Saturday, April 23, 2016

உலக புத்தக தினம் - இன்று

தி இந்து நாளிதழுக்கு வாசிப்பு குறித்து எழுதிய 
கட்டுரையின் முழு வடிவம் .


அம்மாவிடம் இருந்து தான் எல்லாமே ஆரம்பித்தது.
அம்மா எப்போதும் வாசித்துக்கொண்டே இருப்பாள் .
அவள் வீணையில்லாத சரஸ்வதி.
திருப்பாவை, திருவெம்பாவை என எல்லாமும் பாடுவாள்.

வீட்டில் இந்துநாளிதழ், தினமணி, கல்கி, விகடன், மஞ்சரி, அமுதசுரபி, அம்புலிமாமா, பாரதியார் கவிதைகள், மகாத்மா காந்தியின் சுயசரிதை, பொன்னியின் செல்வன் என்று வாசிக்க ஏராளம் இருந்தது. எப்பொதும், வேலையின் அவசரத்தில் இருக்கும் அப்பா, கழிப்பறைக்குப் போகும் போது ஏதேனும் ஒரு  புத்தகத்துடன் தான் போவார்.


வசிப்பதற்கென்று தனியாக அறைகள் ஏதும் இல்லாத ஒரு சின்ன வீட்டில் தான் குடியிருந்தோம். என்றாலும், எல்லோரும் எதையாவது வாசித்துக் கொண்டே இருந்த வீடு. எப்பொழுதும் வாசித்துக் கொண்டே இருப்பதற்கான ஒரு வாழ்க்கை அமைந்தது ஒரு ஆசீர்வாதம் தான்.


பள்ளியிலும், கல்லூரியிலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என எது வந்தாலும் பேர் கொடுத்து விட்டு, வீடு வந்து அதற்கெனத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட போது வாசிப்பின் எல்லை மேலும் விரிந்தது.


பிறந்து வாழ்ந்த மதுரையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும் அம்மா அழைத்துப் போய்க்கொண்டே இருந்தாள். தமிழின் மிகப் பெரும் ஆளுமைகளின் உரைகளைக் கேட்டதும் வாசிப்பின் மீதான காதல் பெருகி வளர்ந்தது.


கல்லூரி வாழ்க்கையில், நண்பர்களுடன் சேர்ந்து துவங்கிய “பாரதி கவிதா மண்டலம்” பாரதியை ஆழ்ந்து வாசிக்க வழி வகுத்தது. தனது படைப்புகளில், தனது மொழியறிவை, வாசிப்பின் விஸ்தீரணத்தை பாரதி உணர்த்திக் கொண்டேயிருந்தான். எல்லோரையும், எல்லாவற்றையும் வாசிக்காமல் “யாமறிந்த மொழிகளிலே” என்றும் “யாமறிந்த புலவரிலே” என்றும் பாரதி பாடியிருக்கவே முடியாது.
எட்டயபுரம் மகாராஜாவுடன் சென்னைக்குப் போய் விட்டுத் திரும்பிய பாரதி, மகாராஜா கொடுத்த பணத்தில் முழுவதும் புத்தகங்களே வாங்கி வந்தார் என்னும் செய்தி பாரதி மீதும், புத்தகங்கள் மீதும் ஒரு சேர மதிப்பும், காதலும் தந்தது.


கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என்று பரந்து விரிந்து வாசிக்கத் துவங்கிய காலத்தில் தான் இன்றைய செம்மலர் ஆசிரியர். எஸ்.ஏ.பெருமாள் அறிமுகமானார். சந்திக்கும் போதெல்லாம், வாசிக்கவென்று சில புத்தகங்களைத் தந்து விட்டு, அடுத்த சந்திப்பில் அப்புத்தகங்களைப் பற்றி அவர் உரையாடத் துவங்கியது வாசித்தே தீர வேண்டிய கட்டாயத்தை வாழ்க்கையாக்கி விட்டது.


இந்திய விடுதலைப் போரில், கேரளா மாநிலம் கையூரில் நடந்த நிகழ்வுகளை, நிரஞ்சனா எழுதிய “நினைவுகள் அழிவதில்லை” என்னும் புத்தகத்தை வாசித்துப் பெருக்கிய கண்ணீரின் ஈரம் இப்போதும் இருக்கிறது.
புதுமைப்பித்தனின் எழுத்தும், எழுத்தில் ஜொலித்த பகடியும், நவீன இலக்கியத்தின் மீது எல்லையற்ற ஈர்ப்பைத் தந்தது. வடிவமைப்பும், வண்ணங்களும் நிறைந்த, விலை குறைவான சோவியத் புத்தகங்கள் திறந்து வைத்த பலகணிகள் ஏராளம்.


வானம்பாடிகளும், அன்னமும், உருவாக்கிய பேரெழுச்சி மகத்தானது. கண்ணதாசனும், ஜெயகாந்தனும், ந. பிச்சமூர்த்தியும், சுந்தர ராமசாமியும், மௌனியும், ஜி நாகராஜனும், லா.ச.ராவும்  உருவாக்கித் தந்த வாசிப்பு அனுபவம் வாழ்வின் அனைத்துக் தளங்களையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது.


