Tuesday, June 7, 2011

18.05.2011 ஆனந்த விகடனில் வெளியான "கோடி" சிறுகதை


கோடி        

எங்கும் மீன்கள் செத்துக் கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாக கட்டிச் சுமந்து திரிந்த பொய் மூட்டை அவிழ்ந்து, வீடெங்கும் பொசுங்கிய ரோமத்தின் துர்நாற்றம், முற்றத்தில் நின்ற தூண்களைப் போல நிலை கொண்டு நின்றது. தரைக்குள் முகம் புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழி போல, முகத்தைத் தொண்டைக்கும், மார்புக்கும் நடுவில் புதைத்துக் கொண்டார் தாத்தா. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு தேடி வந்திருந்த அத்தையையும் மாமாவையும்,தாத்தாவும் அப்பாவும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தாத்தா உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு நேர் எதிரில் கிடந்த நாற்காலியின் விளிம்பில், மாமா உட்கார்ந்து கொண்டார். யாரும் உட்காரச் சொல்லாததால், அத்தையே அவரை அதில் உட்காரச் சொன்னதாக சுமதி பிற்பாடு சொன்னாள். நல்ல கருப்பாக, லட்சணமாக, தீர்க்கமான கண்களுடன், மாமா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். கட்டிலுக்கு இடது புறம் இருந்த பழைய ஸ்டீல் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, வாசலைத் தாண்டி,அதையும் தாண்டி எங்கோ பார்த்த படி உட்கார்ந்து கொண்டார் அப்பா. நடுக்கூடத்தில்,இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில், இருவருக்கும் சேர்த்துப் பொதுவாகத்  தரையில் விழுந்து கும்பிட்டது அத்தை. ஆதரவாகத் தொட்டுத் தூக்கப் போன அம்மாவின் கையைப் பிடித்து வெடுக்கென இழுத்து, தனக்கு அருகில் தரையில் உட்கார வைத்துக் கொண்டார் அப்பா. கொஞ்ச நேரம் அப்படியே கிடந்து விட்டுக் கூப்பிய கரங்களுடனும், சிவந்து கலங்கிய கண்களுடனும், எழுந்த அத்தை, அங்கேயே மாமாவின் காலடியிலேயே அமர்ந்து கொண்டது.

“எல்லாம்... மறந்து... எங்கள...  ஏத்துக்கணும்... ஒரே... மகளுக்குக்... கல்யாணம் வச்சுருக்கேன்... எல்லாரும்... வந்துரணும்...” அத்தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே, கடந்து போன ஆண்டுகளின் இடைவெளி கனத்துப் படிந்திருந்தது. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு முகமாகப் பார்த்துச் சொன்னது அத்தை. எங்களுக்கு அத்தை என்று ஒருத்தி இருப்பதும், அப்பா தனியாகப்பிறந்தவர் இல்லையென்பதும், தெரியவந்த அதிர்ச்சியில் இருந்து, குழந்தைகளாகிய நாங்கள் மீளவேயில்லை. நான், தம்பி சதீஷ், தங்கை சுமதி மூன்று பேரும் அம்மாவுக்குப் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டோம். தாத்தா, அப்பா, அம்மா, மூவருமாகச் சேர்ந்து, கட்டிக்காத்த பொய் மூட்டை அவிழ்ந்து, அத்தையாக வெளிப்பட்டு நின்றது. கருகருவென்று சுருட்டையான தலை முடி, திருத்தமான முகவெட்டு, கன்றிப் போனத் தக்காளிச் சிவப்பில் பேரழகாக இருந்தாள் அத்தை. “எங்கள ஏத்துக்கிடணும்... எல்லோரும் வந்துரணும் “என்று சொல்லி விட்டு இரண்டாவது முறையும் விழுந்து கும்பிட்டது அத்தை. “எதுக்கு இப்பிடித் திரும்பத்திரும்ப... “என்று சொல்ல வந்த அம்மாவை, தனது உதடுகளில் விரல் வைத்து மெளனமாக்கினார் அப்பா. யாரும் எதுவும் பேசவில்லை  திறந்திராத வீட்டுக்குள் அலை அலையாய் மௌனம் நுழைந்து கொண்டேயிருந்தது... மெளனம் மளமளவென்று நீர் மட்டம் போல ஏறி எல்லோரையும் மூச்சுத்திணற வைத்தது.

“அப்பா... அண்ணே... ஏத்துக்குங்க... ஏதாவது பேசுங்க ... எதுக்கு வந்தேன்னாவது கேளுங்கண்ணே... அப்பா... அண்ணே... “என்று குரல்வளை அறுந்து போகிற மாதிரி தீனமான குரலில், அத்தை சொன்னதெல்லாம், தண்ணீருக்குள் இருந்து கூப்பிட்டது போலாகியது. ‘கரையேறி’ நின்ற தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் நின்று தளும்பிக்கொண்டே இருந்த மௌனத்தின் அலைகள், வெளியேறிய போது, அத்தையையும் மாமாவையும் அடித்துக்கொண்டு போய் இருந்தது. மௌனத்தின் கசடுகள் சேறு போல வீட்டுக்குள் படிந்து விட, யார் பேசுவதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. சிறிய சத்தம் வந்தால் கூட, தாத்தா திடுக்கிட்டுத் திடுக்கிட்டு  சுற்றுமுற்றும் மலங்க மலங்கப் பார்த்துக்  கொண்டேயிருந்தார். முற்றத்துக்குப் போகிற நடை பாதையில் பாய் விரித்துப் படுத்துக்கொண்ட அப்பா, உறங்குவது போல், கண்களை மூடிக்கொண்டு, எல்லோரும் மௌனமாக இருக்க வேண்டுமென்ற உத்தரவைத் தனது உடலில் இருந்து வெளியேற்றிக் கொண்டே இருந்தார். எப்போதும் சட்டையுரிக்காத அழுக்குப் பிடித்த பாம்பாக மௌனம வீட்டை விழுங்கிக்கொண்டே இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில், கொல்லைப்புறத்தில், கிணற்றடியில், சமையல்கட்டில், மொட்டைமாடியில் என  வேறு வேறு தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அம்மா தான் அத்தையைப் பற்றிய எல்லாச் சேதிகளையும் சொல்லிக்கொண்டே இருந்தாள். தங்கை தான் எப்போதும் அத்தையைப் பற்றி, அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் இது பற்றியெல்லாம் குழந்தைகளுக்கு ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்கிற உறுதியான “கொள்கை” இருந்தது. “வளந்து ஆளான புள்ளைங்ககிட்ட எத்தன நாளைக்குப் பொய்யும் புரட்டும்... அவங்களுக்கு எல்லாம் தெரியணும்” என்று தீர்க்கமாக அப்பாவிடம் சொன்னாலும், அப்பா வீட்டில் இல்லாத நேரமும், தாத்தா தூங்குகிற நேரமும் பார்த்து எல்லாவற்றையும் ரகசியமான குரலில் தான் பேச முடிந்தது அம்மாவால்.

காவல் துறையின், உளவுப் பிரிவில், தலைமைப்பொறுப்பில் இருந்த தாத்தாவைத்தான், ஊரில் நடக்கிற எல்லாவற்றிற்கும் அரசாங்கமே நம்பி இருந்தது. அவருக்குத் தெரியாமல் ஒட்டு மொத்த மாநிலத்திலும், ஒருத்தனும் ஒண்ணுக்குக் கூடப் போக முடியாது என்கிற அளவுக்கு, அவரது ஆட்கள் “எல்லாரையும்” “எல்லாவற்றையும்” கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் உள் வீட்டில் ஒரே மகள், பக்கத்தில் இருந்த வேதக் கோவிலில் மணியடித்துக் கொண்டிருந்த “கோயில் பிள்ளையின்” ஒரே மகனான சாமுவேல் எட்வர்ட் ராஜகுமாரைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்காக, ஒரு விடியற்காலையில் வீட்டை விட்டு ஓடிப் போன போதுகூட, மகளை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று தான் பதறினார். அதிகாலையில், வாசல் தெளிக்கக் கொண்டு போன ஒரு வாளித் தண்ணீரும், வெளக்கமாரும், கோலப்போடி போட்டு வைத்திருந்த டப்பாவும் அப்படியே வாசலில் இருக்க, மகள் காணாமல் போனது அவரைக் கலங்கடித்தது. தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ இதைச் செய்திருக்கக் கூடும் என்று தான் அவரது போலீஸ் புத்தி கணித்தது. அவரது ஆட்கள் மாநிலமெங்கும் தேடத் துவங்கியிருந்தார்கள். மகள் காணாமல் போனதை விடவும். மனைவி பதட்டமாகி, வயிறு கலங்கிக் கலங்கி, அடிக்கொரு தரம் கழிப்பறைக்குப் போவதும், கழிப்பறைக்குள் குமுறிக் குமுறி அழுவதும், சமையல் கட்டிலேயே பாய் கூடப் போட்டுக்கொள்ளாமல் தரையில் படுத்து அழுவதும் அவரைப் பெரிதும் நோக வைத்தது.

துயரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, மகன் கனக சபாபதியை மட்டும் மகளின் நண்பர்களது வீட்டில் தேடச் சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்து கொண்டார். ஆடர்லி வாங்கி வந்த காப்பியையும், பலகாரத்தையும் சாப்பிட மறுத்த மனைவியை கடிந்து கொண்டு, “ஏலே... உனக்கு எம்  பேர்ல நம்பிக்கையில்ல... பொழுது சாயுறதுக்குள்ள புள்ளயக் கொண்டாந்து உங் கண்ணு முன்னால நிறுத்துறேன்... இப்பம் சாப்புடுதியா இல்லையா?...” என்றதும், அவரின் அதிகாரத்தின் அருமை பெருமைகளை அறிந்த்ததினால், கொடுத்ததை சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டாள். “நீங்க சாப்புடலையா?” என்று  கேட்டதும் “குளிச்சுட்டு, சாமி கும்புட்டுட்டுச் சாப்புடுறேன்” என்றபடி எழுந்து கிணற்றடிக்குப் போனார் கல்யாண சுந்தரம் ஐ.பி.எஸ்.

குளித்து முடித்து ஈரத் துணியோடு பூஜையறைக்கு வந்து “நெல்லையப்பரை” மனமார வழிபட்டால், எந்த வழக்கிலும் அவன் துப்புக்கொடுப்பான் என்பது அவரது நம்பிக்கை. அடியும், முடியும் அறியப்படாத எம்பெருமானுக்கு எல்லாத்  திசைகளிலும் என்ன நடக்கிறதென்று தெரியுமென்பதால், எந்த வழக்கை எந்த திசையில் எப்படி செலுத்துவதென்று, பூஜை நேரத்தில் அவருக்குள் தோன்றுவதை, நெல்லையப்பரே தனக்குக் காட்டுகிற பாதையாகத் தான் இன்று வரை கருதிக் கொண்டிருக்கிறார். குளித்து முடித்து பூஜையறைக்குள் போகிற வரை வழக்குகள் குறித்தோ, வேலை குறித்தோ எதையும் நினைக்க மாட்டார். குளிக்காமல், சுத்த பத்தமில்லாமல் “அவனைப்” பற்றி நினைப்பது தகாது என்று கருதுகிற அளவு சுத்தம் பார்க்கிற பழக்கம் இருந்தது. இன்றைக்கோ, குளிக்கப் போகிற போதே, “நெல்லையப்பரே !... வழிகாட்டுமய்யா... பொம்பளப் புள்ளயப்  பத்திரமா பொழுது சாயறதுக்குள்ள வீட்டுக்கு கொண்டாந்து சேத்துருமைய்யா... நீரு கேக்குற காணிக்கைய உம்ம காலடியிலேயே கொண்டாந்து சேக்குறேன்” என்று மனசுக்குள் கரைந்து, உருகி வேண்டிக் கொண்டார்.

