Saturday, June 12, 2021

அக்காவுக்கு அஞ்சலி

 

இரண்டாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி என் உடன்பிறந்த சகோதரிகளில் ஒருவர், திருமதி கனகலட்சுமி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மூத்தவர் மதுரையில் மாரடைப்பால் காலமானார்.

என்னோடு பிறந்தவர்கள் மூவர். மூவரும் பெண்கள். மூவரும் எனக்கு மூத்தவர்கள் . கனக லட்சுமி , விஜய் லட்சுமி , சாந்த லட்சுமி என்பது அவர்களது பெயர்கள் . எங்கள் இளமைக்காலம் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தது. நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் . ஒற்றுமையாகவே வளர்ந்தோம்.

எனக்குப் பன்னிரெண்டு வயதான போது மூத்த அக்காவுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் மதுரையில் அலங்கார் திரையரங்கிற்கு அருகில் இருந்த ஶ்ரீ சோலை முருகன் திருமண மண்டபத்தில் நடந்தது . மாப்பிள்ளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்தார். மாதச் சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளை என்பது அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது . சும்மா சொல்லக்கூடாது ... முப்பது பவுன் போட்டு எல்லா சீரும் செய்து மிக மிகச் சிறப்பாக திருமணத்தை நடத்தினார் அப்பா.

அப்புறம் மற்ற இருவரும் அதே போல சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொண்டு போனார்கள் .

நான் தான் சரியாகப் படிக்காமல் , வீடு தங்காமல், எல்லா வகையான பழக்க வழக்கங்களும் கொண்டவனாக மாறி இருந்தேன் . என் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தான் எல்லோருக்கும் ஒவ்வாமை தந்ததே தவிர , எந்த சமூக விரோதச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை என்பதை அனைவருமே அறிந்து வைத்திருந்தார்கள் .

எனவே, திருமணமாகிப் போன எனது சகோதரிகளின் இல்லத்திற்கு எப்போது போனாலும் நன்கு உபசரிக்கப்பட்டேன் . குறையொன்றுமில்லை.

ஆண்டுகள் கடந்து , ஆளுக்கொரு திசையில் வாழ்ந்தாலும் எங்களுக்குள் பகைமை இருந்ததில்லை .
இப்போது சில ஆண்டுகளாக அந்த உறவில் கொஞ்சம் பின்னடைவு உண்டாகி விட்டது. அது சீர்ப்படுமா அன்றி சீர்ப்படாமலே காலம் கடந்து விடுமா என்பது காலத்திற்குத் தான் தெரியும்.

சரி ... துவங்கிய இடத்திற்கு வருகிறேன் . மதுரையில் அக்கா இறந்த அன்று நான் சென்னையில் இருந்தேன். அக்காவின் கணவர் நான்கு ஆண்டுகள் முன்பே இறந்து போயிருந்தார் . அக்கா மன உறுதி நிறைந்த மனுஷி . அவர் நடத்தி வந்த நிறுவனங்களைத் தானெடுத்து நடத்தி வந்தார் . மார்பகப் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து மீண்டார் . மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு இயல்பாகத் திரும்பி இருந்தார் . வழக்கமான மாதாந்திர  பரிசோதனைக்காக செப்டம்பர் முதல் தேதி மாலை மருத்துவமனைக்குப் போய் இருக்கிறார் . ஆட்டோவில் போய் இறங்கி நடந்து மருத்துவ மனைக்குள் போய் இருக்கிறார். மருத்துவரைப் பார்க்க பார்வையாளர்கள் வரிசையில் காத்திருக்கிறார். உடன் துணைக்கு வந்த பெண்ணிடத்தில் தனக்கு மயக்கம் வருவதாகச் சொல்லி ,நாற்காலியிலேயே மயங்கிச் சரிந்திருக்கிறார். பார்த்தவர்கள் பதறி மருத்துவர் வந்து பரிசோதிப்பதற்குள் உயிர் பிரிந்திருக்கிறது .

எனக்குத் தகவல் வந்தபோது இரவு 7மணிக்கு மேல் ஆகி விட்டது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்தேன். இரவெல்லாம் உறக்கமில்லை. ஏனோ ஒரு துளிக்கூட கண்ணீர் இறங்கி வரவில்லை. துக்கம் அதிகமாகி தொண்டை அடைத்தது . ஒரு மணி நேரத்தில் தொண்டை வலிக்க ஆரம்பித்தது. நிறையத் தேநீர் அருந்தினேன். நிறைய்ய நிறைய்ய புகை பிடித்தேன்.

செப்டம்பர் 2 காலையில் மதுரை வந்து பிறந்த வீட்டுக் கோடிப் புடவை எடுத்துப் போட்டேன் . எப்போதும் பார்த்ததும் குமாரு என அழைக்கும் அக்கா ஐஸ் பெட்டிக்குள் பேச்சற்று மூச்சற்றுப் படுத்திருந்தாள். பிற்பகலில் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மயானம் சென்று எரியூட்டியதும் , தயாராக நின்ற வாடகைக் காரில் ஏறி கோவைக்குப் புறப்பட்டேன் .

செப்டம்பர் 2 மாலை 6.30 மணிக்கு கோயம்புத்தூர் கிக்கானி பள்ளி வளாகத்தில்  ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் , நமது நம்பிக்கை மாத இதழும இணைந்து நடத்தும் "வல்லமை தாராயோ "
என்னும் சிறப்பு இலக்கிய நிகழ்ச்சியில் தனியுரை - சிறப்புரை நிகழ்த்த ஒப்புக் கொண்டிருந்தேன் . மிக மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது எனக்கும் தெரியும்.

