Tuesday, May 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 13

மாயாண்டி பாரதி - தமிழ் விக்கிப்பீடியா
ஐ.மாயாண்டி பாரதி


எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.


எங்கள் சந்திப்புகளில் இசைக்குப் பெரும் பங்கு இருந்தது.இரவு முழுக்கப் பாட்டும் பேச்சும் கூத்தும் தான். உற்சாகமற்ற இரவாக ஒரு இரவு கூட இருந்ததில்லை.

மதுரை நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு கல்லூரியின் மைதானத்தில் தான் எங்கள் சபை வழக்கமாகக் கூடும். நம்பி யாரும் சபைக்கு வரலாம். சபைக்கு கையில் காசு இருக்கிறவர்கள் தான் வரவேண்டும் என்பதில்லை. புதிதாக நண்பர்களை அழைத்து வந்தால் முறையாக அறிமுகம் செய்துவைத்து விடவேண்டும். நாம் இல்லாதபோது வந்தாலும் உபசரிப்பார்கள். அந்த சபைகளுக்கு நான் பலரை அழைத்துப் போய் இருக்கிறேன் . அதில் சௌபாவும் ஒருவன் . 

ஆரம்பத்தில் சௌபா புகை பிடிக்கமாட்டான். சபையிலோ புகை தான் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். தானும் புகை பிடிக்க விரும்புவதாகச் சொன்னபோது சபை விதிகள் அனுமதிக்காது என்று அவனுக்குச் சொல்லப்பட்டது . அவனுக்கு மட்டுமல்ல . 

புதிதாக, முதன்முறையாகப் புகை பிடிக்கவோ,மது அருந்தவோ அந்தச் சபையில் யாரையும் அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால் சபையில் கன்னி சாமிகளுக்கு அனுமதியில்லை. வேறெங்காவது துவங்கிப் புழங்கிப் பழகியவர்களுக்குத்தான் சபையில் எல்லாம் கிடைக்கும். கன்னி சாமிகள் பார்க்கலாம்.உணவு வந்தால் உண்ணலாம்.

இரவெல்லாம் இசையென்றால்,ஏதோ வெறுமனே சினிமாப் பாட்டு பாடுகிற சபை என்று கருதி விடாதீர்கள்.எந்தப் பாடலைப் பாடினாலும்,பாடலை எழுதிய கவிஞர் ,இசைஅமைப்பாளர்,பாடியோர்,நடித்தோர்,பாடல் இடம்பெற்ற சூழல்,காட்சியமைப்பு என்று எவ்வளவு செய்திகள் சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லிவிட்டுத் தான் பாடுவார்கள்.எல்லாப் பாடகர்களின் குரலையும் போலப் பாடுகிற பாடகர்கள் சபையில் இருந்தார்கள்.தமிழ்த் திரை உலகின் எல்லாக் கவிஞர்களையும் ,மேதைகளையும் அருகிருந்து தரிசித்த இரவுகள் அவை.

பல சமயங்களில் சபை தீவிரமான புத்தக வாசிப்பில் இறங்கிவிடும். ஒருவர் வாசிக்க எல்லோரும் கேட்பார்கள்.ஒருவர் பாடுகிற போதோ,பேசுகிறபோதோ,வாசிக்கிறபோதோ,இடையில் குறுக்கிட்டு யாரும் யாரோடும் பேசமாட்டார்கள்.பேசவேண்டி வந்தாலும் இடையூறு இல்லாமல் சைகை மொழியில் பேசிக்கொள்வார்கள்.ஒரு சபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த சபை.

ரஜினி பாமிதத்தின் இன்றைய இந்தியா என்ற புத்தகத்தை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து உணர்ந்த ஒருவர்,எல்லாப் பிறப்பிலும் ஏகாதிபத்திய எதிப்பாளராக,காலனி ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும் நிராகரிப்பவராக அனைத்துத் தேசிய இன விடுதலை போராட்டங்களையும் ஆதரிப்பவராக மட்டுமே பிறக்க முடியும்.சபையில் எல்லோர் முன்னிலையிலும் சிறப்பாகப் பிழையின்றி வாசிக்க வேண்டும் என்பதற்காக புத்தகத்தை முன்னதாக ஒருமுறை வாசித்துவிட்டு போகிற பழக்கம் எனக்கு இருந்தது.எத்தனை புத்தகங்கள் ! எத்தனை இரவுகள் ! இப்படிதான் எங்கள் வாழ்க்கை விடிந்தது.

என் நண்பர்கள் எல்லோரும் சௌபாவிற்கும் நண்பர்கள் ஆனார்கள்.அவ்வாறே தான் வாழ்ந்த பகுதியில் இருந்த இடதுசாரி இயக்கத் தோழர்கள் பலரை சௌபா எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.அவர்களில் பலர் என்னை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள்.

ஏனெனில்,அவசரநிலைக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.தலைமையில் ஒரு பெரும் கூட்டணி அமைந்திருந்தது.அதில்,மதுரை பாராளுமன்றத்தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.அதன் வேட்பாளர் தோழர் பி. ராமமூர்த்தி.

ஜனதாக் கட்சியின் சார்பில் நாங்கள் தோழர் பி ஆர் க்காகத் தேர்தல் பணி ஆற்றினோம்.மதுரைப் பாராளு மன்றத்தொகுதி முழுவதும் சுற்றினோம்.ஒலிபெருக்கியே இல்லாமல் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசினோம். பெரும்பாலான இடங்களுக்கு மாட்டுவண்டியில் தான் போயிருக்கிறோம். 

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநிலத் தலைவராக இப்போதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.ஜான் மோசஸ்,பெரும் தியாகப்பரம்பரையைச் சேர்ந்த நண்பன் சிதம்பரபாரதி,மதுரையில் இப்போது பிரபலமான வழக்கறிஞர் கவிஞர்.கோ.மணிவண்ணன்,மதுரை கிழக்குத் தொகுதியை சேர்ந்த அருமை நண்பன் கோவர்தனன்,ஆகிய ஜனதாக் கட்சிக்காரர்களைத் தவிர அந்தந்தப் பகுதி CPM தோழர்களும் தான், மாட்டுவண்டியில் சக பயணிகள்.

அந்தப்பயணத்தின் ஒரு பகுதியாக செல்லூர் மீனாம்பாள்புரம்,நரிமேடு ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்ததில் நிறைய அறிமுகங்கள் இருவருக்கும் இருந்தது.

அந்தத் தேர்தலில் இந்திரா தோற்றார்.மதுரையில் பி.ஆர்.தோற்றார்.தோல்விக்குப் பிறகான ஒரு நாளில்,மதுரை மேலமாசி வீதியில் குடியிருந்த அவரது வீட்டுக்கு சௌபா என்னை அழைத்துப் போனான்.இடதுசாரிக் கட்சிக்குள் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருவரை ஒருவர் தோழர் என்று தான் அழைப்பார்கள்.ஆனால் அப்பா என்று அழைத்தபடி அந்த வீட்டுக்குள் போனான் சௌபா.சொந்த வீட்டுக்குள் போவதுபோலப் போனான். நான் தயங்கி உள்ளே போனேன்...உள்ளே இருந்த அவர் சௌபாவை "வாடா... எங்க ஆளையே காணோம் ?" என்று உரிமையோடு அழைத்தார்.என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்."பேரு கிருஷ்ணகுமார்... நாங்க BKன்னு கூப்டுவோம். பெருசுன்னும் கூப்பிடுவோம்." அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் இருந்து தலைதூக்கி அவர் என்னை அண்ணாந்து பார்த்தார். "எனக்குத் தெரியும்.பெருசாத்தான் இருக்காரு... பேச்சும் கேட்ருக்கேன்" என்றார். எனக்கு வியப்பாகிவிட்டது.இருவரையும் அமரச் சொன்னார்.வீட்டிற்குள் திரும்பி, "பசங்க வந்துருக்காங்க.ரெண்டுபேருக்கும் காப்பித் தண்ணி குடு" என்றார்.சௌபா,பேசிகிட்டு இருங்க என்றபடி வீட்டிற்கு உள்ளே போனான்.


அவர் பேச ஆரம்பித்தார்.அவர்,விடுதலைப் போராட்ட வீரர்,பத்திரிகையாளர்.தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி.பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார்.நான் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

தனது பதின்மூன்று ஆண்டுகால சிறை வாசத்தை எந்தப் பம்மாத்தும் இல்லாமல் சொன்னார்."ஏறினா ரயிலு எறங்கினா ஜெயிலு" என்றார்.முதல் சந்திப்பே மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.


பாரதியை,வள்ளுவனை,பாரதிதாசனை,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை,பாவலர் வரதராசனை,அவர் தம்பி இசைஞானி இளையராஜாவை,ஜெயகாந்தனை,ஜீவாவை,ஜானகி அம்மாளை,எனத் தான் அறிந்தவர்களைப் பற்றியும் அவர்களைப் பற்றி நாம் அறியாதவைகளையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.அவரது இறுதிக் காலம் வரையில் இந்தத் தோழமையும் உரையாடலும் நிற்கவே இல்லை.சௌபாவைப் போலவே நானும் அவரை அப்பா என்று தான் எப்போதும் அழைத்தேன். 

இப்படியாக நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனிதர்களைப், புத்தகங்களை அறிமுகம் செய்துகொண்டே இருந்தோம் . 

சௌபாவின் தாயார் என்னை உபசரித்தது போலவே, என் தாயாரும் சௌபாவை உபசரிப்பதுண்டு.யார் வந்தாலும் உபசரிப்பதும் , வயிறார உணவு தருவதும் என் தாயாருக்கு இயல்பாக இருந்த குணம். அம்மா காலமான அன்று , அம்மாவின் உடலைச் சுமந்தது முதல் , இறுதிச் சடங்குக்கான எல்லாப் பணிகளையும் சபை உறுப்பினர்களே செய்தார்கள். அன்றைக்கு என் சபை உறுப்பினர்கள் செய்த வேலையைப் பார்த்த நெருங்கிய உறவினர்கள் அஞ்சித்தான் போனார்கள் . யாரையும் எந்த வேலையும் செய்ய விடாமல், வேலைகளைச் செய்துகொண்டே இருந்தார்கள் . நான் அம்மா இறந்த அதிர்ச்சியில் அழ மறந்து , துளிக்கூட கண்ணீர் இன்றி வறண்டு போயிருந்தேன். 

மதுரையில் எந்த மயானத்திற்குக் கொண்டுபோவது என்பதைக் கூட சபையே முடிவு செய்தது. எங்கள் மதுரை வீட்டில் இருந்து, தத்தனேரி மயானத்திற்குக் குறைந்தது ஆறேழு கிலோமீட்டர் தொலைவு. இப்போதுபோல வாகனவசதிகள் இல்லை. தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். சபை சுமந்தது. தோள் கொடுத்த பலரில் சௌபாவும் இருந்தான் . அவனது இறுதிப் பயணத்திற்குத் தோள் தர இயலாத தூரத்தில் காலம் என்னை நிற்கவைத்து விட்டது . இப்போது இந்த எழுத்தின் வழியாகத் தான் தோள் சுமக்கிறேன்.

