Monday, June 14, 2021

மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...

 மன்னார்சாமியும் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும் ...


1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எங்கள் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 


என் தலைமையில் பதினைந்து பேர் கொண்ட குழு தேர்தலில் போட்டியிட்டது.  ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் சங்கம் நடத்திக்கொண்டு இருந்தவர்களை எதிர்த்து நாங்கள் போட்டியிட்டோம். 

அவர்கள் அனைவரும் தோற்றார்கள் . பெரும்பான்மை வாக்குகள் பெற்று நாங்கள் அனைவரும் வென்றோம்.


வெற்றி பெற்ற போதிலும் சங்கப் பணிகளைத் துவக்க முடியவில்லை . ஏன் ? ஆண்டு தோறும் மார்ச் மாத முடிவில் தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டிய வரவு செலவு அறிக்கையை முறைப்படி சமர்ப்பிக்க முந்தைய சங்க நிர்வாகிகள் தவறி இருந்தனர் . எனவே பதிவாளர் சங்கத்தின் பதிவு எண்ணை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தார் .எனவே  முறையான பதிவு எண் இல்லாததால் சட்ட ரீதியாகச் செயல்படும் உரிமையை சங்கம் இழந்திருந்தது . 


நியாயமாகப் பார்த்தால் பதிவு எண்ணை இழந்த ஒரு சங்கம் தேர்தலை நடத்த முடியாது. நடத்தினாலும் செல்லாது .


ஆனால் பதிவு எண் இல்லாமலேயே அவர்கள் தேர்தலை நடத்தினார்கள் . தெரிந்தே தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன் . எனக்குத் தெரிந்ததை யாருக்கும் சொல்லாமல் வைத்துக் கொண்டேன்.உண்மையில் சட்டப்படி பார்த்தால் அந்தத் தேர்தலே செல்லாது . 


செல்லாத தேர்தலில் வென்றதை செல்லுபடியாக்கும் பணிகளில் ஈடுபட்டேன் . அதே தேதியில் ஒரு பொதுக்குழு நடந்ததாகவும் , அந்தப் பொதுக்குழுவில் நாங்கள் பதினைந்து பேரும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் "முறைப்படி" ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன . 


அன்று ( செப்டம்பர் 16- 1984) பங்கேற்றவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட வருகைப் பதிவேடு வேண்டுமென்று ஏற்கெனவே சங்கம்  நடத்தியவர்களிடம் சென்று கேட்டேன் . ஆளுக்கொரு திசையில் என்னைப் பந்தாடினார்கள் . முந்தைய சுற்றறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டேன் . அலைய விட்டார்கள் . இரண்டு மாதம் இதே வேலையாக நானும் அருமை நண்பன் பழையபேட்டை மணியும்  அலைந்தோம் . ஒரு துண்டுக் காகிதம் கூடத் தராமல் இழுத்தடித்தார்கள் . 


எனவே எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குவது என்று தீர்மானித்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பணியைத்  தவிர மற்றவர்களுக்கு இந்த சட்டப் பிரச்னைகள் பற்றி ஏதும் சொல்லவேயில்லை . மறைப்பது என் நோக்கம் அல்ல . எதிர்மறை விளைவுகள் வந்து விடக்கூடாது என்கிற கவனத்தில் இருந்தேன். அதனால் பகிர்ந்து கொள்ளாதிருந்தேன் .


வருகைப் பதிவேடும் முறையாகத் "தயாரிக்கப்பட்டது " பொதுக்குழு நடந்து நாங்கள் தேர்வு பெற்றது தொடர்பான அனைத்தும் தயாரிக்கப்பட்டது .

அதன்படி 16.09.1984 அன்று சாத்தூரில் நடைபெற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் பொது  மாநாடு  1."பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் " என்றொரு சங்கம் தொடங்குவது எனப் பொதுக்குழு தீர்மானித்தது . 2.போட்டியிட்டவர்களில் பதினைந்து பேர் வெற்றி பெற்றதாக பொதுக்குழு அறிவித்தது.

3 . அதில் சங்கத்தை முறைப்படி பதிவு செய்ய ஏழு பேரைப் பொதுக்குழு தேர்வு செய்தது .


அனைத்தையும் சரிபார்த்து தொழிற்சங்கங்களின் பதிவாளருக்கு விண்ணப்பம் செய்தேன் . அப்போது மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களுக்கான பதிவாளர் அலுவலகம் மதுரையில் காந்தி நகரில் இயங்கி வந்தது . பொதுக்குழு அதிகாரம் தந்திருந்த(?!) ஏழு பேரின் பெயர்களும் வரிசையாக எழுதப்பட்டு , அவர்களது கையெழுத்துடன் சங்கத்தைப் புதிதாகப் பதிவு செய்யும் மனுவும் பதிவாளருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டது. 


