Tuesday, May 31, 2011

பி.கு. சரவணனின் “முகில் பூக்கள்” குறித்து

னக்கு சரவணன் ஒரு அரசு ஊழியராகத்தான் அறிமுகம். வேலையில் ரொம்பக் கறாரான ஆள் என்று பேர் வாங்கி இருந்தார். அவர் பேரைச் சொன்னதும், சக அதிகாரிகள் நமக்குத் தருகிற மரியாதை, அவரது “இடத்தைப்” புலப்படுத்துகிறது. ரொம்பப் பெரிய ஆட்களைக் கூட தனது அதிகார வரம்பிற்குள் அவர் “நிறுத்தி” இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். வியந்த போது அவரது இயல்பே அதுவென்றார்கள். பிற்பாடு ஊழல எதிர்ப்பு இயக்கமொன்றில் அவர் பணியாற்றியதும் என் கவனத்துக்கு வந்தது. இதெல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், அவருக்கும், கவிதைக்கும் சகவாசம் இருக்குமென்பதற்கு, சிறிய தடயம் கூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. அவரோடு தொலைபேசியில் பேச நேர்ந்த தருணங்களும் கூட, அலுவல் சார்ந்த “அக்கப்போர்கள்” தான்.


டந்த நவம்பரில், தனது கவிதை நூல் வெளியீடு, கோவையில் நடப்பதாகவும், நான் அதற்கு வர வேண்டுமென்றும் அழைத்தார். எனக்கு வியப்பேதுமில்லை. தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை பெருகுவது, ஏறக்குறைய புவி வெப்பமேறுவதற்கு இணையாகத் தான் நடைபெறுகிறது. வாசகர்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாகக் கவிஞர்கள் “அவதரிக்கிற” மொழியாக நமது தாய் மொழியே இருந்து வருகிறது. நமது மொழிக்கு வாய்த்த வரமும் சாபமும் அது.


முன்பெல்லாம், கவிஞர்கள் அறிமுகமாகிற போது, அதிக பட்சமாக ஒரு கவிதை சொல்லுவார்கள் அல்லது வாசித்துக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் பார்த்த இடத்தில ஒரு தொகுப்பைத் தந்து விடுகிறார்கள். பதட்டமாகி விடுகிறது. எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. பலவற்றைப் படிக்கவே முடிவதில்லை. பிழையாக எழுதப்பட்ட கவிதைகளைப் படித்துத் தன தலையில் எழுத்தாணியால் குத்திக் கொள்வார் சீத்தலைச்சாத்தனார் என்று ஒரு கதை உண்டு. எந்தக் கதைக்குப் பின்னும் உண்மையே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. நம் காலத்திலயே மொழியைக் காக்க உயிர் நீத்தவர்கள் உண்டு தானே.

விழா வெற்றி பெற வாழ்த்தினேன். டிசம்பரில், புத்தகம் வந்தது. இரண்டு மூன்று மாதங்கள், கவனமாகப் போகிற இடத்திற்கெல்லாம் அதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். என் செலவில், எல்லா ஊரும பார்த்தது அந்தப் புத்தகம். சரவணன் கூடத் தன புத்தகத்தை இத்தனை ஊர்களுக்கு அழைத்துப் போய் இருக்க மாட்டார்.

கோடையின் வெப்பம் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த ஒரு இரவில், வாசிக்கக் கண்ணில் பட்டது புத்தகம். மழை பற்றி நிறையக் கவிதைகள் நிறைந்த தொகுப்பு . முதல் கவிதை.

“அசைந்து
நடந்து பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்”

ந்த இடத்திலேயே சொற்களின் அணிவகுப்பு துவங்கி விடுகிறது.

“மண்ணை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது மழை”

“மாமழையும் மண்ணோடு மெய் கலக்கும்”...

“மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்”.

ந்தக் கவிதையைப் படித்ததும், கழுத்தைச் சுற்றி குறுகுறுவென்று சின்னதாக சிலிர்ப்புத் தட்டி விட்டது. இது தான் வேண்டும். வாசிப்பின் அனுபவம். ஏதேனும் ஒரு கணத்தில், ஒரு விதத்தில், அறிவால், மனதால், உடலால் உணரப்பட வேண்டும். தொகுப்பில் இருந்து நிறைய, இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சொல்ல மாட்டேன். அவரவர்கள் வாங்கிப் படிக்கட்டும்.

புத்தகம், மழை பற்றிய நினைவுகளின் மீது தூறல் போட்டு நிறைய மண் வாசனைகளைக் கிளப்பி விட்டது.

