Tuesday, December 3, 2013

வாதாபி குடைவரைக்கோயில்

 வட கர்நாடகத்தில் உள்ள வாதாபி .
இரண்டாம் புலிகேசி காலத்திய குடைவரைக்கோயில்.
பேரழகும் , கலைத் திறனும் மிக்கது . ஒரு திரைப்படத்திற்காக , லொக்கேஷன் தேடித் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் .இந்தப் புகைப்படத்தின் தனிச்சிறப்பு ... இதை எடுத்தது இயக்குனர் இமயம் .

Wednesday, November 27, 2013

மகரிஷி வேதாத்திரியின் 103ஆவது பிறந்த நாள் விழா

ஏழாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்வு அது .
ஒரு சந்தடி , கூச்சல் , குழப்பம் ஏதுமில்லை .
அரங்கத்தில் அங்கும் இங்கும் யாரும் ஓடிக்கொண்டிருக்கவில்லை .
கூட்டம் நடந்து முடிகிற வரை ஒரு கைபேசி கூட ஒலிக்கவில்லை .
எங்கும் யாரும் மொபைலில் ரகசியமாகக் கூடப் பேசவில்லை .
அரங்கம் நிறைந்த பிறகு, வந்தவர்கள் வெளியில் அமர்ந்து கொண்டார்கள் .
வழி காட்டிய தொண்டர்கள் சைகையிலேயே கூட்டத்தை ஆற்றுப் படுத்தினார்கள் .

மிகச் சரியாகக்  , குறித்த நேரத்தில் விழா துவங்கியது .
அனைவரும் தங்களுக்குத் தரப்பட்ட கால அளவுக்குள் பேசினார்கள் .
எனக்குத் தந்திருந்த ஒரு மணி நேரத்திற்குள் நானும் பேசினேன் .

மகரிஷி வேதாத்திரி சமாதானத்தின் தூதுவர் . மனித குலம் வளமுடன் வாழ பதினான்கு அடிப்படைக் கோட்பாடுகளை முன் மொழிகிறார் .
அதில் முதன்மையானது "போரில்லா நல்லுலகம் ".
அதுவே அன்றைய சிறப்புரைக்கான தலைப்பு .

உலகில் போர்களுக்கு அடிப்படைக் காரணம் பேராசை கொண்ட ஆயுத வியாபாரிகளே என்று தயக்கமின்றி சொல்லுகிறார் .
மிக நீண்ட இந்திய ஞான மரபின் அழுத்தமான, உன்னதமான தொடர்ச்சியாக மகரிஷி உரையாடுகிறார் .

இரண்டு உலக மகா யுத்தங்களின் தீமைகளையும் , இன்றும் தொடரும் போர்களின் அழிவையும் விவரித்தேன் .வல்லரசுகள் ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவோம் என்பதன் பொருள் , அவர்களைத் தவிர வேறு எவரிடமும் ஆயுதங்கள் இருக்கலாகாது என்பது தான் , என்பதைச்



Add caption
Add caption

சான்றுகளுடன் எடுத்துரைத்தேன் .

ஐக்கிய நாடுகள் சபை, ஏகாதிபத்திய  முதலைகளின் பல்லிடுக்கில் உள்ள இறைச்சியை உண்டு வாழ்கிற ஒரு சிட்டுக்குருவி வாழ்க்கையை வாழும் அவலத்தை அவைக்குச் சொன்னேன் .

வாழ்வதற்கு இந்த உலகத்தை விட்டால் , மனிதனுக்கு வேறு இடம் இல்லை என்பதை மனிதனுக்கு உணர்த்துவது நமது கடமை என்பதை மகரிஷி வேதாத்திரியின் சொற்களில் விவரித்தேன் .பேசிய அனைத்தையும் இங்கு எழுதி விட இயலாது ,

நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புவது விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களின் சமூக நடத்தை.
அத்தகைய ஒழுக்கம் எல்லோரும் கற்று உணர வேண்டிய மாபெரும் பண்பு .
அற்புதம் . அளவாகக் கைதட்டி , அளவாகச் சிரித்து , முழுமையாகக் கவனித்து விழாவைப் பெருமை மிக்கதாக நடத்தினார்கள் .

ஆழியாறு அறிவுத் திருக்கோவிலின் அறங்காவலர்கள் இருவர் , தலைமை அறங்காவலர் திரு எஸ் .கே .எம் . மயிலானந்தம் , திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ,சி .பி .ஐ முன்னாள் இயக்குனர் திரு டி.கார்த்திகேயன் ஆகிய பெருமக்கள் விழாவைச் சிறப்பித்தனர் .

அனைத்தையும் பார்த்து விட்டு , விழாவில் உரையாற்றி விட்டுப் புறப்படுகிற பொழுது மனதில் தோன்றியது இது தான் ...

வாழ்க வளமுடன்




Monday, November 25, 2013

ஈரோடு புத்தகத் திருவிழா

கனத்த மழைக்குப் பின்னும் அரங்கம் நிறைந்தது .
வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, புத்தகத் திருவிழா நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை , கேட்கும் பழக்கத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது .

வெகு மக்களின் கேட்கும் திறனை , ரசனையை வளர்ப்பது எளிதான செயல் அல்ல . ஒன்பது ஆண்டு கால தொடர் உழைப்பு , முயற்சி இவைகளால் விளைந்த பயன் அது .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் , மக்கள் சிந்தனைப் பேரவையின்  நிறுவனருமான தோழர் . ஸ்டாலின் குணசேகரன் தான் இதனை சாத்தியப் படுத்திய பெருமைக்கு உரியவர் .

மூட நம்பிக்கைகளை உருவாக்கும் ,வளர்க்கும் , பதிப்பகங்களின் புத்தகங்களை புத்தகத் திருவிழாவிற்குள் அவர் அனுமதிப்பதே இல்லை.
இது  தனியே குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய செய்தி .

பொது அரங்கில் பேச அழைக்கப்படும் எவருக்கும் எந்தத் தடையும் இல்லாத சுதந்திரத்தையும் அவர் தருவார் . அதுவே நமது கடமையையும் , பொறுப்பையும் நமக்கு உணர்த்தி விடும் .

பத்து நாள் நடந்த விழாவில் இந்த ஆண்டும் எனக்குப் பேச வாய்ப்பளித்தார் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் . "நன்றின் பால் உய்ப்பது அறிவு " என்னும் பொருளில் பேசினேன் . எனது பேச்சின் வீடியோ பதிவையோ அல்லது அதன் சாரத்தையோ விரைவில் தர முயல்கிறேன் .

முன்பே இது பற்றி நான் எழுதி இருக்கிறேன் என்றபோதும் , சிறந்த சமூகக் கடமைகளைத் தொடர்ந்து பாராட்டுவதும் , பேசுவதும் கூட ஒரு தொடர்ந்த கடமை என்பதை நான் அறிந்திருக்கிறேன் .

இந்த புகைப்படங்களை எடுத்த நண்பர் நந்தா பாஸ்கருக்கு நன்றி.
 புத்தகத் திருவிழா அரங்கம்
 தோழர் . ஸ்டாலின் குணசேகரன் துவக்கவுரை
 




Saturday, November 16, 2013

வாழ்தல் என்பது ...



எங்காவது , எதற்காவது ஒரு வரிசையில் சென்று கடைசி ஆளாக நிற்கும் போது அடி மனதில் ஒரு அவநம்பிக்கை தோன்றுகிறது . அடுத்த அரை மணி நேரத்தில் நமக்குப் பின்னால் ஒரு பத்துப் பேர் வந்து நின்றதும் அதே அவநம்பிக்கை , நம்பிக்கையாகத் தானே உருமாற்றம் கொள்ளுகிறது


இந்த மாற்றத்தை அறிவு தருகிறதா அல்லது மனம் தானே உருவாக்கிக் கொள்ளுகிறதா ? துல்லியமான விடை தட்டுப்படவில்லை.


மனமோ , அறிவோ ... எல்லாவற்றிலும் அதன் நுட்பம் என்னவென்று அறிந்து கொள்ளுகிற போராட்டமே ... வாழ்தல் என்றாகிறது 

ஈட்டுவதற்கு எதுவுமில்லை எனக்கு ...

 ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , கடுமையான கால் வலியோடு இந்த விழாவிற்குப் போனேன் .


அன்பினால் அரவணைத்துப் போற்றிப் பாதுகாத்து நெகிழ வைத்தார்கள் விழா அமைப்பாளர்கள் . மனமுருக நன்றி சொல்லுகிறேன் அவர்கள் அனைவருக்கும் .


இலக்கியக் கழகத்தின் தலைவரும் , பேராசிரியருமான சகோதரி குருவம்மாள் என்னை எப்போதும் " கிருஷ்ணா " என்று தான் அழைப்பார் . என் வலி உணர்ந்து அமர்ந்து பேசுகிறாயா ? என்று சலுகை தந்தார் . அந்த அன்பை வணங்கி ஏற்றுக் கொண்டு , அமர்ந்து பேசுவது மிகுந்த சிரமம் தருமென்பதால் நின்று தான் பேசினேன் .எனக்கான நினைவுப் பரிசை அவரே எனக்குத் தந்ததும் அளவற்ற மகிழ்ச்சி தந்தது .


.
நண்பர்கள் ஆர் . எஸ் . மணி , இளங்கோ என்று எல்லோரும் பார்த்துப்பார்த்து அன்பினால் நனைத்தார்கள் . அதிலும் இளங்கோ நான் இரவு உறங்கிப் போகிற வரை , தான் ,கண் விழித்து என்னைப் பராமரித்துக் கொண்டார் . எனக்கான பரிசுக்குரிய புத்தகங்களை ஒரு குழந்தை போல ஓடி ஓடிக்  கொண்டு வந்து தந்தார் மணி .



என் சிரமங்களைக் கடந்து நான் சிறப்பாகப் பேச எல்லாம் செய்து கொடுத்தார்கள் . விழாவில் பேசியவை குறித்தும் , விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களையும் விரைவில் பதிவிடுகிறேன் .



இத்தகைய மகத்தான , மாசற்ற , எந்தப் பலனும் எதிர்பாராத இதயங்களின் அன்பைப் பெற்று இருக்கிறேன் என்பதை விடவும் , நான் ஈட்டுவதற்கு எதுவுமில்லை இந்த உலகத்தில் .

Thursday, October 10, 2013

ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை ...

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கானக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. .எப்போது சாலையில் என்ன மாற்றங்கள் நடக்குமென்று அவதானிக்கவே முடியாது .சில இடங்கள் பகலில் ஒரு வழிப் பாதையாக இருப்பதும் , அதே சாலை இரவில் இரு வழிப் பாதையாக மாறுவதும் அன்றாடம் நடக்கும் .

சமயத்தில் வழக்கமான பாதையை அடைத்து வேறு பாதைக்குத் திருப்பி விட்டு விடுவார்கள் . சில இடங்களில் நூறு அடிச்சாலை இருபது அடிச்சாலை ஆகச் சிறுத்திருக்கும் .தலைக்கு மேலும் , தரைக்குக் கீழும் ஓடப் போகிற ரயிலுக்காக மகா ஜனங்கள் இந்த மாற்றங்களை சபித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ளுகிறார்கள் .

வடபழனியில் இருந்து இட வலமாகப் போகிற நூறு அடிச்சாலையும் சில இடங்களில் சிறுத்து , இரை கிடைக்காத விலங்கின் வயிற்றைப் போல ஒடுங்கிப் பின் , இரை எடுத்த மலைப் பாம்பாக விரிந்து கிடக்கும்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு தான் மெட்ரோ ரயில் திட்டம் நடக்கிறதாம் . இவர்கள் கட்டி முடிப்பதற்குள் மக்கள் தொகையும் , வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்து விடும் . திட்டங்களுக்கான கால வரையறையும் , துல்லியமான நடைமுறைப்படுத்தலும் இல்லாத ஒரு நாட்டில் எந்தத் திட்டமும் உரிய பயனை மக்களுக்கு வழங்காது .

நகரம் உருவாகிறபோதே உரிய அகலமான சாலைகளும் , வழித்தடங்களும் இணைத்தே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நகரின் எல்லா நீர் நிலைகளையும் விழுங்கி விட்டார்கள் .

சென்னையில் பல இடங்களில் லேக் வியூ சாலைகள் இருக்கின்றன . ஆனால் ஏரிகளைக் காணோம் . நீர் நிலைகளைக் காப்பாற்றாமல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் நடத்துவதை சொல்லிப் பெருமை கொள்ளுகிறது அரசு. குதிரை காணாமல் போன பிறகு, அது இருந்த லாயத்தைப் பூட்டும் அறிவுடைமை அரசுக்கே உரியது .

சென்னையின் நெரிசலான, நகரின் மையமான  பகுதிகளில் உள்ள பல தெருக்களுக்குள் ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்சோ , தீயணைப்பு வண்டிகளோ எளிதில்  வரவே இயலாது . எல்லாத் தெருக்களிலும் நான்கு சக்கர , இரு சக்கர வாகனங்களைத்  தெருவின் இரண்டு புறத்திலும் எந்த ஒழுங்குமின்றி நிறுத்தி வைத்திருப்பார்கள்.

எதையோ சொல்ல வந்து ... எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன் .
சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் .

அக்டோபர் நான்காம் தேதி பிற்பகல் மதிய உணவுக்காக எனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வடபழனி நூறு அடிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன் .

போக்குவரத்து அதிகம்  இல்லாது இருந்தது . சாலையில் எனக்கு வலது புறத்தில் ஒருவர் சீரில்லாமால் , ஒழுங்கின்றி காரோட்டிக் கொண்டு வந்ததைக் கவனித்தேன் . அவரிடமிருந்து விலகி , இடது புறமாக விலகிப் போனேன் .

சாலை அகலமாக இருந்த அந்த இடத்தில் , அவரை விட்டு விலகி விட இடம் இருந்தது . நல்ல பசி எடுத்ததால் விரைந்து வண்டியைச் செலுத்தினேன் . அந்தக் காரோட்டியை மறந்து போனேன் .

சாலை குறுகலான இடத்திற்கு வந்த போது , கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி மெதுவாகப் போக நேர்ந்தது . அந்தக் கார் இப்போது மீண்டும் எனக்கு வலது புறத்தில் வந்தது . அந்தக் காரைப் பார்த்ததும் மீண்டும் விலகினேன் . அவர் மேலும் இடது பக்கமாக ஏற ஆரம்பித்தார் .

நான் மேலும் விலகினேன் . அவர் முழுக்க , சட்டென இடது புறம் காரை ஏற்றி என் மீது மோதுவது போல  வந்தார் . மிக முயன்றும் அவரது காரின் பின் பக்கத்தில் , எனது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன் .

இடது முழங்காலில் பலத்த காயம் . குருதி கசிந்தது . போட்டிருந்த ஜீன்ஸ் கிழிந்து தொங்கியது . இடது முழங்கால் , கையில் பிடிக்க முடியாத ஒரு பந்து போல வீங்கியது . அதற்குப் பந்துக்கிண்ண மூட்டு என்று பெயர் வைத்ததற்கான காரணம் உடனே புரிந்தது .

பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் டிரைவர் பெருத்த ஓசையோடு பேருந்தை நிறுத்தினார் . தரையில் கிடந்த படியே பார்த்த போது , இதுவரை பார்க்காத பெரிதாக இருந்தது பேருந்து . எழுந்து நிற்பது கடினமாக இருந்தது . ஒருவர் உதவினார் . எழுந்து சாலை ஓரத்திற்கு வந்து சேர்ந்தேன் . தன் நிலைக்கு வர ஒன்றிரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது .

பிறகு, நானே வண்டியை ஒட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் போனேன் . அழுத்தித் துடைத்து , எதையோ ஊற்றி , வெட்டி ஒட்டி , ஊசி போட்டு , மாத்திரை கொடுத்து , ஐந்து நாள் ஓய்வெடுக்கச் சொன்னார் அந்த டாக்டர் .ரொம்ப நடக்காதீங்க, படி ஏறாதீங்க என்றும் சொன்னார் .