நெல்லையப்பர் அவரை முழுவதுமாகக் கைவிட்டு விடவில்லை... பூசைஅறையில், நெல்லையப்பர் படத்துக்குக் கீழே, மகள் எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் கிடந்தது. எல்லாம் தெளிவாகி விட்டது. மகளைத் தேடுவதை நிறுத்துமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். மகனைத் திரும்ப வரச்சொல்லி வேலைக்குப்  போய் விடச்சொன்னார்... மகளின் கடிதத்தை, மனைவியின் கையில் வாசிக்கக் கொடுத்து விட்டு, “உம் மவ செத்துப்போயிட்டா" என்று சொல்லி விட்டு ஆபீஸுக்குப் புறப்படத் தயாரானார்... “மத்தியானம் எப்பவும் போல சாப்பிடவர்றேன்... எதையாவதுஆக்கிவை” என்றார். கல்யாணியம்மாள் தயங்கித்  தயங்கி, “...அறியாத புள்ள... அதுக்காகச் செத்துருச்சுன்னா சொல்லறது... எங்கன இருந்தாலும் தேடிக் கூட்டிக்கிட்டு வாங்க” என்றாள். “இப்பிடியொரு சாதி கெட்ட, ஓடுகாலி முண்டயப் பெத்ததுக்கு இந்த வயத்துல கொள்ளிய வச்சுரலாம்” என்று மனைவியின் வயிற்றுக்கு நேரே ஐந்து விரல்களையும் ஆயுதம் போல நீட்டினார். ஓசையே எழாமல் அழுதுகொண்டே, மீண்டும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிப்பறைக்கு ஓடினாள் கல்யாணியம்மாள். பெத்த வயிறு பேதலித்தது. அடி வயிறெங்கும், அவரது சொற்களும், விரல்களும் பாதாளக்கரண்டி போலப் புரண்டது. உஷ்ணமாய்க் குருதி பெருக்கெடுத்துக் கால்களை நனைத்துத் தரையெங்கும் ஓடியது. அறுந்து போவதற்கே இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்பு போல் கால்கள் விறைத்துக்கொண்டு நீண்டது. கழிவறையிலேயே சவமானாள் கல்யாணியம்மாள். கழிவறைக் கதவை உடைத்து, மாலையிலேயே இறுதிச்சடங்குகளை முடித்துக்கொண்டார் கல்யாணசுந்தரம்.  மனைவி செத்ததை விடவும், மகள் ஓடிப்போனத்தை விடவும், ஊரெல்லாம் உளவு பார்த்துச் சொன்ன தனது அதிகாரத்தின் மீது மண் விழுந்தது, அவரை உடுப்பைக்  கழற்றித் தூரப் போட வைத்தது. அன்றைக்குத் தலையைத் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் நடுவில் புதைத்தவர் தான்.  நிமிரவேயில்லை. அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து, “ஓடிப் போனவளது” உடைமைகள், நினைவுகள் என எல்லாவற்றையும் தடயமின்றி அழித்தார்கள். அப்படியொரு பெண் பிறக்கவில்லை என்கிற பொய்யைப் பிறப்பித்து அதைப் பேணி வளர்த்தார்கள். அப்பாவுக்குக் கல்யாணமாகி வீட்டுக்கு வந்த அம்மாவும் அதைச் சேர்த்துக்  காப்பாற்றியிருக்கிறாள். பிறந்துவளர்ந்த வீடு தேடி, அத்தையே வருகிற வரை, அந்தப்  பொய் மூட்டை அவிழாமல் இருந்தது. இப்போது எல்லாமே அவிழ்ந்து, உடைந்து தெறித்துக் கிடந்தது. இந்தக் கதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் ரகசியமாக அம்மா சொல்லித் தீர்த்துக் கொண்டாள். வீடு தன்னிலை திரும்பப் பல வாரங்களாகி விட்டது. ஓடுகிற காலம், தன் காலடியில் அகப்பட்ட எல்லாவற்றையும் அரைத்துத் தேய்த்துக் கூழாக்கி, உருமாற்றி, உருட்டிப் புரட்டி எங்கெங்கோ கொண்டு சேர்த்து விடுகிறது.. அதற்குப் பிறகு, யாரும் எதுவும் அத்தையைப் பற்றிப் பேசக் கூடாது என்று உத்தரவாகி இருந்தது. தங்கை சுமதி மட்டும் எப்போதாவது அத்தையை விட மாமா தான் அழகு என்பாள். “நிறம் தான் வேற வேற... ரெண்டு பேருமே அழகுதான்” என்பாள்  இன்னொரு சமயம். அதுவும் மறந்து,  பின் எப்போதும்  யாரும், எதுவும் அத்தையைப்  பற்றியோ, மாமாவைப் பற்றியோ பேசிக்கொண்டதேயில்லை.

ஒன்பது வருடம் கழித்து இன்றைக்குத்தான், வள்ளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தங்கை சுமதி போன் செய்தாள். “அண்ணே ... மாமா செத்துப் போயிருச்சாம்...அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு...இங்க யாரும் போறதாத் தெரியல .யாராவது போயி, அவளுக்குப் பொறந்த வூட்டுக் கோடி எடுத்துப் போடணும்னு அம்மா சொன்னதுக்கு, “எம் பொண்டாட்டி செத்ததுக்குக் காரணமானவ வீட்டு எழவுக்கு நாம் போக மாட்டேன்... கனகு நீ வேணா போய்க்கப்பா”ன்னு தாத்தா சொன்னதுமே, “உங்களுக்கே மக இல்லன்னா, எனக்கு எங்க இருந்து உடம்பொறப்பு வரும்”ன்னு சொல்லீட்டு, அப்பா ஆபீசுக்குப் போயிட்டாருண்ணே ... அங்க இருந்து கயத்தாறு பக்கமா இருந்தா நீ போயிட்டு வாண்ணே” என்று ஒரே மூச்சாகச் சொல்லி விட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் போனைத் துண்டித்தாள் தங்கை. போகணும் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு, டாக்ஸி ஸ்டாண்ட் போய், வழக்கமாக ஆபீசுக்கு வண்டியோட்டும் குருநாதன் அண்ணாச்சியைப் பார்த்து வண்டி பிடித்தேன்.எங்க போகணும், எப்ப திரும்புவோம் என்று கேட்க ஆரம்பித்து, எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட அண்ணாச்சி சொன்னார். “அடப்பாவமே... ஒரு மனுஷம் மேல ஒரு மனுஷி ஆசப்பட்டதுக்கா இம்புட்டுத் துயரம் ...அப்பம் ,அத்தைக்குப் பொறந்த வூட்டுல இருந்து தம்பி மட்டும்தான் போறீங்கண்ணா, வெறுங் கையோட போக்கூடாது. பொறந்த வூட்டுக் கோடின்னு ஒரு புடவை வாங்கிட்டுத் தான் போகணும்” என்று, பாளையங்கோட்டையில் ஒரு பெரிய துணிக்கடை வாசலில் வண்டியை நிறுத்தினார். முதன் முறை வீட்டுக்கு வந்தபோது அடர்ந்த செம்மண் நிறத்தில், வெள்ளைப் பூப் போட்ட, உடம்போடு ஒட்டிய ஒரு சேலையை அத்தை கட்டியிருந்தது நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய அதே வண்ணத்தில், ஏதேதோ கோடுகளும், வட்டங்களுமாகப் போட்ட ஒரு புடவை அத்தைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. புடவை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறும் போது அண்ணாச்சி கேட்டார். “தம்பி... நீங்க போனது நாளைக்குத் தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ தெரிஞ்சா என்ன செய்வீக?”... “தெரிஞ்சப்புறம் பார்த்துக்கலாம்” என்றேன்... மலர்ந்து சிரித்து “இது தான் மனுஷங்குறது” என்றார் அண்ணாச்சி.

கயத்தாற்றில், வீடு கண்டுப் பிடிப்பதில்  சிரமமேதும் இல்லை. மாமா பூர்வீகமாக அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஊரே திரண்டிருந்தது. உள்ளூரில் பள்ளிக்கூடமேல்லாம் லீவு விட்டு, பஜாரெல்லாம் அடைத்திருந்தார்கள். நாங்கள் போய்ச சேர்ந்த போது தான் “எடுக்க” நேரம் குறித்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மாமா வீடு விசாலமாக இருக்க, நடுக் கூடத்தில், தரையில் மாமாவைக்  கிடத்தி இருந்தது. வீட்டுக்குள் கூட்டம் நெருக்கி நின்று கொண்டிருந்தது. மாமாவின் தலைமாட்டில் தரையைப் பார்த்து குனிந்தபடி உட்கார்ந்திருந்தது அத்தை. அத்தைக்குப் பக்கத்தில் மெளனமாகக் கண்ணீர் விட்டபடி இருந்தது தான் கட்டிக் கொடுத்த மகளாக இருக்க வேண்டும். என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர் “எடுப்பதற்கான” எல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்து கொண்டிருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த  நடைமுறைகளை ஒரு வயசாளியே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மரணத்தை எதிர் கொள்ளப் போகும் துணிச்சலா, அச்சமா அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதா எனபது புலப்படவில்லை. ஈவு இரக்கமில்லாத ஆள் மாதிரித் தான் பெரிசு பேசிக் கொண்டும், நடந்து கொண்டுமிருந்தார் .

மாமாவின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு, எல்லாரையும் ஒரு சுற்று பார்த்துவிட்டுப்  பெரிசு சத்தமாக கேட்டது “அந்த அம்மாவுக்குப் பொறந்த வூட்டுக் கோடி யாரு போடுறா? ”... அவர் குரல் முடிவதற்குள்ளேயே, “பத்து முப்பது  வருஷமாக அவுக யாரும் போக்குவரத்துக் கிடையாது” என்றது ஒரு குரல். சொன்னது யாரென்று கண்டறிவதற்குள், “அப்ப சம்பந்தி வீட்டுல கோடி போடுறாங்களா” என்றார் பெரிசு. குருநாதன் அண்ணாச்சி என்  காதருகே வந்து, “பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்துருக்கமின்னு சொல்லுங்கப்பா” என்றார். சொல்ல விரும்பியும் சொல்ல இயலாது திகைத்து நின்ற தருணத்தில் அன்னாச்சியே பெருங்குரலெடுத்து, “தம்பி... பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்திருக்கு” என்றார்.

