Monday, July 19, 2021

பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar


இன்று 19 ஜூலை. இதே நாளில் 1969 ஆம் ஆண்டு, தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கியது இந்திய அரசு. அதை நினைவு கூறுகிறோம். இன்று, நாட்டுடமையான நிறுவனங்கள் தனியாருக்கு விலைபேசப்படுவதை எதிர்க்கிறோம். வெறுக்கிறோம். விதை நெல்லை விற்றுத் திண்பது பாவம். குற்றம். தீமை. பெற்ற மகளும், பொதுச் சொத்தும் | பாரதி கிருஷ்ணகுமார் | Bharathi Krishnakumar







Friday, July 16, 2021

Enru thaniyum ?| Bharathi krishnakumar |என்று தணியும் ...? | பாரதி கிரு...

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி அந்தக் கொடும் சம்பவம் நிகழ்ந்தது. இன்றோடு பதினேழு ஆண்டுகள். கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில், பற்றி எரிந்த தீயில் 94 குழந்தைகள் மாண்டு போயினர். 47 பெண் குழந்தைகள். 47 ஆண் குழந்தைகள். அது பற்றிய ஆவணத் திரைப்படமே இது. என்று தணியும்...? என்று இதற்குத் தலைப்பிட்டோம். இந்த ஆவணத் திரைப்படம் சொல்லும் செய்திகளுக்கும் மேலாக, இதன் உருவாக்கம் பற்றிச் சொல்லுவதற்கு என்னிடம் நிறையச் செய்திகள் இருக்கிறது. அவைகளை அடுத்தடுத்து எழுதுகிறேன். பிறர் துன்பத்தில் பங்கேற்கும் மனித கடமைகளில் ஒன்றே இந்த ஆவணப் படத்தின் உருவாக்கமும், அதனை ஒருவர் பார்ப்பதும் ஆகும். எனவே நேரம் ஒதுக்கிச் சிந்தனையில் இருந்து இந்த ஆவணப் படத்தை முழுவதுமாகப் பாருங்கள். முழுவதும் பார்க்க "நேரம்" இல்லாதவர்கள் அருள் கூர்ந்து பார்க்காமலேயே இருந்து கொள்ளுங்கள். இந்த ஆவணப் படத்தின் சில பகுதிகள் மிகுந்த துன்பம் தருவதாக இருக்கும். சில காட்சிகளைப் பார்ப்பதற்கு இயலாது, மனம் பரிதவித்துப் போகும். தங்கள் செல்வங்களை இழந்து தவிக்கும் அந்த பெற்றோர்களின் துன்பத்தை விட, படத்தை உருவாக்கிய, பார்த்த, பார்க்கப் போகிற நமது துயரம் மிக மிகக் குறைவானது. எந்த செய்தித்தாளும், தொலைக்காட்சியும், விசாரணைக் கமிஷன்களும், நீதிமான்களும் சொல்லாத பேசாத எடுத்துரைக்காத உண்மையை இந்த ஆவணத் திரைப்படம் பேசுகிறது. உண்மைகளை அறிந்துகொள்ள மறுத்து விலகிச் செல்வது, கொடூரக் குற்றங்களுக்குத் துணை போவதே ஆகும். நடந்தது விபத்து அல்ல விதிமீறலால் நடந்த படுகொலை. கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சோகங்களிலேயே பெரியது புத்திர சோகம். அது தீராது. விலகாது. அதைப் போக்கும் வல்லமை, எல்லாம் வல்ல காலத்திற்கும் இல்லை. துன்புறும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி மன்னிப்புக் கோருகிறேன். -பாரதி கிருஷ்ணகுமார்

Monday, June 14, 2021

மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...

 மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...


1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 


என் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட குழு தேர்தலில் போட்டியிட்டது.  ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் சங்கம் நடத்திக்கொண்டு இருந்தவர்களை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டோம். 

அவர்கள் அனைவரும் தோற்றார்கள் . பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாங்கள் அனைவரும் வென்றோம்.


வெற்றி பெற்ற போதிலும் சங்கப் பணிகளைத் துவக்க முடியவில்லை . ஏன் ? ஆண்டு தோறும் மார்ச் மாத முடிவில் தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டிய வரவு செலவு அறிக்கையை முறைப்படி சமர்ப்பிக்க முந்தைய சங்க நிர்வாகிகள் தவறி இருந்தனர் . எனவே பதிவாளர் சங்கத்தின் பதிவு எண்ணை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தார் .எனவே  முறையான பதிவு எண் இல்லாததால் சட்ட ரீதியாகச் செயல்படும் உரிமையை சங்கம் இழந்திருந்தது . 


நியாயமாகப் பார்த்தால் பதிவு எண்ணை இழந்த ஒரு சங்கம் தேர்தலை நடத்த முடியாது. நடத்தினாலும் செல்லாது .


ஆனால் பதிவு எண் இல்லாமலேயே அவர்கள் தேர்தலை நடத்தினார்கள் . தெரிந்தே தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன் . எனக்குத் தெரிந்ததை யாருக்கும் சொல்லாமல் வைத்துக் கொண்டேன்.உண்மையில் சட்டப்படி பார்த்தால் அந்தத் தேர்தலே செல்லாது . 


செல்லாத தேர்தலில் வென்றதை செல்லுபடியாக்கும் பணிகளில் ஈடுபட்டேன் . அதே தேதியில் ஒரு பொதுக்குழு நடந்ததாகவும் , அந்தப் பொதுக்குழுவில் நாங்கள் பதினைந்து பேரும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் "முறைப்படி" ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன . 


அன்று ( செப்டம்பர் 16- 1984) பங்கேற்றவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட வருகைப் பதிவேடு வேண்டுமென்று ஏற்கெனவே சங்கம்  நடத்தியவர்களிடம் சென்று கேட்டேன் . ஆளுக்கொரு திசையில் என்னைப் பந்தாடினார்கள் . முந்தைய சுற்றறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டேன் . அலைய விட்டார்கள் . இரண்டு மாதம் இதே வேலையாக நானும் அருமை நண்பன் பழையபேட்டை மணியும்  அலைந்தோம் . ஒரு துண்டுக் காகிதம் கூடத் தராமல் இழுத்தடித்தார்கள் . 


எனவே எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குவது என்று தீர்மானித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பணியைத்  தவிர மற்றவர்களுக்கு இந்த சட்டப் பிரச்னைகள் பற்றி ஏதும் சொல்லவேயில்லை . மறைப்பது என் நோக்கம் அல்ல . எதிர்மறை விளைவுகள் வந்து விடக்கூடாது என்கிற கவனத்தில் இருந்தேன். அதனால் பகிர்ந்து கொள்ளாதிருந்தேன் .


