என்ற போதும் , இது தொடர்பான எல்லாக் கண்டனக் குரல்களையும் நான் மதிக்கிறேன் . அப்படியாவது நமது சமூகம் குரல் எழுப்புவது பாராட்டுதலுக்குரியது .

ஆனால் கண்டனக் குரலோடு , அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் எல்லா
நீதி மான்களும் சேர்த்து எழுதுகிறார்கள் .
அதில் நானும் கை நாட்டுப் போட வேண்டுமென்று என் முக நூலில் மனுக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள் .

அத்தகைய மனுக்கள்
அனைத்தையும் நீக்கி இருக்கிறேன் .
குற்றத்தை விட தண்டனை குரூரமாக , அவமானகரமாக , இழிவாக இருக்கலாகாது


பாலியல் வன்கொடுமை பெண்மைக்கு எதிரானது .
மரண தண்டனை தாய்மைக்கு எதிரானது .

Monday, December 24, 2012

வெண்மணி நினைவஞ்சலி


இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் பதினெட்டாம் தேதி வெண்மணி குறித்து , நான் தயாரித்து இயக்கிய " ராமைய்யாவின் குடிசை " ஆவணத் திரைப்படம் வெளியானது .

ஆவணப் படத்தில் இடம் பெறாது போனது கவிஞர் புதுகை .தனிக்கொடியின் உயிர் உருக்கும் பாடல் .

வெளியீட்டு விழாவில் புதுகை செல்வி,பாடினார் .

நிறைந்திருந்த அரங்கம், பாடலால் உறைந்தது .
ஆன்மா உருகிக் கண்ணீராகப் பெருகியதை அனைவரும் உணர்ந்தார்கள் .

நாளை கீழ வெண்மணி நினைவு தினம் .
அந்த வீரம் மிகுந்த மக்களுக்கு , இந்தப் பாடலைக் காணிக்கை ஆக்குகிறேன் .
 

ஆசிரியர் தினம் 2012ருமை நண்பனும் தோழனுமான கவிஞர் முகமது சபி , தேனியில் இருந்து அலைபேசியில் பேசினார் . அவரது நண்பர் ஒருவருக்கு எனது மேடைப் பேச்சு பிடிக்குமாம் . அவர் மகள் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் , அங்கு நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் பேச நான் இசைவு தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னார் .

ந்தக் கல்லூரியில் இருந்து , பேசச் சொல்லுங்கள் என்றேன் . முறைப்படி பேசினார்கள் . கல்லூரியின் பெயர் தான் எனக்கு புதுமையாக , நினைவில் நிறுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது . அப்படி ஒரு கல்லூரி இருப்பதே , பல முறை ஈரோடு போன எனக்குத் தெரியாமல் இருந்தது .

செப்டம்பர் ஐந்தாம் தேதி நிகழ்வுக்குப் போனேன் . எங்கோ தேனியில் இருந்து படிக்கப் போன மாணவியின் தந்தை வழியே , ஒரு தொடர்பு உண்டாகி , சபி சொல்லி அங்குபோனேன் .  அழைப்பிதழில் எனது  ஊர்  தேனி  என்று
போட்டிருந்தார்கள். யாதும் ஊரே என்பது இதுவாகவும் இருக்கலாம் , சிந்தனை மழை பொழிய வருவதாகவும் போட்டிருந்தது . "அப்படிதானா "என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் . ஆனால் நான் போன அன்றைக்கு, இதமான ஒரு தூறல் விழுந்தது என்னவோ உண்மை .

ல்லூரி , விழா அரங்கம் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது . ஒரு சிறிய குன்றின் மேல் இருப்பது போல நல்ல உயரத்தில்  இருந்தது கல்லூரி.
இப்போது நினைத்துப் பார்க்கிற தருணம் , அந்த வளாகம் மனதுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்கிறது .

