Saturday, February 22, 2020

அகில இலங்கைக் கம்பன் கழகம் . வெள்ளி விழா ... நிறைவு நாள்


 கோலகலமான நாள் .

அரங்கம் நிரம்பி வழிய , அரங்கிற்கு வெளியிலும் அதே அளவு மக்கள் கூட்டம் .

இலங்கையின் பொது வாழ்வில் பங்களித்த பெரு  மக்களுக்கு விருதும் பாராட்டும் வழங்கப்பெற்றது .

வாழ்நாள்  சாதனைக்கான கம்பன் புகழ் விருது பெற்றார் திரு எஸ் . பி . பாலசுப்ரமணியம் .

ஏற்புரையில் எஸ். பி .பி சொன்னார் . " எனது இசையின் மீது ஆணை . இதனை விட மதிப்பும் சிறப்பும் வாய்ந்த பாராட்டு எனக்கு எப்போதும் , என் வாழ்நாளில் கிடைத்ததில்லை ."

இருந்த நாட்கள் எல்லாம் கம்பனோடு ... கம்பனை நேசிக்கிறவர்களோடு, கம்பனை வாசிக்கிறவர்களோடு, கம்பனைக் கேட்கிறவர்களோடு இன்பமாய்க் கழிந்தது .

ஐந்து நாட்களும் இனிய சுவையான உணவு தந்தார்கள் .
ஒரு கோப்பைத் தேநீர் கூடக் கடைக்குச் சென்று குடிக்கிற தேவை இல்லை என்னும் அளவுக்கு பார்த்துப் பார்த்துப் பரிமாறினார்கள் .

உணவு சுவை பெறுவது உப்பு இனிப்பு கசப்பு புளிப்பு  என்பதான அறுசுவைகளால் அல்ல .

அன்பு , உபசரிப்பு என்னும் இரண்டே சுவைகளால் தான் உயிர் பெறுகிறது .

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் .

சில நாட்களில் கம்பவாரிதியே உணவு  பரிமாறிய  அழகும் வாய்த்தது .


நிறைவாகச் சொல்ல விரும்புகிறேன் .

எல்லாம் கம்பவாரிதியின் செயல் திறன் . எல்லோரையும் இசைவாக
இயக்கும் ஆளுமை . எப்போதும் அரங்கத்தின் ஓரத்தில் , ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , தன்னைத்தானே மறைத்துக்கொண்டு , மற்றவர்களுக்கு மேடை அமைத்து அழகு பார்த்துக் கொண்டே இருந்தார் .
அபாரமான துறவு நிலை .

பாராட்டுவதும் , போற்றுவதும் நமது பண்பு .

இத்தனைக்கும் நடுவில், அவரை ஈன்ற அருமை அன்னை மறைந்து பன்னிரண்டு நாட்களே ஆகி இருந்தது .
துறவியே ஆனாலும் தாய் மறைந்த துயரத்தைக் கடக்க இயலுமா ? .... ஒருபோதும் ஆகாது .

துன்பம் தொண்டைக்குழியில் இருக்க , செய்யவேண்டிய பணிகள் பற்றி மட்டுமே பேசுவது துறவு நிலை தான் .

அங்கு விழாவில் இது பற்றி எல்லாம் பேச இயலவில்லை .
நேரிலும் அதிகம் பேசிக்கொள்ள  வாய்க்கவில்லை .

இந்தியா புறப்படும்போது தான் இரண்டு நிமிடங்கள் துக்கம் விசாரித்துக் கொண்டேன் . மரபாக அல்ல . மனமார .

இதை நீங்கள் படிப்பீர்களா இல்லையா எனக்குத் தெரியாது கம்பவாரிதி .

ஆனால், உங்கள் அறிவு, புலமை, கல்வி ,மேதமை, இவைகளை விடவும் நான் வியந்து போற்ற விரும்புவது மனிதர்களை ஒருங்கிணைக்கும் உங்கள் ஆற்றல் .

கம்பனை அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றிக் கொடுத்த கொடை .


வணங்குகிறேன் ஜெயராஜ் .