Friday, September 9, 2011

வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக ...


னிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது மொழி. அதுவே மனிதனை விலங்குகளிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்தியது. வாழ்வின் அனைத்துத் துறை சார்ந்த மெய்மைகளையும், பொய்மைகளையும் வரி வடிவமாக்கி, தலைமுறைகளைக் கடந்து நிற்கவும் செய்தது.

னைத்துத் துறைகளின் வரலாற்றையும் பதிவு செய்த மொழி, தனது வரலாற்றை தானே எழுதிக் கொண்ட துறையே இலக்கியம். நாவல், சிறுகதை, நாடகம், உரைநடை எனப் பலவாக புலப்படுத்தும் இலக்கியத்தின் பேரழகு வெளிப்படும் இடம் கவிதையேயாகும்.

ல்லாத் துறைகளிலும் நிகழ்வது போலவே, இலக்கியத்திலும் உண்மையும், பொய்மையும் கலந்து கிடப்பதைக் காலம் நமக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மானுட குலம் முழுவதையும் விடுதலை பெற்ற ஓர் இனமாக மாற்ற விரும்புகிற படைப்பாளிகள், தங்கள் படைப்புகளை உண்மையின் முழு வடிவமாக உருவாக்கித் தந்தார்கள். ஆளவும், அடிமைப்படுத்தவும் விரும்புகிற ஆதிக்க சக்திகளின் அடியாட்களோ தங்கள் படைப்புகளைப் பொய்மைகளால் இட்டு நிரப்பி, அதனை மனித குலத்தின் மீது கொடிய சாபத்தைப் போலப் பரவ விட்டார்கள்.

மொழி ஆளுமை, லாவகம், அழகுணர்ச்சி, செய்நேர்த்தி இவைகளை விடவும், ஒரு படைப்பாளி உண்மையின் பக்கம் நின்று எழுதுகிறானா, அல்லது பொய்யின் மீது படுத்துக்கொண்டு பேசுகிறானா என்பதே எப்போதும் முதன்மையான அளவுகோலாக இருத்தல் வேண்டும்.

டிவ நேர்த்தியிலும்,சொல்லாடலிலும் முழுமையான தேர்ச்சி இல்லாவிட்டாலும் கூட, உண்மையின் பக்கம் நின்று பேசுகிற ஒருவனின் படைப்பு கொண்டாடத் தகுந்த ஒரு குழந்தையின் மழலையாகவே நமக்குக் கேட்கிறது. மாறாகப் பொய்யுரைக்கும் ஒருவனின் படைப்பு, செய் நேர்த்தியில் பெரும் சாகசமாய் ஜொலித்த போதும், அது ஒரு வஞ்சகக் கிழவனின் வசவுச் சொற்களே என்பது எளிதில் துலங்கி விடுகிறது.

ண்மையின் பக்கம் எப்போதும் நிற்கும் எளிய மனிதர்களின் படைப்புகளை வாழ்த்துகிற, ஆக்கப்பூர்வமாய் விமர்சிக்கிற, அங்கீகரிக்கிற, உற்சாகப்படுத்துகிற மனது எனக்கு எப்போதும் இருக்கவேண்டுமேன்பதே எனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இருக்கிறது.


3 comments:

ரவிஉதயன் said...

எளிய மனிதர்களின் படைப்புகளை வாழ்த்துகிற, ஆக்கப்பூர்வமாய் விமர்சிக்கிற, அங்கீகரிக்கிற, உற்சாகப்படுத்துகிற மனது எனக்கு எப்போதும் இருக்கவேண்டுமேன்பதே எனது வாழ்நாள் ஆசைகளில் ஒன்றாக இருக்கிறது. அப்படி தான் இருக்கிறீர்கள்.இருப்பீர்கள்.பாரதி சார்

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

சித்திரவீதிக்காரன் said...

உண்மையிலே நல்லதொரு வாழ்நாள் ஆசையைக் கொண்டு இருக்கிறீர்கள். நானும் இதைக் கடைபிடிக்க விரும்புகிறேன். நன்றி.

Post a Comment