அறையெங்கும் பரவிக்கொண்டிருந்த சின்னச் சின்ன ஓசைகள்  அடங்கி, கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி,உருவாக்கிய வழிக்கு நேரே எதிரில், அத்தை  நிமிர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டதான பாவனையில், மெல்லத்  தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில் ஏதோ ஒரு கை பையை என்னிடமிருந்து ஆதரவாக வாங்கிக்கொண்டது. இரண்டு கைகளாலும் கனத்த புத்தகம் போல புடவையை ஏந்திக் கொண்டு, குனிந்து அத்தைக்கு முன்பாக  நீட்டினேன். இழந்த அன்பை முழுவதுமாக அன்றே யாசித்துப்  பெறுவது போல, இரண்டு கைகளையும் நீட்டிப் புடவையை வாங்கியது அத்தை. ஈரமின்றிக்  குளிர்ந்து கிடந்தது அத்தையின் கைகள்.  புடவையைத்  தன் மார்பில் ஒத்தி எடுத்து, மடியில் போட்டுக் கொண்டது. இரண்டடி தள்ளி நின்ற என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து இன்னும் அருகே வருமாறு தலையசைத்து அழைத்தது அத்தை. நெருங்கிய கணத்தில், என்  இரண்டு கால்களையும் கட்டி, இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எல்லோரும் திகைத்துக் கண்கலங்கக் பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண்ணே”....

-பாரதி கிருஷ்ணகுமார்




Friday, June 3, 2011

நம்பிக்கை நொடிகள்...




அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அப்பாவுக்கும் எனக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழும்பி இருந்தது. யாரோடும் சேர்ந்து இருக்காமல், மதுரை வீட்டில் தனியே இருந்தார் அப்பா .என்னோடு வந்து இருக்க வேண்டுமென்று நானும் அவரை அழைக்கவில்லை. அதற்குக் காத்திரமான காரணங்கள் எனக்கிருந்தன.

தனித்து, ஒற்றையாக,பதின்மூன்று ஆண்டுகள் வாழ்ந்த அப்பா இப்போது நினைவின்றிக் கிடந்தார். அன்று காலை தான் நினைவு தப்பிப் போய் இருந்தது. தகவல் தெரிந்து மாலையில் நான் வந்து சேர்ந்தேன். மருத்துவர் வந்து பார்த்தார். கொஞ்சம் மருந்து மாத்திரைகள், திரவ உணவு என்று அன்றைய இரவு கடந்தது.

மறு நாள் காலை நினைவு திரும்பியது. எல்லோரையும் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார். “குளிக்கணும்”, “டிரஸ் மாத்தணும்” என்றார். உடம்பெல்லாம் துடைத்து, உடை மாற்றி விட்டேன். பால், கஞ்சி ,பழச்சாறு என்று மாற்றி மாற்றி மணிக்கொருதரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டார் .ஏதோ சொல்ல வந்து , சொல்ல வந்து சொல்லாமல் நிறுத்திக் கொண்டார்.

இரவு பத்து மணிக்கு பால் குடித்து முடித்ததும் , பக்கத்தில் அழைத்து, “இத்தன நாள் தனியா இருந்துட்டேன். இனிமே இருக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சுடா ... எங்கிட்ட இருக்குற எல்லாத்தையும் குடுத்துர்றேன். என்ன உன்னோட கூட்டிட்டுப் போயிரு.... உனக்கு எந்தக் கஷ்டமும் தரமாட்டேன்....கூடக் கூட்டிகிட்டுப் போயிடரு” என்றார். தாமதமின்றி, தயக்கமின்றி “சரி” என்றேன். உடல் பலவீனமாக இருப்பதால் இரண்டொரு நாள் ஓய்வுக்குப் பின் போகலாம் என்றேன். ஒப்புக்கொண்டார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்து உறங்கி போனார். அவர் கட்டிலில் படுத்திருக்க, நான் பக்கத்திலேயே தரையில் பாய் விரித்து படுத்து கொண்டேன்.

காலையில் எழுந்து, கடை வீதிக்கு போய் காப்பி குடித்துவிட்டு, அவருக்குப் பால் வாங்கி கொண்டு வந்து எழுப்பியபோது, உயிர் ஏற்கனவே பிரிந்து போய் இருந்தது. அளவற்ற துயர மென்னை ஆட்கொண்டது.

வ
ந்தவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆறுதலாக சொல்லப்படும் சொற்கள் என் துயரத்தை ஏனோ குறைப்பதே இல்லை. அதிகரிக்கவே செய்கிறது.

ஆறுதல் சொல்ல வந்தவர்கள் கலங்கிக் , கரைந்து, தயங்கித் தயங்கி சொற்களை தேடித் பேசுகிற துயரம், மேலும் துயரப்படுத்துகிறது. ஒரு துளிக் கண்ணீர் கூட வராமல், உள்ளுக்குள் ஏதோ எடை கூடிக் கொண்டிருந்தது.

பி
ற்பகல் ஒன்றரை மணிக்குத் “காவன்னா” வந்தார். பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தடையின்றிப் பேச ஆரம்பித்தார். “அப்பாவுக்கு என்ன வயசு? உனக்கு என்ன வயசு? இன்னும் கல்யாணமாகாத தம்பி தங்கச்சி யாரும் இருக்காங்களா? அப்பா எதுவும் கடன் வச்சிட்டுப் போய் இருக்காரா?” விடை சொல்லிக் கொண்டே வந்தேன்.

“எந்தக் கடமையும் அப்பா பாக்கி வைக்கல; அம்மா ஏற்கனவே போயிட்டாங்க...கடனும் எதுவுமில்லை...அப்புறமென்னப்பா?... பெரிய சாவு... கலங்கிப் போய் உட்காரக் கூடாது. சந்தோஷமா வழியனுப்பி வைக்கணும். எந்த வயசா இருந்தாலும் தகப்பன் போறது துயரந்தான்... ஆனா... மத்தவங்க துயரத்தோட ஒப்பிட்டுப் பார்த்துதான் நம்ம துயரத்தக் கணிக்கனும். “ என்னைய எடுத்துக்குங்க... பொறந்து வளந்தது ஒரு சின்னக் கிராமத்துல... நிலம் புலம் எதுவும் கெடையாது.. அன்னாடம் உழைச்சுப் பிழைச்ச குடும்பம்.. நான் ஒத்தப் பொறப்பு. எனக்கு மூணு வயசானப்ப எங்கம்மா செத்துருச்சு... அஞ்சு வயசுல எங்க அப்பனும் போய்ட்டாரு... எங்கேயோ கெடந்து எப்பிடியோ வளந்தேன் . பாருங்க... அப்பா போட்டோவும் இல்ல; அம்மா போட்டோவும் இல்ல; முகமும் ஞாபகத்துல இல்ல... இப்ப நெனச்சாலும் கண்ணீர் பொங்கும்... என்ன பண்ணுறது... உடம்பு பூரா எண்ணெய் பூசிக்கிட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணுதானே ஒட்டும்”. ஒரு கனத்த பெருமூச்சை மெலிதாக வெளியேற்றினார்.

எந்த இடைவெளியும் இன்றி, அவரே தொடர்ந்தார். “எத்தனை மணிக்கு எடுக்குறீங்க?” சாயங்காலம் ஆறு மணிக்கு என்றேன். ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டு வந்தேன்... சாயங்காலம் திரும்ப வர்றேன் என்று சொல்லி விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் “காவன்னா”. நமது துயரம் தான் உலகிலேயே பெரியது என்று நம்பி நாம் மயங்கும்போது, ஒவ்வொரு பெரிய கோட்டுக்குப் பக்கத்திலும் இன்னுமொரு பெரிய கோட்டை வரைந்து, நாம் பெரியதென்று நம்பியதைச் சிறியதாக்கி, விசித்திரம் காட்டி விளையாடுகிறது வாழ்க்கை.

மூன்று வயதில் தாயையும், ஐந்து வயதில் தந்தையும் இழந்திருந்தால் ஒரு குழந்தை ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் எவ்வளவு போராடியிருக்கும்? ஒவ்வொரு குச்சிக்கும் சிலேட்டுக்கும் யார் யார் வாசலில் எல்லாம் நின்றிருக்கும்? கொடுங்கனவுகள் கண்டு கண் விழித்த இரவுகளில் எல்லாம் அருகே அரவணைக்க யாருமின்றி எப்படித் தவித்திருக்கும்?... ஓ... இதோ அந்தக் குழந்தை தன துயரங்களை எனக்கு உணர்த்தித், தன் சொற்களால் என் துயரங்களைத் துடைத்தெறிந்து விட்டுப்போகிறான். துயரங்களைக் கடந்து வாழ்வின்மீது பெரும் காதலும், நம்பிக்கையும் உண்டாக்கும் விதைகளை எனக்குள் விதைத்துப் விட்டுப் போய்க் கொண்டிருக்கிறான். என் துயரங்கள் அவருக்குப் பின்னே கைகட்டிப் பணிந்து போவதை நானே பார்த்தேன். இழவு வீட்டிலும் திருப்பணி செய்கிற ஆற்றல் சிலருக்குத்தான் இருக்கிறது.



- "நமது நம்பிக்கை" ஜூன் மாத இதழில் வெளியானது.
இதழாசிரியர் அருமை நண்பர் மரபின் மைந்தன் முத்தையாவுக்கும்,
உதவி ஆசிரியர் கனகலக்ஷ்மிக்கும் நன்றி.

Tuesday, May 31, 2011

பி.கு. சரவணனின் “முகில் பூக்கள்” குறித்து

எனக்கு சரவணன் ஒரு அரசு ஊழியராகத்தான் அறிமுகம். வேலையில் ரொம்பக் கறாரான ஆள் என்று பேர் வாங்கி இருந்தார். அவர் பேரைச் சொன்னதும், சக அதிகாரிகள் நமக்குத் தருகிற மரியாதை, அவரது “இடத்தைப்” புலப்படுத்துகிறது. ரொம்பப் பெரிய ஆட்களைக் கூட தனது அதிகார வரம்பிற்குள் அவர் “நிறுத்தி” இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். வியந்த போது அவரது இயல்பே அதுவென்றார்கள். பிற்பாடு ஊழல எதிர்ப்பு இயக்கமொன்றில் அவர் பணியாற்றியதும் என் கவனத்துக்கு வந்தது. இதெல்லாம் எதற்குச் சொல்லுகிறேன் என்றால், அவருக்கும், கவிதைக்கும் சகவாசம் இருக்குமென்பதற்கு, சிறிய தடயம் கூடக் கண்ணில் தட்டுப்படவில்லை. அவரோடு தொலைபேசியில் பேச நேர்ந்த தருணங்களும் கூட, அலுவல் சார்ந்த “அக்கப்போர்கள்” தான்.


கடந்த நவம்பரில், தனது கவிதை நூல் வெளியீடு, கோவையில் நடப்பதாகவும், நான் அதற்கு வர வேண்டுமென்றும் அழைத்தார். எனக்கு வியப்பேதுமில்லை. தமிழில் கவிஞர்களின் எண்ணிக்கை பெருகுவது, ஏறக்குறைய புவி வெப்பமேறுவதற்கு இணையாகத் தான் நடைபெறுகிறது. வாசகர்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாகக் கவிஞர்கள் “அவதரிக்கிற” மொழியாக நமது தாய் மொழியே இருந்து வருகிறது. நமது மொழிக்கு வாய்த்த வரமும் சாபமும் அது.