எந்தப் புத்தகத்தை வாங்கினாலும், அதை விரித்து முகர்ந்து பார்க்கிற பழக்கம் இப்போதும் இருக்கிறது. காகிதமும், கஞ்சிப் பசையும் சேர்ந்து உருவாக்கும் அந்த வினோதமான மணம், உலகின் எல்ல வாசனைத் திரவியங்களையும் வீழ்த்தி விடும் ஆற்றல் கொண்டது.


புத்தகங்களை அக்றிணைப் பொருட்கள் என யார் சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு மனதின், அறிவின் மகரந்தங்களை இன்னுமொரு மனித மனதிற்கு, அறிவிற்குக் கொண்டு சேர்க்கும் ‘தேனீக்களே’ புத்தகங்கள். சிறகடித்துப் பறந்து கொண்டேயிருக்கும் தேனீக்கள் உயர்திணைகள். என் கையிருப்பில் இருக்கும் எல்லாப் புத்தகங்களும் எப்போதும் சிறகடித்துப் பறக்கும் தேனீக்களாகவே எனக்குத் தோன்றுகிறது. புத்தகங்கள் உயர்திணை. அவைகள் உயர்திணை என்று அறியாதவர்களே அக்றிணைகள்.


நாள் ஒன்றுக்குக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அனால் வாழ்க்கைக்கான ஓட்டம் அதை சாத்தியமற்றதாக ஆக்கி விடுகிறது. வாங்கிய கடனை முறையாகத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பதட்டமும் நேர்மையும் போல, இழந்த மணி நேரங்களை வாய்ப்பிருக்கிற வேறொரு நாளில் வாசித்துச் சரிசெய்து கொள்வேன்.
ஏனோ, மின்புத்தகங்களை கணிப்பொறியில் என்னால் வாசிக்க இயலுவதில்லை. ஏனெனில், அவைகளில் புத்தகங்களின் வாசனையும், தொடுதலையும் என்னால் உணரமுடிவதேயில்லை.


வாசிப்புக்கும் மேலான சிறப்புடையது மறுவாசிப்பு. ஏற்கெனவே வாசித்த சில புத்தகங்களை மீண்டும் படிக்க நேரும் தருணங்கள் சிறப்புமிக்கவை. பல ஆண்டுகள் பிரிந்து போன ஒரு நண்பனை மீண்டும் பார்க்கிற அற்புதம் அது.
தான் மாறாமல் அப்படியே இருந்து கொண்டு, இத்தனை ஆண்டு கால இடைவெளியில், நாம் அறியாத நமக்குள் நேர்ந்திருக்கும் மாற்றங்களை நமக்கு உணர்த்தும் சாகசத்தை மறுவாசிப்பின் வழியே ஒரு புத்தகம் நிகழ்த்துகிறது.


எந்த சமூகத்தில் வாசிப்பில்லையோ, அந்த சமூகம் தன் காலத்திடமிருந்து தானே பிரிந்து, விலகிக் கிடக்கிறது. அது எல்லாவற்றில் இருந்தும், எல்லா வகைகளிலும் பிரிந்து கிடக்கிறது.
புத்தகங்களுக்கும், சமூகத்திற்குமான இடைவெளி பெருகிக்கிடக்கிற சமூகத்தில் பாகுபாடுகள் பெருகிக் கிடக்கும். வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளலாம்: பாகுபாடுகளை ஒப்புக் கொள்ளவே முடியாது. பாகுபாடுகள் அடக்குமுறையின் மூலமே உயிர் வாழ்கின்றன. அடக்குமுறைகள், வன்முறையின் வழியே நிலை பெறுகின்றன. வன்முறை சட்டத்தின் ஆட்சியை நிராகரித்துவிட்டுத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.


சட்டத்தின் ஆட்சி (Rule of law) வாசிப்பு நிறைந்த ஒரு சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. வாசிப்பற்ற சமூகமும், மனிதனும் தங்கள் பேதமையால், அறியாமையால் அனைத்து அநீதிகளுக்கும் ஏதேனும் ஒரு வழியில் அங்கீகாரம் தந்து கொண்டே இருக்கிறார்கள்.


ஒரு சமூகம் பாகுபாடுகளற்ற சமூகமாக உருக்கொள்வதற்கு, அந்தச் சமூகம் தெளிந்த நல்லறிவு கொண்ட சமூகமாக இருத்தல் வேண்டும்.
தெளிந்த நல்லறிவு வாசிப்பிலே இருந்து வருகிறது.


வாசிப்பு எனக்கு தந்த முதல் அறிவு எனது அறியாமை பற்றியது; என் அறியாமையின் எல்லையை அல்லது எல்லையற்ற அறியாமையைக் கண்டு, உணர்ந்து, கடந்து போக வாசிப்பு ஒன்றே வழித்துணை.