வளோடு இணைந்து இருக்கிற போது அமுதமாகவும், அவளின்றி தனித்துத் தவிக்கிற போது நஞ்சாகவும் பொழிகிற வித்தை மழைக்கு மட்டுமே தெரியும்.

ண்ணுக்கெட்டிய தூரத்தில் பொழியத் துவங்கி, நாம் பார்க்கப் பார்க்க நம்மை நோக்கி வந்து, நமக்குள் ஊடுருவும் மழை காதலியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

ன் நினைவுப் பேரேட்டில், ஈரமாகப் படிந்திருக்கும் மழை பற்றிய ஒரு தனிப்பாடல் வரிகள்.... “கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்; கோகனக நகை முல்லை முகை நகைக்கும் காலம்; அங்குயிரும் இங்குடலும் ஆன மழைக்காலம்; அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்”

“வானமழை நீயெனக்கு” என்று காதலில் நனைந்து கரைவான் மகாகவி பாரதி

தற்கு மேல் மழை பற்றிப்பேசக் கூடாது. நனையத்தான் வேண்டும்.

புத்தகத்தில் நான்கைந்து உரைநடைப் பத்திகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கவிதைப் புத்தகம் என்று பெயரிட்டு விட்டு, இதெல்லாம் ஆகாது சரவணன். சக்கரை டப்பாவில் மிளகாய்ப்பொடி என்று எழுதி ஒட்டி விடுவதால் எறும்புகள் கூட ஏமாறுவதில்லை. இது போன்ற பிழைகள் கவனத்துடனும், அக்கறையுடனும் தவிர்க்கப்பட வேண்டும். முகப்பு அட்டை இன்னும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

தையெல்லாம், கடந்து மனதில் நிற்கும் பல கவிதைகளோடு தான் இருக்கிறது தொகுப்பு. அதில் மிக முக்கியமான ஒன்று...

“கடந்து செல்கின்றன
மழை மேகங்கள்
அதில்
நீரருந்திச் செல்கின்றன
தூர தேசத்துப் பறவைகள்”

ரந்த, தொடர்ந்த வாசிப்பு சரவணனை நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அடுத்தொரு, தொகுப்பு வருமென சரவணன்
சொன்னால் நான் மகிழவே செய்வேன். ஏனெனில் இந்தத் தொகுப்பிற்குள் நுழைந்து வெளியேறியபோது மழையில் நனைந்த
ஈரமும், சந்தோஷமும் எனக்கு இருக்கவே செய்தது சரவணன்.

Sunday, May 22, 2011

அவனும்,நானும்

வ்வொரு கலை இலக்கிய இரவும் தனித்தனியான நிகழ்வுகள் தான் ,ஒன்று போல இன்னொன்று இருந்ததேயில்லை. பார்ப்பதற்கு ஒன்று போலத் தோற்றமளித்தாலும், அவைகளுக்குள் மிக நுண்ணிய வேறுபாடுகளை உணர்தல் கூடும்.

................. ஊரில் கலை இரவு. மிக விரிவான ஏற்பாடுகள். .எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்.ஆனால், ஊருக்குள் மக்களைத் திரட்டி வந்து உட்கார வைக்க முடியாதபடிக்குப் பனி கொட்டித் தீர்த்தது .பனியையும் மீறி நூறு பேருக்கும் மேல் மைதானத்தில் சிதறி உட்கார்ந்திருந்தார்கள். இரவு ஒன்பதரை மணிக்கெல்லாம் மேடைக்குப் போன என்னை , “இந்தா கூப்பிடறோம் ...அடுத்து கூப்பிடுறோம்...”என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் ,கூப்பிடவில்லை.
[பல சமயங்களில்,பல ஊர்களில் எல்லோரும் பாடி ,எல்லோரும் பேசி ,எல்லோரும் ஆடி முடித்த பிறகு கூப்பிடுவார்கள். “என்ன இப்பிடி...பொழுது விடியப்போகுது” என்றால்... “நீங்க முதல்ல பேசுனாக் கூட்டம் போயிருமில்ல தோழர்”என்று சொல்லி விடுவார்கள். அது போதாது நமக்கு]

ன்றைக்குப் பனி ஊரையே விரட்டிக்கொண்டிருந்தது .,நிகழ்ச்சிகளுக்கு நடுவே ,அறிவிப்பாளர் அதிக நேரம் எடுத்துக்கொண்டபோதெல்லாம், ஒவ்வொரு திசையிலும் அஞ்சு பேர், பத்துபேர் என்று புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். போர்த்திக் கொள்ளக் கொண்டு வந்திருந்த போர்வையை நன்றாக மேலுக்கு சுற்றிக்கொண்டு ஒவ்வொருவராக அங்குமிங்கும் படுத்துறங்கவும் ஆரம்பித்தார்கள்.என்னை பேசக் கூப்பிடுவார்கள் என்கிற தடயமே இல்லாமல் இருந்தது .கவிதை வாசிக்க வந்த ஒருவரும் ,பாடல்கள் பாட வந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவரும் மிச்சம் இருந்த ஆட்களை ‘வம்படியாக’ எழுந்து போக வைத்துக் கொண்டிருந்தார்கள்.