வருகைப் பதிவேடும் முறையாகத் "தயாரிக்கப்பட்டது " பொதுக்குழு நடந்து நாங்கள் தேர்வு பெற்றது தொடர்பான அனைத்தும் தயாரிக்கப்பட்டது .

அதன்படி 16.09.1984 அன்று சாத்தூரில் நடைபெற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் பொது  மாநாடு  1."பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் " என்றொரு சங்கம் தொடங்குவது எனப் பொதுக்குழு தீர்மானித்தது . 2.போட்டியிட்டவர்களில் பதினைந்து பேர் வெற்றி பெற்றதாக பொதுக்குழு அறிவித்தது.

3 . அதில் சங்கத்தை முறைப்படி பதிவு செய்ய ஏழு பேரைப் பொதுக்குழு தேர்வு செய்தது .


அனைத்தையும் சரிபார்த்து தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு விண்ணப்பம் செய்தேன் . அப்போது மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பதிவாளர் அலுவலகம் மதுரையில் காந்தி நகரில் இயங்கி வந்தது . பொதுக்குழு அதிகாரம் தந்திருந்த(?!) ஏழு பேரின் பெயர்களும் வரிசையாக எழுதப்பட்டு , அவர்களது கையெழுத்துடன் சங்கத்தைப் புதிதாகப் பதிவு செய்யும் மனுவும் பதிவாளருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டது. 


பதிவாளர் நாம் அனுப்பிய ஆவணங்களை ஆய்வு செய்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெயருக்கு ஒரு கடிதம் அனுப்புவார். அதை வங்கிக் கிளைக்கே அனுப்பினால் நாடகம் அம்பலமாகி விடும் என்பதால் சாத்தூரில் நம்பிக்கையான ஒரு முகவரி தேவைப்பட்டது. அருமை நண்பர் தோழர் ஜி மாரிமுத்து உதவினார் . அவரிடம் ஜுனியராகப் பணியாற்றிய வழக்கறிஞர் தோழர் சையது அகமதுவின் இல்ல முகவரியை சங்கத்தின் முகவரியாகத் தந்தேன் .


பொதுச் செயலாளர் , பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மே/பா . வழக்கறிஞர் சையது அகமது 36, பங்களாத் தெரு சாத்தூர் என்பதே சங்கத்தின் முதல் முகவரி.

நான் தந்திருந்த முகவரிக்குப் பதிவாளர் கடிதம் அனுப்பி இருந்தார் . அதன்படி ஏற்கெனவே மனுவில் கையெழுத்துப் போட்ட , சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்த ஏழு பேரும் நேரில் ஆஜராகிப் பதிவாளர் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். பிறகு தான் சங்கம் பதிவு செய்யப்பட்டு , பதிவு எண் வழங்கப்படும். அதற்குப் பிறகு தான் நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க முடியும். பேச்சுவார்த்தை நடத்த உரிமை வரும் . போராட்டங்கள் நடத்த முடியும். தொழில் தாவாக்களை தாக்கல் செய்ய முடியும். நீதி மன்றம் போக முடியும். மொத்தத்தில் அந்த எண்... பதிவு எண் வேண்டும்.


பதிவாளர் தனது கடிதத்தில் 1984 டிசம்பர் முதல் தேதி காலையில் பதினோரு மணிக்கு தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏழு பேருக்கும் முறையாக தனித்தனியாக தகவல் தரப்பட்டது . அனைவரும் விடுமுறை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . அன்றைய சந்திப்பின் முக்கியத்துவமும் முறையாக விளக்கப்பட்டு விட்டது அன்று பணியில் இருந்தது போன்ற பதிவுகள் இருந்தால் அது பிழையாகி விடும் என்றும் எல்லோருக்கும் சொல்லப்பட்டு விட்டது .


மதுரையில் ஒரு பொது இடத்தில் சந்தித்து அங்கிருந்து பதிவாளர் அலுவலகம் போவது என்று திட்டமிட்டேன் . நேராகப் பதிவாளர் அலுவலகத்தில் சந்திப்பது என்ற யோசனை நிராகரிக்கப்பட்டது.

ஏனெனில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி யாருடைய வாயையும் பதிவாளர் "கிண்டி " விடக்கூடாது என்பதால்  சந்திப்பதற்கான வேறு பொது இடம் தேர்வு செய்யப்பட்டது.


மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கும் , அப்போதைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கும் நடுவில் அவிழ்த்துப் போடப்பட்ட நீண்ட கோவணம் போல ஒரு பாதை இருந்தது . மலமும் சிறுநீரும் கலந்து பெருகிக் கிடக்கும் அந்த நீண்ட கோவணத் தெருவின் இறுதியில் , இடது பக்கம் திரும்ப "திடீர் நகர்".


திரும்பி நூறடி நடந்ததும் வலது பக்கத்தில் மூலையில் மின்வாரியத் தொழிலாளர் சங்கம்.  VMS என்றழைக்கப்பட்ட தோழர் V . மீனாட்சிசுந்தரம் அங்கு பொறுப்பில் இருந்தார் 

அதை ஒட்டியே வலது புறம் திரும்பினால் இருபதடி கடந்ததும் இடது பக்கத்தில் பாண்டியன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம். இரண்டு சங்கங்களும் இந்திய தொழிற்சங்க மையத்துடன்(CITU) இணைக்கப்பட்டவை.

சாலையில் இருந்து நான்கு அங்குலப் பள்ளத்தில் இருந்த அந்த அலுவலகத்தின் வாசலுக்கு நேரே அமர்ந்து இருப்பார் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட தோழர் எஸ். மன்னார்சாமி . இடது கையில் எப்போதும் சிசர்ஸ் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.  உரையாடும் போது உள்ளிருந்து புகை வாயில் கசிந்து கொண்டே இருக்கும்.  பிறருக்கு இடையூறு இல்லாமல் முகத்துக்குப் பக்கத்திலேயே புகையை ஊதிக் கொள்வதால் , கண்கள் புகைச்சல் பொறுக்க மாட்டாமல் பெரும்பாலும் சிறுத்து சுருங்கிக் கிடக்கும். அவரது கண்ணுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் புகை நின்று அசைந்தாடிப் பின் வெளியேறும்.


