Sunday, June 21, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 23




MGR தன் தாயின் பெயரால் வாங்கிய சத்தியம் பலித்ததா ?


தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, MGR மைனா தெப்பக்குளம் பொதுக்கூட்டத்தில் சத்தியம் வாங்குகிற வரை, அ இ அ தி மு க வின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தலைவர்களும் , தொண்டர்களும், எப்போதாவது தான் எங்கள் கண்களில் தென்படுவார்கள். நான் முன்பே எழுதி இருந்ததுபோல் அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிடும் மதுரை மேற்குத்தொகுதிக்குப் புலம் பெயர்ந்து போய் இருந்தார்கள் .

" எங்க கட்சி உங்க கட்சி மாதிரி கெடையாது ... இங்க எவனும் எவன் பேச்சையும் கேக்க மாட்டானுங்க .. எல்லோருமே MGR சொன்னாத்தான் கேப்பானுங்க " என்று ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் என்னிடம் சொல்லிவிட்டு , வெடித்துச் சிரித்தார். அதை ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவையாகக் கருதி நானும் சிரிக்கவேண்டும் எனக் கருதினார் . நான் அவர் பேசியதை ரசிக்கவில்லை . ரசிக்கப் பழகி இருக்கவில்லை.

எனவே அ இ அ தி மு க ஆட்கள் வார்டுக்குள் வேலை செய்ய வருவதில்லை என்று முறைப்படி நாங்கள் கட்சியின் தலைமைக்குத் தகவல் தந்தோம் .

கட்சித் தலைமை இதுபற்றி மதுரை மாவட்ட அ இ அ தி மு க தலைவர்களிடம் எவ்வளவு எடுத்துச்  சொல்லியும் , நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.எனவே அது பற்றி MGR  இடமே எடுத்துச் சொன்னது கட்சித் தலைமை . அதன் விளைவே MGR வாங்கிய சத்தியம் .

சத்தியம் வேலை பார்த்தது . தேன் கூட்டைக் கலைத்தது மாதிரி , கூட்டம் முடிந்த மறுநாள் காலையில் அ இ அ தி மு க இரண்டாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் 64 ஆவது வார்டில் இருந்த கட்சியின் தேர்தல் அலுவலகத்தை மொய்த்தார்கள் . " இவ்வளவு நாளு இந்தக் கூட்டமெல்லாம் எங்க இருந்துச்சு " என்று வியந்து போனோம் . மதுரை கிழக்குத் தொகுதி முழுவதும் கூடுதல் பரபரப்பானது . வாக்குப்பதிவு முடிகிறவரை , MGR வாங்கிய சத்தியம் பலித்தது .

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சிறிய தொகுதி என்று அறியப்பட்ட மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா தோற்கவேண்டும் என்று எதிர்த் தரப்பு தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது . தேர்தலுக்குச் சில நாட்கள் இருந்த போது , என் நண்பர்கள் பலருடன் சௌபாவும் என்னோடு தேர்தல் வேலையில் வந்து சேர்ந்துகொண்டான் . 

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் , நாங்கள் இரவும் பகலும் இணைந்து பணியாற்றிய நாட்கள் என் நினைவில் இம்மி பிசகாமல் காட்சியாக ஓடிக்கொண்டே இருக்கிறது .
எத்தனை எத்தனையோ நினைவுகள் . 

அந்த நினைவுகளுக்குக் காரணமாய் இருப்பது ... "எதையும்" எதிர்பார்க்காத , அசலான தன்னலமற்ற உழைப்பு . அதுதான். அதுமட்டும் தான் . அது போன்ற உழைப்பின் வசீகரத்தை என் வாழ்நாளில் எப்போதும் , இப்போதும் செய்துகொண்டே இருக்கும் வாய்ப்பை இந்த வாழ்க்கை, எனக்குப் பரிசாகத் தந்திருக்கிறது . எந்த வேலை செய்தாலும் அதில் தனக்கு என்னவென்று கணக்குப் பார்த்துப் பார்த்து , மனசுக்குள் ஒரு "சிட்டையை" எப்போதும் , இப்போதும் வைத்துக்கொண்டே இருக்கிற ஆட்களை நானறிவேன் . அவர்களோடு பணியாற்றியும் , அவர்களிடம் இருந்து அதனைக் "கற்றுக்கொள்ள" த் தவறினேன் என்பது எனக்கான பெருமிதம் . ஒரு YELLOW BOOK போடுகிற அளவு அவர்களின் பெயர்ப் பட்டியல் பெரியது. என்ற போதும் , அதனினும் பெரியது,  எதையும் எதிர்பார்க்காது உழைக்கிற திருக்கூட்டம் என்பது தான், இப்போதும் உழைப்பதற்கான நம்பிக்கை .

தேர்தல் முடிந்து , வாக்குப்பதிவு நடக்கும் போது , எல்லா மேசைகளுக்கும் சென்று , மேசை வாரியாக வாக்கு எண்ணிக்கையைக் குறிக்கும் பணி எனக்குத் தரப்பட்டது . எனக்கு இடப்பட்ட பணிக்கு ஏற்ப , தேவையான Writing pad , பேப்பர் , பென்சில்,  ரப்பர், பேனா , வார்டுகளின் எண் , மேசைகளின் எண் என்று கோடு போட்டு வரைந்து வைத்துக் கொண்டு வாக்குகள் என்னும் இடத்திற்குப் போனேன் . இரவெல்லாம் முனைப்போடு செய்த அந்தப் பணியில் தங்கமாரியும் , சௌபாவும் தான் துணை இருந்தார்கள் .   


வாக்குகள் எண்ண எண்ண,  ஒவ்வொரு மேசையாகப் போய், வாக்கு எண்ணிக்கையைக் குறித்துக்கொண்டே வந்து, அவ்வப்போது அந்த எண்ணிக்கைகளைக் கூட்டிக்கொண்டே வந்து , 5900 க்கும் அதிகமான வாக்குகளில் தோழர் சங்கரையா வெற்றிபெற்றார் என்பதை முதலில், வெளியில் வந்து சொன்ன பெருமை எனக்கு வாய்த்தது . பிறகு ஒரு அரைமணி அல்லது ஒருமணிநேரம் கழித்துத்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது .1980 மே மாதம் இறுதியில் இந்தத் தேர்தல் நடந்தது . 


தேர்தலுக்கு முன்பும் , தேர்தலுக்குப் பின்னும் நான் முழு நேரமும் கட்சிப்பணி செய்துகொண்டு இருந்தேன் . அந்த ஆண்டு இறுதியில் , கட்சி என்னைத் தனது முழுநேர ஊழியராக சேர்த்துக்கொள்வதென்று முடிவு செய்து , அந்த முடிவும் எனக்குச் சொல்லப்பட்டு விட்டது .  

இந்தச் சூழலில் தான் நான் மறந்துபோய் இருந்த வங்கி வேலைக்கான பணி நியமன ஆணை எங்கள் வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்தது. நானோ வீட்டைவிட்டு வெளியேறிப் பல மாதங்களாகி இருந்தது .

எனக்கொரு வங்கி வேலை கிடைத்ததை, எனக்கு  முதலில் சொன்னது... 

அப்புறம் சொல்லுகிறேன் ..

-பாரதி கிருஷ்ணகுமார்.

Monday, June 15, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 22

I want to do something for the Matam!” — MGR to Mahaswamigal ...