காகவி பாரதியின் இறுதிச்சடங்கில் இருபது பேருக்கும் குறைவானவர்களே கலந்தது கொண்டார்கள் என்பது வரலாறு. இதுவும் ,ஏறக்குறைய அந்த எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது .மேடைக்கு எதிரே மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூட்டம் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேர், எதிரும் புதிருமாக அங்கேயே படுத்தார்கள்.


ணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது . பேசக் கூப்பிட்டார்கள் . பத்திருபது பேர் முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்கள். நான்கைந்து பேர் கேட்கிற தோரணையில் , களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் .இதனால் எல்லாம் நம்பிக்கை இழப்பதோ ,குரல் சுண்டுவதோ, பேசுவதைக் குறைத்துக்கொள்வதோ நமக்குப் பழக்கமில்லை . எதிரே இருந்த மைதானம் ஏதோ போர்க்களம் போலக் காட்சி தந்தது. பேச நினைத்தது எல்லாம் மறந்து, மனம் மரணத்தைப் பற்றியே, சுற்றி வந்தது .”நான் மரணத்தைப் பற்றி சிந்திக்கிறேன்” என்று தான் பேசத் துவங்கினேன். பேசத் தகுந்த மரணங்கள் கூட எத்தனையோ உண்டு தானே ? ... பகத்சிங் ,கையூர் தியாகிகள் ,குதிராம்போஸ ,பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்தில் மாண்ட ஏழைகள் , வெண்மணி விவசாயக் கூலிகள்,கும்பகோணத்தில் பள்ளி வளாகத்தில் கொலையுண்ட குழந்தைகள் என்று ...... பேச்சு கிளை பிரிந்து பரவத் தொடங்கியது.


னக்கு நம்பிக்கையூட்டும் விதமாக,ஊருக்குள் இருந்து ஒருவன் மேடையை நோக்கி வந்தான். வந்து நின்று, பேச்சைக் கேட்க ஆரம்பித்தான். ஒரு போர்வையை மேலுக்குச் சுற்றி இருந்தான். பேச்சை ரசிக்க ஆரம்பித்தான். அவனுக்கும் ,எனக்குமான உறவுப்பாலத்தை வந்து நின்ற சில நிமிடங்களில் அவனே உருவாக்கினான் . அவன் ஈடுபாட்டுடன் கேட்க ,எனக்கு மிகுந்த உற்சாகமாகி விட்டது .அவனை மட்டுமே பார்த்துப் பேசத் துவங்கி விட்டேன் .ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். சுதாரித்துக் கொண்டேன் .வேறு சிலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே ...இருக்கிற “எல்லோரையும்” பார்த்துப் பேச ஆரம்பித்தேன். எனினும் அவனை அதிகம் பார்க்கத்தான் செய்தேன்.


வனுக்கு துணையாக , அவனுக்குப் பின்னால் இன்னுமொருவர் வந்து கொண்டிருந்தார் . எனக்குக் குஷி ஏற ஆரம்பித்தது .வந்தவர் ,நான் பார்க்கப் பார்க்க, என் உணர்வோடு கலந்து விட்ட அவனுக்குப் பின்புறமாக வந்து , அவன் முதுகில் வசமாக ஒரு அடியை இறக்கினார் .ஒரு நொடி எனக்கு பேச்சு நின்று போனது. “வக்காளி.. பாலு வாங்கிட்டு வரச் சொன்னா ... வாயப் பாத்துக்கிட்டு நிக்குறான். எவனோ பொழப்பத்தவன் பேசிக்கிட்டு இருக்கான் . நின்னு மண்டைய ஆடிக்கிட்டு இருக்கான்” என்றபடி மீண்டும் ஒரு அடியை இறக்கினார் . அவன் துள்ளிக்குதித்து ஓடினான் . கையில் பால் வாங்குகிற தூக்குப் போணி இருந்தது. மீண்டும் பேசத் துவங்கி இருந்தேன் .