பரிணாம வளர்ச்சியில், குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற போதும், மனிதனை குரங்கையும் வேற்றுமைப் படுத்த பல காரணிகளை இயற்கை உருவாக்கி இருந்தது. என்ற போதும், மொழியை மனிதன் உருவாக்கி, உலகின் முதல் புத்தகம் எழுதப்பட்டதும் தான் , குரங்கிற்கும் மனிதனுக்குமான தொடர்பு முற்றிலும் தீர்க்கப்பட்டது என்று எங்கோ படித்திருக்கிறேன். உண்மைதான். தன்னையும், மனிதனையும் பிரித்த புத்தகங்கள் மீது குரங்குகளுக்கு எப்பொதும் தீராப்பகைமை உண்டு.
விலங்குகளுக்குக் குரல் தந்த இயற்கை அவைகளுக்கு மொழி தரவில்லை. அது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த அமுதசுரபி. விலங்குகளுக்கு வரலாற்று உணர்வு இல்லை. ஆனால், மனிதன் அப்படியில்லை... அவனுக்கு வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வரலாறும், வரலாற்று உணர்வும் உண்டு. வாசிப்பு இன்றி இந்த உணர்வு சாத்தியமே இல்லை.


எல்லாவற்றிற்கும் மேலாக,  காதலுக்கும், புத்தக வாசிப்பிற்கும் மிக நெருங்கிய பொருத்தம் ஒன்று உண்டு. 
நேருக்கு நேர் கண் கொண்டு பார்த்தால் மட்டுமே காதலும், வாசிப்பும் ஒருவருக்கு வாய்க்கும்.
கண்கள் இன்றி வேறெந்தப் புலன்களின் வழியாகவும் ஒரு புத்தகத்தையோ அல்லது இதயத்தையோ  அடைந்து விட முடியாது.



வாசிப்பதென்பது காலத்தை அறிவது.
வாசிப்பதென்பது காலத்தைக் கடப்பது.
வாசிப்பதென்பது காலத்தை உருவாக்குவது.



Wednesday, January 6, 2016

இருள் விலக்கும் ஒரு திசை ஒளியே இலக்கியம்

 04 நவம்பர் 2015.
ஆனந்த விகடன் தீபாவளி சிறப்பிதழில் வெளியான பேட்டி.
ஆனந்த விகடனுக்கு நன்றி.






Wednesday, October 21, 2015

கரிகாலனுக்கு நன்றி

எனது பாரதி குறித்த ஆய்வு நூல் குறித்து கவிஞர் கரிகாலன் எழுதிய மதிப்புரை
நன்றி கரிகாலன்.
- பாரதி கிருஷ்ணகுமார்


அருந்தவப் பன்றி
-----------------------------
கலைமகளை நான் என்னதான் கிண்டல் செய்தாலும் அவள் என் மீது கடைக்கண் பதித்திருக்கவே செய்கிறாள்.நான் கண்டவுடன் காதல் கொண்ட ஆளுமை பாரதிகிருஷ்ணகுமார்
தனது" அருந்தவப் பன்றி" சுப்பிரமணிய பாரதி -நூலை அனுப்பி வைத்திருந்தார்.
பெற்றவுடன் படிக்கத் தொடங்கினேன்.மெய் விதிர்க்க..மேனி படபடத்து நடுங்க படித்துக் கொண்டிருந்தேன்.
புயற்காற்றில்,அடை மழையில்,திக்குத் தெரியா இருளில் நான் யாருடைய கைப்பிடித்து நடந்தேனோ அந்த மகாகவி பாரதியின், வெளிச்சத்துக்கு வராத விடுபட்ட பகுதிகளை தோழர் பாரதி கிருஷ்ணகுமார் தன் ஆர்வமிகு தேடலால் கடின உழைப்பால் நம் உள்ளங்கைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
விடுதலை மனமும் கவியுள்ளமும் கொண்ட பாரதியை விதியின் கரம் சிறுவயதிலேயேப்
பிய்த்து எறிந்திருக்கிறது.
ஆனால் அவனது படைப்பு மனமோ அவனுக்குள் வளர்ந்த கவிச்சுடரின் வெளிச்சத்தில் அவனது திசை வழி நோக்கி முன்னேற வைத்திருக்கிறது.
ஐந்து வயதில் தாயை இழந்தான்.பதினான்கு வயதில் தந்தையை இழந்தான்.இளம் வயதில் நாடி வந்த கவிதை தேவியை சொல்லொண்ணா வறுமையால் நீங்கினான்.விருப்பமின்றி எட்டயபுரம் அரண்மனையில் காசுக்காகப் பணி செய்தான்.அதிகாரத்தின் கோட்டைக்குள் ஒரு கவி எப்படி அடங்குவான்.காசி போனான்.
அலைச்சலும்,அமைதியுமற்ற வாழ்வின் தகிப்பில் ஆறு ஆண்டுகள் கவிதை எழுத முடியாது தவித்தான்.நாயினும் கடையேன் என்றார் வள்ளலார்.தன்னை அருந்தவப் பன்றி என்கிறான் பாரதி.தவம்×பன்றி.எத்தகைய நகை முரண்.அவனது அருந்தவப் பன்றி கதை அட்டகாசமான சுய எள்ளல்.இதுவே நவீன மனம்.இக்கதை இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அவனுடைய 'சின்ன சங்கரன் கதை' நமக்கு பாரதியின் அறியாத பரமாணங்களைக் காட்டுவது.அதன் பகுதியை தேடி இந்நூலில் பிகே இணைத்துள்ளார்.
இந்நூலை விரிவாகப் பேசவேண்டும்.பாரதியின் நேயர்கள் இந்நூலை வாசிக்காமல் பாரதியை முழுமையாக உணர முடியாது.ஒரு பலகலைக்கழகம் செய்ய வேண்டிய பணி.பாரதி கிருஷ்ணகுமார் தனியொரு மனிதராய்ச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
Bharathi Krishnakumar உங்கள் திசை நோக்கி வணங்குகிறேன்.ஒரு நவீன கவியின் அகத்தை புறவாழ்வை நானறிந்ததைவிட செம்மையுற
அறியச்செய்திருக்கிறீர்கள்.தோன்றும்போதெல்லாம் இது குறித்து எழுதிக்கொண்டிருப்பேன்.
நண்பர்கள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.
‪#‎வெளியீடு‬-
The roots
7/4 ஏழாவது தெரு,தசரதபுரம்
சாலிகிராமம்,சென்னை-14
94442 99656
விலை ரூ 200