முன்பெல்லாம், கவிஞர்கள் அறிமுகமாகிற போது, அதிக பட்சமாக ஒரு கவிதை சொல்லுவார்கள் அல்லது வாசித்துக் காட்டுவார்கள். இப்போதெல்லாம் பார்த்த இடத்தில ஒரு தொகுப்பைத் தந்து விடுகிறார்கள். பதட்டமாகி விடுகிறது. எல்லாவற்றையும் படிக்க முடிவதில்லை. பலவற்றைப் படிக்கவே முடிவதில்லை. பிழையாக எழுதப்பட்ட கவிதைகளைப் படித்துத் தன தலையில் எழுத்தாணியால் குத்திக் கொள்வார் சீத்தலைச்சாத்தனார் என்று ஒரு கதை உண்டு. எந்தக் கதைக்குப் பின்னும் உண்மையே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. நம் காலத்திலயே மொழியைக் காக்க உயிர் நீத்தவர்கள் உண்டு தானே.

விழா வெற்றி பெற வாழ்த்தினேன். டிசம்பரில், புத்தகம் வந்தது. இரண்டு மூன்று மாதங்கள், கவனமாகப் போகிற இடத்திற்கெல்லாம் அதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். என் செலவில், எல்லா ஊரும பார்த்தது அந்தப் புத்தகம். சரவணன் கூடத் தன புத்தகத்தை இத்தனை ஊர்களுக்கு அழைத்துப் போய் இருக்க மாட்டார்.

கோடையின் வெப்பம் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த ஒரு இரவில், வாசிக்கக் கண்ணில் பட்டது புத்தகம். மழை பற்றி நிறையக் கவிதைகள் நிறைந்த தொகுப்பு . முதல் கவிதை.

“அசைந்து
நடந்து பின்
களம் புகும்
கம்பீர யானையாய்
பெய்கிறது மழை
சாரலாய்
தூறலாய்
பெருமழையாய்”

இந்த இடத்திலேயே சொற்களின் அணிவகுப்பு துவங்கி விடுகிறது.

“மண்ணை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறது மழை”

“மாமழையும் மண்ணோடு மெய் கலக்கும்”...

“மழையில் உயிர்க்கும்
தொட்டாற் சிணுங்கி
மழைக்கும் சிணுங்கும்”.

இந்தக் கவிதையைப் படித்ததும், கழுத்தைச் சுற்றி குறுகுறுவென்று சின்னதாக சிலிர்ப்புத் தட்டி விட்டது. இது தான் வேண்டும். வாசிப்பின் அனுபவம். ஏதேனும் ஒரு கணத்தில், ஒரு விதத்தில், அறிவால், மனதால், உடலால் உணரப்பட வேண்டும். தொகுப்பில் இருந்து நிறைய, இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சொல்ல மாட்டேன். அவரவர்கள் வாங்கிப் படிக்கட்டும்.

புத்தகம், மழை பற்றிய நினைவுகளின் மீது தூறல் போட்டு நிறைய மண் வாசனைகளைக் கிளப்பி விட்டது.

அவளோடு இணைந்து இருக்கிற போது அமுதமாகவும், அவளின்றி தனித்துத் தவிக்கிற போது நஞ்சாகவும் பொழிகிற வித்தை மழைக்கு மட்டுமே தெரியும்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொழியத் துவங்கி, நாம் பார்க்கப் பார்க்க நம்மை நோக்கி வந்து, நமக்குள் ஊடுருவும் மழை காதலியைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

என் நினைவுப் பேரேட்டில், ஈரமாகப் படிந்திருக்கும் மழை பற்றிய ஒரு தனிப்பாடல் வரிகள்.... “கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்; கோகனக நகை முல்லை முகை நகைக்கும் காலம்; அங்குயிரும் இங்குடலும் ஆன மழைக்காலம்; அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்”

“வானமழை நீயெனக்கு” என்று காதலில் நனைந்து கரைவான் மகாகவி பாரதி

இதற்கு மேல் மழை பற்றிப்பேசக் கூடாது. நனையத்தான் வேண்டும்.

புத்தகத்தில் நான்கைந்து உரைநடைப் பத்திகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கவிதைப் புத்தகம் என்று பெயரிட்டு விட்டு, இதெல்லாம் ஆகாது சரவணன். சக்கரை டப்பாவில் மிளகாய்ப்பொடி என்று எழுதி ஒட்டி விடுவதால் எறும்புகள் கூட ஏமாறுவதில்லை. இது போன்ற பிழைகள் கவனத்துடனும், அக்கறையுடனும் தவிர்க்கப்பட வேண்டும். முகப்பு அட்டை இன்னும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

இதையெல்லாம், கடந்து மனதில் நிற்கும் பல கவிதைகளோடு தான் இருக்கிறது தொகுப்பு. அதில் மிக முக்கியமான ஒன்று...

“கடந்து செல்கின்றன
மழை மேகங்கள்
அதில்
நீரருந்திச் செல்கின்றன
தூர தேசத்துப் பறவைகள்”

பரந்த, தொடர்ந்த வாசிப்பு சரவணனை நல்ல உயரங்களுக்கு இட்டுச் செல்லும். அடுத்தொரு, தொகுப்பு வருமென சரவணன்
சொன்னால் நான் மகிழவே செய்வேன். ஏனெனில் இந்தத் தொகுப்பிற்குள் நுழைந்து வெளியேறியபோது மழையில் நனைந்த
ஈரமும், சந்தோஷமும் எனக்கு இருக்கவே செய்தது சரவணன்.

Sunday, May 22, 2011

அவனும்,நானும்

ஒவ்வொரு கலை இலக்கிய இரவும் தனித்தனியான நிகழ்வுகள் தான் ,ஒன்று போல இன்னொன்று இருந்ததேயில்லை. பார்ப்பதற்கு ஒன்று போலத் தோற்றமளித்தாலும், அவைகளுக்குள் மிக நுண்ணிய வேறுபாடுகளை உணர்தல் கூடும்.

................. ஊரில் கலை இரவு. மிக விரிவான ஏற்பாடுகள். .எல்லாமே பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்.ஆனால், ஊருக்குள் மக்களைத் திரட்டி வந்து உட்கார வைக்க முடியாதபடிக்குப் பனி கொட்டித் தீர்த்தது .பனியையும் மீறி நூறு பேருக்கும் மேல் மைதானத்தில் சிதறி உட்கார்ந்திருந்தார்கள். இரவு ஒன்பதரை மணிக்கெல்லாம் மேடைக்குப் போன என்னை , “இந்தா கூப்பிடறோம் ...அடுத்து கூப்பிடுறோம்...”என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் ,கூப்பிடவில்லை.
[பல சமயங்களில்,பல ஊர்களில் எல்லோரும் பாடி ,எல்லோரும் பேசி ,எல்லோரும் ஆடி முடித்த பிறகு கூப்பிடுவார்கள். “என்ன இப்பிடி...பொழுது விடியப்போகுது” என்றால்... “நீங்க முதல்ல பேசுனாக் கூட்டம் போயிருமில்ல தோழர்”என்று சொல்லி விடுவார்கள். அது போதாது நமக்கு]

அன்றைக்குப் பனி ஊரையே விரட்டிக்கொண்டிருந்தது .,நிகழ்ச்சிகளுக்கு நடுவே ,அறிவிப்பாளர் அதிக நேரம் எடுத்துக்கொண்டபோதெல்லாம், ஒவ்வொரு திசையிலும் அஞ்சு பேர், பத்துபேர் என்று புறப்பட்டுப் போய்க்கொண்டே இருந்தார்கள். போர்த்திக் கொள்ளக் கொண்டு வந்திருந்த போர்வையை நன்றாக மேலுக்கு சுற்றிக்கொண்டு ஒவ்வொருவராக அங்குமிங்கும் படுத்துறங்கவும் ஆரம்பித்தார்கள்.என்னை பேசக் கூப்பிடுவார்கள் என்கிற தடயமே இல்லாமல் இருந்தது .கவிதை வாசிக்க வந்த ஒருவரும் ,பாடல்கள் பாட வந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவரும் மிச்சம் இருந்த ஆட்களை ‘வம்படியாக’ எழுந்து போக வைத்துக் கொண்டிருந்தார்கள்.


மகாகவி பாரதியின் இறுதிச்சடங்கில் இருபது பேருக்கும் குறைவானவர்களே கலந்தது கொண்டார்கள் என்பது வரலாறு. இதுவும் ,ஏறக்குறைய அந்த எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது .மேடைக்கு எதிரே மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூட்டம் கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேர், எதிரும் புதிருமாக அங்கேயே படுத்தார்கள்.


மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது . பேசக் கூப்பிட்டார்கள் . பத்திருபது பேர் முழுவதுமாகப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்கள். நான்கைந்து பேர் கேட்கிற தோரணையில் , களைத்துப்போய் உட்கார்ந்திருந்தார்கள் .இதனால் எல்லாம் நம்பிக்கை இழப்பதோ ,குரல் சுண்டுவதோ, பேசுவதைக் குறைத்துக்கொள்வதோ நமக்குப் பழக்கமில்லை . எதிரே இருந்த மைதானம் ஏதோ போர்க்களம் போலக் காட்சி தந்தது. பேச நினைத்தது எல்லாம் மறந்து, மனம் மரணத்தைப் பற்றியே, சுற்றி வந்தது .”நான் மரணத்தைப் பற்றி சிந்திக்கிறேன்” என்று தான் பேசத் துவங்கினேன். பேசத் தகுந்த மரணங்கள் கூட எத்தனையோ உண்டு தானே ? ... பகத்சிங் ,கையூர் தியாகிகள் ,குதிராம்போஸ ,பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்தில் மாண்ட ஏழைகள் , வெண்மணி விவசாயக் கூலிகள்,கும்பகோணத்தில் பள்ளி வளாகத்தில் கொலையுண்ட குழந்தைகள் என்று ...... பேச்சு கிளை பிரிந்து பரவத் தொடங்கியது.


எனக்கு நம்பிக்கையூட்டும் விதமாக,ஊருக்குள் இருந்து ஒருவன் மேடையை நோக்கி வந்தான். வந்து நின்று, பேச்சைக் கேட்க ஆரம்பித்தான். ஒரு போர்வையை மேலுக்குச் சுற்றி இருந்தான். பேச்சை ரசிக்க ஆரம்பித்தான். அவனுக்கும் ,எனக்குமான உறவுப்பாலத்தை வந்து நின்ற சில நிமிடங்களில் அவனே உருவாக்கினான் . அவன் ஈடுபாட்டுடன் கேட்க ,எனக்கு மிகுந்த உற்சாகமாகி விட்டது .அவனை மட்டுமே பார்த்துப் பேசத் துவங்கி விட்டேன் .ஒன்றிரண்டு நிமிடங்கள் தான். சுதாரித்துக் கொண்டேன் .வேறு சிலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே ...இருக்கிற “எல்லோரையும்” பார்த்துப் பேச ஆரம்பித்தேன். எனினும் அவனை அதிகம் பார்க்கத்தான் செய்தேன்.