எத்தனையோ பயணங்களில் என் தோளில் படுத்துறங்கியவனை , இப்போது நினைவுத் தோளில் சுமக்கிறேன்.

தத்தனேரி மயானத்திற்கு வந்து சேர்ந்தோம், அம்மாவின் அம்மாவும் , என்னோடு பிறந்த ஒரு அக்காவும் சென்னையில் இருந்து வரவேண்டும். அவர்கள் வந்து முகம் பார்க்கிறவரை காத்திருப்பது என்று முடிவு . அவர்கள் சென்னையில் இருந்துவரும் பேருந்தை மறித்து அழைத்துவர ஒரு மூன்று பேர் தல்லாகுளத்திலே நின்றார்கள் . தவறிப் போனால், பெரிய பேருந்து நிலையத்தில் மூன்று பேர். எல்லாமே சபை முடிவு. அக்காவும் , பாட்டியும் வர இரண்டு மணிநேரமாகும் என்று எனக்குச் சொன்னார்கள். அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துப் போனார்கள். புகைக்க, பற்றவைத்த சிகரெட்டை ஒருவன் நீட்டினான். நான் மறுத்தேன். நண்பன் குணசேகரபாண்டியன்... " பெருசு .. பேசாமக் குடிங்க .. உக்காந்து குடிங்க " என்றான். சொந்தக்காரங்க நெறையப் பேரு நிக்குறாங்க என்றேன் . " ஏ மனோகரா .. அங்கபோய் உக்காரு .. எவனாச்சும் வந்தா வரக்கூடாதுன்னு சொல்லு " என்று உத்தரவிட்டார் இரும்புக்கடை தங்கம். நான் புகைக்க ஆரம்பித்தேன். நெஞ்சில் இருந்த அடைப்பு நீங்கியது போன்ற உணர்வு ... யாரோ, ஒரு பெரிய பக்கெட் நிறைய சாராயம் கொண்டு வந்து எல்லோருக்கும் பணிவாகப் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள்." பெரிய சாவு .. எல்லாரும் அந்தம்மா கையால சாப்பிட்டுருக்கோம்.. ஒரு குறையும் இல்லாமச் செய்யணும் என்றார் தங்கமாரி. சௌபா என்னருகில் வந்து அமர்ந்தான் . கலங்கி அழுதான் . சட்டென எல்லோரும் அழுது குமைந்தார்கள். நான் வறண்டு போயிருந்தேன். சட்டென சௌபா சற்றே உரத்த குரலில்," BK... அக்கா வர ரெண்டு மணிநேரமாகும். அது வரைக்கும் நீங்க ஒரு கதை சொல்லுங்க" என்றான். 

(இந்த நிகழ்ச்சி குறித்துப் பல இடங்களில் , பல மேடைகளில் நான் பேசி இருக்கிறேன்.ஆனாலும்...) "கத சொல்லுறதுக்கு நேரம் காலம் இல்லியா என்று யாரோ மறுத்தார்கள். அவர் சொல்லுவாரு .. நீ மூடிக்கிட்டுக் கேளு என்றான் குணசேகரன். எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தார்கள். 

அந்தோன் செக்காவின் "ஆறாவது வார்டு"என்னும் மாபெரும் படைப்பைச் சொல்ல ஆரம்பித்தேன் . சபை ஆழ்ந்து கேட்டது.கதை சொல்லி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. 


அக்காவும் பாட்டியும் வந்து சேர எல்லாம் முடிந்தது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றி ஒரு பின்னிரவில் நானும் சௌபாவும் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் .

"எப்படி BK அவ்வளவு உறுதியாக் கதை சொன்னீங்க?" என்று கேட்டான் சௌபா 

"என்ன தைரியத்துல நீ என்னக் கதை சொல்லச் சொன்ன ?" என்று கேட்டேன் .


சற்று மெளனமாக இருந்துவிட்டு சௌபா சொன்னான்... "அந்தத் துயரத்த எப்படிக் கடந்துபோறதுன்னு தெரியல ... எல்லோருக்கும் துயரம் வரும் போது கடந்துபோக நீங்க வழி சொல்லுவீங்க ... இப்ப உங்க துயரத்த, உங்க உதவி இல்லாமக் கடக்க முடியாதுன்னு தோணுச்சு.. அதான் சொல்லச் சொன்னேன். எவனா இருந்தாலும் இப்ப வேணாம்னு சொல்லி இருப்பான் . நம்ம பசங்க துன்பப்படக் கூடாதுன்னு கத சொன்னீங்க ..." என்றபடி குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினான் . நானும் அழத் துவங்கினேன் .சில நொடிகள் ஓசையின்றி அழுதிருந்தோம்.

சட்டென்று ," எல்லாத்துக்கும் மேல, கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை" என்றான்.

நான் குரலெடுத்து அழத் துவங்கினேன் . அவனும் அழுதுகொண்டே இருந்தான் . அதற்குப்பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமல் அலைபேசிகளை அணைத்துக் கொண்டோம்.

அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருந்தான் ..

அப்போது அங்கு என்ன நடந்தது ?அங்கிருந்து எங்கு போனோம்?
   
                       
அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.     

Sunday, May 10, 2020

அன்னையர் தினம்.

இன்று அன்னையர் தினமாம் . ஒரு தினம் மட்டுமா உன்னுடையது . இந்தப் பிறப்பே உன்னுடையது .

Image may contain: one or more people, people sleeping, baby and close-up

நீ சொன்னது தான் நடந்தது அம்மா


பொறுப்பற்றவனாக
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக,

சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,
போதையில் திரிபவனாக,

தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக,

பெண் பித்தனாக
சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக,

எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக,

நான் ஆவேன் என்று

மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து,

நீ சொன்னது தான் நடந்தது அம்மா.


- ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார்)

Saturday, May 9, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 12



அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு நான் எப்போது வீட்டுக்குப் போனேன் ?

சௌபா வீட்டிற்கு எப்படிப் போகவேண்டும் ?


மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவிற்கு அழகர்கோவிலில் இருந்து வரும் கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டோமா மதுரைக்கு வந்தோமா என்று வந்துவிட மாட்டார் . வழிநெடுக பலநூறு இடங்களில் இறங்கி நின்று மாலை மரியாதை வாங்கிகொண்டு தான் வருவார் . அப்படிக் கள்ளழகர் நின்று இருந்து போகும் இடங்களுக்கு மண்டகப்படி என்று பெயர். மைசூர் மண்டகப்படி, தளவாய் மண்டகப்படி என்று அதிலும் பலதரப்பட்ட மண்டகப்படிகள் உண்டு.அஃதே போல நாங்கள்,எந்தப் பாதையில் நடந்து வந்தாலும் , வழிநெடுக மண்டகப்படிகள் இருக்கும். மதுரையில் எனது வீட்டுக்குப் போகிற பாதையிலும் ஏராளம் மண்டகப்படிகள் . மண்டகப்படிகளுக்கு ஏற்ப மாலை மரியாதை மாறிக்கொண்டே இருக்கும்.உபசரிப்பும், உற்சாகமும் எல்லா மண்டகப்படிகளுக்கும் பொது நடைமுறை. அரசியல் சினிமா ஆன்மிகம் இலக்கியம் என்று வகைவகையான மண்டகப்படிகள்.இரவெல்லாம் தங்கி இருந்து உரையாடி, இளைப்பாறி அதிகாலைத் தேநீரோடு அனுப்பி வைக்கும் மண்டபப்படிகளும் உண்டு ...
   


சௌபா வீடு ஆற்றின் வடகரையில் இருந்தது.வைகை வகிடு எடுத்தது மாதிரி மதுரைக்குள் ஓடுவாள் .வைகை மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிற நதி. வைகை நேரே கடலில் சென்று கலப்பதில்லை .எனவே கன்னி ஆறு என்று வைகைக்குப் பெயருண்டு.மதுரை பெரிய பாலத்திற்குப் பிறகு விரகனூர் வரை ஆற்றின் இரு கரையிலும் நாவல் , அத்தி , மருதம், வேம்பு, கொடுக்கா என்று மரங்கள் அடர்ந்த மதுரையை நான் பார்த்திருக்கிறேன். கோடை இல்லாத காலங்களில், முழங்காலுக்குத் தண்ணீர் ஓடுவது நடைமுறையாகவே இருந்தது. நாங்கள்  பெரும்பாலும் நடந்து தான் போவோம். ஆற்றுக்குள் இறங்கி செல்லூரில்,அந்தப் பெரிய படித்துறையில் கரையேறினால், ஒரு அகலமான சாலை கிழக்கு மேற்காக ஆற்றை ஒட்டிக் கிடக்கும். அது செல்லூர் சாலை.அந்தச்சாலையைக் கடந்து ஒரு சிறிய இறக்கத்தில் நடக்க செல்லூர் அய்யனார் கோவில் திடல்.திடலைக் கடந்து வடக்கு நோக்கி நடந்து மேடேறினால் செல்லூர் பெரிய கண்மாயின் உயர்ந்த கிழக்குக் கரை. கரை மீதே ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்து , கண்மாய்க்கரையில் இருந்து இறங்கினால் மீனாட்சிபுரம் என்கிற மீனாம்பாள்புரம்.இறங்கி நூறுஅடி நடந்ததும் ரோடு பாம்பின் நாக்குப்போல இரண்டாகப் பிரியும். பிரிகிற இடத்தில் தான் சக்கரைச் செட்டியார் படிப்பகம்.நேரே வடக்குமுகமாக நடந்து இரண்டாவது வலதுகைப் பக்கம் திரும்ப மூன்றாவதுவீடு சௌபாவின் வீடு.      

சௌபா அப்போதே இந்திய மாணவர் சங்க உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.நான் ஜனதா கட்சி.பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரசில் இருந்து ஜனதாவுக்கு வந்தவன்.கட்சி மாறி வரவில்லை.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தான் ஜனதா கட்சியாக  ஆகியிருந்தது.அந்த அரசியல் வரலாறு பிறகு பேசிக்கொள்ளலாம்.


கையில் காசுபணம் புழக்கமாக இருந்தால் நகரப்பேருந்தில் ஏறி வருவோம் . ஆனால் எந்தப் பக்கம் வந்தாலும் ஒரு நடை நடந்து தான் ஆகணும். ஆனையூர் ,குலமங்கலம் பேருந்துகளில் ஏறினால் வெங்கிடாசலபதி திரையரங்க வாசலில் இறங்கி கிழக்காக நடந்தால் மீனாம்பாள்புரம். நரிமேட்டில் இறங்கி வந்தால் சின்ன சொக்கிகுளம் வழியாக, மேற்கு நோக்கி நடக்க மீனாம்பாள்புரம்.


செல்லூர் கண்மாய் , தாமரைக் கண்மாய் , பீபிகுளம் கண்மாய் என்று பெரும் நீர்நிலைகள் . வயக்காடுகள். மாலை ஆறுமணியானால் அமைதியும் குளிரும் அரவணைத்துக் கொள்ளுகிற பசுமை.


