Wednesday, December 26, 2012

அன்பின் தனித்த அடையாளம்














 {எட்டயபுரத்தில் பாரதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை }



கடந்த ஆண்டு டிசம்பரில் , எனது முதல் இரண்டு நூல்கள் வெளியாகின .

ஒன்று ஆய்வு .
மற்றொன்று புனைவு .

ஆய்வு நூல் மகா  கவி பாரதி பற்றியது .

புனைவு , எனது பத்து சிறு கதைகள் .

எல்லோருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பினேன் .

பலர் வந்து இருந்து விழாவைச் சிறப்பித்தார்கள் .

பலர் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள் .

அழைப்பிதழ் அனுப்பப் பெற்றவர்களில் ஒருவர் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . சிறந்த வாசகர் .

ஆனந்த விகடனில் வெளியான எனது சிறுகதை ஒன்றினைப் படித்து விட்டு ,அதனைப் பாராட்டும் பொருட்டு என்னோடு தொடர்பு கொண்டவர். அப்படித்தான் எங்கள் அறிமுகம் நிகழ்ந்தது .

 விழா அழைப்பிதழ் கிடைத்ததும் என்னோடு தொலைபேசியில் பேசினார் . தான் வர இயலாதென்றும் , ஆனால் உரிய இடத்தில் அழைப்பிதழைச் சேர்த்து  விடுவதாகவும் சொன்னார் . நான் கேட்டுக் கொண்டேன் . எதுவும் விசாரித்துக் கொள்ளவில்லை .

விழா முடிந்து , இரண்டு வாரங்களுக்குப் பிறகு வந்த கடிதத்தில் மேலே இருக்கிற புகைப்படம் இருந்தது . பேராசிரியர் தான் அனுப்பி இருந்தார் .
அதனுடன் வேறு இணைப்பு எதுவும் இல்லை .

கடிதம் வந்த மறு நாள் பேசினார் . புத்தகம் வெளியான அதே நாளில் , அதாவது பாரதி பிறந்த நாளில் ,எட்டயபுரம்சென்று ,பாரதி பிறந்த இல்லத்தில் , அமைந்துள்ள பாரதி சிலையின் கீழ் அழைப்பிதழை வைத்து அதனைப் பாரதிக்குச்  சொன்னதாகச் சொன்னார் .

பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன் இதை எனக்கு சொன்னதும் , பதில் உரையாட எனக்கு எதுவும் தோன்றவில்லை . இது பாரதி மீதான அவரது  அன்பின் தனித்த அடையாளம் தவிர வேறு எதுவுமில்லை . அந்த அன்பின் தூய்மை என்னையும் அரவணைத்துக் கொண்டது .

பாரதி வரலாற்று ஆசிரியர்களில் தனிச் சிறப்பு வாய்ந்த அமரர் தொ .மு . சி . ரகுநாதனின் மருமகன் தான் பேராசிரியர் திரு . கருணாகர பாண்டியன்.

பாரதி குறித்து ஒரு நூல் வருவதை பாரதியின் கவனத்துக்கும் , கனிந்த ஆசிக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் .

நாங்கள் இருவரும்  இன்னும் நேரில் பார்த்துக் கொண்டதில்லை . ஆனால் பாரதி எங்களை இணைத்திருக்கிறான்.

சோழனும் , பிசிராந்தையாரும் நேரில் பார்க்காமலே அன்பு பூண்டவர்கள் என்று படித்திருக்கிறேன் .அதெல்லாம் வெறும் கதையல்ல .

சார் ..... நீங்கள் பாண்டியன் .
நான் பிசிராந்தை போலும் .  


No comments:

Post a Comment