Monday, April 29, 2013

பாழும் திருவுளமே பாழும் திருவுளமே ...

நேற்றைய பதிவொன்றில் புதுகை தனிக்கொடியின் மகத்தான , மனம் கலங்கி அழ வைத்த  பாடல் பற்றி எழுதி இருந்தேன் .அந்தப் பாடலைத் தந்திருக்கிறேன் . மேலே தந்திருப்பது அந்த ஆவணப் படத்தின் முகப்பு .

ஒரு பனை உயரத்தில்,  சின்னஞ் சிறு தூக்கணாங்குருவி தன் குஞ்சுக்கு மிகப் பாதுகாப்பான ஒரு கூட்டைக் கட்டி வைக்கிறது . ஆனால் மனிதன் ... இன்னும் இப்போதும், தன் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஒரு உலகத்தை உருவாக்கவே இல்லை .

என் ஆருயிர் நண்பனும் , ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனுமான இரா \. பிரபாகர் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துத் தானே பாடி பாடலுக்கு எல்லையற்ற மதிப்பும் , துயரும் தந்து என் உயிரை உருக்கினான் .

அதன் காட்சி வடிவத்தை இங்கு பதிவிட முயலுகிறேன் .


பாடல்
----------------------------------------------------------------------------------------------------------

சொல்ல மனம் துடிக்குதே தேமித் தேமி - எங்க
புள்ளக் கறி கேட்டது எந்தச் சாமி ?

பாழும் திருவுளமே  பாழும் திருவுளமே
வாழப் பிடிக்கலையே சோழப் பெருநிலமே 

இப்ப அழச்சது போல் இருக்கு எம் புள்ள முகம் 
எப்பத் திரும்பி வரும் என் வீட்டுத் தங்க ரதம் 

தவழ்ந்த வாசம் இன்னும் தரை விட்டுப் போகலியே - கண் 
வளர்த்த தொட்டில் இன்னும் காத்தசஞ்சும் ஆடலியே 

பால் வாசம் மாறுமுன்னே பால் ஊத்த விட்டீகளே 
தங்கத்தைக் கருக விட்டுச் சாம்பலைத் தான் தந்தீகளே 

மாடு  அலறலியே வழிப் பூனை மறிக்கலயே
மாட விளக்கு அணைஞ்சு மரணத்தைச் சொல்லலியே 

காட சாக்குருவி கத்தித் தொலைக்கலியே -எங்
குடி கவுறப் போகுதுன்னு கவுளியும் சொல்லலியே  

படு களத்தில் மாண்டிருந்தா பாவி மனசாறிவிடும் 
இடி மின்னல் விழுந்திருந்தா விதியோன்னு போயிருக்கும் 

பத்திய கொலைத் தீயில் பால் நிலவு அவுஞ்சிருச்சே 
வெத்தல கொடிக்காலில் கொழுந்தெல்லாம் கருகிருச்சே 

எம் புள்ள என்னோட இருந்த ஒரு பொழுத 
திருப்பித் தந்திடுமா தீர்ப்பெழுதும் கச்சேரி 

களவுக்கும் காவுக்கும் கன்னக்கோல் வச்சுருக்கும் -இந்த 
எழவெடுத்த கல்விக்கு என்னைக்குக் கருமாதி  

Sunday, April 28, 2013

மௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டே . . .

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் நாள் அந்தப் படு பாதகம் நடந்தது .

கும்பகோணம் பள்ளியொன்றில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகிச் சாம்பலானார்கள் .

அரசும் , அதிகார வர்க்கமும் அழுது கொண்டே , ஆறுதல் சொல்லிக்கொண்டே , நிவாரணத் தொகையை வேக வேகமாகப் பட்டுவாடா செய்து கொண்டே , மகத்தான பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருந்தார்கள். அரசு ஒரு நீதி அரசரின் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தது .எல்லாப் பள்ளிகளிலும் உள்ள கீற்றுக் கொட்டகைகளை அகற்றச் சொன்னது .