எப்போது போனாலும் அன்போடு உபசரிக்கற பண்பு சௌபாவின் தாயாருக்கு உண்டு.கையில் காசிருந்தால் வீட்டுக்குச் சாப்பிட வரமாட்டார்கள் என்பது அவர்கள் அறிந்த உண்மை. சாப்பிடக் கடைதேடிப் போவதில் எங்கள் அளவுக்குத் தீவிரமாக  உழைத்தவர்கள் யாரும் இல்லை . பசிக்கும் , கைப் பணத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த கடையைத் தேர்வு செய்து சாப்பிடப்போவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிட்ட கடைகள் , உணவு வகைகள் பற்றி எழுதினால் , அது தனிப் புத்தகம். அதிலும் மதுரையின் தனிச் சிறப்பு இரவுநேரக் கடைகள். எத்தனை வகைவகையான உணவுகள். உறங்காத நகரம் என்று அழைத்தது துளிக்கூட பொய்யில்லை. இப்போது போனால் அப்படியில்லை. இரவு பதினோரு மணிக்குள் போலீஸ்காரர்கள் மதுரையை லத்தியால் அடித்து உறங்கவைத்து விடுகிறார்கள். இதை மாநிலம் முழுவதும் போலீஸ்காரர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள் .அதிலும் ,ஒரு ஜீப்பில் ஒருவர் அமர்ந்துகொண்டு கடை அல்லது கடைக்காரரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருமையில் மிரட்டியபடி "ஊர்வலம்" வர, திருடர்கள் போலக் கடைக்காரர்கள் விளக்குகளை அணைத்துக் கடைகளை மூடி .. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அழகைக் காணச் சகிக்கவில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து, பின்னிரவில் இறங்கி வந்தால், போரூர் வரைக் குடிக்கத் தண்ணீர் தர ஒரு கடை கூட இல்லை. இரவு குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரியது என்று உலகின் இரண்டாவது பெரியகாவல்துறை கருதுகிறது. எனக்கு இது வியப்பளிக்கிறது . இதுபற்றி வர்த்தக சங்கங்களும் , வியாபாரிகளின் சங்கங்களும் , இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும்  மௌனம் சாதிப்பது இன்னும் கூடுதல் வியப்பு .இதனால் குற்றங்கள் குறைந்து போயிருப்பதாகவும் கருத இடமில்லை. சங்கிலி அறுக்கிற சகோதரர்கள் இரவு வரை காத்திருப்பதில்லை. இரவு நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்தால், குற்றங்கள் குறையும் என்பதுதானே இயற்கையான நடைமுறை . சிறு குறு தொழில் செய்து பிழைக்கிற சாலையோர வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு என்ன சட்டம் ஒழுங்கு? எல்லோரும் உறங்கப்போய் விட்டால் குற்றம் செய்கிறவர்களுக்குக் கொண்டாட்டம் தானே? இதில் யாருக்கும் யாருக்கும் கூட்டணி ? யாரை யார் காப்பாற்றுகிறார்கள்? கடைகள் திறந்திருக்க , வணிகம் நடக்க , பொதுமக்கள் புழங்க இருக்கும் போது தானே சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வேலை? எல்லாவற்றையும் மூடிவிட்டால் என்ன வேலை ? யாருக்கு வேலை? 


இப்படித்தான்... எதையோ சொல்லவந்து எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன்.நீங்களும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.பிறகு சொல்ல வந்ததை எப்போது சொல்லி முடிப்பது?


சௌபா வீடு சின்ன ஓட்டு வீடு . நாங்கள் எப்போதும் படுப்பது சக்கரைச் செட்டியார் படிப்பகம் தான் . இரவெல்லாம் பாட்டு , பேச்சு , படிப்பு என்றுதான் கழியும். சந்திக்கிற நாட்களில் இரவு மூன்று மணிக்கு படுக்கப் போனால் அது சீக்கிரம் படுத்த நாளாக இருக்கும் . 


காளியப்பன் என்றொரு தோழர் நன்கு பாடுவார். நானும் பாடுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சொல்லி விடத்தான் வேண்டும். சைக்கிள் கடை செல்வராஜ் வந்து சேர்ந்து கொள்ளுவார். எப்படியும் நாலைந்து பேர் கூடி விடுவார்கள். இரண்டு மூன்று மணிக்கொருதரம்,பத்து நிமிடம் சைக்கிளில் சுற்றினால் சூடான இட்லி, தோசை , பொங்கல்,ஆம்லெட், தேநீர் ,பருத்திப்பால்,சிகரெட் என்று எல்லாம் கிடைக்கும். இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது . திங்கிற சோற்றில் மண்ணள்ளிப்போட்டு விட்டு மக்களை ஆளுகிறார்களாம்...!


எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.


அந்தப் பகலாகிய இரவுகளில், ஒரு இரவு ஒருவரைச் சந்திக்க என்னை அழைத்துப் போனான். 


அவருடனான சந்திப்பு என் வாழ்க்கையில் மிக மிக மதிப்பும் சிறப்பும் மிக்கது. 


அவர்... ?



அப்புறம் சொல்லுகிறேன்... 


-பாரதி கிருஷ்ணகுமார்.
 


Thursday, May 7, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 11



இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .

அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?...


"ஒரு 630 ரூபாயக் கட்டிட்டு உம் ப்ரெண்ட்ஸக் கூட்டிட்டுப் போ ... சாயங்காலம் நாலு மணிக்குள்ள பணத்தக் கட்டணும்.. இல்லாட்டி உன்னையும்,எல்லாரையும் ரிமாண்ட் பண்ணிக் காலையில கோர்ட்ல ஆஜர் பண்ணிருவேன் " என்றார். 


நான் திகைத்துப் போனேன் . 


சார் .. எதுக்கு சார் இவ்ளோ கேக்குறீங்க என்றேன் .


"No Discussion ... No Arguements Pay the money before 4 pm "  


சொல்லிக்கொண்டே அவர் நடக்க ஆரம்பித்தார் . அவரது வன்மம் எனக்குப்  புரிந்துவிட்டது.நாங்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது அவருக்கு ஒரு குற்றமாகப் படவே இல்லை .அவரே  ஓரிடத்தில் சொன்னார். "ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்குல டிக்கெட் எடுக்காமப் போறானுங்க .. நீங்க போனா மட்டும்  என்ன கொறையுது ... மத்தவங்க எங்க கண்ணுல படாமப் போறாங்க ... நீங்க என்னோட கண்ணுல பட்டுடீங்க ... அதான் டிபரன்ஸ்" ... அவர் கேட்டுக்கொண்ட படி நான் எழுதிக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்பதுதான் அவரது ஒரே கோபம் .அந்தக் கோபமே இத்தனை பெரிய தொகையை அபராதமாகப் போட வைத்தது.


பத்தடி நடந்ததும் நின்று திரும்பிப் பார்த்தார். நான் அவருக்குப் பின்னால் மன்றாடியபடியே வருவேன் என்று எதிர்பார்த்துத் திரும்பினார். நான் நின்ற இடத்திலேயே நின்றது,அவருக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. 


அவருக்குப்பின்னே மன்றாடியபடியே செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. துளிக்கூட இல்லை. ஆனால் நான் அங்கேயே நின்றது,அவ்வளவு பணத்தை எப்படிக் கட்டமுடியும் என்கிற திகைப்பில் தான் ... சில நிமிடங்கள் எதுவும் தோன்றவில்லை.பிற்பகல் மணி ஒன்றை நெருங்கிக்கொண்டு இருந்தது. 


"பையங்க போய் சாப்பிட்டுட்டு வரட்டும்.மத்தத அப்புறம் பேசிக்கலாம்." என்று அங்கிருந்த ஒரு அதிகாரியிடத்தில் சொன்னேன். பையன்கள் சாப்பிடப் போனார்கள் . என்னோடு ஜெயவீரபாண்டியன் மட்டும் இருந்தார் . அவர் ஒருவர் தான் என் வயதுக்காரர் . மற்ற எல்லோரும் வயதில் சிறியவர்கள் . அவர்கள் எல்லோரும் படித்துக்கொண்டும் இருந்தார்கள். நாங்கள் எல்லோருமே எளிய குடும்பத்துப் பையன்கள் தான். இவ்வளவு பணம் கையிருப்பில் வைத்துக்கொள்ளுகிற அளவு வசதியான குடும்பம் எவருக்கும் இல்லை .


அன்றைய மதிப்பில் 630 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.ஒரு பவுன் ஆபரணத் தங்கமே 320-330 ரூபாய்க்குள் தான் இருக்கும். பையன்கள் சாப்பிடப் போன நேரத்தில் நானும் ஜெயவீரபாண்டியனும் ஆலோசித்தோம். முடிவெடுத்தோம். 


உண்மையில் நாங்கள் வருகிற வரையில் பையன்களைப் பிணையாகத்தான் நிறுத்தி வைத்திருந்தார்கள் . அதை நான் உணர்ந்தே இருந்தேன் . எப்படியாவது மாலை நான்கு மணிக்குள் பணம் கொண்டுவந்து கட்டுகிறேன், பையன்கள் போகட்டும் என்று கேட்டேன் . அவர்கள் சம்மதிக்கவில்லை. சம்மதிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்தும் கேட்டேன் . மறுபடியும் கேட்டேன். மறுத்தார்கள். எங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அவர்களிடம் இருந்தது . அதற்குமேலும் எதற்குப் பையன்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்பது என் எண்ணம் . இங்கு யாரும் ஓடிப்போகப் போவதில்லை , முதலிலேயே ஓடிப்போய் இருந்தால் , சங்கரநாராயணன் மட்டும் தான்அகப்பட்டு இருப்பார். எல்லோரும் வெளியில் போய் இருந்தால் , பிறகு அவரை மட்டும் காப்பாற்றுவது எளிதான வேலை தான். ஆனால் நாங்கள் வருகிறவரையில் அவருக்கு நடக்கும் அவமதிப்புகளுக்கு அஞ்சியே யாரும் ஓடவில்லை .பலமுறை கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


இனி பயனில்லை என்றானபோது, ஜெயவீரபாண்டியன் என்னைச் சமாதானம் செய்தார்.  "குமார் .. நேரமாகுது போய் ஆகுற வேலையப் பாப்போம் . நான் நேரா எங்க லேத் பட்டறைக்குப் போயிட்டு அங்க என்ன பணம் இருக்கோ அதை எடுத்துட்டு எங்க வரணும்னு சொல்லுங்க" என்று என்னைவிட நிதானமாக பொறுப்பாகக் கோபமே இல்லாமல் பேசினார் . 


அடுத்து என்ன செய்வது, எப்படிப் பணம் திரட்டுவது என்று என் மனமும் அறிவும் திட்டம் இட்டாலும், கோபம் அடங்கவேயில்லை . அந்த ஆள் என்னிடம் ஒரு இழிவான பேரம் பேசினான் என்பதை விடவும், என்னிடத்தில் அப்படிப் பேசலாம் என்று அவன் நினைக்கிற அளவுதான் நாம் தோற்றம் அளிக்கிறோமா என்பதே கோபத்திற்கான அடிப்படை. என் கோபம் என் மீதே சுழன்றடித்தது.கண்கள் மேலும் சிவந்து பிதுங்க ஆரம்பித்தது . 