துரையில் , திருவிளையாடல் புராணத்தில் , வந்தி என்ற வாரிசு இல்லாத கிழவிக்காக, மண் சுமக்க ஒப்புக்கொண்டு, அதற்குக் கூலியாக வந்தியிடமிருந்து புட்டு வாங்கி உண்ட பின் , வேலை பார்க்காமல் படுத்து உறங்கிய சொக்கநாதக் கடவுளின் முதுகில் பாண்டிய மன்னன பிரம்பால் வைத்த அடி , எல்லா உயிர்களின் முதுகிலும் பட்டது என்றொரு கதையை அம்மா சொல்லி இருக்கிறாள் . அது உண்மையோ, என்று உணர்வது போல் எனக்கும் வலித்தது .அதற்குப் பிறகு ரொம்ப நேரம் பேச முடியவில்லை.

ராஜா சந்திரசேகரின் "கை விடப்பட்ட குழந்தை"

ந்த வார ஆனந்த விகடனில், திரு ராஜா சந்திரசேகரின் கவிதை "கை விடப்பட்ட குழந்தை" பிரசுரம் கண்டிருக்கிறது.

ல்லாப் பிறழ்வுகளுக்கும் பின்னே, கைவிடப்பட்ட, நிராதரவான குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகமெங்கும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்குப் பிறகும், "பிள்ளைமை"யுடன் வாழ்வையும், சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகள் பெரும் துன்பக் கேணிகள்.
குற்றமற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை, அதன் விளைவை குழந்தைகள் எதிர் கொள்ளும் விதம் அலாதியானது. வலி உணர்ச்சியைச் சுமக்கும்
குழந்தைகள் ஒரு போதும் பழி உணர்ச்சி கொள்வதேயில்லை. அதுவே, பிள்ளைமையின் பெருஞ் சிறப்பு. வலியின், துயரத்தின் நீட்சியில் இருந்து, கணப்
பொழுதில் வெளியேறி, தனது கனவுலகுக்குள் பயணிக்கும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டென்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை தந்த ஆறுதல்
சொல்லி மாளாத ஆறுதல். ஆனால்....

"கை விடப்பட்ட குழந்தை ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது" எனத் துவங்கிய கவிதையின் வரிகள் என் நம்பிக்கைகளைத் தகர்த்துப் பொடித்துத்
தூர்ந்து போகச் செய்தன. கலங்கடித்தது கவிதை. கவிதையை வாசிக்கிற போது, எதனைக் கவிஞன் பாடு பொருளாக்கிப் பாடினானோ, அதுவாகவே நம்மை
உணர வைத்த கவிதை. "கை விடப்பட்ட குழந்தைகள்" என்று பன்மையில் தலைப்பிட்டிருக்க வேண்டுமெனத் தோன்றியது. அச்சில் வடிவமைத்தவர்களும் வலியை
அந்தப் பக்க மெங்கும் பரவ விட்டிருந்தார்கள். அந்தப் படங்களிலுள்ள எல்லாக் குழந்தைகளின் கண்களிலும் ஒளிரும் பிள்ளைமை நம்மைக் குற்றவாளிகளாக்கித்
தெருவில் நிறுத்துகிறது. தரையில் கிடக்கும் எதையோ எடுத்துச் சாப்பிடும் பசித்த சிறுவனின் படம்.... ஐயோ....

முள் வேலியை வாயில் கடித்த படி ஒரு குழந்தை....
வாயால் துண்டித்து விட முடியுமா முள் வேலியை?....
முடியத்தான் வேண்டும்.
இலங்கையில் போடப்பட்டிருக்கும் முள் வேலிகளை பற்களால் கடித்தேனும் கிழித்தெறிய வேண்டும் என்கிற சினம் பெருகுகிறது.

குழந்தைகளுக்கான ஒரு உலகத்தை நாம் சிருஷ்டிக்கத் தவறினோம் என்பது மட்டுமன்று நமது குற்றம். அவர்கள் சிருஷ்டித்து வைத்திருந்த
உலகத்தையும் நாமே சீரழித்தோம். இந்தக் கணம் கவிஞர் ரத்திகா எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.....
"குழந்தைகளிடம் கற்றுக் கொள்.... பொம்மைகளை எப்படி மகிழ்விப்பதென்று?...." மகத்தான சொற்கள்... தனது உலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்தையும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு வயப்படுத்தும் அதிசயம் குழந்தைகளின் தனித்த பேராற்றல். அந்த ஆற்றலைப் பறித்து சிதைத்து அழித்திருக்கிறோம். இறுதி ஊர்வலங்கள்
போன பின்னே, வீதியில் கிடக்கும் பூக்களைப் போலக் குழந்தைகளை எடுத்தெறிந்து விட்டோம்.