ன்றைக்கு , விழாவில் நடந்தவைகள் பற்றி தனியே சொல்லணும் . கோபமும் ,குதூகலமும் ஒருங்கே கலந்த நிகழ்வு அது .

Thursday, December 20, 2012

கருப்பு ஓவியமும் , வண்ண ஓவியமும்

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மாலை நேரம் . அப்போது நான் சாத்தூரில் வங்கிப் பணியில் இருந்தேன் .அலுப்பும் , சலிப்பும் , கோபமும் , நிறைந்திருந்த ஒரு மாலை நேரம் . எங்கள் சங்க அலுவலகத்தில் தனித்து இருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன் . அருகாமையில் இருந்த பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வந்த அன்புத் தோழன் அழகர்சாமி வந்தான் . நான் மனதார வரவேற்று விட்டு , வேலைகளில் மீண்டும் அமிழ்ந்தேன்.

அவர்  எதையோ வரையத் துவங்கினார் . பென்சில்களை மாற்றி மாற்றி வரைந்து கொண்டே இருந்தார் . இருபது அல்லது முப்பது நிமிடம் . என்னையே வரைந்து எனக்குக் காட்டினார் . வியந்து போனேன் . என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை .

சிறிது நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள் . பாராட்டினார்கள் . வியந்தார்கள் . ஒரு சொல் கூடச் சொல்லாமல் அழகர்சாமி மெல்லிய புன்னகையுடன் எல்லாம் கேட்டுக் கொண்டார் .

" ரொம்ப நல்லா இருக்கு ... ஆனா ஓவியத்திலும் கோபமாகத் தான் இருக்க வேண்டுமா ? B.K நல்லா சிரிக்கிற மாதிரி ஒன்னு வரையக் கூடாதா ? " என்று அழகர்சாமியைப் பார்த்து  R.S.N  கேட்டார். அழகர்சாமியின் முகம் வாடி விட்டது .

நான் R.S.N.  ஐக் கோபமாகப் பார்த்தேன் ... " படத்துலயாவது சிரிக்கிற மாதிரி இருக்கட்டுமேன்னு  கேட்டேன் ... வேணாமுன்னா விடுங்க " என்றார் R.S.N .
எல்லோரும் சிரித்தார்கள் . நானும் தான் .

சிரித்துக் கொண்டே R.S.N ஐப் பார்த்து அழகர்சாமி சொன்னார் . " சிரிக்கிற மாதிரி தானே ? வரைஞ்சாப் போச்சு ... ஆனா உங்க தலைவரைச் சிரிக்கச் சொல்லுங்க " என்றார் .

எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள் . சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் . பென்சில்களை எடுத்து உள்ளே வைத்து விட்டு WATER COLOUR BOX  எடுத்து "நான் " முக மலர்ந்து சிரிக்கிற ஓவியத்தை வண்ணத்தில் அடுத்த அரை மணி நேரத்தில் வரைந்தார் அழகர்சாமி .

கோபமாக இருந்ததைக் கறுப்பிலும் , சிரித்து இருப்பதை வண்ணத்திலும் ஆக வரைந்து தந்தார் .

என் சந்தோசங்களைப் போலவே அந்த வண்ண ஓவியமும்  எங்கோ காணாமல் போய் விட்டது . எப்போதாவது திரும்பக் கிடைத்தால், உங்களுக்குக் காணத் தருவேன் . நானும் பார்த்துக் கொள்வேன்

Wednesday, December 19, 2012

புத்தகக் கண்காட்சி - ஈரோடு

2009 ஆம் ஆண்டு ஈரோடு , மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழாவின்  அய்ந்தாம் நாள் நிகழ்வில் நானும் , தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு . கே . வைத்தியநாதனும் சிறப்பு விருந்தினர்கள் .

புத்தகத் திருவிழாவை சிறப்புற நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர் .