அவரைத் தெரியாத போக்குவரத்துத் தொழிலாளி இருக்க ஏலாது. அவரைத் தெரியாத அதிகாரிகளும் இருக்கவே முடியாது. நிர்வாகங்கள் தரும் குற்றப் பத்திரிக்கைகளைத் தவிடு பொடி ஆக்குவார் . கோப்புகளைப் படித்தபடி, புகை பிடித்த படி , புகை பிடித்த படி , கோப்புகளைப் படித்தபடி அவர் நிர்வாகத்திற்குத் தர வேண்டிய பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார். தட்டச்சில் அதை அடித்துக்கொண்டே இருப்பார்கள். தட்டச்சு ஓசை கூட நிற்கும் . நகரும். டிக்டேஷன் நிற்காது. அவர் வென்ற வழக்குகள் எல்லையற்றவை. தட்டச்சு ஓசையும் , கரகரத்த குரலும், முகம் சுற்றித் தவழும் புகையும் கொண்ட SM எப்போதும் தீவிரமான செயல்பாட்டுத் தன்மை கொண்டவராக இருந்தார். எனில் அவருக்கு நகைச்சுவை உணர்வே இருக்காதா என்று கேட்டு விடாதீர்கள் . ஒரு சிறு வறட்டு இருமலுடன் குலுங்கிக் குலுங்கி வலது கை விரல்களை மேசையில் தட்டிச் சிரிக்கும் SM ... பகடி செய்வதில் அசகாய சூரன் . மெத்தப் படித்த அதிகாரிகளின் மூடத்தனத்தை அவர் பகடி செய்து சிரிப்பதைக் கேட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.


அந்த அலுவலகத்தில் தான் நாங்கள் எல்லோரும் சந்திப்பது என்று தீர்மானித்தோம் 

அன்றைக்கு எனக்குப் பிறந்த நாள் . அதை யாருக்கும் சொல்லவில்லை. நான் காலையிலேயே முன்னதாகவே வந்திருந்தேன். இலக்கிய நிகழ்ச்சிகள் , பொது மேடைகள் சிலவற்றில் எனது பேச்சைக் கேட்டு இருந்ததால் SM என் மீது கொஞ்சம் பிரியமாக இருப்பார். நான் எஸ் ஏ பெருமாளின் மாணவன் நான் என்பதும் அவரது அன்புக்குக் கூடுதல் காரணம். நான் அவரைப் போலவே தீவிரமான புகை பிடிக்கிறவன் என்பதாலும் அவருக்கு என்னைப் பிடித்திருக்கலாம். பதிவுக்குப் பெயர் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தார்கள். பத்து மணிக்குள் நான்கு பேர் வந்து விட்டார்கள் . மீதமுள்ள மூவருக்காக காத்திருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் "என்ன கூட்டம்" என்று விசாரித்தார் SM. நான் சுருக்கமாக விளக்கமாகச் சொன்னேன் .  "முதல்ல நம்பரை வாங்கீருங்க ... அதுக்கு அப்புறம் தான் வாயைத் தொறக்கணும் " என்று சொல்லிவிட்டுத் தோள்கள் குலுங்கப் புகை படர்ந்து முகமெங்கும் மகிழ்ச்சி பரவச் சிரித்தார் SM.


PGBEA என்று  பின்னாளில் அறியப்பட்ட Pandian Grama Bank Employees Association இன் பதிவுக்கும் மன்னார்சாமிக்கும் என்ன சம்பந்தம்....


அதைச் சொல்வதற்கு முன் ஒரு தகவலைச் சொல்லி விடுகிறேன்.


அந்தப் புகழ் பூத்த அருமைத் தோழர் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ் . மன்னார்சாமி தனது 95 ஆவது வயதில் கடந்த 27 05 2021 அன்று உடல்நலக்குறைவால் மறைந்தார்.அவரது நினைவைப் போற்றுகிறேன். PGBEA சார்பில் அவருக்கு எழுந்து நின்று தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் .


RMD / 360  என்கிற பதிவு எண் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு கிடைக்க வழியும் வகையும் செய்தது SM...

என்ன செய்தார்...

எப்படிச் செய்தார் ...


தொடர்கிறேன்.


- பாரதி கிருஷ்ணகுமார்


"ஒரு சிறு சேமிப்புக் கணக்கு"

தொடரின் இடையில் ஒரு பகுதி .

Saturday, June 12, 2021

அக்காவுக்கு அஞ்சலி

 

இரண்டாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி என் உடன்பிறந்த சகோதரிகளில் ஒருவர், திருமதி கனகலட்சுமி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மூத்தவர் மதுரையில் மாரடைப்பால் காலமானார்.

என்னோடு பிறந்தவர்கள் மூவர். மூவரும் பெண்கள். மூவரும் எனக்கு மூத்தவர்கள் . கனக லட்சுமி , விஜய் லட்சுமி , சாந்த லட்சுமி என்பது அவர்களது பெயர்கள் . எங்கள் இளமைக்காலம் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தது. நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் . ஒற்றுமையாகவே வளர்ந்தோம்.

எனக்குப் பன்னிரெண்டு வயதான போது மூத்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மதுரையில் அலங்கார் திரையரங்கிற்கு அருகில் இருந்த ஶ்ரீ சோலை முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது . மாப்பிள்ளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்தார். மாதச் சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளை என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது . சும்மா சொல்லக்கூடாது ... முப்பது பவுன் போட்டு எல்லா சீரும் செய்து மிக மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தினார் அப்பா.

அப்புறம் மற்ற இருவரும் அதே போல சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொண்டு போனார்கள் .

நான் தான் சரியாகப் படிக்காமல் , வீடு தங்காமல், எல்லா வகையான பழக்க வழக்கங்களும் கொண்டவனாக மாறி இருந்தேன் . என் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தான் எல்லோருக்கும் ஒவ்வாமை தந்ததே தவிர , எந்த சமூக விரோதச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை என்பதை அனைவருமே அறிந்து வைத்திருந்தார்கள் .

எனவே, திருமணமாகிப் போன எனது சகோதரிகளின் இல்லத்திற்கு எப்போது போனாலும் நன்கு உபசரிக்கப்பட்டேன் . குறையொன்றுமில்லை.

ஆண்டுகள் கடந்து , ஆளுக்கொரு திசையில் வாழ்ந்தாலும் எங்களுக்குள் பகைமை இருந்ததில்லை .
இப்போது சில ஆண்டுகளாக அந்த உறவில் கொஞ்சம் பின்னடைவு உண்டாகி விட்டது. அது சீர்ப்படுமா அன்றி சீர்ப்படாமலே காலம் கடந்து விடுமா என்பது காலத்திற்குத் தான் தெரியும்.

