Saturday, December 28, 2019

பாரதி விழாவில் ...

கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி விழாவில் ...

Thursday, December 26, 2019

பாரதி கிருஷ்ணகுமார் | உயிர்மை சுஜாதா விருதுகள் 2019 | Bharathi Krishnakumar speech

ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , சில மாதங்கள் எங்கும் போக இயலாத சூழலில் கிடந்தேன் . வருவாய்க்கான வழிகள் எல்லாம் அடைபட்டுக்கிடக்க , மருத்துவச் செலவுகள் அடைபடாமல் போய்க்கொண்டிருந்தது . இப்படியொரு விபத்தில் சிக்குவதும் , அதன் பிறகு அதனினும் துன்பமான மருத்துவச் செலவுகளில் அகப்படுவதும் முதன்முறை அன்று . மூன்றாவது முறை . விபத்தில் அகப்பட்டதை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை . அருகில் இருந்து அறிந்து கொண்டவர்கள் தவிர மற்றவர்களுக்குச் சொல்லவில்லை .நிகழ்ச்சிகளுக்கு யாராவது அழைத்தாலும் , வர இயலாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தேன் . மனுஷ் அழைத்தார் . சுஜாதா விருது வழங்கும் விழாவிற்கு .... இயலாது என்றேன் . ஏனென்றார் . தயக்கத்துடன் உடல்நிலை குறித்துச் சொன்னேன் . அவரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளாமைக்குக் கடிந்து கொண்டார் . எத்தனை வசதி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் . விழாவிற்கு வந்து விடுங்கள் என்றார் . தயங்கினேன் . ஏனெனில் இடது கையில் போட்டிருந்த கட்டு கழற்றப்படாமல் இருந்தது . என் தயக்கத்தை தகர்த்தார் . நீங்கள் தான் சுஜாதாவைப் பற்றி பேச வேண்டும் என்றார் . என் பேச்சு அவருக்கு எத்தனை முக்கியம் என்று சொன்னார் . நான் வெட்கப்படும் அளவுக்கு என்னைப் புகழ்ந்தார் . வெட்கம் தந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன் . பல மாதங்களுக்குப் பிறகு எனக்கும் ஒரு நடை எங்காவது போகவேண்டும் என்றிருந்தது . மனுஷ்யபுத்திரன் அதை சாத்தியப்படுத்தினார் . சுஜாதா எங்கள் இருவருக்கும் இடையில் காரணமாய் இருந்தார் . மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றி . நிழலிலேயே கிடந்த உடலும் மனமும் வெயில் குடித்த நாள் அது. உள்ளுக்குள் ரொம்ப வெப்பமாக இருந்தது . பேசப்பேச, உடம்பு குளிர்ந்துகொண்டே இருந்தது .மறக்க முடியாத நாட்களில் ஒன்று .


பாரதி கிருஷ்ணகுமார்.

https://youtu.be/1eGNazC3h5E

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் . 

அந்த அரபிக் கடலோரம் ...

மஸ்கட் .... ஓமன் நாட்டின் தலைநகரம் .
அங்கு , அரபிக்கடலின் மேற்குக் கரையில்

Wednesday, December 25, 2019

உருவி எடுக்கப்பட்ட கனவு - நூல் வெளியீடு - மதுரை

 அன்பு நண்பரும் , தோழருமான திரு . சென்றாயன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது .

திருப்பரங்குன்றத்தில் , பதினாறு கால் மண்டபத்திற்கு அருகில் நடந்தது . அன்று பேசிய பேச்சின் பதிவு எனக்கு வந்து சேரவில்லை .
புகைப்படங்கள் மட்டுமே சான்றாக நிற்கின்றன .


பாரதி கிருஷ்ணகுமார்.

பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை | கரன் கார்க்கி | மரப்பாலம் Bharathi Krishnakumar speech

ல்லோருக்கும் , இப்போதும் சொல்ல விரும்புகிறேன் .
"மரப்பாலம்" மகத்தான படைப்பு . வாங்கிப் படியுங்கள் . பாரதி கிருஷ்ணகுமார் .

https://youtu.be/QuiN4NNG8mA

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .

பாரதி கிருஷ்ணகுமார் | கன்னிமரா நூலகம் | Bharathi Krishnakumar |

ன்னிமரா நூலகம் நடத்திய நூலகவார விழாவில் , ஒருநாள் பேச அழைத்தார்கள். அரங்கில் கூடிஇருந்தவர்களில் பெரும்பான்மையோர் , வழக்கமாக கன்னிமராவுக்கு வாசிக்க வருகிறவர்கள் . எனவே இயல்பாகவே தேர்ந்த ரசனையோடு இருந்தார்கள் . அத்தகைய பெருமக்களின் முன்பு பேசக்கிடைத்த வாய்ப்பு ஒரு வரம் . கன்னிமரா நூலக நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும் . பாரதி கிருஷ்ணகுமார் .

