Saturday, December 7, 2024

உள்ளேகிக் கண்டடையும் உணர்வு - முனைவர் தமிழ் மணவாளன்

உள்ளேகிக் கண்டடையும் உணர்வு ( ஆய்வாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் ,’’கவிச்சக்ரவர்த்தியின் பணிவு”, ஆய்வு நூலினை முவைத்து) முன்னுரை: வாழ்க்கை என்பது இயக்கங்களால் கட்டமைக்கப்பட்டது. இயக்கத்தின் சிறப்பு , பயணங்களால் ஆனது. பயணமே புதிய இடங்களுக்கு எடுத்துச்செல்வது. ஏன்?எல்லைகளுக்கே இட்டுச்செல்வது. உலகின் புதிய பல நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்ததோடு பிற பகுதிகளோடு இணக்கவல்லது. ஓர் ஆய்வென்பது அதிலும் இலக்கிய ஆய்வு மையப் புள்ளியில் நின்று ஆரக்கால் பயணங்களால் முழுவட்ட எல்லைகளை நோக்கிய வேறுபட்ட பயணங்களைக் கோருவது. மேலும் நிற்குமிடத்தே ஆழம் போவது. ஆய்வின் பயணம் புறம் சார்ந்தும் அகம் சார்ந்தும் இருவிதமான போக்குகளைக் கொண்டது. இரண்டுமே அதனதன் அளவில் அவசியமானவையே. சிலையை உருவாக்குவதில் செய்வதும் செதுக்குவதும் போல. பாரதி கிருஷ்ண குமார் எழுதியிருக்கும், “ கவிச்சக்ரவர்த்தியின் பணிவு”, என்னும் ஆய்வு நூலினை வாசிக்கும் நல்வாய்ப்புக் கிட்டிய தருணத்தில் ஆய்வுப்போக்கு குறித்து மனத்தில் எழுந்த எளிய கருத்தோடு வாசிக்கத் தொடங்கினேன். பாரதி கிருஷ்ணகுமார் தமிழ்ச்சூழலில் மிக முக்கியமான சொற்பொழிவாளர் என்பதை யாவரும் அறிவோம். ”அப்பத்தா “,என்னும் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக சிறந்த புனைவிலக்கியவாதி என்பதும் தெரிந்ததே. அந்நூல் , “ஜெய்ந்தன் படைப்பிலக்கிய விருது”, உட்பட பல விருதுகளைப் பெற்றது. மிகச்சிறந்த ஆய்வாளர் என்பதை பாரதி குறித்த ,”அருந்தவப் பன்றி”, நூலின் வாயிலாக நிரூபணமானது. இதோ, “கவிச்சக்ரவர்த்தியின் பணிவு”. ஓர் ஆய்வை நிகழ்த்தும் போது அதற்கான தரவுகள், அந்தத் தரவுகள் வாயிலாக அடையும் கருத்தியல் என்பதே முதன்மையானது. தொடர்ந்து அதன் மீது நிகழ்த்தும் தர்க்கம் முன்னகர்த்தும் காரணியாகிறது. பாரதி கிருஷ்ண குமார் எப்போதும் வியாபித்த வாசிப்பு வெளியில் பறவையெனப் பறந்து முழுத் தரவுகளையும் தன்னிடம் வைத்துக் கொண்டே ஆய்வினைத் தொடங்குபவர் என்பது அவர் முன் வைக்கும் மேற்கோள்கள் நமக்கு உணர்த்தும். ஆய்வின் நிமித்தம் அவர் மேற்கொண்டிருக்கும் வாசிப்பின் விரிவு மிகப் பெரிது என்பதை அறிய முடிகிறது. அதனினும் மேலாக அவரின் தனிச் சிறப்பாக புறத்தரவுகளின் வலிமையோடு மிகப் பெரும் அகப்பாய்ச்சலை நிகழ்த்தவல்லார் என்பதே. ஆய்வுத் தொடக்கம்: “கவிச்சக்ரவர்த்தியின் பணிவு”, என்னும் இந்த ஆய்வு கம்பன் குறித்த ஆய்வு. யார் இந்தக்கம்பன்? தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளில் மிக முக்கியமான படைப்பாகப் போற்றப்படும் கம்பராமாயணத்தை யாத்தவர்.