இன்று வெளியான எனது பாரதி பற்றிய 'அருந்தவப்பன்றி" சுப்பிரமணிய பாரதி என்ற நூலுக்கு திரு தமிழருவி மணியன் எழுதிய மடல் .
ஒரு புதிய மைல் கல் ...
மாளிகை முற்றங்களில் மட்டும் இதமாக வீசிக்கொண்டிருந்த கவிதைத் தென்றலை மண்குடிசைக்குள் குடியேற்றிய முதல் மக்கள் கவிஞன் மகாகவி பாரதி . வானத்து நிலாவையும் , முடிமன்னர்களின் உலாவையும் ,கிழடு தட்டிப் போன பழைய உவமைகளின் துணையோடு பாடிக் கொண்டிருந்த இலக்கணப் புலவர்களுக்கு இடையில் , 'மரங்களைப் போல் மழையில் நனைந்து , விறகுகளைப் போல வெயிலில் காய்ந்த பாதையோரத்துப் பஞ்சைகளின் பக்கம் பார்வையைத் திருப்பிய புதுயுகக் கவிஞன் அவன் .
மன்மதனின் மலர்க்கணைப் பட்டு , மாலைத் தென்றலில் மதிமயங்கி, ஆணின் வருகைக்காக அணையாத விரக நெருப்பை நெஞ்சில் சுமந்து, காற்றையும் , கிளியையும் தூதனுப்பித் துடித்து நிற்கும் தோகையரின் காமப் புலம்பலை இரசனையுடன் இலக்கியமாக்கிய கவிராயர்களுக்குப் பின்னால், கவிதையைக் கௌரவிப்பதற்காகவே எழுதுகோல் ஏந்தியவன் பாரதி .
ஜமிந்தார்களின் மலினமான மன்மத உணர்ச் சிகளுக்குத் தீனி போடுவதறக்காகவே விறலி விடு தூதும், கூளப்ப நாயக்கன் காதலும் பாடி இலக்கியத்தைச் சிலர் சிறுமைப் படுத்திய வேளையில், தன் வாழ் காலச் சமுகத்தின் இழிவுகளை அழித்தொழிக்க அமில தாரை வழியும் அருவியாகத் தன்னுடைய பேனா மையை ரசவாதம் செய்து, சமுதாயப் புரட்சிக்குக் கவிதையைச் சக்தி மிக்க ஆயுதமாக மாற்றிக் காட்டிப் புதிய சரித்திரம் படைத்தவன் பாரதி .
அறிவு என்னுள் கண்விழிக்கத் தொடங்கிய காலம் தொட்டு, என்னுடைய ஆதர்ச ஆசானாக நெஞ்சுக்குள் நான் நேர்ந்து கொண்ட மனிதன் மகாகவி பாரதி. அவனுடைய ஒவ்வொரு சொல்லும், என் சிந்தனையைச் செதுக்கிச் செப்பனிட்டது. அவனை பற்றிய நூல் எதுவாயினும் ,அதை தேடிப் படிப்பது என் வழக்கம் . நண்பர் பாரதி கிருஷ்ண குமார் அற்புதமாகப் படைத்திருக்கும் ' அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' யைப் படிக்க நேர்ந்தபோது என்னுள் விளைந்த உணர்வுகளை எழுத்தில் வெளிப் படுத்த முயல்வது ' வானத்து நீலத்தை வட்டிலில் இறக்கிவைக்கும் ' முயற்சியைப் போன்றது.
ஒரு வெள்ளிவிழா காலத்துக்கு முன்பே என் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பராகி விட்டவர் கிருஷ்ணகுமார் . எஸ்.ஆர்.கே . என்று அன்புடன் அழைக்கப்பட்ட மார்க்சியவாதி எஸ்.இராமகிருஷ்ணனின் பாதிப்பை ஜெயகாந்தனிடமும் , ஜெயகாந்தனின் சிந்தனை வீச்சை நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடமும் மேடைப் பேச்சில் கண்டு வியந்தவன் நான் . இளம் பருவம் முதல் சமூகநலன் சார்ந்து இயங்கும் என் நண்பருக்கு, எழுத்தும் பேச்சும் வணிக நோக்கில் கடைபரப்பும் விற்பனைப் பொருளாக இருந்ததே இல்லை என்பதுதான் நான் அவரிடம் கண்ட தனிச்சிறப்பு .
பாரதியைப் பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால் , எந்த பாரதி நேயரும் பார்த்தறியாத, ஒருக்கால் பார்த்திருந்தும் பறைசாற்ற விரும்பாத பக்கத்தில் தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார் நம் கிருஷ்ணகுமார் . அதன் விளைவுதான் இந்த 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' என்னும் ஆய்வு நூல் . முதற்பார்வையில் தலைப்பே வாசகர்களைத் திகைக்க வைக்கும். ஒருவகையில் பாரதியிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்களை அதிர்ச்சிக்கும் ஆளாக்கும் .