அவர் புத்தகத் திருவிழாவைத் துவங்கிய ஆண்டுகளில் பதிப்பகங்களும் , பொது மக்களும் பேராதரவை அவருக்கு அள்ளித் தந்து விடவில்லை . ஒரு திருமண மண்டபத்தில் தான் முதலில் துவக்கினார் . இப்போது இடம் கொள்ளாத பெரும் மைதானங்களுக்கு அதை வளர்த்து உயர்த்தி இருக்கிறார் .
துவக்க ஆண்டுகளிலும் என்னை அழைத்து இருக்கிறார் . இப்போதும் அழைக்கிறார் .

ஆயிரக் கணக்கில் மக்களும் , நூற்றுக் கணக்கில் பதிப்பகங்களும் கூடும் அசலான திருவிழாவாகி விட்டது ஈரோடு புத்தகச் சந்தை .


தமிழகத்தின் தனிச் சிறப்பு மிக்க புத்தகத் திருவிழாக்களில் தனித்த இடம் பெற்று விட்டது ஈரோடு . அதை உருவாக்கிய பெருமை தோழர் ஸ்டாலின் குணசேகரனுக்குத்தான் .

எடிட்டர் - இயக்குனர் - இசைஅமைப்பாளர்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி , மழை கொட்டித் தீர்த்த ஒரு நாளில் எனது முதல் ஆவணப் படமான "ராமையாவின் குடிசை " வெளியானது .

நானே தயாரித்து , நானே இயக்கினேன் .

1968 டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணியில் நடைபெற்ற படுகொலை குறித்துப் பேசும் முதல் ஆவணப் படம் .

2006  ஜனவரியில் , தஞ்சையில் நடைபெற்ற தங்களது மாநில மாநாட்டில் எங்களை அழைத்துச் சிறப்பித்தது ,"தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் "

மாநாட்டின் தலைமை விருந்தினரான , திரிபுரா முதலமைச்சர் மாண்புமிகு . மாணிக் சர்க்கார் எங்களுக்குப் பரிசளித்தார் .

விழா முடிந்த பிறகு , எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று .

ஆவணப் படத்தின் எடிட்டர் , தனித் திறமையும், ஆற்றலும் , மிக்க சாந்தாராம் விருது பெற்ற கலைஞர் நண்பர் கே . பழனிவேல் ....... நான்...... எனது அருமை நண்பனும் , மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் , ஆவணப்படத்தின் இசையமைப்பாளருமான இரா . பிரபாகர் .

Wednesday, November 14, 2012

அமைவதெல்லாம் . . . .

து ஒரு தீர்க்கதரிசனமான கவிதை .
நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்கு முன்பு எழுதப்பட்டது .
" கருப்பு ஆட்சிக்கு வரும் - இன்று
 அந்தியிலும் , நாளை
  ஆப்பிரிக்காவிலும்". இந்தக் கவிதையை எழுதியதால் எனக்கு அறிமுகமான கவிஞன் தான் தங்கம் மூர்த்தி. அன்று தொடங்கிய நட்பு , துருப்பிடிக்காமல் இப்போதும் தொடர்கிறது .


டந்த  மார்ச் மாதம் ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து,
"திருச்சியில், ரோட்டரி மாநாடு ஒன்று நடக்கிறது. நீங்க பேச வரணும்' என்றான். அவன் அழைத்ததால் ஒப்புக் கொண்டேன். அது தொடர்பாக, விழாக் குழு சார்பில் கரூரில் இருந்து ரமேஷ் பேசுவார் என்றான்.
ரமேஷும் பேசினார். எல்லாம் சரியாகத்தான் நடந்தது .


