Friday, December 28, 2012

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 03.1
விழாவில் , பங்கேற்று வெண்மணித் தியாகிகளின் அஸ்தியை , வெண்மணி நினைவிடத்திற்கு அர்ப்பணித்து விட்டு வாழ்த்துரை வழங்கிய பத்மஸ்ரீ கமலஹாசன் .

Thursday, December 27, 2012

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா03
 விழாவில் , பங்கேற்று வெண்மணித் தியாகிகளின் அஸ்தியை , வெண்மணி நினைவிடத்திற்கு அர்ப்பணித்து விட்டு வாழ்த்துரை வழங்கிய பத்மஸ்ரீ கமலஹாசன் .

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா02 வெளியீட்டு  விழாவில் வாழ்த்துரை வழங்கினார் முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும் , விடுதலைப் போராட்ட வீரருமான திரு . என் . சங்கரய்யா  

வெண்மணி ஆவணத் திரைப்பட வெளியீட்டு விழா 01

வெளியீட்டு விழாவிற்குத் தலைமை ஏற்ற , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இப்போதைய தமிழ் மாநிலச் செயலாளரும், அப்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான திரு . ஜி . ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமை உரையின் ஒரு பகுதி .

Wednesday, December 26, 2012

அன்பின் தனித்த அடையாளம்


 {எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை }கடந்த ஆண்டு டிசம்பரில் , எனது முதல் இரண்டு நூல்கள் வெளியாகின .

ஒன்று ஆய்வு .
மற்றொன்று புனைவு .

ஆய்வு நூல் மகா  கவி பாரதி பற்றியது .

புனைவு , எனது பத்து சிறு கதைகள் .

எல்லோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பினேன் .

பலர் வந்து இருந்து விழாவைச் சிறப்பித்தார்கள் .

பலர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அழைப்பிதழ் அனுப்பப் பெற்றவர்களில் ஒருவர் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . சிறந்த வாசகர் .

ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை ஒன்றினைப் படித்து விட்டு ,அதனைப் பாராட்டும் பொருட்டு என்னோடு தொடர்பு கொண்டவர். அப்படித்தான் எங்கள் அறிமுகம் நிகழ்ந்தது .

 விழா அழைப்பிதழ் கிடைத்ததும் என்னோடு தொலைபேசியில் பேசினார் . தான் வர இயலாதென்றும் , ஆனால் உரிய இடத்தில் அழைப்பிதழைச் சேர்த்து  விடுவதாகவும் சொன்னார் . நான் கேட்டுக் கொண்டேன் . எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை .

விழா முடிந்து , இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த கடிதத்தில் மேலே இருக்கிற புகைப்படம் இருந்தது . பேராசிரியர் தான் அனுப்பி இருந்தார் .
அதனுடன் வேறு இணைப்பு எதுவும் இல்லை .

கடிதம் வந்த மறு நாள் பேசினார் . புத்தகம் வெளியான அதே நாளில் , அதாவது பாரதி பிறந்த நாளில் ,எட்டயபுரம்சென்று ,பாரதி பிறந்த இல்லத்தில் , அமைந்துள்ள பாரதி சிலையின் கீழ் அழைப்பிதழை வைத்து அதனைப் பாரதிக்குச்  சொன்னதாகச் சொன்னார் .

பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் இதை எனக்கு சொன்னதும் , பதில் உரையாட எனக்கு எதுவும் தோன்றவில்லை . இது பாரதி மீதான அவரது  அன்பின் தனித்த அடையாளம் தவிர வேறு எதுவுமில்லை . அந்த அன்பின் தூய்மை என்னையும் அரவணைத்துக் கொண்டது .

பாரதி வரலாற்று ஆசிரியர்களில் தனிச் சிறப்பு வாய்ந்த அமரர் தொ .மு . சி . ரகுநாதனின் மருமகன் தான் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன்.

பாரதி குறித்து ஒரு நூல் வருவதை பாரதியின் கவனத்துக்கும் , கனிந்த ஆசிக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் .