" எனக்கொரு சத்தியம்செய்து கொடுப்பீர்களா?" என்று கேட்டார் MGR. கூட்டம் "செய்வோம்" "செய்வோம்" என்று , ஒழுங்கற்று வீசுகிற காற்றுப் போல ஊளையிட்டது .

MGR அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருந்தது . என் முந்தையவொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல , MGR மதுரை மேற்குத்தொகுதியில் போட்டி இட்டதால் , அ இ அ தி மு க காரர்கள்  ஒருவர் கூட கிழக்குத் தொகுதியில் தென்படவே  இல்லை . எல்லோரும் மேற்குத் தொகுதிக்குத் தேர்தல் வேலை செய்யப்போய் விட்டார்கள். ஆனால் மேற்குத் தொகுதி CPM தோழர்கள் , கிழக்குத்தொகுதிக்கு வராமல் மேற்கிலேயே நின்று பணியாற்றினார்கள். இந்த உண்மையை  MGR முழுமையாக உணர்ந்து கொண்டார் . CPM தலைவர்களும் இந்தக் குறைபாட்டை MGR இடத்தில் சுட்டிக்காட்டினார்கள். அதைச் சரி செய்யும் பொருட்டே இந்த "சத்தியம்" என்கிற உத்தியைக் கையாண்டார் .

முதலில் எனக்கொரு சத்தியம் செய்து தருவீர்களா என்று கேட்டு, அவர்கள் சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட MGR , மிக நுட்பமாக அந்தப் பிரச்சனையைக் கையாண்டார் .

"தேர்தலில் தோற்று விடுவோம் என்கிற அச்சம் நண்பர் கருணாநிதிக்கு வந்துவிட்டது. எனவே நமது வெற்றியைத் தட்டிப்பறிக்க அனைத்துத் தவறான வழிமுறைகளையும் அவர் கையாளுவார். அ இ அ தி மு க வேட்பாளர்கள் மட்டுமல்ல, நமது கூட்டணியில் உள்ள அனைவரும் வெற்றி பெற்றாக வேண்டும் . அதை உறுதி செய்ய வேண்டும் என்றால் , யாரும் அவர்களுடைய சொந்தத் தொகுதியைவிட்டு வேறு தொகுதிகளுக்குப் போகக்கூடாது . அப்படிப் போனால் அதை நண்பர் கருணாநிதி முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவார் . அதை அனுமதிக்கலாமா ?" என்று கூட்டத்தை நோக்கிக் கேட்டார் . கூட்டம், "கூடாது" "கூடாது" என்று உச்ச ஸ்தாயியில் கூவியது .

கூட்டம் கூவி அடங்கியதும் MGR மென்மையாகத் துவங்கினார் . " ஆனால் ... உங்கள் கவனத்தைத்  திசை திருப்புவதற்காக நண்பர் கருணாநிதி எந்தத் தந்திரத்தையும் கையாளுவார் . இன்றிலிருந்து , இப்போதிலிருந்து கிழக்குத் தொகுதியில் இருக்கும் என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகள் , வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்கும்வரை  இந்தத் தொகுதியை விட்டுப் போக மாட்டோம் என்று என் தாயின் பெயரால் சத்தியம் செய்து கொடுப்பீர்களா ?" என்று கூட்டத்தை நோக்கித் தனது  வலது கையை நீட்டினார் . என் தாயின் பெயரால் என்று கேட்டபோது மட்டும் அவர் குரல் நன்கு உயர்ந்தது . "செய்வோம்" "செய்வோம்" என்று மொத்தக் கூட்டமும் குரல் உயர்த்திக் கூவியது . 

MGR வார்த்தைகளில் சொல்ல முடியாத உற்சாகத்தோடும் , அமைப்போடும் இருந்ததை என்னால் உணர முடிந்தது . MGR நிறுத்தவில்லை .." வாக்குப்பதிவு அன்றைக்குக் கற்பனை செய்ய இயலாத வதந்திகளைப் பரப்ப நண்பர் கருணாநிதி திட்டமிட்டு இருப்பதும் எனக்குத் தெரியும் . வாக்குப் பதிவு நடைபெறும் அன்றைக்கு நானே இறந்து விட்டதாக .... அவர் அந்த வாக்கியத்தை நிறைவு செய்யவே இல்லை. கூட்டம் துடிதுடித்துப் போனது . தலைவா ... அப்பிடிச் சொல்லாத...  விதவிதமான எதிர்ப்புக் குரல்கள் , கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கும் சொற்கள் என்று ... சில நொடிகள் அமர்க்களமாகி விட்டது . MGR அசரவில்லை . கூட்டத்தைக் கைகளால் அமைதிப்படுத்திவிட்டு ,"நானே இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தாலும் , தொகுதியை விட்டுப் போகாமல் , அவரவர்கள் அவரவர் தொகுதியில் இருந்து கடமையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் " என்று தனது உரையை நிறைவு செய்தார் . தன் பேச்சில் கருணாநிதியைக் குறிப்பிடும் போதெல்லாம், நண்பர் கருணாநிதி என்றே குறிப்பிட்டார். "தி.மு.க." என்று, கட்சியின் பெயரைக் குறிப்பிடவே இல்லை. 

பேசி முடித்ததும்,கைக்குட்டையால் வியர்வையை கவனமாக ஒற்றி எடுத்துக் கொண்டார்.அந்தச் சிறிய மேடையின் மூன்று பக்கமும் சுற்றி வந்து வணங்கினார் . கைகளை அசைத்தார் . சுற்றும் முற்றும் பார்த்தார் . அருகாமை வீடுகளின் மாடிகளில் நின்றவர்களை நோக்கிக் கும்பிட்டார் . இரண்டு கரங்களையும் குவித்து, இரண்டு கண்களுக்கு இடையில் கைகளைப் பொருத்தி , சற்றே தலை குனிந்து , வஞ்சகமின்றிக் கும்பிட்டார் . அவர் கும்பிடும் விதம் , அவரை எதிர்கொள்ளும் எவரையும் இருகரம் கூப்பிக் கும்பிடவைக்கும் வகையான வணக்கம். சட்டென படிகளில் தாவித் தாவி இறங்கினார் . கூட்டம் கொண்டாடியது . கண்ணிமைக்கும் நேரத்தில் தனது காரில் போய் ஏறிக் கொண்டார் . கூட்டம் தேனீக்கள் போலக் காரை மொய்த்தது .அவரது பாதுகாவலர்களும் , செந்தொண்டர்களும் அவரது கார் போக வழி ஏற்படுத்தித் தந்தார்கள் . கூட்டம் கலைந்தது.கலைந்து விலகியது. ஒரு ஐம்பது சினிமா தியேட்டர்களில் ஒரே சமயத்தில் காட்சி முடிந்த உணர்வு , எனக்கு உண்டானது .

நான் சௌபாவைப் பார்த்தேன் .

சௌபா சொன்னான் ,"BK ... மத்தவனெல்லாம் நடிகன் ... இவன் மகா நடிகன் ".  நான் சௌபாவுக்குக் கைகளை நீட்டினேன் . அவனும் புன்னகைத்தபடி கைகளை நீட்டினான் . 

நான் அவன் கரம் பற்றிக் குலுக்கினேன். "உள்ளங்கை உண்மை" என்றேன் . சௌபா புரிந்துகொண்டு உரக்கச் சிரித்தான் . நானும் அவன் புரிந்துகொண்டதை உணர்ந்து , மகிழ்ந்து சிரித்தேன் .

நானும் அவனும் சிரிக்க ஆரம்பித்தால், அது மகிழ்ச்சியின் உச்சம் . எங்கள் அடக்கமுடியாத சிரிப்பைப் பார்த்து மகிழ்ந்து , என்னவென்றே தெரியாமல் சிரித்தவர்கள் உண்டு . நாங்கள் சிரிப்பதைப் பார்த்து வியந்தவர்கள் உண்டு .பயந்தவர்கள் உண்டு . பொறாமைப் பட்டவர்களும் உண்டு .  உருண்டு உருண்டு சிரிப்பது என்று எங்கள் பக்கத்தில் சொல்லுவார்கள் .  அப்படிச் சிரிப்பது எங்களுக்குப் பழக்கமாக இருந்தது. சிரிக்கத் தேவையான செய்திகள் எங்களுக்காகச் சேர்ந்துகொண்டும் இருந்தது. இதை எழுதுகிறபோது கூட நான் புன்னகைத்துக்கொண்டே எழுதுகிறேன் என்பது எங்கள் சிரிப்பின் சிறப்பு தான் .இறந்தவர்களை நினைக்கிற போது நமக்குத் துன்பமான உணர்வுகள் மட்டுமே வருவதில்லை. அவர்களோடு இருந்து பெற்ற இன்பங்களும் அதே இன்பத்தைத் தருவது தனித்த வரம் .

அது கிடக்கட்டும் . MGR தன் தாயின் பெயரால் வாங்கிய சத்தியம் பலித்ததா ?

அப்புறம் சொல்லுகிறேன் ...

- பாரதி கிருஷ்ணகுமார்.

Saturday, June 13, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 21

The MGR phenomenon - DTNext.in


அழகாக , நிறுத்தி நிதானமாகப் பேசிகொண்டே போனார் MGR . உறவு , சுற்றம் என்று நமக்கு எத்தனை பேர் இருந்தாலும் நண்பர்கள் இன்றி நமது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்றார்  . அத்தகைய " நண்பர்கள் மூன்று வகைப்படுவார்கள் " என்று வகை பிரித்தார்  MGR .

முதலாவது வகைப்பட்ட நண்பர்கள் எப்போதும் நம்மோடு இருப்பவர்கள் . அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு , அதை ஆமோதிப்பார்கள் . ஆதரிப்பார்கள் . உண்மையில் அவர்கள் நண்பர்களே அல்ல ; நமது விரோதிகள் .

சில நொடிகள் நிறுத்திப் புன்னகைத்துக்கொண்டு, மேடையில் இருக்கிற எல்லோரையும் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

இரண்டாவது வகைப்பட்ட நண்பர்கள் நம்மோடும் இருப்பார்கள் . எதிர் முகாமிலும் இருப்பார்கள். அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு , அதைக் குற்றம் சொல்லுவார்கள். எதிர்ப்பார்கள். உண்மையில் அவர்கள் நண்பர்களே அல்ல ; துரோகிகள் . 

இம்முறையும் சிலநொடிகள் நிறுத்தி,மேடையில் இருந்தவர்களை நோக்கி  ஆழ்ந்த புன்னகை ஒன்றை, பரவ விட்டுவிட்டு, தான் சொன்னதைத் தானே ரசித்துச் சிரித்துக்கொண்டார்.

மூன்றாவது வகைப்பட்ட நண்பர்கள் நம்மோடும் இருப்பார்கள். எதிர் முகாமிலும் இருப்பார்கள். எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள். ஆனால் , அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் மாட்டார்கள் ; எதிர்க்கவும் மாட்டார்கள். ஆம் நாம் நல்லது செய்தால் ஆதரிப்பார்கள் தவறு செய்தால் எதிர்ப்பார்கள். அவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அத்தகைய நண்பர்களே உங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள் .

கொஞ்சம் மௌனம் . மலர்ந்த ஒரு புன்னகை . மேடையில் இருந்த எல்லோரையும் திரும்பிப் பார்த்துக்கொண்டே, சங்கரையாவை நோக்கிக் கை நீட்டியபடியே சொன்னார்.

சங்கரய்யா , எனக்கு அத்தகைய சிறந்த நண்பர்களிலே ஒருவர். சங்கரய்யா சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் ....
இராமச்சந்திரன் தனது வலது கையை இழந்து விட்டான் என்று பொருள்.

தனது வலது கையை மேலே உயர்த்திக் காட்டினார். கூட்டம் தலைவா தலைவா என்று பதறியது...

இந்த ஜனநாயகத்தில் , ஒரு தொகுதியில் உள்ள வாக்குகள் அனைத்தையும் நான் ஒருவனே செலுத்தமுடியும் என்கிற அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டால் , வாக்குச் செலுத்துவதற்குத் தரப்படும் அந்தச் சிறிய கட்டையைக் கீழேயே வைக்காமல் ... மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றரை லட்சம் வாக்குகளையும் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் சங்கரய்யாவுக்குத் தான் போடுவேன் என்று , தனது இடது உள்ளங்கையில் வலது கையால் குத்திக்காட்டி, சத்தம் வர சந்தோசம் பொங்கச் சிரித்தார்.அவரது முகம் மேலும் எப்படிச் சிவந்தது என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது. அவர் வெள்ளையாக இல்லை . சிவப்பாகவும் இல்லை. அது ஏதோ சந்தனமும் ரோஜாவும் கலந்த நிறம். அவர் சிரித்தபோதும் , சினந்தபோதும் அந்த நிறம் அவரைச்சுற்றி ஒளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். (MGR குறித்து எனக்கு எப்போதும் எந்த மயக்கமும் இருந்ததில்லை என்பதை, எனது வாசகர்கள் மறந்து விடக்கூடாது. இன்னும் சொல்லப் போனால்,"அவர் நாற்பது ஆண்டுகள் திரையுலகத்தை ஆட்சி செய்தார்;  பத்தாண்டு காலம் முதலமைச்சராக நடித்தார்"என்பதே அவரைப் பற்றிய எனது விமர்சனம்) சங்கரய்யா உட்பட எல்லோரும் மலர்ந்து சிரித்தார்கள்...
MGR இன் புன்னகைக்கு மயங்கிக் கூட்டம் கடல் அலை போல ஆர்ப்பரித்தது. 

கரவொலியும் , சிரிப்பும் அடங்கக் காத்திருந்தார்.சட்டென்று கூட்டத்தைப் பார்த்து," எனக்கொரு சத்தியம்செய்து கொடுப்பீர்களா?" என்று கேட்டார். கூட்டம் செய்வோம் செய்வோம் என்று , ஒழுங்கற்று வீசுகிற காற்றுப் போல ஊளையிட்டது .

என்ன சத்தியம் கேட்டார் ? 

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்  

Friday, June 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் -20



MGR க்குப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசத் தெரியாது என்றொரு பொதுக் கருத்து எல்லோருக்கும் எப்போதும் இருந்தது.ஆனால் அன்றைக்கு MGR அதைப் பொய்யாக்கினார்.
வழக்கமான முறையில் , நிகழ்ச்சிக்கான நோட்டீஸில் இருந்த பெயர்களை வாசித்து முடித்ததும், அர்த்தமுள்ள ஒரு பேச்சைத் துவங்கினார் .

மூன்றே ஆண்டுகளில் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது நியாயமற்ற செயல் என்பதை தந்து பேச்சின் சாரமாக்கினார் .
"எதற்காக எனது ஆட்சியைக் கலைத்தீர்கள் ? இந்த இராமச்சந்திரன் ஊழல் செய்தானா " ... என்று கேட்டுவிட்டு சிலநொடிகள் மௌனம் காத்துவிட்டு "இல்லை" என்று தனியே சொல்லி நிறுத்தினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. பிறகு, தனது திறனைக் காட்டினார் MGR.
லஞ்சம்  வாங்கினேனா ? நிறுத்திக் கொண்டார் . கூட்டம் இல்லை என்றது .
நிர்வாகத்தில் தலையிட்டேனா ?
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினேனா ?
என் நண்பர்களுக்கு ஏதாவது சலுகை காட்டினேனா ?.... கேள்விகளை மட்டும் அவர் கேட்க, கூட்டம் சீற்றத்துடன் இல்லை இல்லை என்று முழங்கியது ..

நான் தவறு செய்து, நீங்கள் என்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் நான் தேர்தலில் நிற்காமல் , விலகி உங்களுக்கு வழிவிட்டு இருப்பேன். எந்தத் தவறும் செய்யாத என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் ? எதற்காக எனது அரசைக் கலைக்க வேண்டும்?என் மீது என்ன வழக்கு இருக்கிறது ? எந்த விசாரணைக்கமிஷன் முன்பு நான் நிற்கிறேன் ? 

இப்படிக் கேட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்து வழக்குப் போடுவோம் என்கிறார் அருமை நண்பர் கருணாநிதி ... நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன் .. நீங்கள் முதலில் கோதுமை பேர ஊழலில் இருந்து வெளியே வாருங்கள் ... அவர் பேசப் பேச கூட்டம் குதியாட்டம் போடுகிறது.

கூட்டம் கைதட்ட , ஆரவாரம் செய்யப் போதுமான நேரமும் இடைவெளியும் தந்து பேசிக்கொண்டே போகிறார் MGR .

" பூச்சி மருந்து ஊழலில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் ... தன் மீதான குற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான், இனிமேல் தன்  வாழ்க்கை முழுவதையும் செலவிட வேண்டும்  என்பதை நண்பர் கருணாநிதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ."

எனது அரசை எதற்காக நீக்கினார்கள் என்று எனக்குத் தெரியும் ... என்று சில நொடிகள் நிறுத்தினார் . கூட்டம் அமைதி காத்தது ." என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதால் தான் எனது ஆட்சியைக் கலைத்தார்கள் " என்றார். இந்தமுறை கூட்டத்தை நோக்கி, அரைவட்டமாகக்  கையைக் காட்டினார் . கூட்டம் மதம்கொண்ட யானைபோலப் புழுதி பறக்கப் புரண்டு படுத்தது .

கருணாநிதியைப் பற்றிப் பேசிய MGR , தனது ஆட்சியைக் கலைத்த இந்திராகாந்தியைக் குறித்து அந்தக் கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை .அந்தத் தேர்தல் பிரச்சாரம் முழுவதையும் அந்த தந்திரத்தைக் கடைப்பிடித்தார் .  ஆட்சிக்குத் திரும்ப வந்தால் இந்திராகாந்தியோடு நல்லுறவு வைத்துக்கொள்ளுவதற்கான வாசலைத் திறந்து வைத்துக்கொண்டே , பேசிக் கொண்டிருந்தார் MGR . 

அந்தத் தந்திரம் பலித்தது . தேர்தலில் வென்றதும் , கருணாநிதிக்கும் இந்திராகாந்திக்கும் இருந்த உறவை முறித்துவிட்டுத் தான் போய் மீண்டும் இணைந்துகொண்டார் MGR .  

கருணாநிதிக்கும் தனக்குமான பகைமையைத் தான் பிரச்சாரத்தில் முன்னிறுத்தினார் . எனது நண்பர் , அருமை நண்பர் என்று தான் கருணாநிதியைப் பற்றி எப்போதும் குறிப்பிட்டார் . தி மு க என்ற கட்சியின் பெயரைச் சொல்லாமல் தவிர்த்தார். 

வழக்கமாக திமுக மேடைகளிலும் , பிற பலகுரல் மன்னர்களும் MGR இன் குரலைப் பகடி செய்கிறபோது என்ன பேசுகிறோம் என்பதைப் புரியாததுபோல் பேசிக் காட்டுவார்கள் . அது உண்மையல்ல . துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு , அவரது தொண்டையிலேயே ஒரு தோட்டா தங்கிவிட்டபிறகு , அவரது குரலில் ஒரு மாற்றம் இருந்ததே தவிர , அவர் பேசும்போது சொற்கள் தெளிவாகத்தான் கேட்டது . தன் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்துகொண்டு , சற்றே நிறுத்தி நிறுத்திப் பேசிப்போகும் பாணியை அவர் கடைப்பிடித்தார் . தெளிவாக, துல்லியமாக, தந்திரமாக, கண்ணியமாகத் தனது பேச்சை அமைத்துக் கொண்டார் .

அந்த பாணியின் முழுமையான , அடர்த்தியான உரையைத் தான் அவர் மதுரை கிழக்குத் தொகுதியில் நிகழ்த்தினார்.

இடது சாரிகளுக்கும் தனக்குமான நட்பைப்பற்றி பேச ஆரம்பித்தார் . அதைக் கூட்டணி உறவு என்று அவர் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை . இடதுசாரிகள் தனது நண்பர்கள் என்றார் . அதோடு நிற்கவில்லை . எத்தகைய நண்பர்கள் என்று விவரித்தார் . அதன் பொருட்டு நட்பு  குறித்தும் , நண்பர்கள் குறித்தும் ஒரு கருத்தை விரிவாக , ஒரு ஆய்வு போல ,அந்தக் கூட்டத்திற்கு விளக்கினார் . இப்போது போல அப்போது நேரக் கட்டுப்பாடு ஏதுமில்லை . இந்தக் கூட்டம் முடிந்ததும் திரும்ப நேரே ஹோட்டலுக்குப் போவது தான் அவரது நிகழ்ச்சி நிரல் .
நிதானமாக , சாகவாசமாக , பதட்டமோ , தடுமாற்றமோ எதுவும் இல்லாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் பேசினார் என்பது , எனக்கு அப்போதும் , இப்போதும்  வியப்பான ஒன்றுதான். 

" நண்பர்கள் மூன்று வகைப்படுவார்கள் " என்று ஆரம்பித்தார் . 

எப்படி வகைப்படுத்தினார் ?

அப்புறம் சொல்லுகிறேன் ...

- பாரதி கிருஷ்ணகுமார். 












Thursday, June 11, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 19



ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...
கூட்டத்தில் எழுந்த ஆரவாரமும் , MGR மற்றும் மேடையில் இருந்தவர்களின் முகக்குறிப்பை உணர்ந்து பின்னே திரும்பிப் பார்த்தேன் .

எனக்கு நான்கைந்து வரிசைகள் தள்ளி நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் நின்றுகொண்டு இருந்தார் . அவர் தனது  இடது கையால் தனது வலது முழங்கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்க , உயர்த்திய அவரது வலது உள்ளங்கையில் ஒரு அருநெல்லிக்காய் அளவுள்ள கற்பூரம் கனன்று எரிந்து கொண்டிருந்தது . அடுத்த கணம் அவர் MGR க்கு நேரே தனது வலது கரத்தை உயர்த்தி , MGR க்கு திருஷ்டி கழிக்க ஆரம்பித்தார்.  கூட்டம் வெறிகொண்டு கத்திக் கைதட்டிப் புகழ் முழக்கம் செய்துகொண்டே இருந்தது . இடமிருந்து வலமாக , வலமிருந்து இடமாக மூன்று முறை அவர் சுற்றினார் . சிறிதும் பதட்டமோ , எரிச்சலோ , வலியோ ... என எந்த உணர்ச்சியும் இன்றி , பக்திப் பெருக்கோடு அதைச் செய்து கொண்டிருந்தார் . 

மேடையில் இருந்தவர்களில் தோழர் NS மட்டும் பதறிப்போய் அவரை அமருமாறு செய்கை காட்டிக்கொண்டே இருந்தார் . அந்த மனிதரோ MGR ஐத் தவிர எதையும்,யாரையும் பார்க்கவில்லை. நான் கீழிருந்து பார்த்தபோது , MGR இன் கருப்புக் கண்ணாடியில் அந்த எரியும் கற்பூரத்தின் பிம்பம் தெரிந்தது . நான் கருப்புக் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும்  , அந்த மனிதனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . MGR என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறிய இயலாமல் , எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அவரது கண்கள் தெரியாதபடி அவரது கருப்புக் கண்ணாடி இருந்தது . அதை அவர் அணிந்திருக்கவில்லை என்பதைப்போலவும் மாறாக அவரது உடலுறுப்பே போலவும்,அது இருந்தது .

 MGR ஆடாமல் , அசையாமல் அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் .  பதறவில்லை . தடுக்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் அதை அவர் மானசீகமாக ஏற்றுக்கொண்டு இருந்தார். கருப்புக் கண்ணாடிக்கு வெளியே தெரிந்த அவரது முகம் அதைத்தான் உணர்த்தியது .எனக்கு MGR மீது தீராத கோபமும் , அருவருப்பும் தோன்றியது . அந்த உணர்ச்சி எனக்கு இப்போதும் இருக்கிறது. 

திருஷ்டி கழித்து , தீபாராதனை  முடிந்து அந்த மனிதர் அமைதியாகப் பதட்டமே இல்லாமல் தரையில் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார் .ஆனால்,இம்முறை அவரது இடதுகை வலது மணிக்கட்டைப் பற்றி இருந்தது. முகத்தில் வலியின் எரிச்சலின் ரேகை  மெல்லிதாகப் பரவி இருந்ததை நான் கண்டேன். 

இந்தத் தருணத்தில்,இது தொடர்பில் இன்னொன்றை எழுத விரும்புகிறேன். கோடை வெயிலுக்கு இதம் வேண்டி ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இரவும் பகலும்,24 மணி நேரமும் ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை எப்படிப் புரிந்துகொள்வது? தனது உணர்ச்சிகளை மறைப்பதற்கான கேடயமாக கருப்புக் கண்ணாடியை ஒருவர் அணிகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.வியக்கத்தக்க முறையில் MGR கருப்புக் கண்ணாடியை அணிந்துக்கொண்டது போலவே,அவரது அரசியல் எதிரியான கருணாநிதியும் அணிந்துகொண்டே இருந்தார். நானறிந்தவரை உலகிலேயே 24 மணி நேரமும் கருப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டே இருந்தவர்கள், அவர்கள் இருவர் மட்டுமே.அவர்களோடு உரையாடும்போது,அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டறிவது கடினம்.எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறிவது மிக மிகக் கடினமானது.

மேடையில் வந்து அமர்ந்து வலது காலை இடதுகாலின் மீது போட்டுக்கொண்டதைத் தவிர MGR மற்ற நேரம் முழுவதும் ஆடாமல் அசையாமல் மெழுகு பொம்மை போல் உட்கார்ந்து இருந்தார். இருபது முப்பது நிமிடங்களுக்குப் பிறகு நாற்காலியில் இருந்து சற்று முன்னே வந்து இரண்டு கைகளாலும் வேட்டியைப் பிடித்து உயர்த்திக்கொண்டு இடது காலைத் தூக்கி வலதுகாலின் மீது போட்டுக்கொண்டார். இந்த ஒரு அசைவுக்காகக்,கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்து முழங்கிச் சிலிர்த்தது.
  
ஓரிருவர் பேசி முடித்ததும் ,தோழர் NS பேசினார். தோழர் NS பேசத் துவங்கியதில் இருந்து முடிக்கிறவரை அவரது பேச்சை,லேசாகத் தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு,முழுவதுமாக கவனித்தார் MGR. தோழர் NS பேசி முடித்ததும் MGR ஐப் பேச அழைத்தார்கள்.கட்டியிருந்த வேட்டி கசங்காமல் விருட்டென்று எழுந்து,ஒலிபெருக்கிக்கு அருகே போனார் MGR. அவர் பேசுவார் என்று அறிவித்ததிலிருந்து, பேசத் துவங்குகிற வரை கூட்டத்தின் பேரிரைச்சல் குறையவே இல்லை. 

தனது வழக்கமான, "ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறப்புக்களே" என்றதும் கூட்டம் மேலும் ஆவேசமுற்று முழங்கியது. 

அவரே கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு செய்கையால் பணித்தார். "அவர் சொன்னால் மட்டுந்தான் கேட்போம்" என்பது அந்தக் கூட்டத்தின் பண்பாக இருந்தது. கூட்டம் ஆரவாரம் குறைந்து அவரது பேச்சைக் கேட்கத் துவங்கியது.

MGR க்குப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசத் தெரியாது என்றொரு பொதுக் கருத்து எல்லோருக்கும் எப்போதும் இருந்தது.ஆனால் அன்றைக்கு MGR அதைப் பொய்யாக்கினார்.

என்ன பேசினார்?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.        

Tuesday, June 9, 2020

மானமிகு கல்வி அமைச்சருக்குத் திறந்த கடிதம் -02



மானமிகு கல்வி அமைச்சருக்கு!
உங்களுக்கு இது எனது இரண்டாவது கடிதம்.

எனது முந்தைய கடிதத்தை நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை.
படித்திருந்தாலும் பயன் ஏதுமில்லை.

ஏனெனில் 10ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடந்தே தீரும் என்றும்,
அதற்கு "முதலமைச்சரே" ஒப்புதல் தந்து விட்டதாகவும் நீங்கள் அறிவித்து விட்டீர்கள்.

யாரோ பெற்றோர்கள் தொடுத்த வழக்கில், கல்வித் துறையின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று நீதியரசர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால்,இப்போது மீண்டும் ஒரு வழக்கு வந்திருப்பதாகவும் விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.என்ன தீர்ப்பு வருமோ? நீதிமன்றங்களில் தீர்ப்பு வருமென்று தெரியும்.நீதி கிடைக்குமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்? அது நடக்கிறபடி நடக்கட்டும்...

எதற்காகத் தேர்வுகள் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்பதற்கான காரணங்கள்  எதையும் நீங்கள் இதுவரை சொல்லவில்லை.இது உங்கள் அதிகார மமதையைத் தவிர வேறு எதையும் உணர்த்தவில்லை.

எந்தக் கேள்விக்கும் , யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் உங்களுக்கில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்.அது உண்மையல்ல.ஒரு ஜனநாயக நாட்டில் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை , பொறுப்பு. வெளியில் சொல்லமுடியாத காரணங்களுக்காகத்தான் நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று உங்களைப்பற்றி தவறாகக் கருதுவது பற்றிக் கூட நீங்கள் கவலைப்படவில்லையா?

அவசர அவசரமாக தேர்வுகளை நடத்தி , தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு , பள்ளிகள் துவங்கும் தேதியையும் அறிவித்தால் தான் , முதல் பருவத்துக்கான கட்டணமும் , வேறு வகையான கட்டணங்களும் வசூலிக்க முடியும் என்று சில தனியார் பள்ளிகள் விரும்புவதாகவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நீங்களும் உங்கள் துறையில் சில அதிகாரிகளும் "கடுமையாக உழைத்து" , பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று,பலர் பகிரங்கமாகப் பேசுவதை ... நான் நம்பவில்லை. ஒரு மாநிலத்தின் கல்வி அமைச்சரும் , அவரது அமைச்சகமும் அப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை , ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும் எப்படி நம்புவது?

ஏன் தேர்வுகள் நடத்தக்கூடாது என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள்...



  • கொரோனா நோய்த் தோற்றும்,கொரோன உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் தேர்வுகள் தேவையற்றவை. அதுமட்டுமன்றி சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது குழந்தைகளுக்குச்  சாத்தியமே இல்லை.
  • பொதுப் போக்குவரத்து இன்னும் சீராக இயங்கத் துவங்கவில்லை.குழந்தைகள் எப்படித் தங்கள் இல்லங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து திரும்ப இயலும்? 
  • சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய அதிகம் கொரோனா பாதித்த பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு என்று ஏற்கனவே அறிவித்த பிறகு, இப்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 நடக்கும் என்று அறிவிப்பது கோமாளித்தனம் அல்லவா ?
  • குழந்தைகள் தேர்வு மையங்களுக்கு யார் துணையோடு எப்படி வருவார்கள்? உணவு குடிநீர் இவைகளை எங்கு பெறுவார்கள்? யார் துணையுடன் எப்படித் திரும்பப் போவார்கள்?
  • ஏற்கெனவே விடுதிகளில் தங்கிப் படித்த குழந்தைகள் என்ன செய்வார்கள்?
  • கொரோனா விடுமுறை துவங்கியதும் பெரும்பாலான கிராமத்து,மலைவாழ் ஏழைக் குழந்தைகள் விவசாய வேலைகளுக்குச் சென்று விட்டதைத் தாங்கள் அறிவீர்களா? அவர்களுக்கு எப்படி தகவல் போகும்?
  • ஏற்கெனவே நீங்கள் அறிவித்த ஜூன் 1, பிறகு ஜூன் 15 என்கிற ஒத்திவைப்பு குறித்த அறிவிப்புகளே அவர்களுக்குப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுவும் உங்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள      மலைப்பகுதிக் குழந்தைகள் எல்லோரும் கரும்பு வெட்டும் வேலைக்கு போனது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? தெரியும் என்றால் , அதற்குப்பிறகும் தேர்வுகள் நடத்துவது இரக்கமற்ற செயல் அல்லவா ? தெரியாது என்றால் நீங்கள் எதற்குக் கல்வி அமைச்சராக இருக்கிறீர்கள்?  
  • நகர்ப்புறக் குழந்தைகளிலும் ஆகப் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் நேரத்தை அலைப்பேசி,மற்றும் தொலைகாட்சி முன்பு தான் செலவிட்டது என்பதும் உங்களுக்கு தெரியாதா?
  • ஏற்கெனவே கற்பித்ததை,கற்ற பாடங்களை மீண்டுமொருமுறை படிக்காமல்,வாசிக்காமல்,தேர்வெழுதுவது குழந்தைகளுக்குக் கடினமானது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?
  • தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது குழந்தைகளின் மனநிலை சீராக இருப்பதற்கு மிக மிக அவசியமானது என்று மனநல மருத்துவர்கள் கூட்டாக அறிக்கை வெளி யிட்டது உங்கள் கவனத்திற்கு வரவே இல்லையா?
  • இவ்வளவு கெடுபுடிகளுடன், இந்தத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் உங்கள் "கல்வித்தரம்" உயரும் என்று நீங்கள் மெய்யாகவே நினைக்கிறீர்களா?
  • கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் (2017-95.2% , 2018-94.4% , 2019-93.6%)மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் சதவீதம் 94.4% என்றால்,தேர்வுகளே எதற்கு என்று உங்கள் அறிவிற்குத் தோன்றவே இல்லையா? மீதமுள்ள 5.6% சதவீதம் மாணவர்களையும் சேர்த்துத் "தேர்வுகளே இல்லாமல் அனைவரும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதால் என்ன இழப்பு வந்து விடப்போகிறது?"
  • கல்வி வணிகத்திற்கு உதவும் பொருட்டே நீங்கள் அவசர அவசரமாக இந்தப் பணியைச் செய்கிறீர்கள் என்று குற்றம் சுமத்துவது தவறில்லை தானே?
  • மாணவர்களின் உயிர் எங்கள் உயிரை விட விலைமதிப்பற்றது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்று படித்தேன்.அதை நீங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இங்கு எவருக்கும் இல்லை.
  • நீங்கள் மீறித் தேர்வை நடத்தினால் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் என அனைத்துப் பிரிவினர்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து இந்த முடிவை நீங்கள் மேற்கொள்கிறீர்கள்.
  • இதன் மூலம் அனைத்துப் பிரிவினருக்கும் மிகுந்த மன உளைச்சலையும்,நடைமுறைத் துன்பங்களையும் நீங்கள் பரிசாகத் தருகிறீர்கள்.
  • இதன் காரணமான இந்த ஆண்டு    தேர்ச்சி விகிதம் குறைந்து பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியே தூக்கி எறியப்படும் பாவத்திற்கும் நீங்கள் காரணமாக  இருக்கப்போகிறீர்கள்.

நீங்கள் 
தேர்வுகளை நடத்துங்கள்.
குழந்தைகளின் கழுத்தில் உங்கள் முழங்காலை வைக்கிறீர்கள். 
எங்களால் சுவாசிக்க முடியவில்லை என்ற, ஏழைக்குழந்தைகள், கற்றல் திறனில் மிதமான ,கற்றல் திறனில் பின்தங்கிய    குழந்தைகளின் குரல் எங்களுக்குக் கேட்கிறது.

ஏறி மிதிப்பவர்களுக்கு, எப்போதும் ஏழைகளின் குரல் கேட்பதே இல்லை.


இத்தனைக்குப் பிறகும் நீங்களும், உங்கள் துறையில் உங்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அதிகாரிகளும், இறுதி அனுமதி வழங்கும் முதலமைச்சரும் தேர்வு நடத்துவது என்று முடிவெடுத்தால் .... 

ஏனோ..

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கென்று இருந்த பள்ளியறையை மூடிய      குடும்பங்களுக்குத் தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் இல்லை என்கிற ஒரு கதை இப்போது நினைவுக்கு வருகிறது.  

                ****

நேற்றிரவு எழுதிய இந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட மனமில்லை.இது உங்கள் செயல்பாட்டிற்கு ஒரு சாட்சியமாக இருந்துவிட்டுப் போகட்டும்.

இன்று காலையில் இதைப் பதிவேற்றம் செய்யும் தருணத்தில்,10 மற்றும் 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக,தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் அறிவிப்பைக் காண நேர்ந்தது.

இலட்சக்கணக்கான ஏழைக்குழந்தைகளின் சார்பில் தமிழக அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றி.




Friday, June 5, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 18

முந்தைய மதுரைக் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  மாரியம்மன் தெப்பக்குளம்.

தோழர் N S.  அவர்களைச் சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில்  மீண்டும் மீண்டும் சந்திக்க நேர்ந்தது.


அவசரநிலையைத் தொடர்ந்து வந்த 1977 பாராளுமன்றத் தேர்தலில் இந்திராவும் எம் ஜி ஆரும் CPI உம் கூட்டணி . கருணாநிதியோ  ஜனதா கட்சி மற்றும் CPIM உடன் எதிர் அணியில் நின்றார். தமிழகத்தில் 39 இல் 34 இடங்களில் எம் ஜி ஆர் கூட்டணி  வென்றது .

ஆனால் மத்தியில் ஜனதா கட்சி  ஆட்சி.  மூன்றே ஆண்டுகளில் நிலைமை மாறியது. ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. எம் ஜி ஆருக்கும் , இந்திரகாந்திக்கும் இருந்த நல்லுறவும்
முறிந்தது .

இப்போது கருணாநிதியும் இந்திராகாந்தியும் ஓரணியில் நின்றார்கள் .  எம் ஜி ஆர் இடதுசாரிகளோடு எதிர் அணியில் நின்றார் .

1980 பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை கருணாநிதியும் , காங்கிரசும்  வென்றனர் . எம் ஜி ஆர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று துவண்டு போனார் . 

1980 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இந்திராகாந்தி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அ.இ அ தி மு க அரசைக் கலைத்தார் . அ இ அ தி மு க அரசைக் கலைக்க வேண்டும் என்று கருணாநிதியும் கோரிக்கை வைத்தார் . மூன்றே ஆண்டுகளில் அ இ அ தி மு க அரசு கலைக்கப்பட்டது .


நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வந்தது. கருணாநிதியும் , இந்திரா காந்தியும் ஓரணியில் . எம்  ஜி ஆர் இடதுசாரிகளுடன் இணைத்து கொண்டார். நாடளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற உற்சாகம் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் இருந்தது . அதைவிட மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தது காங்கிரஸ் . இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆகியிருந்தார்.


1977சட்டமன்றத் தேர்தலின் போது, அருப்புக்கோட்டை தொகுதியில் நின்று வென்ற எம்  ஜி ஆர்,   1980 சட்டமன்றத் தேர்தலில் CPIM  ஆலோசனையை ஏற்று மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா CPIM இன் வேட்பாளர் . மதுரை மத்திய தொகுதியில் தி மு க காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பழ நெடுமாறன் சுயேச்சை வேட்பாளர் . அவரை ஆதரித்து அந்தத் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்தவில்லை எம் ஜி ஆர் . 


மொத்தத்தில் மதுரை மிகுந்த உஷ்ணமான களமாக மாறி இருந்தது . இரண்டு தேர்தல் பணிகளின் போதும் தோழர் NS உள்ளிட்ட எல்லாத் தலைவர்களையும் அன்றாடம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது .


மதுரை கிழக்குத் தொகுதியில் ,64 ஆவது வார்டில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது . அங்கிருந்த இ எம் எஸ் படிப்பகம் தான் தங்குமிடம் . அந்த வார்டில் என்னோடு இணைந்து பணியாற்ற நாட்டரசன்கோட்டையில் இருந்து தோழர் இளஞ்செழியன் வந்திருந்தார் . அவர் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்தவர் . 


என் உயரம் . நல்ல தமிழ் அறிவு . நல்ல தோழமைப்பண்பு . நல்ல நகைச்சுவை உணர்வு . சேர்ந்து பணியாற்றியது மறக்கவொண்ணா இன்பம் . அங்கு எங்களைப் பார்க்கவரும் பலரில் சௌபாவும் , எப்போதும் இருந்தான் . 


அவ்வப்போது எனது அன்பிற்குரிய ஆசான் , அருமைத்தலைவர் எஸ் ஏ பி யும் அங்கு வருவார் . நான் அவருக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமாகி  நட்பும் தோழமையும் வளர்ந்து பூத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை .


அவர் இளஞ்செழியனின் நலம் காணவே அங்கு வருவார் என்பதை நான் அறிவேன் . அது குறித்து இளஞ்செழியனுக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது . இரவெல்லாம் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் . பல இரவுகளில் சேகர் , தங்கமாரி , சௌபா என யாராவது சேர்ந்து கொள்ளுவார்கள் . பெரும்பாலான சமயங்களில் எல்லோரும் இருப்பார்கள். என்னைத் தேடிவரும் என் நண்பர்கள் தோழர்கள் குறித்து இளஞ்செழியன் எப்போதும் எந்தப் புகாரும் சொன்னதில்லை . மாறாக அகமிக மகிழ்ந்து அரவணைத்துக் கொண்டார் . நாங்கள் எல்லோருமே எந்த வருமானமும் இல்லாத , அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவர்கள்.எனது நண்பர்கள் என்னைப் பார்க்க வருவது குறித்துச் சொல்லப்பட்ட புகார்களை இளஞ்செழியன்  இடது கையால் தள்ளினார் . 


கடுமையாகத் தேர்தல் பணி செய்தோம் . வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பது , வீதிகளில் சின்னம் வரைவது , சுவர் விளம்பரங்கள் எழுதுவதை உறுதி செய்வது , ஓவியருக்குத் தேவையான உதவிகள் செய்வது , வீதி வீதியாகப் போய் நிதி வசூல் செய்து அதைப் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பது ,  போஸ்டர்கள் ஒட்டுவது, அதற்கான பசை காய்ச்சுவது ,வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது , வீடுகளுக்குத் தருவதற்கான டோர் ஸ்லிப் எழுதுவது , அதை வீடுகளில் கொண்டுபோய்த் தருவது ,    அன்றாடப் பணிகள் குறித்து கட்சி அலுவலகத்திற்குத் தகவலும் அறிக்கையும் தருவது , மாற்றுக் கட்சியின் பணிகளை கண்காணிப்பது , மதிப்பிடுவது , அது பற்றியும் கட்சிக்குத் தகவல் தருவது , வார்டுக்குள் நடக்கும் மாற்றுக்கட்சிப் பொதுக்கூட்டங்களுக்குப் போவது , அவர்கள் பேசுவதைக் கட்சிக்குச் சொல்லுவது ,தொகுதியின் மற்றப் பகுதிகளில் நடக்கும் சிறந்த பணிகளைக் கண்டு நமது வார்டிலும் அதை அமலாக்குவது , பிரச்சாரத்திற்குத் தலைவர்கள் வந்தால் அவர்களுடன் இணைந்து செல்வது , அவ்வப்போது ஒலிபெருக்கி இல்லாமல் தெருமுனைக் கூட்டங்களில்  உரையாற்றுவது , அவ்வப்போது அழைக்கப்படும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுவது ... 

 எனப் பலப்பல பணிகளைச் செய்துகொண்டே இருந்தோம் . கடின உழைப்பின் அருஞ்சுவையை அருந்திக்கொண்டே இருந்த நாட்கள் அவை. 

ஆனால் கூட்டணியில் இருந்த அ இ அ தி மு கவின் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் எங்களோடு பணியாற்றவில்லை . அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிட்ட மேற்குத் தொகுதிக்குக் குடிபெயர்ந்து போய் விட்டார்கள் . நாங்கள் கட்சியில் புகார் சொல்லுவதும் , கட்சி அ இ அ தி மு க தலைமைக்குப் புகார் சொல்லுவதும் , உடனே இரண்டு நாட்கள் எங்கள் கண்களில் படத் திரிவதும் , பிறகு காணாமல் போவதும் என்று நாடகம் நடந்துகொண்டே இருந்தது .


இரண்டு கட்ட வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது . இப்போது போல பிரச்சாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு ஏதும் அப்போதில்லை . கலைஞர் இரவு ஒரு மணிக்கும் , எம் ஜி ஆர் அதிகாலை மூன்று மணிக்கும் கூட வாக்குச் சேகரிக்க வருவார்கள் . ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து நிற்பார்கள் . முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது .


இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வந்தது மதுரை . வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் இருந்தபோது , தோழர் சங்கரய்யாவை ஆதரித்து , மதுரை கிழக்குத் தொகுதியில் , ஒரு பொதுக்கூட்டத்தில் எம் ஜி ஆர் பேசுகிறார் என்று சொல்லப்பட்டது . 


மதுரை கீழவாசலுக்கு அருகில் இருந்த மைனா தெப்பக்குளம் என்கிற இடத்தில் அவர் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டது .

அவரது வருகை மற்றும் பொதுக்கூட்டம் பற்றி விரிவாக , வீடு வீடாக விளம்பரம் செய்யுமாறு பணிக்கப்பட்டோம் . எல்லா வகையான விளம்பரங்களும் செய்தோம் . 

கூட்ட நாளன்று மாலையில் எம் ஜி ஆரின் கூட்டத்திற்குப் புறப்பட்டோம் . சௌபாவும் , தங்கமாரியும் உடன் வந்தார்கள் . கூட்டம் அப்போதே அலைமோத ஆரம்பித்து இருந்தது . மேடைக்கு அருகில் போவது கடினமாக இருந்தது . திகைத்துக் கொண்டிருந்தபோது தோழர் MM எங்களை அழைத்தார் . எங்களை மேடைக்கு முன்புறம் முதல் வரிசையில் தரையில் உட்கார வைத்தார் . " அவர் என்ன பேசுறார்னு விரிவா குறிப்பு எழுதி வச்சுக்கங்க... அத நாளைக்குத் தீக்கதிர்ல போடலாம் " என்று காதில் முணுமுணுத்தார், தோழர் MM . வரவு செலவு எழுதிவைத்த ஒரு காகிதத்தின் பின்புறத்தில் MGR பேசுவதைக் குறிப்பெடுக்கத் தயாரானேன்.நான் என்னை ஒரு பத்திரிகையாளன் ஆக முதன்முறை உணர்ந்தேன் . 


அதுவரை இருந்த கண்கள் அல்ல எனது கண்கள் ... எனது கண்கள்  காதுகள் என எல்லா அவயங்களும் புதிதாக வேறொன்றாக மாறி இருந்ததை உணர்ந்தேன் . ஒரு பத்திரிகையாளனாக ஆகப் போகிறோம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது . அந்த விருப்பம் கல்லூரி நாட்களில் நண்பர்களோடு நடத்திய சிறு பத்திரிகைகளின் தொடர்ச்சி தான் . 


கூட்ட மேடை , அதன் உயரம் , மேடையில் இருந்தவர்கள் , பிரமுகர்கள் , ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டம் எல்லாவற்றையும் கண்கள் அளக்க ஆரம்பித்தது . 


மாலை ஏழு மணிக்குக் கூட்டம் துவங்கும் என்று சொல்லி இருந்தார்கள் . ஆறு மணிக்கே கூட்டம் அலைமோதியது . மதுரை மேற்குத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு , தான் தங்கி இருக்கும் பாண்டியன் ஹோட்டலுக்கு MGR போய்க்கொண்டு இருக்கிறார் என்று தகவல் வந்தபோது மணி எட்டரை . கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது . மேற்கே கீழவாசலைத் தாண்டியும் , கிழக்கே அரசமரம் வரைக்கும் கூட்டம் . கண்ணுக்கு எட்டியவரை கூட்டம் என்பது அதுதான் . 


பாண்டியன் ஹோட்டலில் இருந்து அவரை அழைத்துவர CPMதலைவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது மணி ஒன்பதரை .


பத்து மணி தாண்டிய சில நிமிடங்களில், அந்த இடம் மொத்தமும் பரபரப்பானது . கார்கள் வருவதற்காக , ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த ஒரு பாதையில் கீழவாசலில் இருந்து, பொதுக்கூட்ட மேடை நோக்கி இரண்டு மூன்று கார்கள்   விரைந்து வந்தன.


முதல் காரில் இருந்து தோழர் NS வெளியில் வந்த அதே கணத்தில் இரண்டாவது காரில் இருந்து எம் ஜி ஆர் வெளிப்பட்டார் . தாமதம் ஏதுமின்றி மேடையில் ஏறுவதற்காகப்  போடப்பட்டிருந்த படிகளில் மின்னலைப் போலத் தாவி ஏறினார் . மேடையில் இருந்த விளக்கு ஒளியில் மேலும் மின்னி மின்னி ஒளிர்ந்தார் . மேடையின் முகப்பு வரைவந்து , நான்கு திசையும் நடந்து திரும்பி கரங்களைக் கூப்பி , கரங்களை அசைத்து , புன்னகைத்து ஒரு பெரும் உற்சாக அலையைத் தன் செயல்களால் உற்பத்தி செய்துகொண்டே இருந்தார் . கூட்டம் வெறி கொண்டு கூவிக் கத்தி வாழ்த்தி கரை புரண்டது .


சட்டென அனைத்தையும் நிறுத்திக்கொண்டு தனக்கான  நாற்காலியில் அமர்ந்து கொண்டார் . கூட்டத்தைக் கைகளால் அமைதிப் படுத்தினார் . அவரது ஒவ்வொரு அசைவுக்கும் கூட்டம் ஆர்ப்பரித்தது . கைகளை மீண்டும் சற்று அதிகமாக உயர்த்திக் கூட்டத்தை அமைதி காக்கச் சொன்னார் . கூட்டம் கொஞ்சம் அடங்கியது . NS பக்கமாகத் திரும்பி கூட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார். 


சந்தன நிறத்தில் வேஷ்டி , அதே நிறத்தில் முழுக்கைச் சட்டை . வலது மணிக்கட்டில் , சட்டையின் மீது கட்டிய கைக்கடிகாரம் . வலது கரத்தில் சுருட்டி இறுகப் பிடித்த கைக்குட்டை . வேஷ்டியைத் தழையத் தழையக் கட்டி இருந்தார் . நல்ல புதிய நன்கு பாலிஷ் செய்த கருப்பு கட் ஷூ .எங்கிருந்து பார்த்தாலும் , அவரது கண்கள் தெரியாத அடர்ந்த கறுப்புக் கண்ணாடி .



யாரோ வரவேற்றுப்பேசிக்  கொண்டிருந்தார்கள் .சட்டென 
தனது இருக்கையில் இருந்து சற்று முன்னே வந்து குனித்து பார்த்தார் . மீண்டும் சற்று பின்னே சென்று , உட்கார்ந்தபடியே தனது இரண்டு கைகளாலும் , தனது முழங்காலுக்கு அருகே  , தனது வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு , தனது வலது காலை எடுத்து இடது காலின் மீது போட்டுக் கொண்டார். கசங்காமல் வேஷ்டியை மெதுவாகக் கீழே விட்டார். அதைப் பார்த்துக் கூட்டம் ஆர்ப்பரித்தது .இடது கையின் மீது வலது கரத்தை வைத்துக் கொண்டார் . தோழர் NS பேசுவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக , நான் மிகவும் பதறிப் போன , என்னால் பார்க்கச் சகிக்காத ஒரு செயல் எனக்குச் சற்றுப் பின்னே நடந்தது .

ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...


என்ன அது ...


அப்புறம் சொல்லுகிறேன்... 


- பாரதி கிருஷ்ணகுமார்.