Wednesday, April 29, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 07


இரவு ஊரே திரண்டிருந்தது.

அதற்குமுன்னதாக எங்களை ஒரு அழகான விடுதியில் தங்க வைத்தார்கள் . அடர்ந்த குளிர்ந்த ஒரு மாந்தோப்புக்கு எங்களை அழைத்துப் போனார்கள். அதன் நிழலில் நல்ல பிரம்புக்கட்டில்கள் போட்டார்கள் . மணக்கும் மாங்காய்களைப் பறித்து உண்ணக் கொடுத்தார்கள் . அந்தத் தோப்பின் நிழலும் , மாங்காய்களின் மணமும் இந்தக் கணம் என் எழுது மேசையைச் சுற்றுவதை உங்களால் உணர முடிந்தால் நீங்களும் இயற்கையின் நேசர்களே.

பட்டிமண்டபம் துவங்கியது . கோவிலில் திருவிழா.ஒரு ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட கூட்டம். அம்புட்டுக் கூட்டம் அதுவரை நாங்கள் பார்த்ததில்லை . எல்லாம் தோழர் பரமசிவம் செய்த வேலை. ஒரு சிறிய முன்னுரை தந்தார் பரமசிவம். அவ்வளவு உயரத்தில் எங்களை யாரும் அதுவரை கொண்டாடியதில்லை. ரொம்பப் பரவசமாகவும் உற்சாகமாகவும் இருந்தார்.

அவர் உருவாக்கிய பிம்பத்தைக் காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருந்தது . இப்போதும் , இன்றைக்கும் நம்மைப்பேச அழைக்கிறவர்கள் அளவாக அறிமுகம் செய்யவேண்டும் என்ற பதட்டம் எனக்கு எப்போதும் உண்டு . மிகையான அன்பினாலோ அல்லது பதட்டத்திலோ சிலர் அறிமுகம் செய்வதைப் பற்றி தனிப் புத்தகமே எழுதலாம் .

அண்மையில் ரொம்பப் படித்தவர்கள் நிறைந்த சபையில் ஒருவர் என்னை அறிமுகம் செய்கிறபோது பத்து சிறுகதைத் தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர் என்றார். எனக்கு விரல்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஒரு தொகுப்பு தானே எழுதி இருக்கிறோம் , அதிலும் பத்து சிறுகதைகள் தானே வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே எனது பத்துத் தொகுப்புகளின் பெயரை அவர் வாசிக்க ஆரம்பித்தார். எனது பத்துக் கதைகளையும் பத்துத் தொகுப்புகளாகத் தரம் உயர்த்தினார்.அந்த அதிர்ச்சியில் இருந்து விலகுவதற்கு முன்பே அவர் அடுத்த ஆயுதத்தைக் குறிபார்த்து என் மீது எறிந்தார். கீழவெண்மணி குறித்த அவரது ரம்யாவின் குடிசை என்னும் ஆவணப்படம் அமெரிக்காவில் பல இடங்களில் பலமுறை திரையிடப் பட்டிருக்கிறது என்றதும் கூட்டம் அடங்காமல் கைதட்டிக்கொண்டே இருந்தது . அவர் ரம்யா என்றபோதே கூட்டம் கைதட்டத் துவங்கி விட்டது. ராமையாவின் குடிசை ரம்யாவின் குடிசை ஆனதில் நானே எரிந்து சாம்பல் ஆனேன் .

பரமசிவம் அப்படி எந்தப் பிழையும் செய்யவில்லை ."நான் விருதுநகரில் கேட்டேன். அதை இந்த ஊர் மக்களும் கேட்கவேண்டும் என்று விரும்பினேன். அதிலும் மாணவர்கள் , இளைஞர்கள் இப்படி சமூகப்பொறுப்புடனும் , அக்கறையுடனும் பேசுவது என் மனத்தைக் கவர்ந்தது"என்றார்.பரமசிவம் பேசியதில் மிகையாக ஒரு சொல் கூட இல்லை என்று நான் பெருமிதமாகச் சொல்லுவேன் .
அத்தனை உயர்ந்த தரத்தில் நாங்கள் பட்டிமன்றங்களை நடத்திக்கொண்டு இருந்தோம். அப்போது மதுரையைச் சுற்றி தென் மாவட்டங்களில் இயங்கிய பட்டிமன்றக் குழுக்களில் உயர்ந்த தரத்தில் எங்கள் சிந்தனையும் பேச்சும் இருந்தது .