இரண்டாம் தேதி காலை மதுரை வந்து சேர்ந்ததும் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவிடம் பேசினேன். அவர் தான் என்னை நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவர் தான் நிகழ்வின் பொறுப்பாளர் . சூத்ரதாரி ... எல்லாமே...
என் இழப்பை உணர்ந்து கொண்டு "சரி ... நான் பார்த்துக் கொள்கிறேன்
நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க " என்று கனிவோடு சொன்னார் .
நான் சொன்னேன் " நன்றி முத்தையா ... ஆனாலும் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நேரத்தைப் பொறுத்து எதையும் முடிவு செய்யலாம். மாலை வரை இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் . இங்கு நேரம் தள்ளிப் போனால் நான்  உங்களுக்குச் சொல்லி விடுகிறேன். ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். எதுவானாலும் பிற்பகல் வரை காத்திருங்கள் " என்று சொல்லி இருந்தேன்.

மதுரையில் இருந்து புறப்பட்டதும் முத்தையாவுக்குச் சொன்னேன் . "6.30 மணிக்குள் கூட்ட அரங்கிற்குள் வந்து விடுவேன் . ஒருவேளை பத்து பதினைந்து நிமிடங்கள் தாமதமானால் அதை மட்டும் சமாளித்துக் கொள்ளுங்கள் ... ஒரு வேண்டுகோள். அக்காவின் மரணச் செய்தியை நீங்கள் யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் " என்றேன். எனக்குத் தந்த வாக்குறுதியை முத்தையா காப்பாற்றினார்.

கோவை வந்து ஒரு விடுதியில் விரைந்து குளித்து உடைமாற்றி பத்து நிமிடத் தாமதத்தில்  அரங்கம் போய்ச் சேர்ந்தேன் . அரங்கம் நிறைந்த கூட்டம் . ஆயிரம் பேர் அமரும் அரங்கம் .காரில் இருந்து இறங்கியதும் என் கைகளை மிக மிக இறுக்கமாக பற்றிக்கொண்டு என் கண்களைப் பார்த்தார் முத்தையா. என் கண்கள் சிவந்திருந்தன . வறண்டு போய் இருந்தன. நான் முத்தையாவின் கண்களைப் பார்த்தேன் . கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. நான் ஒரு வறண்ட , மிக மிக வறண்ட புன்னகையை அவருக்கும் அங்கு நின்ற எல்லோருக்கும் தந்தேன்.

இரண்டொரு நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கி விட்டது . வரவேற்பு அறிமுகம் மரியாதை எல்லாமே தராசில் நிறுத்தது மாதிரி நடந்து ஏழு மணிக்கு என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.

ஒன்றரை மணிநேரம் பேசினேன் . கூட்டம் என்னோடு சேர்ந்து சிரித்தது.
கைதட்டிக் கொண்டாடியது . கண் கலங்கியது. ஜீவரசம் ததும்பும் பார்வையாளர்கள் நமது எல்லா ஊற்றுக்கண்களையும் திறந்து விடுகிறார்கள் . மலை அருவி போல நம்மை விழுந்து எழுந்து புரண்டோடச் செய்கிறார்கள் .நமக்குள் கோடி மின்னல்களை வெட்டி எழுப்புகறார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது . ஆனால் மனமெங்கும் அக்கா ... அக்கா ... அக்காவோடு வாழ்ந்தது பேசியது விளையாடியது எனக் காட்சிகள் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்ததை யார் அறிவார் ? கவிஞர் அபி எழுதியது போல் " பழத்தின் அழகைப் பாராட்டுவார்; உள்ளிருந்து குடையும் வண்டின் குடைச்சலை யாருணர்வார் ? "

நான் நிறைவு செய்யப் போவதை அவதானித்துக் கொண்ட நண்பர் முத்தையா ஒருவரை ஏற்கனவே மேடைக்கு அனுப்பி இருந்தார். அந்தப் பெண்மணி மேடையின் வலது புறத்தில் மறைந்து நின்றுகொண்டு நான் உரையை நிறைவு செய்யக் காத்திருந்தார். ஆனால் ,இதனால் நான் பேச்சை முடித்து விடக்கூடாது என்கிற கவனத்தோடு எல்லோரது உடல்மொழியும் இருந்தது. எனவே நிறைவாகப் பேசி நான் நிறைவு செய்தேன் .அரங்கம் நிறைந்த கரவொலி. நிறையப்பேர் எழுந்து நின்று கை தட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அந்தப் பெண்மணி ஒலிபெருக்கிக்கு முன் ஓடி வந்து " ஒரு முக்கிய அறிவிப்பு " என்றார்கள். நான் திகைக்க, அரங்கமே திகைக்க என் சகோதரியின் மரணச் செய்தியை அறிவித்தார்கள் . அஞ்சலி செலுத்தும் முகமாகவும் அவரது ஆன்மா அமைதி பெறவும் ,நாம் அனைவரும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவோம் என்றார்கள்.

அரங்கம் முழுவதும் அமைதியில் உறைந்தது . ஆயிரம் பேரும் மௌனமாக அஞ்சலி செலுத்தினார்கள். நான் தடுமாறி எழுந்து நின்றேன். எங்கோ மதுரையில் பிறந்து வாழ்ந்து மறைந்த அக்காவுக்குக் கோவையில் ஆயிரம் பேர் தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
நேற்றில் இருந்து உள்ளுக்குள் பெருகிப் பெருகிச் சேர்ந்திருந்த கண்ணீர் சட்டெனக் கோடை மழை போலக் கொட்டியது.

அம்மா ... அம்மா ... அம்மா ...
அக்காவை எப்போதும் அக்கா என்று அழைத்ததில்லை .




No comments:

Post a Comment