பாரதியின் ' கனவு' என்ற காதற்கவிதையிலும் , 'பாரதி அறுபத்தாறு' என்னும் முற்றுப்பெறாத பாடல் தொகுதியிலும் , 'சின்ன சங்கரன் கதை' என்னும் முற்றுப்பெறாத கதைப் பகுதியிலும், ' கவிதாதேவி அருள்வேண்டல்' போன்ற சில பக்கங்களிலும் காணப்படும் கவிஞனின் வாழ்வு தொடர்பான ஒளிக்கீற்றுகளை, இன்றுவரை அறியப்படாத இருண்ட பக்கத்தில் பாய்ச்சி உண்மைக்கு நெருக்கமாக தன் ஆய்வை நடத்திஇருக்கிறார் என் நண்பர் .
" தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாந்
திமிங்கல வுடலுமோர் சிறியநா யறிவும்
பொருந்திய வொருவனைத் துணையெனப் புகுந்தவன்
பணிசெய விசைந்த ' பாரதி ' தன்னை 'அருந்தவப் பன்றி ' என்று அடைமொழி தந்து இழித்துப் பேசுகிறான். எட்டயபுரத்து ஜமீனில் பணிபுரிந்த காலத்தில் கவிதை என்னும் 'தெய்வ மருந்துடைப் பொற்குடம்' தன்னிடமிருந்து மறைந்துவிட்டதாக மனத்துள் மறைவாகக் கண்ணீர் விட்டுக் கதறியழுகிறான் பாரதி .
'வறுமை காரணமாக எட்டயபுரம் ஜமீனில் வேலைக்குப் போன பாரதியாரைக் 'கவிதா தேவி' ஏன் பிரிந்து போக வேண்டும்? எதற்காக , இத்தனை கடுமையான சொற்களால் எட்டயபுரம் ஜமீந்தாரை விமர்சிக்க வேண்டும்? ஜமீன் 'வேலை'யில் பாரதியாருக்கு நேர்ந்த அனுபவங்கள் என்ன? அத்துணை கடுமையாக விமர்சித்த ஜமீனுக்கு மீண்டும் ஏன் வேலைக்குத் திரும்ப வேண்டும் ? வாழ்வியல் தேவைகளுக்காக ஜமீன் வேலைக்குப் போகும் பாரதியைக் கவிதா தேவி விட்டு விலகுவதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் கவிதை எது ? ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவிதாதேவி மீண்டும்வந்த போது எழுதிய முதல் கவிதை எது ?பல்லாண்டுகள் பாரதியாரைப் பிரிந்திருந்த கவிதா தேவி மீண்டும் அவரிடம் வந்த பிறகு , அவரது இறுதிக்காலம் வரை அவரோடு இணைந்து இருந்தாளா? மீண்டும் இடையில் ஏதேனும் பிரிவு இருவருக்கும் இடையில் நேர்ந்ததா ? என்று கேள்வி மேல் கேள்வியாக நண்பரின் நெஞ்சில் எழுந்து உந்தியதின் பலனாக ஓர் உன்னதமான ஆய்வு ,இந்த நூல் வடிவில் அரங்கேறியிருக்கிறது .
பாரதி கிருஷ்ணகுமார் இந்த அரிய ஆய்வு நூலில் கையாண்டிருக்கும் 'சொல் புதிது; சுவை புதிது ; பொருள் புதிது'. நடுநிலை நின்று, அறிவுநிலையில் மதிப்பிட்டு, மகாகவி பாரதியார் வாழ்வின் விழ்ச்சிக்கூறுகளை இனங்கண்டு , கவிதாதேவி அவரிடமிருந்து பிரிந்த காலத்தைக் கண்டுணர்ந்து , அதற்கான அடிப்படைகளைத் தேர்ந்து தெளிந்து வசீகரமான நடையில் நண்பர் வடித்திருக்கும் இந்த நூல் பாரதி குறித்த படைப்புகளில் தவிர்க்க முடியாத இடத்தை என்றும் பெற்று இலங்கும் . கால பிரக்ஞையும் , வரலாற்றுணர்வும் இல்லாத தமிழினத்தின் இலக்கியப் பாதையில் பாரதி கிருஷ்ண குமாரின் இந்த ஆய்வு நூல் ஒரு புதிய மைல்கல் !
அன்புடன்,
தமிழருவி மணியன் .
7 comments:
விழாவிற்கும் வரமுடியவில்லை.புத்தகத்தையும் படிக்க முடியவில்லை.மணியனின் கடிதத்தை மட்டும் படித்தேன் .வேறு என்ன செய்ய!---காஸ்யபன்
நேற்று பாரதி பிறந்த நாளன்று சிந்தனை விருந்து வழங்கியதற்காக தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.அவரது நூல்கள் வெளியீட்டு விழாவுக்குச்சென்ற அனுபவம் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதது.சமீப காலங்களில் நான் கேட்டு ஒன்றிப் போய் ரசித்த மிகச் சில கூட்டங்களில் இது மிக முக்கியமானது!
