Wednesday, December 9, 2020

மாற்றிப் பார்க்கிறேன்


 புத்தகங்களோடு உரையாடுகிறேன் .

மனிதர்களை வாசிக்கிறேன்.

பாரதி பிறந்தநாள் விழா

 


அனைவருக்கும் வணக்கம்.
டிசம்பர் 11 மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா .
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது .
அனைவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறேன் .
அன்று காலை மூன்று அரிதான புத்தகங்கள் மறுபதிப்புக் காண்கின்றன.
1 ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய கவிச்சக்கரவர்த்தி பாரதியார் சரித்திரம்
1936 இல் வெளியானது.
2. ம.பொ.சி எழுதிய உலக மகாகவி பாரதி .
1966 இல் வெளியானது.
3. பெ.தூரன் எழுதிய பாரதி தமிழ் .
1982 இல் வெளியானது.

இம் மூன்று புத்தகங்களும் அதற்குப் பிறகு மறுபதிப்பு காணாத புத்தகங்கள்.
மூன்று புத்தகங்களும் மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டுள்ளது .
மூன்று புத்தகங்களும் சேர்த்து விலை ₹ 700 மட்டுமே.
பாரதி அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு .
வருக ... பயன் பெறுக .

Tuesday, December 8, 2020

இறுதி நிர்வாணமும் , நிர்வாணத்தின் இறுதியும் ...

 இறுதி நிர்வாணமும் , நிர்வாணத்தின் இறுதியும் ...


ங்கிருந்து போனவன்

அங்கு அகதியானான் .


த்துவம் தரைமட்டமாகி விட, 

பதுங்கு குழியில் பயந்திருந்தான் .



ல்லாப் பாதைகளும்  அடைபட்டு விட ,

தப்பித்துப் போகத் காத்திருந்தான் .


டலின் அலையிலும், கரையிலும் ,

காலனேறி வருவது  கண்டு கலக்கமுற்றான் .


தாய்நாடு திரும்பும் தாகம் வெள்ளமாக ,

வழியின்றித் தவித்திருந்தான் .


தாய்நாடும் தனக்கெதிராக நிற்கப் , 

புலம்  தெரியாது புலனழிந்தான்.


னக்கென்றொரு தாய்நாடு இலாததைத் 

தாமதமாய் உணர்ந்து தருக்கழிந்தான் .


யுதங்கள் ஊளையிட்ட அகாலத்தில் 

கனத்த மௌனத்தோடு கட்டுமரமேறினான் .


லகுகாக்க உரைத்த தத்துவம் , தன்னையும் 

காப்பாற்றாதது கண்டு பேதலித்தான் .


சைகளை அறுத்தவன்  உயிர் பிழைக்கும் 

ஒற்றை ஆசையைச் சுமந்து பயணித்தான் .


முன்பு வந்தது போலன்றி, கடல்நீரின் 

அடர்த்தி கூடி அடர் சிவப்பானதை உணர்ந்தான் .


ரையேறியதும் , வந்தது கட்டுமரத்திலல்ல ;

கட்டித்தழுவிய உடல்கள் என்றறிந்து நடுங்கினான்.


பிறந்தவீடும் புகுந்தவீடும் புறந்தள்ளிவிட 

நிராகரிப்பின் கசப்போடு சுண்டாவைத் தேடியலைந்தான் .


சுண்டா காணாமல் போனவர்களில் பட்டியலில்...


சைபோலும் அவன் மகள் நிர்வாணமாகக் கிடந்தாள் .


பிறப்புறுப்பில் குருதி பெருகிக் காய்ந்து கிடந்தது .


கைகள் பின்புறம் கட்டப்பட்டு இறந்து கிடந்தனர் 

அந்தத் தோட்டத்து ஆண்கள் .


முன்பொருமுறை முற்பகலில் 

ஞானம் பெற்ற அதே வேதமரத்தின் 

தாழ்ந்த கிளையொன்றில் , குருதி தோய்ந்த 

தன் துவராடையின் துணைகொண்டு 

தூக்கிட்டு மாண்டு போனான் .


றுதி நிர்வாணம் அறிந்தவன்,

நிர்வாணத்தை இறுதியில் தேர்ந்தான் .


ப்ரகலாதன் 

(பாரதி கிருஷ்ணகுமார் )



Monday, November 23, 2020

மேடையை வசப்படுத்துவது எப்படி ? தினமணி தீபாவளி மலர்- மேடைப்பேச்சு ஒரு நிகழ்கலை

 1. எப்போதும் மேடை என்பது தனித்த , உயர்ந்த பீடம் அல்ல ; அது பார்வையாளர்கள் கண்களில் , பேசுபவர் காணக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தரப்படும் தற்காலிக உயரம் . மேடையில் ஏறி விடுவதாலேயே நாம் உயர்ந்தவர்கள் ஆகி விடுகிறோம் என்று கருதாமல் இருப்பது , மேடையை வசப்படுத்த விரும்புவர்களுக்கான அரிச்சுவடி .


2. எந்த மேடையிலும் ஏறுவதற்கு முன் , அது நமது சிந்தனைக்கு உகந்த மேடைதான் என்கிற உறுதிப்பாடு வேண்டும் . எத்தனை கோடிக் கொட்டிக் கொடுத்தாலும் , அறிவுக்கும் ஆன்மாவுக்கும் ஒவ்வாத மேடைகளை மறுக்கிற மன உறுதி ஆதாரமானது . ஒவ்வாத மேடைகளில் ஒளிரவே இயலாது . 


3. மேடையை அறிவதென்பது , பார்வையாளர்களை அறிவதேயாகும் . பார்வையாளர்கள் இன்றி மேடைகள் இல்லை. பார்வையாளர்களின் நீட்சியே மேடை . மேடையின் நீட்சியல்ல பார்வையாளர்கள் . இதை அறிந்திருப்பது அவசியமானது . 


4. எந்த அவையிலும் , கூடி இருப்போர் அனைவரின் நேரமும் நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது என்கிற கவனமும் அக்கறையும் எப்போதும் நினைவில் இருக்கட்டும் . சங்கீதம் தெரியாது போனாலும் பிழையில்லை . இங்கிதம் தெரியாமல் இருக்கலாகாது . 


5. மேடையில் நிற்பது நுனிக் கொம்பேறுவது என்கிற அவையச்சம் இருந்தேயாக வேண்டும் . அந்த அச்சம் தருகிற துணிவு எல்லையற்றது. 


6. நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் என சுற்றுச் சூழலை முற்றாக உணர்ந்து , பேசுபொருளைத் தீர்மானிப்பது பேசுகிறவன் கடமை . கண்ணியமும் , கட்டுப்பாடும் தேவைப்படுகிற கடமை . 


7. முழுமையான , விரிவான முன்தயாரிப்பு ( HOME WORK ) இன்றி மேடையேறுதல் குற்றம் . தயாரிக்க இயலாது போனால், பேசுவதைத் தவிர்ப்பதே சிறந்தது . தயாரிக்கப்படாத உரை நிகழ்த்தப்படாவிட்டால் , எவருக்கும் எந்த இழப்பும் இல்லை . 


8. வெல்லும் சொல் தேர்ந்து பேசுவது வெற்றிக்கான வழி . மனித மனங்களை வெல்லுவதொரு மாயக்கலை . அது அவ்வளவு எளிதில் வசமாகி விடுவதில்லை. அர்ப்பணிப்பு , அக்கறை , உழைப்பு , என்று பல படிகள் ஏறித்தான் உயரத்துக்கு வர இயலும் .ஒரு குழந்தைக்குச் சோறூட்டும் தாயின் அக்கறை போலப் பேச்சு இருக்க வேண்டும் . எப்படியாவது கற்றுத் தந்துவிட வேண்டும் என்ற நல்லாசிரியனின் தீவிரம் தேவைப்படுகிறது .இந்த அக்கறையும் , தீவிரமும் பேசுகிற சொற்களில் மட்டுமல்ல; சொற்களின் இடைவெளிகளிலும் இருக்க வேண்டும். பேசுவதை நாமும் கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறோம் என்பதால் , எப்போதும் ஒரு மாணவப் பணிவு மனதிற்குள் இயங்குதல் வேண்டும் . 


9. இவை அனைத்தின் திரட்சியில் . எல்லையற்றுப் பரந்து விரிந்த நமது மொழி, நமக்குத் தரும் விசாலமான வெளியெங்கும் பறந்து திரிதல் வேண்டும் .சொற்கள் சேர்ந்து பொருளாக உருக்கொள்ளும் தருணத்தில் , தொனியின் துணை கொண்டு களமாட வேண்டும் . பேசுகிறவரை அது நிலம் . பேசத் துவங்கியதும் அது களம் . 


10. ஆயிரம் பேர் நிறைந்த அவையென்றால் , இரண்டாயிரம் கண்களும் , இரண்டாயிரம் செவிகளும் பார்த்துக்கொண்டும் / கேட்டுக்கொண்டும் இருக்கப் பேசுகிறோம் என்கிற பிரக்ஞையில் இருந்து பிறழவே கூடாது . 


11. புதிய சிந்தனைகளும் , செய்திகளும் அவைக்கு எளிதில் வசமாகி விடும் .  தேர்ந்த அவை அதனை அப்போதே கொண்டாடி மகிழ்ந்து விடும் . ஆனால் , அறிந்த செய்திகளைப், பேசியே தீர வேண்டியவற்றை பேசுகிறபோது , கூறியது கூறல் நேருகிறபோது , வியத்தகு புதுமையுடன் அதனை மொழிதல் வேண்டும் . 


12. மேடைப்பேச்சு ஒரு நிகழ்கலை .   சர்க்கஸ் , நாடகம் , கூத்து இவற்றைப்போல ... "கரணம் தப்பினால் மரணம் " என்கிற கவனமே , நமது வழித்துணை . 


13. மொழி , சிந்தனை , த்வனி இவற்றுடன் உடல் மொழியும் இசைவாகச் சேருவது , சமைத்த பண்டத்தைச் சாதுர்யமாகப் பரிமாறுவதற்கு ஒப்பானது . 