கவிச்சக்ரவர்த்தி என்று போற்றப்பட்டவர்.போற்றப்படுபவர். அத்தகைய கவிச்சக்ரவர்த்தியின் ஆளுமையும் பேருருவும் பெரிதும் பேசப்பட்டவையே. அதற்குள்ளாக இருக்கும் வேறு சில கருத்துகளை எண்ணிப்பார்த்திடும் போக்கே இவ்வாய்வின் இன்றியமையாமையை உணர்த்தும். நூற்றுக்கணக்கான ஆய்வுகள் கம்பராமாயணத்தைப் பற்றியும் கம்பரைப்பற்றியும் நிகழ்த்திய பின்னர் பிறிதுமொரு ஆய்வின் தேவையை அத்தகைய புதிய பார்வையே உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகச் சிறப்புமிக்க தனித்துவமான படைப்புகளாக இராமயணம் , மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங்களே உள்ளன.ஒன்று மண்மீது கொண்ட ஆசை மற்றொன்று பெண்மீது கொண்ட ஆசை.இன்றைக்கும் இவ்வுலகில் நிகழும் பெருவாரியான குற்றங்களுக்கான காரணிகளாக இவையே அமைந்திருக்கின்றன. வான்மீகி ராமாயணம் தவிர்த்து மக்கள் இலக்கியமாகவும் வேறு பல மொழிகளில் ராமாயணக் கதைக்கூறுகளோடு எழுதப்பட்டிருக்கும் பனுவல்கள் குறித்தும் ஆய்வு விவரிக்கிறது. கம்பராமாயணத்தின் மூல நூலான வான்மீகி ராமாயணத்தை முன்வைக்கிறார்.ஆம். கம்பராமாயணம் வான்மீகி ராமாயணத்தை அடியொற்றி எழுதப்பட்ட தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல். இதைக் கம்பனே முன்மொழிவதைச்சுட்டி , ஆயினும் கூட கம்பராமாயணம் எத்தகைய விதத்திலெல்லாம் தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது என்பதை பிகே நிறுவுகிறார்.அது வெறும் மொழிபெயர்ப்பல்ல. வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி ராமாயணத்தைத் தான் கம்பன் தமிழில் எழுதினான் என்ற போதிலும் நம் தமிழ் மண்ணுக்கேற்ற பண்பாட்டு கலாச்சாரப் பின் புலத்தை கவனத்தில் கொண்டு காட்சிகளை விவரிக்கிறான் என்பதை ஆய்வு குறிப்பிடுகிறது. ஓர் உதாரணமாக , இராவணன் சீதையைத் தலைமுடி பற்றித் தூக்கிச்செல்வதாக வான்மீகி எழுதிய போதும் கம்பன் உடல் தொடாது தரையொடு பெயர்த்துப் போனதாக கம்பன் சித்தரிப்பதை மேற்கோளாக்குகிறார். கம்பராமாயணத்தின் தனித்துவத்துக்கு இன்னும் பல மேற்கோள்கள் ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கம்பன் பெருமை: கம்பன் கவிச்சக்ரவர்த்தி என்று போற்றப்படுகிறான் . பெருமைக்குரிய காப்பியத்தஎழுதிய கம்பனை கவிச்சக்ரவர்த்தி என்று வியந்து போற்றினார் நாதமுனிகள் என்னும் குறிப்பினை ஆய்வாளர் சுட்டுகிறார். மேலும் , கம்பன் குறித்து இதுகாறும் தமிழ் கூறும் நல்லுலகம் எத்தகைய புகழ் மொழிகளை பூக்கச் செய்திருக்கிறது என்பதை நினைவு கூறுமிடத்து கம்பனுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட கம்பன் அடிப்பொடி பெரியவர் சா. கணேசன் அவர்களை பெருமிதத்துடன் குறிப்பிடுவது நெகிழ்வு. “புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு”, என்பான் பாரதி. “கம்பன் கவியெலாம் நான்”, என குதூகலித்தவன் அவன். தான் கம்பனை அடைந்ததே மாக்கவி பாரதி மூலமாகத்தான் என்னும் பெருமிதத்தோடு பாரதியின் புகழுரையோடு, தமிழ்த்தென்றல் தி.வி.க, பேராசிரிர்யர் அ.ச.ஞா, ச.து.சு.யோகியார், நீதியரசர் மு.மு.இஸ்மாயில், புதுமைப்பித்தன், பேராசிரியர் அ.சீனிவாசராகவன், பேராசிரியர் வ.சுப.மாணிக்கம் , கவியரசர் கண்ணதாசன், நீதியரசர் எஸ்.மகராஜன், நாமக்கல் கவிஞர்,கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வ.வே.சு.அய்யர் உள்ளிட்ட பல அறிஞர் தம் கருத்துகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. கம்பராமாயண அரங்கேற்றம்: வெண்ணைநல்லூரில் இருந்து சடையப்ப வள்ளல் ஆதரவுடன் காப்பியத்தைப் படைத்தான் என்பது கூற்று.அப்போது இருந்த மதம் சார்ந்த சூழல் கம்பனுக்கு உருவாக்கிய சாதக பாதகங்களைக் கவனத்தில் கொண்டு கம்பன் எதிர் கொண்ட பிரச்சனைகளைப் பேசுகிறது. பேசுவதோடு மட்டுமன்றி அதற்குக் காரணிகளாக இருந்திருக்கச் சாத்தியமான முகாந்திரங்களை அலசி ஆராய்வதே ஆய்வுப் போக்கின் சிறப்பாகும். கம்பராமாயணத்தை எழுதி முடித்தபிறகு அதனை அரங்கேற்றம் செய்வதற்காக மிகப்பெரும் சோதனைகளையெல்லாம் கம்பன் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை வாசிக்கிற போது வாசகனுக்கு மெல்லிய துயர் பரவுவதைத் தவிர்க்க முடியாது. தமிழின் மாபெரும் காப்பியம் என்று இன்றைக்கு நம்மால் போற்றிப் புகழப்படும் கம்பராமாயணம் எதிகொண்ட தடைகள் வியப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்குகின்றன.அதனாலென்ன ,தடைகளை உடைக்கிற போது தானே வெற்றியின் இலக்கு சாத்தியமாகிறது.கம்பனுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. சரி. கம்பன் தன் காப்பியத்தினை அரங்கேற்றம் செய்வதற்காக எதிர் தடைகளையும் சவால்களையும் இத்தனை விவரணையாக ஆய்வில் முன் வைக்க வேண்டிய அவசியம் என்ன எனும் கேள்வி எழுவது இயல்பானதே. ஆய்வின் கருதுகொளாகத் திகழும்,’’கவிச்சக்ரவர்த்தியின் பணிவு’’, என்பதை நிறுவ முனைவதற்கான பாதையின் வாயில் இது தான் என்றால் மிகையில்லை. அவையடக்கம்: “தமிழ் இலக்கிய மரபில் ’அவையடக்கம்’, என்னும் பகுதியை கம்பர் தான் தொடங்கி வைக்கிறார்.ஒரு காப்பியத்திற்கு ‘அவையடக்கம்’, என்னும் பகுதியை எழுதும் மரபு கம்பனுக்கு முன்பு தமிழில் இருந்திருக்கவில்லை”, என்பது பாரதிகிருஷ்ணகுமாரின் ஆய்வுத் திட்பம். ஆம். அடக்கமுடைமை என்னும் தனி அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர், திருக்குறளுக்கு அவையடக்கம் எழுத வில்லை.