நாங்கள் இருவரும்  இன்னும் நேரில் பார்த்துக் கொண்டதில்லை . ஆனால் பாரதி எங்களை இணைத்திருக்கிறான்.

சோழனும் , பிசிராந்தையாரும் நேரில் பார்க்காமலே அன்பு பூண்டவர்கள் என்று படித்திருக்கிறேன் .அதெல்லாம் வெறும் கதையல்ல .

சார் ..... நீங்கள் பாண்டியன் .
நான் பிசிராந்தை போலும் .  


Tuesday, December 25, 2012

வெண்மணித் தியாகிகளின் அஸ்தி

வெண்மணி வரலாற்றை உருவாக்கும் தேடலின் போது , அறுபத்தெட்டில் சம்பவம் நடந்த சில நாட்களில் சேகரித்துப்  பாதுகாக்கப்பட்ட அந்தத் தியாகிகளின் அஸ்தி கிடைத்தது .

இப்போது அது அஸ்திக் கலசமாக வெண்மணியில் பாதுகாக்கப்படுகிறது

இன்று வெண்மணி நினைவு  நாள் .


"வெண்மணியில் மாண்டவர்கள் மீண்டு வருகிறோம்" - என்பது வெற்றுக் கோஷமல்ல .

கண்டனமும் , தண்டனையும்

தலைநகர் தில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராகக் கடும் கண்டனக் குரல்கள் .... குஜராத்தில் , வாச்சாத்தியில் இன்னும் வேறு பல இடங்களில் இதனினும் இழிவான வன் கொடுமைகள் நடந்த போதும்... அது குறித்து இப்போதும் ...  இவர்கள் எல்லோரும் இவ்வளவு பெருங் குரலில் எதுவுமே பேசியதில்லை .
எந்தக் கொடுமையும் நகரத்தில் , படித்தவர்களுக்கு நடந்தால் அதற்கான எதிர் விளைவுகள் தனிச் சிறப்புடன் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது .

என்ற போதும் , இது தொடர்பான எல்லாக் கண்டனக் குரல்களையும் நான் மதிக்கிறேன் . அப்படியாவது நமது சமூகம் குரல் எழுப்புவது பாராட்டுதலுக்குரியது .

ஆனால் கண்டனக் குரலோடு , அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் எல்லா
நீதி மான்களும் சேர்த்து எழுதுகிறார்கள் .
அதில் நானும் கை நாட்டுப் போட வேண்டுமென்று என் முக நூலில் மனுக்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள் .

அத்தகைய மனுக்கள்
அனைத்தையும் நீக்கி இருக்கிறேன் .
குற்றத்தை விட தண்டனை குரூரமாக , அவமானகரமாக , இழிவாக இருக்கலாகாது


பாலியல் வன்கொடுமை பெண்மைக்கு எதிரானது .
மரண தண்டனை தாய்மைக்கு எதிரானது .

Monday, December 24, 2012

வெண்மணி நினைவஞ்சலி


இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் பதினெட்டாம் தேதி வெண்மணி குறித்து , நான் தயாரித்து இயக்கிய " ராமைய்யாவின் குடிசை " ஆவணத் திரைப்படம் வெளியானது .

ஆவணப் படத்தில் இடம் பெறாது போனது கவிஞர் புதுகை .தனிக்கொடியின் உயிர் உருக்கும் பாடல் .

வெளியீட்டு விழாவில் புதுகை செல்வி,பாடினார் .

நிறைந்திருந்த அரங்கம், பாடலால் உறைந்தது .
ஆன்மா உருகிக் கண்ணீராகப் பெருகியதை அனைவரும் உணர்ந்தார்கள் .

நாளை கீழ வெண்மணி நினைவு தினம் .
அந்த வீரம் மிகுந்த மக்களுக்கு , இந்தப் பாடலைக் காணிக்கை ஆக்குகிறேன் .
 

ஆசிரியர் தினம் 2012ருமை நண்பனும் தோழனுமான கவிஞர் முகமது சபி , தேனியில் இருந்து அலைபேசியில் பேசினார் . அவரது நண்பர் ஒருவருக்கு எனது மேடைப் பேச்சு பிடிக்குமாம் . அவர் மகள் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் , அங்கு நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் பேச நான் இசைவு தெரிவிக்க வேண்டும் என்றும் சொன்னார் .