ஓய்வெடுக்க வாய்க்கவில்லை . ஐந்தாம் தேதி காலை  புதுச்சேரியில் ஜூனியர் விகடன் ஏற்பாடு செய்த தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்வு ...அங்கிருந்து திருவாரூர் சென்று த .மு .எ .க .சங்கம் நடத்திய கலை இரவு முடித்து மீண்டும் புதுச்சேரி வந்து புதுச்சேரி அரசு நடத்தும் புத்தகத் திருவிழாவில் உரையாற்றி விட்டு வந்தேன் .

எல்லா இடங்களிலும் படியேற நேர்ந்தது . வீக்கமும் , வலியும் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற போதும் , இரண்டு நாட்களாக இளங் காய்ச்சலும் அடிக்கிறது .கால் இப்போது , கால் வாசி குணமாகி இருக்கிறது .


கனிவோடும் , பரிவோடும் , பாசத்தோடும் எல்லோரும் கேட்கிறார்கள் " பாத்து ஓட்டக் கூடாதா ?" என்று . நான் அல்லது நாம் மட்டும் பார்த்து ஒட்டி என்ன செய்ய ? எல்லோரும் பார்த்து ஓட்டினால் தான் விபத்தின்றி வாழலாம் . எப்படிப் பார்த்தாலும் அந்தக் காரோட்டியைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் ?

அப்புறம் பார்த்து நலம் விசாரிக்கிற எல்லோரும் " என்ன ஆச்சு , எப்படி ஆச்சு  ?" என்று கேட்கத் தான் செய்கிறார்கள் .அதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது என்பதும் அனுபவமாகி விட்டது ."இனிமே பாத்துப் போங்க" என்பதும் இலவச இணைப்பாகச்  சொல்லப்படுகிறது .

" ஏதோ இந்த மட்டில் தப்பித்தது புண்ணியம்" என்ற வார்த்தைகளையும் , ஆறுதல் வார்த்தைகளாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

விபத்தை விடவும் கடினமானது விபத்துக்குப் பிந்தைய விசாரணைகள். நமக்குத் தெரிந்த யாருக்காவது இப்படி நடந்தால் நாமும் இந்த விசாரணைகளைச் செய்யாமல் இருப்பதில்லை . நாம்  என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கும் திருப்பித் தரப்படுகிறது .

நாளை மறுநாள் மீண்டும் வெளியூர் போகணும் . வலியைப் பொறுத்துக் கொண்டு போகத்தான் வேண்டும் . வேலை இல்லாமல் ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை .







Monday, September 30, 2013

ஒற்றைச் சொல்

தாத்தாக்களும், பாட்டிகளும்
அம்மா , அப்பாவும் ,
அக்காக்களும்
ஆரம்ப , நடு , உயர் பள்ளி ஆசிரியர்களும் ,
ஒரு சில கல்லூரி ஆசான்களும் ,
வேலைக்கு வந்தவிடத்தில்
அபூர்வமாய்ச் சிலரும்
இப்படித்தான் அழைத்தார்கள் .

இன்னும் கூட மிச்சமிருக்கிறார்கள் ஓரிருவர் .
அப்படி எல்லோரும் அழைத்தது ,
என்னைத்தானென்ற போதும் ,
அழைக்கப்பட்டது நான் மட்டும் தான் .
எல்லோருமழைத்தது  எல்லாம்
செவிகளில் நுழைந்து திரும்பிய ஓசைகள் .

அதே ஒற்றைச் சொல்லால்
அவள் அழைக்கிற போது ,
உடல் , உயிர் , உணர்வு , ஆன்மாவென்று
எல்லாவற்றையும் அழைக்கிறது அது .
ஒற்றைச்சொல் மந்திரமாகும்
சூட்சுமமது .

அழைக்க அல்லாது ,
உயிர்ப்பிக்க அழைத்த ஒற்றைச் சொல்

"டே "....






Thursday, September 19, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 02

மதுரையில் நடந்த விழாவில் நான் சொன்னேன் .

ஒரு படைப்பாளியை அவனது படைப்புகளின் வழியே தான் அவனது வாசகர்களும் , ஒரு சமூகமும் அணுகுதல் வேண்டும் .

அவனது தனிப்பட்ட , அந்தரங்க வாழ்க்கையின் வழியே அவனது படைப்புகளை அணுகுதல் பிழையான அணுகுமுறை .

திருவள்ளுவர் நல்லவரா , கெட்டவரா என்று யாருக்குத் தெரியும் ? திருவள்ளுவரைப் பற்றி வழக்கில் இருக்கும் கதைகள் அவரது புகழுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை .திருவள்ளுவர் அழைத்ததும் , கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி வாசுகி , கயிற்றை அப்படியே விட்டு விட்டு ஓடிப் போனதாக ஒரு கதை சொல்லப்படுகிறது .அந்தக் கயிறும் , வாளியும் கிணற்றில் விழாமல் அப்படியே இருந்ததாகக் கதை நீளுகிறது .

கயிறும் , வாளியும் அப்படியே நின்று விட வாய்ப்பே இல்லை . இறைத்து முடித்து விட்டு வருகிற வரை காத்திருக்கும் பொறுமை வள்ளுவருக்கு இல்லாமல் இருந்திருக்கும் என்று எடுத்துக் கொண்டால் , "வாழ்க்கைத் துணை நலம்" என்ற அதிகாரத்தை எந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதினார் என்று எளிதில் கேட்டு விடலாம் .இது பொருத்தமான அணுகுமுறை அன்று .ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கடந்து நிற்பது படைப்பு மட்டுமே .

இந்தக் கேள்வியைக் கம்பன் , இளங்கோ , காளிதாசன் , என்று எல்லாப் படைப்பாளிகளுக்கும் , படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் . திருவள்ளுவரைப் பற்றி எல்லாம் இத்தகைய கேள்விகளை நீங்கள் எழுப்பக்கூடாது என்று ஒரு நண்பர் நிகழ்ச்சி முடிந்ததும் சொன்னார் . அவருக்குச் சொன்னேன் . "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ...... என்பது வள்ளுவனுக்கும் பொருந்தும் என்று . அவர் அறிவு ஒப்புக் கொண்டாலும் மனசு கேட்கவில்லை என்றார் . அதற்கு யாமென் செய்தல் கூடும் ?

காலத்தால் முந்தய படைப்பாளிகளின் படைப்பை மதிப்பிட , படைப்பின் வழியாக மட்டுமே அவர்களை அணுகும் சமூகம் , சம காலப் படைப்பாளிகளின் விசயத்தில் நீதியற்ற , நெறியற்ற அணுகுமுறையை கைக்கொள்ளுகிறது

அது தான் ஜி . நாகராஜனின் விசயத்தில் நடந்தது . அவரது படைப்புகளைப் பற்றிய உரையாடல் எழுந்த போதெல்லாம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் இணைந்து கொள்ளுவதை நான் கண்டிருக்கிறேன் .
எனக்கு அது எப்போதும் பொருத்தமற்றதாக , வரம்பு மீறியதாகவே பட்டிருக்கிறது .

நான் ஜி . என் அவர்களைப் பார்த்ததில்லை . அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது . தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவரது படைப்புகளின் வழியாக மட்டுமே நான் அவரை அறிந்திருக்கிறேன் . அது எனக்குப் பெருமிதமும் , உவப்பும் தருகிறது .

"தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாடுவதற்கு எல்லையற்ற மகத்தான கற்பனையும் , காதலும் வேண்டும் . அது பாரதிக்குள் பொங்கிப்பிரவகிக்கும் கவிதைப் பேராற்றல். அது எல்லோருக்கும் வாய்க்காது .

அது போலவே , சமூக அநீதிகள் குறித்து எழுதுகிற எல்லோரும் , நெருப்புக்கு வெளியே நின்று கொண்டு தான் நெருப்பைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் . இருக்கிறோம் .

ஆனால் , நெருப்புக்குள் நிற்கிறவனுக்குத்  தான் அதன் அசலான சூடு தெரியும். அப்படி ,நெருப்புக்குள் நின்று எழுதிய வெகு சில படைப்பாளிகளில் ஒருவர் ஜி . நாகராஜன் .