விதை இப்படி முடிகிறது.....

" கை விடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச் செல்கிறது இன்னொரு
குழந்தையைத்
தன் கைப்பிடித்து அழைத்துச்செல்ல....."

திப்பிற்குரிய ராஜா சந்திரசேகர் நானும், நீங்களும் ஏன் எல்லோருமே, எத்தனையோ தருணங்களில், கைவிடப்பட்ட குழந்தைகள் தாம்...
உங்கள் கைகளை நான் பற்றிக் கொள்கிறேன்.

Tuesday, May 10, 2011

உருகாத பனிச் சிற்பங்கள்

எப்போது புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அழைத்தாலும், மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொள்கிறேன். “எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல” என்பதைத் தனியே குறிப்பிடுகிற அவசியம் ஏதுமில்லை. புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு பெறுவதில், காத்திரமான ,ஸ்தூலமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. “யார் படிப்பதற்கு முன்பும், லேசான ஈரத்தோடு நமக்குப் படிக்கப் புத்தகம் கிடைக்கிறது” என்பது முதலாவதும், பிடித்தமானதுமான அம்சம்.

வெளியீட்டு விழாவில்,புத்தகத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும் என்பதால் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது இரண்டாவது சிறப்பம்சம். மூன்றாவதும், அற்புதமானதும் யாதெனில், வாசிப்பனுபவத்தைத் தகுதியான பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற உயிர்ப்பான தருணம். ஒவ்வொரு விழாவிலும் கிடைக்கிற புதிய அனுபவங்கள், அறிமுகங்கள், சிந்தனைகள் என பலப் பல நன்மைகள்.

வெளியீட்டுக்கான புத்தகங்களில் வெகு சில, மிக முன்னதாகவும், பல மிகக் குறைந்த கால இடைவெளியிலும் வந்து சேருகின்றன.மிகுந்த அவகாசத்துடன் வந்து சேரும் புத்தகங்கள் தருகிற வாசிப்பனுபவத்தை விடவும், மிகக் குறைந்த கால இடைவெளியில் வந்து சேரும் புத்தகங்கள் தரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறானது. நிகழ்ச்சிக்குப் புறப்படுகிற வரை, பதட்டத்தோடு புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்கள் தான் அதிகம்.

வாசிப்பைப் பொறுத்தவரை,எனக்கென்று ஒருபிரத்யேகமான அனுபவ நடைமுறை தான் எப்போதும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறது. படிக்கத்துவங்கியதும், திறந்துவைத்திருக்கிற புத்தகம் தன்னை மட்டுமே எனக்குத் திறந்து வைத்திருக்குமானால், அஃதொன்றும் எனக்குச்சிறந்த புத்தகமாகிவிடாது. ஒரு புத்தகம் தன்னைத்தவிர வேறு பல புத்தகங்களையும்,நினைவுகளையும் எனக்கு திறந்து காட்ட வேண்டும்.அப்படி,எனக்கு வேறு வேறு உலகங்களையும் உணர்வுகளையும் தராத புத்தகங்களுடன் நான் தொடர்ந்து பயணம் செய்வதேயில்லை.தன்னையும் திறக்க மறுத்து, “எங்கே?...உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா ?”...என்று என்னோடு மல்லுக்கு நிற்கும் புத்தகங்களோடு நான் சகவாசம் வைத்துக்கொள்வதேயில்லை அவைகளிடம் இருந்து நான் விலகிப்போய் விடுகிறேன்.ஒரே ஒரு கவிதைக்கு கூட இந்த அளவு கோலைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு முறைக்கு இருமுறை ஏன் பல முறை வாசித்த பிறகும், பல்லைக் கட்டிக்கொண்டு இறுகி நிற்கும் படைப்புகளுக்குத் தனியே சில வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் நான் எப்போதும் இல்லை. என் “அறியாமையை”ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த அவமான உணர்வும் ஒரு போதும் வந்ததில்லை, வாங்கிவைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கப் படுவதற்காகக் காத்திருக்கும் போது,என்னோடு மல்லுக்கட்டும் புத்தகங்களோடு நான் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும். புரியாத ,விளங்காத ,திறக்காத புத்தகத்தோடு உறவாடுவது , மனதுக்குப்பிடிக்காத பெண்ணோடு /ஆணோடு குடும்பம் நடத்துகிற கொடுமைதான். புத்தகங்களைப் பற்றி எழுத இன்னும் நிறையக் கிடக்கிறது..
இந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்களில் பங்கேற்க வாய்த்தது , “வாய்த்தது” என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு புத்தகம் பவா.செல்லத்துரையின் “19.டி.எம்.சாரோனிலிருந்து .இன்னுமொன்று ஆர். விஜயஷங்கரின் “அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய் தான் இருக்கின்றன”