14.   தனித்தனி இழைகள் சேர்ந்து , கூடித் துணியாகி மானம் காப்பது போலவே , மேற்சொன்னதெல்லாம் சேர்ந்துதான் ஒரு உரை  நிகழ்த்தப்படுகிறது . அது பேசுகிறவனுக்குப் பொருளும் , புகழும் கொண்டுவந்து சேர்க்கும் . அது அவன் வாழ்க்கைத்   தேவைகளுக்கான நேரிய பொருளீட்டும் வழி. ஆனால், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான மாண்புடைய, மாசற்ற அன்பும், இந்த மண்ணின் மீது கொண்ட மாளாத காதலும் தான் வசப்படுத்தும் தகுதிகள். 


15.  "அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியால் பயனில்லை, "கல்லார் அவையாஞ்சா ஆகுலச் சொல்லாலும் பயனில்லை" என்பார் பிரபந்தங்களின் பேராசான் குமரகுருபரர். இது - "பூத்தலின் பூவாமை நன்று."


16.  ஓர் அங்குலமேனும் தானும், சபையும் மாண்புற்று உயர வேண்டும் என்று கங்கணம் காட்டிக் கொண்டால், எல்லாமே நம் வசமாகும்.

  





                                                          பாரதி கிருஷ்ணகுமார்


Friday, November 20, 2020

Thursday, November 19, 2020

"இருப்பிடம்"

கழுத்தறுத்தாய்
பின்னிருந்து...
நீ அறுப்பதற்கு இசைவாகக் கழுத்தை சாய்த்துக் கொடுத்தேன் என்பது உனக்குத் தெரியுமா ?
நீ பற்றிக்கொண்டு போவதற்கு ஏதுவாக
நொடிகளின் இடைவெளிகளின் இடைவெளிகளில்
என் தலைமுடி வளர்ந்தது உனக்குத் தெரியுமா ?
சிந்துகிற குருதி உன் கால்களில் பட்டுவிடக் கூடாதென்பதற்காக அறுபட்ட கழுத்தின் தசைகள் துடித்தது உனக்குத் தெரியுமா ?
நீ அறுப்பதற்கு முந்தைய கணங்களிலேயே
என் சிந்தனையின் இருப்பிடத்தை
இடம் மாற்றிக் கொண்டது உனக்குத் தெரியுமா ?
கழுத்தறுபட்ட பின்னும் கைகள் எழுதுவதைப்
பார்த்திருக்கிறாயா?
பார்.

-ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார் )

Friday, November 6, 2020

Thursday, November 5, 2020

42 B , L.F தெரு , சாத்தூர் .


 உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள் என்று "அந்திமழை" மாத இதழில் இருந்து ஒரு கட்டுரை கேட்டார்கள் . அனுப்பினேன் . பிரசுரம் ஆகி இருக்கிறது. அந்திமழைக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.

அதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் நவம்பர் மாத அந்திமழையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.

இது முழுக் கட்டுரையும் ... 


30 ஏப்ரல் 1990

அப்போது நான் கிராம வங்கி ஊழியன். அதன் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். அகில இந்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர். நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி  நிலைமைகள் என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஏற்றத்தாழ்வுகள்.மிகவும் இழிவான நிலைமையில் வைக்கப்பட்டு இருந்தார்கள் நான்காம் நிலைக் கடைநிலை ஊழியர்கள்.பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் இன்றி , அந்தக் கூலிகளாக அற்ப ஊதியத்தில் பணி புரிந்தனர். என் கவனம் முழுவதையும் அவர்கள் பக்கம் திருப்பினேன் . அவர்கள் பணிநிலைமையை மாற்ற, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் ஆளுக்கொரு திசையில் கைகாட்டி விட்டு, ஆடம்பரமாய்த் திரிந்தார்கள். பொறுக்க முடியாமல் 28 ஏப்ரல் 1986 ஆம் தேதி ஒரு நீண்ட கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதினேன் . 13 ஜுன்  1986 அன்று , பழுப்பு நிற நீண்ட உறையில் ,அரக்கு வண்ணத்திலான உச்ச நீதிமன்றத்தின் இலச்சினையோடு கூடிய கடிதம் வந்தது.எனது முந்தைய கடிதமே , மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இந்தக் கடிதம் சொன்னது . நான் வழக்காடத் தயாரானேன் . பின்னாளில் நீதியரசரான திரு கே சந்துரு , அப்போது எங்கள் சங்கத்தின் வழக்குரைஞர். எல்லாம் தயாரானது.

அந்தச் சமயத்தில், கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை உச்சநீதி மன்றமே அமைத்தது.எங்கள் வழக்குகள் அனைத்தும் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. தீர்ப்பாயத்தில் அனைத்து ஆவணங்களுடனும் ஆதாரங்களுடனும் சாட்சியம் அளித்தேன் . நான்காம் நிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தினேன் . மூன்றாண்டு கால விசாரணைக்குப் பிறகு 30 ஏப்ரல் 1990 அன்று தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்கியது.

ஹைதராபாத்தில் இருந்து இயங்கிய தீர்ப்பாயத்தின் அலுவலகத்தில் நீதிபதி ஓபுல்ரெட்டி தனது தீர்ப்பை வழங்கிய போது , அந்த அறையில் நானும் இருந்தேன் . நாங்கள் வழக்கில் பெற்றோம்.

இந்தியாவிலேயே முதன்முறையாகப் பணி நிரந்தரம் நடந்தது பாண்டியன் கிராம வங்கியில் தான் . சராசரியாக ₹20000 வரை ஊதிய நிலுவைத் தொகை நான்காம் நிலை ஊழியர்களுக்குக் கிடைத்தது. பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்று, காசாளர்கள்/ மேலாளர்கள் ஆகிப் பணி ஓய்வும் பெற்று விட்டார்கள் ‌. ஒரு நாகரீகமான ஓய்வூதியமும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சி அல்ல ...எனக்கு மட்டுமான மகிழ்ச்சியுமல்ல ...பலருக்குமான தொடர் மகிழ்ச்சி.

28 ஏப்ரல் 1986 அன்று சாத்தூரில் , 42 B, LF தெருவில் இருந்த , எங்கள் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது .

அந்த இடத்தை , எழுதிய கணத்தை இப்போதும் நினைக்கிறேன்.

மகிழ்கிறேன்.


பாரதி கிருஷ்ணகுமார்




Monday, September 28, 2020

எழுச்சித் தமிழருடன் ...

இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு எனது கதை, திரைக்கதை, உரையாடல் மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் “என்று தணியும்” 

வேல் புரொடக் ஷன்ஸ் சார்பில் அத்திரைப்படத்தைத் திருப்பூர் யுனிவர்சல் திரையரங்க உரிமையாளரும், நான் எப்போதும் அப்பா என்று மதிப்புடனும் பணிவுடனும் அழைக்கும் திரு. கே.பழனிசுவாமி அதைத் தயாரித்திருந்தார். 

முற்றிலும் புதுமுகங்களே நடித்த திரைப்படம். 

படத்தில் ஒருவருக்கும் ஒப்பனை கிடையாது. 

அது உண்மைக் கதை அல்ல, உண்மைகளின் கதை.

தமிழில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகப் பேசிய முதல் திரைப்படம்.

உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் போன்ற ஆணவப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கிறோம் என்று நாங்கள் தந்த விளம்பரத்தை எந்த நாளிதழும் வெளியிடவில்லை, தீக்கதிர் தவிர..

அந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு  வந்து சிறப்பிக்க வேண்டும் என்று எழுச்சித் தமிழரை நேரில் சந்தித்து அழைத்தேன். 

இலங்கையில் இருந்து அவர் எடுத்து வந்த ஆவணப்படத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் மதிப்புமிகு வாய்ப்பை, எனக்கு மிக முன்னதாகவே அவர் தந்திருந்தார்.

நண்பர்களோடும் தோழர்களோடும் வந்திருந்து சிறப்பித்தார். 

திரைப்படத்தைப் பார்த்தார். மனம் திறந்து பாராட்டினார்.

இத்தருணத்தில் அவர் தந்த அங்கீகாரத்திற்கு மனமார்ந்த நன்றி பாராட்டுகிறேன்.






Friday, September 25, 2020

At Work...



 வாச்சாத்தி ஆவணத் திரைப்படப் படப்பிடிப்பில்...

நன்றியுரை..!


 ராமைய்யாவின் குடிசை ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில்... பாரதி கிருஷ்ணகுமார்  நன்றியுரை..!

Tuesday, September 22, 2020

மருத்துவர் ச. இராமதாசு அவர்களுடன்...

 மதுரையில் இருந்து  இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகத்தின் வழிகாட்டுதலில், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய ஆவணப்படமே “எனக்கு இல்லையா கல்வி..?” 

கல்வி குறித்த ஆவணப்படங்களில் தலை சிறந்தது எனப் பேராசிரியர் ச. மாடசாமி அவர்களால் பாராட்டப் பெற்ற ஆவணம்.

ஆவணப் படத்திற்கென சாட்சியம்  அளிக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மதிப்பிற்குரிய மருத்தவர் ச.இராமதாசு அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

தயக்கமின்றி இசைவு அளித்தார். தரமான சாட்சியம் அளித்தார். கல்வி தொடர்பாக மிகுந்த காத்திரமான சிந்தனைகளோடு உரையாடினார். 

அவரைச் சந்தித்த கணங்கள் முக்கியமானவை. 

சந்திப்பை சாத்தியப்படுத்தி, உடனிருந்து ஒத்துழைத்து உதவினார் அருமை நண்பர் கவிஞர். ஜெயபாஸ்கரன்.

இணைந்து பணியாற்றினார் நண்பர் ஷ்யாம்.


v



Monday, September 21, 2020

தென்கச்சி சுவாமிநாதன்

 கும்பகோணம் பள்ளியில் நடந்த துயரமான தீ விபத்துக்குப் பிறகு , தமிழக அரசு மறைத்த உண்மைகளை வெளிப்படுத்தி , ஆவணப்படுத்திய ஆவணத்திரைப்படம் "என்று தணியும் ?"



அது பற்றி அமரர் தென்கச்சி சுவாமிநாதன் எனக்கு எழுதிய மடல் .

Thursday, July 23, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 29



எங்கு போவது என்பதை மனம் தீர்மானம் செய்தது.