                                                                           அன்று பேசியதை இன்னும் எழுதுவேன்

Sunday, September 15, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01

ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப்  புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப்  பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , பஷீர் , தகழி , கார்க்கி , கம்பன் ,செக்காவ் , தாயுமானவர் , குமரகுருபரர் , பாவேந்தர் , ..... என்றொரு மாபெரும் பட்டியல் இருக்கிறது . பட்டிமண்டபங்களை விட , தனித் தலைப்புகளை விட இது சிறந்த பயனை அளிக்கும் . பப்பாசியின் கவனத்திற்க்கு இதனை யாராவது கொண்டு போக வேண்டுகிறேன் . ஆட்சியாளர்களை , அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கடப் படுத்தாமல் புத்தகக் கண்காட்சியையும் சிறப்பாக நடத்தி கொள்ளலாம் .ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை அடிக்கும் வித்தை எல்லாம் இப்போது எல்லோரும் சொல்லித் தருவதில்லை .


நிகழ்வுக்கு என்ன தலைப்பிடுவது என்று பயஸ் கேட்டார் . ஆழ்ந்து சில நிமிடங்கள் யோசித்து  "ஒப்பனையற்ற  எழுத்துக்காரன்" என்ற தலைப்பை சொன்னேன் . பயஸின் தனது சந்தோசத்தை அப்போதே உற்சாகமான குரலில் வெளிப்படுத்தினான் .அழைப்பிதழை வடிவமைத்தோம் . நினைவுப் பரிசைத் தீர்மானித்தோம் . அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் விழாவில் பங்கு பெற்றுப் பேச விரும்புவதாக உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பெருந்தன்மையோடு விருப்பம் தெரிவித்தார் .அவருக்கும் நன்றி சொல்லணும்

 அவரது படைப்புக்களை முழுவதுமாக வாசித்திருந்த போதும் , மறு வாசிப்பிற்காக மீண்டும் புத்தகம் வேண்டுமெனக் கேட்டதும் தனது பிரதியைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார் பயஸ் .

விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . ஜி . என் , அவரது படைப்புகள் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்ட தருணம் அது . அவரது அன்பு மகன் திரு . கண்ணன் முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , தன் தந்தை வாழ்ந்த மதுரை மண்ணில் அவரது நினைவும் , படைப்புகளும் கொண்டாடப் படுவதைக் கண்கள் சிவக்க , கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தார் . அவரது தந்தையின் உருவப் படத்தை நான் அவருக்குப் பரிசளித்த போது மிக மிக நெகிழ்ந்து , ததும்பிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டார் .

சென்னைக்குத் திரும்பி , வீட்டில் அந்தப் படத்தை தனது தாயிடத்தில் தந்திருக்கிறார் . அவரே பயசுக்குப் போன் செய்து ," அம்மாவின் முகம் இத்தனை ஒளிர்ந்து இருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை . அப்பாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு அம்மா அதை ஸ்பரிசிப்பதை , கலங்குவதை , சிரிப்பதை , நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் " என்று சொல்லி இருக்கிறார் . இதைத் தனிப் பதிவாக பயஸ் தனது முக நூலிலும்
பதிவிட்டிருக்கிறார் .

இந்த நிகழ்வுக்காக அல்லாமல் வேறு பணி நிமித்தமாக மதுரை வந்த கல்கி இதழின் நிருபர் ஸ்ரீரெங்கம் திருநாவுக்கரசு மிகச் சிறப்பாக, நேர்த்தியாக , மெய்மை நிரம்ப அதனைக் கல்கி இதழில் எழுதி இருக்கிறார் . அவருக்கும் , கல்கி இதழுக்கும் நமது நன்றி .

எல்லாவற்றிற்கும் மேலாக இதனை நடத்திய கூழாங்கற்கள் அமைப்பு , அதில் பங்கு பெற்று பணியாற்றிய எனது நண்பர்கள் குறித்தும் , அந்த விழாவில் நான் விரிவாக ஜி . என்  , அவரது படைப்புகள் பற்றி பேசியதையும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன் . எழுதணும் . பேசியதைப் பதிவு செய்வது மிகுந்த அவசர , அவசியமாகி இருக்கிறது 

Friday, September 6, 2013

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .

ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .

அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .

அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .

பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .

நான் சரவணன் ... என்று துவங்கி சரவணன் என்கிற பெயர் மீது பெருக்கல் குறியிட்டு ...வித்யா என்று தலைப்பிடப்பட்ட அந்த நூல் திருநங்கைகளைப் புரிந்துகொள்ள, அறிந்து கொள்ள உதவும் தனித்துவமான நூல் .

சிறந்த மொழி நடையில் , தனது அனுபவங்களை மெய்மை துலங்க எழுதி இருப்பார் வித்யா .என் மனம் கவர்ந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று . அவரை நான் முதல் முறை கடந்த மாதம் ஒன்பதாம் தேதி  மதுரையில் சந்தித்தேன் .

மிக நீண்ட நாள் கண்டு அறிந்து , புரிந்து  கொண்ட நண்பர்களாய் உணர்ந்தோம்.தனது சிறுகதைத்தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் . இன்னும் படிக்கவில்லை . படித்த பிறகு தனியே அது பற்றி எழுதுகிறேன்

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் , தமிழ்ப் பேராசிரியரும் , சிறந்த நாவன்மை கொண்டவருமான தோழியர் . சுந்தரவல்லியும் திருநங்கைகளின் மாநாட்டை வாழ்த்த வந்திருந்தார் .

வெறும் வாழ்த்துரையோடு நில்லாமல் திருநங்கைகளுக்காக களப் பணி செய்யும் சிறந்த பெண் போராளி சுந்தரவல்லி . நல்ல  கம்பீரமும் , ஆளுமையும் கொண்டவர் . எப்போதும் எனது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரியவர் .

நாங்கள் இருவரும் இணைந்து சில அரங்குகளில் உரையாற்றி இருக்கிறோம் . அதில் திருநங்கைகளுக்கான மாநில மாநாடும் ஒன்று .

எங்கள் அனைவரது ஒற்றுமையை , ஒன்றுபட்டுச் சிந்திக்கும்,  செயல்படும் பாங்கை , இந்தப் புகைப்படங்கள் அனைவருக்கும் சொல்லுகிறது


திருநங்கைகளின் மாநில மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் பாரதி கண்ணம்மா



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள் 01



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள்




Thursday, August 29, 2013

கண்களும் , கறுப்புக் கண்ணாடிகளும் ...

      நான் எப்போதும் கறுப்புக் கண்ணாடிகள் அணிந்ததில்லை .அவைகளின் மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்ததில்லை .
படிப்பதற்கும் , எழுதுவதற்குமான கண்ணாடியை அணியத் துவங்கிய பிறகு அதைக் கழற்றி வைக்கவே வாய்ப்பும் , வழியும் இல்லாமல் போய் விட்டது . .ஒரு கண்ணாடியைப் பராமரிப்பதே பெரும் பாடு .
இதில் இன்னொரு கண்ணாடி குறித்த விருப்பம் வராமால் போய் இருக்கலாம் .

கறுப்புக் கண்ணாடிகள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை . சிலருக்கு மேலும் பொலிவைத் தரும் அவை , சிலருக்கு எதிர் மறையான தோற்றத்தை தருவது நமது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம் .

வெளியில் போகிற போது , வெயிலுக்கு அஞ்சிக் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளுவது ஏற்புடையது தான் . ஆனால் பரஸ்பர உரையாடலின் போது கண்களைப் பார்த்துப் பேச வழி இல்லாமல் செய்து விடுகின்றன கறுப்புக் கண்ணாடிகள் .

எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே இருக்கும் ஒருவருடன் உரையாடுவது கடினமானது . அவர் நாம் பேசுவதைக் கேட்கிறாரா , உறங்குகிறாரா என்று அறிந்து கொள்ள இயலாது . அதனினும் ,அவர் என்ன கருதுகிறார் என்பதை அவரது கண்களின் வழியே நீங்கள் கண்டறிய முடியாது .
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் , கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சென்னைக் கண் வியாதிக்காரர்கள்  அணிவது நியாயமானது . அவர்கள் தேவை கருதி அதை அணியத் தான் வேண்டும் .

பகலில் கண்களில் தூசி படாமல் இருக்க அணிவதும் சரி தான் . இருபத்தி நாலு மணி நேரமும் அணிந்து கொண்டு திரிகிற ஒருவரால் இந்த உலகத்தை அதன் அசலான வண்ணத்தில் ஒரு போதும் பார்க்க இயலாது .