-கரிகாலன்

Tuesday, August 4, 2015

திருப்பூர் கலை இரவில் .....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாள் ( 22.03.2015 ) அன்று   நடைபெற்ற கலை இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .

என் நண்பனும் , அருமைத் தோழனும் ஆன புகைப்படக் கலைஞன் " வசந்தம் " செந்தில் அன்பினால்  எடுத்த புகைப்படங்கள்












Friday, July 3, 2015

மதுரை கூழாங்கற்கள் நிகழ்வில் .....

"இனப் படுகொலைகளும் ,இலக்கியங்களும் " என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்த தருணம் .

Monday, May 25, 2015

கந்தர்வன் கவிதைகள் நூலுக்கு எழுதிய முன்னுரை

முன்னுரை
1
அவரது முதல் கவிதைத்  தொகுப்பான "கிழிசல்கள்" நூல் வெளியீட்டு விழாவில், சிறப்புரையாற்றினேன். இப்போது, அவரது ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கும் முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரண்டும் தற்செயலானவை அல்ல. எனக்கும், அவருக்குமான எப்போதும், இப்போதும் அறுபடாத உறவின் அடையாளம் அது.

2
அன்னம் பதிப்பகத்தின் சார்பில், பேராசிரியர். மீரா தான் அந்தத் தொகுப்பினை வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரது படைப்பை பேரா. மீரா வெளியிட்டது அதுவே முதல் முறை. கலை இலக்கிய பெருமன்றத்துக்காரரான பேரா. மீரா அதனை வெளியிட்டது சிலருக்குப் பொறுக்கவில்லை. தங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் நேரிடையாகவே பேரா. மீராவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பேரா. மீரா அதைப் பொருட்படுத்தாது, தொகுப்பை வெளியிட்டார்.
மானாமதுரையில், மேல்கரைப் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் தான் வெளியிட்டு விழா நடந்தது. விழாவில், நீ தான் சிறப்புரையாற்ற வேண்டுமென்று கந்தர்வன் அழைத்தார். ஒப்புக் கொண்டேன். ஆனால், விழா நடந்த அன்று ஒரு வேலைச் சுழலில் அகப்பட்டுக் கொண்டேன். தொலைபேசியில் அழைத்து "விவரம்" எல்லாம் சொன்னேன். அமைதியாகக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டார். சொல்லி முடிந்ததும், "நீ சொல்றது எனக்குப் புரியுதுடா தம்பி... முதல்ல அந்த வேலையப்பாரு... நாம் பாத்துக்குறேன்... என்ன... நீ பேசுனா நல்ல இருக்கும்னு ஆசைப்பட்டேன்". என்றார். கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தாலும், புறப்பட்டு வந்து விடுவேன் என்றேன். "தம்பி... வேணாம்.. ஒரு மனசா அந்த வேலையப் பாருங்க... வர வேண்டாம்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார். மனிதர்களை அவர்களது சூழ்நிலையுடன், இணைத்துப் புரிந்து கொள்கிற பக்குவம் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. அவர் அப்படிச் சொன்னதும், எனக்குப் போயே தீர வேண்டுமென்று, வேகம் பிடித்தது.
எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு, மானாமதுரை போனேன். என்னை பார்த்ததும், "தம்பி... வந்துட்டீங்க... வருவீங்கன்னு தெரியும்" என்றபடி நகர்ந்து போனார். வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விழா துவங்க இன்னும் நேரம் கிடந்தது. வாசலில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அந்த "சிலர்" பற்றி, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீரா வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். பதிப்பகத்தின் பரந்து பட்ட செயல்பாடு, சந்திக்கும் தடைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என்று விரிவாக பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