ஜெயவீரபாண்டியன் பொறுப்போடு செயல்பட வேண்டியதை உணர்த்தினார் .ரெயில்வே நிலையத்தில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் ஐந்து கிலோமீட்டர் இருக்கும் . வெளியில் வந்து நண்பர் ஒருவர் உதவியுடன் இரண்டு வாடகை சைக்கிள்களில் பறந்தோம் . மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சற்று முன்னதாக புது ராமநாதபுரம் சாலையில் இருந்தது ஜெயவீரபாண்டியனின் லேத் பட்டறை . அவர் பட்டறைக்குப் போனார்.நான் தினமணி திரையரங்க வாசலில் நின்றுகொண்டேன் . ஒரு தேநீர் அருந்திவிட்டு புகை பிடித்தேன். சிந்திக்க வேண்டாமா ? 


அங்கிருந்து நூறு மீட்டரில் எனது வீடு. வீட்டுக்குப் போனேன். அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அவர் விழித்திருந்தாலே எதுவும் நடக்கப்போவதில்லை. இப்போதோ உறங்குகிறார் . அவர் கண் விழிக்க நாலரை அல்லது ஐந்து மணி ஆகிவிடலாம்.அவரை எழுப்பவே முடியாது. எழுப்பவும் கூடாது.அம்மாவின் நினைவு வந்து,அம்மா வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளை விரட்டினேன். அம்மா ஏதோ மீட்டிங்கில் இருந்தாள். ஐந்து மணியாகும் என்று வாசலிலேயே சொல்லிவிட்டார்கள். காதில் வாங்கிக்கொண்டு, கருணையோடு ஏதாவது செய்து கொடுப்பாள். ஆனால் காத்திருக்க இயலாதே ? ...


தினமணி திரையரங்க வாசலுக்கு வந்தேன் . ஜெயவீரபாண்டியன் முன்னூறு ரூபாயுடன் காத்திருந்தார் . நன்றி சொல்லக்கூடத் தோன்றவில்லை. இதுவரை அவனுக்கு நன்றி சொன்னதில்லை. இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது மனமார நன்றி சொல்லத் தோன்றுகிறது. நன்றி நண்பனே நன்றி .


மீதிப் பணத்திற்கு என்ன செய்வது ? குற்றங்கள் குற்றங்களை நோக்கித்தான் வழி நடத்தும். வேறு பாதைகளைக் குற்றங்கள் அறிவதில்லை. மனம் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கியது. 


அப்பா ஒரு வெற்றிகரமான மருந்தாளுனர். (PHARMACIST)எங்கள் பகுதியில் இருந்த சில டாக்டர்களை விடப் பிரபலமானவர். நிறையச் சம்பாதித்தவர். சில மிகப் பெரிய வசதியான குடும்பங்கள் அப்பாவின் வாடிக்கையாளர்கள் . பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள். அந்தக் குடும்பங்களுக்குக் குடும்ப மருத்துவராக அப்பாவே இருந்தார் . அதில் ஒரு குடும்பத்தின் நினைவு வந்தது .அவர்கள் அலங்கார் திரையரங்கத்திற்கு எதிர் வீதியில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது மருந்து கொண்டுபோய்க் கொடுக்கும் வேலையை அப்பா தந்திருக்கிறார். அவர்கள் நினைவு வந்தது. அப்பா அவசரமாக 350 ரூபாய் வாங்கிவரச் சொன்னார் என்று கேட்டேன் . ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் எடுத்துத் தந்தார்கள் .


நான்கு மணிக்குள் ரெயில்வே ஸ்டேஷன் வந்து பணம் கட்டி ரசீது வாங்கிக்கொண்டு , எல்லோரையும் அழைத்துக்கொண்டு ZAM ZAM தேநீர்க் கடையில் சமோசா டீ சாப்பிட்டு விட்டு, மீதமிருக்கிற பணத்தில் எல்லோருக்கும் பேருந்துக்குப் பணம் கொடுத்து விட்டு, நம்மால் யாருக்கும் எந்தத் துன்பமும் இல்லை என்கிற நிம்மதி வந்தது.கோபம் தணிந்தது .


மற்றவர்கள்  எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள் .


குற்ற உணர்ச்சியால் ,நான் வீட்டுக்குப் போகத் தயங்கி, அன்று இரவு மீனாம்பாள்புரத்தில் இருந்த சௌபாவின் வீட்டுக்குப் போனேன் .

(ஜெயவீரபாண்டியன் இன்றும் இப்போதும் அதே லேத் பட்டறையின் உரிமையாளர் . பட்டறை இப்போது அனுப்பானடியில் இருக்கிறது . இன்னும் சைக்கிள் தான் . 

கடுமையான உழைப்பாளி.இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது .

கனகசபாபதி எங்கோ கனராவங்கியில் வேலை பார்த்ததாக சௌபா ஓரிருமுறை சொல்லி இருக்கிறான் . நான் அவரோடு  நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லை. 


சங்கரநாராயணன் என்கிற சங்கர் பின்னாளில் சட்டம் படித்து நீதிபதியான பிறகும் தொடர்பில் இருந்தார். இப்போது இல்லை . காலமாகிவிட்டார் .


தங்கமாரி மதுரையில் எங்கோ இருக்கிறார் . சில ஆண்டுகளுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டது தான் .இப்போது தொடர்பில் இல்லை . 


சௌபா காலமானது, உங்களில் பலர் அறிந்தசெய்தி தான் . மரணம் அடைவதற்கு முன்வரை நானும் அவனும் தொடர்பில் இருந்தோம். 


எங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுக்குத் தானே காரணம் என்று ஒருமுறை நேரில் மன்னிப்புக் கோரியதற்குப் பிறகு, ரெயில்வே சங்கரும்  நானும் இன்றுவரை சந்திக்கவே இல்லை.


தோழர் பரமசிவம் ஒரு நாள் தற்செயலாக மதுரை ரெயில்நிலையத்துக்குப் போகிற பாதையில் சந்தித்தார். சங்கர் தனக்குத் தகவல் சொன்னதாகவும்,நான் பணம் கட்டாமல் அவர் பேரை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் உண்மையாக ஆதங்கப்பட்டார். காட்டிக் கொடுக்க நான் விரும்பவில்லை என்றதும் கண்கள் மினுக்க நன்றி தோழர் என்றார் . அதற்குப்பிறகு அவரைச் சந்திக்க வாய்க்கவில்லை.


பாலா என்கிற பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் படித்து ,இப்போது பணி ஓய்வு பெற்ற பின்னும் ஒரிசாவில் அரசின் சிறப்பு ஆலோசகர் . சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் அதி முக்கிய நூலின் ஆசிரியர் . இன்னும் நிறைய சிறந்த நூல்களின் ஆசிரியர். இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது.)


அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு, நான் எப்போது வீட்டுக்குப் போனேன்?



வீடு எப்படி எதிர் கொண்டது ?



அப்புறம் சொல்லுகிறேன் ...



- பாரதி கிருஷ்ணகுமார்.    


    

Wednesday, May 6, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 10






அவர் புன்னகைத்தவாறே எனக்கு அருகில் வந்தமர்ந்து இரகசியம் சொல்லுகிற குரலில், சொல்ல ஆரம்பித்தார் .

" நல்ல குடும்பத்துப் பசங்களாத் தெரியிறீங்க சமயத்துல சில ஜட்ஜுங்க அபராதமே போடாம நேரா ரெண்டு மாசம் ஜெயில்னு போட்டுருவானுங்க ... எதுவேணா நடக்கும் . உங்களால மொத்தக் குடும்பத்துக்கும் கெட்ட பேரு ... அதனால "... 


சொல்லுங்க சார் என்று மீண்டும் பணிவாகக் கேட்டேன் .என் முன்கோபத்தால் இருக்கிற நிலைமையைச் சிறிது  கூடச்  சீர்குலைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.


கடந்த காலங்களில் முன் கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன். நிறையப்  பெற்றும் இருக்கிறேன் .பல இடங்களில் இந்தக் கோபம் தான் சுயமரியாதை அடிபடாமல் காத்திருக்கிறது . எனவே எனது கோபத்தின் மீது எனக்கு ஒரு மதிப்பு இருந்தது . யாராவது கால ஓங்கி  மிதிச்சுட்டா, தள்ளுய்யா என்று சொல்லுவது கோபமா என்று கோபப்பட்டிருக்கிறேன் . கோபக்காரன் என்கிற அவப்பெயர் எனக்கு ஏற்கெனவே இருந்தது . அதைவிட மோசமாகக், கோபம் வந்ததும் முட்டைக் கண்கள் சிவந்து காட்டிக் கொடுத்துவிடும் . கோபத்தை மறைக்கும் திறமையும் ஆற்றலும் இல்லாதிருந்தது . அவர் பேசப்பேச எனக்குக் கோபம் தான் வந்தது . சொல்லுங்க சார் என்றேன் மீண்டும் பொய்யான பணிவுடன் ...


அடிப்படையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது குற்றம் . சட்டப்படி நாம் தண்டனைக்குரியவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இருக்கவில்லை .எத்தனை நட்பும் தோழமையும் இருந்தபோதும், பயணச்சீட்டு வேண்டுமென்று கேட்டுப் பெற்று இருக்க வேண்டும். எல்லாம் என் தவறு ; என் குற்றம் . 


தண்டிக்கப்படுவது குறித்தோ , சிறைச்சாலைக்குப் போவது பற்றியோ எனக்கு எந்த மனத்தடையும் இல்லை . என் கவலையெல்லாம் என்னை நம்பிவந்த மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் . அதற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. எனவே பொறுமை பொறுமை என்று உள்ளுக்குள் நானே பெருங்குரலில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
அவர் என் மனதைப் படித்துக்கொண்டே இருந்தார் .