பதிவாளர் நாம் அனுப்பிய ஆவணங்களை ஆய்வு செய்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பெயருக்கு ஒரு கடிதம் அனுப்புவார். அதை வங்கிக் கிளைக்கே அனுப்பினால் நாடகம் அம்பலமாகி விடும் என்பதால் சாத்தூரில் நம்பிக்கையான ஒரு முகவரி தேவைப்பட்டது. அருமை நண்பர் தோழர் ஜி மாரிமுத்து உதவினார் . அவரிடம் ஜுனியராகப் பணியாற்றிய வழக்கறிஞர் தோழர் சையது அகமதுவின் இல்ல முகவரியை சங்கத்தின் முகவரியாகத் தந்தேன் .


பொதுச் செயலாளர் , பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மே/பா . வழக்கறிஞர் சையது அகமது 36, பங்களாத் தெரு சாத்தூர் என்பதே சங்கத்தின் முதல் முகவரி.

நான் தந்திருந்த முகவரிக்குப் பதிவாளர் கடிதம் அனுப்பி இருந்தார் . அதன்படி ஏற்கெனவே மனுவில் கையெழுத்துப் போட்ட , சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்த ஏழு பேரும் நேரில் ஆஜராகிப் பதிவாளர் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும். பிறகு தான் சங்கம் பதிவு செய்யப்பட்டு , பதிவு எண் வழங்கப்படும். அதற்குப் பிறகு தான் நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க முடியும். பேச்சுவார்த்தை நடத்த உரிமை வரும் . போராட்டங்கள் நடத்த முடியும். தொழில் தாவாக்களை தாக்கல் செய்ய முடியும். நீதி மன்றம் போக முடியும். மொத்தத்தில் அந்த எண்... பதிவு எண் வேண்டும்.


பதிவாளர் தனது கடிதத்தில் 1984 டிசம்பர் முதல் தேதி காலையில் பதினோரு மணிக்கு தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டார்.

ஏழு பேருக்கும் முறையாக தனித்தனியாக தகவல் தரப்பட்டது . அனைவரும் விடுமுறை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது . அன்றைய சந்திப்பின் முக்கியத்துவமும் முறையாக விளக்கப்பட்டு விட்டது அன்று பணியில் இருந்தது போன்ற பதிவுகள் இருந்தால் அது பிழையாகி விடும் என்றும் எல்லோருக்கும் சொல்லப்பட்டு விட்டது .


மதுரையில் ஒரு பொது இடத்தில் சந்தித்து அங்கிருந்து பதிவாளர் அலுவலகம் போவது என்று திட்டமிட்டேன் . நேராகப் பதிவாளர் அலுவலகத்தில் சந்திப்பது என்ற யோசனை நிராகரிக்கப்பட்டது.

ஏனெனில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் பற்றி யாருடைய வாயையும் பதிவாளர் "கிண்டி " விடக்கூடாது என்பதால்  சந்திப்பதற்கான வேறு பொது இடம் தேர்வு செய்யப்பட்டது.


மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கும் , அப்போதைய திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கும் நடுவில் அவிழ்த்துப் போடப்பட்ட நீண்ட கோவணம் போல ஒரு பாதை இருந்தது . மலமும் சிறுநீரும் கலந்து பெருகிக் கிடக்கும் அந்த நீண்ட கோவணத் தெருவின் இறுதியில் , இடது பக்கம் திரும்ப "திடீர் நகர்".


திரும்பி நூறடி நடந்ததும் வலது பக்கத்தில் மூலையில் மின்வாரியத் தொழிலாளர் சங்கம்.  VMS என்றழைக்கப்பட்ட தோழர் V . மீனாட்சிசுந்தரம் அங்கு பொறுப்பில் இருந்தார் 

அதை ஒட்டியே வலது புறம் திரும்பினால் இருபதடி கடந்ததும் இடது பக்கத்தில் பாண்டியன் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம். இரண்டு சங்கங்களும் இந்திய தொழிற்சங்க மையத்துடன்(CITU) இணைக்கப்பட்டவை.

சாலையில் இருந்து நான்கு அங்குலப் பள்ளத்தில் இருந்த அந்த அலுவலகத்தின் வாசலுக்கு நேரே அமர்ந்து இருப்பார் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட தோழர் எஸ். மன்னார்சாமி . இடது கையில் எப்போதும் சிசர்ஸ் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.  உரையாடும் போது உள்ளிருந்து புகை வாயில் கசிந்து கொண்டே இருக்கும்.  பிறருக்கு இடையூறு இல்லாமல் முகத்துக்குப் பக்கத்திலேயே புகையை ஊதிக் கொள்வதால் , கண்கள் புகைச்சல் பொறுக்க மாட்டாமல் பெரும்பாலும் சிறுத்து சுருங்கிக் கிடக்கும். அவரது கண்ணுக்கும் கண்ணாடிக்கும் நடுவில் புகை நின்று அசைந்தாடிப் பின் வெளியேறும்.