நான் சுருக்கமான ஒரு முன்னுரை நிகழ்த்தி மொத்தக் கூட்டத்தையும் கவனப்படுத்தினேன் . சிறிய சலசலப்புகள் முற்றாக அடங்கி எங்களை மட்டுமே கேட்கும் மௌனம் காற்றைப்போல் பரவி நின்றது. அந்த மௌனத்தை என்னால் எப்போதும் ஸ்தூலமாகக் காண முடியும். அணித் தலைவராக பாலா தனது உரையைத் துவங்கினான் . கூட்டம் வசியமுற்றது . மெலிந்த இளைத்த சின்னப் பயலுகள் வரிசைகட்டி ஆடினார்கள். எல்லோரும் வென்றார்கள் . சௌபா மிக நன்றாகத் தனதுபேச்சைத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தான் . எப்போதாவது சில சமயங்களில் அவனது பேச்சில் காணப்படும் வல்லின மெல்லின உச்சரிப்புப் பிழை கூட அன்றைக்குத் தலை காட்டவில்லை. கோபம் , கேலி , கிண்டல் , அளவான தரமான நகைச்சுவை, வரலாறு , இலக்கியம் , மேற்கோள்கள் என்று அறிவின் ஆற்றலோடு பேசினார்கள். 

இறுதியாக நான் தீர்ப்புச்சொல்ல வேண்டும் . எப்படித் தீர்ப்புச் சொல்லுவது என்பதை நான் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் இருந்து  கற்றுக் கொண்டிருந்தேன்  . தீர்ப்பு என்பதை தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பாகத்தான் இன்றைக்கும் பல நடுவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பட்டிமண்டபமே நடுவரால் தான் நடக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள் . நடுவர் இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எதுவுமேயில்லை என்பதாகவும் , அணியில் பேசுகிறவர்கள் நடுவரின் தயவில் தான் வாய் திறக்கவேண்டும் என்றும் , நடுவரோடு அனுசரித்து அடக்கமாக நடந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும் என்றும் ஆக்கி இருக்கிறார்கள்.நடுவருக்குக் கூடுதல் சம்பளம் , அணியில் யாருக்கு என்ன சம்பளம் என்பதை நடுவரே தீர்மானிப்பார் என்பதும் , இப்போதும் இருக்கிற நடைமுறை . ஒரு "செட்" மாதிரி மொத்தமாக ஊதியம் வாங்கிக்கொண்டு , பேசுகிறவர்களுக்குப் பிச்சுக் கொடுக்கும் நடுவர்கள் சமூகநீதி பற்றி தீர்ப்புச் சொல்லுவது நகைமுரண் .இன்றைக்குப் பட்டிமன்றங்கள் தமது தரத்தில் தாழ்ந்து கிடக்கின்றன என்பது கசப்பான உண்மை . விதிவிலக்குகள் இருக்கலாம்.ஆனால் பொதுவில் இருக்கிற நிலைமை அவமானகரமானது. அதிலும் நகைச்சுவைப் பட்டிமன்றம் என்றே தலைப்பும் வைக்கிறார்கள். பிறகு சோகப் பட்டிமன்றம், காதல் பட்டிமன்றம் , சிருங்காரப் பட்டிமன்றம் என்று வகை பிரிப்பார்கள் போலிருக்கிறது . பேச்சில் நகைச்சுவை என்பது எனக்குப் புரிகிறது . பேச்சே நகைச்சுவை என்பதை எப்படிப் புரிந்து கொள்ளுவது? 

பட்டிமண்டபம் ஒரு கூட்டுச் செயல்பாடு என்பதை உணர்ந்த காரணத்தால் , நான் நடுவராகப் பணிபுரிந்த காலம் முழுவதும் கிடைத்த சன்மானத்தை எல்லோரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுவது என்கிற நடைமுறையை நான் பின்பற்றினேன் .என்னோடு பட்டிமன்றங்களில் பணியாற்றிய எல்லோரும் இதனை அறிவார்கள். 

1990 ஆம் ஆண்டு மே தினத்தன்று அவினாசியில் நடந்த ஒரு பட்டிமன்றத்திற்குப் பிறகு பட்டிமன்றங்களில் பேசுவதில்லை என்று நான் முடிவு செய்தேன். அதற்குப் பிறகான இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு நான்கைந்து பட்டிமன்றகளில் பேசும் தவிர்க்க இயலாத சூழலும் வாய்த்திருக்கிறது.

அவ்வப்போது பீறிடும் இந்த நினைவோட்டத்தைத் தடுக்க முடியவில்லை. வாசகர்கள் இவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதென் விருப்பம் . ஏனெனில் இதைத் தனியாக இன்னொருமுறை சொல்லுவது எனக்கும் வாய்க்காது. உங்களுக்கும் உவக்காது .

சரி ...  

செங்கோட்டைக்குத் திரும்பலாம் . நடுவர் நீண்டதொரு தீர்ப்பை வழங்கினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான உரை . பட்டிமன்றத்தில் பேசிய ஒவ்வொருவரின் உரையையும் ஆய்வு செய்து அவர்களைப் பாராட்டி , கொண்டாடி , உச்சிமுகர்ந்து மகிழ்ந்த தீர்ப்பு . 


தலைப்பு என்னவென்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் ... 

மனிதகுல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏற்ற வழிமுறை மென்முறையா வன்முறையா?