மத்திய , மாநில அரசியல் வாதிகள் , அதிகாரிகள்  அறிக்கைகளில் அழுத வண்ணம் கும்பகோணத்தைச் சுற்றித் திரிந்தார்கள் . அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கென தனிக் குடியிருப்பை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தார் . எல்லாம் கொஞ்ச நாளைக்கு ... பிறகு .... ஒருவரையும் காணோம் . ஒன்றையும் காணோம் .


இன்னும் நடக்கிறது வழக்கு . பள்ளிக்கூடம் நடத்த அரசு வகுத்துள்ள விதி முறைகளைப் பின்பற்றாத பள்ளி நிர்வாகம் ... விதி முறைகளுக்கு மாறாக பள்ளி இயங்க லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்த கல்வித் துறை , வருவாய்த் துறை , தீயணைப்புத்துறை , பொதுப்பணித் துறை அதிகாரிகள் இவர்கள் தான் முதன்மைக் குற்றவாளிகள் . இதை அறிந்து கொள்ள ஓரறிவு இருந்தாலே போதுமானது .ஆனால் ஒன்பது அறிவு கொண்ட அரசுக்கும் , நீதி மன்றத்திற்கும் குற்றவாளிகள் யாரென்று கண்டு , அறிந்து தீர்ப்புச் சொல்ல இன்னும் காலம் தேவைப் படுகிறது . இன்னும் நடக்கிறது வழக்கு .

விபத்து நடைபெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான் பள்ளிக் கல்வி இயக்குனரகம் அந்தப் பள்ளிக்கு அந்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது . அதாவது 11.07.2004 அன்று ஆணை தரப்பட்டுள்ளது . 11.07.2004 அன்று ஒரு வேலை நாள் அல்ல . அது ஒரு ஞாய்ற்றுக் கிழமை .

இந்த உண்மை போல , இந்த நிகழ்வின் பின்னே இருந்த வேறு பல உண்மைகளையும் ஆவணப் படுத்த விரும்பி , சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குடந்தை போனேன் . இந்தத் துயரத்தை உணர்த்தும் பாடல் ஒன்றை ஆவணப் படத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமெனவும் விரும்பினேன் .

பாடல் எழுதுமாறு நண்பனும் , கவிஞனும் ஆன புதுகை தனிக்கொடியை அழைத்தேன் . என்னவெல்லாம் பாடலில் இடம் பெறவேண்டிய செய்திகள் என்று விவரித்தேன் . கேட்டுக் கொண்டார் . ஐந்தாறு பல்லவிகள் எழுதிக் கொடுத்தார் . எனக்கு எதுவும் பிடிக்கவில்லை . அவர் அலுக்காமல் மேலும் எழுதினார் . எனக்கு அதுவும் போதுமானதாயில்லை .

இந்த சந்திப்பு சென்னையில் நடந்தது . அடுத்த வாரத்தில் குடந்தையில் படப்பிடிப்பு நடக்கிற இடத்திற்கு வந்து , அங்கே எழுதித் தருவதாகச் சொன்னார் கவிஞர் . ஒப்புக்கொண்டேன் .

அடுத்த வாரம் படப்பிடிப்புக்கு வந்தார் . கண்ணீரும் , துயரமும் பொங்கிப் பெருகும் அந்த பாவப்பட்ட பெற்றோர்களின் பேட்டியை நாங்கள் பதிவு செய்வதை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டே இருந்தார் . ஒரு சொல் கூடப் பேசவில்லை .

அன்றைய இரவு விடுதியில் , எனது அறையில் வந்து சேர்ந்து கொண்டார் . இரவு முழுவதும் அவர் உறங்கவே இல்லை . நானும் தான் . அதிகாலை மூன்று மணிவாக்கில் எழுந்து வெளியில் போனார் . நான் உறங்கிப் போனேன்.ஐந்து மணி வாக்கில் என்னை எழுப்பினார் . " சார் .. பாட்டு எழுதிட்டேன் ... படிக்கவா ? " என்றார் .