விழா துவங்கி, புத்தகம் வெளியிட்ட பிறகு நான் பேசத் துவங்கினேன். வேறு எதையும் குறிப்பிடாமல், "ஊசிகள்" மீரா "கிழிசல்கள்" தொகுப்பை வெளியிட்டது தான் பொருத்தமானது; சரியானது" என்று பேச்சைத் துவங்கினேன். (ஊசிகள் என்ற தனது தொகுப்பை அதற்கு முன்பு மீரா வெளியிட்டு இருந்தார்) கந்தர்வனும், மீராவும் கைதட்டி ஆரவாரம் செய்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை என்னால் மறக்கவே இயலாது. அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழிமுறைகளை, கந்தர்வனைப் போல இந்த உலகத்தில் யாராலும் புதிது புதிதாக கண்டறிந்து விடவே முடியாது.
எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கூச்சலிடுவார், கொண்டாடுவார், கைதட்டுவார், உரக்கச்சிரிப்பார், தலை நிமிர்த்திப் பார்ப்பார், தலையைக் குனிந்து கொண்டு இடமும் வலமுமாகப் பலமுறை தலையசைப்பார், குலுங்கச் சிரிப்பார், கண்களில் கண்ணீர் பெருகச்சிரிப்பார், மேசையை அடிப்பார், தோள்களில் தட்டுவார், கைகளைப் பற்றுவார், கட்டியணைத்துக் கொள்வர், எதுவும் பேசாமல் கண்களுக்குள் பார்ப்பார், "சே" என்பார், 'அட' என்பார் "ஆஹா" என்பார்... அவரது சிவந்த முகம் மேலும் சிவக்கச் சிவக்க சந்தோசத்தைக் கொண்டாட்டமாக மட்டுமே வெளிப்படுத்துவார். அன்றைக்கு நிகழ்ச்சி முழுவதுமே அப்படித்தான் அமைந்தது. 
எல்லோரும் புறப்பட்டோம். என் கைகளைப் பற்றித் தனியே அழைத்துப் போனார். "நீ வரமுடியாதுன்னு சொன்னதும், "பொக்குன்னு" போயிடுச்சுடா தம்பி... ஆனாலும் வந்துடுவேன்னு மனசு சொல்லிச்சு... உன்னப் பார்த்ததும், சந்தோசமா இருந்தது மாதிரி, இவ்வளவு பிரச்சனைலையும் வந்துருக்கியேன்னு வருத்தமாவும் இருக்கு... ஆனா வேற எவன் பேசி இருந்தாலும், இப்படிப் பேசிக் கொண்டாட முடியாதுடா " என்று இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். வழிச்செலவுக்குப் பணம் கொடுத்தார். " அண்ணாச்சி காசெல்லாம் வேண்டாம்" என்றதும், உறுதியாக மறுத்து "புத்தகம் வாங்கிக்க" என்று சொன்னார். வந்திருந்த எல்லோரிடமும் தனித் தனியே பேசி வழியனுப்பினார். அவர் யாருடன் பேசினாலும், பழகினாலும், இந்த உலகத்திலேயே அவர்களிடம் மட்டுமே அன்பு பாராட்டுகிறார் என்கிற உணர்வைத் தந்துவிடுவார். கபடமின்றி, களங்கமின்றி, ஒளித்து வைக்காமல் வெளிப்படுகிற அன்பிற்கு, அத்தகைய உணர்வைத் தோற்றுவிக்கும் ஆற்றல் எப்போதும் உண்டு. அந்த ஆற்றலின் அடையாளம் கந்தர்வன்.

3
தன்னை விட அறிவும், ஆற்றலும் உள்ள மனிதர்களைப் பார்த்ததும்  நம்மில் சிலருக்கு வியப்பும், பலருக்குப் பொறாமையும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. திறமையும், ஆற்றலும் உள்ள மனிதர்களைக் கண்டு விட்டால், அவர்களைக் கொண்டாட மறுக்கும் பலரை நான் அறிவேன். அந்தத் திறமையை, ஆற்றலை மறைக்கவும், ஒழிக்கவும் அவர்கள் செய்யும் கிழ்த்தரமான தந்திரங்களையும் நான் கண்டிருக்கிறேன். வாய் நிறைய அவதூறும், மனம் நிறையக் கள்ளமெளனமும் சுமந்து ஊர் ஊராகப் போய், ஆள் சேர்த்து, அவதூறுகளை இறைத்துக் கொண்டே போவார்கள். தன்னைத் தவிர மற்றவர்களுக்குப் புகழும், வெளிச்சமும் வருவதை அவர்களால் தாங்கவே முடியாது. ஆற்றல் மிக்க, அறிவு மிக்க மனிதர்கள் நடந்து போகும் பாதையெங்கும் மலத்தையும் கண்ணடித் துண்டுகளையும் தங்கள் கைகளாலேயே கலந்து போடுவார்கள். ஆனால், ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் எதன் மீதும் நடந்து, கடந்து போய் விடுவார்கள் என்பதும், அவர்களைக் கையில் சுமந்து, அந்தப் பாதையைக் கடக்க கந்தர்வன் மாதிரி மனிதர்கள் எப்போதும் காத்திருப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