ந்தக் கல்லூரியில் இருந்து , பேசச் சொல்லுங்கள் என்றேன் . முறைப்படி பேசினார்கள் . கல்லூரியின் பெயர் தான் எனக்கு புதுமையாக , நினைவில் நிறுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது . அப்படி ஒரு கல்லூரி இருப்பதே , பல முறை ஈரோடு போன எனக்குத் தெரியாமல் இருந்தது .

செப்டம்பர் ஐந்தாம் தேதி நிகழ்வுக்குப் போனேன் . எங்கோ தேனியில் இருந்து படிக்கப் போன மாணவியின் தந்தை வழியே , ஒரு தொடர்பு உண்டாகி , சபி சொல்லி அங்குபோனேன் .  அழைப்பிதழில் எனது  ஊர்  தேனி  என்று
போட்டிருந்தார்கள். யாதும் ஊரே என்பது இதுவாகவும் இருக்கலாம் , சிந்தனை மழை பொழிய வருவதாகவும் போட்டிருந்தது . "அப்படிதானா "என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் . ஆனால் நான் போன அன்றைக்கு, இதமான ஒரு தூறல் விழுந்தது என்னவோ உண்மை .

ல்லூரி , விழா அரங்கம் என எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது . ஒரு சிறிய குன்றின் மேல் இருப்பது போல நல்ல உயரத்தில்  இருந்தது கல்லூரி.
இப்போது நினைத்துப் பார்க்கிற தருணம் , அந்த வளாகம் மனதுக்கு ரொம்பப் பிடித்ததாக இருக்கிறது .

ன்றைக்கு , விழாவில் நடந்தவைகள் பற்றி தனியே சொல்லணும் . கோபமும் ,குதூகலமும் ஒருங்கே கலந்த நிகழ்வு அது .

Thursday, December 20, 2012

கருப்பு ஓவியமும் , வண்ண ஓவியமும்

இருபது ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மாலை நேரம் . அப்போது நான் சாத்தூரில் வங்கிப் பணியில் இருந்தேன் .அலுப்பும் , சலிப்பும் , கோபமும் , நிறைந்திருந்த ஒரு மாலை நேரம் . எங்கள் சங்க அலுவலகத்தில் தனித்து இருந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன் . அருகாமையில் இருந்த பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணி புரிந்து வந்த அன்புத் தோழன் அழகர்சாமி வந்தான் . நான் மனதார வரவேற்று விட்டு , வேலைகளில் மீண்டும் அமிழ்ந்தேன்.

அவர்  எதையோ வரையத் துவங்கினார் . பென்சில்களை மாற்றி மாற்றி வரைந்து கொண்டே இருந்தார் . இருபது அல்லது முப்பது நிமிடம் . என்னையே வரைந்து எனக்குக் காட்டினார் . வியந்து போனேன் . என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை .

சிறிது நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள் . பாராட்டினார்கள் . வியந்தார்கள் . ஒரு சொல் கூடச் சொல்லாமல் அழகர்சாமி மெல்லிய புன்னகையுடன் எல்லாம் கேட்டுக் கொண்டார் .

" ரொம்ப நல்லா இருக்கு ... ஆனா ஓவியத்திலும் கோபமாகத் தான் இருக்க வேண்டுமா ? B.K நல்லா சிரிக்கிற மாதிரி ஒன்னு வரையக் கூடாதா ? " என்று அழகர்சாமியைப் பார்த்து  R.S.N  கேட்டார். அழகர்சாமியின் முகம் வாடி விட்டது .

நான் R.S.N.  ஐக் கோபமாகப் பார்த்தேன் ... " படத்துலயாவது சிரிக்கிற மாதிரி இருக்கட்டுமேன்னு  கேட்டேன் ... வேணாமுன்னா விடுங்க " என்றார் R.S.N .
எல்லோரும் சிரித்தார்கள் . நானும் தான் .