படிங்க என்றேன் . வழக்கத்திற்கு மாறான கனத்த , கட்டைக் குரலில் படித்தார் ..." சொல்ல மனம் துடிக்குதே தேமித் தேமி - எங்க
     புள்ளக்  கறி கேட்டது எந்தச் சாமி ?  
எனத் துவங்கிய அந்தப் பாடலை அவர் முழுவதுமாகப் படித்து முடித்த பிறகு மிக நீண்ட நேரம் இருவரும் மௌனமாகக் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தோம் . அந்த மகத்தான பாடலைத் தனியே உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன் .
  

இப்படித் தான் இருக்க வேண்டும் முத்தமிழ் விழாக்கள் .

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு , பெப்ரவரி இருபத்தி ஆறாம் நாள் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கு பெறுகிற நல் வாய்ப்பு அமைந்தது . 

ஆயிரத்து இரு நூறுமாணவிகள் கூடி இருந்த அரங்கு நிறைந்த கூட்டம் . துவக்கத்தில் இருந்த சில சலசலப்புகள் அடங்கியதும் நிகழ்வு உயிர் பெற்றது .
மிக எளிய , நடுத்தரக் குடும்பத்து மாணவிகள் தான் அதிகம் இருப்பதை என்னால் உணர முடிந்தது . பொதுவாக நகர்ப் புறத்துக் கல்லூரிகளில் காணப்படும் பணக்காரத்தனம் இல்லாத எளிமை எங்கும் தென்பட்டது மிகுந்த மகிழ்வைத் தந்தது . ஒரு மணி நேரம் மகாகவி பாரதியை அவர்களுக்கு , அவர்களின் மொழியில் அறிமுகம் செய்தேன் . இன்றைய சம கால நிகழ்வுகளோடு , அதனைப் பொருத்திப் பேசினேன் .
உரிய எதிர் வினைகளோடு எனது உரையை மாணவிகள் அங்கீகரித்தார்கள்.


எனது உரையைத் தொடர்ந்து அன்பு நண்பர் . முனைவர் கார்த்திகேயனின் இயக்கத்தில் நிகழ்ந்த பாரதி குறித்த நாட்டிய நாடகம் மிகுந்த பாராட்டையும் . அங்கீகாரத்தையும் பெற்றது .அடையாறில் உள்ள டாக்டர் எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் அறுபது மாணவிகள் அதில் பங்கேற்று இருந்தார்கள்.  நவீன நாடகத்தின் உத்திகளை இந்த நாட்டிய நாடகத்தில் இணைத்து இருந்தது தனிச் சிறப்பு .  ஒன்றரை மாதக் கடின உழைப்பில் உருவாகி இருந்தது நாடகம் . முனைவர் கார்த்திகேயன் மிகச் சிறந்த நடிகரும் கூட . " அண்ணாமலை" என்ற பெயரில் வந்த மிகப் பிரபலமான தொலைக் காட்சித் தொடரில் " சூதாடிச் சித்தன் " என்னும் பாத்திரத்தில் ஜொலித்தவர் .

தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் அரங்கேற்றம் செய்யும் தகுதியுடன் இருந்தது நாடகம் .இது போன்ற தரமும் , தகுதியும் வாய்ந்த நிகழ்வுகளை நடத்தும் கல்லூரிகளின் எண்ணிக்கை அருகி வருவதை நான் அறிவேன்.
எந்த அறிவுத் திறனும் தகுதியும் அற்ற , வெறுமனே  ஏதேனும் ஒரு ஊடகத்தின் மூலம் பிரபலமான மூடர்களைக் கொண்டாடும் இந்தக் காலத்தில், செல்லம்மாள் கல்லூரியின் முனைப்பைப் பாராட்டத் தான் வேண்டும்.