சரி ... துவங்கிய இடத்திற்கு வருகிறேன் . மதுரையில் அக்கா இறந்த அன்று நான் சென்னையில் இருந்தேன். அக்காவின் கணவர் நான்கு ஆண்டுகள் முன்பே இறந்து போயிருந்தார் . அக்கா மன உறுதி நிறைந்த மனுஷி . அவர் நடத்தி வந்த நிறுவனங்களைத் தானெடுத்து நடத்தி வந்தார் . மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டார் . மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு இயல்பாகத் திரும்பி இருந்தார் . வழக்கமான மாதாந்திர  பரிசோதனைக்காக செப்டம்பர் முதல் தேதி மாலை மருத்துவமனைக்குப் போய் இருக்கிறார் . ஆட்டோவில் போய் இறங்கி நடந்து மருத்துவ மனைக்குள் போய் இருக்கிறார். மருத்துவரைப் பார்க்க பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார். உடன் துணைக்கு வந்த பெண்ணிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாகச் சொல்லி ,நாற்காலியிலேயே மயங்கிச் சரிந்திருக்கிறார். பார்த்தவர்கள் பதறி மருத்துவர் வந்து பரிசோதிப்பதற்குள் உயிர் பிரிந்திருக்கிறது .

எனக்குத் தகவல் வந்தபோது இரவு 7மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்தேன். இரவெல்லாம் உறக்கமில்லை. ஏனோ ஒரு துளிக்கூட கண்ணீர் இறங்கி வரவில்லை. துக்கம் அதிகமாகி தொண்டை அடைத்தது . ஒரு மணி நேரத்தில் தொண்டை வலிக்க ஆரம்பித்தது. நிறையத் தேநீர் அருந்தினேன். நிறைய்ய நிறைய்ய புகை பிடித்தேன்.

செப்டம்பர் 2 காலையில் மதுரை வந்து பிறந்த வீட்டுக் கோடிப் புடவை எடுத்துப் போட்டேன் . எப்போதும் பார்த்ததும் குமாரு என அழைக்கும் அக்கா ஐஸ் பெட்டிக்குள் பேச்சற்று மூச்சற்றுப் படுத்திருந்தாள். பிற்பகலில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மயானம் சென்று எரியூட்டியதும் , தயாராக நின்ற வாடகைக் காரில் ஏறி கோவைக்குப் புறப்பட்டேன் .

செப்டம்பர் 2 மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் கிக்கானி பள்ளி வளாகத்தில்  ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் , நமது நம்பிக்கை மாத இதழும இணைந்து நடத்தும் "வல்லமை தாராயோ "
என்னும் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சியில் தனியுரை - சிறப்புரை நிகழ்த்த ஒப்புக் கொண்டிருந்தேன் . மிக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனக்கும் தெரியும்.

இரண்டாம் தேதி காலை மதுரை வந்து சேர்ந்ததும் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் பேசினேன். அவர் தான் என்னை நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவர் தான் நிகழ்வின் பொறுப்பாளர் . சூத்ரதாரி ... எல்லாமே...
என் இழப்பை உணர்ந்து கொண்டு "சரி ... நான் பார்த்துக் கொள்கிறேன்
நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க " என்று கனிவோடு சொன்னார் .
நான் சொன்னேன் " நன்றி முத்தையா ... ஆனாலும் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நேரத்தைப் பொறுத்து எதையும் முடிவு செய்யலாம். மாலை வரை இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் . இங்கு நேரம் தள்ளிப் போனால் நான்  உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். எதுவானாலும் பிற்பகல் வரை காத்திருங்கள் " என்று சொல்லி இருந்தேன்.

மதுரையில் இருந்து புறப்பட்டதும் முத்தையாவுக்குச் சொன்னேன் . "6.30 மணிக்குள் கூட்ட அரங்கிற்குள் வந்து விடுவேன் . ஒருவேளை பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமானால் அதை மட்டும் சமாளித்துக் கொள்ளுங்கள் ... ஒரு வேண்டுகோள். அக்காவின் மரணச் செய்தியை நீங்கள் யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் " என்றேன். எனக்குத் தந்த வாக்குறுதியை முத்தையா காப்பாற்றினார்.

கோவை வந்து ஒரு விடுதியில் விரைந்து குளித்து உடைமாற்றி பத்து நிமிடத் தாமதத்தில்  அரங்கம் போய்ச் சேர்ந்தேன் . அரங்கம் நிறைந்த கூட்டம் . ஆயிரம் பேர் அமரும் அரங்கம் .காரில் இருந்து இறங்கியதும் என் கைகளை மிக மிக இறுக்கமாக பற்றிக்கொண்டு என் கண்களைப் பார்த்தார் முத்தையா. என் கண்கள் சிவந்திருந்தன . வறண்டு போய் இருந்தன. நான் முத்தையாவின் கண்களைப் பார்த்தேன் . கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. நான் ஒரு வறண்ட , மிக மிக வறண்ட புன்னகையை அவருக்கும் அங்கு நின்ற எல்லோருக்கும் தந்தேன்.

இரண்டொரு நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கி விட்டது . வரவேற்பு அறிமுகம் மரியாதை எல்லாமே தராசில் நிறுத்தது மாதிரி நடந்து ஏழு மணிக்கு என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.

ஒன்றரை மணிநேரம் பேசினேன் . கூட்டம் என்னோடு சேர்ந்து சிரித்தது.
கைதட்டிக் கொண்டாடியது . கண் கலங்கியது. ஜீவரசம் ததும்பும் பார்வையாளர்கள் நமது எல்லா ஊற்றுக்கண்களையும் திறந்து விடுகிறார்கள் . மலை அருவி போல நம்மை விழுந்து எழுந்து புரண்டோடச் செய்கிறார்கள் .நமக்குள் கோடி மின்னல்களை வெட்டி எழுப்புகறார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது . ஆனால் மனமெங்கும் அக்கா ... அக்கா ... அக்காவோடு வாழ்ந்தது பேசியது விளையாடியது எனக் காட்சிகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்ததை யார் அறிவார் ? கவிஞர் அபி எழுதியது போல் " பழத்தின் அழகைப் பாராட்டுவார்; உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாருணர்வார் ? "

நான் நிறைவு செய்யப் போவதை அவதானித்துக் கொண்ட நண்பர் முத்தையா ஒருவரை ஏற்கனவே மேடைக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பெண்மணி மேடையின் வலது புறத்தில் மறைந்து நின்றுகொண்டு நான் உரையை நிறைவு செய்யக் காத்திருந்தார். ஆனால் ,இதனால் நான் பேச்சை முடித்து விடக்கூடாது என்கிற கவனத்தோடு எல்லோரது உடல்மொழியும் இருந்தது. எனவே நிறைவாகப் பேசி நான் நிறைவு செய்தேன் .அரங்கம் நிறைந்த கரவொலி. நிறையப்பேர் எழுந்து நின்று கை தட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அந்தப் பெண்மணி ஒலிபெருக்கிக்கு முன் ஓடி வந்து " ஒரு முக்கிய அறிவிப்பு " என்றார்கள். நான் திகைக்க, அரங்கமே திகைக்க என் சகோதரியின் மரணச் செய்தியை அறிவித்தார்கள் . அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவரது ஆன்மா அமைதி பெறவும் ,நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் என்றார்கள்.

