Wednesday, July 27, 2011

தீக்கதிர் - வண்ணக்கதிர் - பத்திரிகையாளர் அ . குமரேசனின் மதிப்புரை


எனக்கு இல்லையா கல்வி?


ஆவணத் திரைப்படம்
ன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக நீதிமன்ற வாசலில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள். மலங்க மலங்க விழித்து நிற்கிற இவர்களது முகங்களில் வெளிப்படுவது ஒரு அறியாமையும் அடிமைத்தனமும்தான். அந்த அறியாமையும் அடிமைத்தனமும் சுதந்திர இந்திய நாட்டில் கோடிக்கணக்கானவர்களின் முகங்களில் அப்பிக்கொண்டிருக்கின்றன. இரண்டையும் அப்படி அவர்கள் முகங்களிலிருந்து அகற்ற முடியாதபடிக்கு அழுத்தமாக அப்பிவைத்தது எது?

இறைவன் எழுதிய தலைவிதி, முற்பிறவியின் பாவ புண்ணிய பலன் என்று எளிதான பதில்களைச் சொல்லிவிடலாம். கையாலாகாத அந்த பதில்கள் இவர்களது வாழ்க்கையை நிரந்தரமான கேள்விக்குறியாகவே வைத்திருக்கிற உள்நோக்கம் கொண்டவவை. உண்மைக் காரணம்: கல்வி மறுப்பு.

எளிய பாட்டாளிகளான இப்படிப்பட்டவர்களின் மூதாதையரில் ஒருவன் சம்புகன். தனது கல்வி உரிமையை நிலைநாட்ட அந்தக் கறுப்புத் தோலன் முயன்றான். பிராமண வசிஷ்டனின் கட்டளைப்படி, வைஷ்யர்கள் கண்டுகொள்ளாதிருக்க, சத்திரிய ராமன் தன் வாளால் சம்புகனின் கழுத்தை ஒரே வீச்சில் வெட்டியெறிந்தான். ரத்த தாகம் அடங்காத அந்த வாள், காலந்தோறும் சுழன்றுகொண்டே இருக்கிறது. பின்னுக்குத் தள்ளப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாய் அடக்கப்பட்டவர்கள் தங்களது விடுதலைக்கான ஆயுதமான கல்வியைக் கையகப்படுத்த முயன்றபோதெல்லாம் அந்த வாள் புதுப்புது அவதாரங்கள் எடுத்து அவர்களது கட்டை விரல்களையும் கண்களையும் தலைகளையும் கொய்து வந்திருக்கிறது.

இன்றைக்கு, உலகளாவிய முதலீட்டாளர்கள், உள்நாட்டுப் பெரு முதலாளிகள், அவர்களது கூட்டாளிகளான பண்ணை எசமானர்கள் ஆகியோரது விருப்பம், அவர்களது நுட்பமான சுரண்டல்கள் பற்றிக் கேள்வி கேட்காத, அரசியல் உணர்வு பெறாத, ரத்தம் ஓடுகிற எந்திரங்கள் மட்டுமே வேண்டும் என்பதுதான். ரத்த தாகமெடுத்த வாள் இப்போதும் சுழன்றுகொண்டிருக்க, அரசு எந்திரங்கள் அந்த மனித எந்திரங்களை வார்த்துக்கொடுக்கின்றன. வாளின் சுழற்சியில் வெட்டப்பட்டதுதான் கல்விக்காக மத்திய அரசு 3 விழுக்காடு நிதி கூட ஒதுக்காத அராஜகம். வாளின் சுழற்சியில் செதுக்கப்பட்டதுதான், முழுமையற்ற கல்வி உரிமைச் சட்டம். வாளின் சுழற்சிதான் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மொக்கையான சமச்சீர் கல்வி. அதே வாளின் சுழற்சிதான், அதைக் கூட அடைய விடாமல், புதிய பொதுப்பாடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

கல்விதான் விடுதலையின் வாசல். அந்த வாசல் கதவுகள் இவர்களுக்கு மட்டும் அடைக்கப்படுகிறது. இவர்களது உணர்வாக வெளிப்பட்டு, குரலாக ஒலிக்கிறது பாரதி கிருஷ்ணகுமார் படைத்தளித்துள்ள ஆவணத்திரைப்படம்: எனக்கு இல்லையா கல்வி...?

மேடைகளில் கிருஷ்ணகுமார் நிகழ்த்துகிற உரை அனைவரையும் சமுதாய நிலைமைகள் பற்றிய சிந்தனையில் செலுத்திவிடும். அவர் விடுத்திடும் கேள்விகள் சக மனிதர்களின் அவலத்திற்கு நாமும் பொறுப்புதானே என்ற குற்றவுணர்ச்சிக்குள் ஆட்படுத்திவிடும். அவர் எழுப்பிடும் முழக்கங்கள் மாற்றத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று உறுதியேற்க வைத்துவிடும். அதே ஆற்றலுடன் உருவாகியிருக்கிறது, மனித உரிமைக் கல்வி நிறுவனத்திற்காக உருவாகியுள்ள இந்த ஆவணப்படம்.