மிகச் சிறப்பாக கல்லூரி முதல்வருக்கும் , தமிழ்த் துறைக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களது அன்பான உபசரிப்பும் , பாங்கும் எப்போதும் என் நன்றிக்குரியது .நிகழ்வில் பங்கு பெற எனது பெயரை முன் மொழிந்த பேராசிரியை திருமதி . தமிழரசி முத்துப்பாண்டியன் அவர்களுக்கு எனது தனித்த நன்றியும் , வணக்கமும். மொத்தத்தில் பாரதிக்குப் புகழும் , பெருமையும் சேர்ப்பதாக எல்லாமே அமைந்தது . இப்படித் தான் இருக்க வேண்டும் முத்தமிழ் விழாக்கள் .

நான் எப்போதும் கொடுத்து வைத்தவன்

நூலின் முதல் பிரதியை வெளியீட்ட பிறகு , கவிதை நூல் குறித்து மற்ற நண்பர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன் .

எனக்கு முன் எப்போதும் அறிமுகமில்லாத அந்தப் பெண் குழந்தை மேடையேறி வந்து என்னோடு உரையாடத் துவங்கினாள்.

அது நண்பன் சென்றாயனின் மகள் என்று அறிந்து கொண்டேன் .

எந்தத் தயக்கமும் இல்லாமல், ஏதோ முன்பு பேசிக் கொண்டிருந்து பாதியில் நிறுத்திய உரையாடலைத் துவங்குவது போலத் துவங்கியது அவளது உரையாடல் .

ஒலிபெருக்கியின் ஓசையில் அவளது குரல் எனக்கு சரியாகக் கேட்க இல்லை. குழந்தையோ முன் வரிசையில் அமர்வதற்கு இடம் தேடிக் கொண்டே என்னோடு பேசிக் கொண்டிருந்தாள் .

முன் வரிசையில் காலி இருக்கைகள் ஏதுமில்லை . என் மடியில் உட்கார அழைத்தேன் . அதற்காகவே காத்திருந்தது போலத் துள்ளி மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

"நீங்க பேசுவீங்களா ? "என்றாள்.
" நாம் அப்புறமாப் பேசுவேன் "
குழந்தையின் முகத்தில் மிகுந்த சந்தோசம் .
பேச மாட்டேன் என்று சொல்லி இருந்தால் ரொம்ப சந்தோசம் அடைந்திருப்பாள் என்று இப்போது தோன்றுகிறது .

அடுத்த கேள்வி ... " உங்களுக்குத் திருக்குறள் தெரியுமா ?"
"தெரியாது" என்றேன் .
 அவளுக்கு அளவற்ற சந்தோசம் .
" எனக்குத் தெரியும் " என்றாள்.

எதற்கும் காத்திராமல் திருக்குறள் சொல்ல ஆரம்பித்தாள்.
அவளது மழலை மொழியில் ஆசான் வள்ளுவன் உயிர் பெறத் துவங்கினான் .
அவன் தானே மழலை மொழியின் பெருமை பேசியவன் .
அதே மழலை மொழி அவன் பெருமை பேசுகிறது .

மூச்சு முட்ட , மழலைத் தமிழ் நடனமாட பத்துத் திருக்குறள்கள் .
என் மனதுள் புது வெள்ளமாய்ப் புரண்டது மகிழ்ச்சி . எனக்குத் தெரியாத ஒன்றை எனக்குச் சொல்லித் தந்த பெருமிதம் அவள் முகத்தில் பரவிக் கிடந்தது . வந்த வேலை முடிந்த நிறைவு அவளுக்கு .

பிறகு ,அவ்வப்போது வருவதும் , பேசுவதும் , போவதுமாக  இருந்தாள்.