இந்த நேரத்திற்குப் பிறகு யார் வீட்டுக்குப் போவதும் உவப்பான செயல் அல்ல.
கால்கள் கிழக்கு நோக்கி நடக்க முனிச்சாலை வந்து சேர்ந்தது . மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும் உண்பதற்குச் சூடாக உணவு தரும் கடைகள் நான்கைந்து இருந்தது. எனக்கோ பசி உணர்ச்சி இல்லை.தினமணி திரையரங்கை ஒட்டி கிழக்கு நோக்கி , மாரியம்மன் தெப்பக்குளம் வரை செல்லும் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள சாலைக்குப் புது இராமநாதபுரம் சாலை என்று பெயர். முற்றிலும் சிமெண்ட்டால் போடப்பட்ட ,சாலை என்பதால் அதை சிமெண்ட் ரோடு என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள். அந்தச்சாலை துவங்குகிற இடத்தில் ,சாலையை ஒட்டி ஒருவர் பருத்திப்பால் விற்றுக் கொண்டிருப்பார். மதுரையின் அடையாளங்களில் ஒன்று பருத்திப்பால். நாலணாவுக்கு அரைக் கிளாசும் , எட்டணாவுக்கு முழுக் கிளாசும் தருவார்கள். முழுக் கிளாசு குடித்தால், அப்புறம் பசிக்க ஐந்தாறு மணிநேரமாகும். ஒரு கிளாஸ் பருத்திப்பால் குடித்தேன் . ஒரு பாக்கெட் சார்மினார் சிகரெட் வாங்கினேன். சிமெண்ட் ரோட்டில் நூறு மீட்டர் நடந்ததும், இடது புறத்தில் சக்தி சந்நியாசி கோவிலும் , அதையொட்டி ஒரு பிள்ளையார் கோவிலும் இப்போதும் இருக்கிறது.கோவிலுக்கு எதிரே ஒரு வற்றாத ஊரணி முன்பு இருந்தது.அது கோவிலுக்குச் சொந்தமானது தான்.அந்த ஊரணியில் குப்பைகளைக் கொட்டி , அதைக் குட்டையாக்கி,மேலும் குப்பைகளைக் கொட்டி அதை மைதானமாக்கி இருந்தது மதுரைநகராட்சி.
கோவிலுக்குப் பின்னே முன்பொரு காலத்தில் நதியாக இருந்தது , இப்போது சாக்கடையாகிக் கருத்து நாறிய படியே ஓடிக்கொண்டு இருக்கிறது.அந்தச் சாக்கடை சிமிண்ட் ரோட்டின் இடது புரம் மூணு கிலோமீட்டர் தூரமும் மார்ஜின் போட்டது போலக் கிடக்கும்.கோவிலைத் தாண்டியதும், புதிதாக உருவான அந்த மைதானத்திற்கு எதிரே இரண்டு மிகப் பெரிய புளியமரங்கள் நிற்கும். இரண்டும் இரண்டு பெரிய அசுரர்களைப்போல நின்றிருக்கும்.இரண்டு பேர் சேர்ந்து பிடிக்கிற மாதிரி அடி பெருத்த மரங்கள். அந்த இடத்தில் மின் விளக்குகளும் கிடையாது. அந்தப் புளியமரங்கள் குறித்து அந்தப் பகுதியில் எல்லோருக்கும் மிகுந்த அச்சமுண்டு.ஏனெனில், அந்தப் பகுதியில் பேய் ஓட்டுகிறவர்கள் பயன்படுத்தும் மரம் அது.பின்னிரவில் சாமியாடிகளும் , பேயோட்டுகிறவர்களும், பேய் பிடித்தவர்களுடனும் அவர்கள் உறவினர்களுடனும் உடுக்கை முழங்கப் புளிய மரத்தடிக்கு வருவார்கள்.பேய் பிடித்தவர்களின் தலைமுடியை நீளமாக வெட்டி, ஒரு ஆணியைப் புளியமரத்தில் அறைந்து அதில் அந்தத் தலைமுடியை இறுக்கிச் சுற்றி விடுவார்கள். ஒரு சிறிய மாலையும் அந்த ஆணியில் தொங்க விட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.இதெல்லாம் நடக்கிற வரை பேய் ஆடிக்கொண்டே இருக்கும்.    
பகலில் கூட, அந்தச் சாலையில் நடந்து வருகிறவர்கள் புளியமரங்களை நெருங்கியதும் எதிர்த் திசைக்குப் போய் விடுவார்கள்.அந்த மரத்தில் பேய்கள் கூட்டமாகக் குடியிருப்பதாக எல்லோரும் திடமாக நம்பினார்கள். ஓராண்டுக்கு முன்பே அந்தப் புளியமரத்தடியில் நானும் எனது நண்பர்களும் குடியேறினோம்.நாங்கள் குடியேறிய பிறகு, அங்கிருந்த பேய்கள் அச்சத்தில் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டதாக சிலர் நம்பினார்கள்.புளியமரத்திற்க்குப் பக்கத்திலேயே  தனியாருக்குச் சொந்தமான ஒரு கல் பாலம் இருந்தது.கல் பாலத்தைக் கடந்துபோனால் தனியாருக்குச் சொந்தமான பெரிய ரைஸ் மில். பெரிய கதவு போட்டு வாசலை அடைத்திருப்பார்கள்.ரைஸ் மில் காரர்களே அந்தப் பாதையில் புழங்கமாட்டார்கள்.அந்த மரத்தின் பிஞ்சுகள் சுவை மிகுந்தவை.அந்தப் புளிப்புச் சுவைக்குத் தாகம் தணிக்கும் வல்லமை இருந்தது.
புளியமரத்தைக் கடந்து இருநூறு அடி நடந்ததும் எனது வீடு இருந்த காம்பவுண்டு வலதுபுறமும், எதிரே சாக்கடையைக் கடக்க ஒரு பாலமும் உண்டு . பாலத்தில் மேடு ஏறிப்போக வருவது பகத்சிங் தெரு . அது நேரே வடக்காக நீண்டு இன்றைய காமராஜர் சாலை என்று அழைக்கப்படும் பழைய ராமநாதபுரம் சாலையில் சென்று இணையும். உண்மையில் அந்தத் தெருவின் பெயர் பகத்சிங் தெரு அல்ல . வாழக்கொண்டா சீனிப் பட்டறை சந்து என்பது தான் அந்தத் தெருவின் உண்மையான பெயர். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து தான் அந்தத் தெருவுக்கு பகத்சிங் பெயரைச் சூட்டினோம். அந்த வரலாறு தனியே சொல்லப்பட வேண்டியது .சொல்வேன். 

அங்குமிங்குமாகக் கொஞ்சநேரம் அலைந்து திரிந்து விட்டுப் புளியமரத்தடியில் இருந்த கல் பாலத்தில் வந்து படுத்துக்கொண்டேன்.இரவு முழுவதும் உறங்கவே இல்லை .புகைத்துக்கொண்டே இருந்தேன்.

இப்படி ஒரு வங்கியில் வேலை வந்துசேரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை .ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளனாக வரவேண்டும் என்கிற கனவு இப்படித் தரைமட்டமாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை . கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியனாகி , கிராம்ஷியைப் போல எழுதவிரும்பிய கனவு காய்ந்து போனது. இறந்து போன அம்மாவின் நினைவு பெரும் துக்கமாக ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தது. 

அதிகாலையிலே எழுந்து, பகத்சிங் தெருவைக் கடந்து பழைய ராமநாதபுரம் சாலைக்குத் தேநீர் அருந்தப்போனேன்.
பிறகு போய் அப்பாவைப் பார்த்து, கட்சி முடிவு பற்றிச் சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன். தேநீர் குடித்து விட்டுப் புகை பிடிக்கத் தொடங்கினேன்.

வேலை கிடைத்த துக்கம் குறையவேயில்லை.குமாரு என்று கூப்பிட்டு என் நினைவோட்டத்தைக் கலைத்தார் தேநீர் கடைக்காரர். அங்க பாருங்க என்றார்.

பார்த்த திசையில் ...

Sunday, July 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 28

தோழர் MM 

"உக்காருங்க தோழர் கிருஷ்ணகுமார் ... உங்க விசயத்தப் பேசி முடுச்சுட்டோம்" என்று நிறுத்தினார்.

நான் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தேன்.எனக்குள் இருந்த பதட்டத்துக்கு எல்லையே இல்லை.எந்த வேலைக்கும் போகிற மனநிலையில் நான் அப்போது இல்லை. ஒரு வேலைக்குத்தான் போகவேண்டும் என்றால் ,எனக்கு வேலைதரப்  பல இடங்களில் ,பல நண்பர்கள் காத்திருந்தார்கள்.


நான் கட்சியின்முழு நேர ஊழியனாகி,தீக்கதிரில் பணிக்கு சேர்ந்து ஒரு மகத்தான பத்திரிகையாளனாகி விட வேண்டும் என்கிற நனவில் இருந்தேன் . கட்சி என்னை முழுநேர ஊழியன் ஆக்குவதாகவும், நான் தீக்கதிரில் ஜனவரி முதல் தேதி முதல் வேலைக்குச் சேரவேண்டும் என்று எனக்கு ஏற்கெனவே அறிவித்து இருந்தது என்பதால், அது எனக்குக் கனவல்ல ; நனவு .கனவு கலைந்தால்,மறு கனவொன்றைக் கட்டி எழுப்பிக் கொள்ளலாம். நனவு கலைவது நல்லதல்ல. அது கடினமானது .இதற்கு முன்பே சில நனவுகள் என் வாழ்வில் தகர்ந்து தரைமட்டமாகி இருந்தது. மிக இளம் வயதிலேயே சில துன்பங்களை , இழப்புகளை,துரோகங்களைச் சந்திக்கும் "நல்"வாய்ப்பை வாழ்க்கை தந்திருந்தது.எனவே எனது நனவு கலைந்து விடும் எதையும், தோழர் MM சொல்லிவிடக் கூடாது என்கிற பதைப்பு எனக்கு இருந்தது.