நான் அவரைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். குற்றங்களைத் தடுப்பதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தனக்கு மட்டுமேயான கடமை என்கிற அதீத உணர்வு அவருக்கு உண்டாகி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதன் விபரீத நீட்சியாக எல்லோரையும் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் , நடத்துவதும் அவரது இயல்பாகவே மாறி இருந்தது. அது அவரது முகத்தின் தசைகளைப் பாறாங்கற்களாக மாற்றி இருந்தது. அவரது கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே சுழன்று கொண்டிருந்தன. தான் மிகுந்த நேர்மையானவன் என்பதை எல்லோரும் உணரவேண்டும், தனக்கு முன்பே அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்னும் பேரவா அவருக்குள் தளும்பிக்கொண்டே இருந்ததை என்னால் உணர முடிந்தது. நன்றாக மழுங்கச் சிரைத்து இருந்தார். அவரது நாசிக்கும் மேல் உதட்டுக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு சதசதப்பான அட்டைப் பூச்சியின் அருவருப்போடு மின்னிக்கொண்டிருந்தது . அவரது இரண்டு காது மடல்களிலும் கரேலென்று ரோமங்கள் அடர்ந்திருந்தன.உண்மையில் அவருக்குப் பெரிய மீசை வைக்கும் விருப்பம் இருந்திருக்க வேண்டும் . ஆனால் அவரது சாதியோ அல்லது குடும்பமோ அதற்குத் தடையாக இருந்திருக்க வேண்டும். அந்தத் தடையை மீறித் தனக்கொரு மீசை வைத்துக் கொள்ளும் துணிவு இல்லாதவராகவே அவர் இருந்தார் . எனவே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அவர் தனது இடது கையால் அடர்ந்த தனது இடது புருவத்தின் நுனியைத் திருகிகொண்டே இருந்தார். என் 22 வயதிற்கு , இப்படியான ஒரு மனிதனை , ஒரு முகத்தை நான் அன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்த்தேன். அதற்குப் பிறகான வாழ்வில் அது போல நிறைய முகங்களை நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். இப்படியான ஆட்கள் தங்கள் விசுவாசத்தைத்,தங்களுக்கு மேலிருக்கும் ஆட்களிடம் நிரூபிக்க எந்தக் குற்றத்தையும் , குற்ற உணர்ச்சி இல்லாமல் , அதையும் கடமை போலக் கருதிச் செயல்படுகிறவர்கள். எனக்கு மட்டும் ஓவியம் வரையும் திறன் இருந்தால், இப்போது கூட , வஞ்சகத்தை நேர்மையாகக் காட்டமுயன்ற அந்த முகத்தை வரைந்து விட முடியும். அது ஒரு மறந்து போகிற முகமல்ல. 

அவர்  பேச ஆரம்பித்தார் . கண்ணோடு கண் பார்க்காமல் , நடுவாந்திரமாக எங்கோ பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் . " இப்பவே உன்னையும் உன்னோட ப்ரெண்ட்ஸயும் அனுப்பிடறேன். எந்தக் கேசும் போடல. உங்களுக்கு இப்பவே சாப்பாடும் வாங்கித்தரச் சொல்லுறேன் ... என்ன சம்மதமா?" 
நான் அதற்குப்பிறகு அவர் என்ன சொல்லுவார் என்பதை ஊகிக்க முடியாமல் தவித்தேன். 
இந்த டிக்கெட் வாங்காம போற புத்தி உங்கள்ள யாருக்குமே இருக்காதுன்னு எனக்குத் தெரியும். என் கண்ணுலபடாம பகவான் உங்களை அனுப்பி இருக்கணும் . அவர் என்னையும் சோதிக்கிறார் .. உங்களையும் சோதிக்கிறார் ... எதுக்கு வள வள ன்னு பேசிகிட்டே இருக்கணும். நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சா போதும். மதுரைல இருந்து செங்கோட்டைக்கும் , செங்கோட்டைல இருந்து மதுரைக்கும் டிக்கெட் இல்லாம பரமசிவம் தான் கூட்டிட்டுப் போனார்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு , நீங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க .. அந்த விருதுநகர் சங்கரும் எங்க கூட இருந்தார்னு சேத்து எழுதுவோம் . எல்லாமே உண்மை தான .. பொய் சொல்லலியே... என்ன நடந்ததோ அத எழுதிக்குடுங்க ... நீங்களே எழுதுங்க .. all are poets all are speakers and all are brilliant boys...  என்ன நான் சொல்லுறது" என்று தன் சகாக்களைப் பார்த்தார் . கோழியைத் தன்னோடு நட்பாக விளையாடக் கூப்பிடும் நரியின் தந்திரம்.



அதில் ஒருவர், " yes ... thats the truth ... எப்பவுமே உண்மையப் பேசீட்டா .. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று வழிமொழிந்தார். 

நான் தயங்காமல், தடுமாற்றமில்லாமல் சொன்னேன். " சார் .. நாங்க டிக்கெட் எடுக்காததுக்கும் அவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது . நாங்க அவசரத்துல எடுக்கல ... நீங்க கேக்குற மாதிரி எல்லாம் எந்தக் காலத்துலயும் எழுத முடியாது. அவங்க எங்களுக்கு டிக்கெட்டுக்கு சாப்பாட்டுக்கு ன்னு எல்லாத்துக்கும் பணம் குடுத்தாங்க ... அவங்களை இதுல சம்பந்தப் படுத்தாதீங்க நீங்க சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க" என்றேன் . என்னை மீறி என் கோபம் என் கண்களின் வழியே கசிந்தது. 

மறு நொடியே " அப்ப அபராதம் கட்டுங்க இல்ல ஜெயிலுக்குப் போங்க .. எனக்கு என்ன? ஏதோ படிச்ச பசங்க.. உதவி செய்யலாமேன்னு சொன்னேன் ... நீ அவ்வளவு ரோஷக்காரன்னா காசைக் கட்டிட்டுப் போ "

காசைக் கட்டுனதும் விட்டுருவீங்களா?

அப்புறம் ... உங்களை வச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணப் போறோம் ?

எவ்வளவு கட்டணும்?

இந்தா ... இப்ப சொல்லுறேன் ... பில் புக் போல இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எண்களாக எழுதினார் .அவருடன் இருந்த ஒருவரிடம் எனக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசினார் . இரண்டு பேரும் வாக்குவாதம் செய்து கொண்டார்கள் . மீண்டும் ஏதோ எண்களாக எழுதினார். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன் . எனக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் . இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .
அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?

அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார்    

Tuesday, May 5, 2020

ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு நாள் - TNGEA - AIRRBEA - PGBEA



Srivaikuntam Vaikuntanatha Vishnu Temple


ஐந்து நாட்களுக்கு முன், கிராமவங்கி ஊழியர்களுக்கு வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிய நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். 1990 ஏப்ரல் 30 அன்று ஹைதராபாத்தில் , அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் நான் இருந்தது பற்றியும் எழுதி இருந்தேன். அப்போது நான்,எங்கள் அகிலஇந்திய சங்கத்தில் துணைப்பொதுச்செயலாளர் ஆகப் பொறுப்பு வகித்தேன். அது ஒருபோதும் பதவி அல்ல;பொறுப்பு. 

1981 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி பாண்டியன் கிராமவங்கியில் பணிக்குச் சேர்ந்த நாளில் இருந்தே,அன்றிலிருந்தே நான் எனது தொழிற்சங்கப் பணிகளைத் துவக்கி இருந்தேன். கிராமவங்கி ஊழியர்களுக்கு அந்தக் கிராமவங்கி இயங்கும் மாநிலத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு என்ன ஊதியமோ அதுவே அவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது.

எனவே மாநில அரசு ஊழியர்களின் போராட்டங்களை நான் கவனமாக அவதானித்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் சில மாநிலங்களில், மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியங்களைப் பெறத்துவங்கி இருந்தனர். நல்ல கணிசமான ஊதிய உயர்வாக அது அமைந்தது. அந்த மாநிலத்தில் இருந்த கிராமவங்கி ஊழியர்களும் ஊதிய உயர்வு பெற்றனர் .

தமிழ்நாட்டில் அத்தகைய போராட்டங்களை முன்னெடுக்கும் சூழலே இல்லாமல் இருந்தது. அப்போதிருந்த அரசு அலுவலர் ஒன்றியம் போர்க்குணமின்றி கிடந்தது.ஏறக்குறைய,நான் உறுப்பினராக இருந்த பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருந்தது. 

1984ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி பழைய அரசு அலுவலர் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் TNGEA பிறந்தது.(இன்று அதன் அமைப்பு தினம் என்பது ஒரு தற்செயலான ஆனால் மிகப் பொருத்தமான நிகழ்வு.) நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் . அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற எங்கள் சங்கத் தேர்தலில் PGBEA நான் அதிக வாக்குகள் பெற்று பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனேன். 

அப்போது திரு எம் ஜி இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வராக இருந்தார் . அரசு ஊழியர்கள் சங்கமும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் . எனது வங்கித் தொழிற்சங்கப் பணிகளுக்குத் தந்த அதே முக்கியத்துவத்தை அரசுஊழியர் ஆசிரியர் போராட்டங்களுக்கும் தந்தேன் . அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பு மாநிலமெங்கும் நடத்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடுகளுக்காக மாநிலமெங்கும் பயணம் செய்தேன். மாவட்டத் தலைநகர்கள், தாலுகாத் தலைநகர்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் என்று என்னை அழைத்துக்கொண்டே இருந்தார்கள் . விடுமுறை எதுவும் இல்லாமல் பெரும் ஊதிய இழப்புடன் பயணித்துக்கொண்டே இருந்தேன்.

நான் பணியாற்றிய சாத்தூரில் அந்தப் போராட்டம் வெல்வதற்கு என்னால் ஆன அனைத்துப் பணிகளையும் முன்னெடுத்துச் செய்தேன் . அதெல்லாம் தனியே எழுதவேண்டிய, வீரம் செறிந்த போராட்ட நாட்கள்.இங்கு இடம் காணாது... 

எங்கள் சங்கத்தில், நான் எங்கள் சங்கவேலைகளைப் பார்க்காமல் , மற்ற சங்கங்களின் வேலைகளைப் பார்ப்பதாக சில நிர்வாகிகள் அலுத்துக்கொண்டார்கள். அவர்கள் எப்போதும் சங்க வேலைகளைப் பார்க்கிற பழக்கம் எதுவும் இல்லாதவர்கள். "குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க முயலும் ஆனால் தோற்றுக்கொண்டே இருக்கும் புலவர்கள் எல்லாச் சபைகளிலும் இருப்பார்கள் தானே."

அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய வேலைநிறுத்தம் மறியல் போராட்டமாகத் தீவிரம் அடைந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பட்டார்கள். ஒரு தீபாவளி அன்றைக்குக் கூடப் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள். அலுவலகம் முடிந்தபிறகு ஒரு மணிநேரம் சங்கப்பணிகளுக்கு செலவிட மறுக்கும் உத்தம புருசர்கள் , உத்தமப் பெண்மணிகள் எல்லோரும் இந்த வரலாற்றை எல்லாம் படித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுவது நல்லது. இப்போது உண்ணுகிற சோற்றில் இருக்கிற உப்பு பலரது கண்ணீரும் வியர்வையும் தந்தது என்று தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. எப்போதுமே என்ன சாப்பிடுகிறோம் என்று தெரிந்து சாப்பிடுவது நல்லது தானே ...

போராட்டம் வெற்றி பெற்று 01.01.1986 முதல் மாநில அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றார்கள்.அதுவும் அரசாணை வந்து அமலுக்கு வந்தபோது 1988 ஆகி விட்டிருந்தது . மாநில அரசு பெற்ற ஊதிய உயர்வை கிராமவங்கி ஊழியர்களும் பெற்றார்கள்.நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி அங்கே வாழைக்கும் பொசிந்தது போல ....