னால், விழாவுக்கு முதல் நாள் கடும் உடல் நலக் குறைவாகி ,சுருண்டு படுத்துக் கொள்ளும்படியாகி விட்டது.
திருச்சிக்குப் போக முடியவில்லை.
விழாவன்று காலை ரமேஷ் கூப்பிட்டார் . நண்பன் சதீஷ் செல்லையா தான் அவரோடு பேசினான். நான் பேசுகிற நிலையில் இல்லை.
"கடைசி நேரத்துல இப்பிடி செஞ்சா எப்பிடி ? எப்பிடியாவது அவர்
வரணும்" ... என்று கோபமாகத் துவங்கி ... " சரி.. அப்ப .. அவரு வர மாட்டாரு" என்று வெறுப்போடும், சலிப்போடும் உரையாடலை ரமேஷ் முடித்துக் கொண்டதாக சதீஷ் பிறகு சொன்னான்.
சிறிது குணமான பிறகு, என்னால் வர இயலாது போனது குறித்து ரமேஷுடன் பேச வேண்டும் என்று பத்திருபது முறை நினைத்துக் கொண்டேன்.
ஆனால் பேசவில்லை.


மூன்று மாதங்கள் கழித்து, ஒரு நாள் கரூரில் இருந்து ரமேஷே அழைத்தார். இம்முறையும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தார். எவ்வளவு பெருந்தன்மை ... எவ்வளவு நம்பிக்கை.
உடல் நலத்தில் பெரிதாக மாற்றம் இல்லாத போதும் ஒப்புக்கொண்டேன்.
இந்த முறை நிகழ்ச்சிக்குப் போகிற அன்று உடம்பு படுத்தாது என்கிற மனக் கணக்கு. சண்முக வள்ளி என்றொருவர் பேசுவார் என்றார் ரமேஷ் .


ANGELS OF KARUR என்பது அந்த மகளிர் ரோட்டரி அமைப்பின் பெயர். அதன் CHAIR PERSON சண்முக வள்ளி. ரொம்ப அளவாக, செறிவாகப் பேசினார்.
நான் சொன்ன தலைப்புகளில் சிறந்ததைத் தேர்வு செய்தார்.
புகைப்படம், தன்  விவரக் குறிப்பு அனுப்பச் சொன்னார்.
பயணச் சீட்டுகள் அனுப்பினார்.  எல்லாம் முறையாக, சரியாக குறும் செய்திகள்  மூலமே செய்தார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நிகழ்ச்சி என்று முடிவு.


நான்காம் தேதி நள்ளிரவே கரூர் போய் சேர்ந்தேன், தங்கி இருந்த விடுதியில் தான் கூட்ட அரங்கு. காலை சரியாக  நிகழ்வைத் துவக்கினார்கள் . குத்து விளக்கு ஏற்றச் சொன்னார்கள். இரண்டு ஐந்து முக விளக்குகள். பத்துப் பேர்  ஆளுக்கொரு முகமாக விளக்கேற்றினோம். இரண்டாவது வரிசையில் ஒரு இடம் இருந்தது. அமர்ந்து கொண்டேன். யாரும் மேடைக்கு அழைக்கவில்லை. சந்தோசமாக இருந்தது.

ன்றைய நிகழ்வில், மொத்தம் மூவர் பேசுவதாக ஏற்பாடு. மற்ற இருவர் பேசுவதைக் கேட்க வேண்டுமென மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
இருவர்  பேச்சும் மறக்க முடியாத அனுபவங்கள் .
ஒருவர் கலா பாலசுந்தரம்  (Alert , Chennai )
மற்றொருவர் முனைவர் . நேருஜி  ( Banglore)

சேவையின் மகத்துவத்தை , அது செயல் வடிவம் பெறுகிற  இயக்கங்களின் கூட்டுணர்வை  இருவரும் எளிய சொற்களில் , பாசாங்கு இல்லாமல் பரிமாறினார்கள் . அடுத்து பேச வேண்டும்  என்பதை மறந்து கேட்ட உரைகள் . இருவரது உரைகளும் பெருங் கனவுகள் .