"இது தொடர்பான எல்லா அம்சங்களையும் கணக்குல எடுத்துக்கிட்டு பேசுனோம்.நான் உட்பட எல்லாத் தோழர்களும் அவங்க அவங்க கருத்துக்கள சொன்னாங்க.நீங்க... பேங்க் வேலைக்குப் போகணும்னு கட்சி ஏகமனதாக முடிவு எடுத்துருக்கு" என்று நிறுத்திக் கொண்டார். மெலிதான புன்னகை அவர் முகத்தில் பரவியது. என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க விரும்புகிறவர் போலத் தனது மேசை இழுப்பறையைத் திறந்து எதையோ தேடினார். நான் மெளனமாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தேன். எனது இன்னுமொரு நனவு தகர்ந்து கிடந்தது.

இதற்கு மேலும் பேச MM விரும்பவில்லையோ என்பது போல, அவர் எதையோ தேடிக்கொண்டே இருந்தார். நான் காத்திருந்தேன். அதற்கு மேலும் அவர் பேசாவிட்டால் நாமும் எதுவும் பேசக்கூடாது என்கிற உணர்வு மேலேறிக்கொண்டு வந்தது. துக்கம், கோபம், அவமதிப்பு, ஏமாற்றம், நிராகரிப்பு என்று கலைவையான உணர்வுகளில் கண்கள் சிவப்பேறுவதை உணர முடிந்தது. இதற்கு மேலும் நம்மிடம் பேச இவருக்கு ஒன்றுமே இல்லையா என்கிற வியப்பும் கூடி நின்றது.  

எதையோத் தேடிஎடுத்து , சட்டைப்பையில் வைத்துக்கொண்ட MM " ஒரு முக்கியமான பேப்பரைத் தேடிக்கிட்டு இருந்தேன் கிருஷ்ணகுமார் . மன்னிச்சுக்குங்க... நம்ம பேச்சு பாதியில நின்னு போயிருச்சு... சொல்லுங்க" என்று களங்கமில்லாமல் சிரித்தார் . எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

"எதுக்கு பேங்க் வேலைக்குப் போகச் சொல்லுறீங்க ?" என்று மட்டும் தான் கேட்க முடிந்தது .       

"இங்க பாருங்க ... எப்பவோ எழுதுன பரிட்சைக்கு இப்ப ஆர்டர் வந்துருக்கு . அது வரப்போய்த்தான் இந்த பிரச்சனை. இல்லாட்டி இங்க யாரும் உங்கள எந்த வேலைக்கும் போன்னு சொல்லப்போறதில்ல . நீங்களும் இன்னும் முழுநேர ஊழியரா முறைப்படி சேரல. முழுநேர ஊழியராச் சேந்திருந்தாக் கூட, இந்த பேங்க் வேலைத் தூக்கிப் போட்டுறலாம். அந்த பேங்க் வேலைய நம்ம யாரும் இப்ப தேடித் போகல. அதுவா வந்துருக்கு ... அப்ப..ஒருத்தருக்குத் தகுதி அடிப்படையில கெடைக்கிற வேலைய வேண்டாம்னு எதுக்கு சொல்லணும்? எல்லாருக்கும் வேலை வேணும்னு போராடுற ஒரு கட்சி,வந்த வேலைய வேணாமுன்னு எப்பிடிச் சொல்லும்? நான் நேத்தே சொன்ன மாதிரி, அங்கேயும் ஒரு கம்யூனிஸ்ட்க்கு நெறைய வேலை இருக்கும். நீங்க இப்போதைக்கு பேங்க் வேலைக்குப் போங்க... ஆனா இன்னொரு முக்கியமான முடிவையும் உங்களுக்குச் சொல்லணும்" என்று நிறுத்தினார். 

"என்னங்க MM'.. என்றேன் நைந்த குரலில்... 

முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு MM சொன்னார் ." இப்ப நீங்க பேங்க் வேலைக்குப் போங்க... ஆனா எதிர்காலத்துல எப்ப கட்சி சொல்லுதோ அப்ப நீங்க பேங்க் வேலைய விட்டுட்டு, கட்சி வேலைக்கு வந்துரணும். அது உங்களுக்கு சம்மதமா? என்று கேட்டார்.

"நான் இப்பவே பேங்க் வேலைக்குப் போக விரும்பலன்னு உங்க கிட்ட சொன்னேன்" என்று நிறுத்தினேன். ஒரு நொடி கூடத் தயங்காமல்,"அதெல்லாம் முறைப்படி கட்சிக்குச் சொல்லிட்டேன்.நீங்க சொன்னதையும் பரிசீலனைக்கு எடுத்துக்கிட்டு தான் இந்த முடிவ எடுத்துருக்கோம்"என்றார்.

அதற்குப்பிறகும், எங்கள் உரையாடல் நீண்டநேரம் நடந்தது. ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, மில் தொழிலாளியாக, கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்ச்செயலாளராகத் தான் பெற்ற  அனுபவ அறிவும் , இயக்க அனுபவமும் சேர்ந்து தந்த உடல் மொழியும், மொழி அறிவும் கொண்டு என்னை வங்கி வேலைக்குத் தயார் செய்து கொண்டே இருந்தார் MM .

நானும் அவரும் மட்டும் கட்சி ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். " வேலைக்கு சேந்துட்டு, வாங்க... சந்திப்போம். எங்க போகப்போறோம்.. எல்லாம் இங்கதான இருக்கப்போறோம்" என்றபடி சைக்கிள் ஏறிப்போனார் MM.

நான் தனித்து விடப்பட்ட மனநிலையில் இருந்தேன் . கட்சி என்னைக் கைவிட்டு விட்டது என்று , அந்தக் கணத்தில் மனமார நம்பினேன்.

வேலைக்குப் போவதில் எனக்கு இருந்த இயல்பான மனத்தடையை விட,வேறு மிக முக்கியமான இரண்டு தடைகள் என் கண் முன்னே பூதாகரமாகத் திரண்டு நின்றது.

நேரம் அதிகமாகி விட்டதால், வீட்டுக்குப் போக முடியாது. உறக்கத்தில் இருக்கும் அப்பாவை எழுப்ப முடியாது.காலையில் போய்த்தான் அப்பாவைப் பார்க்க வேண்டும்.ஏனோ, கட்சி அலுவலகத்தில் படுக்க மனம் விரும்பவில்லை.

டிசம்பர் மாதக்குளிர் மதுரையின் மீது தன்னைப் போர்த்திக்கொள்ளத் துவங்கி இருந்தது.எனக்கு எங்கு போவதென்றே புலப்படவில்லை. 

கையில் கொஞ்சம் காசு இருந்தது. மண்டபம் தோழர்கள் கொடுத்த காசு.

இந்த இரவை எங்கு கழிப்பது என்று திகைப்பாகி, எந்தப் பக்கம் போவதென்று முடிவுசெய்ய முடியாமல், ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டுப் புகை பிடித்தேன்.

புகை மார்பெங்கும் பரவிநின்று , நாசியின் வழியாக வெளியேறிய கணத்தில் , பாதியில் கலைந்த உறக்கம் போன்ற ஒரு சிறு மயக்கம் கண்களில் பரவியது. 

எங்கு போவது என்பதை மனம் தீர்மானம் செய்தது...

எங்கு போனேன்? 

அப்புறம் சொல்லுகிறேன்... 
     
-பாரதி கிருஷ்ணகுமார்.

Friday, July 10, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 27

தோழர்.MM

"உங்க தனிப்பட்ட விருப்பம் என்னன்னு சொல்லுங்க .. நான் கட்சி வேலை பாக்கட்டா .. இல்ல பேங்க் வேலைக்குப் போகட்டா " என்றேன் . சௌபா பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தான்.

சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் தோழர் MM சொன்ன பதிலில் , நான் உறைந்து போனேன் .

"சௌந்திரபாண்டி ... நீங்க கொஞ்சம் உள்ள இருங்க" என்று இடதுகையைக் கட்சி ஆபீசுக்குள் காட்டினார் . சௌபா போகும்வரை மெளனமாக இருந்தார் .

இடது கையை என் தோளின் மீது ஆதரவாக வைத்தார்.

"BK தோழர் ... நான் ஒரு முழு நேர கட்சி ஊழியர் . நகரச் செயலாளர் . அதனால , கட்சி தொடர்பான விசயங்கள்ல எனக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பமும் இல்ல ... இருக்கவும் கூடாது . கட்சி என்ன முடிவெடுக்குதோ அது தான் என்னோட முடிவு."

என் முகம் இறுகியது.அவரே தொடர்ந்தார்.

"..அப்ப ... உங்களுக்குச் சொந்தமா கருத்தே இல்லையான்னு நினைப்பீங்க ... இருக்கு . ஆனா அதை நான் ரோட்டுல நின்னு யார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது . உங்க கிட்டக் கூட சொல்லக்கூடாது . கட்சியில என்னைக் கேக்கும்போது , அங்க அங்க, அதுக்கு உரிய இடத்துல சொல்லணும் . அது தான் கட்சி கட்டுப்பாடு . நெறையப் பேரு கட்டுப்பாடுன்னா பேசவே கூடாதுன்னு நெனைக்குறாங்க ... மனுசனாப் பொறந்துட்டு எப்பிடிப் பேசாம இருக்க முடியும் "

புகையால் லேசாகக் கரை படிந்திருந்து, கொஞ்சம் கீழ் வரிசை தேய்ந்து இருந்த தன் பற்கள் முழுவதும் தெரிய, தோள்கள் குலுங்க, கண்களும் ஒன்று சேர, மெலிதாக ஓசையெழ ,நேர்மையாகச் சிரித்தார் . நல்ல களங்கமற்ற சிரிப்பு . அது அவர் எப்போதும் சிரிக்கிற இயல்பான சிரிப்பு .

என் முகம் இளகியது . அவர் தொடர்ந்தார்.

" பேசக் கூடாதுன்னு கட்சி எப்பிடி சொல்லும் ? எங்க எப்பன்னு இடம் தெரிஞ்சு பேசணும் .நீங்க கேக்குறதுக்காக , என்னோட விருப்பம்னு நான் எதையாவது சொல்லிட்டு , நாளைக்கு கட்சி வேற மாதிரி முடிவெடுத்தா அது தேவை இல்லாத சங்கடங்களை உண்டாக்கலாம். அது மாதிரி சங்கடங்களைக் கட்சிக்கொண்டு வராம இருக்குறது தான் நம்ம கடமை .