https://youtu.be/Ukpel3cVSTg

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்

Tuesday, December 24, 2019

பாரதி கிருஷ்ணகுமார் | பெரம்பலூர் புத்தகக் கண்காட்சி | Bharathi KrishnaKumar

ப்போதெல்லாம் தமிழகத்தின் பல பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன . இது பாராட்டுதலுக்குரியது .ஒவ்வொரு இடத்திலும் ஏதேனும் அமைப்புகளோ , தனி நபர்களோ இதனை முன்னெடுக்கிறார்கள் . சில மாவட்டங்களில் , அந்த மாவட்டத்தின் , மாவட்ட ஆட்சித்தலைவர்கள் புத்தக விழாக்களை அரசு விழாவாக நடத்தி விடுகிறார்கள் . அந்த மாவட்டத்தில் உள்ள பல நிறுவனங்களை அந்தத் திருப்பணியில் இணைத்துக் கொள்கிறார்கள் .அவர்கள் தாங்கள் பொறுப்பில் இருக்கும் காலம் முழுவதும் இதனைத் திறம்படச் செய்து முடிக்கிறார்கள் . அவர்களுக்குப் பிறகு வரும் சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , இந்த நற்பணியைத் தொடர்ந்து செய்து , ஒரு சமூகம் வாசிக்கப் பேருதவி செய்து தருகிறார்கள் . (வேறு சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வந்ததும் செய்கிற முதல் பணி, புத்தகத் திருவிழாக்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் . அது ஒன்றும் அரசின் வேலை இல்லை , என்பதே அவர்கள் கருத்து . "ஒரு நல்ல அரசாங்கம் , தனது மக்கள் அறிவு பெறுவதை ஒருபோதும் விரும்பாது " என்கிற டால்ஸ்டாயின் வாசகத்தைப் படித்தவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்.) தனது மக்கள் வாசிக்கவேண்டும் , புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்கிற மேன்மையான எண்ணம்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சிலர் புத்தகத் திருவிழாக்களை பெரும் சிறப்போடு நடத்தினார்கள். மாவட்டம் முழுவதும், அதில் பங்கேற்கும் வண்ணம் எல்லாத் துறைகளையும் அதில் ஒருங்கிணைத்தார்கள் . மாவட்ட மக்களின் திருவிழாவாக , மக்களை உணரச் செய்தார்கள் . புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் தானும் வந்து , எல்லோரும் பார்க்க புத்தகங்கள் வாங்கினார்கள் . புத்தகத் திருவிழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து கலை இலக்கிய நிகழ்விலும் வந்து இருந்து பங்கேற்று முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள் . ஆற்றலும் வாசிப்பும் நேர்மையும் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்து, அவர்களைப் புத்தகத் திருவிழாவில் தொண்டர்களாக நிறுத்தினார்கள் . தமது அழைப்பை ஏற்று வந்த பதிப்பகங்களுக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்கிற அக்கறையோடு அன்றாட விற்பனையைக் கண்காணித்தார்கள் . மாவட்டத்தில் இருந்த அனைத்துப் பள்ளிகளும் , கல்லூரிகளும் குழந்தைகளைப் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வருவதை அட்டவணை இட்டு உறுதி செய்தார்கள் . இப்படியாக , இன்னும் பல பத்து "வேலைகளை" அவர்கள் செய்ததை நான் அறிவேன் . எல்லாவற்றையும் எழுத இங்கே இடமில்லை . இப்படியான பணிகளைச் செய்தவர்களில் ஒருவர் , மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று அறியப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு தர்வேஷ் அஹமது இ .ஆ .ப. அவர்கள் . மாவட்டமே கொண்டாடும் வண்ணம் நிகழ்த்தினார் . ஒரே வரியில் சொல்வதானால் , வளர்ந்த வளமான மாவட்டங்களில் கூட நடக்காத புத்தக விற்பனையை பெரம்பலூரில் நடத்திக் காட்டினார் . புத்தகத் திருவிழாவை ஒட்டி நடந்த கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டார்கள் . தான் மாற்றலாகிப் போனபின்னும் புத்தகத் திருவிழா நடக்கும் வண்ணம் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்கிய சிறப்பும் திரு .தர்வேஷ் அஹமதுவுக்கு உண்டு. இத்தகைய சிறப்புடைய பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் ஆறாம் ஆண்டு விழாவில் பேசியது , இந்த உரை . பாரதி கிருஷ்ணகுமார்


https://youtu.be/8o9MdDd4TIc

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்

பொன்மாலைப்பொழுது நிகழ்வு / அண்ணா நூற்றாண்டு நூலகம் /கற்க கற்க / பாரதி கிருஷ்ணகுமார்

அண்ணா நூற்றாண்டு நூலகமும் , பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்திய தொடர் நிகழ்வே " பொன் மாலைப் பொழுது ". அந்தத் தொடர் நிகழ்வின் ஐந்தாவது அமர்வில் உரையாற்றும் வாய்ப்பை அளித்த பெருமக்களுக்கு எனது நன்றியும் வணக்கமும் . குறித்த நேரத்தில் நிகழ்வைத் தொடங்கினார்கள் . தகுதியும் , வாசிப்பும் , கொண்ட பார்வையாளர்கள் அரங்கை நிறைத்தார்கள் . இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் . இலக்கியம் மட்டுமன்றி பல்துறை சார்ந்த பெருமக்கள் பேச அழைக்கப்பட வேண்டும் . ஒரு நூலகத்தில் வாசிப்பு மட்டுமின்றி , உரையாடலும் நடந்துகொண்டே இருக்க வேண்டும் . கற்றலும் , கேட்டலும் வேறு வேறு அல்ல . இன்னும் சொல்லப்போனால் இத்தகைய உரையாடல்கள் ஒருவரை வாசிப்பின் பக்கங்களுக்குள் ஈர்க்கும் . கேட்பது , கற்பதின் சிறப்பை உணர்த்தும் . கற்க வைக்கும் . "கற்றலிற் கேட்டலே நன்று" என்று அவ்வை பாடியதன் பொருள் இதுவன்றி வேறில்லை . மாறாகக், கேட்பது கற்பதை விடச் சிறந்தது எனப் பொருள் கொள்ளுதல் பிழையானது . கேட்கிறவன் , தானே கற்கவும் தொடங்கிவிடுவான் என்பதை அவ்வை அறிந்திருந்தாள். ஒரு நூலகம் வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் ஆனது . எனவே , ஏதேனும் ஒரு பொருள்பற்றி , ஏதேனும் ஒரு துறை சார்ந்து , தகுதி வாய்ந்த ஒருவர் உரையாடிக்கொண்டே இருக்கவேண்டும் . அது கேட்டார் பிணிக்க, கேளாரும் வேட்ப நிகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் . கேட்கிறவர்கள் , தாமே கற்கிறவர்கள் ஆவார்கள் . நான் அப்படித்தான் புத்தகங்களின் உலகத்திற்குள் அழைத்து வரப்பெற்றேன் . பாரதி கிருஷ்ணகுமார்


https://youtu.be/xr0mrrpFQoc

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் 

Saturday, December 21, 2019

எனக்கு இல்லையா கல்வி ? - ஆவணத்திரைப்படம்

இது எனது மூன்றாவது ஆவணத்திரைப்படம்.