ன்னைப் பேச அழைத்தார்கள் . மனதில் கூடி இருந்த உற்சாகம் சொற்களில் பெருக்கெடுத்தது .வியர்வை பொங்கி வழிந்தது . சிறப்பாகப் பேசினேன் என்று  பிறகு  எல்லோரும் சொன்னார்கள் .மிக , மிக முன்னதாக ஒத்திகை பார்க்கப்பட்ட சிறந்த நாடகம் போல அந்தக் கருத்தரங்கு  அமைந்திருந்தது . நிகழ்வுக்கான  Chair person சண்முக வள்ளி அனைத்தையும் நேர்த்தியாக , திறம்பட , வடிவமைத்திருந்தார் . அவரது ஆளுமையும் , தலைமைப் பண்பும், மதிப்பிற்கும் , பாராட்டுதலுக்கும் உரியது .மேஷ் என்னை சாப்பிட அழைத்துப் போனார் . உணவு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார் ரவிக்குமார் . ரமேஷ் அறிமுகம் செய்தார் . " சண்முக வள்ளி இருக்காங்கள்ள ... அவங்க வீட்டுக்காரர் ". அறிமுகம் செய்து கொண்டோம் . நன்கு , நின்று , பார்த்து உபசரித்தார் . எல்லோரையும் அதே போல பார்த்துக் கொண்டார் .
" ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ,
"ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பக்கத்திலேயேயும்  ஒரு ஆண் துணை நிற்கிறான் " . தகுதி மிக்க பெண்கள் அதனைக்  கூடுதல் திறமையாக உயர்த்திக் கொள்கிறார்கள் .
ஆகஸ்ட் ஐந்து  மறக்க முடியாத நாளாகி விட்டது .
தங்கம் மூர்த்தி , ரமேஷ் , ரவிக்குமார் , ராஜாத்தி , என் . ஷண்முக வள்ளி என  எல்லோருக்கும் நன்றி .  ரோட்டரி மாவட்ட ஆளுநர் குமணனுக்கு நன்றி .


லைமைப் பொறுப்பாளர் சண்முக வள்ளிக்கு , அவர் அளித்த மகத்தான வாய்ப்பிற்காக எனது தனித்த நன்றி .
karur angels என்று தான் சொன்னார்கள் . ஆனால் அசுரத்தனமான ஏற்பாடுகள் .
அமைப்பாளர்கள் , அரங்கம் , பங்கேற்பாளர்கள் ,பேச்சாளர்கள் , உபசரிப்பு , உணவு , நேரக் கட்டுப்பாடு , நினைவுப் பரிசு ... என எல்லாமே அமைந்திருந்தது .
இப்படி " அமைவதெல்லாம் " அபூர்வமானது .


Tuesday, November 13, 2012

என்னால் ஒரு போதும் முடியாது . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல் ,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
என்னால் முடியாது .

ன் உளத் தூய்மையின்
நறுமணத்தை நுகராதிருக்க ,
மடியில் தலை சாய்த்துக் கண் மூடிக்
களிப்பின் சிகரம் தொடாதிருக்க ,
ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு , முத்தமிட்டு
மோகத்தில் மூர்ச்சை ஆகாதிருக்க ,
பிரிவின் பெருங் கனத்தைக் காலத்தின்
கோலமென்று கணக்குத் தீர்க்க . . . .
என்னால் முடியாது

ன்னையே நினைந்துருகும்
பிரிவின் கடுங் காய்ச்சலை ,
உன்னையே உடனிருத்திக் களமாடும்
கனவின் உறக்கமற்ற சூறாவளியை . . . .
எதிர் கொண்டு நிற்க
என்னால் முடியாது .

ன்னையே
நினைந்து , நினைந்து
நனைந்து , நனைந்து ,
கரைந்து , கரைந்து ,
என்னுள்
கலந்து , கலந்து போவதை ,
எங்கிருந்தோ நீ  நிகழ்த்துவதைத்
தாங்கிக் கொள்ள . . . .
என்னால் ஒரு போதும் முடியாது .