கட்சி எந்த முடிவு எடுத்தாலும் உங்களுக்கு சம்மதம்ன்னு நீங்க முதல்ல சொன்னது எனக்குப் பெருமையா இருந்துச்சு ... அதுலயே நில்லுங்க ...

ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் ...நீங்க எங்க வேல பாத்தாலும் , உங்களுக்கும் எனக்கும் உள்ள தோழமையும் , நட்பும் மாறப் போறதில்ல .. நீங்க பேங்க் வேலைக்குப் போனாலும் அங்கேயும் ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு வேலை இருக்கும் ... கட்சில வேலை பாத்தா கட்சி அரங்கம். பேங்குல வேலை பாத்தா வங்கி அரங்கம் ... அரங்கம் தான மாறும் ... ஆளுகளும் குணமும் மாறிருமா " என்றார்.

தோளில் வைத்திருந்த இடது கை இறுகியது . இம்முறை இன்னும் மலர்ந்து , மகிழ்ந்து பெரும் ஓசையுடன் சிரித்தார் .

கைகளை எடுத்தபடியே ," இங்க தான் இருப்பீங்களா ? எங்கயாச்சும் போறீங்களா?" என்று கேட்டார் . " இங்க தான் இருப்பேன் " என்றேன் .

"இதப் பத்தி யார் கிட்டயும் எதுவும் பேசிக்க வேணாம் . சௌந்திரபாண்டி கிட்டயும் சொல்லிருங்க . கட்சி முடிவு எடுத்தப்புறம் சொல்லிக்கலாம் ... இருங்க .. வந்துர்றேன் ... ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துருவேன் " என்றபடியே , சைக்கிளில் இடதுகாலைப் பெடலில் வைத்து, வலது காலைத் தரையில் அழுத்திய படியே , புறப்பட்டுப் போனார் .

நான் அவரது பதிலில் இருந்த பொறுப்புணர்வைக் , கட்சிக் கட்டுப்பாட்டை எண்ணி வியந்து நின்றேன்.

கட்சி அலுவலகத்திற்குள் போனதும் MM என்ன சொன்னாரு ? என்று சௌபா கேட்டான் . இதப்பத்தி நம்ம ரெண்டுபேரும் யார் கிட்டயும் எதுவும் பேச வேணாம்னு சொன்னாரு என்றேன் . சௌபா சம்மதம் என்பதுபோலத் தலையசைத்தான் .

சைக்கிள் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு , இருவரும் வீட்டுக்குப் போனோம் . அப்பாவிடம் சொன்னேன் ."நாளைக்குக் கட்சி செயற்குழு . சாயங்காலம் தான் செயற்குழு . அதுல பேசிட்டு சொல்லுவாங்க .. அதனால காலைல நீங்க அங்க வர வேணாம் . கூட்டம் முடிஞ்சதும் நானே வர்றேன் " என்றேன் .

ஒரு வார்த்தை பேசாமல் , எந்த உணர்ச்சியும் இல்லாமல் , முகம் இறுகிக் கிடக்க" உன்னோட லைப் அ மத்தவங்க டிசைட் பண்ணுறது நல்லாவா இருக்கு ? இதை எப்பிடிப் பெருமையா வந்து சொல்லுற ? என்ன நடக்கணும்ன்னு உன் தலையில எழுதி இருக்கோ அதுபடி நடக்கட்டும் ... திரும்பவும் சொல்லுறேன் .. உன் தலையில நீயே மண்ணை வாரிப் போட்டுக்காத "என்று ஒரே மூச்சாக கோபமாகப் பேசி முடித்தார் . நான் எப்போதும் அவரை எதிர்த்துப் பேசுவதில்லை . அவர் என்ன பேசினாலும் கேட்டுக்கொள்ளுவேனே தவிர , எதிர்த்துப் பேசும் வழக்கமில்லை .என் வாழ்வில் இரண்டுமுறை தான் அவரை எதிர்த்துப் பேசி இருக்கிறேன் . அது பற்றி பிறகு எப்போதாவது சொல்லுகிறேன்.

அவர் பேசி முடிக்கிறவரை காத்திருந்தேன் . சௌபாவை வீட்டுக்கு சற்றுத் தொலைவில் நிற்கச் சொல்லி இருந்தேன் . எப்படியும் திட்டத்தானே போகிறார்,இதற்கு எதுக்கு ஒரு சாட்சி என்று நினைத்தது போலவே பேசி முடித்தார் . தரையைப் பார்த்தபடி," நான் கிளம்புறேன்" என்றேன் . "ம்ம்"என்றவர் "சாப்பிட்டியா " என்றார் . "சாப்பிடப்போறேன்" என்றேன் . "சாப்பிட்டுப் போறியா "என்றார் . " இல்ல போகணும் " என்று விரைந்து புறப்பட்டுப் போனேன் .

சௌபா வீட்டுக்குப் போனான். நான் கட்சி ஆபீசுக்குப் போனேன் .


MM இருந்தார் . இரவு நீண்ட நேரம் வரை என்னோடு பேசிக்கொண்டு இருந்தார் . 
என்னைப்பற்றியோ , என் வேலை பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .

மறுநாள் செயற்குழு கூடியது. முன்னால் இருந்த முதல் மாடியில் கூட்டம் நடந்தது. கட்சியின் முடிவுக்காக நான் காத்திருந்தேன். இரவு ஒன்பது மணி வாக்கில் கூட்டம் முடிந்து தோழர் NS உட்பட எல்லோரும் இறங்கி வந்து , நடையைத் தாண்டி இருந்த முன் ஹாலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.எல்லோரும் அறிந்த அறிமுகமான தோழர்கள்.பரஸ்பரம் வணக்கம் , புன்னகை எல்லாம் பரிமாறிக்கொண்டும், பேசிக்கொண்டும் நின்றார்கள் . எல்லாம் ஒரு பத்துப் பதினைந்து நிமிடங்கள் . எல்லோரும் சட சடவெனப் புறப்பட்டுப் போய்க் கொண்டே இருந்தார்கள்.என்னைப் பற்றிய ஒரு விசயத்தைப் பேசி முடித்த தடயம் ஒருவர் முகத்தில் கூட இல்லை. நான் தவித்துப் போய் இருந்தேன்.

எல்லோரும் புறப்பட்டுப் போன பிறகு , தனது பணிகளை எல்லாம் முடித்துக்கொண்டு, மற்றவர்களைப் போகச்சொல்லி விட்டு MM என்னை அழைத்தார். 

" உக்காருங்க தோழர் கிருஷ்ணகுமார்" ... உங்க விசயத்தப் பேசி முடுச்சுட்டோம்" என்று நிறுத்தினார். 

என்ன பேசி முடித்தார்கள் ?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.

Sunday, July 5, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 26



கடிதத்தை மெதுவாகப் படித்துக்கொண்டே வந்தார் . அவர் முகத்தில் இருந்து எந்தக் குறிப்பையும் என்னால் அறிய முடியவில்லை . படித்து முடித்ததும் தோழர் MM என்னிடம் கேட்டார் .


"BK தோழர் ..நீங்க என்ன நெனைக்குறீங்க ?"



" கட்சி என்ன சொல்லுதோ அப்பிடி செய்யுறேன் தோழர்"என்றேன் .


"ரொம்ப நல்லது .. அப்பிடியே செய்யலாம். அது தான் சரி. அதுல எந்த மாற்றமும் இல்ல . ஆனா நான் கேட்டது அது இல்ல . உங்க தனிப்பட்ட விருப்பம் என்ன ? கட்சி வேலையே பாக்குறீங்களா? பேங்க் வேலைக்குப் போக விரும்புறீங்களா?"


"நான் கட்சி வேலை பாக்கத்தான் விரும்புறேன் "


அவர் முகத்தில் , அவர் மறைக்க முயன்றும், மறைந்து

கொள்ளாமல் ஒரு சிறிய புன்னகை தோன்றி மறைந்தது . எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகி விட்டது .


"நாளைக்கு செயற்குழு . அதுல பேசி முடிவு எடுத்துறலாம் . ஒருவேள, வேலைக்குச் சேரணும்னா ஒரு வாரம் பத்துநாள் தான

இருக்கு" என்று நிறுத்தினார்.


எனக்கு அதிர்ச்சியாகி, திகைப்புடன் அவரைப் பார்த்தேன். புன்னகைத்தபடி எழுந்து, "ஒரு வேலையா நெல்பேட்ட

வரைக்கும் போயிட்டு வர்றேன்." நடக்க ஆரம்பித்தார் . நானும் சௌபாவும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தோம்.


மண்டையன் ஆசாரி சந்தில் இருந்த கட்சி அலுவலகம், ஒரு அக்ரகாரத்து வீடு போல நீண்ட, ஆனால் அகலக் குறைவான அமைப்புடன் இருக்கும் . முன் வாசலில் நுழைந்ததும் முதல் மாடிக்குப் போகிற மரப்படிகள் இருந்தது. அந்த மரப்படிக்குக் கீழே தான் , தனது சைக்கிளை நிறுத்தி இருப்பார் MM .


MM மில் தொழிலாளியாக இருந்து, இயக்கத்துக்கு வந்தவர். பள்ளிப் படிப்பெல்லாம் ஏதுமில்லாத பஞ்சாலைத் தொழிலாளி . மதுரை நகரத்தின் கட்சி வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். அவரது காலத்தில் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்தது .என் வயதொத்த பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களும் இளைஞர்களும் கட்சியைத் தேடி வந்து இணைந்த நாட்கள் அவை .


கட்சிக்கு வந்த எல்லோரையும் அரவணைத்து, உரையாடி , அவர்களை ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர். தன்னிலும் படித்த , வாசிக்கிற , திறமை மிக்க தோழர்கள் குறித்து அவருக்குப் பெருமித உணர்வு இருந்ததே அன்றி , அச்ச உணர்வு இருந்ததே இல்லை . அவர்களுக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமும் , பொறுப்பும் பெற்றுத் தருவதைக் கடமை உணர்வாகக் கொண்டிருந்தார். புதிய வெள்ளம் பாய்வதைத் தடுத்ததே இல்லை . தனக்குப் பின்னே வந்தவர்களைத்

தன்னிலுமுயர்ந்த கட்சிப் பதவிகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். அவர் கறுப்பில்லை . முதிர்ந்த வேப்பம் பட்டையின் நிறத்தில் இருப்பார். தலைமுடி அலை அலையாய் கருப்பும் வெள்ளையும் கலந்த எள்ளும் பச்சரிசியும் கலந்தது போல ,ஏற்றிச் சீவிய வெட்டு . இப்போதைய கேரள முதல்வர் போல இருக்கும் முடிவெட்டு . அன்றாடம் சவரம் செய்த, சதுர முகம் . முழுக்கைச் சட்டையை இறுக்கமாகச் சுற்றி மடித்து ஏற்றி விட்டிருப்பார். புகை பிடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது . SCISSORS என்றொரு சிகரெட் . இன்னும் அவரைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்க ஆசையாக இருக்கிறது .