விடுதலையின் வைரவிழாவைத் தாண்டிய நாட்டில் எளிய மக்களுக்கான கல்விச் சூழல் எப்படியெல்லாம் திட்டமிட்ட முறையில் தரம் தாழ்த்தப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறார் நிறுவனத்தின் தலைவர் முனைவர் வே. வசந்தி தேவி. கல்வி மீட்சி என்பது ஜனநாயக மீட்சி என்று அவர் சொல்வதில் எவ்வளவு ஆழ்ந்த அரசியல் உள்ளடக்கம் இருக்கிறது!

சாதாரண மக்கள் என்றாலே நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுவதே கல்வியிலும் நடக்கிறது என்று கூறும் பேராசிரியர் ச. மாடசாமியின் குரலில் தோய்ந்திருப்பது, உண்மையான சமூக அக்கறையிலிருந்து வருகிற வேதனை. தமிழ்ப்பாடத்தில், மனுநீதிச் சோழன் கதையில், மகனைத் தேர்ச்சக்கரமேற்றிக் கொல்லும் மன்னன் முன்னால் சிவபெருமான் தோன்றுவதாக ஒரு பாடம் சேர்க்கப்பட்டது. எந்தக் குழந்தையாவது சிவன் உண்மையாகவே தோன்றுவாரா என்று கேள்வி எழுப்ப முடியுமா, என்று அவர் கேட்கிறார்.

குழந்தைகளை நேசித்து வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளாமல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடினால் அவர்களை எப்படி ஆதரிக்க முடியும், என்று கல்வியாளர் பிரபா கல்விமணி கேட்கிறார்.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சீருடைகளின் தரம் பற்றி எழுத்தாளர் அழகிய பெரியவன் வைக்கிற குற்றச்சாட்டு, அந்தச் சீருடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சீர்குலைவுகள் பற்றிய விசாரணையாகிறது.

வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அனைவருக்குமான கல்வி என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டே வந்ததை சுட்டிக்காட்டுகிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் விஜயகுமார். நீண்ட நெடும் போராட்டத்தின் பலனாக கல்வி உரிமைச் சட்டம் வந்ததை எடுத்துக்கூறுகிறார் நிறுவனத்தின் ஆலோசகர் வழக்கறிஞர் ஹென்றி திபேன்.

அந்தச் சட்டத்திலும் கட்டணமில்லாக் கல்வி, கட்டாயக் கல்வி, அருகமைப் பள்ளிக் கல்வி, தாய்மொழி வழிக்கல்வி ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டால்தான் முழுமையான சமச்சீர் கல்வி நிலைநாட்டப்படும் என்று உணர்த்துகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

கல்வி உரிமை என்று வந்தபிறகு பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்? அரசாங்கமேதான் கட்டணத்தைச் செலுத்திக் குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும், என்று வழக்கறிஞர் பா.பா. மோகன் வாதிடுகிறார்.

கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் எளிய மக்கள் கூறியுள்ள கருத்துகளும் சம முக்கியத்துடன் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. கருத்துரைகளின் தொகுப்பாகிவிடாமல், குழந்தைகளின் வாக்குமூலம், பெற்றோரின் கண்ணீர், அரசுப்பள்ளிக் கட்டடங்களின் சாட்சியம், தனியார் பள்ளி நிர்வாகங்களின் அலட்சியம் என்று பன்முகப் பரிமானங்களோடு படம் பரிணமித்திருக்கிறது.

“...எங்க டீச்சர் மட்டும் இல்லன்னா எங்க வாழ்க்கையே நாசமாயிடும் சார்...” என்று சொல்கிற, கிராமத்து அரசுப்பள்ளியில் பயின்றிடும் ஒரு பெண் குழந்தை அதற்கு மேல் சொல்ல முடியாமல் தழுதழுத்து அழுகிறாள். வெறும் ஆவணப்படம்தானே என்று பார்த்துக்கொண்டிராமல் நமக்கும் கண்ணீர் உடைப்பெடுப்பதைத் தடுக்க முடியவில்லை.

தாய்மொழி வழிக் கல்விக்காக படம் வாதாடுகிறது. ஒரு கிராமத்தின் இஸ்லாமியர்கள், எங்க தாய்மொழி உருது. அதிலே கல்வி கிடைச்சா எங்க குழந்தைக நல்லா புரிஞ்சுக்கிட்டு படிப்பாங்க, என்கிறார்கள். அது, சமச்சீர் கல்வியில் தாய்மொழி வழிக்கல்வி என்பதன் பொருள் மாநிலத்தின் பெருவாரியினர் மொழி மட்டுமல்ல என்ற பாடத்தைப் பதிய வைக்கிறது.