அவனுக்கு துணையாக , அவனுக்குப் பின்னால் இன்னுமொருவர் வந்து கொண்டிருந்தார் . எனக்குக் குஷி ஏற ஆரம்பித்தது .வந்தவர் ,நான் பார்க்கப் பார்க்க, என் உணர்வோடு கலந்து விட்ட அவனுக்குப் பின்புறமாக வந்து , அவன் முதுகில் வசமாக ஒரு அடியை இறக்கினார் .ஒரு நொடி எனக்கு பேச்சு நின்று போனது. “வக்காளி.. பாலு வாங்கிட்டு வரச் சொன்னா ... வாயப் பாத்துக்கிட்டு நிக்குறான். எவனோ பொழப்பத்தவன் பேசிக்கிட்டு இருக்கான் . நின்னு மண்டைய ஆடிக்கிட்டு இருக்கான்” என்றபடி மீண்டும் ஒரு அடியை இறக்கினார் . அவன் துள்ளிக்குதித்து ஓடினான் . கையில் பால் வாங்குகிற தூக்குப் போணி இருந்தது. மீண்டும் பேசத் துவங்கி இருந்தேன் .


மதுரையில் , திருவிளையாடல் புராணத்தில் , வந்தி என்ற வாரிசு இல்லாத கிழவிக்காக, மண் சுமக்க ஒப்புக்கொண்டு, அதற்குக் கூலியாக வந்தியிடமிருந்து புட்டு வாங்கி உண்ட பின் , வேலை பார்க்காமல் படுத்து உறங்கிய சொக்கநாதக் கடவுளின் முதுகில் பாண்டிய மன்னன பிரம்பால் வைத்த அடி , எல்லா உயிர்களின் முதுகிலும் பட்டது என்றொரு கதையை அம்மா சொல்லி இருக்கிறாள் . அது உண்மையோ, என்று உணர்வது போல் எனக்கும் வலித்தது .அதற்குப் பிறகு ரொம்ப நேரம் பேச முடியவில்லை.

ராஜா சந்திரசேகரின் "கை விடப்பட்ட குழந்தை"

இந்த வார ஆனந்த விகடனில், திரு ராஜா சந்திரசேகரின் கவிதை "கை விடப்பட்ட குழந்தை" பிரசுரம் கண்டிருக்கிறது.

எல்லாப் பிறழ்வுகளுக்கும் பின்னே, கைவிடப்பட்ட, நிராதரவான குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகமெங்கும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு
இழைக்கப்படும் அநீதிகளுக்குப் பிறகும், "பிள்ளைமை"யுடன் வாழ்வையும், சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகள் பெரும் துன்பக் கேணிகள்.
குற்றமற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை, அதன் விளைவை குழந்தைகள் எதிர் கொள்ளும் விதம் அலாதியானது. வலி உணர்ச்சியைச் சுமக்கும்
குழந்தைகள் ஒரு போதும் பழி உணர்ச்சி கொள்வதேயில்லை. அதுவே, பிள்ளைமையின் பெருஞ் சிறப்பு. வலியின், துயரத்தின் நீட்சியில் இருந்து, கணப்
பொழுதில் வெளியேறி, தனது கனவுலகுக்குள் பயணிக்கும் ஆற்றல் குழந்தைகளுக்கு உண்டென்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை தந்த ஆறுதல்
சொல்லி மாளாத ஆறுதல். ஆனால்....

"கை விடப்பட்ட குழந்தை ஒரு கனவிலிருந்து துண்டிக்கப்படுகிறது" எனத் துவங்கிய கவிதையின் வரிகள் என் நம்பிக்கைகளைத் தகர்த்துப் பொடித்துத்
தூர்ந்து போகச் செய்தன. கலங்கடித்தது கவிதை. கவிதையை வாசிக்கிற போது, எதனைக் கவிஞன் பாடு பொருளாக்கிப் பாடினானோ, அதுவாகவே நம்மை
உணர வைத்த கவிதை. "கை விடப்பட்ட குழந்தைகள்" என்று பன்மையில் தலைப்பிட்டிருக்க வேண்டுமெனத் தோன்றியது. அச்சில் வடிவமைத்தவர்களும் வலியை
அந்தப் பக்க மெங்கும் பரவ விட்டிருந்தார்கள். அந்தப் படங்களிலுள்ள எல்லாக் குழந்தைகளின் கண்களிலும் ஒளிரும் பிள்ளைமை நம்மைக் குற்றவாளிகளாக்கித்
தெருவில் நிறுத்துகிறது. தரையில் கிடக்கும் எதையோ எடுத்துச் சாப்பிடும் பசித்த சிறுவனின் படம்.... ஐயோ....

முள் வேலியை வாயில் கடித்த படி ஒரு குழந்தை....
வாயால் துண்டித்து விட முடியுமா முள் வேலியை?....
முடியத்தான் வேண்டும்.
இலங்கையில் போடப்பட்டிருக்கும் முள் வேலிகளை பற்களால் கடித்தேனும் கிழித்தெறிய வேண்டும் என்கிற சினம் பெருகுகிறது.

குழந்தைகளுக்கான ஒரு உலகத்தை நாம் சிருஷ்டிக்கத் தவறினோம் என்பது மட்டுமன்று நமது குற்றம். அவர்கள் சிருஷ்டித்து வைத்திருந்த
உலகத்தையும் நாமே சீரழித்தோம். இந்தக் கணம் கவிஞர் ரத்திகா எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.....
"குழந்தைகளிடம் கற்றுக் கொள்.... பொம்மைகளை எப்படி மகிழ்விப்பதென்று?...." மகத்தான சொற்கள்... தனது உலகத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்தையும்
மட்டற்ற மகிழ்ச்சிக்கு வயப்படுத்தும் அதிசயம் குழந்தைகளின் தனித்த பேராற்றல். அந்த ஆற்றலைப் பறித்து சிதைத்து அழித்திருக்கிறோம். இறுதி ஊர்வலங்கள்
போன பின்னே, வீதியில் கிடக்கும் பூக்களைப் போலக் குழந்தைகளை எடுத்தெறிந்து விட்டோம்.

கவிதை இப்படி முடிகிறது.....

" கை விடப்பட்ட குழந்தை
தான் கைவிடப்பட்டது தெரியாமல்
தேடிச் செல்கிறது இன்னொரு
குழந்தையைத்
தன் கைப்பிடித்து அழைத்துச்செல்ல....."

மதிப்பிற்குரிய ராஜா சந்திரசேகர் நானும், நீங்களும் ஏன் எல்லோருமே, எத்தனையோ தருணங்களில், கைவிடப்பட்ட குழந்தைகள் தாம்...
உங்கள் கைகளை நான் பற்றிக் கொள்கிறேன்.

Tuesday, May 10, 2011

உருகாத பனிச் சிற்பங்கள்

எப்போது புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு அழைத்தாலும், மிகுந்த விருப்பத்துடன் ஒப்புக்கொள்கிறேன். “எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல” என்பதைத் தனியே குறிப்பிடுகிற அவசியம் ஏதுமில்லை. புத்தக வெளியீட்டு விழாக்களில் பங்கு பெறுவதில், காத்திரமான ,ஸ்தூலமான நன்மைகள் இருக்கவே செய்கின்றன. “யார் படிப்பதற்கு முன்பும், லேசான ஈரத்தோடு நமக்குப் படிக்கப் புத்தகம் கிடைக்கிறது” என்பது முதலாவதும், பிடித்தமானதுமான அம்சம்.

வெளியீட்டு விழாவில்,புத்தகத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும் என்பதால் புத்தகத்தைப் படித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவது இரண்டாவது சிறப்பம்சம். மூன்றாவதும், அற்புதமானதும் யாதெனில், வாசிப்பனுபவத்தைத் தகுதியான பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற உயிர்ப்பான தருணம். ஒவ்வொரு விழாவிலும் கிடைக்கிற புதிய அனுபவங்கள், அறிமுகங்கள், சிந்தனைகள் என பலப் பல நன்மைகள்.

வெளியீட்டுக்கான புத்தகங்களில் வெகு சில, மிக முன்னதாகவும், பல மிகக் குறைந்த கால இடைவெளியிலும் வந்து சேருகின்றன.மிகுந்த அவகாசத்துடன் வந்து சேரும் புத்தகங்கள் தருகிற வாசிப்பனுபவத்தை விடவும், மிகக் குறைந்த கால இடைவெளியில் வந்து சேரும் புத்தகங்கள் தரும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறானது. நிகழ்ச்சிக்குப் புறப்படுகிற வரை, பதட்டத்தோடு புரட்டிக் கொண்டிருந்த புத்தகங்கள் தான் அதிகம்.

வாசிப்பைப் பொறுத்தவரை,எனக்கென்று ஒருபிரத்யேகமான அனுபவ நடைமுறை தான் எப்போதும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறது. படிக்கத்துவங்கியதும், திறந்துவைத்திருக்கிற புத்தகம் தன்னை மட்டுமே எனக்குத் திறந்து வைத்திருக்குமானால், அஃதொன்றும் எனக்குச்சிறந்த புத்தகமாகிவிடாது. ஒரு புத்தகம் தன்னைத்தவிர வேறு பல புத்தகங்களையும்,நினைவுகளையும் எனக்கு திறந்து காட்ட வேண்டும்.அப்படி,எனக்கு வேறு வேறு உலகங்களையும் உணர்வுகளையும் தராத புத்தகங்களுடன் நான் தொடர்ந்து பயணம் செய்வதேயில்லை.தன்னையும் திறக்க மறுத்து, “எங்கே?...உன்னால் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறதா ?”...என்று என்னோடு மல்லுக்கு நிற்கும் புத்தகங்களோடு நான் சகவாசம் வைத்துக்கொள்வதேயில்லை அவைகளிடம் இருந்து நான் விலகிப்போய் விடுகிறேன்.ஒரே ஒரு கவிதைக்கு கூட இந்த அளவு கோலைத்தான் பயன்படுத்துகிறேன். ஒரு முறைக்கு இருமுறை ஏன் பல முறை வாசித்த பிறகும், பல்லைக் கட்டிக்கொண்டு இறுகி நிற்கும் படைப்புகளுக்குத் தனியே சில வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் நான் எப்போதும் இல்லை. என் “அறியாமையை”ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த அவமான உணர்வும் ஒரு போதும் வந்ததில்லை, வாங்கிவைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கப் படுவதற்காகக் காத்திருக்கும் போது,என்னோடு மல்லுக்கட்டும் புத்தகங்களோடு நான் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும். புரியாத ,விளங்காத ,திறக்காத புத்தகத்தோடு உறவாடுவது , மனதுக்குப்பிடிக்காத பெண்ணோடு /ஆணோடு குடும்பம் நடத்துகிற கொடுமைதான். புத்தகங்களைப் பற்றி எழுத இன்னும் நிறையக் கிடக்கிறது..
இந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்களில் பங்கேற்க வாய்த்தது , “வாய்த்தது” என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு புத்தகம் பவா.செல்லத்துரையின் “19.டி.எம்.சாரோனிலிருந்து .இன்னுமொன்று ஆர். விஜயஷங்கரின் “அத்திப்பழங்கள் இப்போதும் சிவப்பாய் தான் இருக்கின்றன”


முன்னதன்வெளியீட்டு விழா திருவண்ணாமலையில். பின்னதன் வெளியீட்டு விழா சென்னையில்.திருவண்ணாமலையில் திறந்த வெளியிலும் ,சென்னையில் தேவநேயப்பாவாணர் அரங்கிலும் நடந்தது. இரண்டுமே வேறு வேறு வகையான வாசகர்களும்,பார்வையாளர்களும் நிரம்பிய நிகழ்ச்சிகள். பவா.செல்லத்துரையின் புத்தகமும் விஜயசங்கரின் புத்தகமும் முற்றிலுமான வேறு வேறு அனுபவங்களின் தளத்தில் எழுதப்பட்ட நூல்கள் என்ற போதும் ,இரண்டிலும் ஒரு பொதுவான அம்சமாக ,இருவருமே தங்களது தந்தைகளின் நினைவுகளைப் பதிவு செய்திருந்தது மிக முக்கிய மானதாக இருந்தது. இரண்டுமே வாசிப்பில், நமக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிற புத்தகங்கள்.