முன்னதன்வெளியீட்டு விழா திருவண்ணாமலையில். பின்னதன் வெளியீட்டு விழா சென்னையில்.திருவண்ணாமலையில் திறந்த வெளியிலும் ,சென்னையில் தேவநேயப்பாவாணர் அரங்கிலும் நடந்தது. இரண்டுமே வேறு வேறு வகையான வாசகர்களும்,பார்வையாளர்களும் நிரம்பிய நிகழ்ச்சிகள். பவா.செல்லத்துரையின் புத்தகமும் விஜயசங்கரின் புத்தகமும் முற்றிலுமான வேறு வேறு அனுபவங்களின் தளத்தில் எழுதப்பட்ட நூல்கள் என்ற போதும் ,இரண்டிலும் ஒரு பொதுவான அம்சமாக ,இருவருமே தங்களது தந்தைகளின் நினைவுகளைப் பதிவு செய்திருந்தது மிக முக்கிய மானதாக இருந்தது. இரண்டுமே வாசிப்பில், நமக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிற புத்தகங்கள்.


இரண்டு விழாக்களிலும், நானும், பங்கேற்ற மற்றவர்களும், படைப்பாளிகளும் பேசியதன் மூலம் உருவான மனோநிலை உருண்டு திரண்டு உருகாத பனிச் சிற்பம் போலாகி விட்டது. அந்த இரண்டு உருகாத பனிச் சிற்பங்களும் ,இப்போது என் எழுது மேசையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் குளிர்ச்சி எங்கும் பரவி ,பல வண்ணங்களை உருவாக்கியபடியே இருக்கிறது . எல்லாப் புத்தக வெளியீட்டு விழா அனுபவங்களும் அதனதன் அனுபவ அளவுக்கு ஏற்ப உருவான , உருகாத பனிச் சிற்பங்களே .

Monday, May 2, 2011

“வார்த்தைச் சித்தர்”

பாரதி விழாவில் பேசக் கூப்பிட்டார்கள். சம்மதித்தேன். உங்களோடு இன்னுமொருவரும் பேசப்போகிறார் என்றதும், யாரென்று கேட்டேன். ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான் என்றார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் தான் நிகழ்ச்சி. கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் வலம்புரிஜானை அழைத்துக்கொண்டு, சாலிகிராமத்திலிருக்கும் என்னையும் கூப்பிட்டுக் கொண்டு, ஒரே காரில் கல்லூரிக்குப் போவதென்பது பயணத்திட்டம்.

“முதலில் என் வீட்டுக்கு வந்து விடுங்கள். இங்கிருந்து ஜான் வீட்டுக்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து, கல்லூரிக்குப் போய் விடலாம். அவர் வந்து என் வீட்டு வாசலில் இரண்டொரு நிமிடங்கள் கூடக் காத்திருப்பதை நான் விரும்பவில்லை” என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.

தியம் ஒன்றரை மணி போலக் குறிப்பிட்ட நாளில் கார் வந்தது. நேரே இப்போது அவர் வீட்டுக்குப் போகிறோமா? என்று கேட்டேன் . “இல்ல சார் அவர ஏற்கனவே pick up பண்ணிட்டோம்” என்றார் வந்தவர். “கீழ கார்ல அவரு இருக்காரா?” என்று பதறினேன்.” இல்ல சார்... வடபழனி பொன்னுச்சாமியில சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு... நாம போயிச் சாப்பிட்டுட்டுப் போகலாம் என்றார்கள். பொன்னுச்சாமிக்குப் போனோம்... வியர்க்க, விறுவிறுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.வணக்கம் சொன்னேன். நீங்க சாப்பிடலையா? என்று சைகையால் கேட்டார். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று சைகையிலேயே பதில் சொன்னேன். கீழே காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