சிரித்துக் கொண்டே R.S.N ஐப் பார்த்து அழகர்சாமி சொன்னார் . " சிரிக்கிற மாதிரி தானே ? வரைஞ்சாப் போச்சு ... ஆனா உங்க தலைவரைச் சிரிக்கச் சொல்லுங்க " என்றார் .

எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள் . சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் . பென்சில்களை எடுத்து உள்ளே வைத்து விட்டு WATER COLOUR BOX  எடுத்து "நான் " முக மலர்ந்து சிரிக்கிற ஓவியத்தை வண்ணத்தில் அடுத்த அரை மணி நேரத்தில் வரைந்தார் அழகர்சாமி .

கோபமாக இருந்ததைக் கறுப்பிலும் , சிரித்து இருப்பதை வண்ணத்திலும் ஆக வரைந்து தந்தார் .

என் சந்தோசங்களைப் போலவே அந்த வண்ண ஓவியமும்  எங்கோ காணாமல் போய் விட்டது . எப்போதாவது திரும்பக் கிடைத்தால், உங்களுக்குக் காணத் தருவேன் . நானும் பார்த்துக் கொள்வேன்

Wednesday, December 19, 2012

புத்தகக் கண்காட்சி - ஈரோடு

2009 ஆம் ஆண்டு ஈரோடு , மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழாவின்  அய்ந்தாம் நாள் நிகழ்வில் நானும் , தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு . கே . வைத்தியநாதனும் சிறப்பு விருந்தினர்கள் .

புத்தகத் திருவிழாவை சிறப்புற நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவையின் ஸ்தாபகத் தலைவர் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர் .

அவர் புத்தகத் திருவிழாவைத் துவங்கிய ஆண்டுகளில் பதிப்பகங்களும் , பொது மக்களும் பேராதரவை அவருக்கு அள்ளித் தந்து விடவில்லை . ஒரு திருமண மண்டபத்தில் தான் முதலில் துவக்கினார் . இப்போது இடம் கொள்ளாத பெரும் மைதானங்களுக்கு அதை வளர்த்து உயர்த்தி இருக்கிறார் .
துவக்க ஆண்டுகளிலும் என்னை அழைத்து இருக்கிறார் . இப்போதும் அழைக்கிறார் .

ஆயிரக் கணக்கில் மக்களும் , நூற்றுக் கணக்கில் பதிப்பகங்களும் கூடும் அசலான திருவிழாவாகி விட்டது ஈரோடு புத்தகச் சந்தை .


தமிழகத்தின் தனிச் சிறப்பு மிக்க புத்தகத் திருவிழாக்களில் தனித்த இடம் பெற்று விட்டது ஈரோடு . அதை உருவாக்கிய பெருமை தோழர் ஸ்டாலின் குணசேகரனுக்குத்தான் .

எடிட்டர் - இயக்குனர் - இசைஅமைப்பாளர்

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி , மழை கொட்டித் தீர்த்த ஒரு நாளில் எனது முதல் ஆவணப் படமான "ராமையாவின் குடிசை " வெளியானது .

நானே தயாரித்து , நானே இயக்கினேன் .

1968 டிசம்பர் 25 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணியில் நடைபெற்ற படுகொலை குறித்துப் பேசும் முதல் ஆவணப் படம் .

2006  ஜனவரியில் , தஞ்சையில் நடைபெற்ற தங்களது மாநில மாநாட்டில் எங்களை அழைத்துச் சிறப்பித்தது ,"தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் "

மாநாட்டின் தலைமை விருந்தினரான , திரிபுரா முதலமைச்சர் மாண்புமிகு . மாணிக் சர்க்கார் எங்களுக்குப் பரிசளித்தார் .

விழா முடிந்த பிறகு , எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று .

ஆவணப் படத்தின் எடிட்டர் , தனித் திறமையும், ஆற்றலும் , மிக்க சாந்தாராம் விருது பெற்ற கலைஞர் நண்பர் கே . பழனிவேல் ....... நான்...... எனது அருமை நண்பனும் , மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் , ஆவணப்படத்தின் இசையமைப்பாளருமான இரா . பிரபாகர் .