திறமையும், அறிவும், ஆற்றலும் உள்ள யாரைக் கண்டுவிட்டாலும், கந்தர்வன் அவர்களைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார். அவர்களைப் பற்றி ஆயிரம் பேருக்குச் சொல்லுவார். சலிக்காமல், வித விதமாய்ப் புகழ்ந்து கொண்டே இருப்பார். ஒரே நாளில், அவர்களுக்கு எல்லாப் புகழையும் வாங்கித் தர வேண்டுமென்று பேசுவார். அப்படிப் பலரை, அவர் கொண்டாடுவதை, அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என்னை அவர் கொண்டாடியதைப் பலர் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு கலை இலக்கிய இரவில் பேசி முடித்து விட்டு, மேடைக்குப் பின்புறம் வந்தேன். முன்னால் இருந்து ஓடோடி வந்தார். என்னை ஆரத் தழுவி, முகத்தில் பெருகுகிற வியர்வையை வழித்துக் கைகளில் எடுத்து, லேசாகச் சுவைத்து "இனிக்குதுடா தம்பி" என்று சொன்னார். நான் திகைத்து, கண்களை மூடித் திறந்த போது, முன் வரிசைக்குப் போய் விட்டிருந்தார். அதே ஊரில், அடுத்த ஆண்டு கலை இரவுக்கு அவரால் வர இயலவில்லை. இரண்டு நாள் கழித்துக் கடிதம் வந்தது, "தம்பி... திரும்பிய பக்கமெல்லாம் உன் பேச்சுத் தான்... வந்திருந்தால், வியர்வை துடைத்திருப்பேன்" என்று எழுதி இருந்தார். இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது அந்தக் கடிதம்.
இதோ, இப்போதும் இந்த முன்னுரையை வியர்வை பொங்கத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நிகழ்வுகளில், வியர்வை வழிய வழியத் தான் பேசிவிட்டு இறங்குகிறேன். துடைத்துவிடும், துடைத்து விடுவதாக எழுதும் கைகளைத் தான் காணவில்லை.

4
எங்கள் முதல் சந்திப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் என்கிற ஊரில் தான் நடந்தது. இபோதைய செம்மலர் இதழின் ஆசிரியர் அன்பும், அருமையுமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் தான் எங்கள் இருவருக்குமான அறிமுகத்தைச் செய்து வைத்தார். முகம் மலர, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "உங்களுக்கு என்னத் தெரியாது: எனக்கு உங்களத் தெரியும். நீங்க பிரபலம்" என்றார். நான் விழித்தேன்.
 "நீங்க எங்ககிட்ட இருக்க வேண்டிய ஆளுன்னு, நான் தான் முதல்ல சொன்னேன்... நீங்க எங்க கிட்ட வந்துருவீங்கன்னும் சொன்னேன். தோழர்... இவர விட்டுறாதிங்க... எப்பிடியாவது புடிங்கன்னு நாந்தான் எஸ்.ஏ.பி. கிட்ட சொன்னேன்". நான் வியப்பாகப் பார்த்தேன்.
"தோழர்... எங்க ஊரு முத்தாலம்மன் கோவில் திடல்ல நீங்க பேசுனதை நாங்க கூட்டமா வந்து கேட்டோம்... அடேங்கப்பா... என்னா பேச்சு?... பேச்சா அது?..." என்று சப்தமாகச் சிரித்தார்.
பெருமிதத்துடன் எஸ்.ஏ.பியைப் பார்த்தார். "பேசின மாதிரியே புடிச்சிட்டு வந்துட்டீங்க எஸ்.ஏ.பி... எப்பிடிப் பிடிச்சீக?" என்று கேட்டு விட்டு, மீண்டும் சப்தமாகச் சிரித்துக் கொண்டார். எப்போதும் போல, உதடு பிரியாத ஒரு மர்மப் புன்னகையுடன் எஸ்.ஏ.பி. சொன்னார். "வந்தாச்சுல்ல... பத்திரமாப் பாத்துக்குங்க" என்றார்.
 "ஆஹா" அதை விட வேற வேல... ஒப்படைச்சுட்டீங்கல்ல, நாங்க பாத்துக்குறோம்" என்று மீண்டும் கைகளைப் பற்றிக் கொண்டார். அந்தப் பற்றுதலை இறுதி வரை விடவேயில்லை. இந்த, "ஆஹா" என்கிற ஒற்றைச் சொல்லை அவர் உச்சரிக்கும் விதமும், தொனியும், பாங்கும் ஜீவரசம் ததும்பிக் கிடக்கும். அந்தச் சொல்லையே அவர் தான் கண்டு பிடித்தார் என்று நம்பத் தோன்றும்.
கொஞ்ச நாள் தான் 'தோழர்' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் 'தம்பி' தான். கடைசி வரைக்கும் 'தம்பி' தான். திருமதி. கந்தர்வனை "மதினி" என்று தான் நான் எப்போதும் அழைத்தேன். வாங்க "கொழுந்தனாரே" என்று குறைவில்லாமல் இப்போதும்  மதினி அழைக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டும், வாய் நிறைய எப்போதும் "சித்தப்பா" என்று தான் கூப்பிடும். அரவணைத்துக் கொள்ள ஆயிரம் ஆயிரம் கைகள் இருந்த மனிதன் கந்தர்வன்.