வள்ளுவனைப் பெரிதும் அறிந்த கம்பன் அவன் பேசாத அவையடக்கம் ஏன் எழுதினான். அப்படி எழுதுவதற்கான சூழல் குறித்த தயாரிப்பே அவன் அரங்கேற்றத்தில் எதிர் கொண்ட சங்கடங்கள், சவால்கள் பற்றிய விவரணைக்கள். சரி. இந்தச் சூழலில் கம்பன் அவையடக்கம் என்பதாக ஆறு செய்யுள்களை பாரதி கிருஷ்ண குமார் முன் வைத்து ஆய்வுக்குட்படுத்துகிறார்.அதுவே ஆய்வின் ஆன்மா. சிலவற்றையேனும் நான் பேச விழைகிறேன். அகச்சான்றுகள்: கவிச்சக்ரவர்த்தியின் பணிவு என்னும் கருதுகோளினை நிறுவும் பொருட்டு பிகே பிறார் கருத்துகளையோ வரலாற்றுப் பதிவுகளையோ முன்வைத்துப் பேசவில்லை. கம்பன் பாடிய அவையடக்கப் பாடல்கள் ஆறினைக் கொண்டே மேலதிக வாசிப்பனுபவத்தின் வாயிலாகவே நிறுவ முனைகிறார்.அதென்ன மேலதிக வாசிப்பனுபவம்.கம்பனின் அவையடக்கப்பாடல்கள் பற்றிய முன் வைக்கப்பட்டிருக்கும் கருத்துகள் மீதான மீள் பார்வையை முன்வைக்கிறார். அதுவே புதிய வெளியைக் கண்டடையும் சாத்தியத்தை உருவாக்குகிறது. அவ்விதமாக பாரதி கிருஷ்ணகுமார் ஆய்வில் தர்க்கிக்கும் சிலவற்றைக் காண்போம். அவையடக்கத்தின் முதல் பாடல். “ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை,முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்”, என்னும்பாடல். இராம காதையென்னும் மிகப்பெரும் பாற்கடலை பூனை போல் முழுதும் குடித்துவிட முடியும் என்று உரக்க சொல்கிறான் கம்பன்.பிற நூலாசிரியர்கள் கம்பன் ஆற்றிய செய்கையை நகைப்புகுரியதென பொருள் கொண்ட போது , பாரதி கிருஷ்ணகுமார், ’அறைதல்’, என்னும் கம்பனின் சொல்லில் நிலை கொள்கிறார். அதன் தீவிரத்தில் தன்னை ஒப்படைக்கிறார். அந்தச் சொல் சொல்வதைக் குறிப்பதன்று.வெற்று மொழிதலுமன்று. உறுதிப்ப்ட உரைப்பது என்பதன் மூலம் கம்பனின் திடமான் வெளிப்பாட்டை நிறுவுகிறார். மற்றொரு பாடலில் மராமரம் குறித்த செய்தி. வான்மீகி அதனை போகிற போக்கில் சொல்லிச் செல்கையில் கம்பன் விவரிக்கிறான். காப்பியத்தில் ஒரு காட்சியில் வரப்போகிற சம்பவத்தை எழுதுமுன்னரே அவையடக்கத்தில் உவமிக்க வேண்டிய மனத்தின் கூறு யாதாக இருக்கும் என்பதை ஆய்வாளர் மிக நுட்பமாக அணுகுகிறார். அது என்ன? அதனை நீங்கள் இந்த ஆய்வு நுலினை வாங்கி வாசிப்பதில் லயிக்க வேண்டும் என்பதால் நான் மேலதிகம் விவரிக்கவில்லை. இப்படி அவையடக்கப் பாடல்கள் ஆறினையும் மீள்பார்வைக்கு ஆய்வாளர் பாரதி கிருஷ்ணகுமார் உட்படுத்தி முற்றிலும் புதிய திறப்பைக் கண்டடைகிறார்.