அந்தத் தீர்ப்பின் இறுதியில் நான் பேசிய வார்த்தைகளை , எப்போது அந்த செங்கோட்டைப் பயணம் பற்றிப் பேசினாலும் சௌபா அப்படியே திரும்பச் சொல்லுவான். சொல்லுகிற கணத்தில் அந்த நாளுக்கு , அந்த ஊருக்கு, அந்தக் கணத்திற்குத் திரும்பி விடுவான் .அவனது உடல்மொழியும் , குரலும் , கண்களும் காலத்தில் பின்னோக்கிப் போவதை நான் தரிசித்து இருக்கிறேன் .

ஏனெனில் தன்னோடு என்னையும் அழைத்துக்கொண்டு போவான் சௌபா... மெலிந்த உடலோடு ,உயரமான தோற்றத்தில், அடர்ந்த சுருண்ட தலைமுடியோடு, சிவந்தபெரியமுட்டைக் கண்களோடு , பெருகிவழியும் வியர்வையோடு நான் பேசுவதை எனக்கு அவன் திரும்பக் காட்டி இருக்கிறான் .

கள்ளம் கபடமில்லாமல் காட்சிப்படுத்தி இருக்கிறான்.

இறந்தகாலம் என்பது கல்வெட்டு. அதை யாரும் மாற்றி எழுத முடியாது . மாற்றி வாசிக்கலாம் . மாற்றிப் பொருள் சொல்லலாம் . சிலர் மாற்றிச் சிதைக்க முயற்சிக்கலாம்.ஒரு சிலர் ஒளித்து/ஒழித்து விடவும் கூடும். சிலர் புதிய கல்வெட்டுக்களைத் தயார் செய்துகொண்டு அதுவே பழையது என்று நிறுவ முயற்சிக்கலாம் .எது வேண்டுமானாலும் நடக்கலாம் .

ஆனால் கல்வெட்டுப் போல உறைந்து கிடக்கும் நம் இறந்த காலத்தின் மீது , மறதியின் புழுதி படிந்துகொண்டே இருக்கிறது. அல்லது காலம் சுருட்டிக்கொண்டு வரும் குப்பைகளும் கூளங்களும் அதன் மீது குவிந்துகொண்டே ... குவிந்துகொண்டே இருக்கிறது.

எப்போதாவது நம்மோடிருந்த ஒருவரோ , ஒரு பொருளோ , ஒரு நினைவோ , ஒரு உரையாடலோ ... ஏதொவொன்றோ அந்தக் குப்பை கூளம் புழுதி எல்லாவற்றையும் விலக்கிக் கல்வெட்டைக் கண்ணில் காட்டுகிற தருணம் ஆயிரம்கோடி சூரியப்பிரகாசம் கொண்டது .

அந்தக் கணத்தில் மனது , பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுப் பூசணிப்பூச் சூடிய மார்கழி மாதத்து வாசல் தான் . 

சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை வன்முறையே என்று தீர்ப்புச் சொன்னேன். அதெப்படி வன்முறையை நியாயப்படுத்த முடியும்?
என்ன சொன்னேன்? 

சௌபா அதை எனக்கு எத்தனை விதமாகச் சொல்லி இருக்கிறான் ?


அப்புறம் சொல்லுகிறேன்... 


- பாரதி கிருஷ்ணகுமார் . 


  

2 comments:

vimalanperali said...

நினைவுகளின் நிகழ்வு!

Rathnavel Natarajan said...

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 07 - எப்படித் தீர்ப்புச் சொல்லுவது என்பதை நான் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் இருந்து கற்றுக் கொண்டிருந்தேன் . தீர்ப்பு என்பதை தனக்குத்தானே பரிவட்டம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பாகத்தான் இன்றைக்கும் பல நடுவர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பட்டிமண்டபமே நடுவரால் தான் நடக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள் . நடுவர் இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு எதுவுமேயில்லை என்பதாகவும் , அணியில் பேசுகிறவர்கள் நடுவரின் தயவில் தான் வாய் திறக்கவேண்டும் என்றும் , நடுவரோடு அனுசரித்து அடக்கமாக நடந்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும் என்றும் ஆக்கி இருக்கிறார்கள்.நடுவருக்குக் கூடுதல் சம்பளம் , அணியில் யாருக்கு என்ன சம்பளம் என்பதை நடுவரே தீர்மானிப்பார் என்பதும் , இப்போதும் இருக்கிற நடைமுறை . ஒரு "செட்" மாதிரி மொத்தமாக ஊதியம் வாங்கிக்கொண்டு , பேசுகிறவர்களுக்குப் பிச்சுக் கொடுக்கும் நடுவர்கள் சமூகநீதி பற்றி தீர்ப்புச் சொல்லுவது நகைமுரண் .இன்றைக்குப் பட்டிமன்றங்கள் தமது தரத்தில் தாழ்ந்து கிடக்கின்றன என்பது கசப்பான உண்மை . - அருமை சார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Bharathi Krishnakumar

Post a Comment