புதிய ஊதியத்தை அமலாக்குவதில் எந்தத் தாமதமும் பாண்டியன் கிராமவங்கி நிர்வாகம் செய்து விடாமல் பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கம் பார்த்துக்கொண்டது. 

இந்தப் போராட்ட காலத்து உறவும் தோழமையும் இன்றும் இப்போதும் நீடித்து நிலைக்கிறது.

1990 ஏப்ரல் 30 கிராமவங்கி ஊழியர்களுக்கான டிரிப்யூனல் தீர்ப்பு வந்தது பற்றிய எனது பதிவிற்குப் பலர் எதிர்வினை ஆற்றினார்கள் . நான் எதிர்பார்த்ததுபோலவே சிலர் கள்ளமௌனம் சாதித்து அவர்களைப் பற்றிய என் மதிப்பீடு மாறாமல் காத்துக்கொண்டார்கள். சிலர் தோழமையுடன் தங்கள் உணர்வுகளைப் பதிவிட்டார்கள்.தனது பதிவின் மூலம் ,அதில் ஒரு பக்கத்தை எடுத்துப் புரட்டிப் போட்டார் தோழர் ரஹ்மத்துல்லாஹ் என்ற கடையநல்லூர் பென்சி. ஆம். வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்ற பின்னும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்துடனான தோழமை தொடர்ந்தது. 

1991 ஆம் ஆண்டு இருநூறுக்கும் மேற்பட்ட தங்களது வட்டக்கிளைகளில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவுறுத்தியது. அதில் பலவற்றில் நான் பங்கு பெற்றேன்`. வாழ்த்துரை சிறப்புரை கருத்துரை என்று ஏதாவது ஒரு பெயரில் பேச அழைக்கப்பட்டேன். அதில் ஒன்று TNGEA வின் ஸ்ரீவைகுண்டம் வட்டக்கிளை மாநாடு. முதல் மாநாடு . மாநாடு , பேரணி , பொதுக்கூட்டம் என விரிவாக நடத்தினார்கள். முறையாக அழைப்பு வந்தது. நானும் ஒப்புக்கொண்டேன். 

எங்கள் சங்கத்தின் தென்காசி வட்டாரத்தில் பணிபுரிந்த தோழர் ஜி எஸ் கண்ணன் தென்திருப்பேரைக்காரர். அவர் தகவல் தெரிந்து என்னோடு ஸ்ரீவைகுண்டம் வருவதாகச் சொன்னார் . முதல்நாள் மாலையே திருநெல்வேலியில் சந்தித்தோம். இரவு தங்கிவிட்டு அதிகாலையில் ஸ்ரீவைகுண்டம் புறப்பட்டோம் . மாலையில் போனால் போதாதா என்று கேட்டேன். ஊரைப் பார்க்க வேண்டாமா என்றார் கண்ணன் . 

ஊருக்குள் போவதற்கு முன்னாலேயே ஒரு நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டோம் . இறங்கியதும் ஒரு கடையில் தேநீர் குடித்துவிட்டுப் புகை பிடித்தோம். "அப்பிடியே மெதுவா லெப்ட்ல மேல மரத்துல பாருங்க BK " என்றார் கண்ணன்.பார்த்தேன் . சிறிய கரிய சாக்குப்பைகளைக் காயப்போட்டது போல நூற்றுக்கணக்கான வவ்வால்கள் ... ஒன்றிரண்டு அசைந்துகொண்டும் , பல அசைவற்றும் ... ஒரு மரமல்ல .. வரிசையாக மரங்கள்.மலைத்துப்போகிற எண்ணிக்கையில் தொங்கிக்கொண்டு இருந்தன . நான் வியந்து மகிழ்ந்தேன் . "இவைகள் மாலையில் புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்று , அங்குள்ள பழத் தோட்டங்களில் உணவருந்திவிட்டு அதிகாலைக்குள் திரும்பிவிடுவதாகவும்" சொன்னார் .இவைகளின் இருப்பைக் காப்பதற்காக இங்கு யாரும் பட்டாசுகளோ, வாண வேடிக்கைகளோ செய்வதில்லை என்றும் அவைகளை வேட்டையாட யாரையும் அனுமதிப்பதில்லை என்றும் சொன்னார் . என் மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டுக் கண்ணன் சொன்னார் . " நீங்க சந்தோசப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும்... இன்னும் இருக்கு காட்டுறேன்" என்று நடக்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரம், கொஞ்ச தூரம் நடந்தோம். ஒரு அகலமான வீதியில் கொண்டுவந்து நிறுத்தினார். காலை மணி எட்டரை இருக்கும் . அந்தத் தெருவின் பெயர் எனக்கு நினைவில்லை . அப்போதும் கேட்டுவைத்துக் கொள்ளவில்லை . ஒரு டீக்கடை வாசலில் நின்று மீண்டுமொரு தேநீர் , மீண்டுமொரு சிகரெட் ...இங்க என்ன கண்ணா என்றேன். பொறுங்க வந்த உடனே பாக்க முடியுமா எல்லாத்தையும் என்றார் ... வெய்ட் பண்ணிப் பாருங்க என்றார் . நான் காத்திருந்தேன். பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு , அந்தத் தெருவின் கடைசிப்பக்கம் கைகாட்டி அங்க பாருங்க என்றார் கண்ணன். மடித்துக்கட்டிய வேஷ்டியும், கை வைத்த  பனியனுமாக ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். அதிலென்ன இருக்கிறது? என்பது போலப் பார்த்தேன்.பாருங்க என்றார். வந்தவர் மணியடித்துக்கொண்டே வர எங்கிருந்தோ பல பத்துக் காகங்கள் அவர் தலைக்குமேல் கரைந்தபடி வட்டமிட்டன . ஒன்றிரண்டு அவர் சைக்கிள் கேரியரில் , ஹாண்டில்பாரில் , அவர் தோளில் வந்து அமர்வதும் , பறப்பதும் , கரைவதும் காணக் கண் கோடி வேண்டும். மற்றப் பறவைகள் போலல்ல காகங்கள். அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை . "காக்கை நோக்கறியும்" என்றொரு பழமொழியே உண்டு. அவர் எந்தப் பெருமித உணர்ச்சியும் இல்லாமல் "சிவனே" என்று சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தார் . நாங்கள் தேநீர் அருந்திய கடைக்கு எதிரே தான் சைக்கிளைக் கொண்டுவந்து நிறுத்தினார். செல்லமாக அவைகளைக் கடிந்துகொண்டே , அவைகளோடு பேசிக்கொண்டே கடையைத் திறந்தார் . சேவுக்கடை . கடைக்குள் சென்று ஒரு பெரிய தட்டு நிறைய எல்லாம் கலந்து கொண்டுவந்து போட்டார். கடையில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் அதை இறைத்தார். அவைகள் உண்ண ஆரம்பித்தன. அவர் கடைக்குள் போய் சாமி கும்பிட்டுவிட்டு தனது வேலைகளில் மூழ்கிப் போனார். நான் வியப்பும் மகிழ்ச்சியும் குதூகலமும் கொண்டேன்.என்னைப் பார்த்துக் கண்ணன் மகிழ்ந்தார் . என் வாழ்நாளில் அதுபோலக் கூட்டமாகக் காகங்கள் ஒரு மனிதனோடு நெருங்கி உறவாடியதை வேறு எப்போதும் எங்கும் பார்க்கக் கூடவில்லை .

காலை உணவுக்குப் பிறகு பெருமாள் கோவிலுக்குப் போனோம் . மிக மிக 
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூய்மையான திருக்கோவில். திருத்துழாய் மணம் கமழும் ஆலயம் . மூலவர் வைகுந்தநாதர் என்றழைக்கப்படும் கள்ளபிரான் . பாண்டியன் கிராமவங்கியின் முதல் சேர்மன் திரு டி ஆர்  கள்ளபிரான் . நான் கண்ணனைப் பார்த்தேன் . அவர்கள் குடும்பம் இந்தக் கோவிலுக்கு ரொம்ப நெருக்கமான குடும்பம் என்கிற தகவலைச் சொன்னார். 

அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றென்றும் , நவ திருப்பதிகளில் ஒன்று என்றும் சொன்னார். இடதுசாரி முற்போக்கு எண்ணமும் தீவிர தொழிற்சங்க ஈடுபாடும் கொண்ட கண்ணன் அந்தக் கோவில் குறித்த எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தார். அது ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருத்தலம் என்பதையும் , நம்மாழ்வாரின் நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களையும் பாடிக் காட்டினார். வியந்து போனேன். அந்தக் கோவிலில் எல்லோருக்கும் அவரைத் தெரிந்து இருந்தது. எப்படி கண்ணா என்று கேட்டபோது தனது ஊரான தென்திருப்பேரை நவ திருப்பதிகளில் ஒன்று எனவும் , எனவே எல்லோரையும் எல்லோரும் அறிந்திருப்பது வழமையான ஒன்றே என்றார். 

பிறகு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துப் போனார். அவரது நண்பரின் இல்லத்தில் ஓய்வு எடுத்து , மாலையில் நதி நீராடிவிட்டு பொதுக்கூட்டம் நடக்கிற இடத்துக்கு வந்தோம். பேரெழுச்சியுடன் ஊர்வலம் வந்து சேர்ந்தது . தோழர்கள் என்னை உற்சாகமாக வரவேற்றார்கள். முதலில் ஊர்வலம் பொதுக்கூட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் , பல விதத்தில் போராடி , பல காரணங்களைச் சொல்லி அனுமதி பெற்றதாகவும் சொன்னார்கள் . அதில் ஒரு காரணம் , ஒரு அகில இந்தியத் தலைவர் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் . அழைப்பிதழிலும் அகில இந்திய சம்மேளனம் என்று போட்டிருப்பதைக் காட்டினார்கள் . எல்லோரும் சிரித்துக்கொண்டோம். அகில இந்தியப் பொறுப்பில் இருந்தேன் என்றாலும், மற்றவர்களுக்கு இந்தியாவில் வேறு எங்கோ இருந்து வந்தவனைப் போல ஒரு தோற்றம் உருவாகி இருந்திருக்கலாம். 

எல்லாம் குறித்த நேரத்தில் நடத்திக்கொண்டு இருந்தார்கள் தோழர்கள். ஊர்வலம் வந்து சேர்ந்ததும் பொதுக்கூட்டம் துவங்கியது. முன்னதாக இருவர் மட்டுமே பேசினார்கள் . அளவாகப் பேசினார்கள் . தோழர் BK பேசவேண்டும் என்பதற்காக நாங்கள் அளவாகப் பேசுகிறோம் என்றார்கள் . சொன்னபடியே செய்தார்கள் . பல இடங்களில் உள்ளூர்க்காரர்கள் ஒன்பது பேர் பேசி , இரவு மணி பத்தாகி , வந்த கூட்டத்தில் பெரும்பகுதி போனபிறகு தான் பேச அழைப்பார்கள் . அப்படி எதுவும் நடக்காமல் மாலை ஆறு ஆறேகால் மணிக்கெல்லாம் பேச அழைத்துவிட்டார்கள் . நானும் மிகுந்த உற்சாகத்துடன் பேச ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் ஆகி, மொத்தக் கூட்டமும் என்னோடு கைகோர்த்துக்கொண்டு இருக்கும்போது .... நான் பேசும் ஒலிபெருக்கி ஓசையையும் கடந்து , பள்ளிவாசலில் இருந்து மாலைநேர மஹரிப் தொழுகைக்கான பாங்கு ஒலிக்கும் ஓசை கேட்டது . ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் பேச்சை நிறுத்தினேன் . "அழைப்பு முடியட்டும்" என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு என் இருக்கைக்குத் திரும்பி அமைதியாக அமர்ந்துகொண்டேன். கூட்டத்தில் அமர்ந்திருந்த தோழர்கள் பிரார்த்தனை செய்வதுபோல அமைதி காத்து அந்த நிமிடங்களைப் பேரழகு உடையதாக உயர்த்தினார்கள் . 