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மதுரையில் திருநங்கைகளின் மாநில மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்த , தங்கி  இருந்த விடுதியில் இருந்து புறப்பட்ட போது வீதிகளில் வெயில் மிகப் பெரும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தது .

"என்னாப்பா ... இப்பிடி வெயில் " என்றதும் , " இதப் போடுங்கண்ணே " என்று தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்தான் தம்பி எர்னஸ்டோ .
முதலில் தயக்கமாக இருந்தது . வாங்கி அணிந்து கொண்டதும் "நன்றாக இருப்பதாக" சுற்றி இருந்த எல்லோரும் சொன்னார்கள் . நம்பிக்கை தானே வாழ்க்கை .அணிந்து கொண்டேன் .

மாநாட்டு வாசலில் போய் இறங்கியதும் எர்னஸ்டோவே வளைத்து வளைத்து வித விதமாய்ப் புகைப்படங்கள் எடுத்தான் .புகைப்படம் எடுத்து முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்து விட்டேன் .வந்த புகைப்படங்களைப் பார்த்த போது நண்பர்கள் பொய் சொல்லவில்லை என்பது தெரிந்தது

 எனவே , முதன் முறையாகக் கறுப்புக் கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பினேன் . அண்மையில் மும்பை போன போது சில கடைகள் ஏறி இறங்கியும் வாங்காமல் வந்து விட்டேன்

எப்போது வாங்குவேன் என்று தெரியவில்லை .


இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒருவர், "மதுரைல அரவிந்த் கண் மருத்துவ மனைக்குப் போனியா ? என்று கேட்ட பிறகும் கண்ணாடி வாங்குகிற ஆசை குறையவில்லை . யாரை விட்டது ஆசை ...

 ஆனால் உரையாடல்களின் போது கண்களுக்கு இடையில் கறுப்புத்  திரை இருப்பதை ஒரு போதும் என்னால் ஏற்க இயலாது


Tuesday, July 23, 2013

புகைப்படங்களும் பிரிவும் . . .

அது "கடல்  பூக்கள்" திரைப்படத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் .திரு கே . வி . மணி தான் எடுத்தார் .
ஒரு பத்து நாட்கள் எங்களோடு இருந்தார் திரு . ஜனகராஜ் .
அபூர்வமான கலைஞன் .பத்தே நாட்களில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்
படம் இறுதியான போது அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம் பெறவில்லை .அது வேறு தனிக் கதை .

இந்த புகைப்படம் நாங்கள் இருவரும் விரும்பி எடுத்தது .
இதை எடுத்ததும் ," நல்ல பிரண்ட்ஸ் போட்டோ எடுத்தா பிரிஞ்சுருவாங்களா BK " என்று கேட்டார் ஜனகராஜ் . அதைத் தொடர்ந்து தனது வழக்கமான பெரும் சிரிப்பை மேற்க்குக் கரையெங்கும் காற்றில் படர விட்டார் .

"அப்படிஇருக்காது ஜனா ... அதை விட ஒரு போட்டோவுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் இருந்தா என்ன போனா என்ன " என்றேன் .
மீண்டும் பெரும் குரலெடுத்துச் சிரித்தார் . கடல் அலைகளும் அவரோடு சேர்ந்து சிரித்தன ... சட்டென மௌனமானார் .
"அதானே ... அதுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் என்னாத்துக்கு ... சூப்பராச் சொன்னீங்க BK" என்றார் .

இந்தப் படம் எடுத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன . இது அவரது பங்குக்கு உரிய  படப்பிடிப்பு வேலைகள்  முடிந்த இறுதி நாளில் எடுக்கப்பட்டது . அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சென்னையிலேயே இருந்தும் இன்று வரை சந்தித்துக் கொள்ளவே இல்லை . தொலைபேசியிலும் உரையாடவில்லை . எனினும் நாங்கள் இன்னும் , இப்போதும் சிறந்த நண்பர்கள் தான் என்று நான் கருதுகிறேன் ...

" சரி தானே ஜனா ? அப்படிச் சொல்லலாம் தானே ? எப்போதாவது இதைப் பார்த்தால் , அப்போது நீங்கள் சொன்னால் போதும் ஜனா ...எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லலாம் . அது தானே நாகரீகமான நட்பு .

   

கடிதமல்ல . . . கல்வெட்டு

திரைப்படத் துறையில் என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் நான் மிக மதிக்கும்  மனிதர் கே. வி. மணி .
மகத்தான புகைப்படக் கலைஞர் ..
 தீவிரமான வாசகர் .
அசலான தமிழ்ப் பற்றாளர் .
ஆனந்த விகடன் இதழில் பிரசுரமான எனது "அப்பாவின் வாசனை "
சிறுகதை குறித்து அவர் எனக்கு எழுதின கடிதம் இது .



ஒரு படைப்பாளி தனது படைப்புக்கான ஆகச்சிறந்த
அங்கீகாரமாக இது போன்ற கடிதங்களையே சுவீகரிக்கிறான் .
அது அவன் எழுத அமரும் தருணங்களில் ஆசனமாய்
அவனுக்கு இடமளிக்கிறது . எழுதுகோலுக் குள் உயிர் மையாய்ப் பெருகுகிறது.

Friday, July 19, 2013

"அப்பாவின் வாசனை "

ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத வாய்த்தது.
ஆனந்த விகடன் அதனைப் பிரசுரித்துச் சிறப்பித்தது .
என் மனதுக்குள் இருந்த அந்தக் கதையின் நாயகியை வண்ணத்தில் வடித்து இருந்தார் ஓவியர் ம. செ.
இதழைப் பிரித்ததும் ,வியப்பும் ,ஏனோ வேதனையும் ஒருங்கே மனதில் வந்தது







Thursday, July 18, 2013

உறவுகள் ... பாட்டி 02

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் அப்போது மதுரையில் இருந்தேன் . போக்குவரத்து வசதிகளும் , தகவல் தொடர்பு சாதனங்களும் இப்போது போலப் பெருகி இராத அந்த நாளில் , மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டேன் . பகல் நேர ரயில்கள் எதுவும் இல்லை . ஆடி அசைந்து போகும் ஒரு அரசுப் பேருந்து அகப்பட்டது .அப்போதெல்லாம் மதுரைக்கும் சென்னைக்கும் பன்னிரண்டு மணி நேரப் பயணம் போக வேண்டும் .பேருந்து சென்னையை  நெருங்கும்போது ,பொழுது சரியத் தொடங்கி இருந்தது . தாம்பரம் தாண்டியதும் , மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் இறக்கி விடச் சொன்னேன் . நிறுத்தம் இல்லாத இடத்தில் கருணையோடு இறக்கி விட்டார்கள் . இறக்கி விடுகிற போது ,"இந்த கலை இலக்கிய இரவுல பேசுற கிருஷ்ணகுமார் தான நீங்க ? "என்று நடத்துனர் கேட்டார் . அவ்வளவு துயரத்திலும் ஏனோ ஒரு சின்ன சந்தோசம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப்  போலக் கடந்து போனது .

சாலையைக் கடந்து , மீனம்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்கிற போது நன்றாக இருட்டி விட்டது . இடது புறம் ஜெயின் கல்லூரியும் , வலது புறம் பின்னி நிறுவனமும் என் துயரத்தில் பங்கு பெறுவதுபோல இருளில் அமைதியாக நின்றன . அந்தப் பாதையெங்கும் காற்றைப் போல மௌனம் கலந்து கிடந்தது . அந்த மௌனத்தின் ஊடே , தனித்து நடந்து போனேன் .இரண்டு , மூன்று ஒற்றையடிப்பாதைகள் ஒன்று சேர்ந்த அகலத்தில் இருந்த பாதை அது . பாதை நேரே சென்று இடது புறம் ஒரு முறையும் , வலது புறம் ஒரு முறையும் தானே திரும்பி நங்கநல்லூருக்குள் நுழைகிறது . அப்போது , மாமா அங்கே தான் குடி இருந்தார் .