பிரபஞ்சன்,எஸ் ராமகிருஷ்ணன், பாரதிபுத்திரன்,நா.முத்துக்குமார் எஸ் ஏ பெருமாள்,பேரா. மாடசாமி ஆகியோரின் பஞ்சாமிர்த உரைகள் அளவோடு, கச்சிதமாக அமைந்தன.
"பேச்சாளர் எழுத்தாளர் ஆக மாறியதும் (கிருஷ்ணகுமார்), எழுத்தாளர் பேச்சாளராக(எஸ் ராமகிருஷ்ணன்) மாறியதும் என்னை பரவசப்படுத்தியுள்ளது. ஏனெனில் , அவர்கள் இருவருமே எனது 'பள்ளியில்' பயின்றோர்கள்... நான் பேசுவதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்த காலம் போய் இன்று அவர்கள் பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று தோழர் எஸ் ஏ பெருமாள் மனம் நெகிழ வாழ்த்தி அடிஎடுத்துக் கொடுக்க அனைவரும் அந்த மையக் கருத்தைச் சுற்றியே தங்கள் பதிவுகளை முன் நிறுத்தினர்.
"எழுதவும், பேசவும் வல்லமை படைத்த எஸ் ஏ பி இப்போது அவரது சீடர்கள் நாங்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் நாங்கள் சரியாகப் பேசுகிறோமா என்பதைக் கேட்கத்தான்" என்று ஏற்புரையில் சொன்னபோது அவையில் கடும் கரவொலி.!!
விழாவுக்கு வர ஒத்துக் கொண்ட தமிழருவி மணியன் எதிர்பாராத வெளிநாட்டு அழைப்பு காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாததற்கு வருத்தம் தெரிவித்து தமது கருத்துக்களை கடிதமாக எழுதிஇருந்தார்(-நல்ல எடுத்துக் காட்டு!)கூட்டத்தில் இது வாசிக்கப்பட்டது.
கவிஞர் ஜெயபாஸ்கரனும், பேரா. பர்வீன் சுல்தானவும் அருமையான தொகுப்புரையை வழங்கினர்.
கரிசல் கருணாநிதியின் கானஅமிர்தமும், பரிணாமன் கௌரவிக்கப் பட்டதும் சிறப்பு.
இலக்கியக்கூட்டங்கள் என்பதை நாம் இழந்து கொண்டிருக்கும் அளவுக்குப் பணி நிலைமைகள், ஒரு நாளாவது வார ஒய்வு வேண்டும் என்ற அளவுக்கு இறுக்கமாகிப் போய்விட்ட சூழலில் நடுத்தர வர்க்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இலக்கியப்பொறி அணையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பி கே போன்ற படைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும்.
வாச்சாத்தியை அடுத்து திரையில் ஆவணப் படுத்தப் போவதாக அறிவித்தார் பி கே.
எழுத்தாளர் ஜெயகாந்தனைப் போல் மேடையிலிருந்து அவையிலிருந்த ஒவ்வொருவரையும் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார்.அந்தத் தீக்ஷண்யம் ரசிக்கும்படியாக இருந்தது ஆமா... (அவர் பாணியில் வந்து விட்டது 'ஆமா').
-இரா. குமரகுருபரன்.
புத்தகம் வாங்கி படிப்பேன். கிடைக்கும் இடம் கிடைக்குமா?. நான் கர்நாடகாவில் வசிக்கிறேன்.
vizhavirku varavillai.puthagam padikka aasai.athigarikka seithuvittar thamizharuvi
வணக்கம் BK. அழைப்பிதழில் தலைப்பைப் பார்த்ததுமே நானும்,KK யும் ஒருமுறை PGBEU மாநாடு வந்தபொழுது, நீங்கள் இது பற்றி பேசியதுதான் நினைவிற்கு வந்தது.புத்தகம் படித்து மீண்டும் தொடர்பு கொள்ள அவா.gbc.
Dear Krishnakumar, As I told you over the phone, for three hours I lived in a world that was different from the one that is crumbling in front of our eyes. Thanks for the great experience. Waiting for your next documentary or book. Pl speak more and more with your pen and camera.
Vijayshankar
உங்கள் பேச்சில் மயங்கியவன் நான்.எனது நண்பர்களை உங்களின் அற்புதமான பேச்சை கேட்பதற்காக அழைத்து சென்றேன் .அவர்களும் மயங்கினார்கள். உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினேன் .'ரௌத்திரம் பழகு' என்று எழுதி தந்தீர்கள். உங்களின் புத்தகம் படிக்க ஆவலாக உள்ளேன் .நிச்சயம் விரைவில் தேடி படித்துவிடுவேன்.உங்களின் எழுத்து பணி வெல்லட்டும்.
Post a Comment