த்து நிமிடத்திற்குள் படியிறங்கி வந்தார். சிரமப்பட்டு நடப்பது போலத் தெரிந்தது. எங்கள் இருவருக்கும் இதற்குமுன் தனிப்பட்ட அறிமுகமில்லை என்றாலும், நான் அவரை நன்கு அறிவேன் என்பதால், இதற்குமுன்பு நான் ரசித்துக் கேட்ட அவரது பேச்சு ஒன்றைப் பற்றி அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். எந்த சுவாரசியமும் இன்றி அதை கேட்டுக்கொண்டிருந்தார் விருப்பமின்மையின் சாயல் அவரது முகத்தில் தெரிந்தது போல எனக்கிருந்தது. எனினும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசிக்கொண்டு இருந்த போதே, ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமான இடை வெளியில் அவர் உறங்க ஆரம்பித்து இருந்தார். மிகுந்த சங்கடமாகி விட்டது எனக்கு. வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.

ல்லூரிவந்தது. அவரை எழுப்பினார்கள். வாசலில் கல்லூரியின் தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் என்று ஒரு பெரும் கூட்டம் திரண்டு நின்றிருந்தது. அவரைத்தான் வரவேற்றார்கள். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரது பிரபலத்தை நான் உணர்ந்திருந்தேன்.

ன் தனிமையைப் போக்க இரண்டு ஆசிரியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். ஜானைக் கல்லூரித் தாளாளரின் அறைக்குள் அழைத்துப் போனார்கள். நான் சுற்றிப்பார்க்கப் போனேன். இப்போதும் ஜான் சிரமப்பட்டுத்தான் நடந்து போனார். தூக்கச் சடவாக இருக்குமென்று கருதிக் கொண்டேன்.

நிகழ்ச்சியைத் துவங்க வேண்டுமென்று, என்னை அழைத்தார்கள். மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டிருந்தார்கள். என்னை முதலில் பேச அழைத்தார்கள் அப்போதே, தன் இருக்கையில் சாய்ந்து கண்களை முடிக்கொண்டிருந்தார் “வார்த்தைச் சித்தர்”. லேசாக முன்னும், பின்னும் தொட்டிலை ஆட்டுவது போல அசைந்து கொண்டேயிருந்தார். உறக்கம் வருவதற்காகப் படுத்துக்கொண்டு, கால்களை ஆட்டுகிற பழக்கம் எனக்கு இப்போதும் உண்டென்பதால், வலம்புரிஜான் உடலை ஆட்டிக்கொள்கிறார் என்று எனக்குப்பட்டது. ஒருவர் பேச ஆரம்பிக்கும் போது, உடன் பேச வந்த இன்னொருவர் இப்படிக் கண்களை முடிக்கொண்டு, தலையை முழுவதுமாகக் குனிந்து கொண்டு, எப்போதாவது உடம்பை மட்டும் முன்னுக்குப் பின் அசைத்துக் கொண்டுடிருப்பது மிகுந்த நாகரீகமற்ற செயலாக எனக்குத் தட்டுப்பட்டது. கோபம் முன் நெற்றியில் இருந்து மூளையின் மையம் வரை ஏறியது. உச்சந்தலையில் உஷ்ணமாய்ப் பரவியது. உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன்.

ரம்பம் முதலே எனக்கு அவர் செய்த அவமதிப்பு, மிகச்சிறப்பாக பேச வேண்டும் என்று என்னுள் வெறியூட்டிக் கொண்டிருந்தது. சன்னதம் கொண்டு, பாரதியின் உன்னதங்களை, அவைக்கு முன் அணி வகுக்கச் செய்தேன். தொடர்ந்த கரவொலிகளால், மாணவர்கள் எனக்கு மேலும் களியூட்டினார்கள். பலத்த கை தட்டலுக்கும் கூடக் கண் திறந்து பார்க்கவில்லை வலம்புரிஜான். “சே... என்ன மனுஷன் இந்த ஆள்?” என்று மனசுக்குள் கோபம் புரண்டது. நாம் மதிக்கிற ஒரு மனிதன், நாம் பேசுவதைக் கேட்டு, ஒரு வார்த்தை பாராட்டினால் எத்தனை மகிழ்சியாக இருக்கும்? இல்லை... பிறரை அஙகீகரிக்காத ஆளா?... சே... திரும்பிப்போகிறபோது இந்த மனுஷனோடு சேர்ந்து காரில் போகக் கூடாது என்று மனதுக்குள் உறுதி கொண்டேன்.