அந்தப்பகுதிதான் ஆய்வின் நுட்பம். ஆய்வின் திட்பம். நான் ஆதிகம் பேசவில்லை. தமிழார்வலர் அனைவரும் வாசிக்க வேண்டும் என்னும் அவாவில் தன் மேலதிகம் பேசவில்லை. முடிவுரை: கம்பனுக்கென்று ஒரு இயக்கமே தமிழ்ச் சூழலில் இயங்குவதை நாம் அறிவோம். கம்பராமாயணம் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.வெளிவந்திருக்கின்றன. கம்பராமாயணத்தின் பாத்திரங்கள் பற்றிய பிரத்யேக பொழிவுகளும் நூல்களும் நிறைய. அவற்றிற்கெல்லாம் அப்பால் பாரதி கிருஷ்ணகுமாரின், ’’கவிச்சக்ரவர்த்தியின் பணிவு”, எவ்விதத்தில் அவசியமாகிறது. கம்பன் மாபெரும் கவிஞன். மாபெரும் காப்பியத்தினை யாத்தளித்தவன். அதன் மீதான கொண்டாட்டங்கள் தான் யாவும். அவன் எதிர் கொண்ட அவனின் சமகாலச் சூழுலை வெளிப்படையாக அணுகுதல் மூலமாகவும். புறச்சேகரிபின் வாயிலாக இல்லாமல் அவனின் பிரதிக்குள் நின்று அகப்பகுப்பாய்வின் மூலமாக ஆய்வை நிகழ்த்தியதன் வாயிலாக இதன் அவசியம் உறுதியாகிறது. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்பான் வள்ளுவன். கம்பன் பெரும் செல்வந்தன். ஆம். கவிச்செல்வர் அவர். கம்பனின் பணிவு, அவன் காலத்தின் பிம்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே வேளை அதனுள் இருக்கும் கவிச்சக்ரவர்த்தியின் கம்பீரத்தையும் நிறுவியிருப்பது தான் ஆய்வின் முழுமை. அவ்விதமாக,கம்பன் குறித்த பல நூறு புத்தகங்கள் வந்திருக்கும் சூழலிலும் பாரதி கிருஷ்ணகுமாரின், ‘’கவிச்சக்ரவர்த்தியின் பணிவு’’, என்னும் இந்த ஆய்வு நூல் முக்கியமான வரவாகவும் யாவரும் வாசித்தே ஆகவேண்டிய ஆவணமாகவும் இருப்பதாக உணர்கிறேன். தமிழுக்கும் கம்பனுக்கும் இந்த நூலின் மூலம் பெருமை சேர்த்திருக்கும் எழுத்தாளர், இயக்குநர், பேச்சாளர், ஆய்வாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள். என்றும் அன்புடன் முனைவர் தமிழ்மணவாளன்

Wednesday, March 6, 2024

Friday, April 14, 2023

Bharathi Krishnakumar #BK #Virudhunagar BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார...

Bharathi Krishnakumar #BK #Avadi BookFair 2023 #பாரதி கிருஷ்ணகுமார் #புத...

Bharathi Krishnakumar #BK#Chennai BookFair பாரதி கிருஷ்ணகுமார் #BK #சித்...

Bharathi Krishnakumar #BK#Chennai BookFair பாரதி கிருஷ்ணகுமார் #BK#சென்ன...

Bharathi Krishnakumar #BK#Chennai BookFair பாரதி கிருஷ்ணகுமார் #BK#சென்ன...

Bharathi Krishnakumar #BK#Chennai BookFair பாரதி கிருஷ்ணகுமார் #BK#சென்ன...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK#Chennai BookFair பாரதி கிருஷ்ணகுமார் #BK#சென்ன...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...

Bharathi Krishnakumar #BK #Dharmapuri BookFair2022 #பாரதி கிருஷ்ணகுமார் ...