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி

Photo: காலையில் எழுந்ததும்,எங்கோ ஒரு தொலைக்காட்சியில் , கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " உன்னைக் கண்டு நானாட , என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப  தீபாவளி ..." என்ற பாடல் தொலைவில் ஒலித்தது .

இந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து  போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் . 

உலக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில்  பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .

அவர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக்  கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
 வலி . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அதிகாலையில்  எழுந்ததும்,எங்கோ ஒரு தொலைக்காட்சியில் , கல்யாணப்பரிசு திரைப்படத்தில் இடம் பெற்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " உன்னைக் கண்டு நானாட , என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி ..." என்ற பாடல் தொலைவில்ஒலித்தது .

ந்தப் பாடல் இல்லாமல், தீபாவளி கடந்து போவதில்லை . ஆனால் பாடலைக் கேட்கிறபோதேல்லாம் , அறமும் , அறிவும் , உணர்வும் கலந்து குழைத்து எழுதிய அருமைத் தோழன் கல்யாணசுந்தரத்தின் இள வயது மரணம் மனமெங்கும் வெடித்துச் சிதறுகிறது. தீபாவளி முடிந்த மறு நாள் காணக் கிடக்கும் , வீட்டு வாசலைப் போலாகி விடுகிறது உள்ளம் .

லக சினிமாவின் வரலாற்றில் , உழைப்பவனின் குரலை முதலில் பாடிய "காலமறிந்து கூவிய சேவல்" கல்யாணசுந்தரம் .

வர் நினைப்பு வருகிறபோதெல்லாம் , அடி மனதில் அகக் கண்கள் சிவந்து கலங்குவதை இன்று தான் இந்த உலகத்தோடு பகிர்ந்து கொள்ளுகிறேன் .

பிரிவின் வலி தான் உலகின் ஆகப்பெரிய்ய்ய்ய...
வலி . . . .
 
 
_ பாரதி கிருஷ்ணகுமார் 
அதி காலையில்

இல்லாதவர்க்கும் இருக்கும் தீபாவளி

தீபாவளி கொண்டாடுகிற எல்லோருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் .
இந்த ஆண்டு தீபாவளி "இல்லாத" எல்லோருடனும் மனத்தால் நான் உடனிருக்கிறேன் .
யார் யாரைக் கொன்றதால் தீபாவளி என்பதில் நிறையக் கதைகள் புகுந்து கொண்டன .
கொல்லப்பட்டது நரகாசுரன் . சரி ...
கொன்றது யார் ?
கிருஷ்ணனா ... சத்ய பாமாவா ... சக்தியா ...

ந்தக் கதைக் குழப்பத்தை விட முக்கியமான உண்மை... தேவர்களும் , அசுரர்களும் இணைந்து மனிதர்களைக் கொல்லும் பண்டிகையாகி விட்டது இந்த இனிய தீபாவளி.

சென்னையின் பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் தன் மகளிடமும் , மகனிடமும் இருக்கிற காசுக்குள் துணி எடுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதான தாயின் வயோதிகக் கண்களும் , அதில் திரண்டிருந்த கண்ணீரும் எந்தப் பண்டிகையையும் கொண்டாட விடாது . கொண்டாட முடியாது .பாரதி  கிருஷ்ணகுமார்

உன்னால் மட்டும் தான் முடியும் . . . .


ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல்,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
உன்னால் முடியும் .

ன் பேதமைகளைப்
புன்னகையால் அரவணைக்க ,
நாணி என் நடு மார்பில்
முகம் புதைக்க ,
பேரின்ப அருஞ் சுனைகளில்
தாகம் தீர்க்க ,
பிரிவின் தணலில் தனியே
உருக்கிப் பார்க்க . . . .
உன்னால் முடியும் .

ன்னை  நினையாமலிருக்கிற
பொய்மையை வெயிலாகவும் ,
என்னையே நினைந்துருகும் ,
மெய்மையை மழையாகவும்
கொட்டி விரித்துக் குறிப்புணர்த்த . . . .
உன்னால் முடியும் .