அரங்கம் முழுவதும் அமைதியில் உறைந்தது . ஆயிரம் பேரும் மௌனமாக அஞ்சலி செலுத்தினார்கள். நான் தடுமாறி எழுந்து நின்றேன். எங்கோ மதுரையில் பிறந்து வாழ்ந்து மறைந்த அக்காவுக்குக் கோவையில் ஆயிரம் பேர் தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
நேற்றில் இருந்து உள்ளுக்குள் பெருகிப் பெருகிச் சேர்ந்திருந்த கண்ணீர் சட்டெனக் கோடை மழை போலக் கொட்டியது.

அம்மா ... அம்மா ... அம்மா ...
அக்காவை எப்போதும் அக்கா என்று அழைத்ததில்லை .




Friday, June 4, 2021

அறிந்தே செய்த பிழை

இலக்கணத்தில் மொழிக்கு முதலில் என்றால் , இந்த இந்த எழுத்துக்களோடு சொற்கள் தொடங்கும் என்பதே ஆகும். உயிர்எழுத்துக்களோடு கூட க,த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங போன்ற மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அனைவரும் அறிவோம்.


இவை தவிர உள்ள இந்த எட்டு மெய்யெழுத்துக்களும் ( ட,ண,ர,ல,ழ,ள,ற, ன ) மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இந்த எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும் போது மட்டும் , இவை மொழிக்கு முதலில் வரும். அதாவது ட என்னும் எழுத்து,  ழ என்னும் எழுத்து என்று இந்த எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும், மொழி முதலில் இவை இடம்பெறும்.


தமிழர்கள் பிற மொழி பேசுபவர்களுடன் கலந்து பழகி வாழும் பண்பு கொண்டவர்கள். அவ்வாறு மற்றவர்களுடன் கொண்ட உறவினால் , பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப் பேச்சுத் தமிழில், தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.


அத்தகைய பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்யெழுத்துக்களும் சில இடங்களில் மொழி முதலில் வருகின்றன.


ராமன் , லலிதா முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவற்றை நமது மொழியின் இயல்புக்கும் இலக்கணத்திற்கும் ஏற்பத் தான் பயன்படுத்த வேண்டும்.

ர, ல போன்ற எழுத்துக்கள் மொழி முதலில் வருவதில்லை என்பதால் , அவற்றுக்கு முன் 'இ' என்னும் எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.

ராமன் ----- இராமன்

ரவி      -----. இரவி

லாபம் ------ இலாபம்

லாடம்  -----. இலாபம் 

சில இடங்களில் இ சேர்ப்பது போலவே 'அ' என்னும் எழுத்தும் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

சில இடங்களில் 'உ' சேர்ந்து வரும்.

ரங்கன் ---- அரங்கன்

ரோமம் ---- உரோமம். ... 

‌இவ்வாறு பிற மொழிகளில் இருந்து பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே பெயர்ச் சொற்கள் என்பதையும் நினைவில் இருத்த வேண்டும். பிற மொழிப் பெயர்ச் சொற்களைப் பயன்படுத்துவது போல, வினைச் சொற்களையும் பிற சொற்களையும் பயன்படுத்தக்கூடாது என்கிறது நமது இலக்கணம்.

‌கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தை மொழியாக்கம் செய்த போது , அனைத்து வடமொழிப் பெயர்களையும் , தமிழ் இலக்கண மரபிற்கு ஏற்ப மாற்றித் தான் எழுதினார் .

‌ராமன் ---- இராமன் 

‌லக்ஷ்மண் ---- இலக்குவன்

      ராவணன் ---- இராவணன்.


இந்த இலக்கணக் குறிப்பை நான் அறிந்திருந்த போதும், கீழவெண்மணி குறித்த எனது ஆவணப்படத்திற்கு இராமய்யாவின் குடிசை என்று பெயர் வைக்காமல் ராமய்யாவின் குடிசை என்று தான் பெயரிட்டேன்.

அறிந்தே பிழை செய்தேன் .


ஆனால், எதிர்பார்த்தது போலவே, என்மீது அன்பு கொண்ட , தமிழை முறையாகப் படித்த நண்பர் ஒருவர் , ஆவணப்படம் கையில் கிடைத்த அடுத்த நிமிடம் என்னை அழைத்தார்.


" Bk என்னது ... எடுத்ததுமே இலக்கணப் பிழை"


"என்ன பிழை "


" இராமய்யாவின் குடிசை என்று தானே இருக்க வேண்டும். ராமய்யாவின் குடிசை என்று ஏன் வைத்தீர்கள் ?"


" தெரிந்தே , அறிந்தே வைத்தேன்."


"என்ன சொல்றீங்க ? நீங்க தெரியாம செய்த பிழை என்றல்லவா ... நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

தெரிந்தே பிழை செய்யலாமா ? 

தெரிந்தே செய்வது குற்றமாகாதா ? "


நான் மௌனமாக இருந்தேன்.


" பதில் சொல்லுங்க " என்றார்.


44 உயிர்கள் அநீதியாகப் பொசுக்கப்பட்ட குற்றத்தின் முன்பு , ஒரு உயிரெழுத்து இல்லாமல் போவது குற்றமா ? என் அறச் சீற்றத்தை மொழியின் மீதும் , இலக்கணத்தின் மீதும் காட்டினேன்" என்றேன்.


அவர் மௌனமாக இருந்தார்



" பதில் சொல்லுங்க " என்றேன்.


"நீங்க செஞ்சது குற்றமில்லை"என்றார்.




Monday, May 17, 2021

..என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்

 என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம் !

திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...” என்று திமிர்ந்த ஞானச் செருக்கோடு பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.
உலகப் பொதுமறை என்பதன் பொருள், இவ்வுலகிலே இருக்கிற அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவுமான அறங்களை, நீதிகளை, நெறிமுறைகளை மறை போல உரைப்பதால் திருக்குறளை உலகப் பொதுமறை என்று கொண்டாடுகிறோம். இது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தும் சிந்தனையுமாகும்.
ஆனால், வேறொரு விதத்திலும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று நாம் உணர இயலும். அஃதாவது, திருக்குறள் ஏதேனும் ஒரு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பின்னர், மொழி பெயர்க்கப்பட்ட பிரதியை அம்மொழி அறிந்த ஒருவரிடம் வாசிக்கத் தருவதாகக் கொள்வோம். அவ்வாறு தரும்போது, இம்மொழி பெயர்ப்பு இந்தியாவிலே இருக்கிற தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் என்னும் நூலின் மொழி பெயர்ப்பு எனும் அறிமுகம் இல்லாமல் வாசிக்கத் தந்தால், வாசிக்கிறவர் அந்தப் படைப்பு தன் தாய் மொழியில் தனது வாசிப்புக்காக எழுதப்பட்ட புத்தகம் என்றுதான் திருக்குறளை உணர்வார். உலகின் எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும், அப்பிரதியை வாசிக்கிறவர் மூலநூலையே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு உலகத் தன்மைப் பெற்றது திருக்குறள். அதனாலும் அது உலகப் பொதுமறை என்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தமிழர், தமிழ்நாடு போன்ற சொற்களோ, பிரதேச, இன, மொழி அடையாளங்களோ இன்றி எழுதப்பட்ட பெருமைக்குரியது திருக்குறள்.
தமிழில் “திரு” என்னும் அடைமொழி, நான் அறிந்த வரையில், சமயம் சார்ந்த இறை வழிபாட்டுக்குரிய நூல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. திருப்பாவை, திருவெம்பாவை, திருமந்திரம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது. ஆனால், சமயச் சார்பற்ற, சமயம் கடந்த பெருமைக்குரிய திருக்குறள் மட்டுமே தமிழில் “திரு” எனும் அடைமொழியோடு சேர்த்து அழைக்கப்படும் ஒரே நூல். திரு என்றால் உயர்ந்தது, குறள் என்றால் அளவில் குறுகியது என்று பொருள்.
“மழித்தலும் நீட்டலும் வேண்டா...” என்ற குறளின் வழியேயும் “கொல்லான் புலாலை மறுத்தானை...” என்று துவங்கும் குறளின் வழியேயும் இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் அனைத்துச் சமயங்களின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் உறுதியான நிலைபாட்டை எடுக்கிறார் வள்ளுவர். அனைத்திற்கும் மேலாக “தெய்வத்தான் ஆகாதெனினும்...” என்று துவங்கும் குறளின் வழியே, தெய்வம் சாதிக்க முடியாததை, செய்திட முடியாததை தன் உழைப்பினால் மனிதன் சாதிக்க முடியும் என்று எழுதினார் திருவள்ளுவர். இக் குறள் எல்லாம் இறைவன் செயல், அனைத்தையும் அவனே ஆக்கி, காத்து அழிக்கிறான், அவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது, தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது என்று காலங்காலமாக நிலவி வரும் அனைத்து நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கையாக்கிவிடுகிறது. உழைப்பின் உயர்வை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்த பெருமை திருக்குறளுக்கே உண்டு. கடவுளால் இயலாததை உழைப்பு ஈட்டித் தரும் என்று பாடிய திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தும் பாடியிருக்கிறார் என்பதும் மனங்கொள்ளத் தக்கது.
உழைப்பின் சிறப்பை அறிந்து உணர்ந்ததாலேதான் வள்ளுவர் வேளாண்மையைச் சிறப்பித்துப் பாடுகிறார். வேளாண்மை இழி தொழிலாகவும், வேளாண் மக்கள் இழி சனங்களாகவும் கருதப்பட்ட காலத்தில், வேளாண்மையை உயர்த்திப் பேசிய ஒரே நூல் திருக்குறள். ஏதேனும் ஒரு தொழில் செய்துதான் இங்கு எல்லோரும் வாழ்கிறோம் என்றபோதும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...” என்று உழவின் சிறப்பை உயர்த்திப் பேசினார் வள்ளுவர். எத்தொழில் செய்வோர்க்கும், தமது உழைப்பால் உணவினை விளைவித்துக் கொடுத்து உதவுவதால் அவ்வுழவரே இந்த உலகத்தைத் தாங்கும் அச்சாணி என்று உணர்த்தினார் வள்ளுவர்.
அற நூல்களிலேயே காதலையும் காமத்தையும் வியந்துப் போற்றிப் பாடிய பெருமைக்குரியது திருக்குறள் மட்டுமே. அதனாலேதான், இல்லறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த வள்ளுவர், வியக்கத்தக்க விதத்தில் துறவின் பெருமையையும் காட்டிச் சென்றார். ஊழ்வினையைப் பாடிய வள்ளுவரால் தான் ஆள்வினைவுடமையையும் பாட முடிந்தது.
கல்வி கற்பது ஒரு அறமுடைய ஒழுக்கச் செயல் என்றபோதிலும், திருவள்ளுவர் கல்வியின் சிறப்பை அறத்துப்பாலில் பாடினாரில்லை. அதை பொருட்பாலின் துவக்கத்தில் வைத்தார். நேரிய வழியில் பொருளீட்டுவதற்கும், அதைப் பேணிப் பாதுகாப்பதற்கும் கல்வியே அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து அதனைப் பொருட்பாலில் கொண்டு சேர்த்தார். அதிகார வரிசையில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்கிற வரிசையை உருவாக்கி கல்வியின் சிறப்பை அனைவரும் உணரச் செய்தார்.
தமது படைப்பில், தாம் கூறியவை அனைத்தையும், அனைவரும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்கிற வறட்டுப் பிடிவாதமும் வள்ளுவருக்கு இல்லை. வள்ளுவர் என்பவர் யார்? அவர் எத்தகையவர்? எங்கு இருந்தார்? என்பதற்கான ஆதாரங்களோ, சான்றுகளோ நம்மிடம் இல்லை. எனவே, இச்சூழலில் படைப்பு மட்டுமே முதன்மை பெறுகிறது. தனது படைப்பை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இறுக்கமும் வள்ளுவருக்கு இல்லை. “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்...” எனும் குறளை எழுதியதன் வழியே அவரது கருத்துக்களையே விசாரணை செய்யவும், மாறுபடவுமான வாய்ப்பினை நமக்கு வள்ளுவர் தருகிறார். இது திருக்குறளின் ஆகச்சிறந்த ஜனநாயகப் பண்பைக் காட்டுகிறது. அதனாலேதான், திருக்குறளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட பல உரைகள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
“உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே
யிடுக்கண் களைவதா நட்பு”
பலர் கூடிய இடத்தில் ஒருவனுக்கு உடுத்திய ஆடை சடக்கென நெகிழ்ந்துவிட்டால் அப்பொழுது அவன் கை விரைவில் அவ்வாடையைப் பற்றி உடுத்தி அவனது மானத்தைக் காத்தல் போல, தம்மில் ஒருவனுக்குத் தீங்கு நேரும்போது உடனே உதவி செய்து அத்தீங்கை ஒழிப்பதே நட்புக்கு இலக்கணமாகும் என்றே இக்குறளுக்கு உரை எழுதப்பட்டிருக்கிறது. துன்பத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு மனதினும் விரைவாக கை முற்படுதலால் துன்பம் நீங்கும் என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த உரை அனைவருக்கும் ஏற்புடையதே ஆகும். ஆனால், மறுவாசிப்பில் இக் குறள் வேறு ஒரு பொருள் கொள்ளுதற்கான சாத்தியப்பாட்டை தன்னுள் சுமந்து நிற்கிறது. உடுக்கை இழந்தவன் என்னும் சொல் திட்டவட்டமான இறந்தகாலச் சொல் (past tense) . எனில், துன்பத்தில் இருப்பவன் தனது ஆடையை முற்றிலும் இழந்து நிற்கிறான் என்பதே சரியான பொருள். இந்த இடத்தில், அவையின் கண் அல்லது பலர் கூடிய இடத்தில் ஒருவனது ஆடை நெகிழ்கிற போது அவிழ்கிற போது என்னும் பொருள் தரக்கூடிய நிகழ்காலத் தொடர் (present continuous) சொற்களை வள்ளுவர் பயன்படுத்தவில்லை. எனவே, அவிழ்ந்துக்கொண்டிருக்கும் ஆடையை விரைந்து பற்றும் கரங்களை நட்புக்கு இலக்கணமாக வள்ளுவர் சொல்லவில்லை. மாறாக, முற்றிலுமாக ஆடையை இழந்த ஒருவனது கைகள், மானத்தை மறைக்கும் பணியைத்தான் செய்யும். எனில் தனக்கு இயல்பாக விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு மானங்காக்கும் பணிக்கு முன் வருகிறது கைகள். அதுபோல நண்பனுக்குத் தீங்கு வருகிறபோது தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை விட்டுவிட்டு நண்பனுக்கு உதவும் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவன் காட்டும் வழி. எனவே, உடுக்கை இழந்தவன் கை என்பது, விரைவை மட்டும் குறிக்கிற சொல் அல்ல. மாறாக பண்பையும் விரைவையும் ஒருசேர குறிக்கும் சொல்.
இங்ஙனம் வாசிக்கும்போதெல்லாம், ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் ஆற்றலோடு கூடிய படைப்பாகத் திருக்குறள் திகழ்கிறது. அதனாலேதான் “கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று சிறப்பித்தாள் அவ்வை. வெறுமனே குறளைக் கற்கிற ஒருவரால் குறளின் ஆழத்தை அறிய முடியாது. கல்வியின் துணை கொண்டு திருக்குறளை அறிவது ஒரு வழிமுறை என்றால், அறிவின் துணை கொண்டு திருக்குறளை அணுகுவது மற்றும் ஓர் அணுகுமுறை. பொருட்பாலில் கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் அதிகார வரிசையில் குறளை யாத்தபோதே கல்வி வேறு அறிவு வேறு என்று நமக்கு உணர்த்திய பெருமை திருக்குறளுக்கு உண்டு.
எந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் எழுதப்பட்ட இலக்கியம் என்று உணரத்தக்கதும், எந்த மொழியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கண்டறியப்பட முடியாத சிறப்பும் திருக்குறளுக்கு உண்டு என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த சிறப்பு திருக்குறளுக்கு உண்டு என்றபோதிலும் திருக்குறளின் சிறப்பு திருவள்ளுவர் அல்ல ; தமிழ் மொழியே என்று சிறப்பாக உணர முடிகிறது. தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இத்தனை பொலிவோடும் பொருளோடும் திருக்குறளை எழுத முடியாது என்றே நான் கருதுகிறேன்.
“இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்
இன்மையே யின்னா தது”
என்பதான இதுபோன்ற ஒரு குறளை (பல நூறு குறள்களை மேற்கோள் காட்ட இயலும்.) தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் உயிரோடும் ஓசையோடும் பொருளோடும் எழுதிவிட இயலாது.
ஒவ்வொரு முறை வாசிக்கிற போதும், அவ்வை சொன்னதுபோல் ஒவ்வொரு குறளுக்குள்ளும் ஏழு கடல்கள் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கிறது. எழுதப்பட்ட நாளில் இருந்து இன்று வரையிலும், எமது மொழியிலும் பிற மொழிகளிலும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது திருக்குறள். வரும் நூறு நூறு ஆண்டுகளிலும் அது வாசிக்கப்படும். புதிது புதிதாய் உரைகளும் பொருளும் தந்துகொண்டே இருக்கும். என் பள்ளிப் பருவத்தில் நான் வாசித்த திருக்குறள் அல்ல நான் இப்போது வாசிக்கும் திருக்குறள். தான் அப்படியே மாறாமல் இருந்துகொண்டு, வாசிக்கிறவனுக்குள் நிகழும் மாற்றங்களை உணர்த்திக்கொண்டே இருக்கிறது பிரதி. இந்தச் சிறப்பு உலகின் மகத்தான படைப்புகளுக்கு எப்போதும் உண்டு. அதனால் அவை என்றைக்கும் எப்போதும் எவராலும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களாக தனிச்சிறப்பைக் கொள்கின்றன. திருக்குறள், புனித விவிலியம், திருக்குரான், பகவத் கீதை, பாரதி பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி, காந்தியின் சுயசரிதை, லியோ தால்ஸ்தாயின் படைப்புகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் மற்றும் இவை போன்ற மகத்தான புத்தகங்கள் எப்போதும் வாசித்து முடிக்க முடியாத புத்தகங்களே!