இதற்கெல்லாம் முன்னதாக , இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே , CPM இல் சேருவது என்கிற முடிவை நானே தான் எடுத்திருந்தேன். வில்லாபுரம் பகுதியில் இருந்த SYF தோழர்கள் நடத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு என் பெயரையும் அவர்கள் அச்சிட்டு விட்டார்கள் . வேறொரு அமைப்பில் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்த என் பெயரை SYF இன் கூட்டத்தில் எப்படிச் சேர்க்கலாம் என்று , அந்தப் பகுதித் தோழர்கள் கேள்விக்கு உட்படுத்தப் பட்டார்கள் .



வேறொரு அமைப்பில் இருந்து நான் வெளியேறி விட்டதை கட்சி அறிந்திருக்கவில்லை. எனது தொடர்ந்த வாசிப்பு மற்றும் மிக மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு , இருக்கும் இடதுசாரி இயக்கங்களில் CPM சிறந்தது என்கிற முடிவுக்கு நானே வந்திருந்தேன் .


பல நாட்கள் பல இரவுகள் அந்த விவாதங்கள் நடந்ததை நான் வியப்புடன் இப்போது நினைவு கூர்கிறேன் . ஒரு குறிப்பிட்ட

புத்தகத்தைப் படித்துவிட்டுப் பிறகு பேசலாம் என்று பிரிந்து ... பிரிந்ததில் இருந்து அந்தப் புத்தகத்தை எழுத்தெண்ணிப் படித்து மீண்டும் சந்தித்துப் பேசி விவாதித்து .... அதிலிருந்து வேறொரு புத்தகத்துக்கு நகர்ந்து ... என் வாழ்வில் கல்விப்புலம் சார்ந்த தேர்வுகளுக்குக் கூட அப்படிப் படித்ததில்லை .


என் அறிவின் எல்லைக்குள் , வரம்புக்குள் நான் எடுத்த முடிவின் அடிப்படையில் கட்சியில் சேருவது என்கிற முடிவெடுத்த பிறகு , நானே கட்சி அலுவலகம் வந்து சந்தித்தது தோழர் MM அவர்களைத்தான் . இதை முன்னரே எழுதி இருக்கிறேன்

என்றபோதும் , மீண்டும் எழுதும் ஆசையைத் தடுக்க இயலவில்லை. கூறியது கூறல் குற்றமாமே .... ஆகட்டும் . அதனாலென்ன?மனம் நிறைந்த மனிதர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுவது குற்றமென்று சொல்லும் இலக்கணம் எனக்கெதற்கு ? நமக்கெதற்கு?



"இந்தக் கட்சியில சேரணுமுன்னு எதுக்கு முடிவெடுத்தீங்க " என்று தோழர் MM என்னைக் கேட்டதும் , நான் இரண்டு மணிநேரம் அதற்கு விளக்கம் சொன்னபோது , அதை நுட்பமாகச் செவிமடுத்து என்னை அறிந்து அங்கீகரித்த மனிதரை , தோழரைப் பின்தொடர்ந்து வந்ததற்கு ஒரு காரணம் எனக்கு இருந்தது.


நான் கட்சிப்பணி ஆற்ற வேண்டுமா , வங்கி வேலைக்குப் போக வேண்டுமா என்பதில் எனது தனிப்பட்ட விருப்பத்தை தோழர் MM கேட்டு அறிந்துகொண்டது போலவே , தோழர் MM இன் தனிப்பட்ட விருப்பம் என்னவென்று அறிந்துகொள்ள நான் விரும்பினேன் .



தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த தோழர் MM இன் அருகில் போய் நின்றேன்.


"என்ன தோழர் ?" என்று தன் வழக்கமான சிரிப்போடு , என் தோளில் கை வைத்தார்.


"கட்சி முடிவு எதுன்னாலும் நான் கட்டுப்படுவேன் ... அது உங்களுக்குத் தெரியும் .. ஆனா .... என்று இழுத்தேன் ...


"சொல்லுங்க" என்றார் MM .


"உங்க தனிப்பட்ட விருப்பம் என்னன்னு சொல்லுங்க .. நான் கட்சி வேலை பாக்கட்டா .. இல்ல பேங்க் வேலைக்குப் போகட்டா " என்றேன் . சௌபா பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தான்.


சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் தோழர் MM சொன்ன பதிலில் , நான் உறைந்து போனேன் .


MM என்ன சொன்னார் ?


அப்புறம் சொல்லுகிறேன் .










- பாரதி கிருஷ்ணகுமார் .

Saturday, July 4, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 25



சௌபா ... உடன்ஒளிப்பதிவாளர் WIDE ANGLE RAVISHANKAR... புகைப்படம் தந்து உதவியதும் ரவி தான் .



வேலைக்கான நியமனக் கடிதத்தைக் கையில் வாங்கிக்கொண்டு, அப்பாவிடம் சொன்னேன் ...


"இதுக்காக நீங்க எதுக்கு வந்து ரோட்டுல காத்துக்கிட்டு நிக்கணும் ... யார் கிட்டக் குடுத்தாலும் , என் கிட்டக் கொண்டுவந்து குடுத்துருவாங்க " என்றேன் .


" நான் பாத்துக் குடுத்துட்டா எனக்கு நிம்மதி .. அது சரியா உன் கைக்கு வந்து சேராம , அதனால இந்த வேலை இல்லன்னு ஆகிரக்கூடாது ... இப்பவே , இப்பிடியே வந்துரு .. கட்சில சொல்லாத .. அவங்க உன்னைய விடமாட்டாங்க ..சொன்னாக் கேளு " என்று என் கைகளைப் பிடித்துக் கொண்டார். மிக மிக மென்மையான , மிருதுவான அப்பாவின் கைகள் , ஒரு பூப்பந்து போல என் கைகளைச் சுற்றிக் கொண்டது. அப்பா ஒரு திறமையான மருந்தாளுனர் (Pharmacist). எப்போதும் தூய்மையின் அடையாளம் அப்பா.


சௌபாவைப் பார்த்து ," நீ இவனுக்கு எடுத்துச் சொல்லு ... நல்ல வேல . வேலைல இருந்துகிட்டே கட்சி வேலையும் பாக்கட்டும் . சம்பாதிக்கிற காசு எதுவும் எனக்குத் தர வேணாம். அவனே வச்சுக்கட்டும்.எனக்குப் பென்ஷன் இருக்கு .. அப்புறம் சின்னதா பிராக்டீஸ் பண்ணி சமாளிச்சுருவேன் . "


சௌபாவுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை . " அப்பா நீங்க போங்க ..எல்லாம் நல்லதா நடக்கும் " என்று தெனாலிராமன் மாதிரி தத்தளித்தான் . அவரை அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில் நானும் கவனமாக இருந்தேன்.


அவரது முகத்தைப் பார்க்காமலே , அவர் தந்த கடிதத்தைப் பார்த்துக் கொண்டே ,"நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் கட்சியில சொல்லாம வர முடியாது . வரக் கூடாது . இந்தமாதிரி வேலை வந்துருக்குன்னு கட்சியில சொல்லணும் . சொல்லுவேன் . அப்புறம் அவங்க பேசி ஒரு முடிவு சொல்லுவாங்க .. வேலைக்குப் போகச் சொன்னா , வேலைக்குப் போவேன். போகாதேன்னு கட்சி சொன்னா போக மாட்டேன் . எதுன்னாலும் கட்சியில பேசிட்டு உங்களுக்குச் சொல்லுறேன் .கட்சி சொல்லுறது தான் முடிவு . நானே வீட்டுக்கு வர்றேன் . நீங்க இங்கெல்லாம் வந்து நிக்க வேணாம் ... நானே வர்றேன் ... முடிவு தெரிஞ்சுட்டு வர்றேன் " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன் .


இந்த பதிலை என்னிடம் எதிர்பார்த்து வந்ததைத் தான் அறிந்து இருப்பதைப் பார்வையால் உணர்த்தினார். முகம் இறுக்கமாகியது . உதடுகளை மடித்துக் கடிப்பது போல இறுக்கிக் கொண்டார் . அவரது சிறிய கண்கள் சிவந்து கலங்கின . சட்டென்று , இடுப்பில் இருந்த மூக்குப்பொடி மட்டையை எடுத்து ,விரித்துக் கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும் நெறிபட ஒரு சிட்டிகைக்கும் மேலாகப் பொடியை எடுத்து , நாசித் துவாரங்களில் நிரப்பினார் . கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார் . சைக்கிளில் ஏறி அமர்ந்தார் . வலது காலைத்தூக்கிப் போடுகிறபோது , அடிவயிற்றிக்குச் சற்று கீழே, வேஷ்டி விலகாமல் இருக்க இடது கையால் ஒத்திப் பிடித்துக் கொண்டார். என்னைத் திரும்பிப் பார்த்து "உங்க அம்மா இருந்து சொன்னாக் கேப்பியோ என்னமோ ? போனவள எங்க இருந்து கூட்டிட்டு வர்றது ? என்றபடி , இடது கையால் மோவாயைத் துடைத்துக் கொண்டார் . கொஞ்சநேரம் மெளனமாக இருந்தார் . அந்தப் பரபரப்பான சாலையின் போக்குவரத்து நெரிசலையும் மீறி அவரது மௌனம் எனக்கு உரத்து ஒலித்தது . அவரே தொடர்ந்தார் "யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டா.. என்ன செய்ய முடியும் ? நான் நாளைக்கு இதே நேரத்துக்கு வர்றேன் " ... என்றபடி புறப்பட்டுப் போனார் .