இரண்டு விழாக்களிலும், நானும், பங்கேற்ற மற்றவர்களும், படைப்பாளிகளும் பேசியதன் மூலம் உருவான மனோநிலை உருண்டு திரண்டு உருகாத பனிச் சிற்பம் போலாகி விட்டது. அந்த இரண்டு உருகாத பனிச் சிற்பங்களும் ,இப்போது என் எழுது மேசையில் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் குளிர்ச்சி எங்கும் பரவி ,பல வண்ணங்களை உருவாக்கியபடியே இருக்கிறது . எல்லாப் புத்தக வெளியீட்டு விழா அனுபவங்களும் அதனதன் அனுபவ அளவுக்கு ஏற்ப உருவான , உருகாத பனிச் சிற்பங்களே .

Monday, May 2, 2011

“வார்த்தைச் சித்தர்”

பாரதி விழாவில் பேசக் கூப்பிட்டார்கள். சம்மதித்தேன். உங்களோடு இன்னுமொருவரும் பேசப்போகிறார் என்றதும், யாரென்று கேட்டேன். ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரிஜான் என்றார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் தான் நிகழ்ச்சி. கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் வலம்புரிஜானை அழைத்துக்கொண்டு, சாலிகிராமத்திலிருக்கும் என்னையும் கூப்பிட்டுக் கொண்டு, ஒரே காரில் கல்லூரிக்குப் போவதென்பது பயணத்திட்டம்.

“முதலில் என் வீட்டுக்கு வந்து விடுங்கள். இங்கிருந்து ஜான் வீட்டுக்குப் போய் அவரை அழைத்துக்கொண்டு, அங்கிருந்து, கல்லூரிக்குப் போய் விடலாம். அவர் வந்து என் வீட்டு வாசலில் இரண்டொரு நிமிடங்கள் கூடக் காத்திருப்பதை நான் விரும்பவில்லை” என்றேன். ஒப்புக்கொண்டார்கள்.

மதியம் ஒன்றரை மணி போலக் குறிப்பிட்ட நாளில் கார் வந்தது. நேரே இப்போது அவர் வீட்டுக்குப் போகிறோமா? என்று கேட்டேன் . “இல்ல சார் அவர ஏற்கனவே pick up பண்ணிட்டோம்” என்றார் வந்தவர். “கீழ கார்ல அவரு இருக்காரா?” என்று பதறினேன்.” இல்ல சார்... வடபழனி பொன்னுச்சாமியில சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு... நாம போயிச் சாப்பிட்டுட்டுப் போகலாம் என்றார்கள். பொன்னுச்சாமிக்குப் போனோம்... வியர்க்க, விறுவிறுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.வணக்கம் சொன்னேன். நீங்க சாப்பிடலையா? என்று சைகையால் கேட்டார். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று சைகையிலேயே பதில் சொன்னேன். கீழே காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

பத்து நிமிடத்திற்குள் படியிறங்கி வந்தார். சிரமப்பட்டு நடப்பது போலத் தெரிந்தது. எங்கள் இருவருக்கும் இதற்குமுன் தனிப்பட்ட அறிமுகமில்லை என்றாலும், நான் அவரை நன்கு அறிவேன் என்பதால், இதற்குமுன்பு நான் ரசித்துக் கேட்ட அவரது பேச்சு ஒன்றைப் பற்றி அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். எந்த சுவாரசியமும் இன்றி அதை கேட்டுக்கொண்டிருந்தார் விருப்பமின்மையின் சாயல் அவரது முகத்தில் தெரிந்தது போல எனக்கிருந்தது. எனினும் பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசிக்கொண்டு இருந்த போதே, ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்குமான இடை வெளியில் அவர் உறங்க ஆரம்பித்து இருந்தார். மிகுந்த சங்கடமாகி விட்டது எனக்கு. வெளியே வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.

கல்லூரிவந்தது. அவரை எழுப்பினார்கள். வாசலில் கல்லூரியின் தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் என்று ஒரு பெரும் கூட்டம் திரண்டு நின்றிருந்தது. அவரைத்தான் வரவேற்றார்கள். என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. அவரது பிரபலத்தை நான் உணர்ந்திருந்தேன்.

என் தனிமையைப் போக்க இரண்டு ஆசிரியர்கள் என்னோடு சேர்ந்து கொண்டார்கள். ஜானைக் கல்லூரித் தாளாளரின் அறைக்குள் அழைத்துப் போனார்கள். நான் சுற்றிப்பார்க்கப் போனேன். இப்போதும் ஜான் சிரமப்பட்டுத்தான் நடந்து போனார். தூக்கச் சடவாக இருக்குமென்று கருதிக் கொண்டேன்.

நிகழ்ச்சியைத் துவங்க வேண்டுமென்று, என்னை அழைத்தார்கள். மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரண்டிருந்தார்கள். என்னை முதலில் பேச அழைத்தார்கள் அப்போதே, தன் இருக்கையில் சாய்ந்து கண்களை முடிக்கொண்டிருந்தார் “வார்த்தைச் சித்தர்”. லேசாக முன்னும், பின்னும் தொட்டிலை ஆட்டுவது போல அசைந்து கொண்டேயிருந்தார். உறக்கம் வருவதற்காகப் படுத்துக்கொண்டு, கால்களை ஆட்டுகிற பழக்கம் எனக்கு இப்போதும் உண்டென்பதால், வலம்புரிஜான் உடலை ஆட்டிக்கொள்கிறார் என்று எனக்குப்பட்டது. ஒருவர் பேச ஆரம்பிக்கும் போது, உடன் பேச வந்த இன்னொருவர் இப்படிக் கண்களை முடிக்கொண்டு, தலையை முழுவதுமாகக் குனிந்து கொண்டு, எப்போதாவது உடம்பை மட்டும் முன்னுக்குப் பின் அசைத்துக் கொண்டுடிருப்பது மிகுந்த நாகரீகமற்ற செயலாக எனக்குத் தட்டுப்பட்டது. கோபம் முன் நெற்றியில் இருந்து மூளையின் மையம் வரை ஏறியது. உச்சந்தலையில் உஷ்ணமாய்ப் பரவியது. உரத்த குரலில் பேச ஆரம்பித்தேன்.

ஆரம்பம் முதலே எனக்கு அவர் செய்த அவமதிப்பு, மிகச்சிறப்பாக பேச வேண்டும் என்று என்னுள் வெறியூட்டிக் கொண்டிருந்தது. சன்னதம் கொண்டு, பாரதியின் உன்னதங்களை, அவைக்கு முன் அணி வகுக்கச் செய்தேன். தொடர்ந்த கரவொலிகளால், மாணவர்கள் எனக்கு மேலும் களியூட்டினார்கள். பலத்த கை தட்டலுக்கும் கூடக் கண் திறந்து பார்க்கவில்லை வலம்புரிஜான். “சே... என்ன மனுஷன் இந்த ஆள்?” என்று மனசுக்குள் கோபம் புரண்டது. நாம் மதிக்கிற ஒரு மனிதன், நாம் பேசுவதைக் கேட்டு, ஒரு வார்த்தை பாராட்டினால் எத்தனை மகிழ்சியாக இருக்கும்? இல்லை... பிறரை அஙகீகரிக்காத ஆளா?... சே... திரும்பிப்போகிறபோது இந்த மனுஷனோடு சேர்ந்து காரில் போகக் கூடாது என்று மனதுக்குள் உறுதி கொண்டேன்.

இந்த எண்ண ஓட்டங்களுக்கு இடையிலும், எனக்கு இட்ட பணியைத் திறம்படச் செய்தேன். கோடைமழை போல மாணவர்கள். கைதட்டினார்கள். ஊஹும்... அதற்கும் அசைந்துகொடுக்காமல், கண்களை முடிக்கொண்டு, தலையைக் கவிழ்த்தபடியே இருந்தார் அந்த மனிதர். மாணவர்களின் கைதட்டல் சிலநொடிகள் நீடித்தது.” இது போதும்... இந்த ஆள் பாராட்டி என்னவாகப்போகிறது...” என்கிற நினைப்புடன், பெருமிதமாகக் கம்பீரமாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.

அடுத்ததாக, வலம்புரிஜானைப் பேசக் கூப்பிட்டார்கள். தனக்கே உரித்தான, கவித்துவமான மொழிநடையில், கனத்த, கரகரத்த குரலோடு பேசத்துவங்கி, அவையில் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி முடித்தார் ஜான். பிறகு தொடர்ந்தார் “அன்றாடம் மருத்துவர்கள் தரும் மருந்துகளாலும், மாத்திரைகளாலும் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடுமையான உணவுக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது எனக்கு. அவ்வப்போது திருட்டுத்தனமாக, வாய்க்கு ருசியாக, வீட்டுக்கும் மருத்துவருக்கும் தெரியாமல் சாப்பிட்டுக்கொள்கிறேன். வாரத்திற்கு மூன்றுமுறை டயாலிசிஸ் செய்து கொள்கிறேன், இன்று காலையில் கூட டயாலிசிஸ் செய்து கொண்டேன். மிகுந்த களைப்பும், சோர்வுமாக இருக்கிறது. இந்த உடல், இவ்வளவு நோய்களைக் கொடுத்து, அந்தத் துன்பங்களையெல்லாம் சுமந்து கொண்டே ஏன் இந்த உலகத்தில் வாழவேண்டும் என்று இறைவனிடம் பல முறை கேட்டிருக்கிறேன். அந்தக் கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்திருக்கிறது” என்று கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். மெதுவாக தலை சாய்த்து என்னைப் பார்த்தார்.