செல்வா ஒளிப்பதிவும், ப்ரபாகர் இசையும், அருள் முருகன் தொகுப்பும் ஆவணப்படத்தின் சமுதாய நோக்கத்தை உள்வாங்கிக்கொண்ட உழைப்புகளாக ஒருங்கிணைந்திருக்கின்றன. “ஒண்ணு காரில ஒண்ணு ரோட்டில...” என்று வெவ்வேறு வீட்டுக் குழந்தைகள் வெவ்வேறு பாட முறைகளுக்குள் தள்ளப்படுவதைச் சொல்கிறது புதுகை தனிக்கொடி பாடல். குழந்தைகள் யாழினி, சூர்யபத்மா, மகிழன் பாரதி ஆகியோரின் தேன் குரலில் ஒலிக்கும் பாடலின் ஒவ்வொரு பொருளார்ந்த வரியையும் காட்சிப்படுத்தியிருப்பது, அடிப்படையான இன்னொரு போராட்டம் பற்றிய அக்கறையை விதைக்கிறது.

“மக்கள் நெடுநாட்கள் அமைதியாக இருந்துவிடமாட்டார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்,” கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் கூறுகிறார். இந்த ஆவணப்படம் விதைக்கிற நம்பிக்கைச் சொல் இது.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களும் அவர்களுக்குத் தோள்கொடுக்கும் மக்களும் தங்களின் வெஞ்சினக் கொதிப்பில் எரிமலையாய் வெடிப்பார்கள், அப்போது கல்விக் களத்தின் வரலாற்றுப் பாகுபாடுகள் பொசுங்கி, சமத்துவத் தளம் சமைக்கப்படும். தற்போது அடங்கியிருப்பது போன்றிருக்கும் எரிமலையின் தீக்கங்குகளை விசிறிவிடுகிற புதிய வரலாற்றுப் பேரியக்கத்தில் இந்த ஆவணப்படமும் நிச்சயமாகப் பங்களிக்கும்.


தீக்கதிர் 17.7.2011 இதழ் வண்ணக்கதிர் 

Monday, July 4, 2011

ஆறு வித்தியாசங்கள் அல்ல .... அதற்கு மேலும்

லைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் ஆறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பில்லை . வித்தியாசங்கள் , வேறு பாடுகளாகி , வேறுபாடுகள் பாகுபாடுகளாகி, இறுகிக் கிடக்கிறது இந்திய சமுகம் .

ங்கே ஸ்ரீ ராமனின் பாதம் பட்ட உயிர்களெல்லாம் கல்லாக்கிக் கிடக்கிறது .

ஜூலை ஒன்பதாம் தேதி காலை பத்து மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலகத்தில் உள்ள அரங்கில் "எனக்கு இல்லையா கல்வி ?"ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா .

தையே அழைப்பாக ஏற்க வேண்டுகிறோம் .
Friday, July 1, 2011

சமர் தொடங்கலாம்

ழுபது லட்சம் குழந்தைகளை ஏதுமற்ற அரசுப் பள்ளிகளில் பரிதவிக்க விடும்,   ஆண்டு தோறும் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பள்ளிகளை விட்டு வீதிக்கு விரட்டி விடும், ஏற்றத்தாழ்வுகள் நிரம்பி வழியும், ஒரு முடை நாற்றமெடுத்தக் கல்வி முறையை வைத்து கொண்டு, சமச்சீர் கல்வியைப் பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல் விவாதிக்கும் அரசுகளும், நீதிமன்றங்களும் நிறைந்த ஒரு நாட்டில் இந்த ஆவணப் படத்தின் அவசியம் தவிர்க்கவே முடியாதது.
ஜூலை ஒன்பதாம் தேதி மாலை சென்னையில் வெளியிடுகிறோம்.


ஞ்சிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வீதிகளுக்கு விரட்டப் பட்ட, கல்வி மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் தவிர, எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.


யார் வேண்டுமானாலும் அதிகாரத்தில் இருக்கட்டும். ஊழல் செய்யட்டும். நீதிமன்றங்களில் மனுக்களோடு மண்டியிடட்டும். எல்லாக் குழந்தைகளையும் சமமாக, தரமாக பள்ளிக் கூடங்களில் உட்கார வைத்து விட்டு எதையும் சுரண்டிப் பிழைக்கட்டும். எதையும் தின்று தீர்க்கட்டும். தான் உண்ணும் உணவு இழிவானதென்று பன்றிகளுக்கு எப்போது தெரிந்திருக்கிறது?


ழைப்பிதழ் அடுத்த வாரம் தருகிறேன். குழந்தைகளின் கல்விக்காக கூப்பிடுகிறேன். வாய்ப்பிருந்தால் வந்து விடுங்களேன்.


சந்திக்கலாம். சம்பாஷிக்கலாம். சமர் தொடங்கலாம்.