அத்தனை பேர் இருந்த மேடையில் அவள் என்னைத் தேர்வு செய்து
என்னோடு பேசியது எனக்கு வாய்த்த வரம் .
குழந்தைகள் உங்களைத் தேர்வு செய்ய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . நான் எப்போதும் கொடுத்து வைத்தவன் என்பதெனக்குத் தெரியும் .

குழந்தையின் பெயர் மதிவதனி .
 

Thursday, April 25, 2013

உருவி எடுக்கப்பட்ட கனவு நூல் வெளியீடு ...

முதல் பிரதியை நான் தர , அதனைப் பெற்றுக் கொள்ள தனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி எம் . அன்னத்தாய் அவர்களை அழைத்து வந்திருந்தான் சென்றாயன்

தனது ஆசிரியரைத் தேடிக் கண்டு பிடித்து இந்த விழாவுக்கு அழைத்து வந்திருந்தான் சென்றாயன் .

அவரைப் பற்றிய அவனது நினைவுகளை இந்தப் பத்திக்கு கீழே அவனே எழுத வேண்டும் என நான் விரும்புகிறேன் . அவன் எழுதாவிட்டால் அப்புறமாக நானே எழுதத் தான் வேண்டும்

தனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவரை , தனது கவிதை நூலைப் பெற்றுக் கொள்ள அழைத்த அந்தப் பேரன்பு எனக்கு மிகுந்த உவகை அளித்தது .

நூலை வெளி இடுகிற மகிழ்வும் , மிகத் தகுதியான ஒருவரிடம் முதல் பிரதியைத் தருகிறோம் என்கிற பெருமிதமும் மனதுள் கூடிக் கொண்டது .

எல்லாம் நண்பன் தந்த அன்பு , அங்கீகாரம் , அற்புதம் , பெருமிதம் .

நான் ஒரு அழகிய மஹா கவி பாரதியின் திரு உருவப் படத்தை என் நண்பனுக்குப் பரிசளித்தேன் .நான் அந்தப் புறாவாக இருக்கிறேன்
"உண்மையின் போர்க்குரல் -வாச்சாத்தி" ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா கடந்த ஆண்டு செப்டம்பர் முப்பதாம் நாள் சென்னையில் நடந்தது .

 பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது . அரங்கு நிறைந்த மிகப் பிரம்மாண்டமான நிகழ்வு .

உணர்ச்சிப் பெருக்கும் , தோழமை உணர்வும் அரங்கு முழுவதும் ததும்பி நின்றது .

 வந்திருந்த பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆவணப் படத்தின் பிரதிகளை வாங்கியதை , மிகுந்த பெருமித உணர்வுடன் பார்க்க எனக்கு வாய்த்தது .அன்றே ஐநூறு பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் அருமைத் தோழர் பிரகாஷ் காரத் ஆவணப் படத்தை இயக்கியமைக்காக ஒரு அழகிய நினைவுப் பரிசினை உவந்து அளித்தார் . பரிசளித்த அவருக்கும் , பரிசினைத் தேர்வு செய்த தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி

 ஒரு மலை வாழ் சிறுவனின் தோளில் அமர்ந்திருக்கும் அந்தப் புறா
நம்பிக்கையோடும் , அன்போடும், பாதுகாப்பு உணர்வோடும் காணப்படுகிறது.

இப்போது அந்தச் சிறுவன் எனக்கு தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கமாகவும்  , நான் அந்தப் புறாவாகவும் இருக்கிறோம் .

காடு போலப் பூத்துக் கிடக்கிறது . . .என் ஆருயிர் நண்பனும் , அருமைத் தோழனுமான சென்றாயனின் கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை , திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தின் முன்பாக , பெப்ரவரி மூன்றாம் தேதி  திறந்த வெளியில் நடந்தது .
நூலின் முதல் பிரதியை வெளி இட்டுப் பேசினேன் .

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிக மிக அதிகம் . என் அன்பு நண்பன் , காமிராக் கலைஞன் மகேஷ் எடுத்துக் குவித்துக்கொண்டே இருந்தான் .  

ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இத்தனை பார்வையாளர்கள் என்கிற அதிசயம் மதுரையில் மட்டும் தான் நடக்கும் .

இரு நூற்று ஐம்பது பிரதிகள் அன்றே விற்றது என்பதும் , இன்னொமொரு அதிசயம் .

ஆனால் , இந்த இரண்டு அதிசயங்களுக்குப் பின்னே ஒரு இருபதாண்டு கால நட்பும் , உறவும் , தோழமையும் ஒரு காடு போலப் பூத்துக் கிடக்கிறது . அதை நானும் , சென்றாயனும் இணைந்து , உருவாக்கிக் காத்து வருகிறோம் .

அன்று நான் மிக சிறப்பாகப் பேசினதாக நிறைய நண்பர்கள் சொன்னார்கள் .
மனம் கனிந்து , கசிந்து ,ஒன்றில் ஈடுபடுகிறபொழுது , அது சிறப்பாக அமைவதில் வியப்பேதுமில்லை . அப்படித்தான் அந்த நாளும் , அந்த நிகழ்வும் , அதற்கு அடுத்தடுத்த நாட்களும் அமைந்தது .

"உருவி எடுக்கப்பட்ட கனவு" என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கவிதைத் தொகுதி , அந்த விழா , இது பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது எனக்கு .
பேசுவேன் இனி வரும் நாட்களில் ...


Thursday, April 11, 2013

ஒரு கனிக்குள் இருக்கும் மரங்களை . . .

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு திருச்சியில் உள்ள எஸ் .ஆர் . வீ . மேல் நிலைப்பள்ளியில் "கனவு மெய்ப்பட " எனப் பெயரிடப்பட்ட பயிலரங்கைத் தொடங்கி வைக்க வாய்த்தது .

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் , ஏதேனும் ஒரு தொழிற் கல்விக்கான உயர் கல்விக்குத் தகுதி பெறுவதும் தான் இங்கே உடனடி இலட்சியங்கள் . அப்புறம் பெரிய வேலையில் சேர்ந்து கை கொள்ளாமால் சம்பாதிக்கணும் என்பது நீண்ட கால லட்சியம் .

இந்த இரண்டையும் கடந்து மனித நேய மிக்க மனிதர்களாக உருவாவது தான் , வீட்டுக்கும் , நாட்டுக்கும் எப்போதும் பயன் தரும் .
அதனை மனதில் கொண்டே இந்தப் பயிலரங்கம் உருவாக்கப்பட்டது .

பயிலரங்கம் விரும்பிய வண்ணம் , மாணவர்களுக்குள் அத்தகைய சிந்தனைகள் உருவாவதைக் காண முடிந்தது . உணர முடிந்தது .
அடுத்தடுத்த ஆண்டுகளிலும் "கனவு மெய்ப்பட" என்ற தலைப்பிலேயே பயிலரங்கம் நடப்பதை நான் அறிவேன் .
தமிழ் சமூகத்தின் மகத்தான ஆளுமைகள் அதில் பங்கேற்று , அதனை மேலும் அர்த்தமுடையதாகதரம் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன் .

 தொடரும் இந்தமுயற்சிகளுக்காகப் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியவர், அந்தப்பள்ளியின் முதல்வர் அருமைச் சகோதரர் துளசிதாசன் .
அவருக்கு , அதை நிகழ்த்தத் துணை நிற்கும் அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழுவும் வாழ்த்துக்கு உரியது .

இதில் என் சந்தோசம் ஒன்று தான் .
இந்த மகத்தான பணியை நான் துவங்கி வைத்தேன் என்பது தான் .
மரக் கன்று நடுவதா பெரிய காரியம் ?
அது வளர்ந்து , துளிர் விட்டுத் தழைப்பதைப் பார்ப்பது தான் சிறந்த மகிழ்ச்சி .
அது தழைப்பதைப் , பூப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் .
அதுவே நிழல் தரும் . கனிகள்  தரும் .
கனிகள் விதைகள் தரும் .
விதைகள் மேலும் , மேலும் புதிய மரங்கள் தரும் .