எனக்கு இல்லையா கல்வி ? என்பது இதன் தலைப்பு மட்டுமல்ல ; அது கல்வி மறுக்கப்பட்டவர்களின் குரல் . 

இதனை உருவாக்கும் நல்வாய்ப்பை ,மதுரையில் இருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் எனக்கு வழங்கியது . மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் , எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நீண்டகால நண்பர் திரு . ஹென்றி திபேன் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும் .சம கல்வி உரிமைக்கான மக்கள் இயக்கத்திற்காக , மனித உரிமைக்கல்வி நிறுவனம் இதனைத் தயாரித்தது .

இந்த ஆவணத்திரைப்படத்தை உருவாக்க தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களுக்கு பயணப்பட்டோம் .
கடுமையான உழைப்பை , இந்தப்படம் எங்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது .

என்னோடு பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இத் தருணத்தில் எனது அன்பும் , வாழ்த்தும் .


தமிழகத்தின் தகுதிமிக்க மாபெரும் கல்வியாளர்கள் தங்கள் வாக்குமூலங்களை இதில் பதிவு செய்துள்ளனர் . ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்கள் , மாணவ மாணவிகள் எனப் பலர், தங்கள் வாக்குமூலங்களைத் தந்துள்ளனர் . வாக்குமூலம் தர மறுத்து ஓடி ஒளிந்த பெருமக்களும் உண்டு.

எல்லோருக்கும் சமமான தரமான கட்டணமற்ற கல்வி தருகிறவரை , இந்திய சுதந்திரம் முழுமை பெறாது . பெறவே பெறாது . எந்த கிரகத்திற்குப் போனாலும் குழந்தைகளுக்குக் கல்வி மறுத்த பாவம் போகாது . எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நிலைமை நீடிப்பது தேசிய அவமானம் . கேவலம் . இழிவு . 


இன்றைய அரசியல் சூழலும் , மத்திய மாநில ஆட்சியாளர்களும் கல்வி தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எல்லோருக்குமான கல்வி என்பதைச் சீரழிக்கிறது , சீர்குலைக்கிறது , சிதைக்கிறது .

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த ஆவணத்திரைப்படம் இன்று மேலும் , மென்மேலும் பொருத்தமுடையதாக இருப்பது எங்களது சிறப்பல்ல ; அரசின் இழிவு . இப்போது இதனை இணையத்தில் பதிவேற்ற அனுமதி தந்தமைக்காக திரு . ஹென்றிக்கு மீண்டும் நன்றி .

இந்தியாவில் எடுக்கப்பட்ட கல்வி தொடர்பான ஆவணத்திரைப்படங்களில் இது சிறந்த , தகுதியான திரைப்படம் என்பார் , பேராசிரியர் ச.மாடசாமி . அவரது இந்த மதிப்பீட்டிற்கு உரியவன் ஆனேன் என்கிற பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு .


பாரதி கிருஷ்ணகுமார் .






இந்த இணைப்பில் படத்தைப் பார்க்கலாம்.



Friday, December 20, 2019

பாரதி விழா | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Vizha | Bharathi Krishnakumar

பாரதி விழா | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Vizha | Bharathi Krishnakumar
பாரதி பாசறையும், பன்னாரி தொழிற்நுட்ப கல்லூரியும் இணைந்து நடத்திய பாரதி விழா.

சத்தியமங்கலத்தில் உள்ள அந்தக் கல்லூரியின் வளாகத்தில் விழா நடைபெற்றது.
திறந்தவெளி அரங்கில் இரண்டாயிரம் மாணவர்கள்.
வகுப்பறைகளில் இரண்டாயிரம் மாணவர்கள்.
அவர்களோ, தொலைக்காட்சி பெட்டிகளில் காண வழிவகை செய்யப்பட்டிருந்தது.

நான்காயிரம் பேர் கேட்ட விழா.
மறக்கமுடியாத விழா.
ஒவ்வொரு சொல்லையும் உற்றுக் கேட்டார்கள்.
மஹா கவிக்கு மரியாதை செய்தார்கள் மாணவர்கள்.
அதனாலேயே பெருமையுற்றார்கள்.




இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார்

குணா கவியழகனின் "அப்பால் ஒரு நிலம்" | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar

போர் மனிதர்களை அழிக்கிறது.
அனாதைகள் ஆக்குகிறது.
அகதிகளாக விரட்டியடிக்கிறது.
ஊனப்படுத்துகிறது.
உறவுகளைப் பிய்த்து எறிகிறது.
பிறந்த மண்ணை அப்பால் ஒரு நிலமாக்கிவிடுகிறது.
மனிதர்கள் புலம்பெயர்கிறார்கள்.
நினைவுகள் புலம் பெயர்வதில்லை.







இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

மறுவாசிப்பில் தொ.மு.சி ரகுநாதன் | பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை

இலக்கிய வீதி அமைப்பும், பாரதீய வித்யா பவனும் இணைந்து நடத்திய தொடர் சொற்பொழிவில் ஒரு மாதம் தொ.மு.சி யைப் பற்றி பேசும் வாய்ப்பை இலக்கிய வீதி இனியவன் தந்தார்.

இனியவன் என்பது புனைப் பெயரே இல்லை, இயற்பெயர் என்று கருதும் அளவிற்கு இனியவர்.