தொழுகைக்கான அழைப்பு முடிந்தது . நான் விட்டஇடத்தில் இருந்து பேச்சைத் துவக்கவில்லை . தோழர்களின் அழகான அமைதிகாத்த பண்பில் இருந்து பேச்சைத் துவங்கினேன் . பாப்ரி மசூதியை இடித்துவிட்டு இராமர் கோவில் கட்ட, மத வெறியர்கள் செங்கல் சேகரித்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை . இப்போது மிகப்பெரிய இடதுசாரி என்று தன்னைக்காட்டிக் கொண்டிருக்கும் ஒருவரே செங்கல் சேகரித்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை . மதச்சார்பின்மைக்கும் வளர்ச்சிக்கும் உள்ள உறவை , ஒற்றுமையின் விலைமதிப்பற்ற வலிமையை விரிவாக விளக்கிப் பேசினேன் .

அழைப்பிதழில் குறிப்பிட்டு இருந்தவைகளையும் இணைத்துப் பேசினேன் . பி வி நரசிம்ம ராவ் பிரதமராக ,மன்மோகன் சிங் நிதியமைச்சராக வந்த பட்ஜெட் அது . தாராளமயம் தன் வலது காலை எடுத்துவைத்த முதல் பட்ஜெட். அதைப்பற்றி எப்படிப் பேசாமல் இருப்பது ?

கூட்டம் முடிந்தது. தோழர் ரஹமதுல்லாஹ் பயணச் செலவுக்கு என்று இருநூறு ரூபாய் கொடுத்தார் . எதுக்கு இவ்வளவு என்று கேட்டபோது, புத்தகம் வாங்க வச்சுக்கங்க என்றார் . மறக்க முடியாத சொற்கள் . மறக்க முடியாத குரல். தோழர்கள் பாராட்டிக்கொண்டு இருக்கும்போதே கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் வந்தார் . மிகமிகத் தூய்மையாக , நல்ல சுகந்தமான அத்தர் மணத்தோடு வந்தார் . "நான் தொழுகைக்குப் போகும்போது பாத்தேன்... பாங்கு சத்தம் கேட்டதும் பேசுறத நிறுத்தீட்டுப் போய் உக்காந்துட்டீக உங்களுக்கு நன்றி சொல்லனும்னு இம்புட்டு நேரம் நின்னேன் ... நல்லாப் பேசுனீங்க ... எல்லா ஊருக்கும்போய் பேசுங்க .. அல்லாஹ் உங்களுக்குத் துணையா கூடவே இருப்பாரு" என்று இரண்டு கைகளையும் நீட்டினார் . நானோ வியர்த்து,நனைந்து, களைத்துப் போயிருந்தேன் .எனவே தயங்கினேன். அவர் பொருட்படுத்தவில்லை . மனமார இரண்டு கைகளாலும் என்னை முழுவதுமாக மார்போடு அரவணைத்தார் .அதே கணம் அவரது கைகள் என் முதுகில் செல்லமாகத் தட்டிக்கொண்டே இருந்தன . 


எனக்கு முன்னே , நான் பார்க்க பார்க்கக் கேட்கும் கைதட்டல்களை விட , அந்த முதுகில் தட்டிய கைகள் தான் , அந்தப் பேரோசை தான் என்னை இன்னும் பேசவைத்துக் கொண்டே இருக்கிறது ...






மேலும் நான்கு சிறு குறிப்புகள் :       

1. கூட்டம் முடிந்ததும் ஒரு நல்லகடைக்குச் சாப்பிட அழைத்துப் போனார்கள். கடையின் பெயர் நினைவில்லை . மண் பானைச் சமையல் என்ற போர்டு இருந்தது . சாப்பாடு அற்புதம்.

2 . கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரி , கூட்டம் முடிந்த பிறகு நீங்க எந்த ஊரு என்று கேட்டார் .. சாத்தூர் என்றேன் ... இல்ல நீங்க இப்ப எங்க இருந்து வந்தீங்கன்னு கேக்கேன் . என்றார் . சாத்தூர் என்றேன். சாத்தூர் ஆ .. சாத்தூர் ஆ என்று முனகிக்கொண்டே போனார் .

3. தோழர் ஜி எஸ் கண்ணன் இப்போது அமரராகி விட்டார் . அவருக்கு இந்த நினைவுக் குறிப்பை அஞ்சலியாகச் சமர்ப்பிக்கிறேன் .

4.இறுதியாக , முக்கியமாக ... 

ஒரு சின்ன நோட்டீசைப் பத்திரமாக வைத்திருந்து ( 13 அக்டோபர் 1991) அதை ஒரு பதிவுக்குப் பின்னூட்டமாகப் போட்டு எல்லாவற்றையும் நினைவூட்டிய ஹாஜியார் ரஹமதுல்லாவுக்கு , ஒரு அன்பும் தோழமையும் மிக்க ஸ்பெஷல் ஸலாம். அல்ஹம்துலில்லாஹ்.  


-பாரதி கிருஷ்ணகுமார்.

Monday, May 4, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 09

Courtesy: THE HINDU

ஒரே கணத்தில், அவர் கை குலுக்கவில்லை என்பதும் , கைகளைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் ஒருசேரப் புத்தியில் மின்சாரமாகப் பாய்ந்தது .

அவர்கள் இப்போது இருவர் இல்லை . நால்வர் . ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடத்தில் விசாரித்தார்கள் . அவர்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது . செங்கோட்டையில் ஒரு பட்டிமண்டபம் . இந்தச் 'சமூகவிரோதிகள்' டிக்கெட் எடுக்காமல் அங்கு போய்ப் பேசிவிட்டு, மறுபடியும் டிக்கெட் எடுக்காமல் திரும்பி இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து கொண்டார்கள் .

மதுரை வரைக்கும் வருமாறு சங்கரைக் கேட்டிருக்க வேண்டும் . அல்லது விருதுநகரில் இறங்கிப் பேருந்தில் வந்திருக்க வேண்டும் . குறைந்த பட்சம் விருதுநகரில் இருந்து மதுரை வரைக்குமாவது டிக்கெட் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்க வேண்டும் . இதில் எதையும் செய்யவில்லை . ரயில்வே ஊழியர்கள் இரயிலில் போவது மாதிரி நாமும் போகமுடியும் என்று  கருதியதும் மயங்கியதும் நான் செய்த பிழைகள் . எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னதால் நான் இதைப்பற்றி யோசிக்கத் தவறி இருந்தேன். அதுதான் என் வாழ்வில் நான் செய்த முதலும் கடைசியுமான தவறு . இப்போது பையன்களுக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடக்கூடாது .பையன்களைக் குறை சொல்லுதற்கு எதுவும் இல்லை . அவர்கள் என்னை நம்பி என் அழைப்பை ஏற்று வந்தவர்கள் . நான் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் . விஷயம் வெளியில் தெரிந்தால் பெரும் மானக்கேடாகும் என்பதும், உள்ளுக்குள் பெரும் உறுத்தலாகிப் பெருகிக்கொண்டே போனது . பதட்டமின்றி இதை அணுகவேண்டும் என்றும் , பையன்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இதை முடிக்க வேண்டும் என்றும் தான் யோசித்துக்கொண்டே இருந்தேன் . அப்படி ஏதும் பாதிப்பு வந்தால் அதை நாம் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் செய்துகொண்டேன் .

அவர்கள் வழக்கமான டிக்கெட் பரிசோதகர்கள் இல்லையென்றும் , அவர்கள் எப்போதாவது வருகிற ஸ்பெஷல் ஸ்குவார்ட் என்றும் அவர்களே அறிமுகப்படுத்திக் கொண்டார்கள் .

ஏன் டிக்கெட் எடுக்கவில்லை என்கிற கேள்விக்கு ," நாங்கள் சற்று தாமதமாக வந்தோம் . இரயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு விட்டதால் , அந்த அவசரத்தில் நாங்கள் டிக்கெட் எடுக்கவில்லை" என்றும் சொன்னோம் . இதைத் தான் எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தோம் .

அப்படியானால் போகும் போது எத்தனை டிக்கெட் எடுத்தீர்கள் ? மொத்தக் கட்டணம் எவ்வளவு ? ஒரு ஆளுக்குக் கட்டணம் எவ்வளவு ? என்று கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியவில்லை ... ஓ போகும்போதும் ட்ரைன் கிளம்பி , அவசரத்துல டிக்கெட் எடுக்க முடியாமப் போச்சா ? என்றார் அவர்களில் ஒருவர் .

" நீங்க போகும் போதும் டிக்கெட் எடுக்கல .. வரும் போதும் டிக்கெட் எடுக்கல ... சரிதான " என்றார் இன்னொருவர் . 

"எக்கச்சக்கமா அபராதம் கட்டணும் .. இல்ல ஜெயிலுக்குப் போகணும் ரெண்டுல ஒன்னு தான் ... இன்னைக்கு ரிமாண்ட் பண்ணிட்டு நாளைக்கு மார்னிங் கோர்ட்ல ஆஜர் படுத்தீருவேன் ... ஆனா எல்லாமே ஸ்டுடண்ட்ஸ் ஆ இருக்கீங்க .. இதோட உங்க லைப் முடிஞ்சுரும் ... யாரும் எந்த வேலைக்கும் போகமுடியாது ... நான் நெனச்சா எவனும் இதுக்கு மேல படிக்கவே முடியாது " என்று உரத்த குரலில் மிரட்ட ஆரம்பித்தார் . 

நான் மெதுவாகப் பையன்களைப் பார்த்தேன் . எவனும் எதற்கும் அஞ்சியது போலத் தடயம் கூட இல்லை . சொல்லப்போனால் சௌபா உற்சாகமாக இருந்தான் . எங்கள் தரப்பில் இருந்து ஒன்றும் பெரிதாக அசைவில்லை என்று தெரிந்துகொண்டோ , அல்லது வேறு உள் நோக்கத்திலோ அவர் வேறு ஒரு யோசனையைச் சொன்னார் .