5
அவர் பார்த்த வேலையில் இருந்து, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்த பத்தொன்பது மாதங்களும், ஏறக்குறைய அன்றாடம் சந்தித்திருக்கிறோம். அவர் அப்போது பரமக்குடியில் இருந்தார். நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்தேன்.
"நேரங் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பாக்கணும், முடிஞ்ச வரைக்கும் கூட இருக்கணும், நிறையப் பேசணும், பாதிக்கப்பட்டவங்க கூட இருக்குறது தான் அவங்களுக்கான நம்பிக்கை... கஷ்டப்படுற காலத்துல கை விட்டுறக் கூடாது "என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் எஸ்.ஏ.பி. சொல்லிக் கொண்டே இருப்பார். எங்களை எல்லாம் இணைத்த மையப் புள்ளி எஸ்.ஏ.பி. தான். அது தனி வரலாறு.
வேலை முடிந்து, வேக வேகமாக பரமக்குடி போவேன். முக்கால் மணி நேரப் பயணம். பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் தான் எங்கள் சந்திப்பு மையம். சில நாட்களில் எஸ்.ஏ.பியும் வந்து இறங்கி விடுவார். அந்த நாட்களில் நான் மட்டுமின்றி, ஒரு பெரிய அறிவுலகப் பட்டாளமே அவரோடு இருந்தது. பேராசிரியர் தொ. பரமசிவன், ஷாஜஹான் கனி, கே.ஏ. குணசேகரன், ஜேம்ஸ் வாத்தியார், பறம்பைச் செல்வன் என்று பலரும் வந்து கூடி விடுவார்கள். சந்திப்பு எப்போதும் மாலையில் துவங்கி விடும். எப்போது முடியுமென்று சொல்லவே முடியாது. அதிகாலை ஆறு  மணி வரை பேசிக் கொண்டிருந்தது கூட உண்டு. அந்தப் பணி நீக்கம் செய்யப்பட்ட நாட்கள் பற்றி, "பத்தொன்பது மாதங்கள்" என்றொரு கவிதை எழுதி இருக்கிறார்.
இன்னும் பலருக்குத் தெரியாது. அவர் பணியாற்றிய துறையில் இருந்த மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடத் துவங்கி இருந்தனர். அதற்கு மேல் நிலையில் இருந்த, இரண்டாம் நிலை அதிகாரிகளின் துணை கொண்டு, அந்தப் போராட்டத்தை விழ்த்த அரசு திட்டமிட்டது. போராட்டத்தை அடக்கும் ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்துக் கொண்டே இருந்தது. இரண்டாம் நிலை அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்ற பலரும், மூன்றாம் நிலை ஊழியர்களாக இருந்து, பதவி உயர்வு பெற்றவர்கள் தான். ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் தெரிந்தும், அதிகாரத்திற்கு அஞ்சி, அதிகாரிகள் அரசுக்குத் துணை போனார்கள். ஆனால், அதிகாரியாக இருந்தும், ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் கந்தர்வன். போராடிய ஊழியர்களைவிடவும், அவர்களை ஆதரித்த அதிகாரிகளின் மீது வெஞ்சினம் கொண்டது அரசு. அதிலும் எப்போதும் அதிகாரத்திற்கு அடி பணிய மறுத்துக் தன் மானுட இயல்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த கந்தர்வன் மீது தனிக் கோபம் கொண்டது அரசு. தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. பத்தொன்பது மாதங்கள். பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு, பணியில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. பணியில், காலையில் சேர்ந்தவரை, பிற்பகலில் மீண்டும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது அரசு. உறுதி குலையாது நின்றார் கந்தர்வன்.
இந்தத் தொகுப்பில் உள்ள அந்தக் கவிதையை, வாழ்வின் போராட்டக் கணங்களில் இருக்கும் எல்லோரும் படிக்க வேண்டும். வீட்டில், நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த பத்து பைசாவில், பேனாவுக்கு மைநிரப்பி, அதிகாரத்திற்கு எதிராகப் போராட அழைக்கும் கவிஞனின் குரல் அது. இந்தக் தொகுப்பு முழுவதும் "அந்தப் பத்துப் பைசா" மையில் எழுதியது தான்.
அந்த நீண்ட கவிதையில் ஓரிடத்தில் எழுதி இருப்பார்
"நான் கவலையோடு
வருவதறிந்தால்,
செடிகள் சிரித்துக் கொண்டு
வரவேற்புக் கொடுக்கும்.
விடிய விடிய என்னோடு
விவாதங்கள் நடத்தும்.
கவலைப் படாதே என்று
தைரியம் சொல்லும்"
அந்தச் செடிகளில் ஒன்றாக நானும் இருந்தேன்.

6
இந்தத் தொகுப்பில் உள்ள மிகப் பெரும்பாளான கவிதைகளை அவர் வாசிக்க நான் கேட்டிருக்கிறேன். அவரது வீட்டில், அலுவலகத்தில், கலைஇரவு மேடைகளில்,எனது அலுவலகத்தில், ரயிலில், பேருந்தில், பெட்டிக்கடை வாசலில் என்று நாங்கள் பேசி வாழ்ந்த இடமெங்கும் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பது ஒருவகை இன்பம் என்றால், வாசிக்கக் கேட்பது பேரின்பம். ஏற்ற இறக்கங்களோடு, குரலில் உணர்வைக் குழைத்து, வாசிப்பின் வழியே கவிதையை உயிர் பெற்று எழச் செய்வார்.