" நீங்க வரவேணாம் " என்று நான் சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை . அவர் போவதையே கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை .



காக்காத் தோப்புத் தெருவில் இருந்து , கட்சி ஆபீசைக் கடந்து , டவுன்ஹால் ரோட்டில் , அந்த நாற்சந்தியின் , தென்மேற்கு மூலையில் இருந்த தோழர் கந்தசாமியின் கடைக்குத் தேநீர் குடிக்க , நானும் சௌபாவும் போனோம் . கந்தசாமி மிகுந்த பிரியத்துடன் வரவேற்றார் . எனது வீடு இருந்த 40 ஆவது வார்டின் கட்சிக் கிளைச் செயலாளர் ஆக இருந்தவர் தோழர் கந்தசாமி . அந்தப் பகுதியில் SYF கிளையை நான் உருவாக்கியது , கட்சி மேடைகளில் பேசுவது , முழுநேர ஊழியராகப் போவது என்று அனைத்தையும் அறிந்தவர் . என் மீது மிகுந்த அன்பும் தோழமையும் கொண்டவர் . " என்ன தோழர் ... அப்பா இப்ப சைக்கிள்ல போனாங்களே பாத்தீங்களா " என்று கேட்டார் . "அக்கா வீட்டுக்குப் போயிட்டுப் போறாங்க " என்றேன் . பொய்யுரைப்பது என் நோக்கமல்ல . முறையாகக் கட்சிக்குச் சொல்லுவதற்கு முன்னால் , வேறு எவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை . வழக்கம் போலக் காசு வாங்க மறுத்தார் காவன்னா .வற்புறுத்திக் காசுகொடுத்துவிட்டுத் திரும்பும் போது நான் சௌபாவிடம் சொன்னேன் "இந்தக் கடிதம் வந்ததைப் பத்தி கட்சிக்குச் சொல்லாம இருந்துட்டா என்ன ?".


ஒரு நொடியேனும் தாமதிக்காமல் சௌபா சொன்னான் . " கட்சியில கேட்டுச் சொல்றேன்னு அப்பா கிட்ட சொல்லிட்டீங்க.. அவரும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டாரு ... இப்ப கட்சிக்கே சொல்லாம இருந்து , அவரு நேரா கட்சியில போய்க்கிட்டு ... குழப்பமாயிடும்" என்றான் .


"சரி ... கட்சியில போய்ச் சொல்லி , நாளைக்குக் கட்சி பேங்க் வேலைக்குப் போன்னு சொல்லீட்டா? என்ன செய்யுறது? "


"பேங்க் வேலைக்கா ... உங்களையா ? கட்சி ஒருநாளும் உங்கள பேங்க் வேலைக்குப் போகச் சொல்லாது .. இப்பவே நேராப் போய் தோழர் MM கிட்டச் சொல்லுவோம் ... ஆர்டர் ஐக் காட்டுவோம் . என்ன சொல்லுரார்னு பாப்பமா " என்றான் .


சௌபா தந்த உற்சாகத்தில் அப்போதே , கட்சி அலுவலகத்திற்குள் சென்று , அங்கு ஏதோ முக்கிய பணியில் இருந்த தோழர் MM இடத்தில் எனது வேலைக்கானக் கடிதத்தைக் கொடுத்தேன் .கடிதத்தை வாங்கியதும் , என்ன என்று விசாரிப்பது போலப் பார்த்துக்கொண்டே , தனக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமருமாறு சைகை காட்டினார் .


கடிதத்தை மெதுவாகப் படித்துக்கொண்டே வந்தார் . அவர் முகத்தில் இருந்து எந்தக் குறிப்பையும் என்னால் அறிய முடியவில்லை. படித்து முடித்ததும், தோழர் MM என்னிடம் கேட்டார் .

என்ன கேட்டார் ?


அப்புறம் சொல்லுகிறேன் ...



- பாரதி கிருஷ்ணகுமார் .

Friday, July 3, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 24

அப்பா ...



எனக்கொரு வங்கி வேலை கிடைத்ததை, எனக்கு  முதலில் சொன்னது... 

நான் வீட்டில் இருந்து வெளியேறி பல மாதங்களாகி இருந்தது . அந்த வங்கி வேலை குறித்து எந்த நினைவுகளும் , கனவுகளும் இல்லை . 
எங்காவது உண்டு  , எங்காவது உறங்கி , கட்சிக்கான பணிகளை மட்டும் செய்துகொண்டு இருந்த காலம் . 

கட்சி அனுப்புகிற வகுப்புகளுக்குப் போவது , பட்டிமன்றங்களுக்குப் போவது , நிறைய வாசிப்பது , தோழர்களோடு உரையாடுவது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது . அதில்  கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுவது என்கிற வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டிருந்த காலம் . 

இதில் பல நாட்கள் , எனது உணவுத் தேவைகளைக் கவனித்துக் கொண்ட நண்பர்கள் சிலர் இருந்தனர் . அதில் சௌபாவும் , குணசேகரபாண்டியனும் , முரளி என்கிற கிருஷ்ணமூர்த்தியும் மிக மிக முக்கியமானவர்கள் .இந்தத் தொடரை எழுதும் இந்த நாளில் அவர்கள் மூவருமே என்னோடு  இல்லை . சில ஆண்டு இடைவெளியில் மூவருமே அடுத்தடுத்து மறைந்து போனார்கள் . அவர்கள் இல்லாததால் தன் இதை எழுத முடிகிறது என்கிற அளவுக்கு , எதையும் எதிர்பாராது என் பசிப்பிணி தீர்த்தவர்கள் . அவர்கள் இருந்தால் நான் இதை எழுதிவிட முடியாது. எழுதச் சம்மதிக்கவே மாட்டார்கள் .
நான் எங்காவது போய்ப் பேசிச் சம்பாதித்து வந்தால் , அது எப்போதும் எனது பணமல்ல. எங்கள் எல்லோருக்குமானது .
நானும் உணவு தேடி ஒருவரது இடத்திற்கும் ஒருபோதும் போனதில்லை . போன இடத்தில் பசியாறி இருக்கிறேன் . பசியோடு பல நாட்கள் வாழவும் , பசிக்குப் பசியையே உண்ணவும் பழகி இருந்தேன் .பட்டினத்து சுவாமிகள் பாடியதுபோலத்தான் அந்த வாழ்க்கை இருந்தது . 

சௌபா பசியாறுவதற்குத்  தனது  வீட்டுக்கு அழைத்துப்போவான் . குணசேகரன் எனக்கு விருப்பமான உணவு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லுவான் . முரளியின் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு பெரிய சைவ உணவு விடுதி இருந்தது . அங்கு அழைத்துப்போவான் . அல்லது அவனது இல்லத்திற்குப் போவதுண்டு . உணவு தருவதில், பரிமாறுவதில்  முரளியின் அன்னையின் பண்பு  மிக உயர்ந்தது .

பின்னாளில் நான் வங்கிப் பணிக்கு வந்தபின்னர் , நான் பணியாற்றிய ஊர்களுக்கெல்லாம் , என்னோடு உணவருந்துவதற்காகவே என்னைத் தேடி ஓடிவரும் நண்பர்களின் கூட்டத்தில் இவர்கள் மூவரும் எப்போதும் இருந்தார்கள் . 

என் செயல்பாடுகளில் நம்பிக்கைகொண்ட கட்சி என்னை நேரடியாகக் கட்சி உறுப்பினர் ஆக்கியது . AM , CM , என்பதெல்லாம் இல்லாமல் PM ஆனேன் . மதுரை நகர்க்குழுவில் இணைத்தார்கள் . த மு எ ச விலும் , SYF ல்லும் ஏற்கெனவே உறுப்பினராக இருந்து , அது தொடர்பான அமைப்பு சார்ந்த பணிகளிலும் தீவிரமாக இயங்கிக்கொண்டு இருந்தேன் .

கட்சி என்னை முழுநேர ஊழியராக்குவது என்று முடிவு செய்து , அந்த முடிவும் எனக்கு சொல்லப்பட்டு விட்டது . ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நான் தீக்கதிர் அலுவலகப் பணிகளில் இணைக்கப்படுவேன் என்பதும் முடிவாகி இருந்தது . ஒரு பத்திரிகையாளனாக வேண்டும் என்கிற எனது விருப்பம் நிறைவேறப் போகிற மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தேன் .

ஆனால் , பாண்டியன் கிராமவங்கியில் நான் இளநிலைக் காசாளர் மற்றும் எழுத்தர் அதாவது , Junior Clerk cum Cashier (Sofa cum Bed மாதிரி ) பதவிக்குத் தேர்வு செய்யப்பட கடிதம் மதுரையில் இருந்த வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது .

அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ,  கட்சி ஆபீசுக்குப் போகிற பாதையில் ,என்னிடம் நேரில் தந்துவிட வேண்டுமென்று பல மணிநேரம் சாலையில் , வெளியில் காத்துக் கிடந்து  இருக்கிறார் அப்பா  . கட்சி அலுவலகத்திற்குள், வருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை . அவருக்குப் பிடிக்காத கட்சியின் அலுவலகத்திற்குள் அவர் வர விரும்பவில்லை . யாரிடமும் சொல்லி அனுப்பவும் பிடிக்கவில்லை . தன்னையும் , தனது மகனையும் பிரித்ததாக அவர் கட்சி மீது கோபம் கொண்டிருந்தார் . எப்போதாவது நான் வெளியில் வந்தால் என்னிடம் தரவேண்டுமென்று காத்திருந்து , இரண்டு மூன்று நாட்கள்  வரை காத்திருந்து , என்னைக்காணாமல் , என் மூத்த சகோதரியின் மகனைக் கட்சி ஆபீசுக்கு அனுப்புகிறார் . நான் ஊரில் இல்லை என்றும் , மண்டபம் வரை போய் இருப்பதாகவும் கட்சி அலுவலகத்தில் தகவல் கிடைக்கிறது . என்றைக்குத் திரும்ப வருவேன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு , சில நாட்களுக்குப் பிறகு திரும்பவும் வந்து , அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு எனக்காகக் காத்திருந்தார் அப்பா . அப்பா வந்ததோ காத்திருந்ததோ எனக்குத் தெரியாது. " உங்க அக்கா பையன் வந்து , உங்களைக் கேட்டார் " என்பதைத் துல்லியமாக தோழர்கள் எனக்குச் சொன்னார்கள் . நான் அதைப் பொருட்படுத்தவில்லை . 