இலக்கியத்திற்கு இன்றும் அவர் ஆற்றும் பணி வணக்கத்திற்குரியது.

இலக்கிய வீதி இனியவன் எனக்கு, தந்தைக்கு ஒப்பானவர்.
இது தந்தை, மகனுக்கு அவையத்து முந்தி இருக்கத் தந்த வாய்ப்பு.






இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.

எஸ் ராமகிருஷ்ணன் | உண்டாட்டு | பாரதி கிருஷ்ணகுமார்

எஸ் ராமகிருஷ்ணன் | உண்டாட்டு | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar
வென்று வரும் வீரனுக்கு ஊர்மக்கள் கூடித்தரும் விழா , களியாட்டம் , கொண்டாட்டமே "உண்டாட்டு".
சாஹித்ய அகாடமி விருது பெற்ற எஸ் ராமகிருஷ்ணனுக்கு திருவண்ணாமலையில் அன்பு நண்பன் பவாவின் முன்னெடுப்பில் நிகழ்ந்தது "உண்டாட்டு".
கூடிக் களித்தோம் கொண்டாடினோம்.
எம்மில் ஒருவன் வென்றது எமது வெற்றி.






இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.






பொன்னீலன் 80 | பாரதி கிருஷ்ணகுமார் உரை | Ponneelan 80 | Bharathi Krishnakumar speech |

பொன்னீலன் 80 | பாரதி கிருஷ்ணகுமார் உரை | Ponneelan 80 | Bharathi Krishnakumar speech |

எழுத்துலகில் ஐம்பத்துஐந்து ஆண்டுகள் கடந்த , நாங்கள் அண்ணாச்சி என்று அன்போடு அழைக்கிற தோழர் பொன்னீலனுக்கு நவம்பர் பதினாறாம் நாள் நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் பங்குபெறும் பேறு பெற்றோம் .



இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம்.




தாமரைக்கரை - சமூக அறிவியல் பள்ளி - ஆதிக்குடில் நிகழ்வுகள்





 "நாமும் இலக்கியங்களும்" என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் பேசிக் களித்தோம் . தோழர்கள்  வி . பி . ஜி , அன்புராஜ் , கலைக்கோவன் , பேராசிரியர் பாரதி , பொறியாளர்கள் பிரேம் , ஸ்ரீ      என எனது உள்ளம் கவர்ந்த நண்பர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர் . மலைவாழ் மக்களில் சிலரும் எங்களோடு உரையாடலில் இணைந்தனர் .


தாமரைக்கரை அழகு ததும்பும் பர்கூர் மலைப்பகுதி .பகலும் இரவும் பனி படர்ந்து அலைந்து கொண்டே இருந்தது .

மக்கள் மாசற்ற மனிதர்கள் . நொடிகளில் , நிபந்தனை இன்றி அன்பு செலுத்தினார்கள் .

தங்கி இருந்த இடத்திற்குப் பக்கத்தில் , முந்தின இரவில் வந்துபோன ஒற்றை யானையின் காலடித்தடம் காட்டினார்கள் . பெரிய மரவைத்தட்டு போல இருந்தது அதன் காலடித்தடம் . ஈர மண்ணில் தனது வருகையை சொல்லிவிட்டுப் போயிருந்தது அந்தப் பேருயிர் .

நிறையப் பேசினோம் . நிறையச்  சிந்தித்தோம் . நிறையச்  சிரித்தோம் .

இரண்டு நாட்களும் எந்த அலைபேசியும் பேசவில்லை .
தொடர்பு எல்லைக்கு வெளியில் கிடந்தோம் .
சொல்லி மாளாத சந்தோசம் .

எல்லோருடனும் பேசுவதற்கு என்றே கண்டு பிடிக்கப்பட்ட அலைபேசிகள் , யாரையும் யாரோடும் பேசாமல் செய்து விட்டது விந்தை தான் .

அந்த மக்கள் சமைத்த, அன்பினால் குழைந்த உணவைத்தான் இரண்டு நாட்களும் மனம் நிறையச் சாப்பிட்டோம் .

தூய்மையான மனிதர்கள் , கலப்படமில்லாத காற்று , அரவணைத்துக்கொண்டே இருக்கும் இளம் பனி ,


தாமரைக்கரை  மனமெங்கும் பூத்துக் குலுங்குகிறது .






நான்...

ஒருவன் கயிறென்றான்
இன்னொருவன் சுவரென்றான்
பிறிதொருவன் தூண் என்றான்
மேலுமொருவன் முறமென்றான்
நான்  யானை.
- பாரதி கிருஷ்ணகுமார்

சென்னை புத்தகக் கண்காட்சி 2015


Wednesday, December 18, 2019

பசிபிக் மகா சமுத்திரத்தின் கரையில்

 ஆஸ்திரேலியப் பயணத்தில் ...



மகாகவி பாரதி நினைவஞ்சலி

கோவை பாரதி பாசறையும் , கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி நினைவஞ்சலி நிகழ்வு .

13  செப்டம்பர் 2019

நிகழ்வில் என்னோடு பாரதி பாசறை நண்பர்கள் ....

திருவாளர்கள் மோகன் சங்கர். ஆடிட்டர் கிருஷ்ணகுமார் , ரவீந்திரன் ராமசாமி , பிரகாஷ் , மனோகரன் மற்றும் பலர் ...

தமிழ்த் துறைத்தலைவர், துறை சார்ந்த பேராசிரியர்கள் , பாரதி பாசறையின் பரிசு பெற்ற மாணவச் செல்வங்கள் ....

அரங்கை நிறைத்து பாரதியில் திளைத்த மாணவிகள் .

































இந்த இணைப்பில் அன்றைய உரையின் சுருக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.