" உங்களைப் பாத்தா நல்ல, கெட்டிக்காரப் பையங்கன்னு தெரியுது ... பட்டிமண்டபம் எல்லாம் பேசுறீங்கன்னா அறிவான பையன்களாத்தான் இருக்கணும் ... நீங்க இந்தத் தப்ப செய்யுற பையங்க மாதிரியும் இல்ல .. அதனால உங்க எல்லாத்தையும் விட்டுர்றேன் . நீங்க இப்பவே போகலாம் . உங்க மேல எந்தக் கேசும் போட மாட்டோம் .
எல்லோருக்கும் பசிக்கும் .. நானே கூட்டிட்டுப்போய் சாப்பாடு வாங்கித் தந்துட்டு , எங்க ஜீப்புலயே உங்க எல்லாத்தையும் வீட்டுல கொண்டுபோய் இறக்கி விட்டுர்றேன் " என்றார் .

எனக்கு அவரது இந்தத் திடீர் மாற்றம் சந்தோசம் தரவில்லை , மாறாகச் சந்தேகமே வந்தது . ஆனாலும் எப்படியாவது தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் அவரைப் பார்த்து மெதுவாக "சார்" என்றேன் .

"ஓ கே வா?"என்றார் . 

"சொல்லுங்க சார்" என்றேன். 

"ஏன்னா எம் பையன் வயசு தான் உங்களுக்கும் ... உங்களுக்குக் கெடுதல் பண்ண மனசு வரல ... ஒரு தடவ கேஸ் புக் ஆகி , கோர்ட்ல கூண்டுல ஏறி நின்னு பெனால்டி கட்டிட்டா அவ்ளோ தான் ... லைப் ஏ முடிஞ்சுது " என்றார் . 

"சொல்லுங்க சார்" என்றேன் மீண்டும் ...

அவர் புன்னகைத்தவாறே எனக்கு அருகில் வந்தமர்ந்து இரகசியம் சொல்லுகிற குரலில், சொல்ல ஆரம்பித்தார் ... 

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.

Friday, May 1, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 08



சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை வன்முறையே என்று தீர்ப்புச் சொன்னேன். அதெப்படி வன்முறையை நியாயப்படுத்த முடியும்?
என்ன சொன்னேன்? 

இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்த மாபெரும் தேசவிடுதலைப் போராட்டங்களின் நீண்ட வரலாற்றை வரிசைப்படுத்தினேன் . காலனி ஆதிக்கத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுதலை அடைந்த நாடுகளின் வீர வரலாற்றை விளக்கிச் சொன்னேன் . வன்முறையற்ற போராட்ட வழிமுறையை மகாத்மாகாந்தி தேர்ந்தெடுத்து இருந்தபோதும் அது ஆங்கிலேய அரசின் வன்முறைமிக்க அடக்குமுறைகளைக் குறைக்கவில்லை என்பதை ஆதாரங்களோடு எடுத்துரைத்தேன். இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி நடந்த வீரமும் தீரமும் மிக்க போராட்டக் களங்களைப்  பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினேன் .

தீர்ப்பின் இறுதிவரிகளுக்கு வருமுன்னர், தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு நான் அஹிம்சையை போதிக்க மாட்டேன் என்ற மகாத்மாவின் வார்த்தைகளை எடுத்துரைத்தேன் . தற்காப்புக்காக மேற்கொள்ளப்படும் தாக்குதலை வன்முறைக்குற்றமாக சட்டமே கருதுவதில்லை என்பதையும் சொன்னேன் .
நிறைவாகச் சொன்னேன் ," தன்னிலும் வலிமை கொண்டது எனத் தெரிந்தும் , தன்னிலும் மிக உயரம் பறக்கும் வல்லமை கொண்டது என உணர்ந்தும் , தன்னிலும் கூரிய நகங்களும் அலகும் உண்டென்பதை அறிந்தும் ... தன் குஞ்சைக் கவர்ந்து போகவரும் ஒரு கழுகுக்கு எதிராகப் பிடரி மயிர் சிலிர்க்க , உடம்பிலுள்ள ரோமமெல்லாம் எழுந்துநிற்க , தன்னால் இயன்றவரை பறந்து தாக்குகிறதே ஒரு பெட்டைக்கோழி , ஒரு தாய்க்கோழி ... தன் குஞ்சைக் காக்க முயல்கிறதே அது வன்முறையா ?
வன்முறையா சொல்லுங்கள் என்று கூடியிருந்த அந்த எளிய மக்களிடம் கேட்டேன். அங்கும் இங்குமாக இல்லை இல்லை என்று பல குரல்கள் . 

ஆம் இல்லை .. அது வன்முறை அல்ல .. தாய்மை ... அந்தத் தாய்மை வன்முறை என்றால் அந்த வன்முறை நாடெங்கும் பரவட்டும் என்றேன் .

கூட்டம் பெரும் ஆரவாரம் செய்து , சிலிர்த்து ஆர்ப்பரித்தது .நீண்ட கரவொலி அடங்கும் தருணத்தில் மக்களின் சிக்கல்களைத் தீர்க்க,  ஏற்ற வழிமுறை வன்முறை  என்று தீர்ப்பளித்தேன் . 

இப்போது இதனை எழுதும்போது மீள நினைத்துப் பார்க்கிறேன் . நாங்கள் இணைந்து ஒரு தரமான அறிவார்ந்த நிகழ்வை வழங்கி இருக்கிறோம் . இந்தத் தீர்ப்பின் கடைசி வரிகளை வாய்ப்புக் கிடைக்கிற எப்போதெல்லாம் சௌபா எனக்குத் திரும்பச் சொல்லுவான் . சொல்லும் தருணங்களில் என் கைகளைப்பிடித்துக் கொள்ளுவான் . அவன் நினைவூட்டிக் கொண்டே இருந்ததன் விளைவாக அதை நான் திரும்ப ஒருமுறை சிறப்பாகப்  பயன்படுத்தினேன்.

2007 ஆம் ஆண்டு "என்று தணியும்?" என்றொரு ஆவணப்படத்தைத்  தயாரித்து இயக்கினேன் . கும்பகோணம் பள்ளியொன்றில் நடந்த தீ விபத்துக்குப் பின்னே, மறைத்தும் ஒளித்தும் வைக்கப்பட்ட  உண்மைகளைப்பேசும் அந்த ஆவணத்திரைப்படம் இந்த வரிகளுடன் தான் நிறைவுறும் .

அன்று எங்களைப் பாராட்டாதவர்களே இல்லை . நிகழ்ச்சி நடந்த இடத்தைவிட்டு வருவதற்கே அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. எல்லோரும் வாழ்த்தினார்கள் . எங்க ஊருக்கு வாங்க என்று இரண்டொருவர் அழைத்தார்கள் . அதையெல்லாம் திரு.பரமசிவத்திடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டோம் .

தாங்கமுடியாத , எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தது தோழர் பரமசிவம் தான். இரயில் போகிற ஊருக்கெல்லாம் உங்களை அழைத்துப் போவேன் என்றார் . விருதுநகர் நிகழ்ச்சியை விட செங்கோட்டை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது அவருக்கு இன்னும் மகிழ்ச்சி . ஆனால் இனிமேல் எந்த ஊருக்கு அழைத்துப் போனாலும் அங்கு உள்ளவர்களிடம் பேசி நல்ல சம்பளம் வாங்கித்தருவதாகவும் சொன்னார் . இந்தக் கடைசிவரி எங்கள் எல்லோருக்கும் பிடித்த வரி என்று அவரிடம் சொன்னோம் . எப்போதும் இல்லாதபடி உரத்த குரலில் சிரித்து நான் வாங்கித் தர்ரேன் தோழர் என்று மீண்டும் சொன்னார் . இப்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவோ எல்லையோ இல்லை .

நல்ல உணவு . நாட்டுக் கோழிக்கறிக் குழம்பு . பக்கத்தில் இருந்து பார்த்துப்பார்த்துப் பரிமாறினார்கள் . எல்லோரும் உணவு உண்ட பிறகும், எங்களைச்சுற்றி அமர்ந்து பேசிகொண்டே இருந்தார்கள் . இரவு ஒரு மணிவரைக்கும் சபை நீடித்தது . 


காலை முதல் ரயிலுக்குப் புறப்பட்டோம் . காலை உணவெல்லாம் முடித்து , நிறையப் பேர் வந்து வழியனுப்ப ரயில் ஏறினோம் . எங்களை அழைத்துவந்த திரு சங்கரும் அவரது இரண்டு நண்பர்களும் எங்களோடு துணைக்கு வந்தார்கள் . மீண்டும் பாட்டு கவிதை இலக்கியம் என்று சபை இரயிலில் களைகட்டியது . 

விருதுநகர் வந்ததும் சங்கரும் அவரோடு வந்த மற்றவர்களும் இறங்கிக் கொண்டார்கள் . அவர்கள் எல்லோருமே விருதுநகரில் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள்.   

நீங்கள் மதுரையில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று எங்களிடம் சொன்னார்கள் . நாங்களும் உற்சாகமாக ஒப்புக் கொண்டோம் . அவர்களுக்கு விடை கொடுத்தோம் .

மதுரை வந்தது . ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்றது .  மதிய உணவுக்கான நேரம் நெருங்கி விட்டதால் எல்லோரும் ஒன்றாகச் சாப்பிடப்போவது என்று முடிவு செய்தோம். சங்கரநாராயணன் மட்டும் தான் சாப்பிடவரவில்லை என்றும் , அவசரமாக வீட்டுக்குப் போவதாகவும் சொன்னான் . எல்லோரும் வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை . அவனுக்கு ஏதோ அவசரம் . எனவே படிகளில் ஏறிப் போவதற்குக் கூடக் காத்திராமல் தண்டவாளங்களுக்குள் இறங்கி  முதலாவது பிளாட்பாரத்தில் சென்று ஏறினான் . ஏறிக் கொண்டிருந்த அவனுக்கு உதவிசெய்வதற்காக இருவர் அவனை நோக்கி விரைந்து வந்தார்கள் . அவனுக்கு உதவினார்கள் , அவனும் அவர்களும் ஏதோ பேசிக் கொண்டார்கள் . சங்கர் எங்களைநோக்கித் தன் கைகளைக் காட்டினான் . அந்த இருவரில் ஒருவர் சிரித்த முகத்துடன் , எங்களை வருமாறு அழைத்தார். எல்லாரும் வாங்க என்று அழைத்தார் . எல்லோரும் அங்கு போனதும் , செங்கோட்டை பட்டிமன்றத்துக்குப் போயிட்டு வரீங்களா என்று கைகளை நீட்டினார் . 

நமது புகழ் அதற்குள் மதுரை வரைக்கும் பரவிவிட்ட மகிழ்ச்சியில் கைகளை நீட்டினேன் . 

என் கைகளைப் பற்றிக்கொண்டு , புன்னகையை மறைத்துக்கொண்டு , அவர் கேட்டார் , " டிக்கெட் எங்க ?" ...

ஒரே கணத்தில், அவர் கை குலுக்கவில்லை என்பதும் , கைகளைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் ஒருசேர புத்தியில் மின்சாரமாகப் பாய்ந்தது .


அப்புறம் சொல்லுகிறேன் ...


... பாரதி கிருஷ்ணகுமார்