ன்னையே  நான்
நினைந்து ,நினைந்து ,
நனைந்து  ,நனைந்து
கரைந்து , கரைந்து ,
உன்னுள்
கலந்து , கலந்து போவதையும்
உணர்ந்தறிய . . . .
உன்னால் முடியும் .

ன்னால் மட்டும் தான் முடியும் . . . .

_ பாரதி கிருஷ்ணகுமார்

Saturday, November 3, 2012

சங்கே முழங்கு

 க்டோபர் பத்தாம் தேதி காலை நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரி நடத்திய "எல்லோருக்கும் கல்வி " என்னும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதில் பங்கு பெறும் நோக்கத்துடன் எனது வெளிநாட்டுப்பயணத்தின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்துக் கொண்டேன் . ஏனெனில் "எல்லோருக்கும் கல்வி "என்பது நமக்கு எப்போதும் ஒரு தீராதமுழக்கம் . அது கோடிக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் கோரிக்கை . அதை நாம் சாத்தியப் படுத்தியாக வேண்டும் .

சுதந்திர இந்தியா தன் நாட்டு மக்களுக்கு இழைத்த அநீதிகளில் மிக , மிக
முதன்மையான அநீதி , அது தன் குழந்தைகளுக்குக் கல்வி தரத் தவறியது .
இப்போதும் அந்த அநீதி தொடர்கிறது . இது போன்ற கருத்தரங்குகள் மிக அதிக அளவில் , மிக விரிவாக நடத்தப் பட வேண்டும் .

முன் முயற்சி எடுத்த நீதிபதி பஷீர் அஹமது மகளிர் கல்லூரியின் தமிழ் துறை நமது பாராட்டுக்குரியது . கருத்தரங்கின் சிறப்பம்சம் அதில் பங்கு பெற வாய்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் . அடுத்த தலை முறையை , நமக்குப் பின்னே கருத்துச் செறிவுடன் களத்தில் நிறுத்த வேண்டியது தான் நமது கடமையும் , நமக்குள்ள சவாலும் .

வணப்படம்  அங்கு திரையிடப்பட்டது . அனைவரும் கண்டு களித்தார்கள் என்று சொல்ல முடியாது . ஆனால் பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள், முழு ஈடுபாட்டுடன் பார்த்தார்கள் .

துரையில், இருந்து இயங்கும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தயாரித்து ,எனது இயக்கத்தில் உருவான "எனக்கு இல்லையா கல்வி ?" கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது . இந்தப் பதினைந்து மாதங்களுக்குள் அது பல நூறு பள்ளிகள் , கல்லூரிகள் , ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர்களுக்கான பல முகாம்களில் திரையிடப்பட்டு இருக்கிறது . மிக ஆழமான , விரிவான விவாதங்களும் நடந்ததாகப் பலரும் உறுதி செய்தனர் .

நாமும் , நமது பங்குக்கு சங்கை ஊதி வைக்கலாம் என்று செய்த வேலை அல்ல இது . இது பாரதியின் சங்கு ... பாரதிதாசனின் சங்கு ... பட்டுக்கோட்டையின் சங்கு .... களத்தில் படையணிகளை, சட்ட ரீதியான போருக்கு அணிவகுக்கும் சங்கு . சங்கே முழங்கு !

Friday, November 2, 2012

மழை இன்னும் நிற்கவில்லை ....

இன்று இரண்டாம் நாளாக மேலும் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லோரும் , இணக்கமாக விரைந்து வேலை பார்த்த நாள் .
ஒளிப்பதிவாளர் கேசவனும் , அவரது சகாக்களும் சிறப்பாகப்
பணி புரிந்தார்கள் .

நல்ல உணவு , அன்பான உபசரிப்பு , அன்பு ததும்பி இருந்தது
படப்பிடிப்புக் கூடம் .