Tuesday, December 17, 2019

கன்னியாகுமரி - ஆவணத்திரைப்படம் | இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் | Kanniyakumari-A documentary film | Direction : Bharathi Krishnakumar

யற்கையை அழித்து எந்த வளர்ச்சியையும எந்தக் கொம்பனாலும் உருவாக்கிவிட முடியாது. இயற்கையை அழிப்பதன் பெயர் வளர்ச்சியன்று, வீழ்ச்சி. இதுவே, இந்த ஆவணப்படம் சொல்லும் உண்மை. கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல, ககனம் முழுமைக்கும் பொருந்துவது.

இந்த ஆவணத் திரைப்படத்தை உருவாக்கும் நல்வாய்ப்பை எனக்குத் தந்தது, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.தாமஸ் பிராங்கோ அவர்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் எப்போதும் உரியது.
அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அல்ல.
இயற்கையை நேசிப்பவர். ஆக்கபூர்வமான சிந்தனையாளர்.
செயல் திறன் மிக்கவர். கல்வியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகப்பெரிய மகளிர் சுயநிதிக் குழுவான "மலர்" அமைப்பை உருவாக்கிய பிதாமகர்களில் ஒருவர்.

இதன் உருவாக்கத்திற்கு உதவிய அனைத்துப் பெருமக்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் நன்றி பாராட்டுகின்றேன்.

என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும்.
இன்னும் மீதம் இருக்கும் கன்னியாக்குமரி மாவட்டத்தின் அழகை, அழகுற, என் எண்ணம் உணர்ந்து காட்சிப்படுத்திய புகைப்படக் கலைஞன் தம்பி ஏர்னெஸ்டோவிற்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

நம் காலத்தின் மிகத்தீவிரமான ஒரு சமூகப்பிரச்னையை கன்னியாகுமரி மாவட்டத்தை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இதை உலகம் முழுமைக்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். பார்க்க முடியும். மீத்தேன் , எட்டு வழிச்சாலை என இயற்கைக்கு எதிரான எல்லா அதிகார ஆடம்பரங்களுக்கும், ஆணவங்களுக்கும் இதுவே பதிலாகும். எனவே இதை எல்லோருக்கும் பார்க்கப் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.




நாட்டரசன்கோட்டை ... கம்பன் திருக்கோவில்







என்று தணியும் .. திரைப்படத்தின் படப்பிடிப்பில்







Monday, December 16, 2019

கவிஞர் மானசீகன் எனக்களித்த பிறந்தநாள் பரிசு...

****மானசீகன்****


இந்த  உலகத்தில்  ஒவ்வொரு விஷயத்திலும் பிடித்தது, தேறுவது, நன்றென்று பெயர் பெற்றது, சிறந்தது என்று பலவகைகள் இருக்கும். அனைத்துமே கொண்டாடப்படப் வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால்  ஆகச் சிறந்தது என ஒன்றிருக்கும். அதை அல்லது அப்படிப்பட்ட நபரை உச்சி முகர்ந்து எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருப்பதுதான் தேர்ந்த ரசனையின் அடையாளம். 

அநத  வகையில் ,

ஞானி- புத்தர், நபிகள் 
சுய சிந்தனையாளர் - ஓஷோ
வாழ்வாசிரியன்- வள்ளுவன்
உலகத் தலைவர் - காந்தி
சீர்திருத்தவாதி- பெரியார் 
இந்தியத் தலைவர் -நேரு ,விபி.சிங்
தமிழகத் தலைவர் -அண்ணா
தேர்ந்த  அரசியல்வாதி- கலைஞர்
கவிஞர் - கம்பன்
புனைவாளர் - வண்ணதாசன்
எழுத்தாளர்- ஜெயமோகன்
பல்துறை வித்தகர் - சுஜாதா 
இயக்குநர் - மணிரத்னம், மிஷ்கின் 
பாடலாசிரியர் - கண்ணதாசன்,  வைரமுத்து 
இசை - ராஜா, ரஹ்மான் 
நடிப்பு - சிவாஜி, கமல்
பாடகர் - எஸ்பிபி, ஹரிஹரன்
பாடகி - ஜானகி, ஸ்ரேயா கோஷல்
கிரிக்கெட்  ஆட்டக்காரர் -லாரா , சச்சின் 
ஆளுமை - கவிக்கோ அப்துல் ரகுமான் 
அமைப்பாளர் - ச.தமிழ்ச்செல்வன்
அதிகாரி - உதயச்சந்திரன் ஐஏஎஸ்
ஆசிரியர் - முனைவர். பீ.மு.மன்சூர்
அழகி - ஐஸ்

ஆகியோரே பல்வேறு துறைகளில் நான் வியக்கும் ஆகச்சிறந்தவர்கள்.

அந்த வகையில் 'மேடைப் பேச்சு' என்றால் சந்தேகமே இல்லாமல் பாரதி கிருஷ்ணகுமார்தான். தமிழ்நாட்டில்  எல்லா பேச்சாளர்களுக்கும் அவர்தான் சிலபஸ். இப்போது பேசுகிறவர்களில் நான் உட்பட அவர் மீது பொறாமைப்படாத , வியக்காத, ரசிக்காத பேச்சாளர் எவரும் கிடையாது. 

பேச்சின் தொடக்கத்தில் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம்  ஒரு கதையோ . சம்பவமோ சொல்வார். அதைக் கேட்டால் சிலுவையில்  ஆணி அறைந்து கொண்டிருப்பவனும் கூட ,இயேசுநாதரை அதிலிருந்து  இறக்கி விட்டு மேடைக்கு முன்னே முதல் வரிசையில்  அமர்ந்து கொள்வான். உண்மையில் அது வெறும் கங்கு மட்டுமே.  அதற்குப் பிறகுதான் தீ எரியும். தீ என்றால்  சாதாரணத் தீ அல்ல.  சகலத்தையும் எரித்து விட்டு மானுடப் பேரன்பை சாம்பலாக மிச்சம் தந்து உண்ணச் சொல்லும் ஊழித் தீ.