என்னைப் பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.” தம்பீ...யாரடா நீ? எங்கே இருந்தாய் இத்தனை காலம்?... எப்படியடா என் கண்களில் படாமல் போனாய்?... எப்படியடா என் காதுகளில் உன் குரல் விழாமல் போனது....? எப்படியடா ஒருவன் கூட உன்னைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை... இப்போது தெரிந்து விட்டதடா தம்பி... உன் பேச்சை ஒரு முறையேனும் நான் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் இது நாள் வரை என்னை வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறான்...” அரங்கம் அதைக் கைதட்டி அங்கீகரித்து, வழி மொழிந்தது. என் கண்களில் கண்ணீர் திரண்டது. தொடர்ந்து பேசினார். வாய்ப்புக்கிடைக்கிற போதெல்லாம், தம்பிசொன்னது போல... தம்பி குறிப்பிட்டது போல... தம்பி சுட்டிக்காட்டியது போல... தம்பி வெளிச்சமிட்டது போல... என்று வார்த்தை களால் சித்து விளையாடி முடித்தார் வலம்புரி ஜான்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஏற்கெனவே நான் முடிவு செய்த வண்ணமே, அவருடன் காரில் போகவில்லை. ஏனெனில் அவரோடு பயணம் செய்யும் தகுதி எனக்கில்லை என்று அந்தக் கணம் உணர்ந்தேன். தன்உயிரை முன் வைத்து என்னைப் பாராட்டிய அவருக்கு, என்றேனும் ஒரு நாள் நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

இரண்டாண்டுகள் சந்திக்கப் போகவில்லை. ஒருசந்தர்ப்பம் கூட வாய்க்கவில்லை. மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகப் போயிருந்த ஒரு நாளில், நண்பர்கள் மூலம் அவரது மரணச் செய்தி வந்தது. அஞ்சலி செலுத்த, நேரில் போகவும் இயலவில்லை.

தன் உயிரை முன்னிறுத்தி, என்னை வஞ்சகமின்றி, மனமார வானளாவப் புகழ்ந்த அந்த மனிதனது சொற்களை உயிருள்ள வரை மறக்க இயலாது. அந்தக் கணம் என் கண்களில் பெருகிய கண்ணீர், கண்ணுக்குள்ளேயே வரம்பு கட்டிக் கலங்கிக் கொண்டிருந்தது. ஒரு துளிக்கூட கண்ணிலிருந்து வெளியேறவில்லை ஒரு வேளை அது வெளிக் கிளம்பினாலும் அந்தக் கண்ணீர்த் துளியை என் இரு கைகளாலும் ஏந்துவேன். அதை என்றும் அவிழாத சிறிய ரோஜா மலராக மாற்றுவேன். அதை வலம்புரிஜானின் கல்லறை மீது சமர்ப்பணம் செய்வேன்.

Thursday, February 10, 2011

குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள்


எப்போதும் , ஒருவர் அறிமுகமாகிற போது , அன்றி நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிற போது உரையாடலைத் துவங்க கேள்விகளைத் தான் நம்பி இருக்கிறோம் நாம் . இந்தக் கேள்விகளின் நோக்கம் உரையாடலைத் தொடர்வது மட்டுமல்ல . அவரை , அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் , வாய்ப்பிருந்தால் ரகசியங்களையும் அறிந்து கொள்ளுகிற அவசர அவசியம் தான் . ஆனால் நாம் உணர்வதில்லை அந்தக் கேள்விகள், உள்ளுக்குள் அறுத்துக் குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள் என்பதை.சிலர் எந்த உள் நோக்கமும் இன்றி இந்தக் கேள்விகளைக் கேட்டு வைக்க , பலர் திட்டமிட்டே, கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .

எப்படியெல்லாம் கேட்டு விடுகிறார்கள் . வேலை கிடைக்காமல் வெறுத்துப் போய் , வெம்பிப் போய் அலைகிறவர்களிடம்,"இப்ப என்ன பண்ணுற ? .. எங்க வேல பாக்குற? "
திருமணம் ஆகாமல், பொருத்தமான இடம் அமையாமல் அவதிப்படும் ஆட்களிடம் ,"எப்பம் கல்யாணம் ? கல்யாணச் சோறு எப்பப் போடுவ ? ". திருமணமாகிக் குழந்தை பிறக்காமல் மனதாலும் உடம்பாலும் தவமிருக்கிறவர்களிடம் , "எதுவும் புழு பூச்சி இருக்கா? எத்தினி குழைந்தங்க ?" என்று கூசாமல் கேட்டு வைக்கிறோம்/வைக்கிறார்கள்.
பத்துப் பன்னிரெண்டு வருடமாக வாய்ப்புத் தேடிப் போராடுகிற ஒரு உதவி இயக்குனரிடம்,"எப்பம் தனியா படம் பண்ணுவ ? எவன் எவனோ பண்றான் . நீ என்ன பண்ற? "
எத்தனை கேள்விகள்? ? ?

தன் சொந்த சாதி , மதம், பிறப்பு குறித்து ஏதோ குற்ற உணர்ச்சியோ , தாழ்வு மனப்பான்மையோ , ஒருவருக்கு இருக்கலாம் என்பதை உணராமல்,"நீங்க என்ன ஆளுங்க?..என்ன சாதி ? அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க ? " என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்டு விடுகிறார்கள். பிக் பாக்கெட் அடிக்கிறவன் விரல்களுக்கு நடுவில் வைத்திருக்கும் கூர்மையான பிளேடால் நமது பையை அறுத்து நம் பொருளைக் கவர்ந்து போவது போல. ஒவ்வொரு கேள்வியும் இதயத்தின் அடிப்பகுதியை அறுத்து குருதி கொப்புளிக்க வைக்கிறது . பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் குருதி அடி வயிற்றில் இறங்கி உறைந்து கெட்டி தட்டி நின்று விடுகிறது . " ஏதாவது விசேஷம் இருக்கா ? .. என்னமாவது தகவல் உண்டா ? .... என்பதான நாசூக்கான கேள்விகளும் கூட இதில் அடங்கி விடும் . ஒரு கல்யாண வீட்டில் , நண்பரொருவர் எதிரில் வந்த ஒரு பெரியவரை, அன்புடன் , "நல்லா இருக்கீங்களா ? " என்று கேட்டதும் பெரியவர் முகம் சிவந்து , " நல்லா இருக்குறவங்களப் பாத்து எதுக்கு இப்பிடிக் கேக்குற ? என்றார்.
பிறகு எப்படிப் பேசுவது ... என்ன பேசுவது ... எங்கே துவங்குவது என்று பலருக்குத் தோன்றும் . எந்த வகையிலும் காயம் உண்டாக்காத கேள்விகள் இருந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மனம் திறக்கிற வரை காத்திருக்கத் தான் வேண்டும் .

 ஒரு குழந்தை தன் தாய் மொழியைத் தடையின்றிப் பேச மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம் . ஆனால், அதை முறையாகப் பேசி விட வாழ்நாள் முழுவதும் போராட வேண்டி இருக்கிறது..எல்லாச் சந்திப்புகளிலும், உரையாடல்களிலும் சக மனிதர்களுடைய இதயத்தை அறுத்து விடாத சொற்களை எனது மொழி எனக்குத் தர வேண்டும் என்று தவமிருக்கிறேன்.

Wednesday, February 9, 2011

நீங்க எந்த ஊரு..?


எனது அலுவலகத்தில் இருந்து, தேநீர் குடிக்க எப்போதும் ஒரு கிலோமீட்டர் தூரம் போய், ஒரு குறிப்பிட்ட கடையில் தேநீர் அருந்துவது தான் வழக்கம். இன்று மாலையும் நானும், எனது எடிட்டர் அருள் முருகனும் தேநீர் அருந்தப் போனோம். காலையில் இருந்து வேலை பார்த்துக்கொண்டே இருந்தாலும், களைப்பு இல்லாத உற்சாகத்துடன் தான் இருந்தோம். வழியில், மிக நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்க, "BK டீ சாப்பிடப் போலாமா" என்று கூப்பிட்டார். அதற்குத்தான் போகிறோம் என்றதும் அவரும், அவருடன் வந்த நண்பரும் சேர்ந்து நான்கு பேராகப் போனோம்.

டீக்கடையில், டீ மாஸ்டரைப் பார்த்ததும் வணக்கம் சொல்வது எனது வழக்கம். சிறந்த தேநீர் தருகிறார் என்பதால், முந்திக்கொண்டு முதல் வணக்கம் சொல்லிவிடுவேன். மாஸ்டர் முகம் நிறைந்த புன்னகையோடு எங்களுக்கு தேநீர் கொடுத்தார்.

நண்பர் அவரது நண்பரை எனக்கு அறிமுகம் செய்தார். நான் அருளை அவருக்கு அறிமுகம் செயவித்தேன். அறிமுகமான அந்தப் புதிய மனிதனிடம், "நீங்க எந்த ஊரு என்றேன்".

"தெரியாது" என்றார் புன்னகையுடன்

நான் கேட்டது, சந்தடியில் அவருக்குக் கேட்கவில்லையோ என்று கருதி மீண்டும் நீங்க எந்த ஊரு என்று கேட்டேன்.

மீண்டும், "தெரியாது" என்றார்

நண்பர் அவரைப் பார்த்து, "ஏய் எந்த ஊருன்னு கேக்குறாருப்பா" என்றார்.

அப்போதும் தெரியாது என்றே பதில் வந்தது

"ஏன்... எந்த ஊருன்னு சொல்ல விரும்பலையா..?" என்று கேட்டேன்.

அந்த மனிதன் நண்பரின் காதருகே போய் ஏதோ சொன்னார், நண்பரின் முகம் மாறியது. எனக்குப் புதிராக இருந்தது. அதற்குள் தேநீர் சாப்பிட்டு முடித்திருந்தோம். யாருக்கு என்ன சிகரெட்டு வேண்டும் என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்கு போனார் அந்த மனிதர். நண்பர் மெல்லிய குரலில் என்னிடம் சொன்னார், "அவர் ஒரு அநாதை இல்லத்துல வளந்தவரு... அப்பா அம்மா யாருன்னு தெரியாது... அதனால எந்த ஊருன்னும் தெரியாதுன்னு"

அந்த மனிதர் சிகரெட்டுடன் திரும்பி வந்தார். மெளனமாகப் புகைத்தோம். புறப்பட்டோம்.

அந்தப் புதிய மனிதரிடம் சொன்னேன், "இனிமே யாராவது எந்த ஊருன்னு கேட்டா, மதுரைன்னு சொல்லுங்க... அதுதான் என் ஊரு... இனிமே அதுதான் நம்ம ஊரு..."

"thanks sir" என்றார் அவர் சந்தோஷமாக.

நான் அலுவலகம் திரும்பினேன். நெருக்கடியான போக்குவரத்தில் எப்படி வந்தோம் என்பது நினைவிலேயே இல்லை. அலுவலகம் திரும்பியும் இன்னும் வழக்கமான வேலை செய்யும் மனநிலைக்கு நாங்கள் இருவருமே திரும்பவில்லை.

நினைவெல்லாம், "நீங்க எந்த ஊரு...?" என்கிற கேள்வியிலேயே நிலைத்து நிற்கிறது...