அவர் சிறுகதைகளுக்குள் இருந்த இலக்கியச் செறிவை, அவரது கவிதைகள் பெற்றிருக்கவில்லை என்று ஒருமுறை சொன்னபோது, தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். “எனக்கு அது வேற இது வேற... கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு... கோவிலுக்குப் போனா  சிங்காரிச்சிட்டு போகலாம்... சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா..? என்று சொல்லி விட்டுப் பலமாக சிரித்துக்கொண்டார். ஆனால், அவர் விரும்பியிருந்தால், இன்னும் ஆழமான, அற்புதமான கவிதைகளை எழுதி இருக்க முடியும். அவரே வரைந்து கொண்ட ஒரு கோட்டிற்குள் தனது கவிதைகளை நிறுத்திக் கொண்டார் என்பது என் கணிப்பு. கவிதையைக் களமாடும் கருவியாக மட்டுமே வைத்துக் கொண்டார். மேடைகளில் அவர் கவிதை வாசிக்கும்போது பெரும் திரளான மக்கள் கை தட்டி ஆர்ப்பரிப்பதை அனைவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஜனங்களைச் சிரிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, எழுச்சிகொள்ளச் செய்து விடுவார். கவிதை எழுதுவதில் வெற்றி பெற்ற எல்லோராலும், கவி அரங்குகளில் வெற்றி பெற முடிந்ததில்லை. அது ஒரு தனித்துவமான நிகழ் கலை, நுட்பமான வித்தை. அந்த வித்தையில் அவர் எப்போதும் வெற்றியாளராகவே இருந்தார்.

அவரது ஒளிரும் நிறத்திற்கு, மேடை விளக்கின் ஒளியும், அவரது வியர்வையும் மின்ன, அவர் கவிதை வாசிப்பதை எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும். அதை ஒரு வீடியோப் புத்தகமாக வெளியிட்டிருக்க வேண்டும். நமக்கென்ன..?... எல்லா யோசனையும் “இருக்கிறபோது வருவதில்லை. இல்லாது போன பிறகு இப்படிச் செய்திருக்கலாம், அப்படி நட்டிருக்கலாம், எப்படி பறித்திருக்கலாம், என்று பேசிக்கொண்டு இருப்போம். எல்லாக் கருவிகளும் வந்துவிட்ட காலத்தில் வாழ்ந்தவரை, அவரது எல்லாச் செயல்பாடுகளையும் பதிவு செய்யத் தவறினோம். பாதுக்காக்கத் தவறினோம்.

நமது இல்லாமைகளும், இயலாமைகளும் சேர்ந்து, குவித்துக்கொண்டே இருக்கும் குற்ற உணர்ச்சிகளின் மீது தான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். உன்னதமான கனவுகளும், இல்லாமையும் நடத்துகிற போரில், பல சமயங்களில் இல்லாமை வென்று விடுவதைத் தடுத்தாக வேண்டும். ஒரு நாவல் எழுத வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டும், எழுதாமலே போய்விட்டது மாதிரி நடக்கவே கூடாது.

7
மனதில் தோன்றும் நினைவுகளும், உணர்ச்சிகளும் ஒரு முழுப் புத்தகம் எழுதுகிற அளவுக்கு பெருகிக்கொண்டே இருக்கிறது. கைகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

8
இந்த முன்னுரையை எழுதுவதற்கு முன் ஒரு சிறு தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள திருமதி கந்தர்வனுக்குப் போன் செய்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் பேசுகிறேன் “வணக்கம் என்று மட்டும் தான் சொன்னேன் “என்னப்பா கொழுந்தனாரே எப்படி இருக்கீங்க..? என்று கேட்டார். “மதினி... எப்படி கண்டுபுடிச்சிங்க..? என்றேன். “...நீங்கெல்லாம் கூடப் பொறந்தவங்க மாதிரி... கூடப் பொறந்தவங்க எல்லாம் நமக்குப் பொறந்தவங்க என்றார்.

9
“தம்பி என்றுதான் அண்ணாச்சி எப்போதும் கூப்பிடுவார். “கூடப்பொறந்தவங்க, நமக்கு பொறந்தவங்க மாதிரி என்பதாகத் தான் நானும் அவரும் இருந்தோம், வாழ்ந்தோம்.




10
சந்தித்த தருணங்களில் எல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். உரையாடல் இன்றி ஒரு நிமிடம் கூடக் கழித்ததில்லை. பேசாத பொருளே இல்லை என்பது மாதிரி, எல்லாவற்றைப் பற்றியும் அறிவு பெருக, மனம் மலரப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம். இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுப் போன அண்ணாச்சி மரணத்தைப் பற்றி ஒருமுறை கூட பேசியதே இல்லை.

பாரதி கிருஷ்ணகுமார்.
16.03.2015.
சென்னை.