பேச்சின்  இடையிடையே வெளிப்படும் அவரது நகைச்சுவை நினைத்து நினைத்து இன்புறத்தக்கது. அது யாரையோ அறையும்.யாரிடமோ கொஞ்சும். யாரையோ நினைவு கூர வைத்து கண்ணீராகிக் கசியும்.அரிவாளோடு யாரையோ மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு சண்டியரின் வேட்டியை அவிழ்த்து விட்டு எக்களிக்கும். ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் காரியக் கோமாளிகளை எட்டி உதைக்கும்.

1996 ல் ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக படம் காட்டிக் கொண்டிருந்த நேரம்.  கிருஷ்ணகுமார்  இப்படிப் போட்டுடைத்தார்.
' நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரியா? அப்ப ஒரு தடவையாவது சொல்லுங்க சாமி . வர்றேன் இல்ல வர்லன்னு'.23 ஆண்டுகளுக்கு முந்தைய பேச்சாளனின் தீர்க்கதரிசனம் அது.

தமிழ் சினிமாவின் போலித்தனங்களை அவரளவிற்கு நுட்பமாக   அம்பலப்படுத்தியவர்கள் வெகுசிலரே(நன்மாறனும் அப்படித்தான்)எஜமான் படம் வந்தபோது அவர் ஒரு மேடையில் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. ' பொண்டாட்டி வயித்துல  இருக்கிறது புள்ளயா? தலகாணியான்னு தெரியாதவனுக்கு எப்புடிடா புள்ள  பிறக்கும்?' 

அவர் பேச்சில் ஓர் இடத்திலாவது கண்கள் கசியாமல் எவரும் இருக்க முடியாது.  கல்நெஞ்சத்தையும் அசைத்து நகர வைக்கும் காட்டாறொன்றை அவர் நாவில் வைத்திருக்கிறார். அவருடைய குரலில் வெளிப்படும் நவரசங்களுக்காக ஆஸ்காரே தரலாம். ஆனால்  அது நடிப்பல்ல.  அவருடைய  உணர்வுதான் குரல் வழியே நதியாகித் தளும்பி நம்மை நகர விடாமல் நனைக்கிறது.

பேச்சே கேட்காத ஓர்  ஆரம்ப கட்ட ரசிகனுக்கும். ஆயிரம் மேடைகள் கண்ட சாதனைப் பேச்சாளனுக்கும் ஒரே நேரத்தில் பிடித்த பேச்சாளர்  அவராக மட்டுமே இருக்க முடியும். 

 பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு நேர்சந்திப்பில் (மலேசியாவில்)என்னிடம் சொன்னார்' ரஃபீக் நம் பேச்சு மேக்ரோ லெவலில் சமகாலத்தின் மாபெரும் பிரச்சினையொன்றைப் பேச வேண்டும்.  அதேநேரத்தில் இணைகோடாக அது மைக்ரோ லெவலில் ஒவ்வொருவரின் மன  ஆழத்தையும் அன்றாட வாழ்வியல் அனுபவம் வாயிலாகத் தொட வேண்டும் '. சிறந்த மேடைப் பேச்சுக்கு Bk யின்  இந்த  இலக்கணம் ஒன்றே போதுமானது.

பாடலில் எஸ்பிபி மாதிரி எந்த  ஏரியாவிலும் ஜெயிக்கிற பேச்சாளரும் கிருஷ்ணகுமார்தான்.பள்ளி, கல்லூரி, மக்கள் மன்றம், கோவில் திருவிழா, ரோட்டரி,அரசு ஊழியர் சங்கக் கூட்டங்கள், பிரிவு உபச்சார விழா,  இலக்கியக் கூட்டங்கள், பெண்கள் மாநாடு,நவீன  இலக்கிய  அரங்குகள், நூல் வெளியீட்டு விழாக்கள், மதிப்பீட்டு உரைகள், மாநாடுகள், அரசியல் கூட்டங்கள், மீலாது விழாக்கள், புத்தாண்டு விழாக்கள், திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் என்று எந்த இடத்திலும் அவர் தோற்று நான் பார்த்ததே இல்லை.  அவுட்டாக்கவே முடியாத  அதிரடி பேட்ஸ்மேன் அவர். சிக்ஸ் அடித்தால் அவுட்டாகி விடுகிற  அபாயமிருக்கிற முட்டுச் சந்திலும், தொலைதூரத்தில் எல்லைக்கோடிருக்கிற ஈடன்கார்டன் மைதானத்திலும் சதமடிக்காமல் ஓயாத மேடை அபூர்வம் அவர். மைக்கேல் பெவனுக்குள் சேவாக்கின் வெறித்தனம் புகுந்து கொண்டால் அதன் விளைவு எப்படி  இருக்குமோ? அதுவே கிருஷ்ணகுமாரின் பேச்சு. ஒரே நேரத்தில் மனுஷ்யபுத்திரனையும், அப்துல் காதரையும் ,நாஞ்சில் சம்பத்தையும் ,கு. ஞானசம்மந்தனையும்,சுகி.சிவத்தையும், அவ்வை  நடராசனையும் அவரால் கண்களில்  நீர் துளிர்க்க நெகிழ்வோடு ஆச்சர்யப்படுத்தி விடமுடியும். இதுவரை அங்கு பேசியிருக்கிறாரா என்று தெரியவில்லை.  ஆனால்  சுவிஷேசக் கூட்டங்களில் கூட  அவரால்  பால்தினகரனை விட சிறப்பாகப் பேச முடியும். ஆனால் பால்தினகரன் பலமுறை  அழைத்தும் வராத  இயேசு, கிருஷ்ணகுமார் தன் கிசுகிசுப்பான குரலால் ' அம்மா ' பற்றி பேசினால்( அவருடைய  மாஸ்டர் பீஸ் அந்த ஏரியா. பாரதியின் அம்மா ஏக்கத்தை அவர் பேசிக் கேட்க வேண்டும் )
கண்டிப்பாக  குழந்தை இயேசுவாகி மரியன்னையின் முலையைப் பற்றியபடி வந்து விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது  