"ஒரு மரத்தில் இருக்கும் கனிகளை எண்ணி விடலாம் .
ஆனால் ஒரு கனிக்குள் இருக்கும் மரங்களை யாராலும் எண்ணி விட இயலாது "... என்று எங்கோ படித்ததை எழுதினால் இந்தப் பத்தி நிறைவு பெறுவதாக நான் உணர்கிறேன் .


தலை வணங்கி ஏற்றுக் கொள்ளுகிறேன்

எப்போதும் என் மதிப்பிற்குரியவர் திரு . திருப்பூர் கிருஷ்ணன்
அவரது பண்பும் ,பாங்கும் மகத்தானவை.
அமுதசுரபி தமிழ் மாத இதழின் ஆசிரியர் .
எனது "கிணறு " என்னும் சிறுகதையை அமுதசுரபி இதழில் வெளியீட்டு ,
எனக்குப் பெருமை சேர்த்தவர்.


புகழுக்கு மனிதர்கள் மயங்கலாகாது என்பதையும்  நான் அறிந்திருக்கிறேன் .
ஆனால் , சில புகழுரைகள் உங்களை மேலும் பொறுப்பும் , தெளிவும் பெறச் செய்து விடுகின்றன . இது அத்தகையது என்பது என் தீர்க்கமான முடிவு.


அவர் என்னைப் பாராட்டி எழுதி இருப்பதை மிகுந்த பெருமிதத்துடன் நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் .
பாராட்டுவது யார் என்பதில் தான் பாராட்டுக்கான மரியாதை இருக்கிறது .
எனக்குத் தெரியும் .
இது மிகுந்த மரியாதைக்குரிய பாராட்டு.
இதனைத் தலை வணங்கி நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் .

Wednesday, April 10, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்

கீழ வெண்மணி ஆவணப்படத்திற்காக வந்த இன்னுமொரு பிரசுரம் இது

எங்கள் பணிகளைத் துல்லியமாக மதிப்பிட்டு எழுதி இருந்தது தீக்கதிர் .

தீக்கதிரின் அன்றைய நிருபரும் , அதன் சென்னைப் பதிப்பின் இப்போதைய ஆசிரியருமான திரு .அ.குமரேசன் அதனை எழுதி இருந்தார் .

அவருக்கு சிறப்பாகவும்  , தீக்கதிர் நாளிதழுக்கும் நான் எப்போதும் நன்றி செலுத்துவேன் .

ஆவணப் படம் தொடர்பான தேடல் இரண்டு ஆண்டுகள் நீடித்தது .

அதன் இரண்டாம் பகுதியை புத்தகமாகவும் , அதனோடு இணைந்த ஒளிப் பேழையாகவும் கொண்டு வரும் கனவு , ஆறு ஆண்டுகளாகக் கனன்று கொண்டே இருக்கிறது .

கனவு மெய்ப்பட வேண்டும்

விந்தையான பொருத்தம்

இதுவும் கீழ வெண்மணி ஆவணப்படத்திற்கென வெளியீடப்பட்ட பிரசுரம் தான் .

படத்தில் இடம் பெற்ற மூவரில் , மேலே இருப்பது "இருக்கை"  ராமுப் பிள்ளை . வெண்மணி வழக்கில் நான்காவது குற்றவாளி . வெண்மணிச் சம்பவம் நடந்த சமயம் தான் மருத்துவ மனையில் இருந்ததாகப் பொய்யான ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து விடுதலை அடைந்தவர் . இதனை அவரே வாக்குமூலமாக , எனது ஆவணப்படத்தில் ஒப்புக் கொள்ளுகிறார் .