பாதை இடது புறமாகத் திரும்புகிற இடத்தில் , வலது கைப் பக்கத்தில் இருந்த மயானத்தில் எல்லோரும் நின்றுகொண்டு இருந்தார்கள் . வீடு வரை போக வேண்டிய அவசியம் இல்லாது போனது . எல்லோரையும் விலக்கிக்கொண்டு , சிதையில் ஏற்றப்பட்டப் பாட்டியைப் பார்த்தேன் . என்னைப் பார்த்ததும் மாமா சொன்னார் " பாத்தியா... இந்தப் பய வந்துட்டாம் பாரு .. அவ வச்சுருந்த பிரியம் அவனக் கொண்டாந்து சேத்துருச்சு ... பாத்துக்கடா " . அதற்கு மேலும் பேச முடியாமல் மாமா கலங்குவது உணர்ந்தேன் .

இறந்தவர்களின் முகங்களிலும் கூட , அவர்களது இறுதி நொடியின் போதான உணர்ச்சிகள் உறைந்து போய் விடுவதாக சிலர் சொன்னதுண்டு .
"சாந்தமா , அமைதியா , தூங்குறாப்புல இருக்கு "
"அடடா ... சிரிச்ச முகமால்ல இருக்கு "
இப்படி வார்த்தைகளை நிறைய இழவு வீடுகளில் கேட்டிருக்கிறேன் . பாட்டியின் முகத்தில்  தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும் அனுபவித்த பாவனை இருந்தது .இதே முகத் தோற்றத்துடன் இதற்கு முன்னும் , அவள் உயிரோடு இருந்த காலத்தில் ஒரு முறை பாட்டியைப் பார்த்த நினைவு வந்தது . மேலும் எதுவும் சிந்திக்க வழி இல்லாமல் , பாட்டியின் முகத்தை மறைத்து  எருவாட்டிகளை அடுக்கினார்கள் .மாமா சிதைக்குத் தீ இட்டார் . 

எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் . பெட்ரோமாக்ஸ்  ஒன்றின் அடர்ந்த திட்டு வெளிச்சம் முன்னும் , பின்னும்  ஆடிய படியே எங்களுக்கு வழி காட்டியது .அதன் ஒளியும் , அது உருவாக்கிய நிழல்களும் என் நினைவுகளைப் போலவே முன் பின்னாகப் புரண்டது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் , பாட்டி இதே போல ஒரு முன்னிரவில் மதுரைக்குப்  பஸ்ஸில் வந்து இறங்கினாள். தல்லாகுளம் பெருமாள் கோவில் வாசலில் பஸ்ஸை நிறுத்தி , வீட்டுக்கு அழைத்துப் போகாமல் , நேரே மதுரை தத்தனேரி பெரிய மயானத்துக்கு அழைத்து வந்தார்கள் . பாட்டியின் வருகைக்காக இறந்து போன அம்மாவின் உடலோடு நாங்கள் மயானத்தில் காத்திருந்தோம் . சிதையில் கிடத்தப்பட்டிருந்த தன்  மகளின் முகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு , கொஞ்ச நேரம் மெளனமாக நின்றாள் பாட்டி . அவளது முகம் தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும்  சுமந்திருந்தது . நெற்றியில் அவளது வழக்கமான திருமண் கலைந்து இருந்தது . முகம் மரணமடைந்தவர்களின் முகம் போல இறுகிக் கிடந்தது . கொஞ்ச நேரத்தில் , அடி வயிற்றில் அடித்துக்கொண்டு , "ராஜாத்தி ... ராஜாத்தி ..." என்று தன் மகளின் முகம் தொட்டுக் கதறி , மயானமே திகைக்கப் பெருங் குரலெடுத்து அழுதாள் பாட்டி . அவள் அடி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதது , அவள் மகளைச் சுமந்த இடத்தைப்  பழிப்பதாக இருந்தது .

இரண்டு நாளைக்குப்பிறகு, மாமா வேலை பார்த்த பிரபலமான ஆங்கில நாளிதழில் , பாட்டியின் மரணம் நான்கு வரிகளில் செய்தியாக வந்திருந்தது .எவ்வளவு பெரிய வாழ்க்கையையும்  நான்கே வரிகளில் சுருக்கி விடுகிற ஆற்றல் நமக்கு இருக்கத்தான் செய்கிறது .


                                                                                                           பாரதி கிருஷ்ணகுமார் 

Wednesday, July 17, 2013

உறவுகள் . . . பாட்டி - 01

அது  மனம் மயங்கிச் சரிந்து கிடந்த மாலை நேரம் .
என் தனிமைக்குள் நான் இணைந்திருந்த தருணம் .
அலுவலக அழைப்பு மணி ஒலித்தது .
அன்பு நண்பர்கள் அதிஷ்டாவும் , யுவ கிருஷ்ணாவும் வந்தார்கள் .
நீண்ட நேரம் பேசி சிரித்துக் கழிந்தது பொழுது .
இறுதியில் , புதிய தலைமுறைக்கு  "உறவுகள்" என்ற பொதுத் தலைப்பில் பாட்டி பற்றி ஒரு கட்டுரை கேட்டார்கள் . அன்றைக்கு இருந்த மன நிலையில் சம்மதித்தேன் . சிறப்பாக அதனைப் பிரசுரம் செய்தது புதிய தலைமுறை .
அந்த இதழ் எடுத்து வைத்தது எங்கோ இடிபாடுகளில் கிடக்கிறது .
அதன் கையெழுத்துப் பிரதி இன்று கண்ணில் பட்டது .
அதனால் அதை உங்களுக்கும் பார்க்கத் தருகிறேன்


பாட்டி 

"அம்பாளுக்கு " ஒவ்வொரு ஊரிலும் ,ஒரு பெயர் இட்டு வழங்குவது  போலத்தான் பாட்டிக்கும் .ஆயா , ஆச்சி ,அம்மாயி ,அம்மாச்சி ,அம்மம்மா ,அம்மாத்தா , என்று  வட்டாரத்திற்கு ஒரு விதமாய்க் கூப்பிட்டுக் கொள்ளுகிறார்கள் . பாட்டி என்பது எங்குமான பொதுப் பெயராகி இருக்கிறது . தனது தாய் அழைப்பதைப் போலவே , பாட்டியையும்  "அம்மா" என்று அழைக்கிற பேரக் குழந்தைகளும் உண்டு .எந்த ஊரில்  , எங்கு , எப்படிக் கூப்பிட்டாலும்  , அவள் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி உருவாகி , வார்ப்பாக நிற்கிறாள் .

தங்கள் குழந்தைகளிடம் , தாங்கள் காட்டிய  கண்டிப்பையும் அதிகாரத்தையும் கொண்ட ஒரு கரு நிழல்  தங்கள்  பேரக்குழந்தைகளின் மீது படிந்து விடக்கூடாது என்பதால் , எல்லாத் தாத்தாக்களும் , பாட்டிகளும் தங்கள்  பேரக் குழந்தைகளிடம்  பேரன்பைப் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள் . இளமையில் தாங்கள் செய்த தவறை , முதுமையில் , பிறர் செய்யாமல் தவிர்க்கும் , தடுக்கும் அனுபவத்தின் முதிர்ச்சியில் இருந்து தான் இந்த அன்பு ஊற்றெடுக்கிறது .

அம்மாவைப் பெற்ற அம்மாவை " அம்மம்மா " என்று தான் நாங்கள் எல்லோரும் கூப்பிடுவோம் . அம்மம்மாவுக்கு ஒரு மகள் , ஒரு மகன்  என இரண்டு குழந்தைகள் . நான் மகள் வழிப் பேரன் . ஒரே பேரன் . மூன்று பேத்திகள் . மகன் வழியில் இரண்டு பேரன்கள் , ஒரு பேத்தி என , பாட்டி ஏழு பேரக் குழந்தைகளுக்குச் சொந்தக்காரி .எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகப்  பாவித்திருந்தாள்.

திருமணமான ஐந்தே ஆண்டுகளில் , இரண்டு  குழந்தைகளைக் கையில் தந்து விட்டு , கடும் வயிற்றுப்போக்கு நோய்க்கு ஆளாகி , எந்த வைத்தியமும் பலன் தராது , தாத்தா செத்துப் போய் இருக்கிறார் .தாத்தா செத்த பிறகு , நெற்றியில் செந்நிறத்தில் திருமண்ணும் , மூக்குத் தண்டின் மேல் பகுதியில் இரண்டு புருவங்களையும் இணைத்தொரு வெண்ணிறத் திருமண்ணும் பாட்டி இட்டுக் கொள்ளுவாள் .சிறிய , கூர்மையான அவளது அழகிய நாசிக்கும் , முகத்திற்கும் அது எப்போதும் மங்களகரமாகவே  இருந்தது .