தமுஎகசவின் இன்றைய வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம்.  மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் நிகழ்வில்  பல நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகும்  அலுப்பில்லாமல் ஒரு பெருங்கூட்டம் Bk என்கிற இரண்டெழுத்துக்காகக் காத்திருக்கும்.  இரவு 12 மணி அல்லது 1 மணிக்கு Bk கூட்டத்தின் நடுவிலிருந்து எழுந்து வருவார்.  தோல்வியே காணாத மாபெரும் தளபதி களத்தில் வீரர்களுக்கு முன்னால் புரவியில் வரும் போது எழும் ஆரவாரமாய் சபை அதிரும். அந்த மாபெரும் வரவேற்பை மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியபடியே கம்பீரமாக நடத்து போய் மைக்கை தன் உயரத்திற்குக் கீழே  இறக்கி  அந்தப் பெருங்கலைஞன் தன் கிசுகிசுப்பான குரலால் 'தோழர்களே ! ' என்று ஆரம்பிப்பான். அந்தப்  பனி விழும் இரவில்  இந்தக்  குரலைக் கேட்டால் அம்பானியே ஒரு மணிநேரத்திற்கு கம்யூனிஸ்டாகியே தீர வேண்டும்.வேறு வழியில்லை.  Bk யின் பேச்சு நம் உடம்பில்  வெடிகுண்டைக் கட்டி விட்ட பிறகு சுற்றி வளைத்துக் கொள்கிற வனநெருப்பை ஒத்தது. வெடித்துச் சிதறாமல் எவனும், எவளும், எதுவும் தப்பி விடமுடியாது. 

எங்கள்  கல்லூரிக்கு வராத பேச்சாளர்களே இல்லை.மறைந்த  அடிகளார் தொடங்கி பர்வீன் சுல்தானா வரை சகலரையும் அங்கு பணியாற்றிய மூட்டா சண்முகசுந்தரம், முனைவர்.சங்கிலி,முனைவர்.அப்துல் சமது போன்ற பெரும்பேராசிரியர்கள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்கள் . பேச்சாளர்களின் வேடந்தாங்கல் எங்கள் கல்லூரி. அந்த வகையில் நூற்றுக்கணக்கான பேச்சாளர்களை வைரவிழா கண்ட  எங்கள்  கல்லூரி பார்த்திருக்கிறது. ஆட்சிமன்றக் குழுத்தலைவராக இருந்த மர்ஹூம் சேக்மைதீன் ஐயா அவர்கள்  எல்லா நிகழ்வுகளுக்கும் வந்து விடுவார்.  அனைவரின் பேச்சினையும் அவர் ஐம்பது ஆண்டுகளாகக் கேட்டிருப்பார். அவருக்கு  என்னை மிகவும் பிடிக்கும். சந்திக்கும் போதெல்லாம் கைகளைப் பற்றிக் கொண்டே உற்சாகப்படுத்திப் பேசுவார்.  அவர் அடிக்கடி சொல்கிற விஷயம்
 ஒன்றுண்டு ' வளத்தியா ஒருத்தர் வந்து பேசுனாருல. அவரு மாதிரி  நீங்க பேசனும்.  அதான் எங்களுக்குப் பெருமை ' எத்தனையோ பேரைத் தாண்டி  இரண்டே தடவைகள் வந்து போன இந்த வளந்தவர்தான் ( BK)அவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை பேச்சென்பது தகவல்களின் தொகுப்பு அல்ல. தகவல்கள்தான் புத்தகங்களிலும், கூகுளிலும் நிறைய  கொட்டிக் கிடக்கின்றனவே? பேச்சென்பது மாபெரும் நிகழ்த்துக்கலை. அபூர்வமாக சிலர் பேச்சையே படைப்பாக மாற்றி விடுவார்கள். ஒவ்வொரு மேடையிலும் விரல்களாலும், குரலாலும் ஒரு புத்தகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எழுதிவிடுகிற படைப்பாளிதான் அவர்.  அவர் பேச்சைக் கேட்ட பிறகு நாம் பார்க்கும் வள்ளுவரும், பாரதியும், கம்பனும், மார்க்ஸூம் முற்றிலும் வேறானவர்கள்.வரலாற்றுப் புத்தகங்களில் நாம் கண்ட சிலவரிக் குறிப்புகளுக்கு ரத்தமும், சதையுமாய் உயிர் தந்து நம் முன்னால் நடமாட விட்டு, கொஞ்ச விட்டு , காதலிக்க விட்டு, சண்டையிட  விட்டு , அந்தக் கனவு கலைவதற்கு முன்னால் நம் முன்னிலையிலேயே மரிக்கச் செய்து பார்ப்பவர்களைக் கதற வைக்கும் மேடை திரிமூர்த்தி அவர். 

