Thursday, July 18, 2013

உறவுகள் ... பாட்டி 02

ஒரு அதிகாலையில் பாட்டியின் மரணம் எனக்குச் சொல்லப்பட்டது . நான் அப்போது மதுரையில் இருந்தேன் . போக்குவரத்து வசதிகளும் , தகவல் தொடர்பு சாதனங்களும் இப்போது போலப் பெருகி இராத அந்த நாளில் , மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டேன் . பகல் நேர ரயில்கள் எதுவும் இல்லை . ஆடி அசைந்து போகும் ஒரு அரசுப் பேருந்து அகப்பட்டது .அப்போதெல்லாம் மதுரைக்கும் சென்னைக்கும் பன்னிரண்டு மணி நேரப் பயணம் போக வேண்டும் .பேருந்து சென்னையை  நெருங்கும்போது ,பொழுது சரியத் தொடங்கி இருந்தது . தாம்பரம் தாண்டியதும் , மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் இறக்கி விடச் சொன்னேன் . நிறுத்தம் இல்லாத இடத்தில் கருணையோடு இறக்கி விட்டார்கள் . இறக்கி விடுகிற போது ,"இந்த கலை இலக்கிய இரவுல பேசுற கிருஷ்ணகுமார் தான நீங்க ? "என்று நடத்துனர் கேட்டார் . அவ்வளவு துயரத்திலும் ஏனோ ஒரு சின்ன சந்தோசம் ஒரு வண்ணத்துப்பூச்சியைப்  போலக் கடந்து போனது .

சாலையைக் கடந்து , மீனம்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்கிற போது நன்றாக இருட்டி விட்டது . இடது புறம் ஜெயின் கல்லூரியும் , வலது புறம் பின்னி நிறுவனமும் என் துயரத்தில் பங்கு பெறுவதுபோல இருளில் அமைதியாக நின்றன . அந்தப் பாதையெங்கும் காற்றைப் போல மௌனம் கலந்து கிடந்தது . அந்த மௌனத்தின் ஊடே , தனித்து நடந்து போனேன் .இரண்டு , மூன்று ஒற்றையடிப்பாதைகள் ஒன்று சேர்ந்த அகலத்தில் இருந்த பாதை அது . பாதை நேரே சென்று இடது புறம் ஒரு முறையும் , வலது புறம் ஒரு முறையும் தானே திரும்பி நங்கநல்லூருக்குள் நுழைகிறது . அப்போது , மாமா அங்கே தான் குடி இருந்தார் .

பாதை இடது புறமாகத் திரும்புகிற இடத்தில் , வலது கைப் பக்கத்தில் இருந்த மயானத்தில் எல்லோரும் நின்றுகொண்டு இருந்தார்கள் . வீடு வரை போக வேண்டிய அவசியம் இல்லாது போனது . எல்லோரையும் விலக்கிக்கொண்டு , சிதையில் ஏற்றப்பட்டப் பாட்டியைப் பார்த்தேன் . என்னைப் பார்த்ததும் மாமா சொன்னார் " பாத்தியா... இந்தப் பய வந்துட்டாம் பாரு .. அவ வச்சுருந்த பிரியம் அவனக் கொண்டாந்து சேத்துருச்சு ... பாத்துக்கடா " . அதற்கு மேலும் பேச முடியாமல் மாமா கலங்குவது உணர்ந்தேன் .

இறந்தவர்களின் முகங்களிலும் கூட , அவர்களது இறுதி நொடியின் போதான உணர்ச்சிகள் உறைந்து போய் விடுவதாக சிலர் சொன்னதுண்டு .
"சாந்தமா , அமைதியா , தூங்குறாப்புல இருக்கு "
"அடடா ... சிரிச்ச முகமால்ல இருக்கு "
இப்படி வார்த்தைகளை நிறைய இழவு வீடுகளில் கேட்டிருக்கிறேன் . பாட்டியின் முகத்தில்  தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும் அனுபவித்த பாவனை இருந்தது .இதே முகத் தோற்றத்துடன் இதற்கு முன்னும் , அவள் உயிரோடு இருந்த காலத்தில் ஒரு முறை பாட்டியைப் பார்த்த நினைவு வந்தது . மேலும் எதுவும் சிந்திக்க வழி இல்லாமல் , பாட்டியின் முகத்தை மறைத்து  எருவாட்டிகளை அடுக்கினார்கள் .மாமா சிதைக்குத் தீ இட்டார் . 

எல்லோரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் . பெட்ரோமாக்ஸ்  ஒன்றின் அடர்ந்த திட்டு வெளிச்சம் முன்னும் , பின்னும்  ஆடிய படியே எங்களுக்கு வழி காட்டியது .அதன் ஒளியும் , அது உருவாக்கிய நிழல்களும் என் நினைவுகளைப் போலவே முன் பின்னாகப் புரண்டது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் , பாட்டி இதே போல ஒரு முன்னிரவில் மதுரைக்குப்  பஸ்ஸில் வந்து இறங்கினாள். தல்லாகுளம் பெருமாள் கோவில் வாசலில் பஸ்ஸை நிறுத்தி , வீட்டுக்கு அழைத்துப் போகாமல் , நேரே மதுரை தத்தனேரி பெரிய மயானத்துக்கு அழைத்து வந்தார்கள் . பாட்டியின் வருகைக்காக இறந்து போன அம்மாவின் உடலோடு நாங்கள் மயானத்தில் காத்திருந்தோம் . சிதையில் கிடத்தப்பட்டிருந்த தன்  மகளின் முகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு , கொஞ்ச நேரம் மெளனமாக நின்றாள் பாட்டி . அவளது முகம் தாள முடியாத வலியையும் ,கட்டுப்படுத்த இயலாத துயரத்தையும்  சுமந்திருந்தது . நெற்றியில் அவளது வழக்கமான திருமண் கலைந்து இருந்தது . முகம் மரணமடைந்தவர்களின் முகம் போல இறுகிக் கிடந்தது . கொஞ்ச நேரத்தில் , அடி வயிற்றில் அடித்துக்கொண்டு , "ராஜாத்தி ... ராஜாத்தி ..." என்று தன் மகளின் முகம் தொட்டுக் கதறி , மயானமே திகைக்கப் பெருங் குரலெடுத்து அழுதாள் பாட்டி . அவள் அடி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதது , அவள் மகளைச் சுமந்த இடத்தைப்  பழிப்பதாக இருந்தது .

இரண்டு நாளைக்குப்பிறகு, மாமா வேலை பார்த்த பிரபலமான ஆங்கில நாளிதழில் , பாட்டியின் மரணம் நான்கு வரிகளில் செய்தியாக வந்திருந்தது .எவ்வளவு பெரிய வாழ்க்கையையும்  நான்கே வரிகளில் சுருக்கி விடுகிற ஆற்றல் நமக்கு இருக்கத்தான் செய்கிறது .


                                                                                                           பாரதி கிருஷ்ணகுமார் 

No comments:

Post a Comment