நாங்கள் மதுரையில் இருந்தோம் . பாட்டி , சென்னையில் தனது  மகன் வீட்டில் இருந்தாள் . எண் 7, வேதகிரி மேஸ்திரி வீதி , சிந்தாதிரிபேட்டை , சென்னை என்ற முகவரியில் தான் பாட்டி குடி இருந்தாள். அந்த முகவரியில் இருந்து , அம்மாவுக்கு அவள் எழுதின கடிதங்கள் கணக்கில் அடங்காதவை . பெரும்பாலும் பென்சிலால் எழுதப்பட்டு , பேனாவால் முகவரி எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் ஒன்றைக்கூட பாதுகாத்து வைக்காமல் போனோம் . பகல் வேளைகள் முழுவதும் புத்தகம் படிப்பது பாட்டிக்குப் பிரியமான நேரம் . படிப்பது அவளுக்குப் பெரும் விருப்பம் .

1940 களிலேயே  , தனது மகளை ஆசிரியப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பிப்  படிக்க வைத்த பெருமை பாட்டிக்கு உண்டு . பின்னாளில் , ஆசிரியப் பணி புரிந்த அம்மா , தனது சம்பளத்தில் இருந்து , என்னைத் தவிர யாருக்கும்தெரியாது பாட்டிக்குப் பணம் அனுப்பிக்கொண்டே இருந்தாள் . ஒவ்வொருமுறை பணம்  அனுப்புகிற போதும் ," எங்க அம்மா தான என்னைப் படிக்க வைச்சா... " என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளுவாள் அம்மா .

பாட்டியும் , நாங்களும் வேறு  வேறு ஊர்களில் வாழ்ந்தது அழியாத நினைவுகளையும் ,வற்றாத பேரன்பையும் உருவாக்கியது . ஒவ்வொருமுறையும் சென்னையில் இருந்து மதுரைக்கு வருகிற போதெல்லாம் , சீர் கொண்டு  வருவது மாதிரி பத்துப் பன்னிரண்டு பெரும் பைகளோடு தான் வருவாள் . மதுரையில் இருந்து புறப்படுகிற போதும் , அதே போலச் சீர் கொண்டு போவாள் .அவள் மதுரைக்கு வருகிற போதும் . சென்னைக்குப் புறப்பட்டுப் போகிற போதும் , நாங்கள் ரயில்வே  ஸ்டேஷன் போகாமல் இருந்ததில்லை . எல்லோரும் பார்க்க , எதைப்பற்றியும் , யாரைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாச் சந்திப்புகளையும் ,எல்லாப் பிரிவுகளையும் பெருகிய கண்ணீரால்  நிறைத்து விடுவாள் பாட்டி .ஒப்பனையற்ற , களங்கமற்ற அந்த அன்பை வேறு எந்த உறவிலும் கண்டடைய முடியாது .

இதனை எழுதுவதற்கு முன்பு , ஒரு முறை வேதகிரி மேஸ்திரித் தெருவில் நடந்து போக விரும்பினேன் . போனேன் .
அந்தத் தெருவும் , அதற்குப் போகிற பாதைகளும் , சுற்றி இருந்த வீடுகளும் முகம் தெரியாதபடி முற்றாக மாறி விட்ட சென்னையில் , ஏழாம் எண் கொண்ட பாட்டி வாழ்ந்த அந்த வீடு இன்னும் அப்படியே பெரிய திண்ணைகளுடன், அழிக் கம்பிகளுடன் அப்படியே என் நினைவுகளைப் போல அழியாமல் , மாறாமல் இருந்தது .மிக மிக மெதுவாக அந்த வீட்டைக் கடந்தேன் .

பாட்டியின் உரத்த குரலும் , அவளது தனித்துவமான சமையலின் மணமும் , பித்தளையில் செய்யப்பட சிற்றுரலில் அவள் வெற்றிலை இடிக்கிற சத்தமும் கேட்கத் தான் , உணரத்தான் செய்கிறது  மனது . சிற்றுரலில் இருந்து வெற்றிலையைச் சுழற்றி கையில் எடுத்து உருட்டுகிற லாகவமும்,இடித்துக் கொடுத்தால் அதிலிருந்து கிள்ளிக் கொடுக்கும் கருணையும்.... இப்போது நினைக்க உள்நாக்கு சிவக்கிறது அந்தப் பழைய வீட்டில் படியேறி உள்ளே போனதும் ,முதலில் வருகிற இடைகழியை அடுத்த முற்றத்தில் , இரண்டு மரத் தூண்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிற துணி காயப் போடுகிற கொடியில் அவளது  தூய வெள்ளை வாயில் ரவிக்கையும் , அரக்கு வண்ணத்தில் கருஞ் சிவப்புக் கட்டமிட்ட சின்னாளப் பட்டுப்  புடவையும் , அதே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டே இருக்கிறது .

வளையாத முதுகு அவளுக்கு . எங்கேயும் , எப்போதும் நிமிர்ந்து தான் உட்காருவாள் . முதுமையின் தடங்கள் அவள் தோற்றத்தில் இருந்ததே அன்றி , ஒரு போதும் அவளது இயக்கத்தில் இருந்ததில்லை . எவ்வளவு வேலைகள் இருந்தாலும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள் . சளைக்கவோ, சலிக்கவோ அவளுக்குத் தெரியாது . உழைப்பின் பரவசத்தை ஜீவ சுபாவமாகக் கொண்டிருந்தாள் பாட்டி . எந்த வேலையானாலும் சுத்தம் அவள் இயல்பாகவே  இருந்தது ...

ஒரு சிறிய தவறு நடந்தாலும் , பெருங் குரலெடுத்துச் சண்டை போடும் அவளது குணத்தை யாருமே பாராட்டியதில்லை ."சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் ஊரைக்கூட்டுவாளே " என்கிற பேர் அவளுக்கு எப்போதும் இருந்தது . மிக மோசமான முன் கோபக்காரி என்பது தான் , அவளைப் பற்றிய அறிமுகமாக எப்போதும் எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது . அம்மாவே கூட இதனைச் சமயங்களில் சொல்லி இருக்கிறாள் . எனக்கும் அப்போது அப்படித் தெரிந்திருக்கிறது .

ஆனால் , அடைபடாத அவளது கோபத்தின் நியாயங்கள் இப்போது  தான் எனக்குத் தட்டுப்படுகிறது . தன் காலம் முழுவதும் எந்த விதமான பொய், களவு , சூது , அழுக்காறு , அவதூறு , என எந்த இழி குணத்தையும்  ஒருபோதும் அறிந்திராத , உணர்ந்திராத பாட்டியால்  எந்த மிகச் சிறிய தவறையும் சகித்துக்கொள்ள இயலவில்லை . தன் கூடு நோக்கி வரும் ஒரு பசித்த பாம்பைக் கண்ட தாய்ப் பறவை போல சிறகு துடித்துப்  படபடத்திருக்கிறாள் . அந்தப்  படபடப்பைத்தான் தான் கோபமென் று  நாம்  குறைபாட்டுடன்  புரிந்து கொண்டிருக்கிறோம் .எல்லாக் குற்றங்களையும் , தவறுகளையும் பெருந்தன்மை , நாகரிகம் , பொறுமை என்னும் பாவனையில் சகித்துக்கொள்ள பழகி விட்ட நமக்கு  ஒரு தாய்ப் பறவையின் பரிதவிப்பு  புரிவது  சிரமமானது தான் .

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் மதுரையில் இருந்தேன் . . . 



                                                                                                         (இன்னும் இருக்கிறது )

Monday, May 13, 2013

அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?



இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கி தொடர்ந்து பதின்மூன்று மாதங்களுக்கு "சிந்தனை செய் மனமே " என்னும் தொடர் நிகழ்வை திருப்பூர் கருவம்பாளையத்தில் உள்ள அறிவுத் திருக்கோவில் ஏற்பாடு செய்தது .