ந்த எண்ண ஓட்டங்களுக்கு இடையிலும், எனக்கு இட்ட பணியைத் திறம்படச் செய்தேன். கோடைமழை போல மாணவர்கள். கைதட்டினார்கள். ஊஹும்... அதற்கும் அசைந்துகொடுக்காமல், கண்களை முடிக்கொண்டு, தலையைக் கவிழ்த்தபடியே இருந்தார் அந்த மனிதர். மாணவர்களின் கைதட்டல் சிலநொடிகள் நீடித்தது.” இது போதும்... இந்த ஆள் பாராட்டி என்னவாகப்போகிறது...” என்கிற நினைப்புடன், பெருமிதமாகக் கம்பீரமாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

டுத்ததாக, வலம்புரிஜானைப் பேசக் கூப்பிட்டார்கள். தனக்கே உரித்தான, கவித்துவமான மொழிநடையில், கனத்த, கரகரத்த குரலோடு பேசத்துவங்கி, அவையில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி முடித்தார் ஜான். பிறகு தொடர்ந்தார் “அன்றாடம் மருத்துவர்கள் தரும் மருந்துகளாலும், மாத்திரைகளாலும் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடுமையான உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது எனக்கு. அவ்வப்போது திருட்டுத்தனமாக, வாய்க்கு ருசியாக, வீட்டுக்கும் மருத்துவருக்கும் தெரியாமல் சாப்பிட்டுக்கொள்கிறேன். வாரத்திற்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்து கொள்கிறேன், இன்று காலையில் கூட டயாலிசிஸ் செய்து கொண்டேன். மிகுந்த களைப்பும், சோர்வுமாக இருக்கிறது. இந்த உடல், இவ்வளவு நோய்களைக் கொடுத்து, அந்தத் துன்பங்களையெல்லாம் சுமந்து கொண்டே ஏன் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்று இறைவனிடம் பல முறை கேட்டிருக்கிறேன். அந்தக் கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது” என்று கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். மெதுவாக தலை சாய்த்து என்னைப் பார்த்தார்.

ன்னைப் பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.” தம்பீ...யாரடா நீ? எங்கே இருந்தாய் இத்தனை காலம்?... எப்படியடா என் கண்களில் படாமல் போனாய்?... எப்படியடா என் காதுகளில் உன் குரல் விழாமல் போனது....? எப்படியடா ஒருவன் கூட உன்னைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை... இப்போது தெரிந்து விட்டதடா தம்பி... உன் பேச்சை ஒரு முறையேனும் நான் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இது நாள் வரை என்னை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறான்...” அரங்கம் அதைக் கைதட்டி அங்கீகரித்து, வழி மொழிந்தது. என் கண்களில் கண்ணீர் திரண்டது. தொடர்ந்து பேசினார். வாய்ப்புக்கிடைக்கிற போதெல்லாம், தம்பிசொன்னது போல... தம்பி குறிப்பிட்டது போல... தம்பி சுட்டிக்காட்டியது போல... தம்பி வெளிச்சமிட்டது போல... என்று வார்த்தை களால் சித்து விளையாடி முடித்தார் வலம்புரி ஜான்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஏற்கெனவே நான் முடிவு செய்த வண்ணமே, அவருடன் காரில் போகவில்லை. ஏனெனில் அவரோடு பயணம் செய்யும் தகுதி எனக்கில்லை என்று அந்தக் கணம் உணர்ந்தேன். தன்உயிரை முன் வைத்து என்னைப் பாராட்டிய அவருக்கு, என்றேனும் ஒரு நாள் நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ரண்டாண்டுகள் சந்திக்கப் போகவில்லை. ஒருசந்தர்ப்பம் கூட வாய்க்கவில்லை. மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்த ஒரு நாளில், நண்பர்கள் மூலம் அவரது மரணச் செய்தி வந்தது. அஞ்சலி செலுத்த, நேரில் போகவும் இயலவில்லை.

ன் உயிரை முன்னிறுத்தி, என்னை வஞ்சகமின்றி, மனமார வானளாவப் புகழ்ந்த அந்த மனிதனது சொற்களை உயிருள்ள வரை மறக்க இயலாது. அந்தக் கணம் என் கண்களில் பெருகிய கண்ணீர், கண்ணுக்குள்ளேயே வரம்பு கட்டிக் கலங்கிக் கொண்டிருந்தது. ஒரு துளிக்கூட கண்ணிலிருந்து வெளியேறவில்லை ஒரு வேளை அது வெளிக் கிளம்பினாலும் அந்தக் கண்ணீர்த் துளியை என் இரு கைகளாலும் ஏந்துவேன். அதை என்றும் அவிழாத சிறிய ரோஜா மலராக மாற்றுவேன். அதை வலம்புரிஜானின் கல்லறை மீது சமர்ப்பணம் செய்வேன்.