- பாரதி கிருஷ்ணகுமார்.

Saturday, May 1, 2021

ஒரு முன்னுரையும் , மேதினிக்கு மே தின வாழ்த்துகளும் ...

 

அனைவருக்கும் உளம் கனிந்த மே தின
வாழ்த்துகள்
.


எழுத்து , பேச்சு , திரைப்படம் என்று இப்போதைக்கு நடப்பில் இருக்கும் மூன்று கலை வடிவங்களிலும் செயல்படும் நல் வாய்ப்பை இந்த வாழ்க்கை எனக்குத் தந்திருக்கிறது.

ஒரு மேடைப் பேச்சாளனாக எனது பொது வாழ்க்கை துவங்கியது . தொடர்ந்து நேரடியான அரசியல் சார்ந்த களப்பணிகள். பிறகு , ஒரு பொதுத்துறை வங்கியில் இருபதாண்டுகள் வங்கிப் பணியும் தொழிற்சங்கப் பணியும்.

எனக்கு சினிமாவைப் பற்றிய கனவுகள் ஏதும் இருந்ததில்லை. என் கனவிலும் சினிமா இருந்ததில்லை . ஆனால் தேர் ஓடுகிற திசைக்கு எதிர்த் திசையில் இழுக்கப்படும் தேரின் வடக்கயிறு போல நான் சினிமாவுக்குள் இழுக்கப்பட்டேன் .