அறிவுத் திருக்கோவில், மகரிஷி வேதாத்திரி அவர்களின்  ஞான மரபைப் பின்பற்றி, போற்றி வாழும் அன்பர்களின் சங்கமம்.

அந்தத் தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வைத் துவங்கி வைக்கும் மகத்தான, பெரும் பேறு எனக்கு அமைந்தது.

முதல் அமர்வில், எனது ஞான குருவும், மகாகவியுமான சுப்ரமணிபாரதியைப் பற்றி பேசப் பணித்தார்கள் ,

ஒரு ஹிந்துவுக்கு காசியைப் போல், ஒரு முஹம்மதியனுக்கு மெக்காவைப்  போல், ஒரு கிருஸ்தவனுக்கு ஜெருசலேம் போல் எனக்கு எட்டயபுரம்.

 என் உயிரை உருக்கி, மனம் கசிந்து , காதலாகிக் கண்ணீர் மல்கி என் ஆசானைப் பற்றி 29.11.2009 ஆம் நாள் நடந்த முதல் அமர்வில் பேசினேன் .ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் பங்கு பெற்று , தங்கள் பங்கேற் பால் நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தார்கள் .

ஒரு தவம் போல உரையை அவதானித்தார்கள் . அப்படியான ஒரு சபையில் பேசுவது ஒரு சிறந்த அனுபவப் பொக்கிஷம் .

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில்,தமிழகத்தின் பெருமை மிக்க, அறிவிற் சிறந்த சான்றோர் பெருமக்களாகிய திருவாளர்கள் தமிழருவி மணியன்,  அறிவொளி, சுப. வீரபாண்டியன், கு.ஞானசம்பந்தன், நீலகண்டன், கனகசுப்புரத்தினம் எனப் பலரும் பேசிப் பெருமை சேர்த்தனர்.

முதல் அமர்வைத் தொடர்ந்து ஆறாவது அமர்வில் இந்தியத் தத்துவ  ஞான மரபின் மாபெரும் சிந்தனையாளன் சித்தார்த்த புத்தனைப் பற்றிப் பேச அழைத்தார்கள் . மீண்டும் ஒரு மகத்தான அனுபவம். இம்முறை கூட்டம் இரண்டாயிரத்தைத் தாண்டி இருந்தது .

 எனினும் அதே போலத் தவமிருந்த மேன் மக்கள் .இரண்டு தளத்திலும் நிரம்பி இருந்தார்கள் . ஒரு சிலர் தவிர எல்லோரும் குறித்த நேரத்தில் அரங்கில் இருந்தார்கள். சற்றே தாமதமாக வந்தவர்கள், வந்த தடம் தெரியாமல் கூட்டத்தில் கரைந்து கொண்டார்கள் .

புத்தனின் பூரண ஞானத்தை, அவன் பாமர மக்களின் மொழியில் பேசியதை, அவன் கடவுளை மறுத்ததை, தவத்தை, தேடலை அவைக்கு எடுத்து வைத்து, அவர்கள் புத்தனைக் காணச் செய்தேன்.

மீண்டும் வந்ததுஒரு வாய்ப்பு . அது இறுதியானதும், பதின்மூன்றாவதுமான நிகழ்வு . இம்முறை மகரிஷி வேதாத்திரி அவர்கள் முன் மொழிந்த பதினான்கு முக்கிய கோட்பாடுகளில் ஒன்றான "போரில்லா நல்லுலகு" என்கிற ஒன்றை மட்டும் முன் வைத்துப் பேசுவது எனப் பரஸ்பரம் பேசித் தீர்மானம் செய்தோம்.

இம்முறை முந்தைய நிகழ்வுகளையும் மிஞ்சி இருந்தது நிகழ்வு . அரங்கின் வெளியில் கூட அமர்ந்து , ஒரு சலசலப்பும் , சந்தடியும் இல்லாமல் பேசுவதை அவதானித்தார்கள் .

உலகில் நடைபெறும் அனைத்து வகையான போர்களையும் மகரிஷி எதிர்க்கிறார். அமைதி மட்டுமே மனிதனுக்கான வாழ் நெறி என்று தெளிவுற முழங்குகிறார் . ஆயுத வியாபாரமும், ஆயுத வியாபாரிகளுமே போர்களைப் பிரசவிக்கும் சாத்தான்கள் என்பதை மகரிஷி அறிந்திருந்தார். அதைத் தனது மொழியில் நேர்படச் சொன்னார். அதை விரிவாக, மேலும் வரலாற்றுச் செய்திகளோடு எனது பாங்கில் எடுத்து உரைத்தேன்.

ரொம்ப முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட மாட்டேன். ஒவ்வொருமுறையும் நிகழ்வு முடிந்ததும் அமைப்பாளர்களில் ஒருவர் மேடைக்கு வந்து நமக்கு நன்றி சொல்லும் தருணம் ...

 அவர் மேடைக்கு வந்து நமது பெயர் , நமது குடும்பம் ,நமது செயல்பாடு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சொன்னதும், அரங்கில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள்  ஒன்று சேர்ந்து , பிசிறின்றி , மனமுருக "வாழ்க வளமுடன்" என்று சொல்லும் விதம்.

 நீங்கள் ஆசீர்வதிக்கப்படும் தருணம் அது . மனம் , வெயிலில் வைத்த சாக்லேட் போல ஆகி விடும். அந்த மூன்று முறையும் , அந்தக்  குறிப்பிட்ட தருணத்தில் இறந்து போன அம்மாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது. இதைப் பார்க்கவும், கேட்கவும் அவள் இல்லாது போன துயரம் காரணமாக இருக்கலாம்.

எதையோ எழுத வந்து எங்கோ தன் போக்கில் , நினைவின் பெரு  வெள்ளம் இழுக்கிற பாதையில் ஓடுகிறது எனது  எழுத்து. லகான் இல்லாத குதிரையை எதை வைத்து இழுத்து நிறுத்துவது  ... அது தானாகத் தான்  ஓடி நிற்க வேணும் . நிற்கிறது.

அந்தப் பதின்மூன்று அமர்வுகளில் நிகழ்த்தப்பட்ட உரைகளை  ஒலிக் குறுந்தகடாகப் {AUDIO CD } பதிவு செய்து  வைத்திருக்கிறார்கள். அதனைப் பெற விரும்புகிறவர்கள் எனது அருமை நண்பர் திருமிகு . அர்ஜுனன்  ( 99444 12888 )அவர்களைத் தொடர்பு கொண்டால் , அவர் உங்களுக்கு வழி வகை செய்து தருவார் .

 எனக்கும், அதன் தொகுப்பொன்றை தருமாறு அவரிடம் கேட்டிருக்கிறேன் . அர்ஜுனன் கிருஷ்ணனுக்குத் தர மாட்டானா என்ன ?

  

Wednesday, May 8, 2013

உரையின் சாரத்தை உணர்ந்து . . .


மே மாதம் முதல் நாள் ஈரோட்டில் உள்ள ஈ . பி  .ஈ .டி கல்வி நிறுவனத்தின் நிறுவனர்கள் தின விழாவில் பங்கு பெரும் வாய்ப்பு அமைந்தது .

ERODE BUILDERS EDUCATIONAL TRUST
 என்பதே    ஈ . பி  .ஈ .டி விரிவாக்கம் .

கட்டுமானத் தொழிலில் இயங்கும் நண்பர்களின் கூட்டுறவில் துவங்கப்பட்டு , நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது அங்கு இயங்கி வரும் பொறியியல் கல்லூரி .

உயர் கல்வி நிறுவனத்தை நடத்தும் அவர்களே , அதே வளாகத்திற்குள் பள்ளிக் கல்விக்கான பணிகளையும் துவங்க வேண்டும் என அவர்களுக்கு ஆலோசனை சொன்னேன் . எனது ஆலோசனையைக் கடைப்பிடித்தால் அவர்களது எதிர்காலம் மேலும் சிறப்பாக அமையும் .

அன்றைய விழாவில் பேசிய காத்திரமான கருத்துக்களைப் பிரசுரித்த தினமலர் நாளிதழுக்கு எனது நன்றி .

எனது உரையின் சாரத்தை உணர்ந்து அதனைச் செய்தியாக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த நிருபருக்கு என் மனமார்ந்த தனித்த நன்றி .