நாஞ்சில் நாடன்

 தமிழினி பதிப்பகம் நடத்திய நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தது. பிப்ரவரி நான்காம் தேதி மாலை. பேராசிரியர் அ. மார்க்ஸ், மூத்த கவிஞன் சமயவேல், எழுத்தாளர் ஷாஜகான், நான், என நான்கு பேர் பேசினோம். நாஞ்சில் ஏற்புரை சொன்னார். அரங்கம் நிறைந்த கூட்டம் தான்.

"எச்சம்" "யாம் உண்பேம்" என்னும் நாஞ்சில் நாடனின் இரண்டு மகத்தான சிறுகதைகளை அரங்கில் குறிப்பிட்டேன். என் மொழியில் அந்த கதைகளைச் சொன்னேன். பார்வையாளர்களும், நாஞ்சில் நாடனும் ஒரு சேரக் கண் கலங்கினார்கள். "நீங்க பேசும்போது கண்ணு கலங்கிடிச்சு" என்று கூட்டம் முடிந்ததும் நாஞ்சில் சொன்னார். நாஞ்சில் எனக்களித்த விருதாக, இந்த வார்த்தைகளைப் போற்றுவேன்.

எப்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டாலும், எங்கிருந்தேனும் ஒரு எதிர்ப்பு வரும். பகிரங்க எதிர்ப்பு இல்லாவிட்டாலும், உள்ளுக்குள்ளேனும் ஒரு கூட்டம் வருந்திக் கண்ணீர் வடிக்கும். பரிசு பெறுகிறவர் குறித்த விவாதம் இல்லாவிட்டாலும், இந்த தொகுப்புக்குத் தந்திருக்கக் கூடாது என்கிற முணுமுணுப்பாவது இருக்கும். எதுவும் இல்லை இந்தமுறை. இது நாஞ்சில் நாடனின் ஆளுமையையும், தமிழ் வாசகப்பரப்பின் மேன்மையையும் எனக்கு ஒரு சேர உணர்த்துகிறது. எத்தனை விருதுக்கும் தகுதி உடையவர் நாஞ்சில்.

எனினும், அரசு சார்ந்த அல்லது அறியப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்குப் பிறகு, படைப்பாளியை கொண்டாடுவது பொதுப்புத்தியில் இருக்கும் பொறுப்பின்மை தான். தனக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டபோது, "எனக்கு விருது கொடுத்து சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக்  கொண்டது" என்றார் ஜெயகாந்தன். "An award has been granted to me by Sakithya Academy, which has no sakithya" என்றாராம் க.நா.சு. பிறகு ஏன் விருது வாங்கினீர்கள் என்று கேட்டபோது, விருதுடன் இணைந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயை எப்படி விட்டுக்கொடுப்பது என்று சொன்னதாக ஒரு தகவல் என் காதிற்கு வந்து எனக்குள் கிடக்கிறது. நாஞ்சிலுக்கு விருது கொடுத்தது அகாடமிக்குப் பெருமையா இல்லை நாஞ்சிலுக்குப் பெருமையா என்று என்னைக் கேட்டால், தனது எழுத்தாற்றலால் நாஞ்சில், சாகித்ய அகாடமியை வென்றிருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. ஒற்றையாக, ஊர் சுற்றி, ஊர் சுற்றி, நொம்பலப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, பிறர் துயர் கண்டு துடித்த ஒரு மனிதன் தன் விரல்களால் வென்றிருகிறான்.

அங்கேயே இன்னொன்றையும் குறிப்பிட்டேன் "இப்படித்தான் ஊர் ஊராக இனி கூப்பிடுவார்கள், துண்டு போடுவார்கள், பரிசு கொடுப்பார்கள், பாராட்டுவார்கள், எல்லாம் நடக்கும். இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு பிறகு. எல்லாம் ஓய்ந்து விடும். நீங்கள் நிம்மதியாக எப்போதும் போல் எழுதப் போய் விடலாம்" என்றேன். மௌனமாக, ஒரு புன்னகையோடு அதை ஆமோதித்தார் நாஞ்சில்.

நாம் அப்படித்தானே எப்போதும் செய்கிறோம்.
பேய்க்கூச்சல் அல்லது மயான அமைதி.

Friday, January 28, 2011

கரையுடைத்தது கண்ணீர்

குருவிக்காரன் சாலை கீழ் இறங்கி, வைகை ஆற்றுக்குள் தரைப்பாலமாகி, மீண்டும் மேடேறிக் கொள்ளும். ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது வைகை.கடந்து போன வாகனங்களும, மனிதர்களும்,கூட மௌனமாகக் கடந்து போனார்கள் .எப்போதாவது சூழலும் நமது மௌனத்தை ஏற்று தனதாக்கிக் கொள்ளுகிறது.

முதல் நாள், திருப்புவனத்தில் வைகையாற்றில் தான் அம்மாவின் அஸ்தியைக் கரைத்தோம். பூமிக்கு வந்த ஆத்மாக்களைத் திருப்பி அனுப்புகிற வனம் என்பதால் "திருப்புவனம்" என்றார்கள். இங்கு அஸ்தியைக் கரைத்திருக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது எல்லாம் நடந்து முடிந்த பிறகு, என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று யோசனைகளை உற்பத்தி செய்து காட்டுவது, மனசுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பாலம் கடந்து மேடேறியதும், இடதுபுறம் இருந்த திரையரங்கின் வாசளில் நின்று, "சினிமாவுக்குப் போகலாமா ?" என்று கேட்டார் அக்கா வீட்டுக்காரர். மறுக்கவுமில்லை. சம்மதிக்க்கவுமில்லை. ரெண்டுங்கெட்டான் நிலை என்பது இதுதான், என்று இப்போது தெரிகிறது. இழுத்த இழுப்புக்குப் போய், உள்ளே உட்கார்ந்த சில நொடிகளில் திரைப்படம் ஆரம்பித்தது.

நேர்த்தியான ஒளிப்பதிவு, பொருத்தமான பின்னணி இசை, அளவான உரையாடல்கள் எனப் படம் நகர்ந்தது. ஒரு வாழ்க்கையை அவதானிக்கிறோம் என்ற உணர்வை, படம் உடனே உருவாக்கி விட்டது. திருமணமான மகளின் உயிர் பிரியும் தருணத்தில், அவரது தகப்பன் மகளின் குழந்தைகளை அழைத்து அவர்களை தங்கள் தாயின் வாயில் பால் ஊற்றுகிற காட்சி. பாலூட்டி வளர்த்த தாய்க்குக் குழந்தைகள் பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். பால் இறங்க மறுத்து, வளதுபுறமாய் வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. தாயின் உயிர் பிரிந்த அந்த தருணத்தில், அரங்கிலிருந்து வெளியேறி படிகள் இறங்குகிற இடத்தில், திரண்டிருந்த அரையிருட்டில் அமர்ந்தேன். எந்தப் பிரயாசையுமின்றி கரையுடைத்துப் பெருகியது கண்ணீர்.

அம்மா இறந்து இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின், அதே திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வந்தபோது, அதன் முதல் பிரதியை சென்னை புத்தகத் திருவிழாவில் நானே வெளியிட நேர்ந்தது. முன்பு அந்த திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்த நாளையும், கண்ணீர் கரையுடைத்துப் பெருகியதையும் அரங்கிலேயே குறிப்பிட்டு, முதல் பிரதியை வெளியிட்டேன் "உதிரிப்பூக்கள்" என் வாழ்வில் கலந்துவிட்ட ஒரு திரைப்படம் தான்.

Wednesday, January 19, 2011

வர மறுத்த கண்ணீர் ...



அம்மாவின் உயிர் பிரிந்த போது அதிகாலை நான்கு மணி . நான் அருகில் இருந்தேன் . அந்த இரவைப் பற்றி ,என்றேனும் எழுதுவேன் என்று நம்புகிறேன் .
அந்த இரவு , மூச்சுத் திணற என் முகத்தில் அடித்தது.வீட்டில் மிச்சமிருந்தது அப்பாவும் ,நானும் தான். மிக நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் சொல்ல நானே போக வேண்டியதாகி விட்டது . அப்பா ஒரு நாற்காலியில் சரிந்து கிடந்தார் . எதிர் வீட்டில் இருந்த சாம் நெதானியேல் மாமா தனது ஸ்கூட்டரைக் கொண்டு வந்தார் . அக்கா வீடு , சித்தப்பா , மாமா வீடு என மிக நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்குப் போய்ச் சொன்னோம் .அவர்கள் அழ , அடுத்த வீடுகளுக்கு விரைந்தோம் .
வீடு திரும்பிய போது நன்கு விடிந்திருந்தது .மனமெல்லாம் இருட்டு அடைத்திருந்தது .கட்டிலில் கிடந்த அம்மாவை இரட்டை பெஞ்ச் போட்டு நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள் .மாலை போட்டு , தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி இருந்தது . அம்மா விரும்பி வாங்கி வைத்திருந்த ஊதுபத்திகள் புகைந்து கொண்டு இருந்தன . அதன் மணம் முற்றிலும் வேறாக இருந்தது . யாரோ என்னைக் கட்டிப் பிடித்து அழுதார்கள் . எனக்கேதும் அழுகை வரவில்லை . அன்றே , மாலையே எல்லாம் முடிந்தது .
மூன்று நாட்கள் கடந்து விட்டன , எல்லோரும் அழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே  இருந்தார்கள் .நானும் முயன்று கொண்டே இருந்தேன் . கண்ணீர் கண்களில் இருந்து எங்கோ தொலைதூரம் போய்விட்டிருந்தது .
"அவன் நெஞ்சழுத்தக்காரன் ".... " ஆத்தாவ முழிங்கிட்டு அழுகாம திரியுது "...."அழுகை வர முடியாதபடி என்ன மனசோ ' ....." அவன் சோத்துல காய மறச்சுவச்சு திங்கிறவன் " ..."ரொம்பத் துக்கமானா அழுகை வராதா "....என்று வித விதமான குரல்கள் என்னைச் சுற்றித் திரிந்து கொண்டே இருப்பது தெரிந்தும், அழுகை வரவில்லை .
கண்கள் ரத்தச் சிவப்பில் குழம்பிக் கிடந்தன .அக்கா வீட்டுக்காரர் மூன்றாம் நாள் இரவு வெளியே போகலாம் என்றார் . பதினாறு நாள் எங்கும் போகக்கூடாதென்று சொல்லி இருப்பதை நினைவூட்டினேன் . "அது , துக்கம் கேக்க யாராவது வந்தால் வீட்டுல ஆளு இருக்கணுங்குற சம்பிரதாயம். ராத்திரில எவன் வர்றான் ? வா குமாரு .. வெளிய போகலாம் " என்றார் . எங்காவது வெளியில் போக மனம் தவித்துக்கொண்டே இருந்தது . கீழச்சந்தைப்பேட்டை பக்கம் திரும்பி வைகை ஆத்தங்கரைப் பக்கம் நடந்தோம் .
மூன்று நாட்களாக மூடிக் கிடந்த கண்ணீர்ச்சுரப்பிகள் அறுந்து , உடைந்து , கிழிந்து ....கதறிக் கதறி அழப்போவது தெரியாமல் போய்க்கொண்டு இருந்தேன் குருவிக்காரன் சாலையில் .....
 ·  · Share · Dele