2011 என்று நினைக்கிறேன். குற்றாலத்தில் படைப்பிலக்கியப் பயிலரங்கை இஸ்லாமிய  இலக்கியக் கழகம் சார்பாக  சமது சார் ஏற்பாடு செய்திருந்தார். அந்த  நிகழ்வுக்கு கிருஷ்ணகுமார்தான் நிறைவுரை. நான் தொகுப்புரை. அரங்கில் பிரபஞ்சன், எஸ்ரா, தோப்பில், நாகூர் ரூமி,நைமு இக்பால்,கவிமாமணி அப்துல் காதர்,அண்ணன் ஹாமீம் முஸ்தபா,  எழுத்தாளர் களந்தை,  மீரான் மைதீன்,   போன்ற  பெரும் ஆளுமைகள் அமர்ந்திருந்தனர். கவிக்கோவும் ஸ்டைலாக  கால் மேல் காலிட்டபடி அமர்ந்திருந்தார். அவர் பிறரின் பேச்சைக் கேட்பதே அபூர்வம்.  அவர் முன்னால் பிறர் பேசுவதென்பது பல்கலைக்கழகத்தின் முன்னால் நின்றபடி வாய்ப்பாடு விற்பதற்குச் சமம்.  சுலபத்தில் பிறரைப் பாராட்டி விடமாட்டார்( அவர்  என்னைப் பாராட்டிய தருணங்களையெல்லாம் விருதுகளாகக் கருதி நெஞ்சில் ஃபிரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிறேன்) அன்று கிருஷ்ணகுமாரின் ஒருமணி நேர  உரையை உற்றுக் கவனித்துக் கேட்டார். உண்மையில்  அது பேச்சே இல்லை. கண்கட்டப்பட்ட நீதி தேவதை தன் கறுப்புத் துணியை  அவிழ்த்து விட்டு பாபர் மசூதி  இடிப்பிற்குப் பிறகு  தனிமைப்பட்டுக் கிடக்கும்  ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களை  மடியில் போட்டுப் பாடிய  கண்ணீர் நிரம்பிய தாலாட்டு அது. கோடானுகோடி  பக்தர்களின்  பிரார்த்தனையை நெஞ்சில்  சுமந்தபடி சாமியாடும் தொல்குல மூதாதை  ஒருவனின் கேவல் நிரம்பிய ஆராதனை அது.  ஒரே ஒரு மாயக்கரத்தால் ஆயிரக்கணக்கான  உடல்களை தொட்டு வருடி இதயம் மீட்டும்  மாயக்கண்ணனின் ஸ்பரிசம் அது.  இதுவரை  உலகத்தில் பேசப்பட்ட  அனைத்து உரைகளையும் காலடியில் போட்டு எக்களிக்கும் மாகாளியின் உக்கிரச் சிரிப்பு அது.  அந்தப் பேச்சில் சபை உறைந்து கிடைத்தது.  எப்போதும் நூறு ரன்கள்  அடிப்பவன் ஒரு டெஸ்ட் மேட்சை ஒன்டேயாக்கி விளாசிய இரண்டு இரட்டைச் சதம்  அது.  சகலரும் அழுதார்கள். விம்மினார்கள். கேவினார்கள்.உறைந்தார்கள். குலுங்கிய முதுகுகளைக் காட்டியபடி முகத்தை மறைத்துக் கொண்டார்கள். கண்களின் வழியே கொட்டிய வரலாறை பிறரியாமல் துடைத்துக் கொண்டார்கள். அந்த  தழுதழுத்த குரலை விரல்களாகப் பிடித்துக் கொண்ட மழலையாய் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். ஒரே  ஆள் ஆயிரம் பேரை ஒரு தருணத்தில் சாக வைத்து உயிர்ப்பித்தான். நிகழ்வு முடிந்ததும் சகலரும் கிருஷ்ணகுமாரைச் சூழ்ந்து கொண்டார்கள். கோவிலை சுற்றி வளைத்த நதியாக சபை நுரைத்துக் கிடந்தது.  அதுவரை தானும் ஒரு சிலையாகி உறைந்து கிடந்த கவிக்கோ எழுந்து வந்தார். அந்த  வெள்ளை ஜிப்பா,  வேட்டியைக் கண்டதும் திரிவேணி சங்கமம் வளைந்து ஒதுங்கியது. கவிக்கோ பக்கத்தில் போனார். கிருஷ்ணகுமார் சற்றே குனிந்தார். கவிக்கோவே உயரம். இது அதுக்கும் மேலே.  கட்டித் தழுவி கிருஷ்ணகுமாரின் தோளில் முகம் வைத்து கவிக்கோ குலுங்கினார். சபை இரண்டாவது தடவையாக  உறைந்தது.  எல்லோரும் பொது இடத்தில்  கவிக்கோ அழுவதை முதல்முறையாக  ஆச்சர்யமும், கண்ணீரும் ததும்பப் பார்த்துக் கொண்டிருந்தோம். உம்மா இறந்ததற்கு அழும் தந்தையைத் தேற்றும் பிரிய மகனின் கிசுகிசுப்பான குரலில் கவிக்கோவின் முதுகில்  உரிமையோடு தடவிக் கொடுத்தபடி கிருஷ்ணகுமார் சொன்னார் ' அழாதீங்க வாப்பா! அழாதீங்க வாபபா'. ஒரு பேச்சாளன் தன் ரசிகர்கள் முன்னிலையிலேயே பெற்ற ஞானபீட  விருது அது. 

 அன்பின் Bk !உங்கள்  வாப்பா  இப்போது இல்லை. ஆனால்  கைவிடப்பட்டவர்களின் முதுகுகளை இன்னும் நீங்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பதை உங்கள் வாப்பா நாடி நரம்புக்குச் சமீபமாக  இருந்தபடி பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்.

இந்தப் பிறந்த நாளில்  நீங்கள் பல்லாண்டு வாழப் பிரார்த்தனை செய்யச் சொல்லி ஆன்மாவாகி விட்ட  உங்கள் வாப்பாவின் சூட்சமக் காதுகளில் கிசுகிசுப்பான குரலில் நான் வேண்டிக் கொள்ளட்டுமா Bk?

அருப்புக்கோட்டை புத்தகக் கண்காட்சி 23 ஏப்ரல் 2017







Wednesday, December 11, 2019

படப்பிடிப்பில்..... இருபது ஆண்டுகளுக்கு முன்னர் .

புகைப்படக் கலைஞர் கே . வி. மணி அவர்கள் எடுத்தது .

ஆலமரத்தின் கீழே .... தேனி மாவட்டம்


இருபது ஆண்டுகளுக்கு முன்னர் .....