அடுத்த இருபதாண்டுகள் சினிமாத் துறையில் .
இன்னும் களத்தில் இருக்கிறேன் . எழுதுகிறேன் . பேசுகிறேன் . திரைப்படத் துறையிலும் ஏதேனும் ஒரு பணியைச் செய்து கொண்டே இருக்கிறேன். இந்த அதிகாலையில் இதை எழுதும் வரை என் சக்திக்கு ஏற்ப இயங்கிக் கொண்டே இருக்கிறேன் .

எனது வாழ்க்கை தவறுகள் அற்ற வாழ்க்கை அல்ல . நிறையத் தவறுகள் செய்திருக்கிறேன் . ஏனெனில் எதையாவது செய்து கொண்டே , இயங்கிக் கொண்டே இருப்பது எனது இயல்பாக இருந்தது. எனவே வெற்றிகள் மாலைகளாக வந்ததும் உண்டு . எனது தவறுகள் பசித்த மலைப்பாம்பாகக் கழுத்தைச் சுற்றியதும் உண்டு .
எந்த இயக்கமும் இல்லாதவர்கள் , எந்தத் தவறும் செய்யாத புண்ணியர்கள். நான் புண்ணியன் இல்லை .If there is motion , there is friction ... என்கிறது விஞ்ஞானம். எனது அசைவுகள் காரணமாகவே உராய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன.எனக்கும், என்னோடு இருந்தவர்களுக்கும், பணியாற்றிய இயக்கத்திற்கும்.

தேர் சரியான பாதையில் போக , எல்லாத் திசையிலும் இழுக்கப்படும் தேரின் வடம் போல , வாழ்க்கை எல்லாத் திசையிலும் என்னை இழுத்து அடித்திருக்கிறது . தேரோடும் பாதைகள் தான் எல்லோர் கண்களுக்கும் தட்டுப்படுகிறது. வடம்போக்கித் தெருக்களின் நெரிசலை எல்லோரும் உணர்ந்ததில்லை.

எனது செயல்பாடுகள் எனக்குத் தந்திருக்கும் பேச்சாளர் எழுத்தாளர் இயக்குநர் என்னும் அடையாளங்களை விடவும் தொழிற்சங்கவாதி என்னும் அடையாளம் எனக்கு மிகவும் நெருக்கமானது . உவப்பானது .

அந்த இருபதாண்டுகள் ... அவ்வளவு பேசியிருக்கிறேன் . எழுதிக் குவித்திருக்கிறேன் .
பேச்சென்றால் வெறும் பேச்சல்ல;
எழுத்தென்றால் வெறும் செயலற்ற எழுத்தல்ல ;
இயக்கம் இயக்கம் இயக்கம் ...செயல் செயல் செயல்
அதனோடு இணைந்த பிணைந்த இரண்டறக் கலந்த பேச்சு . இரட்டை நாதஸ்வர இசை போலக் கலந்த எழுத்து .

சும்மா மேடையில பேசுவாங்க ; ஏசி ரூம்ல உக்காந்து எழுதுவாங்க ; என்று எவரும் பகடி பேசிவிட இயலாத எழுத்தும் பேச்சும் எனக்கு இருந்தது . வாய்த்தது.
நிறைய நிறைய அனுபவங்கள் செறிந்த , பொருள் பொதிந்த வாழ்க்கை.
திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை . மர்மங்களும் திருப்பங்களும் வாழ்வில் நிகழ்வது போலக் கதைகளில் நிகழ்வதேயில்லை .

வங்கிப் பணியில் இருந்த நேரத்து அனுபவங்களை எழுத வேண்டும் என்கிற ஆசை வங்கிப் பணியில் இருந்த போதே எழுந்தது . எழுதவும் துவங்கினேன். ஆனால் அது தடைப்பட்டது . அது பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன் .

இப்போதும் சொல்கிறேன் . இது தன் வரலாறு அல்ல . ஒரு மாபெரும் இயக்கத்தில் , அந்தப் பிரம்மாண்டமான நாடகத்தில் நானும் இருந்தேன் என்பதைச் சொல்வது மட்டுமே.

இந்த நாடகத்தில் சில காட்சிகளை இயக்கி இருக்கிறேன். சில காட்சிகளில் நடித்து , சில காட்சிகளில் ஒப்பனை செய்து , சில சமயங்களில் அரங்கத்தைக் கூட்டிப் பெருக்கித் துடைத்தும், சில காட்சிகளில் நானே பார்வையாளனாகவும் இருந்திருக்கிறேன் . பின்னரங்கில் ஏற்காத பாத்திரமில்லை; செய்யாத வேலையில்லை .

எல்லாவற்றையும் எழுத விருப்பம் இருந்தாலும் , எல்லாவற்றையும் எழுத இயலுமா என்று தெரியவில்லை.
நான் இதைத் தனியே எழுதப் போவதில்லை . எனது தொழிற்சங்கப் பணி போலவே இதனையும் என் சகாக்களோடு இணைந்து எழுதுவேன் .
இருபது ஆண்டுகள் ... ஒரு கிராம வங்கியில் ...
பாண்டியன் கிராம வங்கியில்
இளநிலைக் காசாளராகப் பணியில் சேர்ந்தேன் . மூன்றே ஆண்டுகளில் முதுநிலைக் காசாளர் ஆகப் பதவி உயர்வு பெற்றேன் .

ஆனால் பணியில் சேர்ந்த அன்றே எனது தொழிற்சங்கப் பணிகளைத் துவங்கினேன் .வங்கிப் பணியை விட்டு நானே விலகும் வரை தொழிற்சங்கப் பணிகளைச் செய்து கொண்டே இருந்தேன் .
அதற்குப் பிறகும் இன்று வரை , எனக்குத் தரப்படும் ... என்னை நம்பித் தரப்படும் பணிகளைச் செய்து கொண்டே இருக்கிறேன். நேற்று இரவு கூட சில ஆலோசனைகளை ஒருவருக்குத் தரும் வாய்ப்பு அமைந்தது .

இயற்கையாகவே ஓரளவு சாத்தியமான அளவு ஆவணப்படுத்தும் பண்பு எனக்கு உண்டு. வங்கித் துறையில் நான் என் சகாக்களோடு இணைந்து ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து எழுதி ஆவணப்படுத்த இருக்கிறேன் .

"ஒரு சிறுசேமிப்புக் கணக்கு"
என்பது அதற்கான தலைப்பாக இருக்கும்.


என்றும் தோழமையுடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
01 05 2021
மே தினம்.
அதிகாலை 05:05 மணி
Anuradha Kulasekhar, Azhagu Neela Jeyaram and 22 others
7 comments
1 share
Like
Comment
Share