Wednesday, November 27, 2013

மகரிஷி வேதாத்திரியின் 103ஆவது பிறந்த நாள் விழா

ஏழாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்வு அது .
ஒரு சந்தடி , கூச்சல் , குழப்பம் ஏதுமில்லை .
அரங்கத்தில் அங்கும் இங்கும் யாரும் ஓடிக்கொண்டிருக்கவில்லை .
கூட்டம் நடந்து முடிகிற வரை ஒரு கைபேசி கூட ஒலிக்கவில்லை .
எங்கும் யாரும் மொபைலில் ரகசியமாகக் கூடப் பேசவில்லை .
அரங்கம் நிறைந்த பிறகு, வந்தவர்கள் வெளியில் அமர்ந்து கொண்டார்கள் .
வழி காட்டிய தொண்டர்கள் சைகையிலேயே கூட்டத்தை ஆற்றுப் படுத்தினார்கள் .

மிகச் சரியாகக்  , குறித்த நேரத்தில் விழா துவங்கியது .
அனைவரும் தங்களுக்குத் தரப்பட்ட கால அளவுக்குள் பேசினார்கள் .
எனக்குத் தந்திருந்த ஒரு மணி நேரத்திற்குள் நானும் பேசினேன் .

மகரிஷி வேதாத்திரி சமாதானத்தின் தூதுவர் . மனித குலம் வளமுடன் வாழ பதினான்கு அடிப்படைக் கோட்பாடுகளை முன் மொழிகிறார் .
அதில் முதன்மையானது "போரில்லா நல்லுலகம் ".
அதுவே அன்றைய சிறப்புரைக்கான தலைப்பு .

உலகில் போர்களுக்கு அடிப்படைக் காரணம் பேராசை கொண்ட ஆயுத வியாபாரிகளே என்று தயக்கமின்றி சொல்லுகிறார் .
மிக நீண்ட இந்திய ஞான மரபின் அழுத்தமான, உன்னதமான தொடர்ச்சியாக மகரிஷி உரையாடுகிறார் .

இரண்டு உலக மகா யுத்தங்களின் தீமைகளையும் , இன்றும் தொடரும் போர்களின் அழிவையும் விவரித்தேன் .வல்லரசுகள் ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவோம் என்பதன் பொருள் , அவர்களைத் தவிர வேறு எவரிடமும் ஆயுதங்கள் இருக்கலாகாது என்பது தான் , என்பதைச்Add caption
Add caption

சான்றுகளுடன் எடுத்துரைத்தேன் .

ஐக்கிய நாடுகள் சபை, ஏகாதிபத்திய  முதலைகளின் பல்லிடுக்கில் உள்ள இறைச்சியை உண்டு வாழ்கிற ஒரு சிட்டுக்குருவி வாழ்க்கையை வாழும் அவலத்தை அவைக்குச் சொன்னேன் .

வாழ்வதற்கு இந்த உலகத்தை விட்டால் , மனிதனுக்கு வேறு இடம் இல்லை என்பதை மனிதனுக்கு உணர்த்துவது நமது கடமை என்பதை மகரிஷி வேதாத்திரியின் சொற்களில் விவரித்தேன் .பேசிய அனைத்தையும் இங்கு எழுதி விட இயலாது ,

நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புவது விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களின் சமூக நடத்தை.
அத்தகைய ஒழுக்கம் எல்லோரும் கற்று உணர வேண்டிய மாபெரும் பண்பு .
அற்புதம் . அளவாகக் கைதட்டி , அளவாகச் சிரித்து , முழுமையாகக் கவனித்து விழாவைப் பெருமை மிக்கதாக நடத்தினார்கள் .

ஆழியாறு அறிவுத் திருக்கோவிலின் அறங்காவலர்கள் இருவர் , தலைமை அறங்காவலர் திரு எஸ் .கே .எம் . மயிலானந்தம் , திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ,சி .பி .ஐ முன்னாள் இயக்குனர் திரு டி.கார்த்திகேயன் ஆகிய பெருமக்கள் விழாவைச் சிறப்பித்தனர் .

அனைத்தையும் பார்த்து விட்டு , விழாவில் உரையாற்றி விட்டுப் புறப்படுகிற பொழுது மனதில் தோன்றியது இது தான் ...

வாழ்க வளமுடன்
Monday, November 25, 2013

ஈரோடு புத்தகத் திருவிழா

கனத்த மழைக்குப் பின்னும் அரங்கம் நிறைந்தது .
வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, புத்தகத் திருவிழா நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை , கேட்கும் பழக்கத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது .

வெகு மக்களின் கேட்கும் திறனை , ரசனையை வளர்ப்பது எளிதான செயல் அல்ல . ஒன்பது ஆண்டு கால தொடர் உழைப்பு , முயற்சி இவைகளால் விளைந்த பயன் அது .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் , மக்கள் சிந்தனைப் பேரவையின்  நிறுவனருமான தோழர் . ஸ்டாலின் குணசேகரன் தான் இதனை சாத்தியப் படுத்திய பெருமைக்கு உரியவர் .