எல்லாப் பணிகளும் முடிந்ததும் , எல்லோரும் மனதார விரும்பி ,
ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் .

சென்னையில் மழை நின்றிருந்தது .மனசுக்குள் மழை நிற்கவில்லைThursday, November 1, 2012

பாரதியிடமிருந்து ....

மழை பெய்கிறது .
ஊர் முழுதும் ஈரமாகி விட்டது .
தமிழ் மக்கள் , எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே
நிற்கிறார்கள் , ஈரத்திலேயே உட்காருகிறார்கள் , ஈரத்திலேயே நடக்கிறார்கள் .
ஈரத்திலேயே படுக்கிறார்கள் ; ஈரத்திலேயே சமையல் , ஈரத்திலேயே உணவு . உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்பட மாட்டான்

மழையோடு உறவாடிய வண்ணம் ...

நேற்று ஒரே நாளில் ஐந்து குறும் படங்களை இயக்கினேன் .
எல்லாம், வணிக நோக்கில் அல்லாமல் , கல்வி புகட்டும் நோக்கில் ,
உருவாக்கப்பட்டவை .
எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் , நட்சத்திரங்களும் ,
இணைந்து , இணக்கமாக , மிகுந்த மகிழ்ச்சியாகப் பணியாற்றிய மழை நாள் .
மனம் மிகுந்த சந்தோசமாக இருந்த நாள் .
சிறந்த உணவு , அன்பான உபசரிப்பு ....
என்ன சொல்ல .... எல்லாமே நிறைவாக இருந்த நாள் .

மொத்தத்தில் , மனதிற்கு உள்ளேயும் மழை பெய்த நாள் .
இதற்கு மேல் எழுத அந்தரங்கம் தடுக்கிறது .
"அந்தரங்கம் புனிதமானது " என்பார் திரு. ஜெயகாந்தன் .

Monday, October 15, 2012

பாரதி பிறந்த நாள் விழா - பாரதி கிருஷ்ண குமாரின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா 11.12. 2011 ரஷ்யக் கலாச்சார மையம்

பாரதி பிறந்த நாள் விழா - பாரதி கிருஷ்ண குமாரின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா    11.12. 2011  ரஷ்யக் கலாச்சார மையம்  சென்னை


 http://www.youtube.com/watch?v=DBhdLLCn27s

Wednesday, October 3, 2012

உயர் கல்விப் பயணத்தின் முதல் நாளில்...

பாரதி நினைவு

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய நிகழ்வில் பங்கு பெறும், பெரும் பேறு கிட்டியது .விழாப் பேருரையாற்றும் வாய்ப்பைப் பெற்றேன் . விழா நிறைவுரையை தவத்திரு பொன்னம்பல அடிகளார் நிகழ்த்தினார் .

அரங்கம் நிறைந்த , அடர்த்தியான கூட்டம் . தகுதி மிக்க பார்வையாளர்கள் . மனம் நிறைத்த நிகழ்வு .

மிக நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர்களைச் சந்திக்க வாய்த்தது .
எல்லையற்ற  பழைய நினைவுகள் உறக்கம் கலைந்து நடமாடிய நாளாக அமைந்தது .வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றியும் , வணக்கமும் .

விழா குறித்த செய்தியை, தினமணி நாளிதழ் சிறப்பாக பிரசுரித்தது . அதன் தேவகோட்டை நிருபர் திரு.அறிவரசன் நேர்த்தியாகச் செய்தியை வடித்திருந்தார் . தினமணிக்கும் ,  அறிவரசனுக்கும் நன்றி .

Saturday, September 29, 2012

ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...

நாளை வெளியாக உள்ள வாச்சாத்தி நிகழ்வு பற்றிய ஆவணத் திரைப்படம் குறித்த ஹிந்து நாளிதழின் முன்னோட்டம்.
ஹிந்துவுக்கும், திரு கோலப்பனுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி...