Tuesday, March 31, 2020

நானும் நா . முத்துக்குமாரும் .... ஒரு நினைவுக் குறிப்பு


என்று தணியும் திரைப்படத்தின் தயாரிப்பு துவங்குவதற்கு முன்பே , பாடல் எழுத நா.முத்துக்குமாரை அழைப்பதில்லை என்று முடிவு செய்து இருந்தேன் . ஏனெனில் , சிறு முதலீட்டுத் திரைப்படம் என்பதால் அவன் அப்போது வாங்கிக்கொண்டு இருந்த சம்பளத்தை அவனுக்குத் தர இயலாது என்பதால் அவனை அழைப்பதில்லை என்பதென் முடிவாக இருந்தது . ஆனால் , எந்தப் புதிய கவிதை எழுதினாலும் அது அச்சுக்குப் போவதற்கு முன் எனக்கு வாசித்துக் காட்டுகிற பழக்கம் அவனுக்குண்டு . என் கதைகளின் கையெழுத்துப் பிரதிகளை அது அச்சுக்குப் போகுமுன்னர் அவனுக்கு வாசித்துக் காட்டுவது எனது பழக்கம் . இதுவன்றி எனக்கும் அவனுக்குமான அன்பை பிரியத்தை நெருக்கத்தை அந்தரங்கத்தை எப்படி எழுதியும் யாருக்கும் உணர்த்திவிட இயலாது , எனவே எனது முதல் திரைப்பட பணிகள் குறித்து அவனுக்குச் சொல்லாமல் நான் படப்பிடிப்புக்குப் போக இயலாது . அவனுக்குத்தான் முதலில் சொன்னேன் . கதை கேட்க வேண்டும் என்றான் . இருவரும் சந்திப்பது என்று முடிவானது . வழக்கமாக சந்திக்கிற இடத்தில் சந்தித்தோம் . கதை அவனுக்குப் பிடித்தது . "அண்ணே எல்லாப் பாடல்களையும் நானே எழுதுகிறேன்" என்றான் . எனக்குப் பதட்டமாகி விட்டது . தயாரிப்பாளரிடம் பேசிவிட்டுப் பிறகு தொடர்பு கொள்கிறேன் என்றேன் . படம் சிறு முதலீட்டுப்படம் என்று மெல்லிய குரலில் சொன்னேன் . "அதெல்லாம் பாத்துக்கலாண்ணே " என்றான் . நான் தயங்குவதைக் கண்டறிந்து கொண்டான் . " என்ன யோசிக்கிறீங்க ? " என்றான் . இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாதென்று , தயக்கமின்றி சொன்னேன் . "தம்பி ... இது ரொம்ப சின்ன பட்ஜெட் படம்டா ... உனக்கு சம்பளம் குடுக்குற அளவுக்கு பட்ஜெட் இல்லடா " என்றேன் . முகம் சிவந்து இறுகிக் கோணலாக , " உங்ககிட்ட எவன் காசு கேட்டான் ... அண்ணன் படம் பண்றீங்க .. தம்பி பாட்டெழுதுறேன் " ....என்றான் . மனதில் இருப்பதை மறைக்காமல் வெளிப்படுத்தும் முகம் அவனுடையது . அவனது மனமும் அத்தகையது தான் . சரிடா தம்பி ... நான் ப்ரொடக்சன்ல பேசிட்டு உன்னைக் கூப்புடுறேன் என்றேன் . வலது கையில் இருந்த சிகரெட்டை இடது கைக்கு மாற்றிக் கொண்டு , வலது கையை நீட்டினான் . நானும் வலது கையை நீட்டினேன் . இறுக்கமாக கைகுலுக்கிக் கொண்டோம் . என்னை ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ... நான் மனதில் இருப்பதை மறைத்துக் கொண்டு தான் கரம் குலுக்கினேன் . ஆம் . எனக்கும் அவனுக்கும் இருந்த நட்பையும் அன்பையும் பயன்படுத்தி அவனது கவிதையைக் குறைந்த பணத்திற்குப் பெறுவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன் . அப்போது அவன் பெரும் பணம் தரும் நிறுவனங்களுக்குப் பாடல் எழுதிக்கொண்டு இருந்தான் . அவகாசம் இல்லாமல் சொற்கள் தேடி அவனுக்குள் அலைந்து கொண்டிருந்தான் . சொற்கள் கிடைக்காமல் அன்று . எந்தச் சொல்லைத் தேர்வு செய்வது என்று தவித்துக்கொண்டே இருந்தான் . அவன் தமிழ் இலக்கிய மாணவன் . ஆகச் சிறந்த கவிஞன் . எனவே சொற்களுக்குப் பஞ்சமேயில்லை அவனுக்கு . ஆனால் எளிய மனிதர்களுக்கான எளிய சொற்கள் எளிய நடையில் தான் பாடல்கள் எழுதப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான் . எழுதிய பாடல்களுக்குப் பணம் பெறுவதிலும் அவன் கெட்டிக்காரன் இல்லை என்பது எனக்குத் தெரியும் . அவனுக்குப் பேசிய பணத்தைத் தராமல் இருந்தவர்கள் பற்றி அவன் சொன்ன உண்மைக்கதைகள் நானும் அவனும் மட்டுமே பகிர்ந்து கொண்ட உண்மைகள் . அப்போது கூட அதை அவர்களைப் பற்றிய அவதூறாகவோ புகாராகவோ அல்லாமல் தகவலாக மட்டுமே சொல்லும் மாண்பும் அவனுக்கு இருந்தது .இது தொடர்பாக எழுத நிறைய இருக்கிறது என்றபோதும் இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல என்பதால் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் . நான் அவனை அழைப்பதில்லை என்று முடிவு செய்தபடியே அவனை அழைக்காமல் இருந்து கொண்டேன் . இசை அமைப்பாளருடன் கலந்து பேசி கவிஞர்கள் யுகபாரதி , தனிக்கொடி ஆகியோரை அழைத்து பாடல்கள் எழுதி வாங்கிக்கொண்டு படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டேன் . படப்பிடிப்புக்குப் புறப்படுவதை முத்துக் குமாருக்குச் சொல்லாமல் தவிர்த்தேன் . யுகபாரதி , தனிக்கொடி ஆகிய இருவருக்கும் கூட நல்ல சம்பளம் கொடுத்தேன் என்று சொல்லிவிட முடியாது . சிறு முதலீட்டுப்படம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தப் படத்திற்கு இருந்தது . நான் தந்த சிறு தொகையைப் பெற்றுக்கொண்டு எனக்காகப் பாடல் எழுதித் தந்த யுகபாரதியும் , தனிக்கொடியும் எப்போதும் என் அன்பிற்கு உரியவர்கள் , படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது . முத்துக்குமார் அழைத்தான் . வழக்கம் போல ... "அண்ணே என்று அழைத்து நிறுத்தினான் . நானும் தம்பி என்று அழைத்து நிறுத்திக் கொண்டேன் . எங்க இருக்கீங்க என்றான் . அருப்புக்கோட்டை என்று நிறுத்திக்கொண்டேன் . ஏதும் மீட்டிங்கா என்றான் . இல்ல தம்பி ஷூட்டிங் என்றேன் . ஷூட்டிங்கா என்று திகைப்போடு கேட்டான் . என்கிட்டே சொல்லல என்றான் ... பாட்டு கேக்கல என்றான் ... இதற்குப் பிறகும் மறைக்கலாகாது என்பதால் தம்பி அடுத்த படத்துக்கு எழுதுடா என்றேன் ... " அண்ணே ... உங்க முதப் படத்துல எம் பாட்டு இல்லாம இருக்கலாமா ... காசு நான் கேட்டனா ... அண்ணன் படத்துல நீ எதுக்குப் பாட்டு எழுதலன்னு யாராவது கேட்டா காசுப் பிரச்சனைன்னு சொல்ல சொல்லுறீங்களா ....இந்த பாருங்க எம் பாட்டு இல்லாமா உங்க படம் வரக்கூடாது ... வீட்டு வாசல்ல உண்ணாவிரதம் இருப்பேன் எனக்கு situation சொல்லுறீங்க ... நான் பாட்டு எழுதுறேன் .. நாளைக்கு இதே டைம் கூப்புடுறேன் என்றான் ... தம்பி என்றேன் தயக்கமாக ... வேற பேசாதீங்கண்ணே என்றான் உறுதியாக ... சொன்னபடி மறுநாள் அழைத்தான் . அவன் பாடல் எழுதவென்று ஒரு சூழலை உருவாக்கி கதையில் சேர்த்து அவனுக்குச் சொன்னேன் . இசை அமைப்பாளருடன் பேசி இரண்டொரு நாளில் பாடல் எழுதித் தந்தான் . கதையில் வரும் காட்சியை மட்டும் மனதில் கொள்ளாமல் மொத்தக் கதையையும் மனதில் கொண்டு ஒரு சிறந்த பாடலை எழுதித் தந்தான் . இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அந்தப் பாடலைப் படமாக்கினேன் . எங்கள் பொருளாதார வரம்புக்குள் அந்தப் பாடலைப் படமாக்கினோம் . ஒரு பரந்த நிலப்பரப்பில் அந்தப் பாடலைப் படமாக்க எண்ணி இருந்த நாளில் செல்வி ஜெயலலிதா இறந்து போனார் . படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டிய நிலை வந்தது . அது பெரும் பொருள் இழப்பை உருவாக்கும் . எனவே நண்பர் ஒருவரின் தோட்டத்தில் , பாழடைந்த பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட ஒரு குடவுனில் இரவில் படமெடுத்து முடித்தோம் . படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு சிறிய தொகையை அவனுக்குத் தந்தேன் . அவன் மறுத்தான் . நான் வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தேன் . படம் முடிந்தபின்னர் படத்தின் நீளம் குறித்த பிரச்சினையில் அந்தப்பாடல் காட்சி நீக்கப்பட்டு விட்டதைத் தடுக்க இயலவில்லை . அது நீக்கப்பட்டு விட்டதை நான் அவனுக்குச் சொல்லவில்லை . பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது அவன் உடல் நலம் குன்றி இருந்தான் . எனவே அவனால் விழாவுக்கு வர இயலவில்லை . மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி அவனது பாடல் இன்றிப் படம் வந்தது . படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகவில்லை என்பதையும் மிகக் குறைந்த அரங்குகளில் தான் வந்தது என்பதையும் அவனிடம் சொன்னேன் . அவனது பாடல் இடம் பெறவில்லை என்பதை அவனுக்குச் சொல்லவில்லை. ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதி அவன் இறந்தான் . அப்போதும் அவன் பாடல் இடம் பெறாமல் என் படம் வெளியானது அவனுக்குத் தெரியாது .

என்று தணியும் திரைப்படபாடல்.
இந்த இணைப்பில் பாடலைக் கேட்கலாம் :
https://youtu.be/8Qh9DWDZXUw

Tuesday, March 17, 2020

இராஜபாளையம் கம்பன் கழகம் .40 ஆம் ஆண்டு விழா





இராஜபாளையம் கம்பன் கழகம் தனது நாற்பதாவது ஆண்டு  கம்பன் விழாவை, பெப்ரவரி மாதம் பதினைந்து மற்றும் பதினாறு என இரண்டு நாட்கள் கொண்டாடியது .
இரண்டாம் நாள் மூவர் அரங்கம் .

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் .
தேர்ந்த சுவைஞர்கள் .

கம்பன் புகழ் பேசி கன்னித்தமிழ் வளர்த்தோம் .

Wednesday, March 11, 2020

யாழ்ப்பாணம் கம்பன் விழா 2020




எந்த மண்ணுக்கு ஒருமுறையேனும் போகவேண்டும் என்று விரும்பினேனோ அந்த மண்ணுக்குப் போய்வரும் வாய்ப்பு வாய்த்தது .

அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கம்பன் விழாவில் பங்குபெறும் பாக்கியத்தினால் அது நிகழ்ந்தது .

சென்னையில் இருந்து புறப்பட்டு பலாலி விமானநிலையம் போய்ச்சேரும் போது பிற்பகல் பன்னிரண்டு மணி .

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாலுகாத் தலைநகரப் பேருந்து நிலையத்தை விடவும் கொஞ்சம் பெரியது என்று சொல்லிவிட முடியாத விமானநிலையம் .

விமான நிலையத்தைச் சுற்றி , கண்ணுக்குஎட்டிய தூரம் வரை ஒரு குடியிருப்பேனும் இல்லை .

எங்கும் காடுபோல அடர்ந்த மரங்கள் . பாதுகாப்புக் கோபுரங்கள் . முள் வேலிகள் . ராணுவச் சோதனைச்சாவடிகள் .
இராணுவ வீரர்கள் , குடியேற்ற அதிகாரிகள் , காவல் துறையினர் என எல்லோருமே நல்ல தமிழில் பேசினார்கள் .
கண்களைப் பார்த்துத்தான் பேசுகிறார்கள் .

நான் திரும்ப வருவதற்கு என்று தீர்மானித்துப் பயணச்சீட்டு போட்டிருந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக எனது விசாவுக்கான அனுமதித் தேதி முடிந்து இருந்தது .

எனவே எனது விசாவை நீட்டித்துத் தருமாறு குடியேற்ற அதிகாரிகளைக் கேட்டேன் .
நீங்கள் ஏன் முதல் நாளே இந்தியா திரும்பக்கூடாது என்று அவர் என்னைக் கேட்டார் .
அன்றைக்கு விமானப் போக்குவரத்து இல்லையே என்றேன் .
விசாவை நீட்டித்துத் தர இசைந்தார் .

ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டார் .

ஒரு முறைக்கு இரண்டு முறை பயணப் பெட்டிகளைத் திறந்து பார்த்துக் கவனமாகப் பரிசோதித்தார்கள் . கெடுபிடிகள் ஏதுமில்லை .

ஒரு சிறிய பாட்டிலில் , கால் வலிக்கென நான் வைத்திருந்த மஞ்சள் நிறமான மருந்துப் பொடியை எடுத்துத் திறந்து பார்த்த ஒரு பெண் காவல் அதிகாரி அது என்னவென்று தனது பெரிய கண்களால் , எனது சிறிய கண்களுக்குள் கேட்டார் .
விரல் நுழைத்து ஒரு சிட்டிகை மருந்தெடுத்து வாயில் போட்டுக்கொண்டு , என் சிறிய கண்களால் , அந்தப் பெரிய கண்களுக்கு விடை அளித்தேன் .

ஒரு வறண்ட புன்னகையைப் பதிலாகத் தந்தார் . அதே பெரிய கண்களால் போகச் சொன்னார் .

விமானம் அரைமணிநேரம் முன்னதாகத் தரை இறங்கியும் , இந்த நடைமுறைகளால் ஒன்றரை மணிநேரம் கழித்தே வெளியே வர முடிந்தது .

அழைக்க வந்தவர்கள் தவித்துப் போனார்கள் .


அதைவிட என்னோடு விமானத்தில் வந்த ஒரு வயதான மூதாட்டி ரொம்பவும் பரிதவித்துப் போனார் .

ஏனெனில் , எடை அதிகமாக இருந்ததால் தனது இரண்டு புடவைகளை எனது பெட்டியில் வைத்துக்கொள்ளுமாறு ஒரு மூதாட்டி, என்னை சென்னை விமான நிலையத்தில் கேட்டுக்கொண்டார் .

அப்படி யாராவது விமானப்பயணத்தில் கேட்டுக்கொண்டால் உதவாமல் இருப்பதே நல்லது என்பது பயணிகளுக்குத் தரப்படும் அறிவுரை , ஆலோசனை .
ஏனெனில் , அப்படி வாங்கி வைத்துக்கொள்ளும் பொருட்களில் கொண்டு செல்லக்கூடாத பொருட்கள் இருந்தால் வீண்பழி சுமக்க நேரும் .

தனது பிள்ளைகளின் துணை இல்லாமல் முதன்முறையாக விமானப்பயணம் செய்யும் அவர்,  தான் கொண்டுவந்த பொருட்களில் கூடுதல் எடை இருந்ததால் செய்யும் வழி தெரியாமல் தவித்துப் போய் இருந்தார் . சென்னையில் , வழி அனுப்ப வந்து வாசலுக்கு வெளியே நின்ற தனது பிள்ளைகளிடம் போய்க் கேட்டுவிட்டு வந்து என்னைக் கேட்டார் .

நான் சம்மதித்தேன் .

இலங்கையில் எனது விசா நீட்டிப்பும் , சுங்கப் பரிசோதனைகளும் முடிகிறவரை அவரும் காத்திருந்து தவித்துப் போனார் . நன்றி சொல்லிவிட்டுப் போகிறபோது "எண்ட பிள்ளைகள் இல்லாமல் இப்பத்தான் தனியா வந்து நிக்குறன் ... நல்ல வேளை அந்த ஆஞ்சநேயர் தான் எனக்குத்துணையா உங்களை அனுப்பி இருக்கார் " என்றார் .

அவருக்கு ஆஞ்சநேயர் நினைவு வந்ததற்கும் , டார்வினுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்தோம் .

ஆம் . என்னோடு தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மு.இராமச்சந்திரன் அவர்களும் வந்திருந்தார் .

பலாலி விமான நிலைய வாசல் வந்தபோது மணி இரண்டை நெருங்கி இருந்தது . ஆனாலும் சூரியன் தலைக்குமேலே தான்  நின்றது .

வெயில் . அதே சென்னை வெயில் .

ஒருமுறை சுற்றிப் பார்த்தேன் . பலாலி தான் .
யாழ்ப்பாணம் தான் . இலங்கை தான் . வெயில் மட்டும் தான் அதே வெயில் .



இன்னும் போகணும் ....