இரண்டாவதாகவும் , வலது புறத்திலும் இருப்பது வெண்மணி வழக்கில் பதினான்காவது குற்றவாளி . வழக்கின் முதல் குற்றவாளி "இருஞ்சியூர்" கோபாலகிருஷ்ண நாயுடுவின் மூத்த சகோதரரின் மகன் .அவரும் எனது ஆவணப் படத்தில் தாங்கள் வெண்மணியில் குடிசைகளுக்குத் தீ வைத்ததை  ஒப்புக் கொள்ளுகிறார் . அவரும் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் தான் .

இறுதியாக இருப்பது வழக்கைப் பதிவு செய்த அன்றைய கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் .எல்லாம் தெரிந்திருந்தும் , ஏதும் அறியாதவர் போலப் பேசிய பண்பாளர் . அவரது வாக்குமூலமும் ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளது .

இவர்கள் விரித்த வஞ்சனை வலையில் தான் அந்த நாற்பத்தி நான்கு உயிர்களும் கருகின .எனவே வடிவமைப்பில் அவர்களுக்குப் பின்னே ஒரு சிலந்தியின் வலையை வைத்தோம் .

ஒரு பெரிய சிலந்தி வலையை ஒரு நாள் அதிகாலை வெண்மணிக்குப் படப்பிடிப்புக்குப் போன பொழுது , வெண்மணி நினைவு இல்லத்திற்கு அருகில் இருந்த ஒரு வேலியில் பார்த்தேன் . அத்தகைய ஒரு பெரியதான  சிலந்தி வலையை நான் பார்ப்பது அதுவே முதல் முறை . அதைப் படம் பிடித்துக் கொண்டேன் . நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த சிலந்தி வலையின் "உரிமையாளர்" அங்கு வரவேயில்லை . அந்த சிலந்தி வலை தான் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது . வலை விரித்து வைத்து விட்டு வராமலே போன அந்த சிலந்தியைப் போலவே , இந்தக் குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள் . இயற்கையாக நடக்கிற சில விஷயங்கள்  நம் அனுபவத்திற்குப் பொருந்தி வருவது விந்தையானது தான் .

Monday, April 8, 2013

...அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்...

வெண்மணி ஆவணப்படத்திற்க்கென நாங்கள் கொண்டு வந்த பிரசுரங்களில் இது மிக மிக முக்கியமானது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி எட்டாம் ஆண்டு டிசம்பர் இருபத்திஐந்தாம் தேதி கீழவெண்மணியில் நடந்த படுகொலைக்குப் பிறகு, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலச் சுவான்தார்கள் அனைவரையும் விடுதலை செய்தது உயர் நீதி மன்றம்.அந்த செய்தி வெளியான நாளிதழ் தான் மேல் பகுதியில் காணப்படுவது.

ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி நான்காம் ஆண்டு வெளியான தினசரிகளில் ஒன்று தான் ஆவணமாகக் கிடைத்தது. அது நீதித் துறையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்பது எங்கள் திடமான எண்ணம் .எனவே வடிவமைப்பில் அதைச் சுற்றி ஒரு கருப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இட்டோம் .

வெண்மணி வழக்கின் முதல் குற்றவாளியான இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படமே கீழே உள்ள புகைப்படம். அப்போது இந்த புகைப்படம் எந்த நாளிதழிலும் வராமல் அரசும் போலிசும் பார்த்துக்கொண்டது. எங்கள் தேடுதலில் எங்களுக்கு இந்த படம் கிடைத்தது. நாங்கள் வெளியிடும் முன்பு இந்த புகைப்படத்தை தமிழ்நாட்டில் எவரும் பார்த்தது இல்லை. அந்த வகையில் இது மிக முக்கியமானஆவணம்.

இந்த படத்தைச் சுற்றிலும் சிவப்பு வண்ணத்தில் ஒரு அடையாளம் இடுவதன் மூலம், நாங்கள் சொல்ல விரும்புகிற செய்தியை, நுட்பமான மனிதர்கள்  அறிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.