என்னை எதிர்பார்த்துத் தெருவில் அப்பா காத்திருந்த தருணத்தில் , சௌபா கட்சி அலுவலகம் வந்திருக்கிறான் . சௌபாவைப் பார்த்ததும் , உற்சாகமாகி அவனை அழைத்து , இந்த விவரங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார். அப்பா சௌபாவிடத்தில் வைத்த கோரிக்கை, " இது கட்சியில யாருக்கும் தெரியக்கூடாது . அவனுக்கும் மட்டும் தான் தெரியணும் " என்று சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது தான் . சத்தியத்தை சௌபா காப்பாற்றினான் . 

அன்று காலையில் தான் நான் மண்டபத்தில் இருந்து திரும்பி இருந்தேன் . SYF இன் ராமநாதபுர மாவட்ட மாநாடு , மூன்று நாட்கள் மண்டபத்தில் நடந்தது . அந்த மகாநாட்டில் பங்கு பெறவும் , இறுதி நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் என்னை அழைத்துப் போய் இருந்தார் தோழர் SAP .

SAP அப்போது கட்சியின் ராமநாதபுர மாவட்டச் செயலாளர் . அந்த மாநாட்டிற்கு தோழர்கள் PM குமார் , KP ஜானகியம்மாள் ஆகியோருடன் நானும் அழைக்கப்பட்டிருந்தேன் . அந்த மாநாட்டில் தான் கவிஞர் கந்தர்வனை நான் முதல்முறையாகச் சந்தித்தேன் . அந்த மாநாட்டில் பங்கு பெற்றது , தனியே எழுத வேண்டிய அனுபவம் .


சௌபா வந்து சொன்னதும் நான் வெளியே ஓடினேன் . இறுக்கமான முகத்தோடு அப்பா எனது வேலைக்கான உத்தரவைத் தந்துகொண்டே ," என் கடமை . ஒரு வாரமா இந்த ரோட்டுல நிக்குறேன் . கட்சியில சொல்லாத ... இந்த வேலைக்குப் போயிரு . வேலைக்குக் கட்டவேண்டிய டெபாசிட் பணத்த நான் கட்டுறேன் ... இப்பிடியே போயிறலாம் .. வந்துரு " என்றார் .

சௌபா பக்கத்திலேயே மெளனமாக நின்றுகொண்டு இருந்தான் . 

என் வாழ்வில் மாபெரும் திருப்பங்கள் நிகழப்போவதை நான் அப்போது உணரவே இல்லை . உணர்ந்திருந்தால் , அந்தச்  சந்திப்பு நிகழாமல் தடுத்திருப்பேன், என்று உள்மனம் இப்போது நினைத்துக் கொள்ளுகிறது. இப்போது நினைப்பதனால் பயனென்கொல் ? 

வேலைக்கான நியமனக் கடிதத்தைக் கையில் வாங்கிக்கொண்டு, அப்பாவிடம் சொன்னேன் ...

என்ன சொன்னேன் ?

அப்புறம் சொல்லுகிறேன் ...

- பாரதி கிருஷ்ணகுமார் .

Sunday, June 21, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 23




MGR தன் தாயின் பெயரால் வாங்கிய சத்தியம் பலித்ததா ?


தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, MGR மைனா தெப்பக்குளம் பொதுக்கூட்டத்தில் சத்தியம் வாங்குகிற வரை, அ இ அ தி மு க வின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தலைவர்களும் , தொண்டர்களும், எப்போதாவது தான் எங்கள் கண்களில் தென்படுவார்கள். நான் முன்பே எழுதி இருந்ததுபோல் அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிடும் மதுரை மேற்குத்தொகுதிக்குப் புலம் பெயர்ந்து போய் இருந்தார்கள் .

" எங்க கட்சி உங்க கட்சி மாதிரி கெடையாது ... இங்க எவனும் எவன் பேச்சையும் கேக்க மாட்டானுங்க .. எல்லோருமே MGR சொன்னாத்தான் கேப்பானுங்க " என்று ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் என்னிடம் சொல்லிவிட்டு , வெடித்துச் சிரித்தார். அதை ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவையாகக் கருதி நானும் சிரிக்கவேண்டும் எனக் கருதினார் . நான் அவர் பேசியதை ரசிக்கவில்லை . ரசிக்கப் பழகி இருக்கவில்லை.

எனவே அ இ அ தி மு க ஆட்கள் வார்டுக்குள் வேலை செய்ய வருவதில்லை என்று முறைப்படி நாங்கள் கட்சியின் தலைமைக்குத் தகவல் தந்தோம் .

கட்சித் தலைமை இதுபற்றி மதுரை மாவட்ட அ இ அ தி மு க தலைவர்களிடம் எவ்வளவு எடுத்துச்  சொல்லியும் , நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.எனவே அது பற்றி MGR  இடமே எடுத்துச் சொன்னது கட்சித் தலைமை . அதன் விளைவே MGR வாங்கிய சத்தியம் .

சத்தியம் வேலை பார்த்தது . தேன் கூட்டைக் கலைத்தது மாதிரி , கூட்டம் முடிந்த மறுநாள் காலையில் அ இ அ தி மு க இரண்டாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் 64 ஆவது வார்டில் இருந்த கட்சியின் தேர்தல் அலுவலகத்தை மொய்த்தார்கள் . " இவ்வளவு நாளு இந்தக் கூட்டமெல்லாம் எங்க இருந்துச்சு " என்று வியந்து போனோம் . மதுரை கிழக்குத் தொகுதி முழுவதும் கூடுதல் பரபரப்பானது . வாக்குப்பதிவு முடிகிறவரை , MGR வாங்கிய சத்தியம் பலித்தது .

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சிறிய தொகுதி என்று அறியப்பட்ட மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா தோற்கவேண்டும் என்று எதிர்த் தரப்பு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது . தேர்தலுக்குச் சில நாட்கள் இருந்த போது , என் நண்பர்கள் பலருடன் சௌபாவும் என்னோடு தேர்தல் வேலையில் வந்து சேர்ந்துகொண்டான் . 

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் , நாங்கள் இரவும் பகலும் இணைந்து பணியாற்றிய நாட்கள் என் நினைவில் இம்மி பிசகாமல் காட்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறது .
எத்தனை எத்தனையோ நினைவுகள் . 

அந்த நினைவுகளுக்குக் காரணமாய் இருப்பது ... "எதையும்" எதிர்பார்க்காத , அசலான தன்னலமற்ற உழைப்பு . அதுதான். அதுமட்டும் தான் . அது போன்ற உழைப்பின் வசீகரத்தை என் வாழ்நாளில் எப்போதும் , இப்போதும் செய்துகொண்டே இருக்கும் வாய்ப்பை இந்த வாழ்க்கை, எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறது . எந்த வேலை செய்தாலும் அதில் தனக்கு என்னவென்று கணக்குப் பார்த்துப் பார்த்து , மனசுக்குள் ஒரு "சிட்டையை" எப்போதும் , இப்போதும் வைத்துக்கொண்டே இருக்கிற ஆட்களை நானறிவேன் . அவர்களோடு பணியாற்றியும் , அவர்களிடம் இருந்து அதனைக் "கற்றுக்கொள்ள" த் தவறினேன் என்பது எனக்கான பெருமிதம் . ஒரு YELLOW BOOK போடுகிற அளவு அவர்களின் பெயர்ப் பட்டியல் பெரியது. என்ற போதும் , அதனினும் பெரியது,  எதையும் எதிர்பார்க்காது உழைக்கிற திருக்கூட்டம் என்பது தான், இப்போதும் உழைப்பதற்கான நம்பிக்கை .

தேர்தல் முடிந்து , வாக்குப்பதிவு நடக்கும் போது , எல்லா மேசைகளுக்கும் சென்று , மேசை வாரியாக வாக்கு எண்ணிக்கையைக் குறிக்கும் பணி எனக்குத் தரப்பட்டது . எனக்கு இடப்பட்ட பணிக்கு ஏற்ப , தேவையான Writing pad , பேப்பர் , பென்சில்,  ரப்பர், பேனா , வார்டுகளின் எண் , மேசைகளின் எண் என்று கோடு போட்டு வரைந்து வைத்துக் கொண்டு வாக்குகள் என்னும் இடத்திற்குப் போனேன் . இரவெல்லாம் முனைப்போடு செய்த அந்தப் பணியில் தங்கமாரியும் , சௌபாவும் தான் துணை இருந்தார்கள் .   


வாக்குகள் எண்ண எண்ண,  ஒவ்வொரு மேசையாகப் போய், வாக்கு எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டே வந்து, அவ்வப்போது அந்த எண்ணிக்கைகளைக் கூட்டிக்கொண்டே வந்து , 5900 க்கும் அதிகமான வாக்குகளில் தோழர் சங்கரையா வெற்றிபெற்றார் என்பதை முதலில், வெளியில் வந்து சொன்ன பெருமை எனக்கு வாய்த்தது . பிறகு ஒரு அரைமணி அல்லது ஒருமணிநேரம் கழித்துத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது .1980 மே மாதம் இறுதியில் இந்தத் தேர்தல் நடந்தது . 


தேர்தலுக்கு முன்பும் , தேர்தலுக்குப் பின்னும் நான் முழு நேரமும் கட்சிப்பணி செய்துகொண்டு இருந்தேன் . அந்த ஆண்டு இறுதியில் , கட்சி என்னைத் தனது முழுநேர ஊழியராக சேர்த்துக்கொள்வதென்று முடிவு செய்து , அந்த முடிவும் எனக்குச் சொல்லப்பட்டு விட்டது .  

இந்தச் சூழலில் தான் நான் மறந்துபோய் இருந்த வங்கி வேலைக்கான பணி நியமன ஆணை எங்கள் வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது. நானோ வீட்டைவிட்டு வெளியேறிப் பல மாதங்களாகி இருந்தது .

எனக்கொரு வங்கி வேலை கிடைத்ததை, எனக்கு  முதலில் சொன்னது... 

அப்புறம் சொல்லுகிறேன் ..

-பாரதி கிருஷ்ணகுமார்.