அவரைத் தெரியாத போக்குவரத்துத் தொழிலாளி இருக்க ஏலாது. அவரைத் தெரியாத அதிகாரிகளும் இருக்கவே முடியாது. நிர்வாகங்கள் தரும் குற்றப் பத்திரிக்கைகளைத் தவிடு பொடி ஆக்குவார் . கோப்புகளைப் படித்தபடி, புகை பிடித்த படி , புகை பிடித்த படி , கோப்புகளைப் படித்தபடி அவர் நிர்வாகத்திற்குத் தர வேண்டிய பதிலை சொல்லிக் கொண்டே இருப்பார். தட்டச்சில் அதை அடித்துக்கொண்டே இருப்பார்கள். தட்டச்சு ஓசை கூட நிற்கும் . நகரும். டிக்டேஷன் நிற்காது. அவர் வென்ற வழக்குகள் எல்லையற்றவை. தட்டச்சு ஓசையும் , கரகரத்த குரலும், முகம் சுற்றித் தவழும் புகையும் கொண்ட SM எப்போதும் தீவிரமான செயல்பாட்டுத் தன்மை கொண்டவராக இருந்தார். எனில் அவருக்கு நகைச்சுவை உணர்வே இருக்காதா என்று கேட்டு விடாதீர்கள் . ஒரு சிறு வறட்டு இருமலுடன் குலுங்கிக் குலுங்கி வலது கை விரல்களை மேசையில் தட்டிச் சிரிக்கும் SM ... பகடி செய்வதில் அசகாய சூரன் . மெத்தப் படித்த அதிகாரிகளின் மூடத்தனத்தை அவர் பகடி செய்து சிரிப்பதைக் கேட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.


அந்த அலுவலகத்தில் தான் நாங்கள் எல்லோரும் சந்திப்பது என்று தீர்மானித்தோம் 

அன்றைக்கு எனக்குப் பிறந்த நாள் . அதை யாருக்கும் சொல்லவில்லை. நான் காலையிலேயே முன்னதாகவே வந்திருந்தேன். இலக்கிய நிகழ்ச்சிகள் , பொது மேடைகள் சிலவற்றில் எனது பேச்சைக் கேட்டு இருந்ததால் SM என் மீது கொஞ்சம் பிரியமாக இருப்பார். நான் எஸ் ஏ பெருமாளின் மாணவன் நான் என்பதும் அவரது அன்புக்குக் கூடுதல் காரணம். நான் அவரைப் போலவே தீவிரமான புகை பிடிக்கிறவன் என்பதாலும் அவருக்கு என்னைப் பிடித்திருக்கலாம். பதிவுக்குப் பெயர் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தார்கள். பத்து மணிக்குள் நான்கு பேர் வந்து விட்டார்கள் . மீதமுள்ள மூவருக்காக காத்திருந்தோம். இடைப்பட்ட நேரத்தில் "என்ன கூட்டம்" என்று விசாரித்தார் SM. நான் சுருக்கமாக விளக்கமாகச் சொன்னேன் .  "முதல்ல நம்பரை வாங்கீருங்க ... அதுக்கு அப்புறம் தான் வாயைத் தொறக்கணும் " என்று சொல்லிவிட்டுத் தோள்கள் குலுங்கப் புகை படர்ந்து முகமெங்கும் மகிழ்ச்சி பரவச் சிரித்தார் SM.


PGBEA என்று  பின்னாளில் அறியப்பட்ட Pandian Grama Bank Employees Association இன் பதிவுக்கும் மன்னார்சாமிக்கும் என்ன சம்பந்தம்....


அதைச் சொல்வதற்கு முன் ஒரு தகவலைச் சொல்லி விடுகிறேன்.


அந்தப் புகழ் பூத்த அருமைத் தோழர் SM என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ் . மன்னார்சாமி தனது 95 ஆவது வயதில் கடந்த 27 05 2021 அன்று உடல்நலக்குறைவால் மறைந்தார்.அவரது நினைவைப் போற்றுகிறேன். PGBEA சார்பில் அவருக்கு எழுந்து நின்று தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் .


RMD / 360  என்கிற பதிவு எண் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு கிடைக்க வழியும் வகையும் செய்தது SM...

என்ன செய்தார்...

எப்படிச் செய்தார் ...


தொடர்கிறேன்.


- பாரதி கிருஷ்ணகுமார்


"ஒரு சிறு சேமிப்புக் கணக்கு"

தொடரின் இடையில் ஒரு பகுதி .

No comments:

Post a Comment