மூட நம்பிக்கைகளை உருவாக்கும் ,வளர்க்கும் , பதிப்பகங்களின் புத்தகங்களை புத்தகத் திருவிழாவிற்குள் அவர் அனுமதிப்பதே இல்லை.
இது  தனியே குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய செய்தி .

பொது அரங்கில் பேச அழைக்கப்படும் எவருக்கும் எந்தத் தடையும் இல்லாத சுதந்திரத்தையும் அவர் தருவார் . அதுவே நமது கடமையையும் , பொறுப்பையும் நமக்கு உணர்த்தி விடும் .

பத்து நாள் நடந்த விழாவில் இந்த ஆண்டும் எனக்குப் பேச வாய்ப்பளித்தார் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் . "நன்றின் பால் உய்ப்பது அறிவு " என்னும் பொருளில் பேசினேன் . எனது பேச்சின் வீடியோ பதிவையோ அல்லது அதன் சாரத்தையோ விரைவில் தர முயல்கிறேன் .

முன்பே இது பற்றி நான் எழுதி இருக்கிறேன் என்றபோதும் , சிறந்த சமூகக் கடமைகளைத் தொடர்ந்து பாராட்டுவதும் , பேசுவதும் கூட ஒரு தொடர்ந்த கடமை என்பதை நான் அறிந்திருக்கிறேன் .

இந்த புகைப்படங்களை எடுத்த நண்பர் நந்தா பாஸ்கருக்கு நன்றி.
 புத்தகத் திருவிழா அரங்கம்
 தோழர் . ஸ்டாலின் குணசேகரன் துவக்கவுரை
 
Saturday, November 16, 2013

வாழ்தல் என்பது ...எங்காவது , எதற்காவது ஒரு வரிசையில் சென்று கடைசி ஆளாக நிற்கும் போது அடி மனதில் ஒரு அவநம்பிக்கை தோன்றுகிறது . அடுத்த அரை மணி நேரத்தில் நமக்குப் பின்னால் ஒரு பத்துப் பேர் வந்து நின்றதும் அதே அவநம்பிக்கை , நம்பிக்கையாகத் தானே உருமாற்றம் கொள்ளுகிறது


இந்த மாற்றத்தை அறிவு தருகிறதா அல்லது மனம் தானே உருவாக்கிக் கொள்ளுகிறதா ? துல்லியமான விடை தட்டுப்படவில்லை.


மனமோ , அறிவோ ... எல்லாவற்றிலும் அதன் நுட்பம் என்னவென்று அறிந்து கொள்ளுகிற போராட்டமே ... வாழ்தல் என்றாகிறது 

ஈட்டுவதற்கு எதுவுமில்லை எனக்கு ...

 ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , கடுமையான கால் வலியோடு இந்த விழாவிற்குப் போனேன் .


அன்பினால் அரவணைத்துப் போற்றிப் பாதுகாத்து நெகிழ வைத்தார்கள் விழா அமைப்பாளர்கள் . மனமுருக நன்றி சொல்லுகிறேன் அவர்கள் அனைவருக்கும் .


இலக்கியக் கழகத்தின் தலைவரும் , பேராசிரியருமான சகோதரி குருவம்மாள் என்னை எப்போதும் " கிருஷ்ணா " என்று தான் அழைப்பார் . என் வலி உணர்ந்து அமர்ந்து பேசுகிறாயா ? என்று சலுகை தந்தார் . அந்த அன்பை வணங்கி ஏற்றுக் கொண்டு , அமர்ந்து பேசுவது மிகுந்த சிரமம் தருமென்பதால் நின்று தான் பேசினேன் .எனக்கான நினைவுப் பரிசை அவரே எனக்குத் தந்ததும் அளவற்ற மகிழ்ச்சி தந்தது .


.
நண்பர்கள் ஆர் . எஸ் . மணி , இளங்கோ என்று எல்லோரும் பார்த்துப்பார்த்து அன்பினால் நனைத்தார்கள் . அதிலும் இளங்கோ நான் இரவு உறங்கிப் போகிற வரை , தான் ,கண் விழித்து என்னைப் பராமரித்துக் கொண்டார் . எனக்கான பரிசுக்குரிய புத்தகங்களை ஒரு குழந்தை போல ஓடி ஓடிக்  கொண்டு வந்து தந்தார் மணி .என் சிரமங்களைக் கடந்து நான் சிறப்பாகப் பேச எல்லாம் செய்து கொடுத்தார்கள் . விழாவில் பேசியவை குறித்தும் , விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களையும் விரைவில் பதிவிடுகிறேன் .இத்தகைய மகத்தான , மாசற்ற , எந்தப் பலனும் எதிர்பாராத இதயங்களின் அன்பைப் பெற்று இருக்கிறேன் என்பதை விடவும் , நான் ஈட்டுவதற்கு எதுவுமில்லை இந்த உலகத்தில் .